 |
ஞாநி
வேண்டும் இன்னொரு அண்ணா!
தமிழக அரசியல், விழாக்கள் நிறைந்த அரசியல்!
அரசியலில் விழாமல் இருப்பதற்கு விழாக்களைப் பயன்படுத்துவது அரசியல் யுக்திகளில் ஒன்று.
தமிழக அரசியலையே அடியோடு புரட்டிப்போட்ட தலைவரான அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகிறது. ஆனால், அண்ணா உருவாக்கிய கட்சி, அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சி இரண்டுக்குமே இன்று அண்ணாவின் பெயரைக் கொண்டா டுவதற்கான தகுதி இல்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர் அண்ணா.
பெரியார், தன் தலைமையைக் கேள்வி கேட்காமல் ஏற்பவர்களை மட்டுமே கொண்டு இயக்கம் நடத்த விரும்புவதாக அறிவித்தவர். அவரிடமிருந்து பிரிந்து வந்த அண்ணா, உட்கட்சி ஜனநாயக அமைப்புடைய கட்சியை உருவாக்கியவர். அவர் பெயரைப் பயன்படுத்தும் இரு கட்சிகளுமே ஒரு நபர் இயக்கத்தில் இயங்குபவையாக மாறிவிட்டன.
கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர். தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே, அது ஒரு நபர் ஆதிக்க அமைப்பாகத்தான் இருந்து வந்தது. அதே ‘கலாசாரம்’ இன்றும் தொடர்கிறது.
வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்ற ஒன்றைத் தவிர, ஆண் - பெண் சமத்துவம், நாத்திகம், ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கை முறை போன்ற பெரியார் கொள்கைகள் எதுவும் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி... இன்னமும் வேரூன்றவே இல்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால், பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான்! 1917ல் காங்கிரஸில் இணைந்தது முதல், 1949ல் திராவிடர் கழகத்தை நடத்தியது வரை வெகு ஜன இயக்கத் தலைவராக இருந் தவர் பெரியார். 1949-லிருந்து அந்த இடத்தைத் தனதாக்கிக் கொண்டவர் அண்ணா.
அண்ணாவை ஜெயிக்க வைத்த ஆயுதமான அன்றைய தி.மு.க-வின் அடிப்படை பலங்கள் என்ன? முதல் பலம் பொதுமக்களிடம் தங்கள் கருத்தை எடுத்துச் சொல்லத் தேவையான பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிகுந்த ஏராளமான மூத்த, இளம் தலைவர்கள் இருந்தார்கள். இரண்டாவது பலம், தன் இடத்துக்கு அவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று அண்ணா பயப்படவும் இல்லை; அவர்களைச் சாமர்த்தியமாக ஓரங்கட்டவும் இல்லை.
தி.மு.க. எழுத்தாளர்களும் ஏடுகளும் தமிழின் தொன்மை, வளமை பற்றிப் பேசுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. உலக அறிஞர்களின் சிந்தனைகளையெல்லாம் தமிழில் வெளிப்படுத்தினார்கள். தெருக்கள்தோறும் தி.மு.க-வினர் நடத்திய படிப்பகங்கள், படிக்கும் ருசியை ஏற்படுத்தின. கம்யூனிஸ்ட்டுகளுக்கு நிகராக நாங்களும் படிக்கக் கூடியவர்கள் என்ற பெருமைக்கு தி.மு.க. தொண் டர்கள் அன்று ஆசைப் பட்டார்கள். தமிழ்ச் சமூகத்தின் மேடு பள்ளங்களை நிரவிச் சமன் செய்துவிட வேண்டுமென்ற லட்சியத் துடிப்பில் இருந்த அவர்கள், அதற்கான ஆற்றலும் தெளிவும், தலைவர் அண்ணா கை காட்டும் ஏடுகளையும் நூல்களையும் படித்தால் தங்களுக்கும் வந்துவிடும் என்று நம்பினார்கள்.
முதலமைச்சராகி இரு வருடங்கள் முடிவதற்கு முன்பே, திடீரென அண்ணா மறைந்தபோது, தி.மு.க-வில் எல்லாமே தலைகீழாக மாறின. 60-ஐ எட்டிப் பிடிக்கும்போதே புற்றுநோய்க்கு இரையான அண்ணா, இன்னும் 20 வருடங்கள் இருந்திருப்பாரானால், தமிழக அரசியலின் தன்மையே வேறு விதமாக இருந்திருக்கும்.
அண்ணாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் என்று படிப்பறிவாலும் அரசியல் அனுபவத்தாலும் குறிக்கத்தக்கவர்களாக அன்றைக்கு இருந்த இரண்டு பேர் - நாவலர் நெடுஞ் செழியன், பேராசிரியர் அன்பழகன். இருவருமே திரையுலகம் சாராதவர்கள்; அறிவுலகம் சார்ந்தவர்கள். அண்ணாவுக்கு இரு உலக ஈடுபாடும் ஈர்ப்பும் இருந்தது. ஆனால், அவர் மனச் சாய்வு அதிகமாக அறிவுலகம் பக்கமே இருந்தது. சினிமாவைவிட நாடகத்தில் அண்ணா சாதித்ததே அதிகம். அதுவும் அவருக்குக் கொள்கைப் பரப்புக் கருவிதான். வாழ்க்கைப் பிழைப்புக்கான சாதனமல்ல!
தி.மு.க-வுக்குள் அண்ணா மறைவுக்குப் பின், திரையுலகம் சார்ந்த சக்திகளின் கை ஓங்கியது. நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சராக முடியாமல் தடுத்தது திரையுலக சகாக்களான கருணாநிதி - எம்.ஜி.ஆர். கூட்டுதான். இந்தச் சக்திகளின் செல்வாக்கு கட்சி நெடுகப் பரவிய நிலையில், நாவலர், பேராசிரியர் போன்றோர் மனச் சலிப்புடன் ஒதுங்கியிருந்து, வாழ்க்கை முழுக்க அதிகார மற்ற இரண்டாம் இடத்தில் இருந்து ஓய்வு பெறும் மனநிலைக்குத் தள்ளப் பட்டனர். பணமும் மரியாதையும் மட்டுமே ஆறுதல்களாயின!
அண்ணாவுக்குப் பின் அறிவுத் தேடல் மிகுந்த கட்சியாக இருந்த தி.மு.க-வும் அதைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க-வும் அதிகாரம், கான்ட்ராக்ட், தரகு லாபங்கள் தேடும் கட்சியாக மாறின. சாக்ரடீஸ், இங்கர்சால், டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தேடிப் பிடித்துப் படித்த சூழல் நியாயமாக இப்போது சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ரேமண்ட் வில்லியம்ஸ், சாம்ஸ்கி, மார்க்கோஸ் என்றெல்லாம் காலத்துக்கேற்ப வளரத் தொடங்கியிருக்க வேண்டும். அது நிகழவில்லை. தமிழ் என்பது அறிவு வளர்க்கும் கருவி என்ற நிலையிலிருந்து நீக்கப்பட்டு, உணர்ச்சியைத் தூண்டும் போதை மருந்தாக ஆக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞரின் குடும்பத்தில் ஒருவர்கூட கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க அனுப்பப்படவில்லை என்பது வரலாறு.
தன்னை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரின் செல்வாக்கைக் குறைக்க, அவருக்குத் திரையுலகப் போட்டியாக தன் மகன் முத்துவைக் கொண்டு வந்தார் கருணாநிதி. அதன் விளைவாக தி.மு.க. பிளவுபட்டு, பலவீனப்படுத்தப்பட்டது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு, எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய செல்வாக்கைக் கருணாநிதியால் குறைக்கவே முடியவில்லை.
அண்ணா காலத்திய திமு.க-வில் அறிவிலும் ஆற்றலிலும் அண்ணாவுக்குச் சில அங்குலங்கள் மட்டுமே அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று சொல்லத்தக்க தலைவர்கள் குறைந்தது பத்து பேராவது உண்டு. ஆனால், கருணாநிதியின் தி.மு.க-வில், அவருக்கு அடுத்த நிலையில் ஒருவர்கூட இல்லை. அடுத்தவர் ஸ்டாலின் தான் என்று சொல்லியாக வேண்டிய நிலை. எனவே, வைகோ போன்றவர்கள் வெளியேற வேண்டியதாயிற்று.
தி.மு.க. முற்றிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் கட்சி என்ற நிலையில்தான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. கட்சி ஏடு என்று சொல்லப்பட்ட ‘முரசொலி’கூட குடும்பச் சொத்தாகத்தான் பல வருடங்கள் இருந்தது. பத்திரிகையைக் கட்சியின் அறக்கட்டளைக்கு சில வருடங்கள் முன்பு கொடுத்தபோதும்கூட பத்திரிகை அலுவலகக் கட்டடம் குடும்பச் சொத்தாகவே இருந்து வருகிறது.
அண்ணா காலத்தில் சுமார் 50 பத்திரிகைகள் கழகத்தவரால் நடத்தப்பட்டன. பிறகு, அத்தகைய படிப்புச் சூழலே கட்சியில் இல்லை. கட்சி சார்பான டெலிவிஷன் என்று கருதப்பட்ட சன் டி.வி. குடும்பச் சொத்துதான். (இப்போதுகூட கட்சிக்காக ஆரம்பிக்கப்படுவதாகச் சொல்லப்படும் கலைஞர் டி.வி., கட்சியுடையது அல்ல; தனியாருடையது!)
தி.மு.க. இப்படித் தன் 33-ம் வயதிலிருந்து குடும்ப ஆதிக்கம் என்ற நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு கோமாவை நோக்கிச் செல்வது வெளிப்படையாகத் தெரிய வந்தபோது கட்சிக்கு வயது 52.
அப்போது, கட்சியிலேயே இருந்திராத பேரன் தயாநிதி மாறனை எம்.பி-யாக்கி மத்திய அமைச்சராகவும் கருணாநிதி ஆக்கியபோதும் சரி, இப்போது மகள் கனிமொழியை திடீரென எம்.பி. ஆக்கும்போதும் சரி, எந்தச் சலசலப்பும் இல்லை. தயாநிதி, கனிமொழி இருவருக்கும் நிகரான ஆற்றலும் அறிவும் உள்ளவர்கள் அந்த வயதினரில் கட்சிக்குள் வேறு எவரும் கிடையாதா என்ற கேள்வியை ஏன் கட்சிக்குள் யாரும் எழுப்பவில்லை?
அப்படி யாரும் இல்லை என்பதே பதிலாக இருக்குமானால், அத்தகைய இளைஞர் களைக் கட்சி இத்தனை வருடங்களில் உருவாக்கத் தவறியது ஏன் என்பதே அடுத்த கேள்வி.
கட்சியின் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளில் உள்ளுக்குள்ளேயே மாறி வந்திருக்கிறது என்பதுதான் காரணம். கட்சியின் சட்ட திட்டங்கள் விதிகள் எல்லாம் எப்படி இருந்தாலும், நடைமுறையில் 1969ல் கருணாநிதி முதலமைச்சரானது முதல்... பல அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், இதர கீழ் மட்டக் கட்சி நிர்வாகிகள் வரை பலரும் தத்தம் சக்திக்கு உட்பட்ட வகையில் தங்கள் வாரிசுகளைக் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறார்கள்.
எனவே, இப்போது இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல; திரு.மு.க.பப்ளிக் லிமிடெட் கம்பெனி. இதன் ஷேர் ஹோல்டர்களாக உள்ள பல குடும்பங்களின் இளைய தலைமுறையினர் ஆங்காங்கே பிராஞ்ச் மேனேஜர்களாகவும் கம்பெனியின் ப்ராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவ்களாகவும் இருக்கிறார்கள் என்பதால், யாரும் கம்பெனியின் சேர்மன் தன் விருப்பப்படி டைரக்டர்கள் போர்டை மாற்றி அமைப்பதை ஜெனரல் பாடி மீட்டிங்கில் கேள்வி கேட்பதில்லை. அதிலும் நேற்று வரை எம்.டி-யாக இருந்து வெளியேறியிருக்கும் மாறன் பிரதர்ஸின் தொழில் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் கம்பெனி இருப்பதால், தலைவர் எனப்படும் சேர்மன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.
இன்று தி.மு.க-வுக்குள் நிலவும் உட்கட்சி ஜனநாயகச் சூழல் எந்த அளவுக்குச் சீரழிந்துவிட்டதென்றால். குடும்ப ஆதிக்கம் பற்றி விமர்சனம் எழாதது மட்டுமல்ல; தி.மு.க-வின் பாரம்பரியமான சித்தாந்தத்திலிருந்து சறுக்குவது பற்றிகூட விவாதங்கள் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் அரசு அமைத்த தமிழக கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கு உறுப்பினர்களாக முதலமைச்சர் நியமித்த முக்கியமான இருவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான வேதாந்தம், ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர்.
கிராமக் கோயில்களின் மரபான தமிழ் வழிபாட்டு முறைகளை நீக்கிவிட்டு, அவற்றையும் சம்ஸ்கிருதமயமாக்கி வைதிக மரபுக்குக் கொண்டு செல்லும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை பெரியார் அமைப்புகளும் இடதுசாரிகளும் சொல்லி வருகின்றன. இதற்கு முன்பு பி.ஜே.பி-யுடன் கூட்டணி இருந்த காலத்திலும், இவர்களை அரசு வாரியத்தில் நியமித்தார் கருணாநிதி. இப்போது பி.ஜே.பி-க்கு எதிரான காங்கிரசுடன் கூட்டணி இருக்கும்போதும் நியமிக்கிறார். இது ஏன் என்று கேட்க தி.மு.க-வுக்குள் யாரும் இல்லை.
சுய மரியாதை இயக்கம் நீதிக் கட்சியில் இணைந்ததும், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாறியதும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் காலத்தின் கட்டாயங்கள். அவற்றால் தமிழ் சமூகம் அடைந்த லாபங்கள் கணிசமானவை. இந்த சங்கிலித் தொடரில், ‘தி.மு.க. பப்ளிக் லிமிடெட்’டின் உதயம் என்பது பரிணாம வளர்ச்சி அல்ல! இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகம் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் சூழலில், இன்னொரு திராவிட இயக்க வருகைக்காகத் தமிழகம் காத்திருக்கிறது. குடும்பத்தைக் கட்சியாகக் கருதாமல், கட்சியைக் குடும்பமாகக் கருதிய அண்ணாவைப் போன்ற தலைவர்கள் புதிய தலைமுறையிலிருந்து வந்தால்தான் அத்தகைய இயக்கத்தை சாத்தியப்படுத்த முடியும்!
நன்றி: ஆனந்த விகடன்
|