 |
(மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று தளமேற்றப்படுகிறது. மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])
புதிய தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?
குமாரசாமி, ஈரோடு
ஒரு மாதம் கூட ஆவதற்குள் மதிப்பிடுவது முறையல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றும் பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது நிச்சயம் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் அவற்றுக்கு எதிராக எழுப்பப்படக்கூடிய சட்டச் சிக்கல்களை மீறி அவற்றை செயல்படுத்தும் பிடிவாதம் கருணாநிதிக்கு கடந்த காலத்தில் இருந்ததில்லை. இந்த முறை என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். மற்றபடி ஜெயலலிதா மீது கொண்டிருக்கிற தனிப்பட்ட விரோத மனப்பான்மை குறைந்ததாகத் தெரியவில்லை. மறுபடியும் கண்ணகி சிலையை நிறுவுவது போன்ற அர்த்தமற்ற அசட்டுத்தனங்களிலிருந்து கருணாநிதி வெளிவரவும் இல்லை.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா எப்படி?
கமலக்கண்ணன் தஞ்சாவூர்
ஒரு நல்ல சீன் முழுப் படமாகிவிடாது. தொடர்ந்து சட்டமன்றத்துக்குச் சென்று ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்று தன்னை பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக வடிவமைத்துக் கொள்ள அவருக்கு இது நல்ல வாய்ப்பு.
அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கருணாநிதியை சட்டசபையில் தாக்க முயற்சித்தார்களா?
கேசவன், ராமநாதபுரம்
இதுவரை அதற்கான சாட்சியம் எதுவும் இல்லை. சட்டமன்ற நிகழ்ச்சிகளை எல்லா தமிழ் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்போது யாரும் எதையும் மறைத்தும் திரித்தும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அவர் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.ராதா என்ற உறுப்பினர் வேட்டியை தூக்கிக் காட்டியதாக செய்தி பரப்பப்பட்டு இன்று வரை இந்தியா முழுவதும் அருண் ஷோரி போன்றோர் அதை பல முறை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் ராதா அப்படி எதுவும் செய்யவில்லை என்பது அன்று சபைக்குச் சென்ற பல பத்திரிகையாளர்களின் கருத்து. ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், தினமணி நிருபர் இருவரும் அன்றைய தினம் அலுவலகத்தில் அளித்த செய்தி அறிக்கைகள் வெவ்வேறாக இருந்தன. சட்டமன்ற, மக்களவைக் கூட்டங்களின் ஒளிபரப்பு நேரடியாகத் தணிக்கை இன்றி செய்யப்பட்டாக வேண்டும். அதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பது வேதனைக்குரியது.
தேர்தலில் போட்டியிட்ட மூன்று தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும்தானே ஜெயித்திருக்கிறார்?
கமலேஷ் குமார், மின்னஞ்சல்
ஜெயித்திருக்கும் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, பாலபாரதி ஆகியோரையெல்லாம் எழுத்தாளர்களாக நீங்கள் கணக்கில் எடுக்கவில்லையா? சு.வெங்கடேசன், சல்மா, ரவிக்குமார் மட்டும்தான் எழுத்தாளர்களா? டாக்டர்கள், எஞ்சினியர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் என்று பல தரப்பினரும் போட்டியிட்டு ஜெயிப்பது போல எழுத்தாளர்களும் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ அடைகிறார்கள். தேர்தல் வெற்றி தோல்வி என்பது தொழிலின் அடிப்படையிலானது அல்ல. சார்ந்திருக்கும் அரசியலை, கட்சியை, கூட்டணியைச் சார்ந்தது. அந்த விதத்தில் ரவிக்குமாரின் வெற்றி முக்கியமானது. அவர் சார்ந்திருந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்காத போதும், அவர் ஜெயித்திருக்கிறார்.
சல்மாவும் வெங்கடேசனும் சார்ந்திருந்த கூட்டணி ஆட்சியைப் பிடித்த போதும், தோற்றிருக்கிறார்கள். அவர்களுடைய தோல்வி பற்றி வருத்தமோ, ரவிக்குமாரின் வெற்றி பற்றி மகிழ்ச்சியோ எதுவும் எனக்கு இல்லை. சல்மா ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு முகம் காட்டி வருபவர். தேர்தல், அரசியல் உலகத்தில் பர்தாவும் கவிதை- கருத்தரங்க உலகத்தில் சுடிதாரும் போட்டுக் கொண்டு வேஷம் கட்டுபவர் சல்மா. வெங்கடேசன் கட்சிக்குத் தாலி கட்டியிருப்பதால், ஆத்தாவுக்கு கடா வெட்டுவதையும், தீக்கதிர் தீபாவளி மலர் வெளியிடுவதையும் மார்க்சியப் பகுத்தறிவுக்கு முரண்பாடானதாகப் பார்க்க முடியாதவர். ரவிக்குமாரின் பெரியார் பற்றிய கருத்துகள் எனக்கு உடன்பாடில்லாதவை. சட்டசபை அரசியலில் ரவிக்குமாரானாலும் சரி, விஜய்காந்த்தானாலும் சரி, எப்படி செயல்படுகிறார்கள், எந்தெந்தப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் அவர்களை மதிப்பிட வேண்டும். பொதுவாக சட்டமன்றத்துக்குள்ளே நிலவும் தி.மு.க- அ.இ.அ.தி.மு.க பெருவிரோதச் சூழலில் மற்றவர்கள் சிறு சலனங்களைத்தான் ஏற்படுத்த முடியும். அதுவே பெரிய விஷயம்தான். வரப் போகும் நாட்களில் இன்னும் அதிகமாகவே மாறுபட்ட கருத்துக்கள் உள்ள எழுத்தாளர்கள் பலரும் பாராளுமன்ற அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதே மனிதன் கருத்து.
ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று சொல்லும் நீங்கள், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மருத்துவ மாணவர்கள் டாக்டர்கள் போராட்டத்தை ஆதரிப்பதுதானே நியாயம்?
அருணகிரி ராமநாதன், மின்னஞ்சல்
இட ஒதுக்கீடு கோட்பாடு ஜாதி ஒழிப்புக்கான வழிமுறையும் அல்ல. ஜாதியை நீடிப்பதற்கான வழியும் அல்ல. ஜாதி அடிப்படையில் சமூகத்தில் இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடு. எனவே ஜாதி ஒழிப்பாளர்கள் அதை எதிர்க்க வேண்டியதில்லை.
போராட்டம் நடத்திய டெல்லி மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் ஜாதி ஒழிப்பாளர்கள் அல்ல. இட ஒதுக்கீடு வந்துவிட்டால் தாங்களெல்லாம் செருப்பு தைக்கவும் ஷ¥ பாலீஷ் போடவும் மாடு மேய்க்கவும் போக வேண்டி வரும் என்று கோபமாகவும் கிண்டலாகவும் சொன்னார்கள். அதாவது அந்த வேலைகளுக்கு ஏற்கனவே இவர்கள் இட ஒதுக்கீடு அளித்துவிட்டார்கள். அதைச் செய்பவர்கள் அதையே செய்து கொண்டிருக்கட்டும் என்ற மேல் சாதி மனப்பான்மை அருவெறுப்பாக இருக்கிறது.
அதே போல ஏழை- பணக்காரன் வாதத்தைக் காட்டி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் தந்திரமானது. இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.
இட ஒதுக்கீட்டில் ஜாதி கூடாது என்று சொல்லும் டெல்லி டாக்டர்களும், வட இந்திய ஆங்கில டி.வி சேனல்களும் கீழ்க் கண்ட கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
1. இந்த டாக்டர்களும் மானவர்களும் சேனல் தயாரிப்பாலர்களும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஏன் ஜாதிப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
2. டைம்ஸ் நவ் சேனலை நடத்தும் டைம்ஸ் ஆ•ப் இந்தியா பத்திரிகை இனி, ஜாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்களை வெளியிடாது என்று அறிவிக்குமா?
3. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்களும் மாணவர்களும் இனி தங்கள் வீட்டில், ஜாதி பார்த்து எந்தத் திருமணமும் செய்யப் போவதில்லை என்று உத்தரவாதம் தருவார்களா? அப்படி ஜாதிக்குள்ளேயே திருமணம் நடந்தால், தங்கள் டிகிரி, வேலை எல்லாவற்றையும் துறப்பார்களா?
எனவே ஜாதியை ஒழிப்பதற்கு வழி ஜாதிக்குள் திருமணம் செய்வதை ஒழிப்பதுதான். ஜாதி ஏற்றத் தாழ்வை தணிப்பதற்குத்தான் இட ஒதுக்கீடு.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சொல்லியிருக்கிறாரே?
கிருஷ்ணகுமார், மின்னஞ்சல்
சொல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வருபவர்தான் அவர். பணக்கார- உயர் ஜாதியினர், பணக்காரர்களாகிட்டதால், உயர் ஜாதிகளாகிவிடத் துடிக்கும் இதர ஜாதியினருக்கான குருஜி அவர். இன்று நாடு முழுவதும் இப்படிப் பெருகி வரும் குருஜிகள் எல்லாருமே பணக்காரர்களின் 'மனசாட்சியின் உறுத்தல்களுக்கு' ஒத்தடம் கொடுக்கும் வியாபாரத்திலும், பணக்காரர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்தைத் திசை திருப்பும் அரசியலிலும்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். வாராவாரம் ஆனந்த விகடனில் அருள் வாக்கு சொல்லி வரும் (திருமாவளவனின் ஞானத் தந்தை) ஜக்கி வாசுதேவிடம் ஒரு நேயர் கேட்கிறார். திரைப்பட உதவி இயக்குநராக வேலை பார்க்கும் என்னைப் பிரபல இயக்குநர்கள் உட்பட பலர் கடுமையாக வேலை வாங்கிக் கொண்டு சம்பளம் தராமல் ஏய்க்கிறார்கள், என்ன செய்யட்டும் என்று கேட்கிரார். ஜக்கியின் பதில் என்ன தெரியுமா? அதே இயக்குநர்களை நல்லவர்கள் என்று மதிப்பவர்களும் இருக்கிறார்கள் அல்லவா. எனவே அவர்கள் மோசமானவர்கள் என்பது அவர்களுடைய தன்மை அல்ல. அவர்களைப் பார்க்கும் உன்னுடைய தன்மை. அதைத்தான் நீ மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஜக்கி. யோகாசனம், மூச்சுப்பயிற்சிகளுக்கும் இவர்களுடைய தத்துவங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. சினிமாக்காரர்கள் இசையை குத்தாட்டத்துக்கும் மதவாதிகள் பஜனைக்கும் தேவ சங்கீதத்துக்கும் பயன்படுத்துவது போல யோகாசனத்தை இந்த குருஜிகள் தங்கள் விஷக் கருத்துக்களை விதைக்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளில் கள்ளுக்கடைகளை திறப்பதாக வாக்குறுதி எதுவும் தராத பெரிய கட்சிகள், வெளி நாட்டு மது வகை வியாபாரத்தை மட்டும் அரசின் மூலம் நடத்துவது ஏன்?
சத்தி, மின்னஞ்சல்
ஏழைகளுக்குத்தான் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி என்ற போதை தரப்படுகிறதே? அரசின் மதுக் கொள்கை எப்போதுமே சர்ச்சைக்குரியது. மது மட்டுமல்ல, கல்வி முதல் எல்லா துறைகளிலும் அரசின் கொள்கைகள் பணக்காரர்கள் சார்ந்தவைதான்.
ஜயேந்திரர் வழக்கு இனி என்ன ஆகும்?
நடேசன், மின்னஞ்சல்
நீங்கள் சங்கராச்சாரியைக் கைது செய்திருப்பீர்களா என்று கேட்டபோது நான் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த சம்பவமே ( கொலை நிகழ்ச்சியே) நடந்திராது என்று கருணாநிதி, சங்கராச்சாரி கைது சமயத்தில் சொன்னார். இப்போது அவருடைய அமைச்சர் கோ.சி.மணி குடந்தையில் ஜயேந்திரரை மடத்துக்குச் சென்று சந்தித்தது பகிரங்கமானவுடன் அது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கருணாநிதி சொன்னார். இதுவரை விளக்கம் என்னவென்று தெரியவில்லை. திரை மறைவு நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஆட்சிக்கு சளைத்தவர் அல்ல கருணாநிதி.
பிரமோத் மகாஜனின் மகன் ராகுலும், மகாஜனின் செயலாளர் விவேக்கும் போதைப்பொருள் பயன்படுத்தியது ஏன்?
கிருஷ்ணா யோகேந்திரன், மின்னஞ்சல்.
அரசியல் முதல் மருத்துவம், சட்டம், தொழில் என்று எல்லா துறைகளிலும், அப்பா-அம்மா பணம் சேர்ப்பதும், வாரிசுகள் அவற்றை ஊதாரித்தனமாக அழிப்பதும் அதிகரித்து வருகிறது. பணம் சேர்ப்பதில் குறியாக இருக்கும் பல பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் சரியான உறவு இல்லை. குழந்தைகளுக் தாராளமாக பணத்தை அள்ளி வழங்குவது, அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது என்று இரு எதிரெதிர் நிலைகளில் இந்தப் பெற்றோர்கள் செயல்படுகிறார்கள். வாழ்க்கை பற்றிய எந்த ஒழுக்க விதியும் இல்லாமல் வளர்ந்தால் இப்படித்தான் ஆகும். ஒரு சில வாரிசுகள் கொஞ்ச காலத்துக்குப் பிறகு திருந்தி தாங்களும் பெற்றோரின் தொழிலுக்கே - அரசியல், மருத்துவம், சட்டம் , தொழில் - வந்து விடுகிறார்கள். அப்போதுதான் டிஸ்கோ நடத்தியவர் அமைச்சராகி விடுகிறார். போதை மருந்து உபயோகித்தவர் மருத்துவராகி விடுகிறார். ஓவர் ஸ்பீடிங்கில் ஆள் மீது ஏற்றிக் கொன்ற நீதிபதியின் மகன், திருந்தி வக்கீலாகிவிடுகிறார். ராகுல் மகாஜன் அப்படி திருந்தி அரசியலுக்குள் நுழைய இருந்த சமயத்தில் இப்படி ஆகிவிட்டதாக செய்திகள் சித்திரிக்கின்றன.
இந்த மாதத்தின் முக்கிய செய்தி என்ன?
கருணாகரன், மின்னஞ்சல்
நேபாள நாடு இந்து மன்னராட்சியிலிருந்து வெளியேறி முதல் கட்டமாக தன்னை மதச் சார்பற்ற அரசாக அறிவித்துக் கொண்டதுதான்.
கடவுளை நம்புகிறவன், கும்பிடுகிறவன், காட்டுமிராண்டி என்று சொன்னவர் பெரியார். அப்புறம் கோவில் அர்ச்சகர்களில் எல்லா சாதியினரும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டது ஏன்? இது முரண்பாடாகவும் போலித்தனமாகவும் இல்லையா?
சாம்பமூர்த்தி.எஸ். மின்னஞ்சல்
எல்லா சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கோருவது சமத்துவம் சம்பந்தப்பட்டது. மனித உரிமை சம்பந்தப்பட்டது. சாதியின் அடிப்படையில் ஒருவரை வீட்டுக்குள், தெருவில், சந்தையில், அலுவலகத்தில், கோவிலில் என்று எந்த இடத்தில் வைத்து ஏற்றத்தாழ்வுடன் நடத்தினாலும், அது மனித உரிமைக்கு விரோதமானது. எனவே கோவிலிலும் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் கோரிக்கைக்குக் காரணம். அதுவே அவரது நோக்கம். யாருமே கடவுளைக் கும்பிடத் தேவையில்லை என்பது அவர் பிரசாரம் செய்த இன்னொரு கோட்பாடான நாத்திகம். மனித சமத்துவத்துக்கும் நாத்திகத்துக்கும் எந்த முரண்பாடும் இல்லை.
லோக் பரித்ரான் என்ற அமைப்புக்கு மின்னஞ்சல்கள் வாயிலாக வாக்குகள் திரட்டப்பட்டன. சென்னையில் அது கணிசமான வாக்குகள் வாங்கியதாவும் தெரிகிரது. அந்த அமைப்பின் இந்துத்துவா, மொழிக் கொள்கைகள் என்ன?
தமிழ்ச் செல்வம், மதுரை
வட இந்திய ஐ.ஐ.டி மாணவர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு லோக் பரித்ரான். அண்ணா நகர் தொகுதியில் பத்தாயிரத்துக்கும் மேல் ஒட்டு வாங்கினார்கள். மயிலாப்பூரிலும் கணிசமான வாக்குகள் கிடைத்தன. தேர்தல் முடிவு வந்த சில தினங்களிலேயே அந்த அமைப்பின் தமிழகப் பிரிவு உடைந்துவிட்டது. அமைப்புக்குள் ஜன நாயகம் இல்லையென்றும், உயர் சாதி ஆதிக்கம் உள்ளதாகவும், கனக்குகள் சரியாக காட்டப்படவில்லையென்றும் அண்ணா நகர் வேட்பாளர் ராஜாமணி என்பவர் குற்றம் சாட்டினார். இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. தமிழ் நாட்டில் தமிழ்ப் பெயரில் கட்சியை சொல்ல முடியாதவர்களின் மொழிக் கொள்கை என்னவாக இருக்க முடியும்? இப்போதைக்கு லோக் பரித்ரான் ஆர்வக் கோளாறான மேல்தட்டு இளைஞர்கள் சிலரின் முயற்சியாக மட்டுமே தெரிகிறது. தொடர்ந்து செயல்பட்டால்தான் அதன் சித்தாந்தம் என்ன என்பதை அறியமுடியும்.
தங்களது கேள்விகளை மனிதனுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
|