Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
துயரங்களின் பதிவுகள்
அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்புகளும்
தமிழ்நதி

1983

வெயில் இன்னும் புறப்பட்டிருக்கவில்லை. பனி பெய்யும் இளங்காலை. மரங்களடர்ந்த கானகப் பகுதியிலிருந்து மயிலொன்று அழைத்துக்கொண்டேயிருக்கிறது. திருகோணமலைக்குச் செல்லும் வழிச்சாலையிலுள்ள பன்குளம் என்ற இடத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கிறாள் வாசுகி. பனிக்குளிர் தூக்கத்தை நீடித்துவிட்டது. இரும்புப்பெட்டியுள் சிரட்டைக்கரி நிறைத்து சீருடையை அழுத்த அன்று நேரமிருக்கவில்லை. கண்ணாடியின் முன் கழித்த நேரத்தைக் குறைத்திருக்கலாம். கசங்கிய சீருடையை விரல்களால் நீவிவிட்டபடி வெகுநேரம் நின்றபின் பேருந்து வருகிறது. வழக்கமான முகங்கள்ஞ்கையசைப்புகள்ஞ் புன்னகைகள்ஞ்தோழிகளை நெருங்கி கலகலக்க ஆரம்பிக்க, நேரத்திற்குச் சிறகு முளைக்கிறது. மாணவிகளின் சிரிப்பில் பேருந்து களைகட்டுகிறது.

பத்தாம் கட்டையருகில் குன்று குடைந்த வளைவை நெருங்குகையில் பேருந்தின் வேகம் குறைகிறது. சாரதி பின்னே திரும்பி பயணிகளைப் பார்த்து சிங்களத்தில் ஏதோ சொல்கிறார். பதற்றம் தீயெனப் பற்றிப் பரவுகிறது. முண்டியடித்து எட்டிப் பார்க்க முன்னே ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதும் “ஐயோ! கொல்லுறாங்களே! காலைப் பிடிச்சுக் கேக்கிறன் என்ரை அம்மாளாச்சி!” என்ற பயத்தில் தோய்த்தெடுத்த குரல்களும் வாளேந்தி அலையும் காடையர்களும் வெட்டுண்டு நிலத்தில் வீழ்ந்து துடித்துக்கொண்டிருப்பவர்களும் மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக இவர்கள் வந்த பேருந்தை நோக்கி ஓடிவருபவர்களும்ஞ் ‘ஜெயவேவா’என்று கூவியபடி துரத்தி வெட்டிச் சரிப்பவர்களும்! என்ன செய்வதென்றறியாது வாசுகி பேருந்திலிருந்து இறங்க எத்தனிக்கிறாள். பயம் மலைப்பாம்பைப்போல காலை இறுக்குகிறது. ‘எப்பா எப்பா’(வேண்டாம் வேண்டாம்) எனத் தடுக்கிறான் சாரதி. பேருந்து பிரார்த்தனைகளால் நிறைகிறது. வேகமாகப் பின்னெடுத்து வந்தவழியே திரும்பி பன்குளம் நோக்கிப் போகும்போது திரும்பிப் பார்க்கிறாள். வீதி நடுவில் துடிதுடித்தபடி கிடக்கிறது ஓருடல். அதற்கப்பால் செங்குழம்பாய் இரத்தம்ஞ் இன்னுமின்னும் உடல்கள் உடல்கள் உடல்கள்.

1983 ஜுலையின் இன்னுமொரு நாள்

“அக்கா!”விம்மலில் வெடித்துச் சொரியும் கண்ணீருடன் ஓடிவந்து அம்மாவை அணைத்துக்கொள்கிறா சின்னம்மா.

“இனி அங்கை கொழும்பிலை இருக்கேலாது வீடு சாமான்கள் எல்லாம் எரிச்சுப்போட்டாங்கள் நாங்கள் அகதியளாய்ப் போனம். அக்கா! கப்பல்லை ஏத்தி அனுப்பிப் போட்டாங்கள். ஐயோ தின்னாமல் குடியாமல் அருந்துரோகப்பட்டுச் சேர்த்தமே எல்லாம் போச்சு!”

கைநீட்டிப் பிரலாபிக்கும் சின்னம்மாஞ் திகைத்து முதுகு தடவும் அம்மாஞ் வாசுகி கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

1986

யாழ்ப்பாணத்திலிருந்து தனியார் பேருந்தில் திருகோணமலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறாள் வாசுகி. பக்கத்தில் அறைத் தோழி நந்தா. ஆனையிறவின் உப்புக்காற்றில் வன்மமும் கலந்திருக்கிறது. சோதனையிடவென பேருந்திற்குள் ஏறிய இராணுவத்தினன்களில் ஒருவன், கள்ளம் செறிந்த விழிகளால் சுற்றுமுற்றும் பார்த்தபின் நந்தாவின் மார்பை அழுத்துகிறான். வாசுகியின் கைப்பையைச் சோதனையிடுவதுபோல் விரல்களைப் பற்றி உள்ளங்கையில் சுரண்டுகிறான். அவன் கால்களுக்கிடையில் நொறுங்கும் தொடைகள் அருவருப்பும் வேதனையும் கோபமும் ஆற்றாமையும் பொங்கும் விழிகளால் நந்தா அவனைச் சுட்டெரிக்கிறாள். வாசுகியின் தோள்களை நனைக்கிறது நந்தாவின் கண்ணீர்.

“இவங்களைக் கொல்லுறாங்களில்லையே சுகி!”

1987

பல்கலைக்கழக வளாகத்துள் இந்திய இராணுவம் இரவோடிரவாக இறங்குகிறது. இருளில் குண்டுகள் இலக்கற்றுச் சீறிப் பாய்கின்றன. அதற்கருகில் இருந்த வீட்டிலிருந்த மாணவிகள் ஒருவர் கையை மற்றவர் பற்றிப் பிடித்தபடி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். லீமா இயேசுநாதர் படத்தின் முன் மண்டியிட்டிருக்கிறாள்.

“எல்லாம் வல்ல பரமபிதாவே! எங்களைக் காப்பாற்றும்”

“எழும்பு லீமா! வந்திடுவாங்கள் வந்திடுவாங்கள்”பயத்தில் அழுகை வருகிறது.

“ஆண்டவரே! எங்களில் இரக்கமாயிரும்”

பக்கத்தில் ஏதோ விழுந்து வெடிக்கிறது. பிரமாண்டமான வெளிச்சப் பூவொன்றிலிருந்து பொறி சிதறுகிறது. பேரோசை அமுங்கிய கணத்தில் பல குரல்களின் ஓலங்கள் ‘ஐயோ ஓடு ஓடு’ தறி கெட்டு ஓடுகிறார்கள். சிரித்துக் களித்து நடந்த வீதிகள் வழியே விழுந்து எழுந்து ஓடுகிறார்கள். பரமேஸ்வராச் சந்தியைக் கடந்து பழம் வீதியை நெருங்கியதும் நின்று மூச்சிரைக்க ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள்.

“அன்ரி! கதவைத் திறவுங்கோ! அங்கிள்! பயமா இருக்கு” பதிலில்லை. இரும்புக்கதவை உலுக்குகிறார்கள். வீடு மௌனமாய் இருக்கிறது. அடுத்த வீடும் அதற்கடுத்த வீடும். எங்கோ தொலைவில் இருக்கும் உறவுகளின் நினைவு கண்ணீரைப் பெருக்க தொடர்;ந்து ஓடுகிறார்கள்.

வாசுகி அந்த இருளில் நந்தாவைத் தேடுகிறாள்.

“நந்தா!” அவளில்லை! அதன்பிறகு எப்போதுமில்லை!

1988

நல்லூர்க்கோவில் அகதிகளால் நிறைந்திருக்கிறது. குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் பெரியவர்களின் உரத்த குரல்கள் இழந்தவர்களின் ஒப்பாரிகள். மூத்திர நெடி பசி சண்டை போர் திடீர் பைத்தியக்காரர்களை உருவாக்கியிருக்கிறது. உறக்கம் பெருங்கனவாயிருக்கிறது. உணவும்கூட. ஒரு இறாத்தல் பாணைச் சுற்றி ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.

“எனக்குப் பசிக்கேல்லை”லீமா சுருண்டு படுக்கிறாள்.

“நான் வெளியிலை போய்ப் பாத்துக்கொண்டு வாறன்”சசி அந்த ஒரு இறாத்தல் பானை ஏக்கத்தோடு பார்த்தபடி எழுந்திருக்கிறாள். அது முழுவதையும் சாப்பிட முடிந்தால்

“இரடி இரடி எண்டால்.!”

பாணைப் பங்குபோட்டுக்கொண்டிருந்த வாசுகிக்கு அழுகை வெடித்துக்கிளம்புகிறது. லீமா வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறாள். சசி மௌனமாகத் தனக்குரிய பங்கைப் பிய்த்துத் தின்னத் தொடங்குகிறாள்.

“பாணைத் தொட்டுக்கொண்டு சாப்பிட ஒரு தேத்தண்ணி இருந்தால் எவ்வளவு நல்லது”

1988ஆம் ஆண்டின் வேறொரு நாள்

திருநெல்வேலி, நல்லூர், கோப்பாய், கொக்குவில், கோண்டாவில் யாழ்ப்பாணத்தையண்டிய பகுதிகளையெல்லாம் போர் தன் பெருவாயால் தின்று தீர்த்தபடி ஊர்கிறது.

“மாதகலுக்குப் போவோம்”வாசுகியின் அப்பா சொல்லப் புறப்படுகிறார்கள். சைக்கிளின் பின் ‘கரியர்’இல் பயணப்பை. அம்மா நடக்கமுடியாமல் முன்பக்கத்தில் அமர்ந்தும் சிலசமயம் இறங்கி நடந்தும் வர அப்பா சிரமப்பட்டு உருட்டுகிறார். மானிப்பாயில் ஒரு பிணத்தின் தலையை நாயன்று பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறது. முகம் சிதைந்திருக்கிறது. துப்பாக்கி ஏந்தி அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் சீக்கியனின் முதுகுப் பரப்பகலம் மூன்றடி இருக்கலாம்.

“ஏழு கடல் தாண்டி வந்தோமே நாமேம்’’ என்ன பாட்டென்று தெரியவில்லை.

வாசுகியினுள் சமயத்திற்குப் பொருந்தாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

“இஞ்சை இடமில்லை”

மாமா வீட்டின் படியில் காலடி வைத்த மறுகணம் வார்த்தை கீழிறக்குகிறது. நடுத்தெருவில் நிர்வாணமாக்கப்பட்டதுபோல குறுகிப்போகிறாள் வாசுகி. மச்சாளும் தோழியுமானவளை நிமிர்ந்து பார்க்கிறாள். தகப்பனை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லத் துணிவில்லாமல் அவள் வேறெங்கோ பார்க்கிறாள். அம்மா வெட்கமில்லாமல் குசினிக்குள் போய்த் தேத்தண்ணி குடிக்கிறா. அம்மாவுக்குப் பசி. அப்பா அயர்ச்சி நிறைந்த விழிகளால் தனது அக்காவைப் பார்க்கிறார். மாமியின் கண்கள் கலங்கியிருக்கின்றன. வாசுகி மாதுளை மரத்தடியில் அப்பாஅம்மா வரும்வரை உட்கார்ந்திருக்கிறாள். மாதுளைப் பூ எத்தனை அழகு! மஞ்சளுக்குள்ளிருந்து வெடித்துச் சிரிக்கும் சிவந்த இதழ்கள்.

பெரியம்மா வீட்டை நோக்கி நடக்கிறார்கள். பயணப்பையோடு படியேறுபவர்களை ‘என்ரை முருகமூர்த்தியானே’ என்று பெரியம்மா கட்டிப்பிடித்து அழுகிறா.

“கடவுளுக்கு நன்றி”

“சுகிக்கு இப்பதான் வழி தெரிஞ்சுதா?”பெரியம்மாவின் மகள் சுகந்தி பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கேட்கிறாள். பற்றிய விரல்களை மேலும் இறுக்கிக் கொள்கிறாள் சுகி. அது எவ்வளவு மென்மையாயிருக்கிறது சுகந்தி அக்காவின் மனம்போல.

“நான் அழக்கூடாது மாமா! அந்த வீட்டில் நீங்கள் நீடூழி வாழ்க”

1988 இன் இன்னொரு நாள்

ஈற்றில் பெரியம்மா துணைக்கு அழைத்த முருகமூர்த்திதான் மாமா உட்பட எல்லோருக்கும் தஞ்சம். கோயில் முழுவதும் சனங்கள். முதலில் வந்தவர்களுக்கு நல்ல வசதியாக மூலைகளில் இடம் கிடைத்துவிட்டது. சாவகாசமாக உறங்கலாம். சுவரோரம்கூட பரவாயில்லை. நடுவில் இடம் கிடைத்தவர்கள்தான் கால்களை மடக்கி அடிக்கடி வழிவிட வேண்டியிருந்தது.

போர் விமானங்கள் நொடியினை நூறாய்ப் பகுத்ததோர் துளியில் கடுகி மறைகின்றன. ஐயர் தனது கழிப்பறையை ஏதோவோர் அபிமானத்தில் உபயோகிக்க அனுமதி தந்திருந்தாலும்,மேலே பறக்கும் விமானங்களும் வெளியே மிதந்த கடலை எண்ணெய் வாசனையும் வயிற்றை இறுக்குகின்றன. மலங் கழிக்காமலிருப்பதும் நல்லது. பிறகு பசித்தால் என்ன செய்வது?

இரவுகள் கொடியன. சுரேஷை நித்திரையிலிருந்து அடித்து எழுப்பிக்கொண்டு போகிறார்கள். நேற்று அழைத்துப்போன சித்திராக்கா இன்னும் வரவில்லை. கருவறையைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடி சித்திராவின் அம்மா கேட்கிறாள்.

“நுணசைக் கந்தா! என்ரை பிள்ளை எங்கையடா?”

வாசுகி சேலையுடுத்தி வயதான பெண்களிடையே மரப்பாச்சி போல அமர்ந்திருக்கிறாள். அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதாம். இரவில் இராணுவத்தினர் தட்டியெழுப்பும்போது வயதானவர்கள் போல கண்களைச் சுருக்கிப் பார்க்க வேண்டுமென பெரியம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறா. இல்லையென்றால் கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். பிறகு பிணமாகத்தான் திரும்பமுடியும். இரவில் நித்திரை வருவதில்லை. பீற்றூட் கறியுடன் ஒருவித வாடையடிக்கும் மலிந்த அரிசியிலான சோறு. அது அரைவயிற்றுக்கும் போதவில்லை.

“கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ

கடல் கைவந்துஞ் தாங்கிடும் ஈழமல்லோ”

பாடல் வரிகள் பொய்த்துப் போனது.

1989

“ஷெல்லடிக்கிறாங்கள் விளக்கைக் கொழுத்து” அப்பா தட்டியெழுப்புகிறார். அம்மா நெருப்புக்குச்சியைத் தட்டி யன்னல் திரைச்சீலையினருகில் கொண்டு போகிறா.

“அவன் ஒரு பக்கம் கொளுத்தட்டும். கோத்தை மற்ற வளத்தாலை”

அக்கா அந்தச் சாமத்திலும் விழுந்தெழும்பிச் சிரிப்பது சூழ்நிலைக்குப் பொருந்தாமலிருக்கிறது. அற்பாயுளில் போய்விடுவேன் என்று அறிந்தா அத்தனை சிரித்தாய்!

பங்கர் இருளுக்குள் இறங்கும்போது இரவு இரண்டு மணி. சத்தங்கள் ஓய்ந்து வெளியே வரும்போது விடிந்துகொண்டிருக்கிறது. அக்காவின் சின்னவனைத் தோளில் தூக்கிக்கொண்டு கடைசியாக வெளியில் வந்த அப்பா கேட்டார்.

“தண்ணிப் போத்தல் ஏதும் கொண்டு வந்தனிங்களே பங்கர் ஈரமாக் கிடக்குது”

அக்கா அம்மாவைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரிக்கிறாள்.

பயம்! பயத்தில் முகம் கறுத்துப்போய் முதிர்ந்த தோற்றம் கொண்ட அம்மா! அந்நேரத்தில் அம்மாவின் கண்கள் வெளியில் விழுந்துவிடுவனபோலஞ் பாவமாக இருக்கும்.

“எனக்குச் சாகப் பயமில்லை”எனும் பொய்கலந்த அம்மாவின் வார்த்தைகள்.

அன்றைக்கு எதிர்பாராத தருணத்தில் ஷெல் தலைக்கு மேலால் பறந்துபோவதை வாசுகி கண்டாள். அதுவொரு நெருப்பு அன்னாசி போல இருந்தது. வயிறு எரிந்தது. முழங்காலுக்குக் கீழே துணி மாதிரி ஆகிவிட்டது. கிணற்றடிச் சுவரோரம் பதுங்க ஷெல் சற்று தள்ளி எங்கோ விழுவதைக் கண்டாள். பொறியன்று மின்னியது. தலை சுற்றியது. “ஐயோ!”என்று தலையிலடித்து அழுதாள்.

பயம் பயம் மரணபயத்தின் முன் என்ன மண்ணாங்கட்டி இருக்கிறது?

1992

கொழும்பிலுள்ள பெண்கள் விடுதியன்றில் தங்கியிருக்கிறாள் வாசுகி. அன்று அதிகாலை கதவு மூர்க்கத்தோடு தட்டப்படுகிறது. பயங்கலந்த தயக்கத்தோடு சுகுணாக்கா கதவைத் திறக்கிறா. சீருடையில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் ‘விசாரிக்க வேண்டும்’என்றபடி உள்நுழைகிறார்கள். வாசுகியின் அறையில் சுஜா இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கலைந்திருக்கும் ஆடையைச் சரிசெய்து வாசுகி அவளை எழுப்புகிறாள். ‘பொலிஸ்’என்றதும், இரவு உடையுடன் இருந்த அவள் அங்குமிங்கும் பதறி ஓடுகிறாள். கொடியில் கிடக்கும் துவாலையால் போர்த்திக்கொள்கிறாள்.

அவர்களது அந்தரங்க உலகம் கிழிபடுகிறது. விசாரணையில் மிதிபடுகிறது. போலிஸ்காரர்கள் வெளியேறிய பிறகு சுஜா சொல்கிறாள்.

“நாங்கள் ஏன் தமிழாக்களாய் பிறந்தம் எண்டிருக்குது அக்கா!”

1995

யாழ்ப்பாணத்திலிருந்து சனங்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். உயிராசை பிடரிபிடித்துத் தள்ளுகிறது. எதை எடுத்துக்கொள்வது? எதை விட்டுவிட்டுப் போவது? எல்லாவற்றையும் விட்டுவிட்டு நடக்கமுடியாத வயோதிபத் தாயை மட்டும் கையில் ஏந்திக்கொள்கிறான் ஒரு இளைஞன். தனது வாழ்வாதாரமான மாடு கன்றுகளைப் பார்த்தபடி தலையில் கைவைத்து கொட்டிலின் முன்னால் செய்வதறியாது உட்கார்ந்திருக்கிறான் மற்றொருவன். ஒரு பிடி மண்ணையள்ளி சேலைத் தலைப்பில் முடிந்துகொள்கிறா அப்பாச்சி. போரினைப் புரிந்துகொள்ளவியலாத வளர்ப்புப் பிராணிகள் சுற்றிச் சுற்றி வருகின்றன தாங்கள் விசுவசித்தவர்களை. முதல்நாள் இரவு பிறந்;த தனது குழந்தையின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் ஒரு இளம் தாய். நேற்றுத்தான் பூப்படைந்த தனது பதின்னான்கு வயது மகளைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரை நீங்கும் பாதையில் நடக்கத் தொடங்குகிறாள் மற்றொரு தாய். உதிரப்பெருக்கிலும் பயத்திலும் களைத்திருக்கிறது அச்சிறுமியின் முகம்.

“அப்பா!நான் உங்களை விட்டிட்டுப் போகமாட்டன்.” நோய்வாய்ப்பட்ட தனது தந்தையின் படுக்கையருகில் இருந்து அழுதுகொண்டிருக்கிறாள் ஒரு மகள்.

“போம்மாஞ்!நான் சாகப்போற கட்டைஞ் பிள்ளையளையும் அவரையும் கூட்டிக்கொண்டு கெதியா வெளிக்கிடு”

சுருங்கிய அந்த விழிகளில் மரணபயமும் பாசமும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றும் செய்வதற்கில்லை.

குழந்தைகளும், பெண்களும், ஆண்களும், வயோதிபரும்,கையில் பிடித்த ஆடும், தலைச்சுமையும் என இலட்சக்கணக்கான உயிர்களின் நீண்ட ஊர்வலம். தாங்கள் வெறிச்சோடிக் கொண்டிருப்பதை கண்ணீர் வற்றி வரண்ட தமது விழிகளால் ஊர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

கடனீரேரியில் தண்ணீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. மழையும் தன் பங்கிற்குச் சாடுகிறது. விறைத்த கைகளிலிருந்து ஏரியில் தவறி விழுந்துவிட்ட குழந்தையை நினைத்துப் பிரலாபித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு தாய். தப்பித்துப் போகும் மக்களைத் தண்ணீரில் சாய்த்துவிடும் மூர்க்கத்துடன் இராணுவ முகாம்களிலிருந்து சீறிப் பாய்ந்துவருகின்றன குண்டுகள். ஏரி சில நிமிடம் செந்நிறமாகிச் சற்றைக்கெல்லாம் தன்னிறம் மீள்கிறது. மிதக்கும் சடலங்களைப் பார்த்தபடி உயிருள்ள சடலங்கள் அமர்ந்திருக்கின்றன.

முன்னொருபோதும் அறியாத காடுகளை, கிராமங்களை, பசியை, விட்டுவிட்டு வரும் வீடுகளை எண்ணியபடி அமர்ந்திருக்கும் மக்களைச் சுமந்தபடி இரவின் ஊடே படகுகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

2009 ஏப்ரல்

வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்து வந்து வாழ்ந்த காலத்தில், வாசுகி நிம்மதியாக இருந்தது 2002இல் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்த சில ஆண்டுகள்தான். அதன்பிறகு ராஜபக்சே என்றொருவன் மண்டையோட்டு மாலை அசைந்தாட அரசிருக்கையில் வந்து அமர்ந்தான்.

இணையத்தளங்கள் வழியாக செய்திகளை வாசிக்கும்போது அவள் தனது கண்களை சிதைக்கப்பட்ட முகங்களிலிருந்து பலவந்தமாகத் திருப்பிக்கொள்கிறாள். அவளை மறுத்து விழிகள் படங்களில் ஒட்டிக்கொள்கின்றன.

அந்தக் குழந்தை ஒரு ஆண்குழந்தை என்பதை அடையாளங்களிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால், அதன் தலை இருக்கவேண்டிய இடத்தில் கொஞ்சம் சதைத்துண்டுகளும் குருதியும் இருந்தன.

தனது குழந்தையை அணைத்தபடி ஒரு தாய் எருக்கலம்செடியன்றின் மறைவில் விழுந்து படுத்திருக்கிறாள். அவள் கண்கள்ஞ் ஐயோ அவள் கண்கள்! தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை அணைத்துக்கொண்டு, கூரிய நகங்களோடு குத்திச் சரியத் தருணம் பார்க்கும் பருந்தைப் பார்த்துப் பதைபதைக்கும் தாய்க்கோழியை அவள் நினைவுபடுத்தினாள்.

‘எங்களைக் காப்பாற்றுங்கோ’என்று கையெடுத்துக் கும்பிடும் மனிதர்களைப் பார்த்து மனம் குமுறவே சுகியால் முடிகிறது. ‘எனது மனிதர்கள் எனது மனிதர்கள்’என்று துடிக்கிறது இதயம். வளங்கொழிக்கும் வயல்கள் நிறைந்த பூமியின் புத்திரர்கள், சுயமதிப்பும் கல்வியும் நிறைந்த சமூகத்தினர், சீருடையணிந்த இனவெறி இராணுவத்தான்களின் முன் சாப்பாட்டுக்காகவும் தண்ணீருக்காகவும் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டிருப்பதை அவள் ஊடகங்களில் காண்கிறாள். அவள் செய்திக் குருடாயிருக்க விரும்புகிறாள்.

இரவுகளில் கனவுகளில் வருகிறது. ஆடை அகற்றப்பட்டு, இராணுவத்தான்களின் வக்கிரக் கண்களுக்கு காட்சிப் பொருளாக்கப்பட்டிருந்த பெண் போராளியின் சிதைந்த உடல். தொடையிடுக்கிலிருந்து வழிந்தோடிக் கிடக்கிறது குருதி. மேலும் சில வித்துடல்கள் ஆடை அகற்றப்படவென்றும் எஞ்சியவர்கள் பகிர்ந்துகொள்ளவென்றும் ஓரத்தில் போடப்பட்டிருக்கின்றன. பிணங்களைப் புணரும் பேய்களின் வெறிக்கூச்சலில் செவிப்பறை கிழிகிறது. என்னை மன்னிக்கவேண்டாம். என் சகோதரிகளே! பாவியாகிய என்னை மன்னிக்க வேண்டாம்! நான் கையாலாகாதவள்! வெறுமனே ஒரு பார்வையாளராயிருக்க விதிக்கப்பட்டவள்!

2009 ஏப்ரலின் மற்றுமோர் நாள்

அவர்கள் எல்லோருக்கும் இப்போது ஒரே பெயர்தான் அகதி! கொன்றழிக்கப்பட்டவர்கள் போக எஞ்சியிருப்பவர்களை வாகனங்களில் மந்தைகளைப் போல ஏற்றி வவுனியாவிலும் மன்னாரிலும் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புமுகாம்களில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள் இராணுவத்தினர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களுள் இளைஞர்களும் இளம்பெண்களும் பிரித்தெடுக்கப்பட்டு தென்பகுதியில் எங்கோ அமைக்கப்பட்டிருக்கும் சித்திரவதை முகாம்களுக்குப் பலியாடுகளைப் போல அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்களிடமிருந்து பிரிக்கப்படும் பிள்ளைகளைக் கடைசித் தடவையாகப் பார்க்கிறோம் என்ற நினைப்பில் அன்னையர் கண்ணீர்விட்டுக் கதறியழுகிறார்கள். அவர்கள் போகிறார்கள் நகங்களுள் ஏற்றப்படவிருக்கும் குண்டூசிகளை, குதங்களுள் சொருகப்படவிருக்கும் குண்டாந்தடிகளை, கண்களைப் பிடுங்கக் காத்திருக்கும் குறடுகளை நினைத்தபடி உயிரற்றவர்களாக அவர்கள் போகிறார்கள்.

தடுப்புமுகாம்களைச் சுற்றவர முட்கம்பி வேலிகள் அடைக்கப்பட்டு, அவற்றில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. ஒரு உணவுப் பொதிக்காக பிச்சைக்காரர்களைப் போல மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடப்பவர்களின் உள்ளடுங்கிய விழிகளில் மினுக்கிட்டு மறைகிறது வளங்கொழித்த இறந்தகாலம். பசியில் இறந்துபோன வயோதிபர்கள் முகாம்களுக்குள்ளேயே புதைக்கப்படுகிறார்கள். எஞ்சியிருக்கும் இளம்பெண்களில் சிலர் திடீரெனக் காணாமல் போகிறார்கள். பிறகு பிணங்களாகக் கண்டெடுக்கப்படுகிறார்கள். அவர்களது மார்புகளும் உதடுகளும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகக்காரர்கள் குழந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறார்கள். உலகத்திற்குக் காட்சிப்படுத்தவென புகைப்படம் எடுக்கப்பட்டபின் அந்தத் தண்ணீர்க் குவளைகள் பலவந்தமாகப் பிடுங்கப்படுகின்றன. தாகம் மீதமாயிருக்கிறது.

2009 மே மாதத்தின் நடுப்பகுதி

தாம் நேசித்த மக்கள் தமது கண் முன்னால் குவியல் குவியலாகச் செத்து மடிவதைக் காணச் சகிக்காத விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதாக அறிவிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் செவிடாயிருக்கிறது. சர்வதேசம் வேடிக்கை பார்க்கிறது. ஐ.நா. மன்றம் அமைதி காக்கிறது. இந்திய அரசு ‘முடியட்டும்’என்று காத்திருக்கிறது. வெள்ளைக் கொடியோடு சமாதானப் பேச்சுக்காகச் சென்ற புலிகள் வஞ்சகமாகச் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். நிராதரவான மக்களை பதுங்கு குழிகளுக்குள் வைத்து இராணுவத்தினர் உயிரோடு புதைக்கின்றனர். காயப்பட்டுக் கதறிக்கொண்டிருக்கும் மக்களையும் உயிரிழந்த உடல்களையும் ஒருசேரத் தடயங்களற்று அழித்துவிடுகிறார்கள். ஒரு பெரிய புதைகுழியாகிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால். வரலாறு கண்ணீர் வடித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறது உலகின் மிகப்பெரிய மயானங்களில் ஒன்றை! மௌனம்! மகா மௌனம்!

2000 மே 23ஆம் திகதி

“சுகி! நீங்கள் ஏன் இப்படி வலிகளையே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? வாழ்க்கை கொண்டாட்டங்களையும் உள்ளடக்கியதல்லவா?” - சுதர்சன்

“மரணத்தை, வலியை, வன்புணர்வின்போதெழுந்த மூச்சுத்திணறலை, என் போராளிச் சகோதரியின் நிர்வாணம் தந்த குற்றவுணர்வை, கூட்டு வல்லுறவுக்கிடையில் தண்ணீர் மறுக்கப்பட்ட குரல்களை, கருகிய உடல்களை, சிதறிச் சுவர்களெங்கும் ஒட்டிக்கிடந்த சதைத்துணுக்குகளை, எதையோ எழுதமுயன்று தோற்கும் குருதியை, கர்ப்பத்துள் இறந்துபோன குழந்தைகளை, உலகத்தால் கைவிடப்பட்டு மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களை, எனது மண்ணில் கால்வைக்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் புதைகுழிகளை மறக்க முடிந்தவர்கள் கொண்டாடட்டும் சுதர்சன். குற்றவுணர்வோடு கழியவிருக்கும் நாட்கள் இனிச் சிறுகச் சிறுக என்னைக் கொன்று பழிதீர்க்கும். என்னால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. வேறு எதையும் எழுத முடியவில்லை”

- சுகி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com