 |
ஞாநி
'கோரம்’ இல்லாத கோரம்!
ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு முக்கியமான பொன்விழா, அதிகமான மக்கள் கவனம் பெறாமலும், சர்ச்சைகள் எழாமலும் முடிந்துவிட்டது. அது, இந்திய ஜனநாயகத்தின் நாடாளுமன்ற அரசியலின் பொன்விழா!
சுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபாவும், தமிழ் நாட்டுச் சட்டப்பேரவையும் 1952 ல்தான் முதலில் கூடின. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்றங்கள் இருந்தன. ஆனால், அப்போது எல்லா மக்களுக்கும் வாக்குரிமை இல்லை. சாதி, மதம், ஏழை, பணக்காரர், ஆண், பெண் என எந்த வித்தியாசமும் இல்லாமல், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு, அதன் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைப்புகள் 1952ன் லோக்சபாவும் சட்டப்பேரவைகளும்தான்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று உற்சாகமாகப் பங்கேற்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இந்தப் பொன்விழாவை மக்கள் மத்தியில் கோலாகலமாகக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், கொண்டாடவில்லை. ஒருவேளை, கொண்டாடும் தகுதி தங்களுக்கு இல்லை என்பதால்தானோ என்னவோ, அமைதியாக இருந்துவிட்டார்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எழுச்சியுடன் வந்து தேர்தல்களில் பங்குபெற்றுத் தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் அதே எழுச்சியுடன் தங்கள் பணியைச் செய்வதில்லை. நாளுக்கு நாள் நாடாளுமன்ற அமைப்புகளில், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டின் தரம் குறைந்துகொண்டே வருகிறது.
சென்ற வாரம், மே 4-ம் நாள்... லோக் சபாவில் நடந்த இரு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு வாக்காளரின் கோபத்தையும் நிச்சயம் தூண்டக்கூடியவை.
முதல் நிகழ்ச்சி, ஒரு தனி நபர் மசோதா மீதான விவாதம் பற்றியது. இந்தியாவில் பசிக் கொடுமையை அறவே ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதற்கான இந்த மசோதா, விவாதத்துக்கு அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மொத்தம் 540 எம்.பிக்களில், சிந்தாமோகன் (காங்கிரஸ்), பத்ருஹரி (பி.ஜே.டி), ரசா சிங் ரவாத் (பி.ஜே.பி), ராஜாங்க அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ் ப்வால் (காங்கிரஸ்), நவீன் ஜிண்டால் (காங்கிரஸ்), பிரான்சிஸ் பான்தோம் (நியமன உறுப்பினர்) ஆகிய ஆறே பேர்தான் அவையில் இருந்தார்கள். பின்னர், சுஜாதா (மார்க்சிஸ்ட்), சந்திரப்பன் (கம்யூனிஸ்ட்) எர்ரமநாயுடு (தெலுங்கு தேசம்), ராஜாங்க அமைச்சர் பி.கே.ஹண்டிக் (காங்கிரஸ்), நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் உள்ளே வந்தார்கள்.
அவையை நடத்தப் போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லை என்று அறிவிக்கும் மணி அடித்ததும், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் (காங்கிரஸ்) உள்ளே ஓடி வந்தார். இவர் ராஜ்ய சபா உறுப்பினர்.
அப்படியும் மொத்தம் 12 பேர்தான். அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்து சதவிகிதமாவது இருக்க வேண்டும் என்ற விதியின்படி இன்னும் 43 பேர் தேவை. எனவே, விவாதம் தள்ளிவைக்கப்பட்டது.
இரண்டாவது நிகழ்ச்சி, அதே நாளில் நடந்தது. மத்திய அரசின் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஒவ்வொரு துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் பற்றி விவாதித்து, ஓட்டுக்கு விட்டு, அவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது விதி.
ஆனால், விவாதிக்க நேரம் இல்லை என்ற காரணம் காட்டி, விவாதமே இல்லாமல் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. எந்தெந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவாதிக்கப்படவில்லை, தெரியுமா?
ராணுவம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், வர்த்தகம், வெளி உறவு!
இவற்றுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மட்டும், மொத்த பட்ஜெட்டில் ஐந்தில் நான்கு பாகம்!
இதைப் பற்றி அதிர்ச்சி அடைய எதுவுமில்லை. ஏனென்றால், பல வருடங்களாகவே ராணுவ நிதி ஒதுக் கீட்டை நாடாளுமன்றம் விரிவாக விவாதிப்பதே இல்லை.
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மே முதல் வாரத்தில் வெளிநாடு செல்லவேண்டியிருந்ததும், இம் முறை விவாத நேரம் சுருங்கியதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இன்னொரு தேச நலன் வாய்ந்த விஷயமாகவே அவர் வெளிநாடு செல்லவேண்டியிருந்ததாக வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு தேசத்தின் பட்ஜெட் விவாதமில்லாமல் அவையால் ஏற்கப்பட வேண்டுமா என்ன? பிரதமரோ, நிதி அமைச்சகத்தின் இதர அமைச்சர்களோ விவாதத்தில் பங்கேற்கலாமே?
மே 4 அன்று, அதே நாளில் முன்னதாகக் கேள்வி நேரத்தின் போது, எழுத்துபூர்வமாகக் கேள்விகள் கொடுத்திருந்த எம்.பிக்களில் 20 பேர் அவையிலேயே இல்லை. பதில் தர அமைச்சர்கள் தயாராக வந்திருந்தார்கள் என்பது ஒரு சின்ன ஆறுதல்.
ஒவ்வொரு முறையும் தேர்தல்களை நடத்தி நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, அரசாங்கத்துக்கு ஆகும் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. 1967 ல் செலவு 1 கோடியே 79 லட்சம் ரூபாய். 71 ல் இது 11 கோடி, 84 ல் 81 கோடி ரூபாய், 91 ல் 359 கோடி ரூபாய், 98 ல் 666 கோடி, 2001ல் 1,000 கோடிகள்! இது, மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் செய்யும் செலவு மட்டுமே! கட்சிகள், வேட்பாளர்கள் செய்யும் செலவு இன்னும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள். எம்.பி-க் களுக்கு மாதச் சம்பளம், டெலிபோன், வீடு, மின்சாரக் கட்டணம், கார், விமானச் செலவு என்றெல்லாம் மாதாமாதம் அரசு செய்யும் செலவுகள் தனி!
லோக் சபா, ராஜ்ய சபா இரு அவைக் கூட்டங்களையும் நடத்துவதற்கு, 1951ல் ஒரு நிமிடத்துக்கு 100 ரூபாய் செலவு. இப்போது நிமிடத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
அவையில் கூச்சல், அமளி செய்து அவையை நடத்தவிடாமல், அவை நேரத்தை வீணாக்கும் கணக்கு என்ன தெரியுமா? தற்போதைய மக்கள் அவையின் முதல் இரு கூட்டத் தொடர்களில் மொத்த நேரத்தில் 38 சதவிகிதம் அமளியில் வீண். ராஜ்யசபையின் முதல் இரு கூட்டத் தொடர்களில் 46 சதவிகித நேரம் அமளியில் வீண். நிமிடத்துக்கு செலவு 20 ஆயிரம் ரூபாய்!
பல எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அவைக்கே செல்வதில்லை என்பது நமக்குத் தெரியும். வராந்தாவில் கையெழுத்துப் போட்டுவிட்டு, சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படிச் செய்யலாம் என்ற விதியை அவர்களே ஏற்படுத்தி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இளைஞர்கள் உள்ளே வந்தால் ஆரோக்கியமான மாற்றங்கள் வரும் என்று நம்பினோம். தற்போதைய மக்களவையில் 36 முதல் 45 வயதுக்குள் இருக்கும் மொத்த எம்.பி க்களில் (அதுதான் அரசியலில் இளமை!) கிரிமினல் வழக்குகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் மட்டும் 30 சத விகிதம். பெரிசுகளில் இது 19.3 சதவிகிதம்!
என்ன செய்யப் போகிறோம்?!
‘இதைப் பற்றியெல்லாம் உங்களால் ஒன்றும் செய்ய முடியாதா?’ என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கும் கடிதமாவது எழுதுவோமே!
நன்றி: ஆனந்த விகடன்
|