Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

33. சிலை சொன்ன செய்தி

மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்குள் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டார்கள். சிறிது தூரம் காட்டுப் பாதையில் வந்த பிறகு இராஜபாட்டையை அடைந்தார்கள். வேறு வீரர்கள் யாரையும் இளவரசர் தம்முடன் மெய்க்காவலுக்கு அழைத்து வராதது வந்தியத்தேவனுக்கு வியப்பை அளித்தது. ஆனால் அன்றைய பிரயாணத்தில் அவனுக்கிருந்த உற்சாகத்தைப் போல் அதற்குமுன் என்றுமிருந்ததில்லை. காலை நேரத்தில் இரு புறமும் மரங்களடர்ந்த அந்த இராஜபாட்டையில் பிரயாணம் செய்வதே ஓர் ஆனந்த அனுபவம். பழையாறை அரசிளங்குமரி தன்னிடம் ஒப்புவித்திருந்த வேலையைச் செய்து முடித்துவிட்டோ ம் என்ற பெருமித உணர்ச்சி அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அது மட்டுமா? பல வருஷங்களாக அவன் இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. சோழவள நாட்டின் செல்லப்பிள்ளையைப் பார்த்தாகிவிட்டது. நாடு நகரமெல்லாம் மக்கள் எந்த வீர இளைஞரின் வீரப் பிரதாபங்களையும், குணாதிசயங்களையும் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தார்களோ; அந்த அரசிளங்குமாரரைச் சந்தித்தாகி விட்டது. அந்தச் சந்திப்புதான் எவ்வளவு அதிசயமான சந்திப்பு? அருள்மொழிவர்மர் ஒரு விசித்திரமான மனிதர் என்று, தான் கேள்விப்பட்டிருந்தது உண்மைதான்! திடீரென்று குதிரையைத் திருப்பித் தன்னைத் தாக்கி திக்குமுக்காடச் செய்துவிட்டாரே? அவர் சேனைக்குத் தலைமை வகித்துச் செல்லுமிடங்களிலெல்லாம் வெற்றிமேல் வெற்றியாக இருந்து வருவதின் இரகசியமும் இதுதான் போலும்! பகைவர்கள் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் தாக்குவதே இவருடைய போர்முறை போலும்? ஆனால் இவரது இடைவிடா வெற்றியின் இரகசியம் இது மட்டுந்தானா? சேனா வீரர்களுடன் எவ்வளவு பவ்யமாக இவர் பழகுகிறார்? எப்படி அவர்களைத் தம் அன்புக்கு வசப்படுத்தி வைத்திருக்கிறார்!

போர் வீரர்களை மட்டுந்தானா? தாம் வெற்றிகொண்ட நாட்டின் மக்களையும் எப்படி வசீகரப்படுத்தி வைத்திருக்கிறார்? சமீபத்தில் மாபெரும் போர் நடந்த நாடு என்று இதைச் சொல்ல முடியுமா? சாலைகளில் மக்கள் எவ்வளவு உல்லாசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! இரு பக்கங்களிலுமுள்ள கிராமங்களில் ஜனங்கள் எப்படி நிர்ப்பயமாகவும் கவலையின்றியும் தத்தம் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்? மக்களின் முகங்களில் பீதியின் அறிகுறியோ துயரத்தின் சின்னமோ சிறிதும் காணப்படவில்லையே? கலகலவென்று பெண்களும் குழந்தைகளும் சிரிக்கும் சப்தம்கூட அடிக்கடி காதில் விழுகிறதே! இது என்ன விந்தை! இவர் எத்தகைய விந்தையான மனிதர்! வெற்றி கொண்ட நாட்டு மக்களிடமிருந்து உணவுப் பொருளைக் கைப்பற்றக்கூடாது என்று இளவரசர் பிடிவாதம் பிடித்துச் சோழ நாட்டிலிருந்து சைன்யத்துக்கு உணவுப் பொருள் வரவேண்டுமென்று வற்புறுத்தியதும், அதன் காரணமாகப் பழுவேட்டரையர்களுக்கு ஏற்பட்ட கோபமும், அவர்கள் சுந்தர சோழரிடம் புகார் கூறியதும், இவையெல்லாம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தன. அன்றியும் ஆதித்த கரிகாலர் கையாளும் கொடூரமான போர் முறையையும், அருள்மொழிவர்மரின் தயாளம் பொருந்திய தர்ம யுத்த முறையையும் அவன் தன் மனத்திற்குள்ளே ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான். சில நாளைக்கு முன்பு வரையில் தன்னுடைய எஜமானராயிருந்த ஆதித்த கரிகாலரைப்பற்றி எவ்விதத்திலும் குறைவாக எண்ணுவது அவனுக்கே பிடிக்கவில்லை. ஆயினும் அந்த அநுராதபுரத்து இராஜபாட்டையில் இருபுறமும் வசித்த கிராம ஜனங்களின் மலர்ந்த முகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவன் மேற்கண்டவாறு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அம்மம்மா! ஆதித்த கரிகாலர் யுத்தம் செய்து திரும்பிய நாடுகளில் இத்தகைய காட்சிகளைக் காணமுடியுமா? எங்கெங்கும் ஒரே ஓலக்குரல் அல்லவா கேட்டுக் கொண்டிருக்கும்?

இத்தகைய அபூர்வ குணாதிசயம் படைத்த இளவரசருடன் எத்தனையோ விஷயங்களைப் பற்றி பேச வேண்டும், எவ்வளவோ காரியங்களைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று வந்தியத்தேவனுடைய உள்ளம் துடிதுடித்தது. ஆனால் புரவிகளின் பேரில் ஆரோகணித்து விரைவாகச் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் பேசுவதற்கும் இடம் எங்கே? ஆம் பேசுவதற்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைத்தது.

அநுராதபுரத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிக் கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் பெரியதொரு புத்த பகவானின் சிலை நிற்பதை வந்தியத்தேவன் கண்டான். இம்மாதிரி சிலைகள் இலங்கையில் பற்பல இடங்களிலும் இருந்தபடியால் அதைப்பற்றி வந்தியத்தேவன் அதிகக் கவனம் செலுத்தவில்லை. ஆனால் பொன்னியின் செல்வர் அச்சிலையின் அருகில் குதிரையைச் சடாரென்று இழுத்துப் பிடித்து நிறுத்தியதும் இவனும் நிற்கவேண்டியதாயிற்று. சற்று முன்னாலேயே போய்க் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் குதிரையை நிறுத்தி இவர்கள் பக்கம் திரும்பினான்! பொன்னியின் செல்வர் சற்றுநேரம் அந்தப் புத்த பகவானுடைய கம்பீரமான சிலையைக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அடடா! என்ன அற்புதக்கலை!" என்றார்.

"எனக்கு ஒரு அற்புதமும் தெரியவில்லை. இந்த நாட்டில் எங்கே பார்த்தாலும் இத்தகைய பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை வைத்திருக்கிறார்கள். எதற்காகவோ தெரியவில்லை?" என்றான் வந்தியத்தேவன்.

இளவரசர் வந்தியத்தேவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். "மனத்தில் உள்ளபடி பேசுகிறீர்; அதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

"இளவரசே! வல்லவரையர் இன்றைக்குத்தான் உண்மை பேசுவதென்கிற வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்!" என்றான் திருமலை.

"வைஷ்ணவரே! எல்லாம் சகவாச தோஷந்தான். வீர நாராயணபுரத்தில் உம்மைப் பார்த்தது முதல் என் நாவில் கற்பனா சக்தி தாண்டவமாடி வந்தது. இளவரசரைப் பார்த்ததிலிருந்து உண்மை பேசும் வழக்கம் வந்துவிட்டது!" என்றான் வந்தியத்தேவன்.

அவர்களுடைய சொற்போரை இளவரசர் கவனிக்கவில்லை. சிலையின் தோற்றத்தில் ஆழ்ந்திருந்தார்.

"உலகத்திலேயே சிற்பக்கலையின் அற்புதம் பூரணமாக விளங்கும் வடிவங்கள் இரண்டுதான். ஒன்று நடராஜர்; இன்னொன்று புத்தர்" என்றார்.

"ஆனால் நடராஜ வடிவங்களை இம்மாதிரி பிரம்மாண்ட வடிவங்களாக நம் நாட்டில் செய்வதில்லையே?"

"இலங்கையில் முற்காலத்தில் இருந்த மன்னர்களில் சிலர் மகா புருஷர்கள். அவர்கள் ஆண்ட ராஜ்யம் சிறியது ஆனால் அவர்களுடைய இருதயம் பெரியது; அவர்களுடைய பக்தி மிகப்பெரியது. புத்த பகவானிடம் அவர்களுடைய பக்தியை இப்படிப் பெரிய வடிவங்களை அமைத்துக் காட்டினார்கள். புத்த சமயத்தில் அவர்களுடைய பக்தியைப் பெரிய பெரிய ஸ்தூபங்களை அமைத்துக் காட்டினார்கள். இந்த நாட்டில் உள்ள புத்தர் சிலைகளையும் விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் பார்த்துவிட்டு நம் சோழ நாட்டிலுள்ள சின்னஞ்சிறு சிவன் கோவில்களை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது!" என்றார் பொன்னியின் செல்வர்.

இவ்விதம் சொல்லிவிட்டுக் குதிரையிலிருந்து இறங்கி இளவரசர் புத்தர் சிலையண்டைச் சென்றார். சிலையின் பத்ம பாதங்களையும், அந்தப் பாதங்களை அலங்கரித்த தாமரை மொட்டுக்களையும் சிறிது நேரம் கவனமாகப் பார்த்தார். பின்னர் புத்தர் சிலையின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத் திரும்பி வந்து பழையபடி குதிரையின் மீது ஏறினார்.

குதிரைகள் சற்று மெதுவாகவே சென்றன. "ஏதேது? இளவரசர் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவார் போலிருக்கிறதே?" என்று வந்தியத்தேவன் திருமலையிடம் சொன்னது இளவரசர் காதில் விழுந்தது.

அவர்கள் இருவரையும் பொன்னியின் செல்வர் பார்த்து, "புத்த பகவானிடம் என்னுடைய பக்தி காரணார்த்தமானது. அந்தப் புத்தர் சிலையின் பத்ம பாதங்கள் எனக்கு ஒரு முக்கியமான செய்தியை அறிவித்தன!" என்றார்.

"ஆகா! எங்கள் காதில் ஒன்றும் விழவில்லையே?"

"மௌன பாஷையில் அச்செய்தி எனக்குக் கிடைத்தது."

"அது என்ன செய்தி? எங்களுக்குத் தெரியலாமா?"

"இன்றிரவு பன்னிரண்டு நாழிகைக்கு அநுராதபுரத்தில் சிம்மதாரைத் தடாகத்துக்கு அருகில் நான் வரவேண்டுமென்று பகவானுடைய பாதமலர்கள் எனக்கு அறிவித்தன!" என்றார் பொன்னியின் செல்வர்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com