தேசிய சுய நிர்ணய உரிமைக்குட்பட்டு தனிநாடு விடுதலைப் போராட்டம் நடத்தும் தேசிய இனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஹேக் நகரில் (நெதர்லாந்து) செயல்படும் சர்வதேச நீதிமன்றம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஒரு பிரகடனம், மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.  செர்பியாவிலிருந்து சுய நிர்ணய உரிமையின் கீழ் தனது விடுதலைப் பிரகடனத்தை கடந்த 2008 டிசம்பரில் கொசாவா அறிவித்தது. கொசாவாவின் விடுதலைப் பிரகடனத்துக்கு சர்வதேச நீதிமன்றம் இப்போது ஏற்பு வழங்கிவிட்டது.
 
கொசாவா, தனிநாடு அறிவிப்பை எதிர்த்து செர்பியா, அய்.நா.வின் பொது சபை வழியாக சர்வதேச நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தது. விசாரணை நடத்திய 10 நீதிபதிகளில் 6 பேர் கொசாவா விடுதலையை அங்கீகரித்துள்ளனர். தலைமை நீதிபதி ஹியாசுகி ஓவாடா சர்வதேச சட்டங்களின்படி கொசாவின் விடுதலை அறிவிப்புக்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறியுள்ளார். கொசாவா விடுதலையை 60 நாடுகள் இப்போது அங்கீகரித்துள்ளன. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு கொசாவாவை அங்கீகரிக்கும் நாடுகள் நூறுக்கும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் செர்பியா, இத் தீர்ப்பை ஏற்கவியலாது என்று கூறிவிட்டது. ருஷ்யாவும், சீனாவும், அய்.நா.வில் இடம் பெற்றுள்ள ஒரு உறுப்பு நாட்டை, இரண்டாக பிரிப்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளன. அமெரிக்காவும், பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளும், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளன.
 
இந்தியா, கொசாவா விடுதலையை அங்கீகரிக்கவில்லை. என்றாலும், ருஷ்யா, சீனாவைப் போல், கடுமையாக எதிர்க்காமல் (அமெரிக்க எதிர்ப்புக்கு அஞ்சி), சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை பரிசீலித்து வருவதாக, வெளியுறவுத் துறை அதிகாரி கூறியுள்ளார். அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள சில நாடுகள் மட்டும், இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ளன. அந்த நாடுகளில் தேசிய இன உரிமைப் போராட்டங்கள் நடப்பதுதான், இதற்குக் காரணம். ஸ்பெயின் நாட்டில் பாஸ்க்யு, கேட்டலான் பகுதியினர், தனி நாடு கோரி போராடுகிறார்கள். சைப்ரசில் வாழும் துருக்கியர்களும், அதேபோல், கிரீஸ், சோல்வாகியா, ரொமானியா நாடுகளி லும் உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனங்கள், சுயநிர்ணய உரிமை கோரி போராடுகின்றன.
 
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த பிரகடனம், உலகில் தன்னுரிமைக்காக போராடும் பல நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியைத் தந்துள்ளது.

இது ஆபத்தான விளைவுகளை உருவாக்கிவிடும் என்று ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அஞ்சத் தொடங்கிவிட்டன. அதன் காரணமாகத்தான் சர்வதேச நீதிமன்றத்தில் முதன்முறையாக சீனாவின் பிரதிநிதி நேரில் நின்று கொசாவா விடுதலையை அங்கீகரிக்கக் கூடாது என்று வாதாடினார்.
 
(1960-க்குப் பிறகு சர்வதேச நீதிமன்றத்தில் சீனாவின் பிரதிநிதி நேரில் வாதாடியது இதுவே முதல்முறை) சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து, தனியே பிரித்து விட்டதாக அறிவித்துள்ள நாடுகள், சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட தயாராகிவருகின்றன. அசர்பசான் நாட்டில் ஆர்மெனியர்கள் அதிகம் வாழும் நாக்ரோனா - கார்பகா பகுதியில் அம் மக்கள் தங்களுக்கான தேசிய சுயநிர்ணய உரிமையின் கீழ், தனி நாடு பிரகடனத்தை உடனே வெளியிடவிருக்கிறார்கள்.
 
ருஷ்யாவின் ராணுவ உதவியுடன், ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து நிற்கும் அபாக்கஷியா (Abakhazia) மற்றும் தெற்கு ஒசர்ஷியா (Osertia) நாடுகளின் தலைவர்கள். இந்தத் தீர்ப்பு, தங்களின் சுயநிர்ணய உரிமைக்கு வழி திறந்து விட்டுள்ளது என்று அறிவித்துள்ளனர். இந்த நாடுகளின் போராட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டில் ருஷ்யா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத் தக்தாகும். சர்வதேச சட்டம் வழங்கியுள்ள ‘மனிதாபினமான தலையீட்டின் கீழ்’ (Humanitarian Intervention) ஜார்ஜியாவுக்கு  தனது படைகளை அனுப்பியது ருஷ்யா. அதேபோல் மேற்குலக நாடுகளும் இனப் படுகொலை நடக்கும் ஒரு நாட்டில், அதைத் தடுக்க தலையிடும் சர்வதேச சட்டத்தின் கீழ், சூடான் நாட்டில் தலையிட்டன. சூடான் அதிபர் இப்போது போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 50 தேசிய இனங்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக காத்திருக்கும்போது, இத் தீர்ப்பு, ஆபத்தான விளைவுகளை உருவாக்கிவிட்டது என்று அலறியிருக்கிறார். செர்பியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் வுக் ஜெரிமிக் (Vuk Jeremic) மேற்கு சகாரா விடுதலைக்கும் இத்தீர்ப்பு உயிரூட்டியுள்ளது. இந்தியாவிலே காஷ்மீரில் நடக்கும் விடுதலைப் போராட் டத்துக்கும், மியாம்னரில் நடக்கும் கரின், ஷான் தனிநாடு விடுதலைப் போராட்டத்துக்கும் ஈராக்கில் குருது இனத்து மக்கள் நடத்தும் விடுதலைப் போராட்டத்துக்கும், இத் தீர்ப்பு, கதவு திறந்துள்ளதாக, மேற்கத்திய ஆய்வாளர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
 
‘இனப் படுகொலை’ நடந்த காரணத்தால்தான் தேசிய சுயநிர்ணய உரிமையின் கீழ், தனி நாடு பிரகடனம் செய்தது கொசாவா. இது அப்படியே தமிழ் ஈழத்துக்கும் பொருந்தக் கூடிய தாகும். சர்வதேச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரண்டு முக்கிய கருத்துகளை சுட்டிக்காட் டியுள்ளது.
 
1.             தனியாக அங்கீகரிக்கப்படாத அரசு இல்லாவிட்டாலும்கூட, தங்களுக்கான பாரம்பரிய பிரதேசத்தில் உள்ள மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவதை சர்வதேச சட்டம் அங்கீகரிக்கிறது.
 
2.             பிரதேச ஒற்றுமை என்ற கோட்பாட்டை இரு மாநிலங்களுக்குள் உள்ள உறவுகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும். (Principles of territorial integrity applies only to the sphere of relations between states)
 
இந்த இரண்டு கருத்துகளும் ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக் கூடாது என்ற கண்மூடித்தனமான கொள்கைக்கு சாவுமணி அடித்துள்ளது என்றே கூறவேண்டும்.

தமிழ் ஈழத்தில் வடக்கு, கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தனியாட்சி - இந்திய, இலங்கையின் கூட்டு சதியால், நசுக்கப்பட்டாலும்கூட சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கிய திருப்பத்தை உருவாக்க முடியும். ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’கள், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் ஈழ அரசியலை சர்வதேச அரங்கில் அடுத்த இலக்கு நோக்கி நகர்த்தும் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டிய காலம் கனிந்திருக்கிறது. இதுவே சர்வதேச தமிழினத்தின் எதிர்பார்ப்பும் ஆகும்.

- விடுதலை இராசேந்திரன்

(பெரியார் முழக்கம் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It