இந்துக்கள் உரிமைக்கு குரல் கொடுத்து வருவதாகக் கூறிக் கொள்ளும் இராம.கோபாலன் போன்றவர்களுக்கு இப்போது கடும் நெருக்கடி. நித்தியானந்தா போன்ற “ஆன்மிக”ங்களின் முகத்திரை கிழியத் தொடங்கியப் பிறகு உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனர்கள்போல், விழி பிதுங்கி நிற்கிறார்கள். நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வரை அவர் நிரபராதிதான் என்று சட்டத்தின் பொந்துக்குள் போய் நுழைகிறார் இராம. கோபாலன். நித்தியானந்தாவும், ‘சட்டப்படி நான் குற்றவாளியல்ல’ என்கிறார். தங்களிடம், உயரிய சக்தி இருக்கிறது என்று கூறி, மக்களை ஏமாற்றியவர்கள் அரசுகளின் சட்டத்துக்குள் அடைக்கலம் தேடுகிறார்கள்.

கோயில், பக்தி போன்ற பிரச்னைகளில் அரசு தலையிடக் கூடாது என்று அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வரும் இராம.கோபாலன், நித்யானந்தா பிரச்சினையிலும் காஞ்சி சங்கராச்சாரி கொலை வழக்கிலும் அரசு தலையிடக் கூடாது என்று கூற முன் வருவாரா? அரசு சட்டங்களோடு மதம் முரண்பட்டு நின்றால், மண்டியிட வேண்டியது மதம்தான். அரசு சட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான், மதங்களும், மதத் தலைவர்களும் “ஜீவனத்தை” நடத்தியாக வேண்டும். மதப் பிரச்சினையில் அரசு தலையிடக் கூடாது என்று கூறும் இராமகோபாலன்தான், நித்யானந்தா மீதான குற்றம், இன்னும் சட்டத்தால் நிரூபிக்கப்படவில்லையே என்று சமாதானம் கூறக் கிளம்பியிருக்கிறார். பார்ப்பனர்களின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.

இராமகோபாலன் இரட்டை வேடம்

இதுவும் இராம.கோபாலன் கதை தான். இந்து சமுதாய ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்று கூறி வந்த இராம.கோபாலன், அந்த உபதேசத்தை இப்போது, சங்கராச்சாரிகளைப் பார்த்துக் கூறியிருக்கிறார். பிரச்சினை இதுதான் - காஞ்சிமடம், ஆதி சங்கரர் நிறுவிய மடம் அல்ல. ஆதி சங்கரர் நிறுவியதாக மோசடியாக சங்கராச்சாரி பார்ப்பனர்கள் கூறிக் கொண்டு, அதற்காக போலி வரலாறுகளை உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி மடங்கள் மட்டுமே ஆதி சங்கரரால் நிறுவப்பட்டவையாகும். இந்த மடத்தின் சங்கராச்சாரிகள், காஞ்சி மடத்தை அங்கீகரிப்பது இல்லை. இந்தப் பிரச்சினை இப்போது அரித்துவாராவில் நடைபெறும் கும்பமேளாவிலும் எதிரொலித்திருக்கிறது.

கும்பமேளாவில் தங்களின் “பாவங்களைத்” தொலைக்க முழுக்குப் போட வரும் சங்கராச்சாரிகளுக்கு உத்தர்காண்ட் மாநில அரசு, அவர்கள் முகாம்களை அமைத்துக் கொள்ள நிலங்களை ஒதுக்கி வருகிறது. இதில், காஞ்சி மடம் உள்ளிட்ட போலி சங்கராச்சாரி மடங்களுக்கு, அரசு நிலம் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று துவாரகா பீட சங்கராச்சாரியும், அவருடன் வந்துள்ள “சாதுக்களும்” எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி போன்ற போலிகளுக்கு, நிலம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து, தீக்குளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதற்கு கும்பமேளா நிர்வாகத்தின் கூடுதல் அதிகாரி, வி.எஸ். தனிக் என்பவர் உத்ரகாண்ட் அரசு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், ஆதி சங்கரர் நிறுவிய மடமாக காஞ்சி மடம் உள்ளிட்ட போலி மடங்களை அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் சிருங்கேரி மடங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது. அவர்களுக்கு மட்டுமே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்றும் பதில் கூறியுள்ளார்.

காஞ்சி பார்ப்பன சங்கராச்சாரி இப்படி ஓரம் கட்டப்பட்டதைக் கண்டு குமுறிய இராம. கோபாலன் பொங்கி எழுந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்:

“நீ ஆதிசங்கரர் சர்வக்ஞர் பீடம் ஏற்று வந்த வழியில் வந்த ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியாரின் பிரகாசத்தால் சங்கர மடங்களின் மீது பாரதம் மற்றும் உலகம் முழுதும் உள்ள மக்களிடையே பக்தியும் மரியாதையும் பரவியது என்பது வரலாற்று உண்மை” என்றும், “மக்களால் மதிக்கப்படும் மகான்களுக்கு மரியாதையும், வசதிகளும் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. சர்ச்சையைக் கிளப்பி, இந்து சமுதாய ஒற்றுமையைக் குலைத்து, மற்றவர்களின் ஏளனத்துக்கு ஆளாக வேண்டாம் என்று துறவியர் பெருமக்களை இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது” என்றும், அறிக்கையில் கூறியுள்ளார்.

சங்கராச்சாரிகளிலேயே பெரும் ‘பாவம்’ செய்து, கொலைக் குற்ற வழக்கில், நீதிமன்றம் அலைந்து கொண்டிருக்கிற காஞ்சி சங்கராச்சாரி தான், “கும்ப மேளா”வில் “பாவத்தை”ப் போக்கிக் கொள்ள முன்னுரிமையும் முழு உரிமையும் படைத்தவர் என்ற கருத்தையும் இராம.கோபாலன், தனது அறிக்கையில் சேர்த்துச் சொல்லியிருந்தால், அவரது வாதம் மேலும் வலிமைப் பெற்றிருக்கும் என்பது நமது கருத்து. கொலைக் குற்றத்துக்குள்ளானவராக இருந்தாலும், பார்ப்பனராக இருந்தால் மக்களால் மதிக்கப்படும் மகான்கள்தான் என்று இராமகோபாலன்கள், அடித்துக் கூறி வருவதை தமிழர்கள் கவனிக்க வேண்டும்.

‘மனுதர்மப்படி’ கொலை செய்த பார்ப்பானுக்கு தலைமயிரை சிரைத்தாலே போதும்; அதுதான் தண்டனை. இந்திய தண்டனைச் சட்டமானாலும், மனுதர்மத்தின் முன் மண்டியிட வைப்போம் என்று சூளுரைத்து, பார்ப்பன அதிகார ஆளும் வர்க்கம், அரசுகளின் ஆதரவோடு, அரசு சாட்சிகளையே விலைக்கு வாங்கி, ஜெயேந்திர, விஜயேந்திர பார்ப்பனக் கும்பலை தப்பிக்கச் செய்யும் முயற்சிகளில் இறங்கிவிட்டனர். தி.மு.க. ஆட்சியில்தான். பார்ப்பனர் தப்பிக்க வழி திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ‘திராவிட’ராக, பார்ப்பன நடிகர் எஸ்.வி. சேகரை அங்கீகரித்து தி.மு.க. பொதுக் குழுவிலும் சிறப்பு விருந்தினராக கவுரவித்ததோடு, அவரின் ‘அருள் உரை’யை வழங்கச் சொல்லி, கைதட்டி ரசித்து, மகிழ்ந்திருக்கிறார்கள். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ வார ஏட்டுக்கு பேட்டி அளித்துள்ள அந்த பார்ப்பன நடிகர், கலைஞர் ஆட்சியிலிருந்திருப்பாரேயானால், ஜெயேந்திரரைக் கைது செய்திருக்க மாட்டார். இதை கலைஞருடன் பேசியபோது, நான் தெரிந்து கொண்டேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசே - இப்படி, சங்கராச்சாரிகளைக் காப்பாற்றி, “மகான்களாக” அங்கீகரிக்கும்போது துவாரகா பீட சங்கராச்சாரியும், உத்ரகாண்ட் அரசும், காஞ்சி சங்கராச்சாரியை அங்கீகரிக்க மறுத்தால், இராம கோபாலன்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் தான், ஆவேசமாக பொங்கி எழுந்து விட்டார் போலிருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It