உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலையில் நிற்கிறது. கடந்த ஆறு மாதங்களில் மரணம் அடைந்த 169 பேர்களது உறுப்புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன. கொடையாக பெறப்பட்ட 937 உறுப்புகள் உயிரோடு போராடியவர்களுக்குப் பொருத்தப்பட்டு உயிர் வாழ்க்கை தரப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய செயலாளர் அறிவித்துள்ளார், இது ஆறு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ள கொடை. இது 2008-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,490 பேரிடமிருந்து 14,533 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உடலுக்கோ உடல் உறுப்புக்கோ ஜாதி அடையாளங்கள் இல்லை! உறுப்புகள் ஜாதி பார்ப்பதில்லை!
எந்த ஒரு ஜாதி பற்றாளரும் பிற ஜாதியினரின் உறுப்பு தங்கள் குடும்ப உறுப்பினருக்கு தேவை இல்லை என்று மறுப்பதும் இல்லை. எப்போது கிடைக்கும் என்று துடிக்கிறார்கள். நோய்களும் ஜாதி பார்ப்பதில்லை; சிகிச்சைகளுக்கும் ஜாதி இல்லை; எல்லா ஜாதியினருக்கும் ஒரே சிகிச்சைதான்! ஜாதி கடந்து உறுப்புகள் பொருத்துவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். ஆனால் ஜாதி கடந்து உள்ளங்கள் பொருந்தும் போது வெறுக்கிறார்கள்; அரிவாள் தூக்குகிறார்கள். மனித உறுப்புகள் உயிரைக் காக்கின்றன. மனித ஜாதிகள் உயிரைப் பறிக்கின்றன இதுதான் பார்ப்பனியத்தின் சனாதன வாழ்க்கை!
ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கருத்தரங்கம்!
ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் சார்பில், கடந்த ஜூலை-12, (ஞாயிறன்று), சென்னை ராயப்பேட்டை இ.என். சேஷா மகாலில், ``இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீதான ஜாதி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் விளைவுகள்’’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி தோழர் அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சூரஜ் மண்டல்; பிற்படுத்தப்பட்டோரை பாஜக ஏமாற்றுவது குறித்தும், பார்ப்பனர் ஒற்றுமை - ஓபிசி ஒற்றுமையின்மை குறித்தும் உரையாற்றினார்.
அடுத்ததாக உரையாற்றிய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி ஜாதிகளின் எண்ணிக்கையை 46 லட்சமாக உயர்த்திக்காட்டும் மோசடிகளைச் சுட்டிக்காட்டினார். நீதிபதிகள், அரசுத்துறைச் செயலாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் பெரும்பாலும் முன்னேறிய ஜாதிகளாகவே இருப்பதை வினவினார். நீதிமன்றங்களில் புள்ளிவிவரங்களை வழங்காமல், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மோடி தான் என்றார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், அகில இந்திய ஓபிசி மாணவர்கள் சங்கத் தலைவர் கிரண் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
- விடுதலை இராசேந்திரன்