Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2005
விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் 27

பவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் 3


- ஏ.பி. வள்ளிநாயகம்


‘தமிழன்' இதழில் அப்பாதுரையார் மட்டுமல்ல, அவருடைய ஒரே மகளான அன்னபூரணி அம்மையாரும் தந்தையின் வழியைப் பின்பற்றி, தன்மான எழுத்தோவியங்களைப் படைத்து வந்தார். மாபெரும் கலாச்சார மனிதர்களாக தம் மக்கள் திரளைப் பாவித்த அவர், தற்குடிகளின் மானுட ஓர்மை வாழ்வியலை நிராகரித்து, குறுக்கீடாக முளைத்த பார்ப்பனியச் சமூக அமைப்பிற்கு எதிர்க்குறியீடு ஆனார். பார்ப்பனியம் விளைவித்த சாதியம், ஆணாதிக்கம் வீழவே தன்னை அணிப்படுத்திக் கொண்டார்.

Appadurai அப்பாதுரையாரின் சமூக விடுதலை வியூகத்திற்கான எல்லா முனைப்புகளிலும் இணை சேர்ந்து, தந்தைக்கு உற்ற தோழமையாக வாய்த்த அவர், தலைவர் பெரியார் முன்னிலையில் சுயமரியாதை இயக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழ் நாடெங்கும் பங்கேற்றார். காலத்தின் நகர்வில் அவர் சுயமரியாதை இயக்கத்திற்கு மட்டுமல்ல, ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கும், பவுத்த சங்கத்திற்கும் ஆக்கத்தேட்டத்திற்கான ஆளுமையாக வளர்ந்து நின்றார். சமூகப் பாட்டாளி வர்க்கத்தையும், பெண்களையும் விடுதலை மார்க்கத்தினுள் செலுத்தும் மாற்றங்களை முன்னெடுக்கும் திறன் கொண்டவராய் அன்னபூரணி அம்மையார் இயங்கக் கடமைப்பட்டவர் ஆனார்.

அக்காலத்தில் சத்தியமூர்த்தி (அய்யர்), எம்.கே. ஆச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர (சாஸ்திரி) போன்றோர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் பெண் தோழர்களையும் அவதூறு செய்து வந்த வேளையில், அன்னபூரணி அம்மையார் பெண்ணுரிமை குறித்து ஆழமான, முழுமையான பார்வையைக் கொண்டிருந்தார். பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும், பொதுவாழ்வில் தலையிடவும், ஒரு சமூகப் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு, சாதி ஆணாதிக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் பெண் விடுதலை ஆகியவற்றில் தடம் பதித்து முன்னகர்ந்தார்.

அன்னபூரணி அம்மையார் - ரத்தினசபாபதி வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம், பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான பரஸ்பர விருப்பம், அன்பு, மரியாதை, தோழமை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட தமிழரும் முற்படுத்தப்பட்ட தமிழரும் இணைந்த சாதி மறுப்பு விதவை ஏற்பு கொண்ட இந்த வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம், சுயமரியாதை இயக்கம் பவுத்த சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த புரட்சிகர அர்த்தத்தில் முழுமையை எட்டிய நிகழ்வாகும். 10.4.1932 அன்று நடந்த இவ்வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவில், பெங்களூர் சாக்கிய பவுத்த சங்க உபாசகர் பி.எம். தருமலிங்கம், "மெய்ம்மதி போதனாவுபசார வாழ்த்தினை' நல்கியது குறிப்பிடத்தக்கது.

சுயமரியாதைத் திருமணங்கள் என்பது, அக்காலத்தில் இக்காலம்போல பார்ப்பனரை மட்டும் விலக்கி ஏமாற்றுவது இல்லாமல் சொல்லும் செயலும் இணைந்த சாதி மறுப்பு மணமாக, விதவை மணமாக, விவாகரத்துப் பெற்றவர் மணமாக, பெண்ணடிமைச் சின்னமான தாலி இல்லாத மணமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில், சுயமரியாதை இயக்கத்தின் உண்மையே, அப்பாதுரையாரை இயக்க ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சுயமரியாதை இயக்கத்தில் இணைத்து வைத்தது.

அப்பாதுரையார், பவுத்தத்தை மீண்டும் தற்குடிகளின் கூட்டு நனவாக்க சமூக விஞ்ஞானியாய்த் திகழ்ந்தார். அறிவியல் விஞ்ஞானிக்குரிய கனவு காண்பவராகவும் இருந்தார். அறிவியல் வளர்ச்சியினை எதிர்பார்க்கும் விண்வெளிக்குரிய ஆராய்ச்சியினை இன்றைக்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, குறிப்பாக 23.5.1934 அன்று தமிழனில் வெளியிட்டார். "விண்வெளி கிரகங்களுக்குச் செல்லல்', "விஞ்ஞான டெலஸ்கோப்' போன்ற அவரின் விண்வெளி நோக்கிய பயணக் கட்டுரைகள், சந்திர மண்டலத்திற்கு மனிதர் இன்னின்ன வழிமுறைகளைக் கையாண்டு செல்லலாம் என்பதை அறிவித்தது. மேலும், அவரது ஆராய்ச்சியின் நீட்சி சந்திர மண்டலத்திற்கு மட்டுமல்ல; புதன், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்களுக்கும் மனிதர் செல்ல முடியும் என்று தெரிவித்தது. அந்த கிரகங்களின் இயக்கத்தன்மைகளை தொல்தமிழ்ச் சாத்திரங்களின் அறிவு புலத்தின் ஆதார சுருதியோடு எழுதிய அப்பாதுரையார், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர் விரைந்த காலத்திற்குள் செல்ல முடியும் என்றும், அக்கிரகத்தில் நீர்நிலை உண்டு என்றும், இதனால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் குடியேறி உயிர் வாழ முடியும் என்றும் தன் ஆராய்ச்சியை முடித்து வைத்தார்.

இனம், மொழி, அரசியல், அறிவியல் தொண்டில் மட்டுமல்லாமல் கலைத் தொண்டிலும் அப்பாதுரையாரின் கவனம் சென்றது. 1934 ஆம் ஆண்டில் அப்பாதுரையார் தன் மருமகன் பி.ஆர். ரத்தின சபாபதியுடன் இணைந்து "சமத்துவ நடிகர் சங்கம்' என்ற அமைப்பினைத் தோற்றுவித்தார். இச்சங்கத்தின் "கலப்பு மணம்' என்ற நாடகம் புகழ் பெற்று, கோலார் தங்க வயல் வடஆர்க்காடு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. இந்நாடகத்தின் பெரும்பாலான அரங்கேற்றங்கள், தலைவர் பெரியார் முன்னிலையில் நடந்தேறின. கலையை பகுத்தறிவு வளர்ச்சிக்கும் சாதி ஒழிப்புக்கும் கருவியாக்கி, சமூக விடுதலைக்கு முன்நிபந்தனையாக இருக்கும் பண்பாட்டுத் தளத்தையும் உயர்த்திப் பிடிக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது.

“கலப்பு மணத்தின் கருத்து வீச்சால் சாதி இந்துக்களுக்கும், பகுத்தறிவு சமத்துவ உணர்வாளர்களுக்கும் நேரடி கருத்து மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. அச்சமயத்தில் அப்பாதுரையார், 13.12.1934 நாளிட்ட "தமிழன்' இதழில் "பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்ற தலைப்பில் தொடர் எழுதினார். பிறகு அது "பரலோகத்தில் இருக்கும் பரம சிவனுக்கு' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. இந்நூல் இந்து மதத்தின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியதால், சாதி இந்துக்கள் முதல் மைசூர் இந்து மன்னர் சாமராஜ உடையார் வரை கலகலகத்துப் போனார்கள்.

இதன் விளைவாக மைசூர் மன்னர் "தமிழன்' இதழினைத் தடை செய்து "தமிழன்' ஆசிரியர் அப்பா துரையாருக்கும் வெளியீட்டாளர் பி.எம். ராஜரெத்தினத்திற்கும் ஆணைபிறப்பித்தார். தமிழனுக்கு வந்த தடை கர்நாடகம், வடதமிழகம் மற்றும் பர்மா, இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் தெரிந்தது. "குடிஅரசு', "புரட்சி' இதழ்களோடு தமிழனையும் சேர்த்து வாங்கிப் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த பெரியார், "தமிழன்' தடை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தமிழனுக்கு ஏற்பட்ட தடையை நீக்குமாறு மைசூர் மன்னர் சாமராஜ உடையாருக்கு தந்தி கொடுத்தார். "தமிழன்' தடை செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தார்.

அப்பாதுரையாரும், ராஜரெத்தினம் தமிழனை மீண்டும் வெளியிட சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் "தமிழன்' என்ற பெயரில் இதழ் நடத்தாமல் வேறொரு பெயரில் நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு எழுதியது. இத்தீர்ப்பினை எதிர்த்து அப்பாதுரையாரும் ராஜரெத்தினம் மேல்முறையீடு செய்தனர். இம்முறையும் நீதிமன்றம் "தமிழன்' என்ற பெயரில் இதழ் நடத்தவே கூடாது என்று உறுதியான தீர்ப்பை வழங்கியது. சுயமரியாதைப் போராளிகளான அப்பாதுரையாருக்கும் ராஜரெத்தினத்திற்கும் வேறொரு பெயரில் இதழைக் கொண்டு வருவதில் உடன்பாடில்லை. தமிழனுக்குத் தடை ஏற்பட்டதில் தன் மூச்சுக் காற்று தடைப்பட்டதான அவஸ்தையை அப்பாதுரையார் அடைந்தார்.

மைசூர் சமஸ்தானத்தின் கருத்துரிமைத்தடைத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகத்திலும், வடதமிழ் நாட்டிலும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இப்பிரச்சார இயக்கத்தின் தன்மைக் கருத்தாளர்களாக அப்பாதுரையாரும், மகள் அன்ன பூரணியும், மருமகன் ரத்தினசபாபதியும் பங்கேற்று, இந்துத்துவத்தை எதிர்த்து இனி தீவிரமாக களமிறங்கப் போவதாக குரல் கொடுத்தார்கள். "எந்தப் பெயரும் இருந்துவிட்டுப் போகிறது; ஏதாவது ஒரு பெயரில் இதழினைத் தொடங்குங்கள்' என்று எவரும் அப்பாதுரையாரைக் கேட்டுக் கொண்டதில்லை. அப்பாதுரையாரின் மான உணர்ச்சியை மக்களும் மதித்தார்கள்.

Budda 14.10.1934 அன்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் அப்பாதுரையாரின் மகன் ஜெயராமனுக்கும் இந்திராணிக்கும் ராகுகாலத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் செய்துவிக்க பெரியார் சென்றபோது, சாதி இந்துக்களால் பதட்ட நிலை ஏற்பட்டது. பெரியார் வருகைக்கு அரசு தடைபோட்டு விட்டதாக நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. கோலாரில் தீண்டாமை விலக்கு பணியைச் செய்து வந்த கோபால் சாமி (அய்யர்) அதிகாரிகளைச் சந்தித்து, தடை உத்தரவு போடுவது கலவரத்தை உண்டாக்கும் என்று எடுத்துச் சொன்னதின் பேரில், பெரியார் திருமண நிகழ்வில் மட்டுமே பங்கேற்க வருகிறார் என்று உறுதியான பிறகே மணவிழாவினை நடத்த முடிந்தது.

1938 ஏப்ரல் 21 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, இந்தியை கட்டாயப்பாடமாக்கினார். இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைமையேற்ற பெரியார், இந்தியை எதிர்த்து நிற்க தம்மோடு தோள் கொடுக்க அப்பாதுரையாரை அழைத்தார். பவுத்த சங்கம் சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவினை நல்கிய அப்பாதுரையார், தமிழ் நாட்டில் இருந்து இந்தியை விரட்டியடிக்கும் வரை உறுதுணையாக இருந்தார். 26.6.1938 அன்று சென்னை கடற்கரையில் ஏறத்தாழ 1000 பெண்கள் உட்பட 50,000 பேர்களுக்கு மேல் பங்கேற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் வீர உரையாற்றி, அனைவரையும் சிலிர்த்தெழச் செய்தார்.

அப்பாதுரையாரின் சமூக வாழ்வைப் பாராட்டி, கோலார் தங்கவயலிலுள்ள பவுத்த சங்கத்தில் அவரது படத்திறப்பு விழா, 1942 ஆம் ஆண்டு மே திங்களில் நடந்தேறியது. அச்சமயம் ஈ.வெ.ரா. கல்விக் கழகம், சமரச சன்மார்க்க நடிகர் சபா, சீர்திருத்த வாலிபர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பாராட்டிதழ்கள் வழங்கப்பட்டு அப்பாதுரையார் சிறப்பிக்கப்பட்டார். அப்பாதுரையாரின் அப்பழுக்கற்ற தொண்டினைப் பாராட்டும் வகையில், 15.5.1950 அன்று கோலார் தங்க வயல் தி..க. சார்பில் மாபெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் அப்பாதுரையார் 310 பக்கங்களைக் கொண்ட "புத்தர் அருளறம்' என்ற நூலினை வெளியிட்டார். இந்நூல் பவுத்தத்தினுள் ஊடுருவிய பார்ப்பனர்களையும், பார்ப்பனியர்களையும் குலைநடுங்கச் செய்தது. உண்மையான பவுத்த சாராம்சங்களுக்கு உரை கல்லாகத் திகழ்ந்தது.

புரட்சியாளர் அம்பேத்கர், 1954 இல் கோலார் தங்க வயலுக்கு வருகை தந்தபோது, அப்பாதுரையாரைச் சந்தித்து முறையான பவுத்தத்தை வடித்தெடுக்கும் பொருட்டு கலந்துரையாடினார். பவுத்தத்தை சீரழித்த பார்ப்பனியக் கருத்தியல் வன்முறையை ரத்து செய்தவர்களாய், பவுத்த சாராம்ச வகைமைகளை வளர்த்தெடுப்பவர்களாய் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டது, இருவரின் பவுத்த ஞான ஆளுமையை வெளிப்படுத்தியது. காலத்தை மிக அபூர்வமாக பாவிக்கும் புரட்சியாளர், அப்பாதுரையாரோடு சில மணிநேரங்கள் செலவிட்டுச் சென்றது தங்கவயலில் அப்பாதுரையார் பெற்றிருந்த மதிப்பை மேலும் உயரப்படுத்தியது.

பெரியார், ஈரோட்டில் 1954 சனவரி 23 இல் புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டைக் கூட்டினார். மாநாட்டுக்கு உலக பவுத்த சங்கத் தலைவரும், சோவியத் ரஷ்யாவின் இலங்கை தூதுவருமான ஜி.டி. மல்லலசேகரா தலைமை வகித்தார். அப்பாதுரையார் புத்தரின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 6.10.1957 அன்று தங்கவயல் கென்னடிஸ் கலையரங்கில், வட்ட கலைமன்றத்தின் சார்பில் அப்பாதுரையாரை கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவிக்கும் விழா நடைபெற்றது. தி..க. பொதுச் செயலாளர் ரா. நெடுஞ்செழியன் அப்பாதுரையாருக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி எனும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பையும் வழங்கிச் சிறப்பித்தார். 1959 இல் அப்பாதுரையார் தலைமையில் தங்க வயலில் புத்தர் விழா நடந்தது. இவ்விழாவில் பெரியார் சிறப்புரையாற்றினார்.

இம்மண்ணின் தற்குடிகளின் இயல்புகளின் இயைபு ஆன அளப்பரிய அறச் சிந்தனையான பவுத்தத்தைக் கொண்டு, சமூக நோயான பார்ப்பனியத்தை விரட்டிய அப்பாதுரையார், அப்பணியினிடையே 21.1.1961 அன்று வாலாஜா வன்னிமேடு கிராமத்தில் காலமானார். அவரின் புகழுடல் தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டு பவுத்த முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பாதுரையார், தன்மனித இருப்பை பவுத்தமானுடமாக்கியவர். மாற்றுகளின் கர்ப்பம் தாங்கி ஒன்றியவர். தன்வாழ்க்கை வெகுமக்களுக்கு உண்மையானதாகவும் முன்னேற்றமானதாகவும் இருக்க வேண்டும் என்ற பேராசைக்குள் தன்னை அடக்கிக் கொண்டவர். தன் மனித வாய்ப்பினை மானுடத்தை முழுமையடையச் செய்யும் வலிமை என்று நம்பியவர். பகுத்தறிவும் சமத்துவமே தன்னை அள்ளிக்கொண்டுபோக அனுமதித்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் சரிபகுதியை மனிதகுல முன்னேற்றம், மனித மனங்களாவிய பரிமாற்றம் என்ற செயல்முறைமைகளுடன் பவுத்தமயமாதலை மனித இருப்பிற்கும், இயங்கியலுக்கும் கோலார் தங்க வயலில், வட தமிழகத்தில், சென்னை மாநகரில் அப்பாதுரையார் அச்சாணியாக்கினார். இவர் தமிழியத்தின், தலித்தியத்தின், பெண்ணியத்தின் முன்னோடி ஆவார். அவர் காலத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்ட தோழமை என்பது பவுத்தத்தையே அர்த்தப்படுத்தியது. அவர் தடம் பதித்த மண் மொத்தம் புத்தரின் செய்தியைத் தான் எதிரொலித்தது. அப்பாதுரையாரின் அற்புதங்களுக்கு ஆட்படாதவரை, தற் குடிகளுக்கு அவலங்கள்தான் மிஞ்சி நிற்கும் என்பதை இக்கால வரலாறு, நம் கன்னத்தில் அறைந்தே மொழிகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com