தமிழ் அறிவு ஜீவிகள் மத்தியில் ஒரு மரண அமைதி நிலவுவதாக சில நாட்களுக்கு முன் எழுத்தாள நண்பர் ஒருவர் கவலையோடு குறப்பிட்டார். ஒரு சிலர் மத்தியில் ஒருவகை கையறு நிலையும் வேதனையும் நிலவுவது உண்மைதான். மே 18லிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரம் முழுவதும், வழக்கமாக என்னிடம் பேசுகிற பழக்கமில்லாத சில எழுத்தாள நண்பர்களும் கூட என்னைத் தொடர்பு கொண்டு “கோள்விப்படுவது உண்மைதானா?’’ என விசாரித்த வண்ணம் இருந்தனர். தொலைக் காட்சியில் காட்டப்படும் உடல் அவருடையது அல்ல, இலங்கை அரசு பொய்ச் செய்தியைப் பரப்புகிறது என்கிற பிரச்சாரம் அவர்களில் சிலருக்குத் தெம்பூட்டவும் செய்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு எழுத்தாள நண்பர் தனது குடும்ப அட்டையை (Family Ration Card) அரசிடம் திருப்பிக் கொடுக்கப்போவதாக திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டே இருந்தார். கடும் போதையிலிருந்த அவரிடம் “யோசித்துச் செய்யுங்கள்’’ என்று மட்டும் சொன்னேன். ஏற்கனவே பலமுறை depression க்கு ஆளாகியுள்ள மதுரை எழுத்தாள நண்பர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இனி கவிதை எழுதி என்ன செய்யப் போகிறேன், ஏதோ சம்பாதித்தோம். சாப்பிட்டோம் என எஞ்சியுள்ள காலத்தைக் கழிப்போம் என சென்னையில் உள்ள ஒரு கவிஞர் சொல்லியதாகவும் அறிந்தேன்.
மென்மையான மனம் கொண்ட எழுத்தாள நண்பர்கள் இப்படியான ஒரு எதிர்வினை காட்டியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் எந்தப் பொதுப் பிரச்சினைகளிலும் இம்மியும் அக்கறை காட்டியிராத தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவிற்கேனும் ஈழப் பிரச்சினையிலாவது அக்கறையுடன் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.
இன்னொன்றும் என் மனதை உறுத்தியது. ஈழப் பிரச்சினை குறித்து நம் சக எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? பிரச்சினையின் பன்முகப் பரிமாணங்களை இவர்கள் புரிந்து கொண்டு இருப்பார்களா? குறைந்த பட்சமான சில அடிப்படைத் தகவல்கள் ---_ எடுத்துகாட்டாக இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது-_என்பது போன்றவற்றைக் கூட நம் எழுத்தாள நண்பர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். யாழ் பகுதியினருக்கும் கிழக்கு மாகாணத்தினருக்கும் உள்ள கலாச்சார, அரசியல் வேறுபாடுகள் முதலானவற்றையோ, யாழ் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை குறித்தோ கூடவும் அவர்கள் கிஞ்சித்தும் அறியார்கள்.
சமீபத்திய போரிலும் கூட ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் “சுமார் ஒரு லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்கிற ரீதியில்தான் அவர்கள் அறிவார்களே தவிர, விடுதலைப் புலிகளால் 3 லட்சம் தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழ்ப் பாதிரியார் ஒருவரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தலித் எழுத்தாளர் ஒருவர் ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்தினால் என்ன என்று கேட்டார். அவருக்கு முன் நான் பேசியபோது சொன்ன ஒரு கருத்தை மறக்கத்தான் அவர் இதைச் சொன்னார். கூட்டம் முடிந்த பின் பேசிக் கொண்டிருந்தபோது கட்டாயமாகக் குழந்தைகளைப் பிடித்துச் சென்று போராளிகளாக்குவதாக விடுதலைப் புலிகளின் மீது ஒரு விமர்சனம் இருப்பது தமக்குத் தெரியாது என்றார். சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுதான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். பொதுப் பிரச்சினைகள் குறித்து நம் பொதுமக்கள் அறிந்த அளவையும் விடக் குறைவாகக் தெரிந்தவர்கள்தான் எம் தமிழ் எழுத்தாளர்கள்.
இன்னொரு பக்கம் இணையத் தளங்களில் நாகார்ஜுனன், தமிழவன் முதலானோரின் அதிரடியான ஈழப் போராட்ட ஆதரவு, சரியாகச் சொல்வதானால் விடுதலைப் புலி ஆதரவுக் கருத்துக்கள் இணையத்தள வாசகர்கள் மத்தியில் சில சலசலப்புகளை ஏற்படுத்தியது. இவர்களது தீவிர புலி ஆதரவுக் கட்டுரைகளை எல்லாம் நுனித்து ஆராய்ந்தால் ‘புலிகள் தவறு செய்திருக்கலாம், ஆனால் அதையெல்லாம் பேச இது நேரமில்லை, உள் முரண்பாடுகளைப் பெரிதுபடுத்தி பொது எதிரிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது‘ என்கிற மட்டங்களைத் தாண்டி இவர்கள் பேசவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். சரி இதையெல்லாம் பேசுவது ஒரு காலப்பிழை என்று வைத்துக்கொண்டால்கூட புலிகள் வெற்றிமுகத்தில் இருந்த காலத்தில் இவர்கள் இதை எல்லாம் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், குழந்தைப் போராளிகளைக் களத்தில் இறக்கிப் பலி கொடுத்தல் ஆகியவை குறித்தெல்லாம் இவர்கள் என்றும் வாய் திறந்ததில்லை. இது குறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை.
நாகார்ஜுனனை எடுத்துக் கொண்டீர்களானால் அவர் தமிழ்ச் சூழலை விட்டு விலகிச் சென்று சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது இடைக் காலத்தில் அவரது பங்களிப்புகள் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. பி.பி.சி.யில் 10 ஆண்டுகள் இருந்ததாகக் கேள்விப்படுகிறோம். ஆம்னஸ்டியில் இருப்பதாகவும் அறிகிறோம். மற்றவர்கள் பலருக்கு எளிதில் வாய்த்திராத நிலைகள் இவை. இந்தப் பொறுப்புகளைப் பயன்படுத்தி அவர் தமிழ் மக்களது பிரச்சினைகளை எந்த அளவிற்கு உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியச் சூழலிலும் எத்தனையோ மனித உரிமை மீறல்கள், சாதிப் பிரச்சினைகள் எதையாவது விவாதப் பொருளாக்குவதற்கு இவர் என்ன வேனும் முயன்றிருப்பாரா?
திடீரென வந்தார். தமிழ் அறிவுச் சூழல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன்னால் எப்படி விட்டுச் செல்லப்பட்டதோ அப்படியே தேங்கிக் கிடக்கிறது என்பது போல பேட்டிகள் கொடுத்தார். இங்கிருந்தபோது தான் ஏதோ ஒரு தீவிர மாவோயிஸ்டாக இருந்ததுபோல கட்டுரை ஒன்று எழுதினார். நாகார்ஜுனன் இங்கிருந்து செயல்பட்டபோது எழுதிய கட்டுரைகள் சில முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. கூடங்குளம் அணு உலைத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது அவர் செய்த மிகச் சில பணிகளும் குறிப்பிடத்தக்கவை. இது தவிர அவர் இங்கிருந்தபோது இடதுசாரி இயக்கங்களுக்கோ, மனித உரிமைச் செயற்பாடுகளுக்கோ ஆதரவளித்தது கிடையாது. சொல்லப் போனால் எல்லோரையும் போல மார்க்சியத்தை வரட்டுக்கோட்பாடு என்று வாதாடிக் கொண்டிருந்தவர்தான் அவர்.
இப்போது உள்ள இந்தத் திடீர் மாற்றம்-? எப்படி இதைப் புரிந்து கொள்வது----?. இங்கிருந்து நிரந்தரமாகப் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் ‘செட்டில்’ ஆகிவிட்ட நமது மேற்சாதி (Elitist) அறிவுஜீவிகளின் மனநிலை குறித்து நான் முன்பே ஒரு சில முறை எழுதியுள்ளேன். அமெரிக்கச் சொகுசு வாழ்வை விட்டு அவர்கள் திரும்பி வர இயலாது. வீடு வாசல்களோடு வாழ்ந்துகொண்டு பிள்ளைகளையும் அமெரிக்க சூழலில் படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கே இரண்டாம் தரக் குடிமக்கள்தான். இது ஒருவகை உளச் சிக்கலை ((NRI Syndrome) அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. தமது மண்ணுக்கு, தமது கலாச்சாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வரும் அவர்கள் மிக எளிதாக இங்கு உருவாகி நிலைபெற்றுவிட்ட வலதுசாரி இந்து தேசிய வாதத்தில் சரண்புகுகின்றனர். இங்குள்ள வலது பாசிச அமைப்புகளுக்கு நிதி உதவி, இணையத் தளங்கள் மூலமாக Logistic Support, அமெரிக்க அரசியலில் இத்தகைய இயக்கங்களுக்காக Lobbying செய்வது முதலிய நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ‘திண்ணை’ இணையத் தளம், ‘வார்த்தை’ மாத இதழ், கோபால் ராஜாராம், சிவக்குமார் போன்ற அறிவு ஜீவிகள்... இந்நிலையின் சில எடுத்துக்காட்டுகள். இப்படியான ஒரு வலதுசாரி ‘இமேஜ்’ ஏற்பட்டு விடாமல் தமது தூர தேச தேசியத்தை (Long Distance Nationalism) நிலைநாட்டிக் கொள்ளும் ஒரு வழிமுறையாகத்தான் நாகார்ஜுனன் முதலானோரின் இந்தத் தீவிர புலி ஆதரவு நிலைபாட்டைச் சொல்ல முடியும். பல்வேறு அம்சங்களில் இவ்விரு நிலையினரும் எதிர்காலத்தில் ஒத்துப் போவதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம்.
பெங்களூரில் ‘செட்டில்’ ஆகிவிட்ட தமிழவனையும் கூட ஒரு வகையில் இவர்களோடு சேர்க்கலாம். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தால்தான் நவீன தமிழ் வளர்ச்சியே கெட்டுவிட்டது எனவும், அண்ணாவுக்கு சாகித்ய அகாதமி பரிசளிக்கக் கூடாது என முட்டுக்கட்டை போடவும் செய்த இவர் இப்போது எதிர் உச்சத்திற்குச் சென்று அறிஞர் அண்ணா புகழ் பாடுகிறார். ‘‘செய் அல்லது செத்துமடி’’ என்று சொன்ன காந்தியடிகளின் கூற்றுக்கு விடுதலைப்புலிகள் தான்!!! நடைமுறை எடுத்துக்காட்டாம்!. இப்படிச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை. இத்தகைய அரிய கருத்தைத் தனக்குச் சுட்டிக் காட்டிய நாகார்ஜுனனுக்கு நன்றி, நன்றி, என்று பிராக்கெட்டில் ஒரு பிரகடனம் வேறு. சமீபத்தில் நான் ரசித்த நகைச்சுவைகளில் ஒன்று இது. காந்தியையும் பிரபாகரனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேறு யாருக்குத் துணிச்சல் வரும். அறியாமை ஒன்றைத் தவிர இந்தத் துணிச்சலின் பின்புலமாக வேறென்ன இருக்க இயலும்?
எங்களூர் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் (I T Professionals) குறித்தும் எனக்குப் பெரிய மரியாதை கிடையாது. “Over Specialisation Cripples a Man” என லூனாசார்ஸ்கி ஒரு முறை சொன்னார். தமது துறை சார்ந்த அறிவில் நுணுக்கமாக விளங்கும் இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ‘கீற்று’ என்கிற இணையத் தளத்தில் ஈழப் போராட்டம் தொடர்பான இப்படியான பல அபத்தக் கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகின்றன.
இதை எழுதிக் கொண்டிருந்தபோது ‘கீற்று’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றைப் பற்றி நண்பர்கள் குறிப்பிட்டனர். புலிகளை விமர்சித்து வருகிற சுசீந்திரன், இராகவன், ஷோபா சக்தி, சுகன் ஆகியோரை கண்டபடி ஏசி எழுதியுள்ள கட்டுரை அது. என்னையும் போகிற போக்கில் திட்டி இருப்பதை ஒட்டி நண்பர்கள் அக்கட்டுரையைப்பற்றி குறிப்பிட்டனர். புலிகளுக்கு எதிராக சுசீந்திரனையும் இராகவனையும் பின்னிருந்து இயக்குவது அகிலன் கதிர்காமராம். (பின்னவர்களை இயக்குவது நானாம்.) இதற்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் எந்த விளக்கமுமில்லை. இந்த அகிலன் கதிர்காமருக்கு புலிகள் எதிர்ப்பு நோக்கம் ஏன் உள்ளது என்றால் அவர் புலிகளால் கொல்லப்பட்ட லக்ஷ்மண் கதிர்காமரின் மகனாம். இதுதான் அந்த ‘தத்துவார்த்த’க் கட்டுரையின் அடித்தளம்.
நானறிந்தவரை அகிலன் கதிர்காமர் லக்ஷ்மண் கதிர்காமரின் மகனல்ல. கதிர்காமர் என்பது தெற்கிலங்கை தமிழ் மேட்டுக் குடியினர் மத்தியில் பயிலப்படும் ஒரு பெயர். அமெரிக்காவில் வாழும் அகிலனின் தந்தை லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்தவர். அந்த வகையில் ஒரு இடதுசாரிப் பாரம்பரியம் அவருக்கு உண்டு. அகிலனும் கூட மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றே அறிகிறேன். கதிர்காமர் என்கிற பொதுப் பெயரை வைத்து இப்படியான ஒரு தவறான முடிவுக்கு வந்ததை ஒரு தகவல் பிழை என விட்டுவிடலாம். யாருக்கும் நேரக் கூடியதுதான் இது. ஆனால் இப்படியான ஒரு தகவல் பிழையின் அடிப்படையிலேயே ஒரு தத்துவத்தைக் கட்டமைப்பதும், இணையத்தள “எடிட்டர்’’ கள் அது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அதை வெளியிட்டு மகிழ்வது தான் வேதனை. அதே கீற்று தளத்தில் எனது நட்பிற்குரிய இன்னொரு பத்திரிகையாளர் ராஜபக்ஷேவிடம் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவதாகக் கூசாமல் சுகனைப் பற்றி எழுதியுள்ளார்.
பொதுவாகக் கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தின் பொது அறிவு ஜீவித மட்டமே கொஞ்சம் தாழ்ந்துள்ளது என்றுதான் சொல்வேன். உணர்ச்சி அரசியல் எல்லோரது கண்களையும் கட்டிவிட்டது. எந்தவித ஊடக அறமும் அற்ற இந்து ராம் ராஜபக்சே அரசின் அத்துமீறல்களை எல்லாம் நியாயப்படுத்துவது ஒரு பக்கம் என்றால் தமிழ் இதழ்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எந்த அபத்தத்தையும் யாரும் கக்கலாம். சீமான், ஜெகத் காஸ்பர் முதலான புலி முகவர்கள் எழுதும் எத்தகைய அபத்தக் கருத்துகளையும் வெளியிடுவதற்கெனவே ஜூனியர்விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் முதலான இதழ்கள் காத்திருக்கின்றன. புலிகள் தரப்பிலேயே கூச்சப்பட்டு கண்டிக்கும் அளவிற்கு பழைய புகைப்படங்களை ‘உல்டா’ பண்ணி பிரபாகரன் உயிரோடு இருப்பதை “நிரூபித்து” சில ஆயிரம் பிரதிகள் விற்பனையை அதிகமாக்கிக் கொண்டது நக்கீரன். இதனால் அரண்டு போன ஜூனியர் விகடன் மதிவதனி கேரள கடற்கரை வழியாகத் தப்பிப் போனார் என்றொரு கதையை வெளியிட்டு தனது விற்பனையை உயர்த்திக் கொள்ள முயற்சித்தது.
தமிழ்த் தேசியம், புலி ஆதரவு மாவோயிசம் பேசுகிற இளைஞர்கள் தமது அறிவு சேகரத்திற்கு இந்த இதழ்களை மட்டுமே நம்பியுள்ளது தான் கொடுமை. நாளிதழ்களைக் கூடத் தேடிப் படிப்பது இல்லை. எஸ்.எம்.எஸ் மூலம் வரும் செய்திகள்தான் இவர்களின் மற்ற ஆதாரம். எஸ்.எம்.எஸ் மூலம் ஈழப் போராட்டம் தொடர்பாக குறைந்தது 25 குறுஞ் செய்திகரளாவது ஒவ்வொரு நாளும் அனுப்பப்படுகிறது. இவற்றில் பல படு அபத்தமானவை. பல மிகைப்படுத்தப்பட்டவை. பல பொய்யானவை. இவற்றை நம்பிச் செயலில் இறங்கும் பரிதாபங்களும் ஏராளம். வேறு காரணங்களுக்காகச் சென்று கொண்டிருக்கும் இராணுவ லாரி ஒன்றை இலங்கை இராணுவத்திற்கு ஆயுதம் கொண்டு செல்வதாக நம்பி தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்தச் செய்திகள் சில விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ‘‘தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்துவிட்டது’’ எனப் பிறகு நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும்போது இவர்கள் வாக்கு மூலம் அளிப்பது வேதனைக் காட்சி. ஒரு நாள் இரவு 12:30 மணி இருக்கும். படித்துக் கொண்டிருந்தேன். சேலத்தைச் சேர்ந்த எனது பிரியத்திற்குரிய இளம் வழக்கறிஞர் ஒருவர் எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பியிருந்தார். ஈழ ஆதரவு நிலைப்பாட்டிற்காக மக்கள் தொலைக்காட்சி அப்போது தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் குறுஞ்செய்தி. உடனடியாக நண்பர்களிடம் தொடர்பு கொண்டு அங்கே போவதற்காக ஆயத்தம் செய்தேன். செய்தி அறிந்த நண்பர் ஒருவர் தோழர் கஜேந்திரனிடம் தொடர்பு கொண்ட போது அப்படி ஏதும் இல்லையே என்றார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன.
இப்படி எத்தனையோ சொல்லலாம். சுமார் நான்கு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்று. மதுரை மேலவளவு கிராமத்தில் வழக்குரைஞர் இரத்தினம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் நிகழ்வொன்றிற்கு நானும் சுகுமாரனும் சென்றிருந்தோம். மதியம் 2 மணி இருக்கும். ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் செல்போன் திரைகளை அப்பின. வன்னியில் அணைக்கட்டு ஒன்றை புலிகள் உடைத்து 5000 சிங்கள இராணுவ வீரர்கள் பலி என்பதுதான் அச்செய்தி. கோத்தபய ராஜபக்ஷே, ஃபொன்சேகா முதலியோர் சுடப்பட்டு விட்டதாகவும், இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள். எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரே கொண்டாட்டம். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அவ்வாறே நடந்து கொண்டிருப்பதாக அறிந்தோம். கோவையில் ஒரு மரியாதைக்குரிய திராவிட இயக்கத் தலைவர் லட்டுகள் வழங்கிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து ஒரு நண்பர் தொடர்பு கொண்டு தகவல் உண்மைதானா என வினவினார். சென்னையில் உள்ள பத்திரிகையாள நண்பர்கள் சிலரிடம் பேசியபோது அங்கும் இப்படியே செய்திகள் பரப்பப்படுவதாகவும், வேறு ஆதாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.
அந்த நேரத்தில் லண்டனிலிருந்து நண்பர் இராகவன் வேறொரு தகவலுக்காகத் தொடர்பு கொண்டார். இங்கே உலவும் செய்தியை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது சிரித்தார். தாம் அந்த இடத்தில் இருந்து செயல்பட்டிருப்பதாகவும், அது அணைக்கட்டு அல்ல, ஒரு சிறிய ஏரி எனவும், அந்த ஏரி உடைக்கப்பட்டு மரணம் ஏற்படுமானால் 3 வயதுக்கும் மிகாத குழந்தைகள் வேண்டுமானால் செத்துப்போகலாம் எனவும் குறிப்பிட்டார். எனினும் அடுத்த நாள் வரை எஸ்.எம்.எஸ்கள் பறந்து கொண்டுதானிருந்தன.
சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன். கடைசியாக ஒன்று: இரு மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்துவப் பாதிரிமார்கள், போதர்கள், கன்னியர் எல்லோரும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடங்கி வைக்கவும் முடித்து வைக்கவும் என்னையும், புலிகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ள ஒரு மூத்த பேராசிரியையும் அழைத்திருந்தனர். எனக்கு முன் பேசிய அந்த அம்மையார் வழக்கம்போல பல்வேறு கதைகளை எடுத்து விட்டுக் கொண்டே இருந்தார். மன்மோகன்சிங் கொழும்புக்கு ‘சார்க்’ மாநாட்டுக்காகச் சென்றபோது பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் சென்றார்களே, அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்றொரு அதிரடியான கேள்வி ஒன்றை அங்கே அவர் உதிர்த்தார். பல்லாயிரக் கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் தமிழர்களைக் கொன்று கொண்டிருப்பதாகவும், சுமார் 500 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு முன் தினம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறிய அவர், சென்னையில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையைச் சொல்லி அதில் இலங்கையில் படுகாயமுற்ற 122 இந்திய இராணுவ வீரர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். தான் சொல்கிற செய்திகள் ஆதாரபூர்வமானவை எனவும் வலியுறுத்தினார். பல்வேறு வகைப்பட்ட ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தாங்கள் ஏன் அந்த மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றைச் செய்ய முனையவில்லை என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை.
மறைக்கப்பட்ட தகவல்கள், மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மூலமாகவே கடந்த ஆறு மாத காலமாக இங்கே ஈழ ஆதரவு உணர்ச்சி அரசியல் கொடிகட்டிப் பறந்தது. கொளத்தூர் மணி முதல் பழ நெடுமாறன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை. இவர்களின் தவறான அறிவுரைகளை நம்பியது புலிகளின் வீழ்ச்சிக்கான இறுதிக்காரணமாக அமைந்தது என்று இரு மாதங்களுக்கு முன் ஒரு தமிழ் சஞ்சிகையில் எழுதியிருந்தேன். அதற்கு ஏராளமான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளன. புலிகளின் எந்தத் தவறுகளையும் விமர்சிக்காததன் மூலம் புலிகளை மேலும் மேலும் தவறுகளுக்குத் தூண்டியவர்கள் இவர்கள். அப்பாவி மக்களைத்தப்ப விட்டுவிட்டுச் சரணடையுங்கள் என்கிற அறிவுரையை எல்லாம் முடிவதற்கு இரண்டு மாதங்கள் முன்பே இவர்கள் புலிகளுக்குச் சொல்லியிருந்தார்களேயானால் இன்னும் சில ஆயிரம் தமிழ் மக்கள் மரணத்திலிருந்து தடுக்கப்பட்டிருப்பர். புலிகளின் தலைமையும் கூடத் தப்ப வாய்ப்பிருந்திருக்கும்.
எமது புலி முகவர்கள் இப்போதும் திருந்திய பாடில்லை. புலி ஆதரவு இயக்கமொன்றின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குறு நூலொன்றின் தலைப்பு : ‘‘பிரபாகரன் தப்பியது எப்படி?’’