நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி த.தே.பொ.க. நிலைபாடு என்ன?

 நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைபாடு எதையும் த.தே.பொ.க எடுத்துக் கொள்ளவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்று கருதுகிறது. தமிழீழ விடுதலை ஆதரவு, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு, ஈழத்தமிழர்கள் இப்பொழுது அனுபவிக்கும் துயரங்களிலிருந்து விடுபடுதல், இனக்கொலை வெறியன் இராசபட்சே உள்ளிட்ட இனப் போர்க்குற்றவாளிகளைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துதல் என்ற நான்கு நிலைபாடுகளில் த.தே.பொ.க. தொடர்ந்து இயங்கி வருகிறது.

கட்சித் தாவல் தடைச் சட்டம் கர்நாடகத்தில் படாத பாடு படுகிறது போலிருக்கிறதே?

 கட்சித் தாவல் தடைச் சட்டம்தான் சட்டப் பேரவையைப் படாத பாடு படுத்துகிறது. அச்சட்டம் சட்டமன்ற உறுப்பினர்களின் விலையைக் கற்பனைக் கெட்டாத உயரத்திற்கு உயர்த்தி விட்டது. கட்சி மாறுவதற்கு ஒருவருக்கு விலை ரூ50 கோடி என்கிறார்கள்.

 கட்சித்தாவல் தடைச் சட்டம் இல்லையென்றால் சாதாரண விலைக்கு அவர்களை வாங்கியிருக்க முடியும். கட்சித் தாவல் தடைச் சட்டம் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை மேய்ப்பனுக்குக் கட்டுப்பட்ட மந்தைகளாக மாற்றுவதால் இச்சட்டம் வந்த காலத்திலேயே அதை நாம் எதிர்த்தோம். இப்பொழுது இந்தச் சட்டத்தாலும் மந்தைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

கருத்துரிமை என்ற நேர்மையான வழியில் ஆய்வு செய்தால், கட்சித் தலைவரின் அத்தனை தில்லு முல்லுகளுக்கும் திருகு தாளங் களுக்கும் ஓர் உறுப்பினர் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டுமா என்ற வினா எழுகிறது. அப்படிக் கட்டுப்படக் கட்டாயமில்லாத உரிமை வேண்டும் என்பதே விடையாகிறது.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கிவிடுவதே சரி.

வேதம், மந்திரம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு என்று பிறர் காது கிழியக் கத்துகின்ற பா.ஜ.க. எவ்வளவு கீழ்த்தரமான ஒழுக்கக் கேடர்களை, பண்பாட்டுக் கேடர்களை வளர்த்துத் தன் கட்சியில் வைத்திருக்கிறது என்பதற்கு கர்நாடக நிகழ்வுகள் மேலும் ஒரு சான்று. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் வாங்கியது நாடு அறியும். விலை மகளிரை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து மாட்டிக் கொண்டார் மாதவ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். கட்சித் தாவலிலும் தனிச்சாதனை புரிந்து அவர்கள் விலையை உயர்த்தி விட்டார்கள். முதல்வர் எடியூரப்பா கர்நாடகக் கேடுகள் அனை த்துக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார். மானம், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் பற்று இருந்தால் எடியூரப்பா பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது பா.ஜ.க. தலைமை அவரை விலக் கியிருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தது எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை அ.இ.அ.தி.மு.க.வின் போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கம் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியா?

 இந்திய அரசு ஓட்டுநர் பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற விதியை வகுத்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி அதை ஏற்று செயல்படுத்துவதாகக் கூறியுள்ளார். கருணாநிதியை எதிர்க்கக் கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றாக இதையும் பயன்படுத்த செயலலிதா விரும்புகிறார்.

 எட்டாம் வகுப்பு வரை படிப்பதை இந்த வகையில் கட்டாயப்படுத்துகிறார்களே என்ற அடிப்படையில் நாம் அந்த விதியை வரவேற்கிறோம். துக்ளக் ஏடு இந்த விதியை எதிர்க்கிறது. அவ்வேடு ஆதரிக்கும் வகுப்பினர் கட்டாயம் எட்டாம் வகுப்பிற்கு மேலும் அதற்கு மேலும் படித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை அதற்கு உள்ளது. மற்றவர்கள் எட்டாம் வகுப்பு கூட படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு நல்லதுதானே.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நடக்கும் மோதல் உறவு முறிவில் முடியுமோ?

 இதற்குப் போய் அலட்டிக் கொள்ளக் கூடாது. அதெல்லாம் கூட்டணிக்குள் நடக்கும் குடும்பச் சண்டை. கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காங்கிரசுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான கூட்டணி இயற்கையான கூட்டணி. இயற்கை என்பதிலேயே “கை“ இருப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று பேசினார் திருமா.

 இப்பொழுது எழுந்துள்ள சில்லரைச் சிக்கல் குறித்து “தன்னிலை விளக்கக் கடிதம் “அன்னை“ சோனியாவிற்கு எழுதியுள்ளார் திருமாளவளவன். ஒருவேளை காங்கிரசுக்கும் தி.மு.கவிற்கும் கூட்டணி முறிந்தால் சிறுத்தைகளுக்கும் காங்கிரசுக்குமான இயற்“கை“யான உறவில் நெருக்கடி வரலாம். இப்பொழுது ஒன்றுமில்லை.

தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் தாக்குவதும் சுடுவதும் தொடர்கிறது. அங்கு சுற்றித்திரியும் கடலோரக் காவல்படை என்ன செய்கிறது?

 கடலோரக் காவல் படைக்கு அங்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழக்க் கரை களிலிருந்து தமிழகக் மீனவர்கள் மீன் பிடிக்கப் புறப்பட்டால் எத்தனை படகுகளில் எந்தெந்தத் திசையில் மீன் பிடிக்க வருகிறார்கள் என்று சிங்களக் கடற்படைக்குத் துப்புச் சொல்வது, தமிழக மீனவர்களைத் தேடி வந்து சிங்களக் கப்பற்படையினர் சுற்றி வளைத்தால் அந்நேரம் பார்த்து கண்ணுக் கெட்டாத தொலைவுகளில் ஓடி ஒளிந்து கொள்வது போன்ற ஏராளமான வேலைகள் இருக்கின்றன.

 தென்னிந்திய கடற்படைத் தளபதி கே.என். சுசில் கூறுகிறார்.

 “... கடற்பகுதியில் இருநாட்டு எல்லைகள் தெரியாததால், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்கிறார்கள். அப்போது கண்காணிப்பில் உள்ள இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகுகளை நிறுத்தச் சொன்னால், இலங்கைக் கப்பற் படையினர் தங்களைப் பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வேகமாக வெளி யேறுகிறார்கள். இதன் காரணமாக இலங்கைக் கடற்படையி னருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.

 விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருக் கலாம் என்ற தகவல் அடிப்படையில் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை நிறைவேற்ற வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எந்தப் படையாக இருந்தாலும் அதைத்தான் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.” (தினத்தந்தி 22.10.2010)

 சிங்கள அரசைப் போலவே இந்திய அரசும் தமிழினத்தைப் பகையினமாகக் கருதுகிறது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

 பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் படகில் வந்து மும்பை நகரை 2009 செப்டம்பர் 26இல் தாக்கினார்கள். 176 பேர் கொல்லப்பட்டார்கள். இவ்வளவுக்குப் பின்னும் அரபிக் கடலில் இந்தியக் கடலோரக் காவல்படை பாகிஸ்தான் மீன வர்களைச் சுடுவதில்லை. எல்லை தாண்டி வரும் மீனவரைக் கைது செய்கிறார்கள். அவ்வளவே. பாகிஸ்தானியரோடு இந்தியா வுக்குள்ள சண்டை சகோதரச் சண்டை. தமிழர்களோடு இந்தியாவுக்குள்ள சண்டை பகைவர்களுக்கிடையிலான சண்டை என்று புரிந்து கொள்ள வைக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

அயோத்தித் தீர்ப்பு நல்ல தீர்ப்புதானே?

இல்லை. அறிவியல் வழிப்பட்ட ஆதாரங்கள் மீதும் தர்க்க வழிப்பட்ட விவாதங்களின் அடிப்படையிலும் இத்தீர்ப்பு வழங்கப்படவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இலக்னோ பிரிவு நீதிபதிகள் தரம் வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான், ஆகியோர் 30.09.2010 அன்று தனித்தனி தீர்ப்புரைகள் வழங்கினர். இதில் அகர்வால், கான் ஆகியோர் வழங்கிய பெரும்பான்மைத் தீர்ப்பு விவாத்தத்திற்குரிய 2.77 ஏக்கர் பரப்புள்ள அப்பகுதியை மூன்றாகப் பிரித்து இந்து மகா சபை, சன்னிமுசுலீம் வஃக்பு வாரியம், நிர்மோகி அகாடா ஆகியவற்றுக்கு இடையே பிரித்து அளிக்குமாறு ஆணையிட்டது. 1992 டிசம்பர் 6ல் பாபர் மசூதியை இடித்து அதன் நடுப்பகுதியில் ‘குழந்தை இராமர்’ சிலையை இந்துத்துவ அமைப்புகள் வைத்தன. அச் சிலை அதே இடத்தில் நீடிக்கும் என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. இத்தீர்ப்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு செயலுக்கு வரும்.

 அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுக்காமல் நீண்ட காலமாக இந்துக்களிடையே நிலவும் நம்பிக்கை என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது குடிமையியல் நீதி முறைக்கோ, இயற்கை நீதிக்கோ இசைந்து வராத, மனம் போன போக்கில் செய்யப்பட்டிருக்கிற கட்டைப் பஞ்சாயத்து. இதே வகையில் தீர்ப்புகள் அமையுமானால் நாளைக்கு இராமர் பாலம் என்ற நம்பிக்கையில் சேதுக் கால்வாய்த் திட்டம் நிரந்தரமாகத் தடுக்கப்படும். மேலும் ஆதாரங்களையும் இயற்கை நீதியையும் சாராமல் நீதிபதிகளின் நம்பிக்கை சார்ந்த தீர்ப்புகளுக்கு வழி திறக்கப்படும். இத்தீர்ப்பு பாபர் மசூதி சிக்கல் சார்ந்த நீடித்த அமைதியையும் நிலைநாட்டாது

Pin It