 |
ஞாநி
3. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்?!
தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்னவெல்லாம் நடக்கும் என்று ‘ஓ... பக்கங்கள்!’ ஏற்கெனவே சொன்னது போலவே தேர்தலுக்குப் பின்னும் நடந்து கொண்டு இருக்கிறது.
தோற்ற கட்சி - மன்னிக்கவும்... அரசியல் இலக்கணங்களின்படி ‘வெற்றி வாய்ப்பை இழந்த’ கட்சி, ஓட்டு எண்ணிக்கை, ஓட்டு சதவிகிதங்கள் பற்றி பேசுகிறது.
கூட்டணி அரசியலில், அசலாக எந்தக் கட்சிக்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு என்பதை ஓட்டு எண்ணிக்கை, சதவிகிதங்களிலிருந்து துல்லியமாகச் சொல்லவே முடியாது.
ஜெயலலிதா வெளியிட்ட கணக்கின் படி, தி.மு.க. போட்டியிட்ட 132 தொகுதிகளில் அது பெற்ற வாக்குகளைக் கூட்டிக் கணக்கிட்டு, 234 தொகுதிகளிலும் பதிவான மொத்த வாக்குகளில் அது எத்தனை சதவிகிதம் என்று சொல்லப்பட்டது. அதே போல, அ.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற வாக்குகளுக்கும் சதவிகிதம் கணக்கிடப்பட்டது. அதன்படி, தி.மு.க. 2001-ல் தோற்ற தேர்தலைவிட, இப்போது ஜெயித்த தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அ.தி.மு.க-வோ 2001-ல் ஜெயித்த தேர்தலைவிட இப்போது தோற்ற போதிலும் அதிக வாக்குகள் வாங்கி விட்டதாகவும் காட்டப்பட்டது. இந்த ஒப்பீடே தவறானது. காரணம், போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை இரு கட்சிகளுக்கும் சமமல்ல!
ஓரளவு நியாயமான ஒப்பீடு செய்வது என்றால், போட்டியிட்ட 132 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகள், அதில் தி.மு.க. பெற்ற சதவிகிதம், இதே போல அ.தி.மு.க. போட்டியிட்ட 188 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் அது பெற்ற சதவிகிதம் என்று கணக்கிடலாம். வாக்காளர் விழிப்பு உணர்வு - தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பிரசாரகரான முன்னாள் அரசு உயர் அதிகாரி அ.கி.வேங்கடசுப்ரமணியன், இந்தக் கணக்குகளெல்லாம்கூட தவறு என்பார். பதிவான வாக்கு அடிப்படையில் சதவிகிதம் பார்க்கக் கூடாது; மொத்த வாக்காளர் எண்ணிக்கையில்தான் பார்க்க வேண்டும் என்பார்.
அதன்படி பார்த்தால், நம் நாட்டில் எல்லா ஆட்சிகளுமே மைனாரிட்டி ஆட்சிகள்தான். இந்தத் தேர்தலில்கூட புதிய முதலமைச்சரை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெறவைத்த வாக்காளர் எண்ணிக்கை 34,184. அந்தத் தொகுதியில் ஓட்டு போடவே வராதவர்கள் 38,185 பேர்.
வாக்கு சதவிகிதக் கணக்குகளில் ஓரளவு நியாயமான அடிப்படை, இப்போதைக்கு இரு கூட்டணிகளின் வாக்கு சதவிகிதத்தை ஒப்பிடுவது தான். ஏனென்றால், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும், ஒரு கட்சிக்கு அதன் தோழமைக் கட்சிகளின் வாக்குகளும் கலந்தேதான் விழுந்திருக்கும் என்பதால், அந்த வாக்குகளை தனிக் கட்சியின் வாக்குகளாகக் கருத முடியாது. இதன்படி, தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளில் தி.மு.க. கூட்டணிக்கு 44.73 சதவிகிதமும், அ.தி.முக. கூட்டணிக்கு 40.06 சதவிகிதமும் கிடைத் திருக்கின்றன. அ.கி.வே. •பார்முலாபடி, ஒட்டுமொத்த வாக்குகளில் இது 31.5 சதவிகிதமும், 28 சதவிகிதமும்தான்!
விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருக்குமானால், தி.மு.க. கூட்டணிக்கு 105 இடங்களும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 94 இடங்களும் தரப்பட வேண்டும். ஆனால், இப்போதைய தேர்தல் முறையில் இருவருக்கும் கிடைத்தது முறையே 163, 69.
ஒரு கட்சியின் அசல் பலம் என்ன என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தத் தேர்தலில் கிடைத்தது விஜயகாந்த்தின் தே.மு.தி.க-வுக்கு மட்டும்தான். தனித்தே போட்டி யிட்ட இந்தக் கட்சிக்கு, பதிவான வாக்குகளில் 8.38 சதவிகிதம் கிடைத்துள்ளது. வி.பி. முறைப்படி இந்தக் கட்சிக்குத் தரப்பட வேண்டிய இடங்கள் 20. இப்போதைய முறையில் கிடைத்ததோ ஒன்றே ஒன்று.
இப்போதைய தேர்தல் முறையால், ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு கட்சிகள் லாபமோ நஷ்டமோ மாறி மாறி அடைவதையே இந்தத் தேர்தலும் காட்டியிருக்கிறது. வி.பி. தேர்தல் முறையை நோக்கி நமது அரசியல் போயே தீர வேண்டிய கட்டாயம் அடுத்த பத்தாண்டுகளில் அதிகமாகிவிடும். தோல்விக்காகத் துவள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. இல்லை என்பதையும், வெற்றியில் பெருமகிழ்ச்சி அடையும் நிலையில் தி.மு.க. இல்லை என்பதையும், இரு கழகங்களுமே பயப்படும் நிலையை விஜயகாந்த் ஏற்படுத்தியிருப்பதையும் எல்லா தேர்தல் ஆய்வுகளும் சுட்டிக்காட்டிவிட்டன.
விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம் என்ன?
அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்திருந்தால், தேர்தல் முடிவுகள் மாறியிருக்கலாம் என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்தக் கணக்கும் சரியில்லை. இரு கழகங்களுடன் பேரம் பேசினால், விஜயகாந்த் இப்போதைய £ரோ நிலையிலிருந்து ஜீரோ நிலைக்குப் போய்விடுவார் என்பது என் கணிப்பு. காரணம், தி.மு.க, அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் எதிரான மனநிலை உள்ளவர்களின் ஓட்டுகளை அவர் இழந்திருப்பார்.
தி.மு.க, அ.தி.மு.க. இரண்டின் வெற்றி வாய்ப்பைப் பல தொகுதிகளில் விஜயகாந்த் கட்சி பாதித்திருந்தாலும், தி.மு.க, அ.தி.மு.க. ஆதரவு ஓட்டுகளிலிருந்து பிரித்துத் தனதாக்கிக் கொண்டது மிகக் குறைவு என்பதே என் கணிப்பு. அப்படியானால், விஜயகாந்த்துக்கு வந்த ஓட்டுகள்..? தி.மு.க, அ.தி.மு.க. மீதான வெறுப்பால் வழக்கமாக ஓட்டு போடாமல் ஒதுங்கியிருந்த பலர் ஓட்டு போட்டார்கள். புதிய வாக்காளர்களின் ஓட்டுகளும் அவருக்குக் கிடைத்தன. அதனால்தான், வழக்கமான வாக்குப் பதிவைவிட இம்முறை பத்து சதவிகிதம் அதிகமாக இருந்தது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்த் கட்சியால் முடியும் என்பது என் கணிப்பு. (2011-ன் கிரக நிலை விஜயகாந்த்தின் ராசி எண் ஐந்துக்குச் சாதகமாக இருக்கலாம் என்கிற ஜோசிய சமாசாரங்களெல்லாம் அல்ல!) எனினும், அதற்குப் பல வீயீs ணீஸீபீ தீuts உள்ளன.
முதலில் வீயீs:
வீயீ-1: தொடர்ந்து இரு கழகங்களுடனும் உறவு வைக்காமல் தனித்தன்மையை விஜயகாந்த் தக்கவைத்துக் கொண்டால்.
வீயீ--2: அக்டோபரில் நடத்தியே தீர வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுக் கணிசமான பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகளை வசப்படுத்தினால்.
வீயீ--3: இந்தக் கூடுதல் பலத்தின் அடிப்படையில், 2009 மக்களவைத் தேர்தலில் தன்னுடன் கூட்டு சேர்வதற்குக் காங்கிரஸையும் இடதுசாரிகளையும் தூண்டி, தி.மு.க. கூட்டணியிலிருந்து பிரிக்க முடிந்தால்.
வீயீ--4: காங்கிரஸ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இன்னொரு தேசிய கட்சியான பி.ஜே.பி-யுடனாவது சேருவோம் என்று ஆசைப்பட்டு, இப்போதுள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளை நழுவவிடாமல் இருந்தால்...
இனி, தீuts:
தீut-1: பலவீனம் அடைந்துள்ள தி.மு.க, தனக்கே உரிய சுதாரிப்புடன் சமாளித்துக்கொண்டு, உள்கட்சி அதிகாரப் போட்டிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால்...
தீut-2: கம்யூனிஸ்டுகள் வளர்வதைவிட தி.மு.க. வளர்வது மேல் என்று 1950 -களில் காங்கிரஸ¤ம் ராஜாஜியும் ஆச்சர்யகரமாகக் கருதியதைப்போல, விஜயகாந்த்துக்கு எதிராக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சமரசத்துக்கு(!) வந்தால்.
தீut-3: ஏதாவது ஒரு விதத்தில் அதிகாரத்தில் பங்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், புதிதாக விஜயகாந்த் கட்சிக்கு வந்திருப்போரை அரசியல் ரீதியாகச் சமாளிக்க விஜயகாந்த்தால் முடியாமல் போனால்...
- மேற்படி ஒரு நபர் கருத்துக் கணிப்பின் ரிசல்ட்டை 2011 (அநேகமாக மே மாதம்) ஆனந்த விகடனில் தவறாமல் காண்க!
(ஆனந்தவிகடன் - 28-5-2006)
|