தமிழகம் முழுதும் பரவலாகப் பெருமழையும், தொடர் மழையும் பல நாட்களாய் நீடிப்பதால் வாழிடப் பிரச்சினை, விவசாய அழிவு, கால்நடைகள் சேதம், போக்குவரத்துச் சாலைகள் பாதிப்பு மட்டுமின்றி சுகாதாரப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன. மழைநீர் தேக்கமுள்ள பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிரச்சினை முதல் தொற்று நோய்களின் தாக்குதல் உள்ளிட்ட எண்ணற்ற பொது சுகாதாரப் பிரச்சினைகள் பெருகியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மழைக்கால மாதங்களில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து மழைக்கால நோய்களும், புதிய புதிய நோய்களும் பரவி வருவது அறியாதார் யாருமில்லை. தற்போது தமிழகத்தில் ‘எலும்பு முறிவு சுரம்’ என்றழைக்கப்படும் ‘டெங்கு சுரம்’ பரவி வருவது கவலைக்குரியது.

ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில், டெங்கு உள்ளிட்ட பலவித நோய்களுக்கு தடுப்பு மருந்துகள், குணமளிக்கும் மருந்துகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் கையிலே வெண்ணெய் வைத்துக்கொண்டு சுண்ணாம்புக்கு அலைவதைப் போல எல்லாக் காலங்களிலும், ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவங்களை பாராமுகமாய் ஒதுக்கிவைத்து விட்டு ஆங்கில மருந்துகளை இறக்குமதி செய்துவரும் அவலமே தொடர்கிறது. இந்தியா போன்ற ஏழைநாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலத் தடுப்பூசி மருந்துகள் கடுமையான எதிர்விளைவுகளையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

சமீப கடந்த காலத்திலே கூட சிக்குன்குனியா, டெங்கு சுரம், பன்றி சுரம், மூளை சுரம், இதர வைரஸ் சுரங்களைக் கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதி தடுப்பு மருந்துகளையும், குணமளிக்கும் மருந்துகளையும் மத்திய மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்டளவு பயன்படுத்தி மக்களுக்கு நன்மையளித்திருப்பது மறைக்க முடியாத உண்மையாகும். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் தொற்றுநோய்கள் முழுவீச்சில் பரவிய பின்னர், மக்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளும் முனைப்போடு ஹோமியோபதி & சித்தா மருத்துவமுறைகளை கூட்டம் கூட்டமாய் நாடிச் செல்லும் நிலையில் அரசுகளின் அறிவிப்புகள் தாமதமாக வருகின்றன. தொற்று நோய்கள் பரவும் முன்னரே, அல்லது ஆரம்பக் கட்டத்திலிலேயே அரசு மருத்துவமனைகள் மூலமும், தனியார் மருத்துவமனைகள் மூலமும் சில சிறப்பு ஏற்பாடுகள் மூலமும் ஹோமியோபதி, சித்தா தடுப்பு மருந்துகளை வழங்கினால் தொற்றுநோய் ஒழிப்பதில் சாதனை நிகழ்த்த முடியும். மக்கள் நலம் காக்க முடியும்!

அரசின் கடமைகள் ஒருபுறமிருக்க, ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவமுறை சார்ந்த மருத்துவர்கள் தொற்றுநோய்கள் மக்களை அணுகாமல் தடுக்கவும், பரவிய நோய்களை முறியடிக்கவும் மக்களை விழிப்பூட்டுவதன் வாயிலாகவும், தம்மிடமுள்ள மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து நலம் பேணுதல் மூலமாகவும் அழுத்தமான முத்திரை பதிக்கலாமே!

அன்புடன்,
ஆசிரியர்

Pin It