ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதி சமூக சமூகத்தின் மீதான எதிர்வினையாக தன்னைப் பிரதிபலித்துக் கொள்கின்றது. அந்த வகையில் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் சமூகம் குறித்த பிரதிகள் எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றன என்பது அவசியம். இஸ்லாமியப் புனைகதை வரலாற்றில் பெண்களின் உலகை மிக நீண்ட உரையாடலாகப் பதிவு செய்த நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைப் பற்றியது இந்நாவல். எந்த ஒரு இலக்கையும் நோக்கித் தன்னைத் துரிதப்படுத்திக்கொள்ளாமல் மிக ஆசுவாசமாகவும் நேர்த்தியாகவும் கதை நகர்த்தப்பட்டுள்ளது.

பூப்படைவதற்கு முன்பு / திருமணத்திற்கு முன்பு பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கின்றது. சமூகம் தன்னைப் பெண்ணாக உணர வைப்பதில் எத்தனை முனைப்பாகச் செயல்படுகிறது என்பதை ராபியா என்கிற சிறுமி வழியாகவும் திருமணக்கனவுகள், ஏக்கங்கள் திருமணத்திற்குப் பின்பு பாழாக்கப்படுவதை வஹிதா மூலமும் மண முறிவுக்குப் பின்பு பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை மைமூன், பிர்தவ்ஸ் மூலமும் திருமணமே ஆகாமல் மனைவியாக / வைப்பாட்டியாக வாழும் வாழ்வை சமூகமே, ஏன் மனைவியே அங்கீகரிப்பதான சூழலை மார்யாயி மூலமும் விளக்குகிறார்.

பெண்களின் எல்லா அசைவுகளையும் கட்டுப்படுத்தும் ஆண்களை இயக்கமற்ற / கூர் மழுங்கிய மாந்தர்களாகப் படைத்துப் பெண்களைச் சுதந்திரமாக (மனரீதியில்) உலவவிடும் இந்நாவல் ஆணாதிக்கச் சமூகத்தைப் பழிவாங்கும் பிரதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆண் உலகின் மீதான எரிச்சலையும் அறுவெறுப்புகளையும் ஏக்கங்களையும் பேசும் இந்நாவல், ஆண்களை (உடல் ரீதியாக) கேலிக்குள்ளாக்கிக் கிண்டல் செய்வதன் மூலம் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றது. பெண்களின் பாலியல் சிந்தனைகளை மிக வெளிப்படையாக, பெண் மொழியில் பேசுகின்றது.

இஸ்லாமியக் கலாச்சார நிகழ்வுகளையும் அதையொட்டிய சடங்குகளையும் பெண்களின் அந்தரங்க உணர்வுகளோடும் எதார்த்த வாழ்க்கையோடும் பின்னிக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள் இவை, இவற்றை மீறினால் இத்தகைய விளைவு ஏற்படும் என்ற தொனியில் இல்லாமல் அச்சமூகத்திற்குள் நாங்கள் இவ்வாறு இருக்கிறோம் என்பதைப் பதிவு செய்வதாக உள்ளது. சட்டங்கள் வரையறுப்பதோ அவற்றை மீறுவதோ குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சுருங்கக் கூறினால் இஸ்லாமியப் பெண்களின் இயல்பு வாழ்க்கை மிக எதார்த்தமாகவும் மிக விரிவாகவும் எவ்வித தணிக்கையும் இன்றிப் பேசப்பட்டுள்ளது.

Pin It