Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. பின் தொடரும் நிழலின் குரல்!

2. கலைஞருக்கு சவால் விடும் கண்டதேவி!

3. எரிபொருள் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

4. சில தவறுகள்... சில பாடங்கள்!

5. கலைஞர் கருணாநிதியின் விஷமக் கவிதையும் கொஞ்சம் வரலாறும்

6.அசுத்தமானவளா பெண்?!

***********

பெரியாரே! பெரியாரே!!:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

மதத்தலங்கள் - பெண்ணுரிமை சமாதிகள்?:
ப்ரியா தம்பி


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




ManithanManithan
(மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])

  • கருணாநிதியின் கேபிள் பல்டி
  • ம.பொ.சி நூற்றாண்டு
  • சிட்டி-சுரதா-ராஜரங்கன்
  • நெய்வேலி - யாருக்கு வெற்றி ?
  • மூன்றாவது அணி முயற்சி
  • டாவின்சி கோட் தடை நீக்கம்
  • அன்புமணி-வேணுகோபால் மோதல் - யார் பக்கம் நியாயம் ?
  • கண்டதேவி தேரோட்ட அமைதி

  • கேபிள் இணைப்புத் தொழிலை தமிழக அரசு எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தி.மு.க அரசு அறிவித்துவிட்டதே ?

    ரமணி, கன்யாகுமரி

    சன் டிவி குடும்பத் தொழிலுக்காக மட்டுமே அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதி அரசுப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திட்ட ஆணைகள் எதுவாக இருந்தாலும், முதல் கையெழுத்திட விரும்பும் ஆணை இதுவாகத்தான் இருக்கும் என்பது நமக்கு முன்பே தெரிந்த விஷயம்தான். சுனாமி, வெள்ளம், பஸ் கட்டணம், காவிரி என்று எந்த மக்கள் பிரச்சினையிலும் காட்டாத சுறுசுறுப்பை இந்த சட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்த உடனே காட்டியவர் கருணாநிதி. தயாநிதி மாறனுடன் ஓடோடிப் போய் ஆளுநரை சந்தித்தார். பிறகு அரை பல்டி அடித்து சுமங்கலி விஷன் மட்டுமல்ல, எல்லா கேபிள் கம்பெனிகளையும் ஜெயலலிதா அரசு நாட்டுடமையாக்கினால் வரவேற்பேன் என்று அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தொழிலைக் காப்பாற்றுகிறார். இதற்கு சொல்லியிருக்கும் காரணங்கள் அபத்தமானவை. மாநில அரசுக்கு இதற்கு அதிகார வரம்பு இல்லையாம். மாநில சுயாட்சி வீரர் பேசும் பேச்சா இது ? கேரளத்தில் மட்டும் மாநில மின் வாரியம் ஏஷியாநெட்டுடன் இணைந்து எப்படி கேபிள் விநியோகத் தொழிலில் ஈடுபட முடிந்தது ? அந்த அரசுக்கு மட்டும் அதிகார வரம்பு எப்படி வந்தது ? ஒரு பேச்சுக்காக அதிகார வரம்பு இல்லையென்றே வைத்துக் கொண்டாலும், அந்த அதிகாரம் வேண்டும் என்று கோரவேண்டாமா ? மீடியா ஏகபோகத்தைப் பற்றி டெல்லியில் முழக்கமிடும் இடதுசாரிகள் தமிழகத்தில் வாய் மூடிக் கிடப்பது இன்னொரு அவமானம்.

    ம.பொ.சி நூற்றாண்டு விழா இறுதியில் அவர் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பது வரவேற்கவேண்டிய நடவடிக்கை அல்லவா ?

    குமரகுருபரன், திருவல்லிக்கேணி

    ஆம். பாராட்டுக்குரியதுதான். ஆனால் சிலப்பதிகார பக்தி தவிர கருணாநிதிக்கும் ம.பொ.சிக்கும் வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ம.பொ.சி தமிழ் தேசியம் சார்பாக சிறப்பான வாதங்களை இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே வைத்த முன்னோடி. அதே சமயம் இந்திய தேசியத்தை ஆழமாக நம்பியவர். கருணாநிதிக்கு இரண்டிலும் ஆழமான நம்பிக்கைகள் கிடையாது. தன் அவ்வப்போதைய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளும் அறிவுக் கூர்மை மட்டுமே அவருக்கு உண்டு. ம.பொ.சி, பெரியார் போன்றோர் ஓரணியில் இருந்திருந்தால் தமிழக அரசியல் சூழல் வேறு விதமாக இருந்திருக்கலாம். இந்தியா உண்மையான தேசிய இனங்களின் சமமான கூட்டாட்சியாக மலரும் வாய்ப்புக்கும் அது உதவியிருக்கலாம். முறையானபடிப்பு கிட்டாதபோதும் அச்சு கோர்ப்பவராகத் தொடங்கி ஆழ்ந்த சிந்தனையாளராக, எழுத்தாளராக தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட ம.பொ.சியை வெறும் கோமாளியாக சோ சித்திரித்ததை நினைக்கும்போதெல்லாம் எரிச்சலாக இருக்கிறது. இப்போது அவரும் ம.பொ.சியின் அரிய தேசிய குணங்களைப் பாராட்டி எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.

    அண்மையில் மறைந்த சிட்டி, சுரதா, ராஜரங்கன் ஆகியோரை உங்களுக்குப் பழக்கமுண்டா ?

    ராஜகோபால், மின்னஞ்சல்

    சிட்டி என் அப்பா காலத்துப் பத்திரிகையாளர். அவரும் என் அப்பாவும் அண்ணாவும் ஒரே கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர்களாகப் படித்தவர்கள். ஒரு தேர்ந்த வானொலி நிருபர், உழைப்புக்குத் தயங்காத இலக்கியப் பதிவாளர் ( கிரானிக்ளர்). சிட்டியின் சென்னை வீட்டில் சுமார் முப்பது வருடங்கள் முன்பு அவர்,தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, இந்துமதி ஆகியோருடன் தி.ஜாவின் படைப்புகள் பற்றி தற்செயலாக விவாதித்த அனுபவம் இன்னமும் மனதில் பசுமையாக இருக்கிறது. சிட்டி தீவிரமும், நகைச்சுவையும், கலந்த அரட்டைகளில் புகழ் வாய்ந்தவர். சுபமங்களா இதழுக்காக அவரிடம் நான் எடுத்த பேட்டியிலிருந்து ஓரிரு பதில்கள் இதோ :

    மணிக்கொடிக்கும் கல்கிக்கும் இலக்கியம் பற்றிய கருத்து வேறுபாடு அந்த அளவு தகராறாக ஆனது ஏன் ?

    சிட்டி: அது ஒரு அனிமாசிட்டியாகவே ( ஆழ்ந்த வெறுப்பாகவே) ஆகிவிட்டது. பரஸ்பரம் இருந்த பொறாமைதான் காரணம். 'ஜெலசி' என்றால் அதை எப்படி அர்த்தப்படுத்துவதென்று தெரியவில்லை. மணிக்கொடி அப்போது 900 பிரதிகள் அச்சிட்டோம். ஆனந்த விகடன் 52ஆயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருந்தது. ஆனால் கல்கிக்கு நெருக்கமானவர்களான ராஜாஜி, டி.கே.சி எல்லாம் மணிக்கொடியைப் படித்தார்கள். அது கல்கிக்குக் கஷ்டமாயிருந்தது. இந்தப் பக்கமோ அவருக்கு எவ்வளவோ வசதிகள் எல்லாம் இருக்கிறது ; இன்னும் நன்றாகச் செய்யலாமே. நமக்குச் செய்வதற்கான வசதிகள் இல்லையே என்ற எரிச்சல் இருந்தது....

    வ.ராவின் சமூகச் சீர்திருத்தத்தால் கவரப்பட்டது பற்றியெல்லாம் கூறுகிற நீங்கள் எப்படி, 1930ல் அரிஜன ஆலயப் பிரவேசத்தை ஏற்க மறுத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை இப்போது ' பரமாச்சார்யா' என்ற தலைப்பில் எழுதினீர்கள் ?

    சிட்டி: அவர் காந்தியிடமே இது பற்றி சொல்லியிருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தின் தலைவர் ( ) என்ற விதத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்று. என்னைப் பொறுத்தவரை, அவரை ஒரு மனிதராகவே அணுகுகிறேன். ஹி இஸ் எ கிரேட் மேன். அவரை தெய்வமாகவோ,கடவுளாகவோ, பக்தியுடனோ பார்த்து எழுதவில்லை. ஒரு மாபெரும் மனிதர் என்ற முறையில் அவர் என்னைக் கவர்ந்தவர். மத அடிப்படையில் , ஜாதி அடிப்படையில், கடவுள் பெயரால் நடக்கிற கொடுமைகளை (tyranny) நான் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு சடங்குகளிலும் நம்பிக்கை கிடையாது.... ( ஞாநி எடுத்த நேர்காணல்களின் தொகுப்பான 'கேள்விகள்' நூலிலிருந்து.)

    ராஜரங்கன் லயோலா கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது சென்னை மேக்ஸ் முல்லர் பவனில் சா.கந்தசாமியுடன் இணைந்து இலக்கியச் சங்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது எனக்குப் பழக்கமானவர். நான் 1978ல் ஆரம்பித்த பரீக்ஷா நாடகக் குழுவின் முதல் நாடகமான இந்திராபார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் அவரை ஒரு பிணமாக நடிக்கச் செய்தேன். ஒரே ஒரு காட்சியில் வசனமும் உண்டு. பின்னர் 1981ல் என் பலூன் நாடகத்தில் முக்கியமான பாத்திரமான ஜட்ஜாக நடித்தார். இனிமையாகப் பழகக் கூடியவர். சிறுகதை எழுதுவது முதல் கர்நாடக இசை வரை எதிலும் உற்சாகமாக ஈடுபடக்கூடியவர். இந்திரா பார்த்தசாரதியின் பசி நாடகத்தை அவரும் பிரேமா சதுர்வேதியும் 28 வருடங்கள் முன்பு நடித்தது போல அதன் பின் யாரும் நடிக்கவில்லை.

    சுரதாவுடன் எனக்கு ஒரே ஒரு முறை தொலைபேசியில் பேசிய பழக்கம் மட்டும்தான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக, முக்கியமானவர்களின் பிறந்த தினங்களை சேகரிக்க வேண்டியிருந்தது. அவர் இதை ஒரு பொழுதுபோக்காக நீண்ட காலம் சேகரித்து வந்தவர். முக்கியமானவர்களின் பிறந்த தினம் போலவே அவர்களுடைய ஜாதி, உட்பிரிவு வரை தெரிந்து வைத்திருப்பார். சுரதாவின் திரைப்படப் பாடல்களும், ஆனந்த விகடனில் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் முன்பு புதுக்கவிதை சர்ச்சையில் அவர் எழுதிய கவிதைகளும் எனக்குப் பிடித்தவை. அவருடைய எளிமையான வாழ்க்கை முறை பற்றிப் பலரும் சொல்லும் தகவல்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தருகின்றன.

    நெய்வேலி லிக்னைட் நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைத்தது கருணாநிதிக்கு வெற்றியா, அல்லவா ? அரசுத் துறைப் பங்கு விற்பனைகளை இப்படி எத்தனை காலம் தடுத்து வைக்க முடியும் ?

    முருகேசன்.ஆர், பண்ருட்டி

    உண்மையில் அது ஜெயலலிதாவுக்கும் இடதுசாரிகளுக்கும் மட்டுமான வெற்றி. கடைசி நொடியில் உள்ளே நுழைந்து நாடகமாடி தன் அரசியல் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியவர் கருணாநிதி. ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டாமல் இருந்திருந்தால் மத்திய ஆட்சியிலிந்ருந்து விலகும் மிரட்டல் அரசியல் ஸ்டண்ட்டில் நிச்சயம் ஈடுபட்டிருக்க மாட்டார். காவிரி முதல் பெட்ரோல் பிரச்சினை வரை எதிலும் இந்த மிரட்டலைச் செய்யாதவர் இப்போது செய்ததற்கு தொழிலாளர் மீதன பாசமோ, அரசுத்துறையைக் காப்பாற்றும் சோஷலிச லட்சிய உறுதியோ நிச்சயம் காரணமல்ல. நெய்வேலியை விற்க அமைச்சரவையில் முடிவு எடுத்தபோது அதை தி.மு.க அமைச்சர்கள் ஏன் எதிர்க்கவில்லை என்பதை அவரால் ஒருபோதும் நியாயப்படுத்தவே முடியாது.

    பொதுத்துறையில் நஷ்டம் வரும் நிறுவனங்களை மட்டுமே தனியாருக்கு அளித்து, அவர்களுடைய 'திறமை'யினால் அவற்றை சரி செய்யலாம் என்று ஆரம்பத்தில் சொல்லபட்டது. ஆனால் தனியார் முதலாளிகள் அதற்குத் தயாராக இல்லை. பொதுத் துறையில் லாபகரமாக இயங்கும் நிறுவனங்களை வாங்குவதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். சமூக நலத்திட்டங்களுக்கு அரசிடம் பணம் இல்லை. எனவே லாபகரமான நிறுவனங்களை விற்று வரும் பணத்தில் அவற்றை நிறைவேற்றலாம் என்று இன்னொரு கருத்து சொல்லப்பட்டது. போலீஸ், ராணுவம், வெளி உறவு, சமூக நலத் திட்டங்கள் தவிர வேறெதுவும் அரசின் கையில் இருக்கக்கூடாது என்பதுதான் உலக வங்கி போன்ற் சர்வதேச அமைப்புகளின் கருத்து. அதை நோக்கி டெல்லி அரசையும் மாநில அரசுகளையும் அவை நெருக்கி வருகின்றன. இந்த தொடர் கதையில் இன்னொரு அத்தியாயம் நெய்வேலி என்று புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.இ.அதி.மு.க ஆகிய அனைத்துக் கட்சிகளும் சிறு வித்யாசங்கள் இருந்தாலும், அடிப்படையில் இந்தப் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுபவைதான். இடதுசாரிகள் மட்டுமே இந்தக் கொள்கையை ஏற்காதவர்கள். ஆனால், மாற்று வழிகள் பற்றிக் குழப்பத்தில் இருப்பவர்கள். அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கையை முற்றிலும் தடுத்து நிறுத்தும் அரசியல் பலமோ, சமூக செல்வாக்கோ அவர்களுக்கு இல்லை. அத்தகைய அரசியல் பலமும் சமூக செல்வாக்கும் ஏற்படும் வரை வேறு உத்திகளை அவர்கள் யோசிக்கத் தேவையான துணிவான கற்பனை ஆற்றலும் அவர்களுக்கு இல்லை. தி.மு.க போன்று இரட்டை வேடம் போடும் சக்திகளை அம்பலப்படுத்துவதற்கு பதில் ஆதரிக்கும் கட்டாயத்தையும் அவர்களே ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். நெய்வேலிப் பங்குகளை அரசு விற்பதை அவர்களால் தள்ளிப் போடச் செய்ய முடியுமே தவிர ஒரேயடியாக நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம். நெய்வேலியை விட ஆபத்தான பங்கு விற்பனை நால்கோ எனப்படும் அரசின் அலுமினிய நிறுவனத்துடையதாகும். நெய்வேலி லிக்னைட் ஈடுபட்டுள்ள துறையில் ஏறத்தாழ அரசின் ஏகபோகமே நிலவுகிறது. ஆனால் அலுமினியத் துறையில் அரசைத் தவிர இரண்டு தனியாரின் ஆதிக்கம் உள்ளது. அவற்றின் நோக்கமே அரசு வசம் உள்ள லாபகரமான நால்கோவைக் கைப்பற்றுவதுதான். அதன் பிறகு முற்றிலும் தனியார் ஏகபோகமாக அது மாறிவிடும். அதைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது நால்கோ அரசு வசம் இருப்பதேயாகும். இந்த விவரங்களையெல்லாம் நெய்வேலிக்காகப் போராடியவர்கள் தமிழக மக்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லவில்லை.

    அரசுத் துறைப் பங்குகளை தனியாருக்கு விற்பதை இந்தியாவின் இறைய அரசியல் சூழலில் தள்ளிப் போட மட்டுமே முடியும். இப்படிப்பட்ட நிலையில் தொழிற்சங்க இயக்கம் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், தானோ, தொழிலாளர்களோ பங்குகளை வாங்கும் முயற்சியில்தான் ஈடுபடவேண்டும். அரசுத்துறை, தனியார் துறை இரண்டுக்கும் மாற்றாக, தொழிலாளர்கள் துறை வளர்க்கப்பட வேண்டும். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தொழில் துறையிலும், தொழிலாளருக்கே ஆலை சொந்தம் என்ற முயற்சி இன்றைய தாராளமய பொருளாதார சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியாகும். தொழில் விரிவாக்த்துக்கும் முதலீடுகளுக்கும் தனியார் முதலாளிகளுக்கு நிதி நிறுவனங்கள் கடன் தருவது போல, தொழிலாளர்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை வாங்கவும் கடன் தரவேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும்.

    மூன்றாவது அணி ?
    கிருஷ்ணமூர்த்தி, மின்னஞ்சல்

    இந்தியச் சூழலில் டெல்லி அரசியலில் மூன்றாவது அணி முயற்சி முட்டாள்தனமானது. பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் சக்திகள் முற்றிலும் பலவீனமடையாத நிலையில் அங்கே மூன்றாவது அணி முயற்சிகள், பி.ஜே.பிக்கே சாதகமாக முடியும். காங்கிரசுடன் ஓரணியில் நீடிப்பதன் மூலம்தான் இடதுசாரிகள் மதவாத அரசியலை மறுபடியும் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். காங்கிரசி பொருளாதாரக் கொள்கையின் கோளாறுகளைத் தடுக்க ஒரே வழி, ஆட்சியில் இடதுசாரிகளும் பங்கேற்பதுதான். உண்மையில் மூன்றாவது அணிக்கான நியாயம், சாத்தியம் இரண்டும் இருப்பது தமிழகத்தில்தான். இங்கே தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றான ஒரு மூன்றாவது அணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து அதற்கான வாய்ப்பை நழுவ விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் விஜய்காந்த்துடன் இடதுசாரிகள் இணைந்தால், அடுத்த கட்டமாக காங்கிரஸ் அவர்களுடன் இணைய முடியும்.

    டாவின்சி கோட் படத்துக்குத் தமிழக அரசு போட்ட தடையை உயர்நீதி மன்றம் தவறு என்று தீர்ப்பளித்திருக்கிறதே ?
    கோபாலகிருஷ்ணன், திருச்சி

    பராசக்தி கருணாநிதியைக் கொலை செய்த சன் டிவி கருணாநிதியின் முகத்தில் நீதி மன்றம் மக்கள் சார்பாக விட்ட அறை இது. குறுகிய ஓட்டு அரசியலுக்காக, இதில் அப்பீல் தாக்கல் செய்யும் அசட்டுத்தனத்தில் கலைஞர் ஈடுபடமாட்டார் என்று நம்புவோம்.

    டெல்லி அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக இயக்குநர் வேணுகோபால் - அமைச்சர் அன்புமணி மோதலில் யார் பக்கம் நியாயம் ?
    எஸ். ஜெயகுமார், மின்னஞ்சல்

    வேணுகோபால் தலைமையில் அந்த மருத்துவமனை இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் பாசறையாக மாற்றப்பட்டிருந்தது. அவரை பி.ஜே.பி ஆதரித்து பிரதமரிடம் தூது போவதே அவர் யாருடைய சார்பில் அரசியல் செய்தார் என்பதை அம்பலப்படுத்துகிறது. அமைச்சர் அன்புமணி பக்கமே இந்த விஷயத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.

    கண்டதேவி தேரோட்டம் அமைதியாக நடந்து முடிந்தது பற்றி ?
    கருணாகரமூர்த்தி, மின்னஞ்சல்

    புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் திருமாவும் செல்லவிடாமல் தடுத்துவிட்டு அமைதியாக நடந்ததாகச் சொல்வது சென்ற அரசின் அணுகுமுறைத் தொடர்ச்சிதான். எல்லா ஜாதித் தலைவர்களும் கலந்துகொண்டாலும் அமைதியாக திருவிழா நடக்குமானால் மட்டுமே மெய்யான இணக்கம் ஏற்பட்டதாகப் பொருள்.

    

    Tamil Magazines
    on keetru.com


    www.puthuvisai.com

    www.dalithumurasu.com

    www.vizhippunarvu.keetru.com

    www.puratchiperiyarmuzhakkam.com

    http://maatrukaruthu.keetru.com

    www.kavithaasaran.keetru.com

    www.anangu.keetru.com

    www.ani.keetru.com

    www.penniyam.keetru.com

    www.dyfi.keetru.com

    www.thamizharonline.com

    www.puthakam.keetru.com

    www.kanavu.keetru.com

    www.sancharam.keetru.com

    http://semmalar.keetru.com/

    Manmozhi

    www.neythal.keetru.com

    http://thakkai.keetru.com/

    http://thamizhdesam.keetru.com/

    மேலும்...

    About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
    All Rights Reserved. Copyrights Keetru.com