நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் பொன்னீலனின் கரிசல், புதிய தரிசனங்கள் ஆகிய புனைவுகளைத் தொடர்ந்து “மறுபக்கம்” நாவல் வெளிவந்துள்ளது. 1972இல் எழுதத் தொடங்கி 2010இல் இவர் இந்நாவலை வெளியிட்டுள்ளார். இந்நாவலின் விவர ணங்கள், வாசிப்புத் தளத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் எத்தகைய தன்மையினை உடையவை என்பது கவனத்துக்குரியது. சுமார் 250 ஆண்டுகால, இன்றும் ஆவணப்படுத்தப்படாத, ஒடுக்குதலுக்கும் பல்வேறு சமூகச் சுரண்ட லுக்குமுள்ளான மனிதர்கள் பற்றிய நாவலாக இது விளங்குகிறது.

இந்நாவலுக்குரிய வரலாற்றுத் தரவுகளாக இவர் பயன்படுத்தி யது வி. நாகமய்யா, டி. கே. வேலுப்பிள்ளை ஆகிய திருவாங்கூர் உயர் அதிகாரிகள் எழுதிய திருவாங்கூர் ஸ்டேட் மானுவல்கள் மற்றும் நீதிபதி பி. வேணுகோபால் விசாரணைக்குழு அறிக்கை. இத்தரவுகளின்வழிச் சேகரிக்கப்பட்ட சமூக அசைவு களின் தொடர்ச்சியாக 1982இல் நடந்த மண்டைக்காட்டுக் கலவரத்தையும் ஆசிரியர் இணைத்துக்கொள்கிறார்.

நாவலின் களமாக இருப்பது தென்திருவிதாங்கூர் மற்றும் அதனைச் சுற்றிய கிராமங்கள். பண்பாட்டுக்கலப்பு மற்றும் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் நிலவுகின்ற நிலப்பகுதி, வருணாசிரம தர்மம், காலனிய ஆதிக்க வரிஏய்ப்பு வன்முறைகள், கிறித்துவத்தின் பரவல் மற்றும் செயல்பாடுகள், பாரம்பரிய தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சங்கள் என ஏராளமான பன்முகத் தன்மைகளின் பாதிப்புக்கு உள்ளான மக்கட் சமூகம் வாழ்கின்ற பகுதி. இப்பகுதி மீதான பல அடுக்குநிலைப் பார்வைகளை இந்நாவல் வைத்துள்ளது.

இந்நாவலில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் யாவும் ஏதோ ஒரு மையத்தில் தம் இருப்பின் தரப்பட்ட நிலையினைத் தேடுவன வாகவே அமைந்துள்ளன. பிளக்கப்பட்ட மனித தன்னிலை என்பது நாவல் முழுவதுமாக இடம்பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தின் வரலாறு என்கிற ஒற்றைப்புரிதலுக்குள் இந்நாவலை அடக்கிவிட முடியாது.

மையப்பாத்திரமான சேது மண்டைக்காட்டுக் கலவரத்தைக் குறித்த கள ஆய்வுக்கான தேடலுடன் பனைவிளை என்னும் நாஞ்சில் நாட்டுக் கிராமத்திற்கு வருகிறான். ஆனால் தன் இன அடையாளத்தைத் தேடுவதே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறான். மேட்டிமை எண்ணங்களோடு அத்தேடல் தொடங்கினாலும் இறுதி யில் யதார்த்தத்துடன் சமநிலைப்பட்டுத் தன் அடையாளத்தை உணர்ந்து கொள்கிறான். இத்தேடலுக்கும் சமன்பாட்டுக்கும் உதவுபவர்களாக வெங்கடேசன், முத்து, அலெக்ஸ் ஆகிய பாத்திரங்கள் இடம் பெறுகின்றன.

ரிங்கள்தௌபே, மீட்அய்யர் ஆகியோரின் நிலைப்பாடுகளும் கவனத்திற்குரியன. மீட்அய்யர் சாதியத்துக்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தாலும் இறுதியில் அதனோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை அடைவது, வருணாசிரம முறையின் வலுவினைக் காட்டுவதாக உள்ளது. நாடார், சாணர், புழுக்கையர், வண்ணார், கம்மாளர், குறும்பர், பறையர், மீனவர்... எனப் பல சமூகங்களின் வாழ்நிலைகள் மிகத் தெளிவாக இந்நாவலுள் பேசப்பட்டுள்ளன. கோவில்களின் நிர்வாகத்தை “தெய்வீகப் பேரவை” என்ற மடாதிபதிகளின் அமைப்பு ஏற்றுக் கொள்வது தொடர்பாக, குன்றக்குடி அடிகளார் எடுத்த முயற்சி யினை, எதிர்த்த சமஸ்கிருத மடாலயத்தின் போக்கு இந்துத்துவ மனோபாவங்களின் மிகமோசமான நிலையினை உணர்த்துகிறது.

நாவலின் சமகாலத்திய நிகழ்வான மண்டைக்காட்டுக் கலவரத்தின் விளைவுகள் வரையிலான பல அரசியல் செயல்பாடு களைக் காண முடியும். மீனவ சமூகத்துக்கும் நாடார் சமூகத்துக்குமான இனப்பிரச் சினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ வாதிகளால் கிறித்துவ இந்துத்துவ மோதலாக மாற்றப்பட்டதே மண்டைக்காட்டுக் கலவரத்தின் அடிப்படை. இக்கலவரத்தின் போது ஆளும் அரசு ஊமையாக இருந்து வேடிக்கை பார்த்ததன் பின்புலமாக ஓட்டு அரசியலை நாம் அவதானிக்க முடியும்.

நாவலுள் இடம்பெற்ற அதிகாரத்துக்கு எதிரான போராட்டங் களாக அக்கினிக்காவடிப் போராட்டம், தோள்சீலைக் கலகம், நேசமணி போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட நிகழ்வு மற்றும் நிலவு டைமைக் கெதிராக நிகழ்ந்த போராட்டங்களைக் கூறமுடியும். ‘குமரி மாவட்டப் போராட்டம்’ நவகாளி நிகழ்வின் மற்றொரு வடிவமாக, பொன்னீலனால் சித்திரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு சமூகங்களில் வாய்மொழி மரபாக வழங்கப் பட்டு வருகின்ற நாட்டார் கதைகள் பல இடம்பெற்றுள்ளன. சிவணனைஞ்ச பெருமாள் சாமி கதை (வண்ணார் மரபு), கன்னிபூசை, மண்டைக்காடு அம்மன் பற்றிய கதைகள் (பௌத்தக் கதை, செவிவழிக் கதைகள்), அதிகாரத்துக்கு எதிரான சாணார் மக்களின் யானை தலையிடறுகிற கதை, தம்பிமார் கதை, (பப்புத் தம்பி, ராமன்தம்பி மருமக்கள்வழி ஏற்பட்ட அதிகார வெற்றி குறித்த கதை). அருந்ததியர் உருவானது குறித்த அண்ணன் தம்பி கதை, பாப்பான் பறையன் குறித்த வைதிகச்சார்புடைய காம தேனுகதை, இசக்கிகதை, சூரங்குடி பிச்சைக்காலன், அரிசிப் பிள்ளை நாட்டார் தெய்வக்கதை, ஈத்தாமொழிக்குடும்ப உருவாக்கக் கதை எனப் பல்வேறு கதை மரபுகளோடு சடங்குகளும் இடம்பெற்றுள்ளன.

“மறுபக்கம்” இந்நாவலை வாசிக்க உத்தேசிக்கப்பட்ட வாசகன் காலவெளிகளைக் கடந்ததொரு பயணத்தை மேற்கொண்ட உணர்வினை அடைவது தவிர்க்க இயலாதது.

Pin It