Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2005
பாபாசாகேப் பேசுகிறார்

இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை


இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன? இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர்.

Ambedkar குடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா? உண்மை நிலை என்ன? ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை, இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது. ஜனநாயகத்தின் வேர், அரசாங்கத்திலோ, நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோ நிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.

"சமூகம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், "சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.

இத்தகைய சிறப்புத் தன்மைகள் இந்திய சமூகத்தில் காணப்படுகின்றனவா? இந்திய சமூகம் தனிமனிதர்களைக் கொண்டிருக்கவில்லை. இது, எண்ணற்ற சாதிகளின் தொகுப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது, இந்திய சமுகத்திற்கு மட்டுமே உள்ள தனித்தன்மையான வாழ்வியல் முறையாகும். எனவேதான், இங்கு ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள மறுக்கின்றனர்; மற்றவர்களுக்கு இரங்கும் தன்மையும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இது குறித்து விவாதிப்பது தேவையற்றது. சாதி அமைப்பு நிலைத்து நீடித்திருப்பது, அச்சமூகத்தின் குறிக்கோளை மறுப்பதாகவும், அந்த வகையில் அது ஜனநாயகத்தையே மறுப்பதாகவும் அமைந்து விடுகிறது.

இந்திய சமூகம், சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையில்தான் எல்லாமே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திய சமூகத்திற்குள் நுழைந்தால், நீங்கள் மிக வெளிப்படையாக சாதியைக் காண முடியும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண், ஒரு சாதியை சார்ந்தவர்களாக இல்லை என்ற சாதாரண காரணத்திற்காக ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுடன் உண்ணவோ, திருமணம் செய்த கொள்ளவோ முடியாது. இதே காரணத்திற்காக, ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைத் தொட முடியாது. அரசியலுக்குச் சென்று அதில் இணைந்து செயல்பட்டுப் பாருங்கள்; அங்கும் சாதி எதிரொலிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

தேர்தலில் ஒரு இந்தியன் எப்படி வாக்களிக்கிறான்? ஒரு இந்தியன் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பான். வேறு யாருக்கும் அவன் வாக்களிக்க மாட்டான். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி, தேர்தல் நலன்களுக்காக சாதி அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்களோ, அந்த சாதியைச் சார்ந்திருப்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக இருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அது உண்மையில் சாதி அமைப்பை ஆதரிக்கவே செய்கிறது.

தொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். ஒரு தொழிற்சாலையில் உயரிய பதவியில் அதிகளவு சம்பளம் பெறுபவர், அந்த தொழிற்சாலையின் உரிமையாளருடைய சாதியைச் சார்ந்தவராகவே இருப்பார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். குறைந்தளவு சம்பளம் பெறும் கடைநிலைப் பணிகளில் மட்டுமே பிற சாதியை சார்ந்தவர்களைக் காண முடியும். வணிகத் துறைக்குச் சென்றாலும் இதே நிலையைக் காணலாம். ஒட்டு மொத்த வணிகத் துறையும் ஒரேயொரு சாதியின் காமாக அமைந்திருக்கிறது. வேறு எவருக்கும் இங்கு அனுமதி இல்லை.

'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956' டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு' : 17 பக்கம் : 519



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com