கீற்றில் தேட...

'அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி' என்ற சாமுவேல் ஜான்சனின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக மோடி அரசு அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்து தமது தவறுகளை யாரும் கேள்வி கேட்க முடியாதபடி மூடி மறைத்து கொள்வதற்கும், தமது அத்துமீறல்களை நியாயப் படுத்துவதற்கும் தேச பக்தி, தேச பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்ற பித்தலாட்ட கருத்துக்களை முன்னிறுத்தி வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது.

அந்தவகையில் எதிர்வரும் சுதந்திர நாளை முன்னிட்டு சுமார் 20 கோடி வீடுகளில் மூவர்ண கொடியேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து தங்களை தேசப்பற்று மிக்க தேச பக்தர்களாக காண்பிக்க இந்துத்துவ ஆளும் பாஜக முனைந்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி வெறு‌ம் 4 கோடி கொடிகள் மட்டுமே இந்தியாவில் உள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்து உள்ளது. அப்படியிருக்க மீதம் உள்ள சுமார் 16 கோடி அளவிலான கொடிகளை யார் தயாரிக்க உள்ளார்கள் என்பதின் மூலம் மோடி அரசின் மெகா மோசடியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

rss cadres holding national flagஅதாவது இந்த சுதந்திர நாளை இல்லம் தோறும் மூவர்ண கொடி ஏற்றி கொண்டாட சொல்வதின் பின்னணியில் மோடியின் பெரு நிறுவன நண்பர்களின் வியாபார ஆதாயம் உள்ளதே தவிர தேசபக்தி என்ற வேறெதுவும் இல்லை. ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக அரசில் அதிகாரப் பூர்வமாக பயன்படுத்தப்பட்ட மூவர்ண கொடிகள் அனைத்தும் காதி நிறுவனம் பாரம்பரியமாக பருத்தி மற்றும் பட்டில் மட்டுமே அதுவும்கூட கைகளால் நெய்து தயாரித்தது. ஆனால் இத்தகைய பாரம்பரியத்தை தற்போது மாற்றி பாலியஸ்டர் துணியிலும் தயாரிக்கலாம் என திருத்தி எழுதியுள்ளது மோடி அரசு.

திடீரென்று இத்தகைய திருத்தம் கடந்த மாதம் கொண்டு வந்ததும், அதன்படி இனி பாலியஸ்டரால் தைக்கப்பட்ட கொடிகளும் அனுமதிக்கப்படும் என்பதும், அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டமும் எதற்காக என்று இன்னும் புரியாமல் இல்லை.

மேலும் பாலியஸ்டர் தயாரிப்பில் இந்தியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானிக்கு சட்டபூர்வமாக இந்திய மக்களின் பணத்தை வாரி வழங்கவே தேச பக்தியின் பெயரால் மூவர்ண கொடியை ஏற்றும் திட்டத்தை தொடங்கி உள்ளார் மோடி என தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே குற்றஞ்சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு குஜராத்தில் மோடி அரசின் உபயத்தில் மூவர்ண கொடி தயாரிக்கும் வணிகம் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே போட்டி போட்டு கொண்டு மிகவும் வேகமாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 24 கோடி வீடுகளுக்கு மூவர்ண கொடியை வழங்க இருக்கும் திட்டத்திற்காக ஒரு கோடி மூவர்ண கொடிகளை தயாரித்து வழங்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக ஒரு தொழிற்சாலையின் உரிமையாளரான சஞ்சய் சரவாகி கூறியுள்ளார். இவ்வாறாக துணி வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் குஜராத்தின் சூரத் நகரத்தில் தற்போது இந்த மூவர்ண கொடி தயாரிப்பு அமோகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறாக மோடியின் ஒவ்வொரு தேசபக்தி நாடகத்திற்கு பின்னாலும் அவரது குஜராத் நண்பர்களின் வியாபார ரீதியான உள்நோக்கம் இருக்கும். அதுபோல தான் இந்த மூவர்ண கொடியின் மூலம் நாட்டு மக்களின் பணம் அம்பானி போன்ற பெருநிறுவன முதலாளிகளின் கஜானாவுக்கு செல்ல போகிறது. இவ்வாறு மோடியின் தேசபக்தி அவர்களின் நண்பர்களுக்கு உதவுவதாகவே இருக்கிறது.

மேலும் தேசியக் கொடியை சூரியன் உதித்த பின்பு ஏற்றி சூரியன் மறைவதற்குள் இறக்கி விடவேண்டும் என்பதும், அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்பதும், அதோடு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய நாட்களில் தான் ஏற்ற வேண்டும் என்பதும் விதிமுறைகள். ஆனால் மோடி அரசு இந்த இந்திய தேசியக்கொடி விதிமுறைகள் 2002 பிரிவு 7-ல் உள்ள இரண்டாவது பத்தியில் தற்போது மாற்றம் செய்துள்ளது. அந்த மாற்றத்தின் படி “பொது வெளியில் பறக்கவிடப்படும் அல்லது பொதுமக்கள் வீட்டில் பறக்கவிடப்படும் கொடியானது பகல் மற்று இரவிலும் பறக்கலாம்” என்றும், இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக் கொடிகளையும் பயன்படுத்தலாம் என்றும் திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம் தீவீரவாதிகளின் வீடுகளிலும் கூட தேசிய கொடியை ஏற்றி அவனை புனிதனாக காட்ட முடியும். இதுதான் மோடி அரசு நமக்கு போதிக்கும் தேசப்பக்தி பாடம்.

18 கிலோ மீட்டர் தூரம் இந்தியப் எல்லைப் பகுதிக்குள் வந்து சீனா கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளதாக ‘தி டெலிகிராப்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுத்து தேசப்பற்றை நிரூபிக்க தெரியாத மோடி அரசு, ஏற்கனவே அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கும் பொருளாதாரத்தை சரிசெய்ய ஒரு சிறிய அளவிலான நடவடிக்கையும் எடுக்காமல் மேலும் பல கோடிகளில் மக்களின் பணத்தை இப்படி வாரி இறைத்து தேசப்பற்றை நிலைநாட்ட துடிப்பது அவர்களின் போலி தேசபக்தியை தோலுரித்து காட்டுகிறது.

மேலும், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுதல்‌ சார்ந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி, மாணவர்களுக்கு தேசியக் கொடியை வழங்கி, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.

தேசத்தின் மீதான பற்று என்பது ஒவ்வொரு தனி நபருக்குள்ளும் தான்தோன்றியாக உருவாகும் ஓர் உணர்வு. அப்படியான உணர்வினை பிறர் மீது திணிக்க முடியாது. கட்டாயத்தின் பேரில் தேசியக் கொடியை ஏற்றிக்கொண்டால் தேசப்பற்று உள்ளதென்று அர்த்தமில்லை. தேசியக்கொடியை ஏற்றி தான் ஒருவர் தன் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. தேசியக்கொடியை ஏற்றாதவர்கள் எல்லாம் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் அர்த்தம் இல்லை.

இயற்கையாக தோன்றும் ஓர் உணர்வை திணிக்க முயற்சித்தால் அதற்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவது மனித இயல்பு. உண்மையிலேயே தேசப்பற்று இருந்தாலும், தேசியக்கொடியை ஏற்றும் எண்ணம் இருந்தாலும், அதனை கட்டாயம் செய்ய வேண்டும் அரசு கூறினால் அதனை தவிர்க்கவே தோன்றும். அப்படியான ஓர் சூழலை தான் பாஜக அரசு இன்று உருவாக்கி வருகிறது.

தேசப்பற்று என்பது தேசியக்கொடியில் அடங்கி விடுவதில்லை. அதை வெளிப்படுத்தி தான் ஒருவர் தனது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், தேசியக்கொடியை ஏற்றாதவர்கள் தேசத்துரோகிகள் என்பது போது பாஜகவினர் சித்தரிக்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களை நோக்கி இந்த நிர்பந்தம் உருவாக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என்று உத்திரப்பிரதேசத்தில் பகிரங்கமாகவே மிரட்டுகின்றனர். தேசப்பற்றை தேசியக்கொடியில் சுருக்கியது தான் பாஜகவின் சாதனை.

- மே பதினேழு இயக்கம்