Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

32. கிள்ளி வளவன் யானை

கூத்து முடிவதற்கும் சமையல் ஆவதற்கும் சரியாயிருந்தது. கட்டுக் கட்டாகத் தாமரை இலைகளைக் கொண்டு வந்து அவ்வீரர்களின் முன்னால் போட்டார்கள். பிறகு பொங்கலும் கறியமுதும் கொண்டு வந்து பரிமாறினார்கள்.

வீரர்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு இளவரசர் அவர்களிடையே பந்தி விசாரணை செய்துகொண்டு வலம் வந்தார். அங்கங்கே நின்று அவ்வீரர்களின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தார். அப்படி விசாரிக்கப்பட்டவர்கள் ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார்கள். பக்கத்திலிருந்தவர்கள் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைப் பாராட்டினார்கள்.

ஏற்கெனவே சோழ நாட்டு வீரர்களுக்கெல்லாம் இளங்கோவின் பேரில் மிக்க அபிமானம் இருந்தது. சமீபத்தில் அந்த அபிமானம் பன்மடங்கு பெருகியிருந்தது. தாய் நாட்டிலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தருவிப்பதற்கு இளவரசர் பெரும் பிரயத்தனம் செய்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் சாதாரணப் போர்வீரர்களுடனே இளவரசர் சம நிலையில் கலந்து பழகி க்ஷேமம் விசாரித்து, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வந்தார். இந்தக் குணாதிசயம் இளவரசரை அவ்வீரர்கள் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகக் கருதுமாறு செய்திருந்தது.

ஆகையால், வீரர்கள் அங்கங்கே இளவரசரை நிறுத்த முயன்றார்கள். துணிச்சலை வருவித்துக்கொண்டு அவரை ஏதேனும் கேள்வி கேட்பார்கள். முக்கியமாக, அவர்களில் பலரும் கேட்ட கேள்வி, "புலத்திய நகரத்தின் மீது படையெடுப்பு எப்போது?" என்பதுதான். இந்தக் கேள்விக்கு விடையாக இளவரசர், "புலத்திய நகரத்தின் மீது படையெடுத்து என்ன பயன்? மகிந்தன் ரோஹணத்துக்கல்லவா போயிருக்கிறான்?" என்று சிலருக்குச் சொன்னார். "கொஞ்சம் பொறுத்திருங்கள் மழைகாலம் போகட்டும்" என்று வேறு சிலரிடம் சொன்னார். யுத்தமின்றிச் சோம்பி இருப்பதில் சில வீரர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுக் கொண்டார்கள். வேறு சிலர், "தாங்கள் மாதமொரு முறையாவது இவ்விதம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனால் பொறுமையாயிருக்கிறோம்" என்றார்கள்.

பந்தி விசாரணை முடிந்ததும், இளவரசர் சற்று ஒதுக்குப்புறமாக அவருக்கென அமைந்திருந்த படைவீட்டுக்குச் சென்றார். வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் அவர் தம்முடன் அழைத்துக்கொண்டு போனார்.

"இந்த வீரர்களின் உற்சாகத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? தஞ்சையிலிருந்து மட்டும் தகுந்த ஒத்துழைப்புக் கிடைத்திருந்தால், இதற்குள் இந்த இலங்கைத் தீவு முழுவதும் நம் வசமாயிருக்கும். அருமையான சந்தர்ப்பம் வீணாகிப் போய்விட்டது. இங்கே மழை காலத்தில் யுத்தம் நடத்த முடியாது. இன்னும் மூன்று நாலு மாதம் நம் வீரர்கள் சும்மா இருக்கவேண்டியதுதான்!" என்று சொன்னார்.

இதைக் கேட்ட திருமலை, "இளவரசே! தாங்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவது வியப்பாயிருக்கிறது. அங்கேயோ சோழ சாம்ராஜ்யத்துக்கே பேரபாயம் நேர்ந்திருக்கிறது! விஜயாலய சோழர் ஸ்தாபித்த ராஜ்யம், பராந்தகராலும், சுந்தர சோழராலும் பல்கிப் பெருகிய மகாராஜ்யம், உள் அபாயங்களினால் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது!" என்றான்.

"ஆம், ஆம்! நீங்கள் இருவரும் முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் என்னுடைய அற்பக் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்லது; இப்போது நீங்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் விவரமாகச் சொல்லுங்கள். முதலில் இவர் ஆரம்பிக்கட்டும்!" என்று இளவரசர் வந்தியத்தேவனைச் சுட்டிக் காட்டினார்.

வந்தியத்தேவன் உடனே தன் கதையைத் தொடங்கினான். காஞ்சியிலிருந்து தான் புறப்பட்டது முதல் கண்டவை, கேட்டவை எல்லாவற்றையும் கூறினான். பற்பல அபாயங்களிலிருந்து தப்புவதற்குத் தான் புரிந்த சாகஸச் செயல்களைக் குறித்து அதிகமாக விஸ்தரிக்க விரும்பாதவன்போல் காட்டிக் கொண்டு, அதே சமயத்தில் தன் பிரதாபங்களை வெளியிட்டான். கடைசியில், "ஐயா! தங்கள் அருமைத் தந்தையாரைச் சிறையில் வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். நெருங்கிய பந்துக்களும் பெருந்தர அதிகாரிகளும், சிற்றரசர்களும் சேர்ந்து பயங்கரமான சதி செய்கிறார்கள். இதனாலெல்லாம் தங்கள் சகோதரி இளைய பிராட்டி பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறார். ஆகையால் தாங்கள் உடனே புறப்பட்டு, என்னுடன் பழையாறைக்கு வரவேண்டும். ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது!" என்று முடித்தான்.

பிறகு ஆழ்வார்க்கடியான் தனது வரலாற்றைக் கூறினாள். வந்தியத்தேவன் கூறியவற்றையெல்லாம் அவனும் ஆமோதித்தான். அத்துடன் திருப்புறம்பியம் பள்ளிப்படையருகில், நள்ளிரவில் நடந்த கொலைகாரர்களின் சதியைப் பற்றியும் கூறினான். சோழநாட்டு நிலைமை இவ்வளவு அபாயகரமாயிருப்பதால் தற்சமயம் இளவரசர் அங்கு வராமலிருப்பதே நல்லது என்று முதன் மந்திரி சொல்லி அனுப்பிய செய்தியை மறுபடியும் வற்புறுத்திக் கூறினான்.

"தாங்கள் சோழ நாட்டுக்குத் தற்சமயம் வராமலிருப்பது மட்டுமல்ல; இங்கேயும் படையெடுப்பை மேலும் விஸ்தரித்துக் கொண்டு போக வேண்டாம் என்று முதன் மந்திரி கேட்டுக் கொள்கிறார். படைகளையெல்லாம் திரட்டி வட இலங்கையில் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். சதிகாரர்கள் சீக்கிரத்தில் வெளிப்பட்டு வந்து தங்கள் உண்மைச் சொரூபத்தைக் காட்டுவார்கள். அச்சமயம் இப்போது இலங்கையிலுள்ள படைமிக்க உபயோகமாயிருக்கும் என்று முதன் மந்திரி அபிப்பிராயப்படுகிறார். பாண்டிய நாட்டில் தற்சமயம் உள்ள கைக்கோளர் படை, வன்னியர் படை, வேளாளர் படை மூன்றும் இளவரசருக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யக் காத்திருக்கின்றன. இதையும் தங்களுக்குத் தெரிவிக்கும்படி முதன் மந்திரி எனக்குக் கட்டளையிட்டார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"திருமலை! உன் குருநாதர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? பாடலிபுரத்துச் சாணக்கியரைப் போல் இவர் அன்பில் சாணக்கியர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறாரா? என் உற்றார் உறவினரோடு நான் சண்டை போடவேண்டும் என்கிறாரா?" என்று இளவரசர் ஆத்திரமாய்க் கேட்டார்.

"இல்லை! ஐயா! அநிருத்தர் அவ்விதம் சொல்லவில்லை. ஆனால் சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்கிறவர்களை, சாம்ராஜ்யத்துக்குத் துரோகம் செய்ய முயற்சி தொடங்கியிருப்பவர்களை - சமயம் பார்த்துத் தண்டிக்க வேண்டும் என்கிறார். அதற்கு உதவி புரிவது தங்கள் கடமையல்லவா?" என்றான் திருமலை.

"அதற்கு நான் எப்படி அதிகாரியாவேன்? சதி நடப்பது உண்மையானால், அதற்குத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சக்கரவர்த்தியல்லவா? என் தந்தையின் கட்டளையின்றி நான் எப்படி இந்தக் காரியத்தில் பிரவேசிக்க முடியும்!" என்றார் இளவரசர்.

வந்தியத்தேவன் இப்போது குறுக்கிட்டு "இளவரசே! தங்கள் தந்தை இப்போது சுவாதீனமாயில்லை! பழுவேட்டரையர்கள் அவரைச் சிறை வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். யாரும் நெருங்க முடியாதபடி அரண்மனைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். தங்கள் தமையனாரோ தஞ்சைக்கு வருவதில்லையென்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பது தங்கள் பொறுப்பல்லவா? உடனே பழையாறைக்கு வரவேண்டியது தங்கள் கடமை அல்லவா?" என்றான்.

"இளவரசர் பழையாறைக்கு வரவேண்டிய அவசியம் என்ன? அதுதான் எனக்குத் தெரியவில்லை!' என்றான் ஆழ்வார்க்கடியான்.

இளவரசர் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, "மண்ணாசை மிகப் பொல்லாதது. இராஜ்யத்தின் பேரில் உள்ள ஆசையினால் இவ்வுலகில் என்னென்ன பயங்கரமான பாவங்கள் நடந்திருக்கின்றன? இன்று சிம்மகிரிக் கோட்டைக்குப் போயிருந்தேன் அல்லவா? அந்தக் கோட்டையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?" என்றார்.

"நான் கேட்டதில்லை" என்றான் வந்தியத்தேவன்.

"சொல்கிறேன், கேளுங்கள்! சுமார் ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்த இலங்கைத் தீவைத் தாதுசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் காசியபன்; இன்னொருவன் மகல்லன். தாதுசேனனின் சேனாபதியும், காசியபனும் சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள். காசியபன் தன் சொந்தத் தந்தையைச் சிறையில் அடைத்துவிட்டுச் சிங்காதனம் ஏறினான். மகல்லன் கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனான். சில நாளைக்குப் பிறகு தாதுசேனனின் சிறையைச் சுற்றிச் சுவர் எழுப்பி அடைத்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இந்தக் கொடூர பாவத்தைச் செய்த காசியபனுக்குத் தன் சகோதரன் மகல்லன் திரும்பி வந்து பழிக்குப் பழி வாங்குவான் என்ற பீதி உண்டாகி விட்டது. அதற்காக இந்த சிம்மகிரிக் குன்றுக்கு வந்தான். செங்குத்தான குன்றாகையால் பகைவர்கள் அதன் பேரில் ஏறிக் கோட்டையைப் பிடிப்பது இயலாத காரியம் என்று நினைத்தான். இம்மாதிரி பதினெட்டு வருஷம் ஒளிந்து வாழ்ந்திருந்தான். கடைசியில் ஒரு நாள் மகல்லன் தன் உதவிக்குப் பாண்டிய ராஜாவின் சைன்யத்தையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். சிம்மகிரிக் கோட்டையை அணுகினான். அச்சமயத்தில் காசியபனின் புத்தி பேதலித்து விட்டது. அத்தனை வருஷம் கோட்டையில் ஒளிந்திருந்தவன் அசட்டுத் தைரியத்துடன் வெளிவந்து போராடி இறந்தான்! அப்பேர்ப்பட்ட பாதகன், - தந்தையைக் கொன்ற பாவி, - கட்டிய, கோட்டையில் சில அற்புதமான வர்ணச் சித்திரங்கள் இருக்கின்றன. இன்று சீன யாத்திரீகளுடன் போயிருந்த போது பார்த்தேன். அடடா! அந்தச் சித்திரங்களின் அழகை என்னவென்று சொல்வது? பல நூறு வருஷங்களுக்கு முன்பு எழுதியவை. ஆனால் இன்றைக்கும் சிறிதும் வர்ணம் மங்காமல் புத்தம் புதிய சித்திரங்கள் போல் இருக்கின்றன..."

"ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"தயக்கம் ஏன்? தாராளமாய்க் கேட்கலாம்."

"சிம்மகிரிக் கோட்டை இன்னும் பகைவர் படைகளின் வசத்திலே தானே இருக்கிறது?"

"ஆமாம்; அதைக் கைப்பற்றும் முயற்சியை இப்போது தொடங்கும் உத்தேசம் எனக்கு இல்லை. அதனால் வீணான உயிர்ச்சேதம் ஏற்படும்."

"அதைப்பற்றி நான் கேட்கவில்லை. ஐயா! பகைவர் கோட்டைக்குள் தாங்கள் பிரவேசித்தது உசிதமா என்று கேட்டேன். சீன யாத்திரீகர்களுக்கு யானைப் பாகனாகத் தாங்கள் போக வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? யானையின் கழுத்தில் தங்களைப் பார்த்ததும் என் கண்களை நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய புருவத்தின் நெரிப்பைப் பார்த்துத்தான் சந்தேகம் தெளிந்து நிச்சயப்படுத்திக் கொண்டேன். இப்படித் தங்கள் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா?"

"என் உயிர் மட்டும் அவ்வளவு உயர்ந்ததா, திருமலை! எத்தனை சோழ நாட்டு வீரர்கள் இந்த இலங்கையில் வந்து உயிரை விட்டிருக்கிறார்கள்?..."

"அவர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தார்கள். தாங்கள் அநாவசியமாகத் தங்களை அபாயத்துக்கு உள்ளாக்கிக் கொண்டீர்கள்!"

"அநாவசியமில்லை; இரண்டு காரணங்கள் உண்டு. சிம்மகிரிச் சித்திரங்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு நாளாக இருந்தது. அந்த ஆசையை இன்று பூர்த்தி செய்து கொண்டேன்..."

"இளவரசே! இன்னொரு காரணம்?"

"பார்த்திபப் பல்லவர் திரிகோண மலையில் வந்து இறங்கினவுடனே, எனக்குச் செய்தி கிடைத்தது. அவரை இன்று பார்க்க விரும்பவில்லை. ஏனெனில்..."

"ஏனெனில்...?"

"மாதோட்டத்துக்கு முதன் மந்திரி வந்திருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவரிடமிருந்து செய்திவரும் என்று எதிர்பார்த்தேன். இரண்டு மூத்தவர்களிடமிருந்து செய்தி வந்தால், முதலில் கிடைக்கிற செய்தியின்படிதானே நான் நடந்தாக வேண்டும்?"

வந்தியத்தேவன்,"ஆகா! அப்படிச் சொல்லுங்கள், என் கட்சி தானே ஜயித்தது?" என்று குதூகலித்தான்.

"அரசே! இவன் தங்களைத் தந்திரத்தினால் ஏமாற்றி விட்டான்..."

"அவன் ஏமாற்றவில்லை; நானாகவே ஏமாந்தேன். உன்னை அழைத்து வருவதற்கு வைத்திருந்த வீரனை இவன் குதிரை மேலிருந்து தள்ளிவிட்டு அக்குதிரை மீது தான் ஏறிக்கொண்டு வந்ததை நான் கவனித்துவிட்டேன். இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினேன்..."

"நல்ல பாடம் கற்பித்தீர்கள்! ஒவ்வொரு பாடமும் ஒரு மணங்கு நிறையிருக்கும். இப்போது நினைத்தாலும் என் முதுகும் மார்பும் வலிக்கின்றன! ஓலை கொண்டுவந்த தூதனை இப்படித்தானா நடத்துவது? போனால் போகட்டும்; தாங்கள் மட்டும் என்னுடன் பழையாறைக்கு வருவதாயிருந்தால்..."

"எனக்கு ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது! திருமலை! என் முன்னோர்களில் பெருங்கிள்ளி வளவன் என்று ஒரு மன்னர் இருந்தார். அவரிடம் ஓர் அதிசயமான யானை இருந்தது. அதன் ஒரு கால் காஞ்சியில் இருக்கும்; இன்னொரு காலினால் தஞ்சையை மிதிக்கும்; மற்றொரு கால் இந்த ஈழ நாட்டை மிதிக்கும் நாலாவது கால் உறையூரில் ஊன்றி நிலைத்திருக்கும்.

"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்துநீர்த் தண்தஞ்சை தான்மிதியாப் - பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்
கோழியர் கோக் கிள்ளி களிறு!"

என்று அற்புதமான கற்பனையுடன் ஒரு புலவர் பாடியிருக்கிறார். இந்த இலங்கையில் மந்தை மந்தையாக ஆயிரம் ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? புலவருடைய கற்பனை யானையைப்போல் ஒரு யானை இருந்தால் நானும் ஒரே சமயத்தில் காஞ்சியிலும், பழையாறையிலும், மதுரையிலும், இலங்கையிலும் இருக்கலாம் அல்லவா?"

புலவரின் யானையைப் பற்றிக் கேட்டதும் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "அப்படிப்பட்ட யானைதான் இல்லையே? தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று திருமலை கேட்டான்.

"சந்தேகம் என்ன? பழையாறைக்கு வருவதென்றுதான் முடிவாகி விட்டதே?" என்றான் வந்தியத்தேவன்.

"உங்கள் சண்டையைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாளை அநுராதபுரம் போவோம். அங்கே பார்த்திப பல்லவரை நான் எப்படியும் சந்தித்தாக வேண்டும். அவர் சொல்வதையும் கேட்டுவிட்டுத்தான் முடிவுசெய்ய வேண்டும்" என்றார் இளவரசர்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com