Keetru Dalithmurasu
Dalithmurasu
ஆகஸ்ட் 2007

சமுகத்தின் பொறுப்பற்ற தன்மைதான் கொலைகள் அதிகரிப்பதற்குக் காரணம்
“மோதல் படுகொலை” எதிர்ப்புக் கருத்தரங்கம்



தமிழகத்தில் தற்போது "நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை' என்ற பெயரில் காவல் துறையினர் பெரும் பரபரப்பை உருவாக்கி, மக்களை பீதியூட்டி வருகின்றனர். இதன் இறுதியில் யாரையோ மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொலை செய்யப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில்தான் 21.7.07 அன்று சென்னையில் போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்த - போலி மோதல் படுகொலை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச். சுரேஷ், பொ. ரத்தினம், அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், பிரபஞ்சன், சரஸ்வதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

அ. மார்க்ஸ் : ""இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனைத்திலும், அரசாங்கங்களே முன்னின்று சட்டவிரோதமான கொலைப் படைகளை நடத்துகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்டவிரோதக் கொலைகளைச் செய்கிறது. போராட்டப் பகுதிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும்இழுத்துச் செல்லவும், காணாமல் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும், அதிகாரம் படைத்ததாக அரசும், காவல் துறையும் மாறிவிட்டன. நெருக்கடி நிலையில் மக்களுக்கு உயிரை காப்பாற்றிக் கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறியதையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட முடியாது. 1996 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத் துறை, உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984-85 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவதும் இது நடந்துள்ளது. காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துகளையும் போலிசார் சூறையாடினர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி, குடும்பத்தாரிடம் பெரும் தொகைகள் பறிக்கப்பட்டன.''

பிரபஞ்சன் : ""ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்வது குற்றம் என்றால், அதை "அரசாங்கம் செய்தாலும் குற்றம்தான். இன்று ஊடகங்களில், கொலை செய்யப்படுவதை ஆதரிப்பதாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன. "வேட்டையாடு விளையாடு' என்றொரு படம். வேட்டையாடு என்றால் சுட்டுவிடு என்று அர்த்தம். இப்படத்தின் ஒரு பாடலில் ஏறக்குறைய 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

திருச்சி அருகே நடந்த உண்மை சம்பவம் ஒன்று. சந்தேக வழக்கில் செருப்பு தைக்கும் தொழிலாளியை போலிசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தன் கணவனைக் காண காவல் நிலையம் சென்ற மனைவி, காவல் ஆய்வாளரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். இந்தப் பாதிப்பினால் சுயநினைவு திரும்பாமல் 4 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அதற்குப் பிறகுதான் அவருக்கு தான் கருவுற்றிருப்பது தெரிகிறது. குழந்தை பிறந்து, 5 ஆண்டுகள் கழித்து பத்திரிகையாளர்கள் அந்தத் தொழிலாளியிடமும், மனைவியிடமும், ""நீங்கள் இந்தக் குழந்தையை மனப்பூர்வமாக ஏற்று வளர்க்கிறீர்களா?'' என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ""யாரோ ஒருவர் செய்த பாவத்துக்கு இந்த குழந்தை என்னங்க செய்யும். குழந்தை குழந்தைதானே'' என்று பதில் சொல்லியுள்ளனர். இத்தகைய போலிசார்களைத்தான் "மக்களின் நண்பர்கள்' என்று சொல்கிறது அரசாங்கம். நண்பர்கள் என்றால் மனிதர்களாக இருக்க வேண்டும். போலிசார் மனிதர்களாக ஆகாத வரை அவர் களை நண்பர்களாக ஏற்க இயலாது.''

கோ. சுகுமாரன் : ""இந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் போடப்படுகின்ற முதல் தகவல் அறிக்கை அனைத்தும், ஒரே மாதிரியாக இருப்பது ஏன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை நோக்கி இந்த மோதல் ஏவப்படுகின்றது. இதன் பின்னணியைப் பார்த்தால், மிகவும் ஆச்சரியம் வரும். தொடக்கத்தில் தமிழ் நாடு மற்றும் இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, விசாரணை என்ற பெயரில் அவர்களுடைய வீடுகளில் இருந்தோ, தெருக்களில் இருந்தோ அழைத்துச் சென்று "மோதலில் கொல்லப்பட்டார்கள்' என்று சொல்லி கொலை செய்வது நடந்தது. ஆனால், இன்று குஜராத்திலும், மும்பையிலும் “தாதா”க்களை கொல்கிறோம் என்ற பெயரில், ஒரு “தாதா” குழுவிடம் பணம் பெற்றுக் கொண்டு இன்னொரு “தாதா” குழுவில் உள்ளவர்களை சுட்டுக்கொன்று பெரும் பணக்காரர்களாக, கோடீஸ்வரர்களாக போலிஸ்காரர்கள் ஆகியுள்ளனர் என்ற செய்திகளெல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்குகளை, இப்போது நடத்த வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தமிழ் நாட்டில் 1996 முதல் 2007 வரை ஏறத்தாழ 27 பேர் "போலிமோதல்' என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போதுள்ள தி.மு.க. அரசு 2006 இல் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அளவில் நக்சல்பாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக போலி மோதல் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதுபோல், தமிழகத்தில் காவல் துறையினர் சாதி அடிப்படையில் போலி மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முன்பெல்லாம் என்கவுண்டர் நடந்து முடிந்த பிறகுதான் நமக்குத் தெரியும், பத்திரிகைகளில் செய்தி வரும். ஆனால், இப்போதெல்லாம் அடுத்து யாரை கொலை செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் - வெளியிலே தெரிகிற அளவிற்கு மிக மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த அளவிற்கு என்கவுன்டருக்கு ஆதரவான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன. இப்படியாக, அடுத்து யாரை கொல்லப் போகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற அளவிற்கு, மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவர் கைது செய்யப்பட்டால், அவருடைய பாதுகாப்பை உறுதி செய்வது நீதிமன்றம்தான். அதனால்தான் கைது செய்யப்பட்டவரை போலிசாரே வைத்துக் கொள்ளாமல், நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் நீதிமன்றக் காவலில் உள்ளபோதுதான் போலிமோதல் என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது குறித்து நீதித்துறை கொஞ்சமும் அக்கறை செலுத்துவதில்லை. நீதித்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்தும் நாம் பேச வேண்டும்.''

சரஸ்வதி : ""இத்தனையாண்டு கால சுதந்திரம் நமக்கு எதைத் தந்திருக்கிறது என்று சொன்னால், அனைவரும் மறுப்பில்லாமல் ஒரே குரலில் சொல்வீர்கள், போலிசார் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சுட்டுக் கொல்வதற்கு உரிய ஜனநாயகத்தை தந்திருக்கிறது. அரசாங்கத்திற்கு தொல்லை தருபவர்களாக இருப்பதாக நினைப்பவர்களை சுட்டுக் கொலை செய்வதுதான் - இன்றைக்கு போலிசாரின் பணியாக இருக்கிறது. போலிசாரின் இந்த "போலி மோதல்' என்கிற படுகொலையின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு, "சிவில் சொசைட்டி' என்கிற இந்தக் குடிமைச் சமுதாயத்தின் மெத்தனப் போக்குதான் காரணம்.''

எச். சுரேஷ் : ""இதே சூலை மாதம் 11 ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு, மும்பையில் ரமாபாய் குடியிருப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருப்பதை அறிந்த ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சிலையருகில் கூடுகிறார்கள். அங்கு வந்த மும்பை போலிசார் கண்மூடித்தனமாக சுட்டு, 10 தலித்துகளை கொலை செய்தனர். வேறு வழியில்லாமல் அரசாங்கம் அந்த போலிசார் மீது வழக்குப் பதிவு செய்தது. இத்துடன் பத்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை, அந்த வழக்கு விசாரணைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

போலி மோதலுக்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை. ஆனாலும் காவல் துறை, மோதல் கொலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் தன்னைப் பாதுகாப்பதற்காக கொலை செய்யலாம் என ஒரு பிரிவு உள்ளது. அப்படி செய்தாலும் கூட அது சரியா, தவறா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். தற்போது போலிசாரிடமிருந்த விசாரணைத் திறமைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. அவர்களுக்குத் தெரிந்த ஒரே விசாரணை சித்திரவதைதான். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை ஒழித்து விடுகின்றனர். போலிசாரின் இந்த மோதல் படுகொலைகள் அதிகமாகி வருவதற்கு முக்கிய காரணம், சட்டத்தின் ஆட்சியை போலிசார் நடைமுறைப்படுத்துவதில்லை. மாறாக, தாங்கள் செய்கிற தவறுகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள்.''

கருத்தரங்கில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : ""தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் இதுவரை நடந்த போலி மோதல் கொலைகளில் தொடர்புடைய காவல் துறையினர் அனைவர் மீதும் - உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போலி மோதல் கொலையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்ட பதவி உயர்வு, வெகுமதி போன்றவற்றை உடனே திரும்பப் பெற வேண்டும். போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். போலி மோதல் கொலையைத் தடுக்க, அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து மனித உரிமைகளைக் காத்திட வேண்டும்.''


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com