தமிழகத்தில் 14வது சட்டமன்றத் தேர்தல் ஏப் 13-ல் நடைபெற்று முடிந்துள்ளது. பாராளுமன்ற ஜனநாயக அரசியலில் மக்கள் பங்கேற்பின் மூலம் ஆட்சிகள் உருவாகின்றன. ஆட்சியில் நீடிக்க ஆளும் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சியும் அணி திரள்கின்றன. என்ன செய்யப்போகிறோம் என்று தேர்தல் அறிக்கை மூலம் திட்டங்களைக் கூறி மக்கள் ஆதரவைக் கோருகின்றன.

       ‘India is not a poor country; but Indians are poor’ என்பார்கள். ஏழை இந்தியர்கள் கூட்டம் இருக்கும்வரை இலவசங்களும் மானியங்களும் இருந்தே தீரும் எனும் சூழ்ச்சியான அரசியல் தத்துவத்தை இடதுசாரிகள் தவிர்த்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கு வசதியாகப் பேசுவதுண்டு. தனி நபர் செல்வாக்கும், குழு மனப்பான்மைகளும், அடையாள (சாதீய) அரசியலும், கவர்ச்சிகரமான இலவசங்கள் குறித்த அறிவிப்புகளும் இல்லாத தேர்தல் இன்றுவரை இல்லை. எனினும் இன்றைய பாராளுமன்ற ஜனநாயக அரசியலை முற்றிலுமாய் புறக்கணிக்க இயலாது. அது ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லவும் உதவாது.

       தி.மு.க. அரசின் 5 ஆண்டு நலவாழ்வுத் துறையின் முக்கிய சாதனைகளாக முதல்வர் குறிப்பிடுவன. (1) 2009 முதல் உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு (2) அவசரகால உதவிக்கான ஆம்புலன்ஸ் 108 திட்டம். (3) கர்ப்பிணிகளுக்கு ரூ. 6000 மகப்பேறு நிதிஉதவி (4) வருமுன் காப்போம் திட்டம் (5) பள்ளி மாணவர்க்கு கண்ணொளி காப்போம் திட்டம் (6) 2007 முதல் இளம்சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம்; 2008 முதல் பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம் (7) 166 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் (8) இலவச அமரர் ஊர்தி திட்டம் (9) மருத்துவர்கள் செவிலியர்கள் என 34, 854 பேர் நியமனம் (10) 2005-2006ல் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டங்களுக்கு ரூ. 1487 கோடி ஒதுக்கீடு 2010 - 2011ல் ரூ. 3889 கோடியாக உயர்வு.

       தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற இருப்பவைகளில் முக்கியமானவை (1) மதுரை, திருச்சியில் மனநல மருத்துவமனைகள் மற்றும் மதுரையில் காசநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை (2) மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை திட்டம் (3) இலவச தடுப்பூசிகள் திட்டம் மற்றும் வருமுன் காப்போம் திட்டத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரிவு படுத்துதல் (5) நடமாட முடியாத முதியோருக்கு மாதம் 1 முறை வீடு தேடி சென்று சிகிச்சை.

       அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் காணப்படும் நலவாழ்வுத்துறை சார்ந்த முக்கிய அம்சங்கள். (1) சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் (2) கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் (3) தற்போதுள்ள 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்படும்.

       தி.மு.க. ஆட்சியில் வழங்கிய திட்டங்களையும், தி.மு.க. அ.தி.மு.க. இரு கட்சிகளும் இனி வழங்கப்போவதாக அறிவித்துள்ள திட்டங்களையும பரிசீலித்துப் பார்த்தால் அனைத்துத் திட்டங்களும் ஆங்கில மருத்துவம் சார்ந்தவை என்பதும், நலவாழ்வுத்துறை ஒதுக்கீட்டு நிதியை கார்ப்போரேட் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை என்பதும் தெள்ளத் தெளிவாக அறிய முடியும்.

       தாயக மருத்துவங்களின் கதி என்ன? மண்ணின் மக்களோடும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்த சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யோகா, அக்குப்பங்சர் ... போன்ற மருத்துவ முறைகள் குறைந்த செலவில் சிறப்பான பலனளிக்க கூடியவை. வருமுன் காக்கவல்லவை. இவை சார்ந்த லட்சக்கணக்கான மருத்துவர்கள் இங்கு உள்ளனர். பொதுவாக மருத்துவத்துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. இது மாற்றுமுறை மருத்துவர்களை ஓரங்கட்டி விட்டு இருட்டடிப்பு செய்வதாகும். உண்மையில் இங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏதுமில்லை. இருக்கிற தாயக, மாற்றுமுறை மருத்துவர்களை அங்கீகரிப்பது, பயன்படுத்துவது தொடர்பான எளிய நிர்வாக நடைமுறைச் சிக்கலே அது.

       அமையவிருக்கும் 14வது புதிய அரசு நிறைவேற்ற வேண்டிய நலவாழ்வுத் துறையின் மறுமலர்ச்சிக்கான முக்கிய கோரிக்கைகள் : (1) அனைத்து மட்டங்களிலும் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி பட்டதாரி மருத்துவர்கள் உட்பட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமனத்தை அதிகரிக்க வேண்டும். (2) ஆங்கில மருத்துவமனைகளின் அனைத்து நடவடிக்கைகளையும் உரிய கண்காணிப்புக்கு உட்படுத்திக் கட்டுப்படுத்த வேண்டும். (3) அனைத்து மருத்துவ மற்றும் தடுப்பு மருத்துவ நடவடிக்கைகளிலும் மாற்றுமருத்துவங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவேண்டும். (4) காப்பீட்டு நிறுவனங்களை, தனியார் கார்ப்பரேட்டுகளை நம்பி மக்கள் நலவாழ்வை அடகு வைக்கும் திட்டங்களை நிறுத்தி, அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருத்துவமுறை சார்ந்த வசதிகளும் நிறைந்த உன்னதக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். (5) அடிப்படை மருத்துவ நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து மாற்றுமருத்துவங்களுக்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். சமச்சீர் மருத்துவமுறை மலர வேண்டும்!

Pin It