1948இல் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேறி வாழ்ந்த தமிழ் மக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்கள ஆட்சிமொழி சட்டம் வந்தது. இச்சட்டத்தினை எதிர்த்துப் பேரா. தனிநாயகம் அடிகள் செயல்பட்ட நிகழ்வுகள் இக்கட்டுரையில் பதிவாகியுள்ளது. தனிச் சிங்களச் சட்டம், தமிழர்களின் உரிமையைப் பறிப்பது குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது. ஈழத்தில் வாழமுடியாத சூழலில்தான், அவர் மலாயா பல்கலைக்கழகத்திற்குப் போகவேண்டிய நிலை உருவானது. மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோதும், தமிழ் மக்கள் உரிமைக்காக அடிகள் மேற்கொண்ட செயல்பாடுகளையும் இக்கட்டுரை மூலம் அறிய இயலுகிறது. உலகம் முழுவதும் பயணம் செய்த அடிகள் பன்மொழி தொடர்பான நிர்வாகச் சிக்கல்களுக்குத் தெளிவான தீர்வை அறிந்தவராக இருந்தார். இதனைச் சிங்கள ஆட்சியாளர்களிடம் பலமுறை எடுத்து விளக்கினார். சிங்களப் பேரின அரசு அடிகள் கூறியவைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தமிழர்கள் தங்களது உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும் என்றும் அவர் கருதியதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.

ஒருவரிடத்தில் அமையப் பெறுகின்ற ஆளுமை அகச்சார் அனுபவங்களால் மட்டுமன்றி சுற்றுப்புறச் சூழல்களாலும் அமையப் பெறுகிறது. ஆகவே ஒரு குறிப்பிட்ட தனியனின் ஆளுமை சமூகத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இந்த வகையில் தனிநாயகம் அடிகளின் ஆளுமை பல்பரிமாண நோக்கில் விரிவாக்கம் பெறுகிறது. குறிப்பாக இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடையாள அரசியல் நெருக்கடிகளின் தருக்க விளைவாகவும் ஆளுமை உருவா கின்றது. இந்தப் பின்புலத்தில் செல்வாக்குச் செலுத்தும் சிந்தனைத் தேட்டங்களையும் மாற்றங்களையும் உள்வாங்கிய ஆளுமையாகவே தனிநாயகம் அடிகளை முன்நிறுத்த வேண்டி யுள்ளது. இந்த அரசியல் நீக்கம் செய்து அடிகளை தூய தமிழியல் செயற்பாட்டாளராக மட்டும் ஒற்றைப் பரிமாணத்தில் நோக்குவது தவறானது.

இன்று அரசியல் நுண்மதி என்பது கட்சி அரசியல், தேர்தல் அரசியல், ஆட்சி அரசியல் என்பவற்றைப் பற்றியல்லாது ஒருவரது சொல் - செயல், பணிகள் தொடர்பான ஆற்றலையும் உளமுயற்சிகளையும் அடியற்றி உருவாக்கப்பட்ட ஓர் எண்ணக்கருவாகும். இந்த எண்ணக்கரு சார்ந்தும் தனிநாயகம் அடிகளை நாம் விளங்கிக்கொள்வது அவசியமாகிறது. ஒருவரது உளப்பாங்குடன் இணைந்து செல்லக்கூடிய சிந்தனைகள், பணிகள் அவருக்கு  உளநிறைவு அல்லது உளத் திருப்தி தரக் கூடியனவாகவே இருக்கும். குறிப்பிட்ட ஒரு சூழமைவில் ஒருவர் எவ்வாறு சிந்திக்கிறார், எவ்வாறு மனவெழுச்சி கொள்கிறார், எவ்வாறு இயங்குகின்றார் என்பதை அவரது உளப்பாங்குடன் தொடர்புடைய இயக்கங்களாக கொள்ளப் படுகிறது.

நாம் இங்கு தனிநாயகம் அடிகளது உளப்பாங்குடன் தொடர் புடைய இயக்கங்களில் ஒன்றான அரசியல் நுண்ணறிவும் அரசியல் செயற்பாடும் எவ்வாறு விளங்கி வந்துள்ளது என்பதை முன்வைத்து அடிகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சி யாகவே இந்தப் பதிவு அமைகிறது. 1950களுக்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்த ஆதிக்கம் நிறுவன மயமானது. இதுவே அரச நிறுவனத்தை இயக்கும் கருவியானது. இக்காலகட்டத்தில்தான் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற் றப்பட்டது. இதனைத் தனிநாயகம் அடிகள் எதிர்கொண்ட விதமும் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் எதிர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாங்கும் கவனிப்புக்குரியது.

இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம் இயற்றப்படும் 1956 வரை ஆங்கிலமே அரச கரும மொழியாக விளங்கி வந்தது. எனினும், இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் முன்னரே இலங்கையில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கவேண்டும் என்ற கருத்து இலங்கை அரசியல் வாதிகளின் மனதிலே இருந்து வந்தது. இதற்கு ஆதாரமாக 1944ஆம் ஆண்டு சட்டசபையிலே நிதி மந்திரியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் ஆங்கிலத் திற்குப் பதிலாக சிங்களமே அரச கரும மொழியாக ஒரு குறிப்பிட்ட காலத்துள் ஆக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழும் அரச கரும மொழியாக இருக்க வேண்டுமென்ற திருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஆனால் செயலளவில் - நடைமுறையில் ஒன்றும் சாத்தியப்படாமல் ஆங்கிலமே சுதந்திரமடைந்த பின்னரும் அரசகரும மொழியாக இருந்து வந்தது. இடையிடையே ஆங்கில மொழிக்கு எதிராகவும் சுதேச மொழிகளுக்கு சார்பாக வும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசில் மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனது சிங்கள மகாசபா மாதம்பையில் நடத்திய வருடாந்த கூட்டத்தில் ‘சிங்களம் மட்டும்’ தான் இலங்கையின் அரசகரும மொழியாக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கும்படி சிங்கள மகா சபா கேட்டிருந்தது. ஆனால் ஐ.தே.க ஏற்க மறுத்திருந்து இந் நிலையில் பண்டாரநாயக்கா இதனை சாட்டாக வைத்துக் கொண்டு தனது மந்திரி பதவியை ஜூலை 1951இல் இராஜினாமா செய்தார். பண்டாரநாயக்கா சிங்கள மகாசபாவை மிக விரைவில் கலைத்து விட்டு 1951 செப்டெம்பரில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாபித்துக் கொண்டார். தொடர்ந்து ஐ.தே.க. அரசாங்கம் அரச கருமமொழி மாற்றம் பெறுவது குறித்த அக்கறையின்றி இருப்பதாகவும் கால வரையறை ஒன்றை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றஞ் சாட்டினார். சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் இரு ஆயுதங்களாகக் கொண்டு இலங்கையில் அரசியல் அதிகாரத் தைப் பெற்றுக்கொள்ளலாம் என கண்ட பண்டாரநாயக்கா அவற்றை வெகு திறமையாகவே கையாள முற்பட்டார்.

1952இன் பின்னர் குறிப்பாக அரச கரும மொழியாக ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களமும் தமிழும் என்ற சமநிலை மாறி சிங்களம் மட்டும் என்பது வலுமிக்க கோரிக்கையாக மாறத் தொடங்கியது. இக்கோரிக்கையானது ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்கப் பதவிகளுக்கு தமிழர்களுடன் போட்டி யிட்ட சிங்களப் புத்தி ஜீவிகள் மத்தியிலே தனிப்பட்ட முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் ‘சிங்களம் மட்டும்’ எனும் கோரிக்கையானது சிங்களப் பழைமைவாதி களை ஒன்றிணைக்கும் மூலமாகவும் அதன் வழியாக சமூகத் திலே உயர்ந்த அந்தஸ்தையும் பெரும் அங்கீகாரத்தையும் பெற வைத்த  ஒன்றாகவும் கருதப்பட்டது. மேலும் இந்தக் கோரிக்கை தனிப்பட்ட உயர் குழாத்தினரை மட்டுமல்லாது சாதாரண சிங்களப் பொது மக்களையும் கூட கவர்ந்தது. இதுவரை சிங்கள மக்களிடையே காணப்பட்ட தாழ்நிலைச் சிங்களவர், கண்டிச் சிங்களவர் என்ற இரு பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்து வதாகவும் இக்கோரிக்கை பயன்பட்டது. மேலும் மேலைத் தேயச் செல்வாக்குக்கு எதிராக பழைமைவாதிகள் நடத்தும் கிளர்ச்சிகளின் அடையாளமாகவும் செயற்பட்டது. சிங்கள மக்களிடையே காணப்பட்ட தீவிர தன்மை கொண்டோரை ஒன்றிணைத்தது. 1956ஆம் ஆண்டளவில் பலம் மிக்க சமூக சக்தியாக உருவாக்கியதும் சிங்களம் மட்டும் எனும் கோரிக்கைதான்.

இந்தப் பின்னனியில்தான் தனிநாயகம்அடிகள் தனது பரந்த அறிவைப் பயன்படுத்தி சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருப்பதால் சிங்களத்திற்கு எந்த ஆபத்தும் வராது. சிங்களம் அரச கரும மொழியாக இருந்தாலும் தமிழை யும் சிங்களத்தின் நிலையைப் பாதிக்காமல் பயன்படுத்தலாம். இதுபோன்ற பல்வேறு சிந்தனைகளை பன்னாட்டு அனுபவங் களிலிருந்தும் பல்வேறு நாட்டு அரசியலமைப்பு வரைவுகளி லிருந்தும் மேற்கோள்கள் காட்டி பத்திரிகைகளில் கட்டுரை களை எழுதி வந்தார். தொடர்ந்து பல கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு உரைநிகழ்த்தி வந்தார். தான் எழுதியவற்றை ஒன்றாகத் திரட்டி ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நூலையும் வெளியிட்டார்.

சிங்களம் மட்டும் என்ற போராட்டத்தில் சாதாரண மக்களைப் பொறுத்தளவில் பரந்தளவிலான வலுமிக்க ஆதரவு உருவானது. தனிப்பட்ட ஒவ்வொரு சிங்களவரும் தனது மொழியுடன் தனது எதிர்கால நல்வாய்ப்பும் அதன் மூலமாக தனது சுயமரியாதை தங்கியிருப்பதாகவும் கருதிக்கொண்டனர். இப்போராட்டம் மூலமாக வலுமிக்க சிங்கள இன உணர்வின் அடிப்படையிலான ஒற்றுமையை சிங்கள மக்கள் ஏற்படுத்திக் கொண்டனர். மொழி இயக்கமானது சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒன்றிணைந்த கூட்டு மனோபாவ சிங்கள மீள் எழுச்சிக்கும் சுயமரியாதையை வலியுறுத்துவதற்குமான அடையாளச் சின்னமாகவும் கருதப்பட்டது. சிங்கள மொழி யானது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான மூலமாக மாற்றமடைந்தது. கட்சி அரசியலையும் கடந்து, சிங்களம் மட்டும் எனும் கோரிக்கை அரசியல் ஆட்சி அதிகாரத்துவ செல்நெறியை தீர்மானிக்கும் சக்தியாகவும் பரிணாமம் பெற்றது.

இலங்கையில் தனிச் சிங்களம் இயக்கம் தீவிரமடைந்து வருவதைக் கண்டு தனிநாயகம் அடிகள் கவலைப்பட்டார். தனது உணர்வுகளை சாத்தியப்பட்ட களங்களில் பதிவுசெய்தார். தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்கும் கொடுங் கோண்மை சட்டம் என்று அறிவுபூர்வமாக எடுத்துரைத்து வந்தார்.

1956 பொதுத் தேர்தல் இலங்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. M.E.P. கூட்டணி பெருவெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் பதவி வகித்தார். இந்தப் புதிய அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக சிங்கள அரச கரும மொழிச் சட்டப் பிரேரணை கொண்டு வரப் பட்டது. 1956 ஜூன் 5இல் கொண்டுவரப்பட்ட இம்மசோதா ஜூன் 14ஆம் திகதி M.E.P. U.N.P .பாராளுமன்ற அங்கத்தவர் களின் ஆதரவுடன் சட்டமாகியது. தனிச் சிங்களம் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட அன்று தமிழரசுக் கட்சி யின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னால் காலிமுகத் திடலில் அமைதி முறையிலான எதிர்ப்பு சத்தியாக் கிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது தனிநாயகம் அடிகள் அப்போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தனது முழு ஆதரவை வெளிப்படையாக தெரி வித்தார். அந்தப் போராட்டத்திற்கு ஆன்ம வலிமையைக் கொடுத்தார். இந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது தனிச் சிங்கள இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களினாலும் மற்றும் குண்டர்களினாலும் அமைதி வழியிலான எதிர்ப்புப் போராட்டம் வெறித் தாக்கு தலுக்கு இலக்காகியது. தமிழ்த் தலைவர்கள் அடி உதைக்கு உள்ளானார்கள். காயங்களுக்குள்ளானார்கள். இதன் போதுதான் துணிச்சலுடன் போராட்டக் களத்திற்கு அடிகள் சென்று தனது ஆதரவை வழங்கினார். இந்த நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வு பற்றி தனிநாயகம் அடிகளின் இறுதிச் சடங்கு நிகழ்வில் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான அ.அமிர்தலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றும் போது மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

“1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 3ம் திகதி தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் புகுத்தப்பட்ட அன்று காலிமுகக் கடற்கரையிலே அந்தப் பச்சைப்புல் தரையிடல், ஈரமாகக் கிடந்த நிலத்தில் நாமெல்லாம் இருந்து சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த போது எம்மை ஆயிரக்கணக்கான காடையர் சுற்றி வளைத்து கல்மாரி பொழிந்து தாக்கிக்கொண்டிருந்த நேரத்தில், பொலிஸார் எமக்கும் அவர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தி, ஓரளவுக்கு அந்தத் தாக்குதலி லிருந்து எங்களை தடுத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், திடீரென்று அந்தத் தாக்குதலுக்கு ஊடாக ஒரு உருவம், துறவியின் உடையிலே எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. எங்கள் மனம் ஒருநிமிடம் பெருமிதப்பட்டது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நான் இந்தச் சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்களோடு சேரப் போகிறேன் என்று அந்தக் காடையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வரக்கூடிய உளம்படைத்த வராக, தமிழுக்காக நடைபெறுகின்ற சத்தியாக்கிரகத்திலே தாமும் பங்குகொள்ள வேண்டுமென்ற அந்தத் வீரியத்தோடு அங்கு வந்திருந்த தனியாகம் அடிகளாரை நாம் என்றும் மறக்க முடியாது’’ என்று நினைவு கூர்ந்தார். மேலும் ‘‘எமக்கு கலாசாரத்தையும் அரசியலையும் பின்னிப் பிணைத்து எமது கலாசாரத்தைக் காப்பதற்கு அரசியல் எந்த வகையில் பணிபுரிய வேண்டுமென்று காட்டக்கூடியவராக அல்லது அரசியல் இலட்சியத்தை அடைவதற்குக் கலாசாரம் எந்த வகையில் உதவ முடியும் என்பதை எடுத்துக்காட்டுபவராக வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகள் விளங்கினார்’’ என்றும் மறைந்த தலைவர் அ.அமிர்தலிங்கம் கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

இந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது தாக்குதல் நடை பெற்ற தருணத்தில் கிழக்கிலங்கையிலும் மட்டக்களப்பிலும் கல்லோயாக் குடியேற்றத் திட்டத்திலும் சிங்களத் தமிழ் மக்களுக்கிடையிலான இனக்கலவரம் ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் தீவிரமான இன உணர்வுகள் இரு இனங்கள் மத்தியிலும் வலுப்பெறலாயிற்று.

1956ஆம் ஆண்டு அறப்போரில் அடிகளார் கலந்துகொண்ட போது அவர் இலங்கை பல்கலைக்கழகப் பணியில் இருந்து விடுப்பு பெற்றுக் கொண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த போதே அறப்போரில் அடிகள் ஈடுபட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடிகள் விடுமுறையில் இருந்த பொழுதும் அரசியல் ரீதியான போராட்டம் தமிழினம் சார்ந்து வெளிப்படு கையில் அதில் கலந்துகொள்வது தமது கடமையென்று கருதி னார். அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருப்பது கோழைத் தனம் என்ற மனப்பாங்குடன் இயங்கியுள்ளார். இதனால் தனக்கு வரக்கூடிய ஆபத்துக்களைக் குறித்து அடிகள் கவலைப் படவில்லை.

சிங்கள மொழிச்சட்டம் பாராளுமன்றத்தில் அமுலாக்கப் பட்ட பின்னர் பல்வேறு எதிர்ப்புப் பிரச்சாரக்கூட்டங்கள் நடை பெறத் தொடங்கின. பத்திரிகையிலும் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. அடிகளும் கட்டுரைகள் எழுதி வந்தார். எதிர்ப்புப் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு சமஷ்டி அரசியல் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். சமஷ்டி அரசியல் பற்றிய கருத்தாடலை அறிவுபூர்வமாக முன்வைத்தார். பல்வேறு நாட்டு அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்து தமது கருத்துக்களை தொகுத்து இலங்கைச் சூழலுக்கு பொருத்தமாக எடுத்துரைத்தார். மூன்று இனத்தவரும் நான்கு மொழியினரும் மூன்று சமயத்தவரும் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்தில் ஒரு தேசியத்தை உருவாக்கியுள்ளனர். அவ்வாறே நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் காத்திட நாம் விரும்பு வோமாயின் இலங்கையில் இருமொழிகள் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினைக்கு காரணமாகிவிட முடியாது என்று விளக்கினார். தொடர்ந்து தென்னாபிரிக்கா, கனடா, பெல்ஜியம், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகள் இருமொழி அல்லது பன்மொழி பேசும் நாடுகளாக இருந்தும் மொழி பிரச்சினைக்கு தக்க தீர்வு கண்டிருப்பதை எடுத்துரைத்தார். இதுபற்றியெல்லாம் நாம் அக்கறைப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. நாட்டை இருண்ட யுகத்துக்குள் கொண்டு போகப்போகிறோம் என்று எச்சரிக்கை செய்தார்.

தமிழ் அல்லது சிங்களப் பண்பாட்டைத் தழுவி வாழ்வதால் இலங்கை தேசிய உணர்வு குன்றிவிடாது. இது அடிகளாரின் ஆணித்தரமான வாதம். ஆகவே தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வினைப் போற்றி, தங்கள் மொழியை வளர்த்து, தங்கள் பண்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான சிந்தனைத் தெளிவு நமக்கு வேண்டும் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தார். அடிகளார் சிங்கள மொழிக்கோ சிங்கள மக்களுக்கோ எதிரானவர் அல்லர் என்பதும் அதே சமயத்தில் தமிழர்கள் தங்கள் இலங்கைத் தேசிய உணர்வுக்கு பங்கமில்லாத வகையில் தங்கள் தமிழின உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அடிகளாரின் உறுதியான கருத்து. இருமையில் ஒருமைப்பாடு அல்லது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் காப்பதும் மனித இயல்பு. இதை ஆணித்தரமாகவும் நிதானமாகவும் தெளிவுபடுத்தி வந்தார்.

1956ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் தனிச் சிங்கள இயக்கம் தீவிரமடைந்து அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதை அறிந்து கவலை கொண்டார். புதிய பிரதமர் பண்டாரநாயக் காவை நேரில் சந்தித்த தூதுக்குழுக்களில் தாமும் இணைந்து மொழிப்பிரச்சினை பற்றிக் கருத்துரைத்தார்.சிங்களம் - தமிழ் ஆகிய இரு மொழிகளையும் இலங்கையில் ஆட்சி மொழிக ளாக்கி இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்று தகுந்த ஆதாரங்களுடன் பெல்ஜியம், கனடா, சுவிட்சர்லாந்து முதலான நாடுகளின் முன்னுதாரணங்களுடன் எடுத்துரைத்தார். ஆனால் பண்டாரநாயக்கா அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. வாள்முனையில் “இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே நான் விரும்புகின்றேன்” (‘Father, I will rather decide it on the point of sword) என்று பிரதமர் ஆணித்தரமாக கூறினார். இந்தநிலை அடிகளாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இலங்கையில் மொழிப் பிரச்சினை வலுப்பெற்று சிங்களம் மட்டும் அரச கரும மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து M.E.P., M.E.P. ஆகிய பிரதாய இரு கட்சிகளுமே இலங்கையின் கட்சி முறைமையில் இன ரீதியான பிளவினை அறிமுகம் செய்தன. அதனால் இரு சமூகங்களுமே தேசிய அணியிலான அரசியல் சக்திகளாக இயங்குவதற்கு தடை யாகின. அதனால்தான் முதன் முதலாக மாற்று அரசாங்கத்தை தேர்வு செய்யும் பணி சிங்கள பிரதேசங்களுக்கு மட்டும் கிடைக்கலாயிற்று.

இவ்வகையிலே தமிழ் பிரதேசங்கள் தேசிய நீரோட்டத்தி லிருந்து புறக்கணிக்கப்படலாயின. இந்த நிலைமைகள் குறித்து அடிகள் மிகுந்த கவலையடைந்தார். தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையின் வலிமையால் தமது உரிமைகளை நிலைநாட்டா விடில் எதிர்காலத்தில் அவற்றைப் பெறப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் தமது உரிமையை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்பதை வலியுறுத்தி வந்தார்.

பண்டாரநாயக்கா பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் கல்லோயா குடியேற்றப் பகுதியில் வெடித்த கலவரம் 150 பேரின் உயிரைக் காவுகொண்டது. இது சம்பந்தமாக பண்டார நாயக்கா அரசாங்கம் எத்தகைய சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே போல காலிமுகத் திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தை வன்முறையால் குழப்பிய சுதந்திர கட்சி குண்டர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் அடிகள் உரியவாறு சுட்டிக்காட்டி வந்தார். அரசாங்கம் மிக மோசமாக இனவாத பண்புகள் கொண்டதாக மாறி வருவதையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி வந்தார்.

1958இல் பெரும் இனக்கலவரம் மூண்டது. பல்வேறு வதந்திகளை உருவாக்கி தமிழர்களுக்கு எதிரான வன்முறை களை சிங்களக் காடையர்கள் திட்டமிட்டு நடத்தினர். தமிழர்களுக்கெதிரான இனவன்செயல்கள் வெடித்து ஆறு நாட்கள் வரை அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வில்லை. 1958இல் மே 22 அன்று 500க்கு மேற்பட்ட காடையர் பொலனறுவையில் தமிழ்ப் பிரயாணிகள் பயணம் செய்த புகையிரதத்துக்குள் புகுந்து தாக்கினர். இதைத் தொடர்ந்து பரவலாக கொலை, கொள்ளை, சூறையாடல்கள், பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தன. இவற்றைக் கட்டுப்படுத்தாமல் அரசு மௌனம் காத்து வந்தது. வளர்ந்து வரும் நிலைமையின் கொடூரத்தை உணர்ந்த ஒரு குழுவினர் பிரதமர் பண்டாரநாயக் காவை சந்தித்து, அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு கோரினர். அதற்கு பிரதமர் ‘ஒரு சிறிய விடயத்தைப் பெரிது படுத்துகிறீர்கள்’ என்று தூதுக்குழுவினரிடம் கூறினார். தமிழ் விரோத நடவடிக்கைகள் அரங்கேறுவதை விளங்கிக்கொண் டும் அதைப் பெரிதுபடுத்தாமல் விசித்திரமாக பதில் கூறினார்.

சிங்கள அரசாங்கம் 1953இல் ஒரு நாள் ஹர்த்தாலிற்காக அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. ஆனால் 1958இல் தமிழர்கள் கொல்லப்பட்டும் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துவரும் போதும் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரத் தேவையான அவசரகால நிலையை பிரகடனம் செய்ய சிங்கள அரசாங்கம் மறுத்தது. வன்முறைகள் மோசமாக நடந்தேறிய பின்னர் ஆறாம் நாளில் தான் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட தமிழரசுக் கட்சியின் சில பாராளுமன்ற அங்கத்தவர்களும், சிங்களத் தீவிர வாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுனவின் தலைவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

பண்டாரநாயக்கா கலவரம் அடங்கிய நிலையில் ‘தமிழ் மொழி விசேட உபயோகம்’ சட்டத்தை இயற்றினர். இம் மசோதா பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் தடுப்புக்காவலில் இருந் தனர். தமிழ்ப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இச்சட்ட வரையறை விவாதிக்கப்படுவதை ஆட்சேபித்து எல்லா எதிர்க் கட்சி அங்கத்தவர்களுமே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

1958 இனக்கலவரம் மற்றும் இனவழிப்பு குறித்து தனிநாயகம் அடிகள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஐ.நா.  சபையில் முறையிடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வும் திட்டமிட்டிருந்தார். குறிப்பாக, இனக்கலவரங்களில் நிகழ்ந்த கொடுமையான நிகழ்ச்சிகளை, உண்மைச் சான்றிதழ் களில் சாட்சியம் எழுதிக் கொடுக்கப்படுவதைத் தூண்டி வந்தார். இவற்றை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை வழக்கறிஞர்களிடமிருந்து அறிந்துகொள்ளவும் மக்களை வேண்டிக் கொண்டார். தமிழர்கள் அனைவரும் தமிழ் இயக்கத் தில் ஈடுபட வேண்டுமென்று மக்களைக் கேட்டுக்கொண்டார். தமிழ் மொழி உரிமைகளை பெற முயலும் இயக்கம் வெற்றி பெற வேண்டும், அந்த இயக்கத்தில் இணைந்து உளப்பூர்வமாக ஈடுபடுவது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதையும் உறுதிபடக் கூறி வந்தார்.

மொழிப் பிரச்சினை என்பது அரசியல் எல்லைகளை விட விரிந்து பரந்தது. அது தத்துவப் பிரச்சினை; அரசியல், குடியாட்சி யமைப்பு முறைக் கோட்பாட்டுப் பிரச்சினை; அக்கோட் பாட்டை நடைமுறைப்படுத்தும் பிரச்சினை; அது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை; சமூகவியல் - மனித இயக்கவியல் பிரச் சினை என்று அடிகளார் மொழிப்பிரச்சினையின் பல்பரிமாணத் துவத்தை விளக்கினார். எனவே மொழிப் பிரச்சினையைப் பற்றிச் சிந்திப்பது அரசியல் வாதிகளுக்கு மட்டும் உரியதல்ல; அரசியல் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், சட்டவல்லு நர்கள், சமூகவியல் அறிஞர்கள் ஆகியோருக்கும் அது உரியது என்றார். அடிகள், ஒற்றுமையில் வேற்றுமை காண்பதன் மூலம் பண்பாட்டுச் சுதந்திரமும் அரசியல் ஒற்றுமையும் கைகோர்த்துச் செல்வதும், ஒரே அமைப்புக்குள் சுய நிர்ணய உரிமையும்  பண்பாட்டு தன்னாட்சி உரிமையும் நிலவுவதும் இன்று உலகில் பரவிவரும் சிந்தனைகள் என்பதையும் தமது எழுத்தில் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அடிகளாரின் மொழி தொடர்பிலான சிந்தனைகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தமிழ் மக்களுடைய மொழி உரிமை பற்றியது. மற்றையது, மொழி கற்பித்தல் பற்றியது ஆகும். 1956இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரவிருந்தபோது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மொழி உரிமைப் பண்புகளையும் பன்னாட்டு மொழிப் பிரச்சினை அனுபவங் களையும் பல கட்டுரைகளிலும் நூல்களிலும் சொற்பொழிவு களிலும் அடிகளார் வெளிப்படுத்தினார். 1956இல் ‘நம் மொழி உரிமைகள் - தனிநாயகம் அடிகளின் கருத்து’ எனும் சிறுபிரசுரம் கண்டி தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டது. இது பின்னர் புதுப்பிக்கப்பட்டு இரண்டாம் மூன்றாம் பதிப்புகளாக 1961இல் வெளியிடப்பட்டது. (இந்தப் பிரசுரம் இந்த இதழ் ஆவணப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.)

1960ஆம் ஆண்டு தேர்தலில் ஷிலிதிறி தனிச் சிங்கள அரச கரும மொழிச் சட்டத்தைத் தொடர்ந்தும் பூரணமாக நடைமுறைப் படுத்துவதற்கு மக்கள் அங்கீகாரத்தை வேண்டி நின்றது. 1956 பொதுத்தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் மொழியே பிரதான விடயமாக ஆக்கப்பட்டது. பண்டாரநாயக்காவின் (கணவரின்) கொள்கைகளைத் தொடர்ந்து அமுல்செய்வதற்கு தங்களை தொடர்ந்து தெரிவு செய்யுமாறு சிறிமாவோ பண்டார நாயக்கா வேண்டி நின்றார். இவர் தமிழ்மொழி தொடர்பான கணவரின் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவார் என்று தமிழ்பேசும் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஷிலிதிறியின் தேர்தல் அறிக்கையிலும் தமிழ்பேசும் மக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் சிங்கள அரச கரும மொழிச் சட்டம் அமுல் செய்யப் படும் என்றும் பண்டாரநாயக்காவின் ‘தமிழ்மொழி உபயோ கம்’ சரத்துக்கள் திருந்திய முறையிலே நடைமுறைப்படுத்தப் படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இவற்றுக்கு மாறாக தனது ஆட்சியின் ஆரம்பத் திலேயே நீதி மன்றங்களில் சிங்கள மொழியை பயன்படுத்து வதற்காக நீதிமன்ற மொழிச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. தமிழ்மொழி பேசும் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல தரத்து நீதிமன்றங்களிலும் சிங்களத்தை திணிக்கும் இச்சட்டம் ஆங்கிலத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழ்பேசும் மக்களின் மொழி யுரிமையைப் பாதிக்கும் ஒன்றாகவே அமைந்தது. இச்சட்டத் திற்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் 1961 ஜன 2 இல் ஒருநாள் ஹர்த்தால் இடம்பெற்றது. மொழிஇன உணர்வைத் தூண்டு வதற்கு இச்சட்டம் துணை போனது. தமிழ்பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் பரவலாக வெடித்தது. தொடர்ந்து அகிம்சை வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டத்தை தமிழரசுக்கட்சி ஆரம்பித்தது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்திய போராட்டத்தை தமிழரசுக்கட்சி முன்னெடுத் தது. மொழியுரிமைக்கான இயக்கம் வேகமடைந்தது. அரசாங்கம் முன்னெடுக்கும் பாரபட்ச கொள்கைகளை எதிர்க்கும் இயக்க நடவடிக்கை எங்கும் வளர்ச்சியடைந்தது. மக்களை நேரடியாக பங்குகொள்ளச் செய்த முதலாவது போராட்டம் இது எனக் கூறலாம். இந்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் தனிநாயகம் அடிகள் ஒதுங்கியிருக்க வில்லை. சத்தியாக்கிரக இயக்கத்திற்கு ஆதரவு தேடும் வகையில் தமிழ்மொழிக்குள்ள நியாயாதிக்கமான உரிமைப் பாட்டையும் சிங்கள மக்கள் நல்வாழ்வுக்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். சில கோரிக்கைகளை முன்வைத்து தயாரித்த ஆவணங்களில் சக சிங்கள விரிவுரை யாளர்களின் கையப்பத்தையும் வாங்கி ஆதரவு திரட்டி வந்தார். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வந்தார். குறிப்பாக பணம் சேர்த்து, சத்தியாக்கிரகம் நடந்த இடங்களுக்குச் சென்று கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

1904 செப் 3ஆம் திகதி சேர் பொன். இராமநாதன் கொழும்பு ஆனந்த கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிங்கள மக்கள் சிங்கள மொழியை காக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஆற்றிய உரையினை மீண்டும் அடிகளார் துண்டுப் பிரசுரமாக்கி வெளியிட்டார். சில இடங்களில் கூட்டங்கள் நடத்தி இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார். துண்டுப் பிரசுரப் போராட்டத்தை பிரக்ஞை பூர்வமாக திட்டமிட்டு முன்னெடுத்தார். இந்நேரத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தின் முதல் இந்தியவியல் துறைப் பேராசிரியராக பதவியேற்கும்படி அடிகளாருக்கு அழைப்பு வந்திருந்தது. அப்போது நிலவிய சூழ்நிலைக் காரணமாக அடிகளார் யாழ்.சத்தியாக்கிரக முறியடிப்புக்கு மறுநாளைக்கு மறுநாள் விமானம் மூலம் இந்தியா சென்று அங்கிருந்து மலேசியா சென்றார்.

அப்போது இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முறியடிக் கவும் தலைவர்களை கைதுசெய்யவும் அரசு திட்டமிட்டிருந்தது. பலர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்படுபவர்களின் பட்டியலில் தனிநாயகம் அடிகளின் பேரும் இருந்ததாக அறியமுடிகிறது. தொடர்ந்து பொலிஸ் கண்காணிப்பின் நெருக்கடிக்கு அடிகள் உட்பட்ட பொழுதுதான் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவியேற்கும்படி அழைப்பு வந்தது. அப்போது அடிகளாருக்கு வரும் கடிதங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தால் திறந்து பரிசீலிக்கப்பட்ட பின்னரே கடிதங்கள் அடிகளாருக்கு கிடைத்து வந்தது. இதனை அடிகளாரும் உணர்ந்திருந்தார்.  அப்பொழுது அடிகளார் தங்கி யிருந்த இடத்திற்கு இன்னொருவர் வந்து தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில்தான் எவருக்கும் தெரி யாமல் மலேசியா செல்ல ஆயத்தமானார். தான் மலேசியாவுக் குப் போவதற்கு முன் தனது நெருங்கிய நண்பரும் சக பல்கலைக் கழக விரிவுரையாளருமான கு.நேசையா என்பவருக்கு கடித மொன்றை ரகசியமாக எழுதியிருந்தார். அடிகள் யாரும் அறியாதிருப்பதற்காக கடிதத்தை எழுதிய பின்னர் அதில் ‘எக் நாயக்கா’ என கையப்பமிட்டிருந்தார். சிங்கள மொழியில் எக் நாயக்கா என்றால் தனிநாயகம் என்று பொருள்படும். இவ்வாறு சமயோசிதமாக சிந்தித்து செயல்பட்ட பாங்கு கவனிக்கத்தக்கது. அடிகள் மலேசிய பல்கலைக்கழகப் பணியிலிருந்து 1969ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 1972க்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தார்.

1978இல் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு புலிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் புலிச்சட்டம் என்ற அடையாளம் கைவிடப்பட்டு 1979இல் பயங்கரவாத தடைச் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்துடன் அவசர கால ஒழுங்குவிதிகளும் பிரகடனப்படுத்தப்பட்டன. வடகிழக் கில் தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்படத் தொடங்கினர். அப்பாவிகள் பலர் கைது செய்யும் படலமும் ஆரம்பமானது. 1979இல் யாழ்ப்பாணத்தில் எட்டுத் தமிழர்கள் சுட்டுக்கொல் லப்பட்டனர். அப்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது. இந்த காலத்தில் தமிழர்கள் மிக மோசமாக பல்வேறு இன்னல் களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வந்தனர். இவற்றை அடிகளார் நேரில் கண்டு வந்தார். இந்நிலையில் நீதிக்காக, மனித உரிமைக்காக, நான் மேடையில் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. நமது தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேச ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யும்படி தனது நண்பர் களிடம் வேண்டிக் கொண்டார்.

அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வீர சிங்கம் மண்டபத்தில் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் அடிகள் தோன்றி தமிழ் மக்கள் முகங்கொடுக் கும் பிரச்சினைகளின் தாக்கத்தை எடுத்துரைத்தார். தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுத்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றால் நமது இளைஞர்களின் எதிர்காலம் எப்படிப் பாழாகுமென்பதை தெளிவுபடுத்தினார். உரிமைக்காக நாம் போராடுவதைவிட வேறு மார்க்கம் இல்லையென்பதை யும் உறுதிப்பட கூறினார். அடிகள் கட்சி அரசியலோடு நேரடி தொடர்பற்றவராயினும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக உரிய முறையில் உழைக்கத் தயங்கவில்லை. களத்தில் சென்று போராடவும் பின்நிற்கவில்லை. அடிகளாரின் பேச்சும் எழுத்தும் செயலும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை அரசியல் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. அவரது சொற் பொழிவு பின்காணும் வகையில் இருந்தது.

தமிழா!

தமிழை இழந்து நம் ஒப்பற்ற இலக்கியங்களையும் பண்பாட்டினையும் இழப்பதா! தமிழை இழந்து நம் செல்வச் சமய நூல்களையும் வழிபாட்டுப் பாடல்களையும் இழப்பதா! தமிழை இழந்து நம் கவின்கலைகளை இழப்பதா! தமிழை இழந்து பண்பாடின்றி புறக்கணிக்கப்பட்ட கீழ் வகுப்பினராக நம் சொந்த நாட்டில் வாழ்வதா! தன்னலம் கருதித் தமிழ் இனத்தைக்காட்டிக் கொடுப்பதா? பெரும்பான்மையோரின் அடிமைகளாக வாழ்வதா-அல்லது சாவதா- இன்றேல் சம உரிமைகளுடன் தனி இனமாக மானத்துடனும் புகழுடனும் சேர்ந்து இயங்குவதா? அம் மான நிலையை அடைய விடாது முயல்க.

இவ்வாறு முழங்கிய தனிநாயகமடிகளது அரசியல் நுண் ணறிவு நுட்பமாக அடையாளம் காணப்பட வேண்டும். இன்றைய சூழலில் அடிகளாரின் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய அவசியப் பணி உருவாகியுள்ளது. ஆகவே தனிநாயகம் அடிகள் பற்றிய மீள்சிந்தனையையும் மீள்வாசிப் பையும் உருவாக்குவோம். அடிகளின் அரசியல் நுண்ணறிவு சார்ந்தப் புலத்தை இன்னும் ஆழமாக்குவோம்.

அடிகள் தமிழ்ப் பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பி செயற்பட்டு வந்தார். யாழ்ப்பாணத்தில் 1951ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் விழாவில் அடிகள் உரையாற்றும் போதும் சரி பின்னர் அவர் உரையாற்றிய பல்வேறு கூட்டங்களிலும் சரி “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்னும் திருமூலரின் உரையைச் சொல்லித் தம் உரையை முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம் அரசியல் சொல்லாடல் சார்ந்த சிந்தனை நோக்கி நாம் பயணிப்பது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

இக்கட்டுரையாளர் கொழும்பில் வசிக்கும் ஆய்வாளர். பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.

Pin It