யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கோவை நந்தன் இனவெறியின் பாசிசத் தாக்குதல்களால் பிறந்தகத்தைப் பிரிந்த அகதி மட்டுமல்ல, ஈழப்போராட்ட வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமையாகவும் தொழிற்பட்டவர். சிங்கள அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்த ஆரம்ப காலகட்டங்களில் கட்டிமணி, தங்கதுரை, ஜெகன், பிரபாகரன் உள்ளிட்டவர்களோடு இணைந்து செயல்பட்டவர். 1970களில் தமிழ் இளைஞர் பேரவையினூடாக சிங்கள அதிகாரத்தை நோக்கி குரலுயர்த்தியதன் விளைவாய் 1976 ஆம் ஆண்டு ஒன்றரைவருட சிறைவாசம் அனுபவித்தவர். 1981 இல் பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் இயக்கச் செயல்பாடுகளின்றி தமது அரசியற்பணிகளை தொடர்ந்து வருகிற நந்தன் ஐரோப்பாவில் தமிழ் ஊடகத்துறையை வளர்த்தெடுத்த டுன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, வன்னி என இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் கண்டு வந்திருப்பதோடு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக உரையாடியிருக்கிறார். அகதி முகாம்களையும் அப்பாவி மக்களையும் வைத்த இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் அரசியல் களங்களெல்லாம் நாடகமேடையாகிக் கிடக்கும் சூழலில் இலங்கைத்தமிழரின் வாழ்நிலை குறித்து நந்தனோடு உரையாடியோம். அவற்றிலிருந்து.... - மீனா

இத்தனை வருடங்களிற்குப் பிறகு பிறந்தகத்திற்கு சென்று வந்திருக்கிறீர்கள். இனப்போராட்டங்களின்- அதிகாரப் போராட்டங்களின் வெறித்தாக்குதல்களால் மயானக்காடாக மாறிக் கிடக்கும் அந்த மண்ணைப் பார்க்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது....?

இத்தனை வருடங்களின் பின்னர் அந்த மண்ணில் சுதந்திர மாக திரியவும் பேசவும் முடிகிறதே என்கிற மகிழ்ச்சியை, நான் நானாகவே இளவயதுவரை திரிந்த அந்த யாழ்ப்பாண மண்ணின் இன்றைய வெறுமையும் இனம்புரியாத ஒரு மயான அமைதியும் தோற்கடித்துவிட்டன. கொழும்பிலிருந்து நானும் தோழர் சுகன் உட்பட 15 பயணி களும் பயணித்த அந்தச் சிறிய விமானம் பலாலி விமானப் படைத்தளத்தில் தரை இறங்கியபோது மனதில் ஒரு பதட் டம் இருந்தது. பஸ்மூலம் யாழ் பஸ்நிலையம் வரையான 6 மைல் தரைப்பாதையில் அழைத்துச் சென்ற அந்த இராணுவச்சிப்பாய்களும் அதிகாரி ஒருவரும் அன்பாகவும் பரிவுடனும் எம்முடன் பழகிய விதம் எனது பதட் டத்தை என்னையறியாமலே துரத்திவிட்டது. இவர்களா எமது மக்களை அழித்தவர்கள் என உலகம் பூராவும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள் என்கின்ற எண்ணத்தை நிச்சயமாக எம்முடன் பயணித்த அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கும்.

இந்த எண்ணத்துடனும் யாழ் மண்ணின் மணத்துடனும் பஸ் நிலைய பரப்புக்குள் இறங்கிய எனது கண்களுக்கு முதலில் தெரிந்தது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சிரித்துக் கொண்டிருக்கும் மிகவும் பிரமாண்டமான வண்ணப் போஸ்றர்தான். அதிலே மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்னுள் பெரும் நெருடலை ஏற்படுத்தின. ஒரேநாடு ஒரே மக்கள்; இதுதான் மகிந்த சிந்தனை. தமிழர்களுக்கு மட்டும் சொல்லும் அந்த வாசகங்கள். இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் காணக்கூடியதாக உள்ளன. இதன் தொனிப்பொருள் என்ன? சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் இது எப்படி அர்த்தப்படுத்தப்படப் போகிறது? எந்த ரூபத்தில் இதன் நடைமுறை இருக்கப் போகிறது? இந்த கேள்விகளுடன் 20 வருடங்களின் பின்னரான எனது மண்ணின் பயணம் தொடங்கியது. இறுதிப்போரின் நிகழ்வுகளும் தாக்கமும் பெருமளவில் இடம்பெற்றிருக்காத யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அழிவின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன என்றால் வன்னி மண்ணின் நிலை எப்படி இருக்கும் என்கின்ற எண்ணம்.

இவை பூரணமாக பாகுபாடின்றி சீர்செய்யப்படுமா? அப்படியாயின் அதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்? இன்றும் இருக்கும் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அப்பகுதிகளுக்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்? அல்லது கிழக்கு மாகாணம் மன்னார் போல இந்தப் பிரதேசங்களும் சிங்களமயமாகுமா? இப்படி பல சிக்கலான விடயங்களுக்கு அங்குள்ள அரச அலுவலர்களாலோ , அங்கு அரச சார்புடன் செயற்படும் தமிழ் ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்களாலோ விளக்கம் கொடுக்க முடியவில்லை. யாழ் மாவட்டத்தில் தென்மராட்சிப் பகுதிகளிலேயே ஆங் காங்கே அகதி முகாம்களும் இடைத்தங்கல் முகாம்களும் காணப்படுகின்றன. இதனுள் வாழு(டு)ம் மக்கள் தமக்கு ஒருஇருப்பிடம் கிடைக்காதா-நிம்மதியான நிரந்தர வாழ்வு கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருக்க, அவற்றிற்கு வெளியே ஆட்களற்ற அடித்து நொறுக்கப்பட்ட வீடுகளும் பரந்த பற்றைகள் நிரம்பிய காணிகளும் தம்மைச் சீர் செய்ய இந்த மக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என ஏங்கிக் கொண்டிருப்பது போல இருந்தது.

அகதி முகாம்களில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அங்கிருந்து பல்வேறு கட்டங்களாக குடியேற்றிக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது....?

குடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சரியல்ல. முகாம்களில் இருந்த மக்கள் படிப்படியாக சிறிய நிவாரணத்தொகையும் சில அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு அரச சிவில் நிர்வாகத்தின் அடையாளப் பதிவின் பின்னர் அவர்கள் முன்னர் வாழ்ந்த பகுதிகளுக் கும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். யாழ்ப்பாணத்து அகதிகள் அனைவரும், கிளிநொச்சி முல்லைத்தீவு பூநகரி ஆகிய வன்னிப்பகுதி களைச் சேர்ந்த மக்களில் ஒருபகுதியினரும் இப்படி அனு மதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முகாம்களில் இருந்ததை விட மகிழ்ச்சியாக இருப்பதாகவே படுகிறது. இவர்கள் தவிர முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் தாமும் எப்போது வெளியேற அனுமதிக்கப்படுவோம் என்கிற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறார்கள். இவர்களில்ஒரு சிலர் வெளிநாடுகளில் இருக்கும் தமது உறவினர்களிடம் இருந்து பண உதவிகள் பெற்று தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி கொள்வதனையும் காணமுடிகிறது.

இந்த மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இந்த 20 வருட காலப் போரின்போது காலத்திற்கு காலம் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்களும் தொடர் இடப்பெயர்வுகளை சந்தித்தவர் களும் கூலி வேலை செய்து அன்றாட பிழைப்பை நடாத்தும் மக்களே ஆவர். இவர்களில் பெரும் பகுதியினர் தலித்துகள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. இவர்களில் வன்னி பெருநிலப்பரப்பை சேர்ந்தவர்களைத் தவிர ஏனையவர் குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு லட்சத்தையும் அண்மித்த மக்கள் தொடரும் காலங்களில் என்ன தொழிலை மேற்கொள்ளப்போகிறார்கள், யார் இவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கப்போகி றார்கள் என்பது கேள்விக்குறியே. பெருகிவிட்ட இவர் களது குழந்தைகளின் கல்விவாய்ப்பு, அந்தப் பிள்ளை களின் ஆரோக்கியமான எதிர்காலம் இவையும் உடன் விடை காணப்பட வேண்டிய வினாக்களே. யாழ் மாவட்டத்திலிருந்து 2ம் ஈழப்போருக்கு முன்னர் துரத்தியடிக்கப்பட்டு வன்னிப்பிரதேசங்களிலேயே வாழ்ந்து வந்த மக்களில் ஒருபகுதியினர் வவுனியா அகதி முகாம்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படிப்படியாக அழைத்து வரப்பட்ட வேளை நான் அங்கு தங்கியிருந்தேன். அந்த மக்களில் ஒரு சிலருடன் உரையாடக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அந்த மக்கள்பட்ட அவலம், அவர்களை வழிநாடத்திய மேய்ப்பர்களின் ஆதிக்க சிந்தனைடனான அடாவடிச் செயல்பாடுகள், அவை ஏற்படுத்திய அழிவுகள், என்றும் மறையாத அதன் வடுக்கள்... ஒரு இரவின் பலமணி நேரங்கள் வறண்ட முகங்களுடனும் வற்றிய கண்ணீருடனுமான அந்த விம்மல்கள் இன்றைய இரவுகளிலும் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தின் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களில் ஒருபிரிவினர் தாம் வெளியே சென்று குடியமர் வதற்கு இடமோ அன்றி தமக்கு உறவினர்களோ இல்லாத நிலையில் தாம் தொடர்ந்தும் அந்தந்த முகாம்களிலேயே இருக்க ஆவன செய்யமாறு சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்ததையும் நான் அங்கு இருந்த சமயத்தில் காணக்கூடியதாக இருந்தது.

ஐந்தாம் கட்ட போராட்டத்திற்கான முழக்கம் ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதுவரையிலான எந்த ஒரு இயக்க எழுச்சியும் மக்களுக்காக அப்படி எதையும் சாதிக்க வில்லை. சாதிக்க நினைத்தவை அனுமதிக்கப்படவில்லை. மக்களுக்கான உரிமையை இயக்கங்களல்ல- மக்களேதான் பெறவேண்டும். ஆனால் கெட்டு நொந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களிடையே தன்னெழுச்சி இனி சாத்தியமா?

காலனித்துவ ஆட்சிக் காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி இலங்கைத் தமிழ் மக்களின் தன்னெழுச்சி என்பது மக்களாலேயே ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. வெள்ளைக்கார துரைமார் ஆட்சிக்காலத்தில் தாம் அனு பவித்த சுகபோகங்களையும் அடித்தட்டு மக்கள் மீதான ஆளுமையையும் 1958 சுதந்திரத்திற்குப் பின்னரும் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக சேர். பொன். ராமநாதன், சேர் .பொன். அருணாச்சலம் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, பின் தந்தை செல்வா, தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட வடிவங்களே இறுதியில் விடுதலைப்புலி களால் மக்கள் எழுச்சி எனச் சொல்லப்பட்டு சிங்களப் பேரினவாதத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அழிவின் உச்சத்தையும் துயரத்தின் ஆழத்தையும் தாண்டி நாளைய கஞ்சிக்கான எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையில் அந்த மண்ணிலேயே தொடர்ந்தும் வாழும் அந்த மக்களிடையே தன்னெழுச்சி சாத்தியமா என்பது குதிரை முட்டை போடுமா எனக் கேட்பதைப் போன்றதே.

விடுதலைப்புலிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு விட் டனர் என்ற அறிவிப்பின் பின்னர் மகிந்த சகோதரர்களின் அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பிலும் தமிழ்ப்பிரதேசங் கள் தொடர்பிலும் முன்னெடுக்கும் இராஜதந்திர நகர்வு களையும் வவுனியா முகாம்களிலுள்ள வன்னிமக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் நோக்கும்போது ஈழத்தமிழினத்தின் மத்தியில் தன்னெழுச்சி என்பது ஏற்பட வேண்டும் அல்லது ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தோட்டமே யாழ்மாவட்டத்திலுள்ள படித்த குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இருப்பதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

உலகத் தமிழர்களில் பெரும்பாலோரின் மனோநிலையை வெகுவாகப் பாதித்தது பிரபாகரனின் மரணச்செய்தி, ஈழத் தமிழர்களை இது எவ்வாறு பாதித்துள்ளது?

அவரது மரணம் உண்மையானால் அது எப்படி நடந்தது அல்லது நடாத்தப்பட்டது? பொய்யானால் அவர் எங்கிருக் கிறார்? மீண்டும் அவரது போராட்ட வடிவம் முன்னெடுக் கப்படுமா? அது எப்போது? இப்படியான சந்தேகங்கள் உலகத்தமிழர் மத்தியில் குறிப்பாக புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்களிடையே பரவ லாக இருக்கிறது. இவர்களில் ஒரு சிறுபகுதியினர்தான் விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் அவங் கள் எங்கட பொடியள் என விசுவாசமாக நேசித்தவர்கள். ஏனையவர்களில் பெரும்பகுதியினர் தமதும் புலத்தில் வாழும் தம் குடும்பத்தவரினதும் நலத்திற்காகவும் இவர் களைப் பகைத்தால் சிக்கல் என்பதற்காகவும் ஆதரவு கொடுத்தவர்கள். புலிகளின் அராஜகச் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, இப்படியான செயல்பாடுகளை விமர்சித்த ஒரு சிறுபகுதியினர்தான் ஆரம்பம் முதலே புலிஎதிர்ப்பாளராக இருந்தவர்கள். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகத்ததும் இவர்கள் தமிழினத் துரோகி என ஏனையவர்களால் முத்திரை குத்தப்பட்டதும் நிகழ்வுகள். ஏனையநாடுகளை சேர்ந்த தமிழர்களில் மிகப்பெரும்பகுதியினருக்கு அன்றாட சுவராசியமான, பெரிதாக அலட்டிக் கொள்ளப்படாத செய்திகளில் ஒன்றாக இது இருந்தது.

விடுதலைப்புலிகளால் பலவகைகளிலும் நன்மைகளைப் பெற்ற தமிழகத்து அரசியல் முன்னோடிகள் சிலர் தமது அரசியல் இருப்புக்காக பிரபாகரனின் மரணச் செய்தியை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தாண்டி அங்கே இலங்கையின் தமிழ் மண்ணிலே தொடர்ந் தும் இன்றும் வாழுகின்ற மக்களில் மிகப் பெரும்பகுதியி னருக்கு குண்டுச்சத்தம் - பங்கர் வாழ்க்கை - உயிர்ப்பயம் அற்ற ஒரு வாழ்வு- தமக்கு வந்துவிட்டதான நிம்மதியில் இந்தச்செய்தி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்த மக்கள் வாழ்வா சாவா என்ற நிலையில் அமைதியை, நிம்மதியை, சமாதானத்தைத் தேடி இரட்சிப்பிற்காக அலைந்தவர்கள். இறுதிக்கட்ட வன்னிப்போரில் தப்பித்து மக்களோடு மக்க ளாக அகதி முகாம்களில் தங்கியிருந்த விடுதலைப்புலி களின் 2ம் 3ம் நிலை தலைவர்கள் பலரை மக்களே இராணுவத்திடம் காட்டிக் கொடுத்த சம்பவங்கள் இதனைத்தானே வெளிப்படுத்துகின்றன.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை அடுத்து அதிதீவிரமாகப் பேசப்பட்டது சகல தமிழருக்குமான அரசியல் தீர்வு. ஆனால் இதெல்லாம் உடனடிச்சாத்தியமில்லை என்கிற கருத்து இப்போது நிலவி வருகிறதே...?

தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம், அண் ணன் அமிர்தலிங்கம் முதல் தம்பி பிராபாகரன் வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட தீர்வுக்கான சந்தர்ப்பங்களையும் அதனை நாம் கோட்டைவிட்டதையும் தமிழினத்துக்கான அரசியல் பாடமாக-அனுபவங்களாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. காலத்துக்கு காலம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளிலும் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களிலும் பலவடிவங்களிலான யோசனை கள் பேசப்பட்டாலும் தந்தை செல்வா காலத்தில் தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சமஸ்டி முறைமையே நிரந்தத் தீர்வுக்கான முறைமை எனப் பலராலும் சொல்லப் படுகிறது. சிங்களப் பேரினவாத சக்திகளால் இதுகூட ஏற்கப்படாத நிலையிலேயே தனிநாடு கோரிக்கை முளை விடத்தொடங்கியதும் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனச்சொல்விட்டு தந்தை செல்வா மறைந்ததும் ஆகும். இருதரப்பினதும் அரசியல் சதுரங்கத்தினுள் சிக்கி சின்னா பின்னமாகி ஒட்டுமொத்தமாக பல இலட்சம் இலங்கையர் அழிவுக்கும் நாட்டின் நாசத்துக்கும் காரணமாகி இன்று One Nation – One Country என்கிற மகிந்த சிந்தனையுள் அடங்கி நிற்கின்றது இந்த அரசியல் தீர்வு.

1976 ல் வட்டுக் கோட்டை தமிழீழப்பிரகடனம். தொடர்ந்து 1977 பொதுத் தேர்தலில் இதற்கு ஆதரவாக ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழ் மக்களின் ஜனநாயக வாக்களிப்பு. பின்னர் புலிகளின் ஆயுதப்போராட்டம் பலமாக உள்ளது என்கின்ற நிலையி லான தமிழீழக் கோரிக்கை. இதன் போதெல்லாம் எட்டப் படாத அரசியல் தீர்வு, மிதவாதம் தீவிரவாதம் அனைத்தும் அடங்கிய இன்றைய நிலையில் சாத்தியமா என்றால் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். பௌத்த சிங்கள ஒற்றை ஆட்சி - அதிஉயர் அதிகாரங் களைக் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமை - ஒரு பௌத்த சிங்களவன் அல்லாதவன் இலங்கையின் ஜனாதிபதியாக முடியாது என்கிற தனிச் சிங்கள தேசத்திற் கான அனைத்து அடிப்படைகளும் அரசியல் சட்டரீதியாக உள்ள இன்றைய நிலையில் எப்படித்தீர்வு சாத்தியமாகும்? சிலவேளை 1977 போல மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலம் கொண்ட ஒரு அரசாங்கம் அமைந்து சிங்கள ஜனாதிபதியின் ஆலோசனையின்படி இன்றைய அமைப்பு மாற்றப்படாமல் எதுவும் மாறப்போவதில்லை. இவை எல்லாம் சிங்களத்தின் இன்றைய யுத்த வெற்றி நிலையில் சாத்தியாகுமா...?

வட்டுக்கோட்டை தீர்மானம் எட்டப்படுவதற்கான நிலைமை ஏற்பட முக்கியக் காரணியாக சொல்லப்பட்ட இலங்கை அரசின் கல்வி தரப்படுத்தல் சட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன...?

இலங்கைத்தமிழர் போராட்ட வரலாற்றில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தி இளைஞர் சமூ கத்தை முதன்முதலில் அணிதிரள வைத்தது தரப்படுத்தல் என்று சொல்லப் பட்ட இந்த சட்டமூலம் ஆகும். 1972ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான, இடதுசாரிக் கட்சிகளை அங்கமாகக் கொண்ட கூட்டு முன் னணி அரசில் டாக்டர். அல்காஜ் பதியுதீன் கல்வி அமைச்சராக இருந்தபோதே இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இலவச கல்வி அமைப்பைக் கொண்ட இலங்கையின் பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான க.பொ.த. உயர்தரநிலைப் பரிட்சைகளில் சிங்கள மாணவர்கள் குறைந்தநிலையிலும் தமிழ் மாணவர்கள் கூடிய நிலையிலும் மதிப்பெண் எடுத்து சித்தியடைய வேண்டும் என்பதுதான் இந்த சட்ட மூலம் என அன்றைய மாணவர்களாகிய எமக்கு அப்புக் காத்து அரசியல் தலைவர்களால் விளக்கம் தரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சத்தியசீலன் - முத்துக்குமாரசாமி உள்ளிட்ட இளைஞர் குழாம் ஒன்றினால் உருவாக்கப் பட்ட தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் அமைப்பு இளைஞர்களின் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தியது அன்றைய வரலாறு. அப்போது 18 வயதான நானும் உணர்ச்சிப் பிரவாகத்துடன் அந்த ஊர் வலத்தில் கலந்து கொண்டதும் பின்னாட்களில் அதற்காக வருத்தப்பட்டதும் எனதான ஒரு அனுபவம். கடந்த மே மாதம் வரையான போராட்ட - இயக்க வரலாற்றுத் தொடர் களுக்கு இந்த முதல் ஊர்வலமும் மாணவர் பேரவை என்கின்ற அந்த அமைப்புமே வித்திட்டதெனலாம்.

இத்தனை அழிவுகளுக்கும் மரணங்களுக்கும் காரணமான வற்றில் முக்கியமானதாக சொல்லப்பட்ட இந்தத் தரப் படுத்தலை ஆழமாக நோக்குவோமேயானால் இது இந்திய அரசியல் சட்டம் தலித் , பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒத்ததே என்பதை அறியமுடியும். கல்வி வசதிகள் - பாட சாலைகள் குறைந்த இலங்கையின் பிற்பட்ட பிரதேசங் களின் மாணவர்கள் நகர்ப்புற பாடசாலை மாணவர்களை விட குறைந்தநிலையில் சித்தியடைந்தாலும் அவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டத் திருத்தமே தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல் என்று சொல்லப்பட்ட சட்டமூலமாகும்.

8 மாவட்டங்களைக் கொண்ட இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 6 மாவட்டங்க ளில் ஓரிரு நகரங்களைத் தவிர மிகுதி 90 வீதமான பகுதி களும் பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களே. இது தவிர மலை யகத் தமிழர் வாழும் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களும் முற்று முழுதான பிற்பட்ட பிர தேசங்களே. ஆக, இலங்கைத் தமிழர் களில் பெரும்பகுதி யான மாணவர்கள் இச்சட்டமூலத்தின் வாயிலாக பயன் பெறுவர் என்பதே உண்மைநிலையாக இருக்க, தம் வாரிசு கள் பாதிக்கப்பட்டு கிழக்கானும் தோட்டக்காட்டானும் படித்து பட்டம் பெற்று தமது அரசியல் எதிர்காலத்திற்கு சவாலாகிவிடுவார்கள் என்கின்ற ஒரு வர்க்கநலன்சார் சிந்தனையே இந்த சட்டத்தை இனவாதத்தினுள் அடக்கி இளைஞர்களை அன்றே தவறாக வழிநடாத்தியது. பிற்பட்ட பிரதேச மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பை அதிகமாக்கும் இந்த சட்டமூலத்தால் யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய பல பிரதான பாடசாலைகளைக் கொண்ட முக்கிய நகரங்களில் படித்தக் கூடுதலான யாழ்ப்பாணத்து வெள் ளாளப் பெருங்குடி மக்களின் பிள்ளைகள் பாதிக்கப்படுவதற் கான வாய்ப்பே அதிகமாக இருந் தது.

இந்தச்சட்ட மூலம் அமலுக்கு வந்த பின்னர் பல யாழ்ப்பாணத்து மாணவர்கள் கிளிநொச்சி வன்னி மட்டக்களப்பு ஆகிய பிற்பட்ட மாவட்டங்களில் இருந்து பரிட்சை எழுதி இலகுவாக பல்கலைக்கழகங்களில் புகுந்த மோசடியை நேரில் பார்த்திருக்கிறேன். அன்று முதல் இன்றுவரை இப்படி யான யாழ்ப்பாணத்து வெள்ளாள மேலாதிக்க சிந்தனைகள் தான் எமது இனத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இலங்கையில் பிற்பட்ட பிரதேசங்கள் கூடுதலான பரப்பள வில் தென்னிலங்கையிலேயே இருக்கிறது. ஆகவே இந்தத் தரப்படுத்தல் சட்டமூலம் அங்குள்ள சிங்கள மாணவர் களுக்கே கூடுதல் வாய்ப்பை அளிக்கும் என தமிழீழப் பிரக டனம் செய்யப்பட்ட 1976ல் தமிழர் விடுதலை கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னிடம் தெரிவித்த இன வாதக் கூற்றையும் இங்கே நினைவுபடுத்துவது சரியானதே.

ராஜபக்சேவின் சிங்கள இனவாத ஆட்சியில் இடதுசாரிகளின் நிலைப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கிறது...?

ராஜபக்சே ஆட்சி மட்டுமல்ல இலங்கையின் சுதந்திரத் திற்குப் பின் வந்த அனைத்துமே இனவாத ஆட்சிகளாகவே அமைந்திருந்ததை வரலாறு தெரிவிக்கும். சிங்கள அரசியல் கட்சிகளின் இனவாதச் செயல்பாட் டில் இடது சாரி வலதுசாரி என்ற பேதம் இருந்ததேயில்லை. தோசே வடே அப்பிட்ட எப்ப - தல தெல் அப்பிட்ட எப்ப (மலையகத்தின் தோசையும் வடையும் எங்களுக்கு வேண் டாம் - யாழ்ப்பாணத்தின் நல்லெண்ணையும் எங்களுக்கு வேண் டாம்) இந்த இரண்டு சிங்கள வாசகங்களும் தமிழர் களுக்கு எதிரான இனவாதக் கோஷங்களில் மிக முக்கிய மானவை. இதன் பிதாமக்கள் இலங்கை இடதுசாரிகளில் முக்கியப்பிரிவினராக இருந்த லங்கா சமசமாஜக் கட்சியி னர்தான். 1963ல் வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் மலையகத்தின் இ.தொ.கா (தொண்டமான்), வட கிழக்கின் தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் (தந்தை செல்வா - ஜி.ஜி.பொன்னம்பலம்) போன்றோர் இணைந்து கூட்டு அரசாங்கம் அமைத்தபோது எதிரணியிலிருந்த லங்கா சம சமாஜக் கட்சியினர்தான் முதன்முதலில் இந்தக் கோஷத்தை முன்வைத்தவர்கள். பின்னர் இடம்பெற்ற அனைத்து சிங்கள இனவாதக் குழப்பங்களிலும் இந்த கோஷம் தமிழர்களுக்கு எதிராக எழுப்பப்பட்டது.

1972ல் சிறீமாவோ பண்டார நாயக்கா தலைமையில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சிகளின் மூத்தத் தலை வர்கள் பலர் அமைச்சர்களாயி ருந்த அரசாங்கத்தில்தான் இலங்கை, தன்னாட்சி கொண்ட சோசலிச ஜனநாயக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. பிரபல இடதுசாரி அரசியல் மேதை கொல்வின் ஆர்.டீ.சில்வா அவர்களால் எழுதப்பட்டு நடை முறைக்கு வந்த இதற்கான அரசியல் அமைப்புதான் முதன் முதலில் இலங்கையில் ஒற்றை ஆட்சி என்பதனை பிரகட னம் செய்ததுடன், பண்டார நாயக்காவால் முன்னரே எழுதப்பட்ட சிங்களம் மட்டுமே அரச கருமமொழி, அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் சிங்களம் படிக்க வேண்டும் என்கிற சட்டத்தையும் மீண்டும் உறுதிப் படுத்தியது. இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராகத்தான் தமிழரசுகட்சி, தமிழ் காங்கிரஸ் ,இ.தொ.கா போன்றவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் போராட்டங் களை நடாத்தியதும் அதன் தொடர்பில் தமிழ் இளைஞர் கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி அது பின்னாளில் ஆயுதப்போராட்டமாக உருப்பெற காரணமாக அமைந்த தும் வரலாறு. இப்படியான அன்றைய இலங்கை இடது சாரிகளின் இனவாதப் பங்களிப்புடனான வரலாறு, இன வாதத்தை முக்கிய கோஷமாக கொண்ட ஜே.வி.பி. என்கிற ஒரு அமைப்பு அரசியலில் தலைதூக்கி இடதுசாரிகளாக தம்மை நிலைநிறுத்திய இன்றைய நிலையில் காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மகிந்த அரசினால் அடுத்த ஆண்டளவில் நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்களில் தமிழ் மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என எண்ணுகிறீர்கள் ?

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றில் நடை பெற்ற தேர்தல்களில் எல்லாம் தமிழர்களின் குறிப்பாக வட கிழக்கு மக்களின் வாக்குகள் அல்லது பிரதிநிதித்துவம் இலங்கை அரசியலையும் அரசாங்கத்தையும் தீர்மானிக் கும் சக்தியாக இருந்து வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர் தலில்கூட மகிந்தவை ஜனாதிபதியாக்கியது விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் வாக்களியாமல் இருந்தமைதான் என்பது தெரிந்ததே. ஆனால் தீர்மானிக்கும் சக்தி என்கின்ற இந்த நிலைமை தமிழர்களுக்கு இன்று இருப்பதாக தெரிய வில்லை. இலங்கையில் இரண் டாவது சிறுபான்மையாக இருந்த தமிழர்களின் பாரிய புலம்பெயர் வினாலும் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களினாலும் இன்று முஸ்லிம்கள் முன்தள்ளப் பட்டு தமிழர்கள் மூன்றாவது சிறு பான்மை இனம் என்கின்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம், மலையகத்தமிழர்களினது பிரதிநிதிகள் எப்போதுமே ஆளும் தரப்பு சார்ந்தே கூடுதலாக இருப்பதால் அவர்கள் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்த தில்லை. 4 அங்கத்துவத்தைக் கொண்ட திருக்கோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4ம் தமிழ் பிரதிநிதிகளே இருந்த நிலை மாறி அல்லது மாற்றப்பட்டு இன்று ஒரு பிரதிநிதியே அங்கிருந்து தெரிவாகும் நிலை- மட்டக் களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றை உதாரணத்திற்கு கூறலாம். இந்த நிலையிலும் வன்னியில் வாழ்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சிதறுண்டுள்ள நிலையிலும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மகிந்த, தமிழ்மக்களின் வாக்குகளையோ அன்றி தனியான பிரதிநிதித்துவத்தையோ எதிர்பார்ப்பார் என்று சொல்ல முடியாது. அவர் யுத்தவெற்றியை முன்னிறுத்தி சிங்கள மக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்கின்ற எண்ணத்தில் இருப்பது போல் தெரிகிறது. மறுபுறம் 1977ம் ஆண்டிற்குப் பின்னர், ஜன நாயகச்சூழலில் இடம்பெற்ற எந்தத் தேர்தலையும் சந்தித் திராத - தமது பிரதிநிதிகளாக இருப்பவர்களால் எதுவித பொதுநன்மையையோ தனிப்பட்ட பலாபலன்களையோ அனுபவித்திராத - ஒரு மாபெரும் அழிவைச் சந்தித்த நிலையில் எதிர்கால நம்பிக்கையற்று அங்கேயே வாழும் கூடுதலான தமிழ் மக்கள் இந்தத் தேர்தல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை.

கடந்த 25வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

பெரும்பான்மையானவர்கள் உழைப்பாளிகளாக இருந்தா லும் வாழ்வின் அத்தனை வசதிகளுடனும் வாழும் புலம் பெயர் மேலைத்தேய மக்கள், தாயகத்தின் இன்றைய யதார்த்த நிலையை புரிந்து அங்குள்ள மக்களுக்கு ஆத்மார்த்தமாக உதவ உடன் முன் வரவேண்டும். முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுள்ள மக்களை யாரும் பார்க்க முடியாது என்கின்ற நிலை மாறி அந்த மக்கள் படிப்படியாக தமது பகுதி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் தற்போதைய நிலையில் பாரிய பொருளாதார நெருக்கடி களுக்கும் சமூகச் சிக்கல்களுக்கும் அந்த மக்கள் முகம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமை உடன் சீர் செய்யப்படாவிட்டால் அந்த மக்கள் குறிப்பாக, கடந்த பல ஆண்டின் அடைபட்ட வாழ்க்கையில் மிக அதிகமாக அவர்களிடையே பெருகி இருக்கும் குழந்தைகளின் எதிர்கால அமைதி வாழ்வு மிகமிக மோசமாக பாதிக்கப்படும். புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு வரும் குறிப்பாக சமூக அமைப்பு களும் தன்னார்வ சமூகச் சிந்தனை யாளர்களும் போர்க்கால (முன்னரைப் போலல்லாது) அடிப்படையில் செயல்பட்டு ஏதிலிகளாக்கப்பட்டுள்ள அந்த மக்களைக் காக்க முன்வர வேண்டும் என்பதே எனது மட்டுமல்லாது நான் தாயகத் தில் சந்தித்த அனைவரினதும் வேண்டுதலாக இருக்கிறது. விசேடமாக, அங்கிருந்தவாறே தலித்துகளுக்காக குரல் எழுப்பி வருபவர்களும் - தலித்துகளின் பெயரில் அமைப்புகள் நடாத்தி வருபவர் களும் இடதுசாரி சிந்தனை யாளர்களும் உடன் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மிகப் பெரும் பகுதியாகவுள்ள தொழிலாளர்கள் மற்றும் தலித் மக்கள் மத்தியில் பணியாற்றுவதன் மூலமே அந்த மக்களை அனைத்து வழிகளிலும் உயர்வடையச் செய்ய முடியும்.

***

 

Pin It