மூதாட்டி ஒருவரின் வாழ்வியல் குறிப்பாகவும் தன்வரலாறாகவும் விளங்கும் நாவல். இதனை நாவல் என்று குறிப்பிட முடியுமா என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் குடும்பத்தலைவியாக ஒரு பெண்ணை மையமிட்ட கதை என்று குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை. நூலாசிரியர் தன்னுடைய இளமைக்காலம் முதல் முதுமை வரை கடந்து வந்த பாதையைப் பற்றிய சித்திரிப்புகள் ‘கவலை’யில் நிறைந்துள்ளன. 62 ஆண்டுகால நிகழ்வுகளின் பதிவுக் களமாக ஆசிரியர் கவலையைப் படைத் துள்ளார். ஒரு வருடத்திற்குள் இத்தனை நிகழ்வுகளையும் நினைவுபடுத்தி முதியவர் ஒருவரால் எழுத முடிந்தது என்பது வியப்பைத் தருகிறது.

இந்தத் தன் வரலாறு ‘ஆதி கதை’, ‘கவலையின் கதை’ என்று இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ளது. ஆதிகதை நாடார் குல வராலாறோடு தொடங்கி ‘ஈத்தாமொழி நாடார்’ என்ற ஆசிரியரின் தந்தை மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் வரலாற்றினையும் குறிப்பிட்டு முடிவடைகிறது. கோவில் கொடைவிழாக்களில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பாத்தியப்பட்ட உரிமைகள், மரியாதைகள் மற்றும் அவர்களின் நில அமைப்பு பற்றிய பதிவுகளும் உள்ளன.

கவலை, ஆசிரியர் ஒருவர் முன்னிருப்போருக்குக் கதைகூறும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இடையீடும் இடையிடையே உள்ளது. பிறப்பு - வளர்ப்பு - கல்வி - திருமணம் - பிள்ளைப் பேறு முதலான காலகட்டங்களில் தான் அடைந்த துன்பங்களின் பட்டியலைக் கவலையில் ஆசிரியர் நிறைத்துள்ளார். பிறந்த வீட்டில் தாயற்ற ஆசிரியருக்குத் திருமணம் நிகழும்வரை தந்தையிடம் கிடைத்த அரவணைப்பு, திருமணச் சீர் பற்றிய கவலையின் காரணமாக, வெறுப்பாக மாறியதைக் குறிப்பிட்டுள்ளார். கணவன் வீட்டில் ‘மைனி’ (ஓரவத்தி) மற்றும் பிற சொந்தங்களின் மூலமாக அனுபவித்த கொடுமைகள் கணக்கிலடங்காமல் நீளுகிறது.

தன்னுடைய குடும்பத்தின் மீதுள்ள பற்று; தன் குடும்பத்தில் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை அல்லது அதற்கான வாய்ப்பு இல்லை என்கிற ஆதங்கம் முதலானவற்றை ஆசிரியரின் மொழியின் மூலம் அறிய முடிகிறது. ‘என் தலைவர்’ ‘சபாபதியின் தகப்பனார்’ என்ற கனிந்த மொழி களிலேயே கணவரைக் குறிப்பிட்டாலும் யார் எந்தப் பழியைச் சுமத்தினாலும் ஏன் என்று கேட்காத கணவனைக் குறைகூறும் இடங்களும் உண்டு. மேலும், நாடார்களைப் புத்திசாலிகளாகவும் யோசித்துச் செயல்படுபவர் களாகவும் காட்டித் தன்னுடைய சாதிப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனாலே அவள் கெட்டவள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். ‘நடைவிளக் கெரித்து’ சுடுவது; வெளியே தெரியாமல் வெட்டிக்கொன்று சுட்டுவிடுவது; அல்லது ஊரைவிட்டு வெளி ஊருக்கு எங்கேனும் அனுப்பிவிடுவது முதலான கொடுமைகள் இம்மாதிரியான பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. ‘மற்ற ஊர்களில் இருந்த நாடான் மார்க்கு மேலாக முதல் குடும்பமாகவும் ஈத்தாமொழிக் குடும்பத்தையே எல்லோரும் சொல்லுவார்கள்’ என்று தன் குல மற்றும் வம்சத்தின் பெருமையைக் (ப.30) குறிப்பிடும் இவர் சமூகத்தில், உயர் சாதி - ஒடுக்கப்பட்ட / பொருளாதாரத்தில் குறைந்த சாதி என்கிற வேறு பாடும் இவர்களுக்கிடையே உள்ள தீட்டு குளித்தால் போய்விடும் என்ற கருத்து நிலவியதையும் அறிய முடிகிறது (ப.151). பெண் பிள்ளைகள் கண்ணாடி பார்ப்பது மற்றும் பொட்டு வைப்பதில் நிலவிய கட்டுப்பாடு குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது (ப.224).

கதையின் பாதி வரை பல்வேறு கதாபாத்திரங்களைப் பற்றிய செய்திகளை ஆசிரியர் கூறுகிறார். இவர்கள் பெரும்பாலும் மனதில் நிற்பவர்களாக இல்லை. இந்தத் தன்மை பிரதியை வாசகனிடமிருந்து அந்நியப்படுத்துவதாக உள்ளது. ஒன்றாம் வகுப்பு படிக்க ஆறு வயது டையவர்களாகக் குழந்தைகள் இருக்க வேண்டும் என்கிற சட்டம்; இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனம் முதலான சமகாலப் பதிவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் திருவிதாங்கூர் நாணயம் - பிரிட்டீஷ் ரூபாய்களுக்கு இணையான மதிப்புடைய சக்கரங்கள் (காசு) (ப.122) பற்றியும் பணப் பரிவத்தனைகள் பற்றியும் கதையில் பேசியுள்ளார்.

நாட்டார் வைத்திய முறைகள்; கதைகளையும் பாடல்களையும் ஒருவர் சொல்ல / பாட ஒருவர் அதனைப் பற்றிய விளக்கமளிக்கப் பிறர் அதனைக் கேட்கும் மரபு; நிகண்டு, சதகம் முதலானவற்றைக் கற்கும் அக்கால கல்வி மரபு (ப.124), நாட்டார் நம்பிக்கைகள்; பழக்க வழக் கங்கள்; நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகள்; வாதைகள் (பேய்கள்) பற்றி உருவாக்கப் பட்ட கதைகள்; கொள்ளை நோய்கள் பற்றிய பயம் (ப.208), அந்தப் பயம் காரணமாக - அறிவியல் உண்மையறியாதவர் களாய்க் கடவுளின் மீது நம்பிக்கை வைத்து வேறு ஏதும் செய்ய முடியாத நிலையினராகவும்; ஆங்கில (அலோபதி) மருந்துகள் சாப்பிட மறுப்பவர்களாகவும்; இடைக்காலப் பார்ப்பனக் குடும்பங்களைப் போன்று வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது எனப் பல செய்திகள் இக்கதையில் இடம் பெறுகின்றன.

ஐந்து குழந்தைகளைப்பெற்று, நான்கு குழந்தைகளை இழந்த சோகம் பற்றிக் குறிப்பிடும்போது வாசகரின் அனுதாபங்களுக்கு ஆளாகுபவராக ஆசிரியர் மாறுகிறார். நாட்டார் மொழி மரபிற்கே உரிய பழமொழிகள் கலந்த பேச்சு குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் கதை சொல்லும் பாங்கிலிருந்து ஒரு கூற்றைக் கவனிக்க முடிகின்றது. தனக்குச் செய்யப்பட்ட கொடுமைகளுக்குத் தான் ஒரு போதும் காரணம் அல்ல என்ற உணர்வுநிலையை வாசகர்களின் மனதில் மேலோங்கச் செய்கிறார். தன்னுடைய குடும்பம், அதனைச் சார்ந்து தான் அடைந்த துன்பங்களைப் பற்றிய பதிவு என்ற களமே இந்தக் கதையின் அடிப்படை. குடும்ப வாழ்க்கையில் எல்லா விதமான மனிதர்களாலும் மிகச் சாதாரணமாக அனுபவிக்கப்படும் கொடுமைகளை இவ்வாறு ஒரு கதையாக ஆசிரியர் எழுதக்காரணம் இரண்டு. ஒன்று, குடும்பம் என்ற சமூக அங்கத்திலிருந்து விடுபடாத ஒரு பெண்ணின் சிந்தனைகள் அதனைத் தாண்டி வெளிவர இயலாத நிலை. இரண்டு, முதுமை என்கிற அதற்கே உரிய குணம் - சிறு சிறு சிக்கல்களைக் கூடப் பெரிதாகப் பார்க்கும் மனப்பாங்கு. இவையே இப்படியான ஒரு படைப்பு உருவாவதற்குப் பின்னணியாக இருந்துள்ளது.

Pin It