பராரிகளின் பழம்பொருள் சந்தை எங்கிலும்

முற்றிலும் புதியவனான

இளைத்த காட்டெருமையை ஒத்த அவன் அலைந்து கொண்டிருந்தான்

 

குப்பைகள் குவியும் நீள்சுவற்று வளை தெருவில்

சிறுநீர் மிதப்பில் மிதக்கும் ஆணுறைகளை போல

அடையாளமற்றவனாகவே

தன்னுள் மோதி மோதி தத்தளித்தபடி இருந்தான்

அறுதியிடும் வண்ணமும், உடலும், இல்லாத

மனிதர்களின் பற்களில், உதடுகளில் படிந்த

வண்ணங்களின் கிளர்ச்சியாய் முகம் மலர்விக்க அவர்கள்

பண்பலை கேட்டபடி

உலவும் கண்களையும் கால்களையும் அவதானித்தபடி

வீழும் பொழுதின் நெருக்கடிகளில்

ஆயிரம் சூரியன்களை அடையாளமற்று பிரசவித்தபடியிருந்தனர்

நெருங்கும் அவ்விரவு கறுக்க

மரப்பாச்சிகள் குழுமியதின் சிதைவுகளில் இறுகிய அமைதி

விதவிதமான புராதான கை விளக்குகள்

உலோகபாவைகள் கிராமபோன் இசைத்தட்டுக்கள்

பழைய காலணிகள், ஆடைகள் கைவினை ஆயுதங்கள்

வார்ப்பு கடவுளர் பரிவாரங்கள் அசைவற்றிருக்க

மழையில் நனைந்த புத்தங்களும் வெள்ளிப்பூச்சி தொட்டு விளையாட்டும்

கிழிந்த நாள்காட்டி கோலநோட்டு ஓலைச்சுவடிகளை அவன் மீறி

சுழல்கையில் வழமைபோல் அச்சந்தை கூடும்மிடத்தில்

திசை கிழித்து தூண்கம்பத்தின் மீதேறி, தன்னை விற்க அறைகூவலிடுகிறான்

கூட்டம் சூழ்கிறது அதில், பிரேதகளை படிந்த மனிதர்களில்

வயோதிகனொருவன், என்ன விலை என்க

பராமரிப்பு மட்டுமே என்று, தன் விரல்களால் விழிகளை பிதுக்கி உருட்டுகிறான்

உதட்டு வண்ண சாயம் பூசிய ஒருத்தி, கவனிக்கிறாள்

என்னவாக வேண்டுமானாலுமிருக்கலாம்

காமம் ஆற்றும்

ஒரு நொடி என்றபடி. கடன் அட்டையின்றி என்னால் வாங்க இயலாது

உன் வங்கி எண்ணை கூறு என்கிறான்

எனக்கிருப்பதெல்லாம் ஒரே பசி அகோரபசி படையல் கேட்கிறேன்

திசையெல்லாம் முகம் திருகி சோர்கிறான்

குப்பை மேட்டில் அவனை கிடத்தி, நாய்களும்..

மதிய பொழுதில் உயரத்தை அளாவும்

பருந்து வல்லூறு கண்கள் ஊடுருவ

நூலாம்படை உற்பவிக்கும் உடலாளன்

 

கொலாஜ் ஓவியத்தின் நிறங்களை தன் நிணங்களில் கசிய விடுகிறான்

சாராயக் கோப்பைகளோடு நெருப்பை கொணர்கிறார்கள்

புகை வழித்தபடி

நினைவிழந்த நகரத்து அடிமைகள்

புவனராஜன்

Pin It