செயல்படுத்தப்படாத ஞாயங்கள் செத்துக்கிடக்கும் பிணங்களுக்குச் சமம்! போராடிப் பெறாத உரிமைகள் வெறும் புள்ளிவிவரங்கள்! கால ஊழிகள் பல கடந்து தமிழகத்திற்கு ஓடிவந்த காவிரிக்குக் கன்னடர்கள் போட்ட கால்தளையை அறுக்க முடியவில்லை. தமிழர்கள் சட்ட ஞாயம் பேசி என்ன பயன்? வரலாற்றுச் சான்றுகள் கூறி என்ன பயன்?

ஒப்பாரி ஓசை கூடத் தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது. தமிழர்கள் போராடி சோர்வடைந்து ஓயட்டும் என்ற உத்தியை இந்திய அரசு கடைபிடிக்கிறது. கன்னட வெறியர்கள் உற்சாகமடைகிறார்கள். ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தர மாட்டோம் என்று உரத்துப் பேசுகிறார்கள்.

தமிழர்களுக்கு வாய்த்த அரசியல் தலைவர்கள் - வரலாறு தமிழர்களுக்கு வழங்கிய சாபத்தின் சின்னங்கள். மக்களை மந்தையாக்கிடத் திட்டமிட்டார்கள். மந்தையாக்கினார்கள். மந்தையாக இருப்பதில் மக்களுக்கும் மகிழ்ச்சி. ஏனெனில் சொந்தமாக சிந்திக்க வேண்டிய தொந்தரவில்லை. சொந்தமாகப் போராட வேண்டிய சுமையில்லை. எல்லாவற்றையும் மேய்ப்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சும்மா இருக்கலாம்.

“கோன் எவ்வழி குடிகள்” அவ்வழி என்றனர் நம் முன்னோர்கள். இதன் பொருள் அரசு எந்த அளவு ஆற்றலுடனும் சிறந்த பண்புகளுடனும் இயங்குகிறதோ அந்த அளவு மக்களும் சிறந்த பண்புகளைப் பெற்றிருப்பர் என்பதாகும்.

ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்தும் விதிப்படி அரசியல் தலைவர்கள் மக்களைக் கெடுத்தார்கள். மக்கள் சீரழிந்த அரசியல் தலைவர்களே சிறப்பானவர்கள் என்று கொண்டாடுகிறார்கள்.

ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாழாகிவிட்டது. குறுவை சாகுபடி செய்வதைக் கைவிடுங்கள் என்று கன்னடர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டை வலியுறுத்தி வந்தார்கள். நாம் மறுத்து வந்தோம். ஆனால் கர்நாடகம் அதை செயல்படுத்திக் காட்டி விட்டது.

வெள்ளம் வந்தால் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கர்நாடகம் தொடர்ந்து கூறிவந்தது. காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி, குறுவைக்குத் தண்ணீர் திறந்துவிடு என்று நாம் வலியுறுத்தினோம். கர்நாடகம் தனது முடிவை பல ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வருகிறது.

மிகை வெள்ளம் வந்து, கர்நாடக அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டால், அவர்கள் தங்களின் தற்காப்புக்காக, வெள்ள நீரைத் திறந்துவிடுவார்கள். கர்நாடகம் வெள்ள நீரால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வடிகால்தான் தமிழகக் காவிரி ஆறு என்பதைக் கர்நாடகம் நிலை நாட்டி விட்டது.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி கிடையாதா? நீதித்துறையின் செயல்பாடுகள் கிடையாதா? எல்லாம் உண்டு; ஆனால் அவை தமிழர்களுக்கு இல்லை என்பதே இந்திய அரசின் நிலைபாடு.

காவிரி ஆறு தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்குரியது. காவிரிக்கு நீர் வழங்கும் மாநிலங்கள் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகியவை. வரலாற்றுக்காலம் தொட்டு ஓர் ஆறு எந்தெந்த நாடுகள் வழியாக ஓடி, பாசனம் கொடுத்ததோ, அந்தந்த நாடுகள், அந்த ஆற்றிலிருந்து தங்களுக்குரிய பரம்பரைப் பங்கு நீரைப் பெற்றுக் கொள்ள உரிமையுண்டு என்பது பன்னாட்டுச் சட்டம். ஹெல்சிங்கி பன்னாட்டு உடன்பாடும் அதுவே!

சூடானில் உற்பத்தி ஆகி ஓடிவரும் நைல் ஆறு எகிப்துக்கும் சொந்தம். இமயமலையின் இந்தியப் பகுதியில் உற்பத்தியாகி ஓடும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். இந்தியாவின் இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகி ஓடும் கங்கையாறு இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்கும் சொந்தம். இங்கே சுட்டிக் காட்டியுள்ள இவ்வாறுகளின் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள அந்நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருக்கிறது. அவ்வொப்பந்தம் செயல்படுகிறது.

ஆனால், ஒரே நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவுக்குள் கர்நாடகத்திலிருந்து தமிழகம் ஓடிவரும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிமையில்லை என்கிறது கர்நாடகம்.

இந்தியாவிலும் மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறுகளில் தண்ணீர்த் தகராறு ஏற்பட்டுத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு தகராறுகள் தீர்க்கப்பட்டுள்ளன. நர்மதா தீர்ப்பாயம், கிருஷ்ணா தீர்ப்பாயம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகள் செயலில் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டுக்குரிய காவிரித் தகராறுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கினால் அது செயல்படாது.

வஞ்சிக்கப்பட்ட தமிழர்களே, உங்கள் நெஞ்சம் பதறவில்லையா? இன்னுமா இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை?

1956ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் இயற்றியது. ஓர் ஆற்று நீர் தொடர்பாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்ற நீதிபதி தகுதியில் பணியில் உள்ள நீதிபதிகளைக் கொண்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அத்தீர்ப்பாயம் விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கும். தொடர்புடைய மாநிலங்கள் அத்தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் பிரிவு 6(2)-இன்படி, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குச் சமமானதாகும். அத்தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசைச் சேர்ந்தது என்கிறது அவ்விதி.

காவிரித் தீர்ப்பாயம் 1991 சூன் 25 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் 205 ஆ.மி.க.(டி.எம்.சி.) தண்ணீர் வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்பு கூறியது. சூன் தொடங்கி மேயில் முடியும் தண்ணீர் ஆண்டின் 12 மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்றும் அத்தீர்ப்பு கூறியுள்ளது.

இந்திய அரசு 1991 நவம்பரில் அதனைத் தனது அரசிதழிலும் வெளியிட்டது. ஆனால் அதைச் செயல்படுத்தக் கர்நாடகம் மறுத்தது. இந்திய அரசு தலையிட்டு அத்தீர்ப்பை செயல்படுத்தி வைக்கவில்லை.

2007 பிப்ரவரி 5ஆம் நாள் காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் 192 ஆ.மி.க. தண்ணீர் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது.

இறுதித் தீர்ப்பு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இடைக்காலத் தீர்ப்புதான் செயலில் உள்ளது. இடைக்காலத் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, இடைக்காலத் தீர்ப்பு செல்லும் என்று 1991இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“இடைக்காலத் தீர்ப்புதான் இப்பொழுது செயலில் உள்ளது. அதைச் செயல்படுத்து” என்று கர்நாடக அரசிடம் முந்தையத் தி.மு.க. அரசும், கோரவில்லை. இன்றைய அ.தி.மு.க. அரசும் கோரவில்லை. இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்து என்றே கர்நாடகாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

சட்டப்படி எதைக் கோர வேண்டும் என்ற அக்கறை கூடக் கருணாநிதியிடமும் இல்லை; செயலலிதாவிடமும் இல்லை. காவிரி வல்லுநர் குழுவுக்குத் தலைமை தாங்கும் மூத்த பாசனப் பொறியாளர்களுக்கும் இந்த விவரம் தெரியவில்லையா?

இந்திய அரசின் வஞ்சகம், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் இரண்டும் சேர்ந்து தமிழக உழவர்களைப் பழிவாங்கிவிட்டன. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியின் தமிழகப் பாசனப் பரப்பு 24 இலட்சத்து எழுபத்தொரு ஆயிரம் ஏக்கர்!

இவ்வாண்டு குறுவை போய்விட்டது. சம்பாவுக்குத் தண்ணீர் வருமா என்பது வினாக் குறியாக உள்ளது. காவிரி என்பது 24.71 இலட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கு மட்டுமின்றி, இராமநாதபுரம் வரை தமிழகத்தின் முக்கால் பகுதி மாவட்டங்களுக்குத் தாகம் தணிக்கவும் தண்ணீர் தருகிறது.

எனவே, காவிரி தமிழகத்தின் உயிர்நாடி! கர்நாடகத்திடம் நாம் பிச்சை கேட்கவில்லை. நமது உரிமையைக கேட்கிறோம். நமது பங்குத் தண்ணீரைக் கேட்கிறோம்.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பது பொய்! கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி அணைகளில் 65 ஆ.மி.க. தண்ணீர் இருப்பு உள்ளது. அதில் தமிழகத்தின் பங்கைத் தர வேண்டும்.

பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் செயலலிதா கோரிக்கை வைத்தார். கண்துடைப்பாகக் கண்காணிப்புக் குழுவைக் கூட்டினார்கள். ஆணையத்தைக் கூட்டவில்லை. ஆணையத்தை ஏன் கூட்டவில்லை என்று செயலலிதா மீண்டும் கேட்கவில்லை.

தமிழக உழவர்களும் தமிழின உணர்வாளர்களும் ஒன்று சேர்ந்து கர்நாடகத்திற்கும், இந்திய அரசுக்கும் பாடம் புகட்டும் போராட்டங்களை நடத்த வேண்டும். நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். கர்நாடகத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்கில்லை என்று உறுமும் கர்நாடகத் தலைவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் இருந்தால் அதில் அரை சொட்டுத் தண்ணீர் தமிழகத்தின் பங்கு என்று முழங்க வேண்டும்.

Pin It