 |
தகவல் பலகை
இயக்கம் தொடக்கம்:
'ஓ போடு பிரசார இயக்கம் ஏப்ரல் 6 மாலை 5 மணிக்கு சென்னை வடபழநி நூறடி சாலையில் தொடங்கியது. 'ஓ போடு. ஒட்டு போடு. எந்த வாக்காளரயும் பிடிக்காட்டி 49 ஓ போடு. ஓட்டு போட தவறாதே' என்ற வாசகங்கள் அச்சிட்ட பனியன்களை அணிந்து கொண்டு, 49 ஓவை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் வண்டிகளில் கொடுத்தபோது பல பொதுமக்கள், தங்கள் ஊரில் இன்னும் கொஞ்சம் பேரிடம் தரவேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டனர்.
ஓட்டு இயந்திரத்தில் 49 ஓவை சேர்க்கச் சொல்லி வழக்கு
சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞரும் 'தீம்தரிகிட' இதழின் சந்தாதாரருமான சத்தியசந்திரன், சென்னை உயர் நீதி மன்றத்தில் 49 ஓவை ஓட்டு இயந்திரத்திலேயே சேர்க்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடுத்த வழக்கு ஏப்ரல் 7 அன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 திங்கட்கிழமைக்குள் பதில் தரும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக தேர்தலுக்கு மெஷினில் 49 ஓவை சேர்க்க முடியுமா?
நீதிமன்றம் உத்தரவிட்டால், தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் முடியும். இன்னமும் வேட்பாளர்கள் மனு தாக்கல் தொடங்கவில்லை. வேட்பு மனு பரிசீலனைகள் முடிந்தபிறகுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகிறது. அதன் பின்னர்தான் வேட்பாளர்கள் பெயர்களையும் சின்னத்தையும், ஒவ்வொரு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் ஏற்றுகிறார்கள். அப்போது கூடவே பட்டியலின் கடைசிப் பெயராக 49 ஓவையும் ஏற்ற முடியும். இதற்கு தனி கணிணி செயல் ஆணை எதுவும் தயாரிக்கத் தேவையில்லை.
எங்கள் ஊருக்கு ஓ போடு பிரசாரம் வருமா?
49-ஓ போடு பிரசாரத்தை எங்கள் ஊரில் ஓ போடு இயக்கம் ஏற்பாடு செய்து நடத்துமா என்று பலர் கேட்டுள்ளனர்.
ஓ போடு இயக்கம் எல்லா ஊர்களிலும் கிளைகளும் அமைப்புகளும் உள்ள அரசியல் கட்சி போன்ற அமைப்பு அல்ல. தவிர இந்த பிரசாரத்தை வேறு யாரோ எங்கிருந்தும் வந்து நடத்தித் தரவேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் தங்களுக்கு இருக்கும் வசதியைக் கொண்டு தாங்களே செய்யலாம். ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க அதிகபட்ச செலவு 200 ரூபாய்தான். ஈ மெயில், எஸ்.எம்.எஸ் போன்றவற்றின் மூலமும் பரப்பலாம். பேருந்து, ரயில் பயணம், அலுவலகம், கடைத் தெரு, கல்யாண வீடு என்று எங்கெல்லாம் சக மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் 49 ஓ பற்றி கருத்து பரிமாறலாம். இதையெல்லாம் செய்த பின்னர் முக்கியமாக, மே 8 அன்று தவறாமல் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டு போட வேண்டும். மேற்கண்ட எதையும் செய்ய அதிக செலவோ, கடும் உழைப்போ, அதிக நேரமோ ஆகப்போவதில்லை. ஓ போடுங்க.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|