காட்சிகள் தடுமாறும் பசியோடு
கர்ப்பமும் உள்வாங்கியவளின்
தோள்களில் சாய்ந்து கிடப்பவன்
நெடுநேரமாய் வீறிடும் குழந்தைக்கு
உயிர்க்குழல் வெளிறிய
பேனாவைக் கொடுக்கிறான்
குழந்தை
மென்னடுக்கம் பரவிய அவன் கைகளில்
தொடர்ந்தும் இல்லாமலும்
வரைந்த கோடுகளில்
நிகழ்ந்தே விட்டது
வாழ்வின் திறவாத இமைகளைக் கிழிக்கும்
மொழியற்றதொரு பாடல்.


பக்கத்து இருக்கையிலிருந்து நெளியும் கொடி

இருள் கவிந்து நகரும் பேருந்தில்
எல்லோருக்கும்
அவன் உறங்கிக் கொண்டிருப்பவன்
அல்லது
உறங்கிக் கொண்டிருப்பவனைப் போலிருப்பவன்

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி
அருகில் அமர்ந்தவன் விரல்கள்
சபிக்கப்பட்ட கொடியின் நீளங்களாய்
இடுப்போரம் நெளிந்து உறக்கம் கலைத்தது

சன்னமாகத் தொடர்ந்த படரலின்
ஆதி வாசத்தில்
விரைக்கத் துவங்கியிருந்த என் குறியை
சீராக நெருங்குகிறது
அதிகபட்சம் வருடல்களால் முற்றுப் பெறும்
பனிக்காலமொன்று

கூப்பாடு போடுவானோ என்ற அச்சத்திலும்
மனிதர்கள் நிறைந்த செவ்வகத்திலும்
எப்படி சாத்தியம்
தோல் கத்திகளால் ஒரு யுத்தம்

பசி தீர்க்கத் திராணியற்ற உலகங்களில்
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது
விரல்களெல்லாம் குறிகளாகிப் புணரும் நிகழ்வு.


மதுவாசி

மாநகரங்களிலிருந்து விலகிச் செல்லும்
எல்லாக் கடைசிப் பேருந்திலும்
அவனைப் பார்க்க முடியும்

அலுவலக இருக்கையைத் தேய்ப்பதிலும்
பதின் பருவத்துப் பிள்ளைகளுக்கு
காவல் செய்வதிலும்
வாழ்வின் தூரங்களைக் கழிப்பவர்கள்
முகம் சுழித்து மௌனித்திருப்பார்கள்

உடைதலே நிகழாமல்
இறுகிய கணவன்களை பார்த்தபடியேயிருப்பார்கள்
அவர்களின் முன்பொரு காலத்து
புலிக்கதைகளுக்கு
பழகிப்போன நடுவயதுப் பெண்கள்

தீர்ந்தே விடாத வேலைகளின்
கொடுக்குகளிலிருந்து
தற்காலம் தப்பித்தவர்கள்
எரிச்சலோடு நடத்துனரிடம் முறையிடுவார்கள்

அவனுக்கு எதுவும் தெரியாது

கைவிடப்பட்டவன் அவன்

உழைப்பை உறிஞ்சியப் பிள்ளைகளையோ
கொஞ்சநாட்களாய் தங்கிவிட்ட பசியையோ
நிகழாதே போய்விட்ட பேரன்பையோ
கண்டு கொள்ளப்படாத வீரதீரத்தையோ
மதுவாசத்தோடு நிகழ்த்திக் கொண்டிருப்பான்

சகித்தலின் தொடக்கத்திலிருந்து
என்ஜினின் கர்ஜனையோடு
தொடர்ந்தபடியே இருக்கிறது
பிரயாணத்தின்
கால்களை நிரப்பும் ஆணிகள்.

- ஸ்நேகிதன்

Pin It