மன்னர் மடுங்கத் தோன்றி பல்மாண் எல்லைதருநன்
பல்கதிர் பரப்பி....பெருவறன் ஆகிய
பண்பில் காலையும் –(பட்டினப் பாலை-232-37)

இரு தலைவந்த பகை முனைகடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துஉயிர்த்து
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை
பல்வேறு பண்ணியம் தமீஇத்திரி விலைஞர்
(மதுரைக் காஞ்சி- 402- 405)

ஆடுதுவன்று விழவு – போர் விழாவாயின் உயிருக்கு அஞ்சிக் காத்திருந்த நகர மக்கள் பற்றிய செய்தி தமிழ் மரபுக்கு ஒவ்வாதது. பேரிடரை அஞ்சிய எதிர்பார்ப்பே இது ஆகும். கதிரவன் திரும்பியபிறகு பகற் பிறைகண்டு மகிழ்ந்தனர் என்றே கொள்ளலாம்.

வீட்டுக்கு வெள்ளையடித்தலும், தென்னை ஓலைத் தோரணம் கட்டுதலும் காப்பரிசி படைத்தலும் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றனவே.

பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்
.... இன் நீர்ப்பசுங்காய் நீடுகொடி இலையினர்
கோடு சுடு நூற்றினர்

யானைத் தந்தத்தைச் சுட்டு உயர்தரச் சுண்ணாம்பினை
நூற்று நீறு எடுத்து வெள்ளையடித்தனர் எனின் அது
அரச விழாவாக இருக்கலாம்.
ம.கா- 399-400-401

ஆடு கோட்பாடு

கூடி வரு வழக்கின் ஆடு இயல் பெயரே
(தொல்:650-6)

இந்த நூற்பாவிற்கு ஏற்ற பெயராக ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை ஐயப்பட வேண்டி யிருக்கிறது. கடலோடியாக இரவு வானத்தை நன்கு அறிந்தவனாகவும் வானவியல் அறிந்தவனாகவும் இருக்கலாம். பதிற்றுப் பத்துப்பதிகம் தரும் செய்தியில்

தண்டார் அணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓரூர் ஈந்து
பதிற்றுப்பத்து-60- பதிகம்

ஆரிய வைதிகரைத் தைத் திங்களில் இருந்து அப்புறப்படுத்தி வருடைக் குறியீடு கொண்ட சித்திரைத் திங்களைத் தத்து கொடுத்து ஓர் அரச வழக்கத்தினை ஏற்படுத்தி இருப்பானோ என்று ஐயப்படத் தோன்றுகிறது.

தண்டார் அகலம் என்ற சொற்பயன்பாடு தமிழில் இருக்கும் போது தண்டு+ ஆர்+ அணியம் என்பது தண்டு போன்ற நேர்வரிசையில் அமையும் விண்மீன்களைக் குறிப்பிடுவதாகவும், அவற்றுக்கு இடைப்பட்ட வருடையாட்டுக் குறியீடு கொண்ட திங்களைக் குறிப்பதாகவும் கருதலாமே!

தமிழர் மரபில் கொடுப்போரின் புரவுக் கடமையுணர்வும் பெறுவோரின் நன்றியு ணர்வும் பெரிதும் போற்றி பேசப்படுகின்றன. இந்த இரண்டுமே இல்லாமல் ’அதை நீ எனக்குத் தந்து விடு! திருப்பிக் கேட்காதே! அதன் பிறகு என் கையில் நீர் ஊற்றி விட்டு உன் கையை கழுவி விடு! மறந்து விடு! திரும்பிப் பார்க்காமல் செல்!, எனும் ஆரியப் பார்ப்பனக் கருமாதி ஈமச் சடங்கு வழக்கம் இங்கு கருதத் தக்கது.

ஐயப்படும் உரிமை:

கடம்பனூர் சாண்டிலியன் என்ற பார்ப்பனப்புலவரால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் குறுந்தொகையில் ஐயப்பாட்டுக்கு இடமான செய்தி ஒன்றைத் தருகிறது.

வளையிடைத் தனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்யோ தாமே களிறு தன்
உயங்கு நடை மடப்பிடி வருந்த நோணாது
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை ஆப் பிரிந்தோரே
 (குறுந்தொகை)

இந்தப் பாடலின் உரைவிளக்கம் இதுவரை பகலில் தோன்றும் கதிர்ப்பிறையாகிய தைப்பிறையைக் குறிப்பிட வில்லை. மறுநாள் காலை கதிரவன் தோன்றி விடுவான் என்பதை முதல்நாள் மாலையில் நிலவுப் பிறைகொண்ட தமிழர் அறிந்திருந்தனரா என்பதும் தெரியவில்லை.

பலர்தொழ விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்
அவ்வாய் வளர்பிரை சூடிச் செவ்வாய் அந்தி வானத்து..
(பெரும்பாணற்றுப்படை- 4 11-12)

மூலங்களை ஒவ்விப்பார்த்தும், பதிப்பு நேர்மையை சரிபார்த்தும், உரையாசிரி யர்களின் மரபுப் பிறழ்வுகளை மீளாய்வு செய்வதும் மொழியிலாளர்களின் கருதுகோளின் படியும் இதற்குள்ளிலிருந்து “தை மீட்கப் படலாம். தமிழ் மரபுக்கு ஒவ்வாத உறை விளக்கங்களை மறுதலிப்பதை கடுமையாக்க வேண்டும்.

யாண்டு ஓர் அனையவாக:

யாண்டு ஓர் அனையவாக யாண்டே
(பதிற்றுப்பத்து- 90-55)

வளைவு, திருப்பம், அங்கு, ஆங்கு, ஆண்டு, யாண்டு என்றே விளங்கிக் கொள்ளப்படும் கால அளவையானது வானியல் நிகழ்வில் கதிரவனின் தென் செலவுத் திருப்பதையே குறிக்கிறது. அது ஒத்த அளவினதாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு.

உலகம் உவப்ப வலனேட்பு திரிதரு பலர்புகழ்
ஞாயிறு (திருமுருகு- 1-2)

வலனேர்பு திருதருதல் என்ற நிகழ்வே வடசெலவின் மீட்சியைக் குறிக்குமாயின், தமிழின் தலை வாசலிலேயே புத்தாண்டு தட்டுப்படுவதை விளங்கிக் கொள்ள முடியும். மற்றபடி கதிரவனின் பண்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் வியந்து பேசுவதும், இரவு வானத்து விண்மீன்களோடு கதிரவன் சேர்த்துப் பேசப் படாமையும், பகலிலும் விண்மீன்கள் ஆங்காங்கே துளங்காது இருக்கும் என்ற அறிவும், வட தென் செலவின் திரிபிற்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஒரு மீனின் நெறியில் ஞாயிறு ஒழுகும் என்ற புரிதலும், ஆடியல் கோட்பாட்டு நெறியினை விளங்கிக் கொண்டு விழா எடுத்த பெருமையும், சொல்லுக்கும் ஆடியல் பண்பு ஏற்றிக் காணப்பட்டமையும், கருக் கொண்ட சொல் பிண்டமாகக் குறிப்பிடப் பட்டமையும் அதனை அறிந்தோரை தோன்று மொழிப்புலவர் எனப் பதிவு செய்துள்ள தொல்காப்பிய நேர்மையும் நம்பிக்கை ஊடுவனவாக உள்ளன.

நுண்ணிதிற் கயிறிட்ட நூலறி புலவரும், நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட நீகாமனும், பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்களும் இன்று இல்லாத நிலையில், பஞ்சாங்கப் பார்ப்பனரோடு போராட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு வலிமை சேர்க்க அறிஞர்கள் புரவுக்கடன் பூண வேண்டும்.

நிலவு, இரவு வானம், கதிரவன்

தமிழர் மரபில் முழு நிலவு நாள்கள் அனைத்துமே கொண்டாடப்பட்ட நாள்களாகத் தெரிகின்றன. முழு நிலவுகள் பெரும் அரச விழாக்களோடு சேர்த்துப் பேசப்படுக் கின்றன. குறிப்பிட்ட முழுநிலவுநாள்களில் குறிப்பிட்ட விண்மீனின் அருகாமை பேசப் படுகிறது. ஆனால் அங்குமே நிலவு தனக்கென ஒரு நாள் மீனின் நெறியில் இயங்கு வதாகக் குறிப்பிடவில்லை. எந்த முழு நிலவுக்குரிய திங்களின் முதல் நாளும் கொண்டாடப்பட்டதில்லை.

மழை நீங்கிய மாவிசும்பில் மதிசேர்ந்த மகவெண்மீன்
(பட்டினப்பாலை 34-35)

சித்திரை சித்திரத் திங்கள் சேர்ந்தென
(சிலம்பு- இந்திரவிழா-64)

முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலை இய உரோகினி
(நெடுநெல்வாடை- 162)

நிலவு இல்லாத இரவு வானத்தில் உடுக்கணங்கள் இரவு முழுவதும் நிலை மாறுவது கணக்கிடப்பட்டிருக்கிறது. புள்ளிகளை இணைத்துக் கோலம் போடுவது போல சில குறியீடுகள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன.

பரிபாடலின் படி மூன்று தெரு ஒன்பது இருக்கை, இருபத்து ஏழு விண்மீன்கள் முறையே கணக்கிடப்பட்டமை எல்லாம், ஒரு நாளைக்கு ஒரு விண்மீனின் நேர் ஒழுங்கில் (Direct acculation) ஞாயிறு இயங்குவதை உறுதி செய்யவே என்று விளங்குகிறது

வியல் நாள் மீன் நெறி ஒழுக
பகல் செய்யும் செஞ்ஞாயிறு
(மதுரைக் காஞ்சி- 6-7)

தேயம் என்ற சொல் கட்டுப்பாட்டுப் பகுதி என்று பொருள்படுகிறது. ஓர் அறிவனை முன்னிலைப்படுத்தியதே தேயம் என்றும் மதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவனும் ஞாயிறும் அம் மீனோடு நேர்ஒழுங்கில் கோள் அமைவு பெறும் ஓர்மை தமிழினத்தின் பெரும்பான்மையினரால் விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் கதிரவனின் தொடர்புடைய மீன்கள் கணிக்கப்பட்டமை, கூர்த்த மதி படைத் தோரின் செயல் என்பதில் வியப்பு இல்லை. இன்று அந்த நுட்பத்தின் தூய்மை யினை இழந்து நிற்கிறோம்.

அற நேர்மையும், இன அறிவும், தவ ஓர்மையும், தன்னலமற்ற அறிவு நேர்மையும் உடைய தமிழரே கலங்கி நிற்கும் போது, வயிற்றுப் பிழைப்புக்கு இமச் சடங்குத் தொழிலை முன்னெடுத்த பார்ப்பு இனங்களின் முதுக் குறைந்த அறிவு தமிழர்களுக்கு எப்படி பயன்படும்?

ஆடியல் கோட்பாட்டின் நீட்சி

ஒரு குவளை நீரை சிறு துரும்பாலும் கலக்கி விட இயலும். அது ஆடு தொழில். அதனை மிண்டும் தெளிய வைக்க அந்தத் துரும்பினால் இயலாது. அது நீரின் இயல்புக்கும், ஆடு இயல் பண்புக்கும் ஏற்ப சீராக ஒடுங்கி அமைதி பெறும். அது போக்கிலேயே அமையும். ஆடியல் கோட்பாட்டின் நீட்சியானது தமிழரின் அனைத்து செவ்வியல் கலைகளிலும் ஊடாடி எல்லை கண்டுள்ளது. தனி இனமாக வாழ்ந்து முதிர்ச்சி பெறாத யாரும் வேறோர் இனத்தின் செவ்வியல் விழுமியங்களைக் கள வாடியே வாழ முடியாது.

தமிழர் செவ்வியல் கலைகளின் ஒருங்கிணைந்த ஒடுங்கு புள்ளியே ஆடியல் கோட் பாட்டின் எல்லையும் நிறைவும் ஆகும். அது ஆள்வினைக் கொடியின் அசைவும் ஆகும் மெய்யியல் முதிர்ச்சி பெற்றோரின் இன ஓர்மைக் கூடு புள்ளியும் அதுவே (point of culmination) அங்கிருந்து கால்காலாக ஒழுகும் வகைப்படுத்திக் கொண்ட அறிவுத் துறைகள் இடையில் ஒன்றையொன்று தொட்டுப் பேசுவது இல்லை. குறிப்பாக வகை மாறாட்டம் செய்வது இல்லை. தமிழினத்தின் தகைமிகு அரச மரபு மாறாட்டுவதைத் தடுக்கும். உரிய முறையில் தண்டிக்கும்.

தென்புலத்தார் வணக்கம்:

வடிவம் மழுங்கிய மூதாய், அளவுக் கச்சிதமான பாவையினை ஈன்று தருவதும், அஃது அணங்குற்றுப் புத்துயிர்த்தலும், மூச்சடக்கிக் கூடி நின்ற அவுணர் நல்வலம் திருந்துதலும், நெறியின் நின்ற அறிவன் நினைக்கப்படுவதலும், தகைமிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் தனது ஓர்மையைப் புத்தாண்டு நாளில் வெங்கதிர்ச் செல்வனின் மீது பதிப்பதும் தென்புலத்தார்க்குச் செலுத்தும் அரசு முறை வணக்கம் ஆகும்.

Pin It