மரபு சார் மருத்துவம்

பகுத்தறிவு சார் மருத்துவம்

அறிவியல் சார் மருத்துவம்

தற்காலப் புது மருத்துவம்

என்னும் பல பெயர்களைக் கொண்டதாகவும், உலக முழுவதும் பின்பற்றப்படும் மாபெரும் மருத்துவ முறையாகவும் உள்ளது ஆங்கில மருத்துவம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது அது நம் நாட்டிற்குள் வந்ததால் அதற்கு ஆங்கில மருத்துவம் என்னும் அப்பெயர் இங்கு நிலைபெற்றது.

ஒரு நோய் நிலையின் போது காணப்படும் துன்பநிலைக்கு எதிரான இயல்புடைய மருந்துப் பொருளே அம் மருத்துவத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

சான்று    : 1. தீக்காயத்தில் தண்ணீர் ஊற்றுதல்

2. அளவுக்கு மீறிய இயக்கத்தை நிறுத்த மரப்பு மருந்தைப் பயன்படுத்தல் முதலானவை.

இவ்வாறு நோய்க்கும் மருந்துக்கும் ஒப்புமைப் பொருத்தம் இல்லாமல் எதிரான மருந்தின் பயன் பாட்டினால் பொருந்தா மருத்துவம் அல்லது எதிர் நிலை மருத்து வம் என்னும் பொருள் தருகின்ற அல்லோபதி என்னும் பெயரை அதற்குத் தந்தவர் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான் ஆவார். ‘அல்லோபதி’ ‘ஓமியோபதி’ என்னும் சொற்களுக்கு அவற்றின் பொருள் பொருத்தத்திற்கு ஏற்றவாறு அல்லியல் மருத்துவம், ஒல்லியல் மருத்துவம் என்று முறையே அவற்றிற் குத் தமிழ் வழக்குத்தந்தவர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

மாமேதை ஆனிமான் அம் மருத்துவத்திற்கு அல்லோபதி என்று பெயரிட்டதோடு அதற்கு - குணப்படுத்தா மருத்துவக்கலை - தணிவிப்பு மருத்துவம் என்று பல பெயர்களைச் சூட்டினார். ஆயினும், அல்லியல் மருத்துவம் (Allopathy) என்னும் பெயரே நிலை பெற்றது. அம்மருத்துவ முறையைப் பின்பற்றுகின்றவர்களும் அப்பெயரையே விரும்பி ஏற்றுக் கொண்டனர்!

ஆங்கில மருத்துவ முறையைத் தவிர்த்த ஏனைய மருத்துவ முறைகள் அனைத்தும் மாற்று மருத்துவங்கள் என்று இக்கால் சுட்டப்படுகின்றன. ‘மாற்று மருத்துவம்’ என்னும் பெயர் ‘முதன்மை இல்லாதது’ என்று பொருள் தருவது போலத்தான் முதலில் தோன்றுகிறது. ஆயின் சற்று எண்ணிப் பார்த்தால் அப்பெயர் மிகவும் பொருந்துவதே என்பது புலப்படுகின்றது.

நாம் ஓரிடத்திலிருந்து வேறு ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டிய பாதை நேரானதாகவும், சீரானதாக வும், இருந்தால், பழகிப் போன அந்த நல்ல பாதையில்தான் செல்வோமோ அன்றி, அதற்கு மாற்றுப்பாதை ஒன்றைத் தேட வேண்டிய தேவையே இல்லாமற் போகும். நல்ல பாதையாக அது அமையவில்லையென்றால் வேறு ஒரு நல்ல பாதையை மாற்றுப் பாதையாகத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே, தீங்கு விளைவிக்கும் ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக அமைந்த நல்ல மருத்துவ முறைகள் என்பதே மாற்று மருத்துவங்கள் என்பதற்கான உண்மைப் பொருளா வதை அறியலாம்.

பொருந்தாத மருத்துவமாகிய அல்லியல் (அல்லோபதி) மருத்துவ முறைக்கு எதிராக, பொருந்தும் மருத்துவம் ஆகிய ஓமியோபதியை உருவாக்கியவர் மாமேதை ஆனிமான். அப்பெருந் தகையார், மருந்துப் பொருள்கள் இல்லாத வேறு சில மாற்று மருத்துவங்களைப் பற்றியும் தமது ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை என்னும் நூலில் கருத்துரைத்துள்ளார்.

அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. மின்கல அதிர்வு முறை (Galvanism)

“....மின்னாற்றலும் மின்கல அதிர்வுகளும் அவற்றின் முதல் நிலைச் செயல்பாட்டில் தசைகளின் செயல்பாட்டைத் தூண்டுகின்றன. வலிமையற்றும், ஏறத்தாழ முடக்க நிலையிலும் உள்ள கை கால்களில் அம் மின்னாற்களைச் செலுத்தி, அவை இன்னும் மிகுதியாகச் செயல் படுமாறு தூண்டும் போது, அதன் விளைவால் (இரண்டாம் நிலைச் செயல் பாட்டால்) தசைகளின் தூண்டுதல் ஆற்றல் முற்றிலும் மரத்துப் போய் முழுமையான முடக்கம் உண்டாகி விடுகிறது” (நெறி 59) எனவே ... “இதுவரை நோய்வாய்பட்டவருக்குப் பெரும் சீர்கேட்டை உண்டாக்கும் நோய்த் தணிவிப் பாகவே மின்னாற்றலும், மின்கல அதிர்வும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. நலமான மாந்தரிடம் அவ்விரண்டின் நன்மையானவையும் தூய்மையான வையும் ஆகிய செயல்பாடுகள் இதுவரை மிகச் சிறிதளவே அறியப்பட்டுள்ளன”. நெறி 286 என்பதை மாமேதை ஆனிமானால் கூறப்பெற்றவை.

எனவே (1) மின்னாற்றல், மின்கல அதிர்வு மருத்துவமுறை ஓர் எதிர்நிலை மருத்துவமாக அமைந்து நோயைக் குண மாக்காமல் முதலில் சற்றுத் தணிவித்துப் பின்னர்ப் பெருங்கேடு உண்டாக்குகிறது.

2. மின்கல அதிர்வும் மின் னாற்றலும் ஓமியோபதி முறையில் மருந்துகளாக நிறுவப்பட்ட பின்னரே அவற்றின் மருத்துவ ஆற்றல் அறியப்படும். என்பதை அவர்தம் கருத்துக்களாக உள்ளன என்பதை அறியலாம்.

2. காந்தமுறை மருத்துவம் (Magneto Therapy)

மின்கல அதிர்வு மருத்துவத்திற்கும் இம்மருத்துவ முறைக்கும் பொருந்துவனவாகவே முற்கூறிய கருத்துக்கள் உள்ளன. எனவே இதுபற்றித் தனியே விளக்க வேண்டியதில்லை.

3. காந்தமுனை மருத்துவம் (Magnetic Poler – As Medicine)

தெற்கு, வடக்கு என்னும் காந்த முனையின் இருதுருவ ஆற்றல்களும் ஓமியோபதி மருந்து களாக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. அம் மருந்துகளின் நிறுவல்கள் தூய மருந்துப் பொருள் நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே இக்காந்தமுனை மருந்துகள் நன்மைபயப்பனவே என்பது நெறிமொழி 287 இல் கூறப்பட்டுள்ளது.

“தூய மருந்துப் பொருள் நூலில் காந்தக் கட்டிகளின் வடக்கு மற்றும் தெற்குத் துருவ முனைகள் என்னும் தலைப்பில் கூறப்பட்டுள்ள வாறு, காந்தத்தின் ஆற்றலை நலப்படுத்தும் நோக்கத்திற்காக உறுதியான முறையில் பயன்படுத்த முடியும். அவ் இரு துருவ முனைகளும் ஒத்த தன்மையான ஆற்றல் உடையவையாய் இருப் பினும் அவை ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் ஒன்றிற்கொன்று எதிர்நிலையான வகையில் அவை உள்ளன...” இது, தூய ஓமியோபதி முறையேயாயினும், காந்த முறையிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே இது தனியே கூறப்பட்டது.

4.     வசியம் (Mesmerism)

வசியம் தொடர்பாக மாமேதை ஆனி மான் கூறியுள்ளவற்றின் சுருக்கம் வருமாறு.

“.... நன்னோக்கம் உடைய வசியம் செய்யும் ஒருவர் நோயாளியைத் தொடுவதாலும் அல்லது தொடாமலேயே சற்றுத் தொலை வான இடத்தில் இருந்து கொண் டும், வசியத்தி னால் தம் உயிராற்றலைக் கொண்டு இன்னொருவர்தம் உயிராற்றலை இயக்கம் உடையதாக (ஆற்றல் வாய்ந்த காந்தமுனையைக் கொண்ட கோலினால் இரும்புக் கட்டியைக் காந்தம் உடையதாக ஆக்குவதைப் போல) ச் செய்ய முடியும்..” (நெறி 288 இன் ஒரு பகுதி) என்பதும்,

“.... உடம்பு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் அவ் உயிராற்றல் சேர்ந்து கொண்டு, (ஏனைய பகுதிகளில்) நரம்புத் தொடர்பான நோய்களை - சான்றாகப் பழைய புண்கள், நரம்புப் பாதிப்புக் குருட்டுத்தன்மை, ஓர் உறுப்பில் மட்டுமான செயல் முடக்கம் முதலானவற்றை - தக்க வைத்து உறுத்திக் கொண்டுள்ளபோது, அதை மாற்றியும் குறைத்தும் சமமாகப் பரவச் செய்தும், பொதுவாக நோய் பாதிப்புடைய உயிர்முதல் ஆற்றலில் உள்ள நோய் நிலையை அழித்து விட்டு, அதற்கு மாற்றாக அவ்விடத்தில் வசியம் செய்பவர்தம் இயல்பான நிலை அந்நோயாளியிடம் வலிமையுடன் செயல்படுகிறது...” (நெறி 288இன் இன்னொரு பகுதி) இவற்றால் வசியம் உயிர் ஆற்றலைத் தூண்டுகிறது என்பது மாமேதை ஆனிமானின் கருத்தாக உள்ளது என்பதும் அதனால் இம் மருத்துவம் கொள்ளத் தகுந்ததே என்பதும் அறியப்படுகின்றன.

5.     தொக்கடம் (Massage)

“.....நோய் குணமாகிவிட்ட நிலையிலும் சதைத் தேய்மானம், செரிமானக்குறைவு, உடல் விரைத்து தேறாத நிலையில் உண்டாகும் உறக்கக் கேடு என்னும் தொல்லைகளால் துன்புற்று நீண்ட காலமாகவே ஏலாமை நிலையில் உள்ளவர் களுக்கு, உடல் வலிமையும் நல்லியல்பும் கொண்டவரால் செய்யப்படும் தொக்கடம் என்று அழைக்கப்படுவதாகிய இம்முறையும் இவ்வகை யான (வசியத்தைப் போன்ற) பண்டுவத்தைச் சேர்ந்தது ஆகும்....” (நெறி 290)என்று மாமேதை ஆனிமான் கூறியுள்ளார். எனவே வசியமுறை பற்றிக் கூறியது இதற்கும் பொருந்தும்.

6.     குளியல்கள்

“கடுநோய்களிலும், நெடு நோயாளிகள் குண மாகிய பின் உடம்பு தேறிக் கொண்டிருக்கும் நிலை யிலும், அவர்களுடைய உடல் நலத்தை மீட்பதில் ஒருவாறு நோய் தணிவிப்பாகவும், ஒருவாறு ஓமியோபதி முறைப்பட்ட உதவியாகவும் காணப்படும் சான்றுகளாக நன்னீர்க் குளியல்கள் அமை கின்றன...” (நெறி 291 இன் ஒரு பகுதி) என்று மாமேதை ஆனிமான் கூறியதோடு, ஓமியோபதி முறைக்கு ஒத்துள்ளவாறு குளியல் நீரின் வெப்ப அளவுகள் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாற்று மருத்துவங்களைப் பற்றி அப்பெருமகனார் கருத்துரைக்கும் போதெல்லாம் அவற்றில் காணப்படும்.

(1) உயிராற்றலின் தூண்டல்

(2) ஓமியோபதி முறைப்பட்ட ஒப்புமைநிலை

என்பவற்றையே அளவுகோலாகக் கொண்டு, அவற்றின் பயன்பாடுகளை மதிப்பிட்டார்.

இம் மருத்துவ முறைகளே அல்லாமல்

(1) இரெய்கீ (Reike)

(2) ஓகம் (Yoga)

(3) வர்மம்

(4) நுண்ணூசி மருத்துவம் (Acupuncture)

(5) நுண்ணழுத்த முறை (Acupressure)

முதலானவை, மருந்தில்லா மாற்று மருத்துவ முறைகளாக உள்ளன.

இவற்றின் பயன்பாடுகளையும் மாமேதை ஆனிமான் கடைப்பிடித்த அதே வழிகளைப் (உயிராற்றலின் தூண்டல், ஓமியோ முறைப்பட்ட ஒப்புமை) பின்பற்றியே உறுதி செய்து கொள்ள வேண்டும். அதனால் கொள்ளத்தக்கது எது என்றும் தள்ளத்தக்கது எது என்றும் அறிந்து கொள்ளலாம்.
- மருத்துவர் கு.பூங்காவனம்,பெங்களூரு (09845369715)
Pin It