ஒரு முறை நானும் எனது நண்பரும் சிறுகதை எழுத்தாளருமான கிருஷ்ண கோபாலும் நேமத்திலிருக்கின்ற எ.அய்யப்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கே அவரது சகோதரி சுப்புலெட்சுமி அம்மாளும், தலைக்கு வெளியில்லாத அவருடைய மகனும் பேத்தி மேகாவும் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் “அவர் காலையிலேயே குடித்து விட்டு கொஞ்சம் கிடந்து தூங்குகிறார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று எந்தவிதக் கலப்பு மொழியுமில்லாத தமிழில் கேட்டார்கள். நாங்கள் நாகர்கோவிலிலிருந்து வருகிறோம் என்று மலையாளத்தில் சொன்னதும், அவர்கள் மீண்டும் உள்ளே வாருங்கள் என்று அழைத்து விட்டு பேத்தி மேகாவிடம் தாத்தாவைப் பார்க்க நாகர்கோவிலிலிருந்து ஆள் வந்திருக்கிறதென்று அச்சுப் பிசகாதத் தமிழில் சொல்ல, பேத்தி உள்ளே போய் தமிழில் ‘தாத்தா தாத்தா’ என்று அழைத்தது.

அதற்கிடையில் நாங்கள் அய்யப்பனின் புதவல்கள் நிறைந்த அறையில் சென்றோம் அறைமுழுக்க மதுவின் நெடியும் கட்டிலுக் கடியில் காலி பாட்டில்களும் கிடந்தன. கமந்து படுத்துக் கிடந்த அய்யப்பன் எங்களைப் பார்த்ததும் எழுந்து அரை போதை மயக்கத்தில், “நான் தூங்கவில்லை. படுத்துக்கிடந்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

நான் மொழிபெயர்த்த கவிதைகள் போக மீண்டும் ஏதேனும் புதிய தொகுப்புகள் வந்ததா என்று கேட்டபோது “அது இருக்கட்டும். முதலில் பிராந்தி பாட்டில் கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார். பேசிவிட்டு பிறகு கடையில் போய் குடிக்கலாமே என்றதும் குடித்தால்தான் உங்களோடு பேசமுடியும் என்றார். சரியென்று அவரது மருமகனிடம் பிராந்தி வாங்குவதற்கான பணத்தை நாங்கள் கொடுத்தனுப்பினோம். மீண்டும் அவரோடு பேசியவாறு அவரது சிறிய நூலகத்தை நான் பார்வையிடத் துவங்கினேன். அவர் தன் பக்கம் என்னை அழைத்து ஒரு குழந்தையைப் போலச் சிரித்துக்கொண்டே என்னிடம் பத்திரிகைகளுக்குக் கவிதைகள் எழுதிக் கொடுத்ததற்கு நிறைய கூலி கிடைத்தது. பாவிகள் பணமாகக் கொடுக்காமல் காசோலைகளாக அனுப்பியிருக்கிறார்கள். அவற்றை ஏதேனும் புத்தகங்களுக்குள் ஆங்காங்கே வைத்திருப்பேன். ஆனால் அவற்றை இன்றைக்கு மாற்ற முடியாது. ஓணப் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாள் அரசு அலுவலகங்கள் எல்லாம் விடுமுறையென்றார். இருப்பினும் நீங்கள் எனக்குப் பணம் தரவேண்டுமல்லவா யென்று மிக நெருங்கிய நீண்டகால நண்பர்களைப் போல உரிமையோடு கேட்டார்.

நான் உண்மையிலேயே அவரது நூலகத்திலுள்ள புத்தகங்களை எடுத்துப் பார்த்தபோது அதில் காசோலைகள் ஆங்காங்கேயிருந்தது. அவர் சிரித்துக்கொண்டே சில காசோலைகளை எனது சகோதரிக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். சில காசோலைகளைப் பாதி படித்த புத்தகங்களில் அடையாளத்திற்காக வைத்திருக்கிறேன் என்றார்.

மீண்டும் பேசியபடி அவருடைய புதிய புத்தகமான “கல்க்கரியுடே நிறமுள்ளவர்” என்கிற கவிதைப் புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு இந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுங்களேன் என்றேன். “வேறு பிரதி என்னிடமில்லை. கடையில் வாங்கிக்கொள். இல்லையென்றால் நூறு ரூபாய் கொடு; நான் இந்தப் புத்தகத்தைத் தருகிறேன்” என்றார். இந்தப் புத்தகத்தின் விலை முப்பத்தி ஐந்து ரூபாய்தானே என்றபோது சிரித்துக்கொண்ட அய்யப்பனிடம் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங் களென்றேன். “கையொப்பம் போட வேண்டுமென்றால் அதற்கும் நூறு ரூபாய். ஆக இருநூறு ரூபாய் தர வேண்டும். நாம் சேர்ந்து குடிக்கலா” மென்றார். எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டேன்.

பிறகு நான் தற்போதைய மலையாளச் சூழல் பற்றி பேசினேன். உங்களைக் கொண்டாடுகிற புதிய இளைஞர்கள் தற்போது நிறைய எழுதுகிறார்கள்; ஆனால் உங்கள் அளவுக்கு வலுவில்லையே என்றபோது எனது நண்பரான கிருஷ்ண கோபால் தனது கேமராவை எடுத்துக் கொண்டு புகைப்படம் புடிக்கத் தயாரானார். உடனே எனது கேள்விகளை உதறித் தள்ளிவிட்டு “என்னை எதற்கு நீ புகைப்பட மெடுக்கிறாய். ஏற்கனவே நிறைய பேர் படமெடுத்து எனது முகம் கரடு முரடாகிவிட்டது. ஆகையினால் நான் குடித்த பிறகுதான் நீங்கள் புகைப்படமெடுக்க வேண்டும். நான் போதையில்லாமல் இருக்கும் பொழுது நீங்கள் புகைப்படமெடுத்தால் எனது முகம் தேய்ந்து விடுமென்றார்.

சற்று நேரத்தில் பிராந்தி கொண்டுவரப்பட்டது. கிருஷ்ண கோபாலைத் தவிர்த்துவிட்டு நான் அய்யப்பனுக்கு ஊத்திக் கொடுத்து இருவரும் குடித்தோம். பாதி குடித்த பிறகு “இனி நீங்கள் எனது போதையிறங்கு வதற்குள் எத்தனை புகைப்படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்” என்றார். ஆனால் அந்நேரம் நண்பர் கிருஷ்ண கோபாலின் புகைப்படக் கருவி பழுதடைந்து போனதால் நானும் அய்யப்பனும் இருந்து குடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மங்கலாகிப் போனது. அதேபோல் எனது மூளையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி நான் ஞாபகத்தில் வைத்திருந்த கேள்விகள் அனைத்தும் அறுந்து தெறித்து எங்கோ அழிந்துபோய்விட்டது. மனப்பிறழ்ச்சிக்குள்ளாக்கப்பட்ட எனது மனம் வேறு உலகத்தை நோக்கி சஞ்சாரம் செய்யத் துவங்கியது. பிறகு நாங்கள் ஊருக்குப் போகலாமென்று முடிவெடுக்க, அய்யப்பனின் சகோதரி எங்களிடம் மதியமாகிவிட்டது. அது மட்டுமல்ல; ஓணப் பண்டிகைக்கு நீங்கள் சாப்பிடாமல் போகக் கூடாதென்றார்கள். நானும் அய்யப்பனும் கிருஷ்ண கோபாலுமிருக்க இலையில் உணவு பரிமாறப்பட்டது. நான் அப்போது குழந்தை மேகா எங்கே என்றேன்.

நீங்கள் புத்தகங்களைத் திருடிவிடக் கூடாதென்று அவளைக் காவ லுக்கு நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன் என்றார். அதற்கு முன்னால் அவ ருடைய புத்தகத்தை நான் திருடிவிட்டதை அவர் அறிந்திருக்கவில்லை.

மீண்டும் குடிப்பதற்காய் எங்களிடம் அவர் பணம் கேட்டார். இல்லையென்று சொன்னபோது, “ஹோட்டலில் ஒரு இலை சாப்பாடு முப்பது ரூபாய். நீங்கள் இங்கே சாப்பிட்டதற்கான பணத்தைத் தந்துவிட்டு போங்கள். இல்லையென்றால் உங்களை விடமாட்டே னென்று” எங்களை பிடித்துக்கொண்டார். பிறகு எங்கள் பேருந்துக் கட்டணத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மற்ற ரூபாய் சில்லரைக் காசுகள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

நாகர்கோவில் வரை என்னை கிருஷ்ண கோபால் கவனமாகக் கொண்டுவந்து சேர்த்தார். வீட்டில் வந்து மாத்திரைகளை விழுங்கி விட்டு போதையிலும் மாத்திரையின் மயக்கத்திலும் அசுகத்தின் வெளிப்பாட்டி லும் மயங்கிக் கிடந்த எனது கட்டறுத்த கனவுகளின் வழியே அய்யப்பன் தனது அராஜகக் கவிதைகளை வாசித்துத் திரிந்தான்.

அய்யப்பனுடைய வாழ்க்கை முழுவதுமே திகில் நிறைந்தவைதான். ஆகையினால்தான் அவருடைய கவிதைகள் முழுவதும் கலகம் நிறைந்த இயல்பான கவிதைகளாக அவதரித்துக் கொண்டது. ஒருமுறை பாடப் புத்தகத்தில் அய்யப்பனுடைய கவிதைகளைப் பிரசுரம் செய்ய தேர்வுக் குழு ஆசிரியர் குறிப்பில் அய்யப்பன் இறந்துவிட்டதாகத் தவறுதலாக எழுதிவிட்டார். அதையறிந்த வாசகர்கள் கோபமடைந்து அய்யப்பனி டம் இது பற்றி விசாரித்தபோது அய்யப்பன் இறந்துபோனது உண்மைதான். அது சபரிமலை அய்யப்பன் என்று எந்தவிதப் பதட்டமுமில்லாமல் பதிலளித்தார்.

ஒருமுறை திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் அய்யப்பனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். கடும்போதையிலிருந்த அய்யப்பனைப் பார்த்து பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்து “அய்யப்பா வணக்கம். நான் அய்யப்பனின் கவிதைகள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்” என்றாள். அதற்கு அய்யப்பன் அந்தப் பெண்ணிடம் “வா வந்து என் பக்கத்தில் அமர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, இது என்.டி.ராஜ்குமார். தமிழில் முக்கியமான கவிஞர் என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அந்த இளம் பெண்ணின் துடையில் கையை வைத்து என்னைக் கட்டிக் கொள்கிறாயா? என்று கேட்டார். ஒரு நிமிடத்தில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணைப் பார்த்து “நீ என்னை அய்யப்பா என்று பெயர் சொல்லி அழைக்கும் போது நானும் உன்னைப் போல ஒரு இளைஞனாகி விடுகிறேனல்லவா?” என்று சிரித்துக்கொண்டார். உடனே அந்த இளம்பெண் அய்யப்ப அண்ணனை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேனென்றார். கூட்டம் கலைந்து நானும் அய்யப்பனும் குடிக்கச் சென்று கொண்டிருந்தபோது பல மலையாள நண்பர்கள் என்னிடம் வந்து அடி வாங்குவதற்கு ஊக்கம் உண்டு என்றால் அய்யப்ப அண்ணனோடு குடிக்கச் செல்லுங்களென்றனர் அந்தக் கணத்தில் நான் அய்யப்பனிடம் விடைபெற்று நழுவிச் சென்று விட்டேன்.

தமிழில் மொழிபெயர்த்த அய்யப்பனின் கவிதைப் புத்தகத்திற்கான சன்மானத்தை வாங்கிக் குடித்துவிட்டு பணம் தரவில்லை என்று சொன்ன அய்யப்பனின் அராஜகக்குரல் என்னை மீண்டும் அவரோடும் அவரது படைப்புலகோடும் நெருங்கிச் செல்லவைத்தது. திகில் நிறைந்த வாழ்வியல் சூழலில் பிறந்து வளர்ந்து அலைந்து திரிந்த அய்யப்பன் தனது அராஜகக் கவிதைகளைப் போல உடலையும் ஒரு கலக உடலாக மாற்றிக் கொண்டவர்.

கடைசியாக ஒரு துண்டுத்தாளில் எழுதி சட்டையின் கைச் சுருட்டில் வைத்திருந்த முடிவு பெறாத ஒரு கவிதையோடு கவிஞர் எ.அய்யப்பன் தம்பானூர் ஸ்ரீ குமார் திரையரங்கின் ஓரத்தில் இறந்து கிடந்தார். அந்த அனாதைப் பிணம் போலீசால் கைப்பற்றப்பட்டு அரசு மருத்துவமனை யில் ஒப்படைக்கப்பட்டது. மறுநாள் அங்கே பணி புரிந்துகொண்டிருந்த செவிலித்தாயும் லேப் டெக்கினீசியன் மருத்துவமனையில் புல் வெட்டுகின்ற ஒருவரும்தான். இது கவிஞரின் உடலென்று அடையாளம் சொன்னார்கள். கவிஞரின் ஆரம்பகால கவிதைகளின் வாசகர்களாகயிருந்தார்கள் அவர்கள். இந்த வருட “ஆசான் கவிதா புரஸ்காரம்” என்கிற விருதினை சனிக்கிழமை சென்னையில் வைத்து பெற்றுக் கொள்வதற்காக வெள்ளிக்கிழமை சலவை செய்து இஸ்த்திரி செய்யப்பட்ட சட்டை வேட்டி யோடு தனது மருமகனோடு புறப்படத் தயாராகயிருந்த அய்யப்பன் மறுநாள் வெயில் கிழித்த உடலோடு அனாதையாக கிடந்தார்.

ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த அய்யப்பனின் தாய் முத்தம்மாள், தந்தை ஆறுமுகம் இருவரும் இறந்து போகவே சகோதரி சுப்புலெட்சுமி யின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இருப்பினும் அய்யப்பனுக்கு குடும்பம், வீடு எதுவுமில்லை. கவிதையை மட்டுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட அய்யப்பன் காண்பவர்களோடு கையேந்தி பிளாட்பாரங்களிலும் கடைத்திண்ணைகளிலுமிருந்து கவிதை எழுதி வந்தார். இருந்து எழுதவோ வாசிக்கவோ ஒரு அறையோ மேசையோ இல்லாத அய்யப்பளை சாகித்திய அகாடமி விருது தேடி வந்தது. அதன் பிறகு பல விருதுகளும் அவருக்குக் கிடைத்தது. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல் சோகங்களையும் துக்கங்களையும் கொண்டாட்டங்களாக எடுத்துக் கொண்டு ஒரு விட்டேத்தி மனோபாவத்தோடு திரிந்த அய்யப்பன் தனது வாசகர்களிடம் கேட்டுக்கொண்டதே தனக்கான அடையாளங்களாக எதையும் நிறுவக்கூடா தென்றுதான். அவரது இறப்புச் செய்தியைத் தொடர்ந்து வானொலி, தொலைகாட்சிப் பெட்டிகள், பத்திரிகைகள், வலைத்தளங்கள் என அனைத்து ஊடகங்களும் பல கோணங்களில் செய்திகளையும் தகவல்களையும் குறும்படத்தையும் வெளியிட்டது.

இறுதியாக முதலமைச்சர், எதிர்கட்சித்தலைவர், எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தி அய்யப்பனின் கவிதை ஆளுமை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசினார்கள். அவர்கள் அரசியல்வாதிகளாகயிருந்தாலும் அய்யப்பனை ஆழமாக வாசித்த வர்கள்; இலக்கியத்தோடு நன்கு பரிட்சயம் உள்ளவர்கள். அதன் பிறகு எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வாசகர்கள், நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த வானில் துப்பாக்கி முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் எந்திரச் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

துண்டுத்தாளில் எழுதி முழுமைபெறாத அந்தக் கவிதையைத் தனது சட்டையின் கை சுருட்டிலிருந்து போலீஸ் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளது. அந்தக் கவிதையை எனது சொப்பனங்களினூடே வந்து வந்து வாசித்தபடி என்னைக் குடிப்பதற்கு அழைத்துக் கொண்டிருக்கிறான் அந்தத் தெருக்கவிஞன்... அவன் எழுதிய கவிதை... 

பல்

அம்பு எந்த நேரத்திலும்

முதுகில் பாயலாம்

உயிரைப் பிடித்துக் கொண்டு

வேடனின் கூரையைத் தாண்டி ஓடுகிறேன்

ராந்தல் விளக்கைச் சுற்றி

என்னைத் திண்ணும் சுவை நினைத்து

அய்ந்தெட்டுபேர் கொதியோடு

ஒரு மரமும் நிழல் தரவில்லை

ஒரு பாறையின் வாசல் திறந்து

ஒரு கர்ஜனையை வரவேற்றேன்

அவன் வழியில் நான்

இரையானேன்

என்னைப்போல் நீ

ஒரு முட்டாளைப்போல் என்னைப் பார் (தெளிவாகத் தெரியவில்லை)

முற்றத்து வெயிலில் (தெளிவாகத் தெரியவில்லை)

நீயும் போர்வை

இந்தக் கவிதை இப்போது கனேறான்மென் காவல்துறையினரின் கைவசம் இருக்கிறது.

Pin It