“சட்டப் பேரவை என்பது பழைய பொருள் விற்கும் சந்தைக் கடை அல்ல. அது மக்களின் எதிர்காலத்தை ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுடைய ஓர் இடம். சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான ஒரு சட்டத் தீர்மானத்தை முன்னெடுக்கவோ அல்லது மோசமாக்கும் சட்டத் தீர்மானத்தைத் தடுக்கவோ சட்டப்பேரவை உறுப்பினர்களால் முடியும்.“ - இதை சொன்னவர் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர். இந்த நோக்கத்தை இந்திய சட்டமன்றங்கள் செய்கின்றனவா என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

assemly_speakerபிகாரில் சபாநாயகர் மீது செருப்பு வீசியது, கர்நாடகத்தில் சாப்பிட்டு தூங்கி சபையை அவமதிப்பது, காஷ்மீரில் சபாநாயகர் மீது மைக்கை எறிந்தது இதையெல்லாம் செய்தவர்கள் மாண்புமிகு எம்.எல்.ஏக்கள்தான். மாண்புடன் இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமர்க்களத்தில் ஈடுபடுவது மக்களின் நலனுக்காக (?!) என்று நினைத்தால் நீங்கள் உலகம் அறியாத அப்பாவிகள். சுருட்டிய பணத்தில், செய்த மோசடிகளில் யார் உச்சம் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களைச் சுமத்தி அடித்து தாக்குகிறார்கள். சட்டமன்றங்களில் எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்வதை கண்ட மக்கள் தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகளை எண்ணி முகம் சுளிக்கிறார்கள். வெட்கப்பட்டு தலைகுனிகிறார்கள். ஊழல் செய்வதும், அடிதடியில் இறங்கி களேபரத்தில் ஈடுபடுவதும்தான் எம்.எல்.ஏக்களுக்கான தகுதி என்ற தோற்றம் உருவாகி வருகிறது.

பீகாரில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களில் ரூ.11,412 கோடி ஊழல் நடந்திருப்பதாக, விசாரணை அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தங்கள் முன் இருந்த மைக்குகளை உடைத்தார்கள். மேஜை, நாற்காலிகளை கீழே தள்ளி சாய்த்தார்கள். அவர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன் சென்று, கையில் இருந்த பேப்பர்களை கிழித்து எறிந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சில உறுப்பினர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இரண்டாவது நாள் பேரவை  தொடங்கியதும் எம்.எல்.ஏக்கள்  ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீது செருப்பு வீசப்பட்டது. பல ஆயிரம் மக்களின் ஒற்றை பிரதிநிதியாக இருந்து செயல்பட வேண்டிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தாக்கிக் கொள்வது அநாகரீகமாக இருக்கிறது.

பிகாரில்தான் இப்படி என்றால் அதைவிட கேடுகெட்ட நிலையில் கருநாடக சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். என்னதான் பிரச்சனை என்றாலும் ஒரு நாகரீகத்தோடு நடந்துகொள்வதுதான் மாண்பு. இந்த மேன்மை அதிகார மனம் உள்ளவர்களுக்கு வரவே வராது. ஆனால், ஒரு இடத்திற்குத் தர வேண்டிய மதிப்பை தராமல் கருநாடக சட்டப் பேரவை உறுப்பினர்கள்  மாண்பற்ற போக்கில் நடந்துகொண்டார்கள். கருநாடகாவில் ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்தி செய்து வரும் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் உள்ளிருப்புப் போராட்டம் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்தனர். விடிய விடிய அவர்கள் சட்டசபைக்குள்ளேயே இருந்தனர். சட்டசபைக்குள் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்து தூங்கினார்கள். இந்த கேவலத்தை நாடே காட்சி ஊடகங்களில் வேடிக்கை பார்த்தது. மக்கள் முகம் சுளித்து மனநெருடல் அடைந்தார்கள். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காமிரா முன்பு வெட்கமின்றி பல் இளித்தார்கள்.

bihar__mlaகாஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்தில் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மெகபூபா எழுந்து, பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டார். காவலர்களை ஏவல் செய்து அரச பயங்கரவாததை முன்னெடுத்து, ஏதுமறியாத அப்பாவிகளை வஞ்சிக்கும் கொடூர மனம் கொண்ட ஆட்சியாளர்கள் அதிகார மனப்பான்மையோடு நடந்துகொண்டார்கள். மக்கள் பிரச்சனை குறித்தும், அரச பயங்கரவாதம் குறித்தும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த மெகபூபா, சபாநாயகர் முகம்மது அக்பரை நோக்கி ஆவேசமாக விரைந்தார்.ஒரு கட்டத்தில் கோபமாகி சபாநாயகர் மேஜையில் இருந்த பொருட்களை கீழே வீசினார். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி வீசியபோது அவைக் காவலர்கள் தடுத்து விட்டனர். சபையே சண்டைக்களமாகியது.

இத்தகைய செயல்பாடுகள் இங்கு விவாதிக்கப்பட்ட பிகார், கருநாடகம், காஷ்மீர் ஆகிய மாநில சட்டமன்றங்களில் மட்டும்தான் நடந்தனவா? இல்லையில்லை. இந்தியாவின் சட்டமன்றங்களில் கூட்டம் நடக்கும்போதெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவும். எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் ரகளையில் ஈடுபட்டு அடித்துக்கொள்வார்கள். இதுதான் சட்டமன்றங்களின் நடவடிக்கைகள். இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மாநில சட்டமன்றங்கள் அனைத்துமே அதிகார துஷ்பிரயோகத்தோடு, பணம் சம்பாதிக்கும் தொழில் கூடங்களாகவும், கொள்ளைக் கும்பல்கள் அதிகாரப் போட்டியில் மோதிக்கொள்ளும் மல்யுத்தக் கூடங்களாகவும் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதிகார சாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு அடித்தள மக்களுக்கு சேரவேண்டிய உரிமைகள் கூட முழுமையாக சென்று சேர எம்.எல்.ஏக்கள் விடுவதில்லை.

அடித்தள மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் வர்க்கங்களின் காலடியில் சரணாகதி அடைந்து நாயினும் கீழாகப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், கட்சித் தலைமையின் கட்டளைக்குப் பணிவதாக ஊளையிடுகிறார்கள்.

சாதி அதிகாரங்களுக்கும், கட்சி தலைமை அதிகாரங்களுக்கும் கீழ் பணிந்து நடந்தால் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தந்தையாக போற்றும் தகுதி படைத்த தீர்க்கதரிசி டாக்டர் அம்பத்கர் சுட்டிக்காட்டினார். அதோடு நில்லாமல், சாதி - கட்சி அதிகாரங்களைக் கடந்து தலித் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட வேண்டுமானால் இரட்டை வாக்குரிமை முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுமேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், காந்தி உள்ளிட்ட மதவாதிகளும் சாதிவாதிகளும் இரட்டை வாக்குரிமை முறையைக் கொண்டுவரவிடாமல் தடுத்து நிறுத்தினர். கபட நாடகங்களை நடத்தி தனித் தொகுதி முறையைக் கொண்டுவர அம்பேத்கரை சம்மதிக்க வைத்தார்கள். இதன் விளைவை தலித் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களின் செயல்பாடுகள் மூலமாக தலித் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில், எந்த ஏற்பாட்டையும் செய்யாதிருப்பது வருந்தத்தக்கது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மையை விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றத்திலேயே அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், ஜனநாயகம் பற்றி வாய்க்கிழிய பேசும் எம்.எல்.ஏக்கள் அதை மதிப்பதேயில்லை. அரசியல்வாதிகளை முறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அரசியல்வாதிகளிடம் இருப்பதுதான் வேடிக்கையானது. நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த கேடுகெட்ட போக்கு நிலவுகிறது. ஆனாலும் உலகிலலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்!?

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளமாக பெரும் தொகை  வழங்கப்படுகிறது. ஆனால் சட்டமன்றங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் பொன்னான நேரமும், பணமும் வீணாக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருக்கிறது.

bihar_assembly_MLCஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை விட, இந்தியாவின் பீகார், சத்திஷ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள மக்கள் மிக அதிக வறுமையில் வாடுகிறார்கள். யுஎன்டிபி(UNDP) அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றங்கள் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகின்றன.

விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் கண்ணியத்தை காக்க கட்டாயமாக மனதளவில் மாற வேண்டும். அவர்கள் நடத்தும் ஆரோக்கியமான விவாதமும் செயல்பாடுகளும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் என்பதால் அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களை மன்றங்களுக்கு அனுப்பிவைத்த மக்களின் விருப்பம்! பொதுமக்கள் விருப்பப்பட்டால் மட்டும் போதாது, விழிப்போடு செயல்பட வேண்டும். இத்த‌கைய‌ பிர‌திநிதிக‌ளை அடுத்த‌ தேர்த‌ல்க‌ளின்போது த‌ண்டிக்க‌ வேண்டும்.

- முருக சிவகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It