Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhi
Vizhi logo
ஜனவரி 2008


தோற்றவன்
பா.சரவணக்குமரன்

தெருவில் கேட்ட பட்டாசுச் சத்தம் பொன்னுச்சாமியின் காதுகளைக் கிழித்தது. இப்போதுதான் நூறு தொகுதிகளின் முடிவே தெரிந்திருக்கிறது. அதில் எழுபத்தெட்டுத் தொகுதிகளில் இவன் சார்ந்திருக்கும் கட்சியின் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.

ஒவ்வொரு தொகுதியின் முடிவையும் டி.வி.யில் பார்த்து அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தான். மொத்தத் தொகுதிகளில் பெரும்பான்மையானவை தங்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டால் எதிர்க்கட்சிக்காரர்களின் கொண்டாட்டம் தாங்காது. இன்னும் நிறையப் பட்டாசுகளை வெடிப்பார்கள். கொடி பிடித்தபடி இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற தங்களின் வேட்பாளரையும், முதல்வராக அமரப்போகும் கட்சித்தலைவரையும் புகழ்ந்து கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவார்கள். டி.வி. பார்த்துக் கொண்டிருந்த பொன்னுச்சாமிக்கு இதையெல்லாம் நினைத்து மனசு எரிந்தது. வெளியில் தலைகாட்ட சங்கடமாக இருந்தது. கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் தேர்தல் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்திருக்கிறான்.

வெற்றி பெற்றால் அந்தப் பகுதியின் இளைஞரணி பொறுப்பைச் சிபாரிசு செய்து வாங்கித் தருவதாகத் தேர்தலில் நின்ற வேட்பாளர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அவரே தோற்றுப் போனது பொன்னுச்சாமியை இன்னும் இம்சித்தது. ஒரு கட்டத்தில் டி.வி.யை அணைத்துவிட்டு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தவனின் மனதில் ஏதேதோ எண்ண ரேகைகள்.

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட உடனே தான் சார்ந்திருந்த பகுதிச் செயலாளரோடு ஐக்கியமானான் பொன்னுச்சாமி. கட்சிச் சின்னத்தை வரைய எமரி ஷீட்டால் சுவர்களைச் சுரண்டிக் கொடுத்தபோது உள்ளங்கையில் தோல் உரிந்தது இப்போதும் எரிச்சலை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிக்காரர்களோடு போட்டி போட்டுக்கொண்டு சுவர்களை புக் செய்வதற்குள் ரொம்பவே சிரமப்பட்டுப்போனான்.

நான்கைந்து பேரோடு சேர்ந்துகொண்டு கொடிகளும், பேனர்களும் கட்டினான். நாள் முழுவதும் தேர்தல் அலுவலகத்திலேயே கிடந்தான். இதற்காகச் சித்தாளு வேலைக்குக்கூடச் செல்லாமல் இரும்புச் சட்டியைக் காயப்போட்டான். பகல் முழுவதும் தேர்தல் வேலை செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றால் ராசாத்தியின் அர்ச்சனை தாங்காது. எப்படியும் இவன் திரும்பும்போது இரவு பன்னிரண்டு மணிக்குமேல் தாண்டிவிடும். வயசுக்கு வந்த மகள் தெருக்கடைசியில் இருந்த மாடி வீட்டில் வேலைசெய்த களைப்போடு தூங்கியிருப்பாள்.

ஐந்தாவது படிக்கும் மகனின் வாயிலிருந்து எச்சில் ஒழுகியிருக்கும். “இந்தா புள்ள.... வேலைக்குப் போகலைன்னு திட்டாத.... செயலாளரு பணம் கொடுத்தாரு... என்ன செய்யுறது.... இது நம்ப பரம்பரைக் கட்சி...’’ என்றபடி அவளிடம் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பவன், பகுதி செயலாளர் வாங்கிக் கொடுத்த குவார்ட்டரும், பிரியாணியும் தின்ற களைப்போடு மகனுக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்வான். மறுநாள் திரும்பவும் பகுதி செயலாளரைத் தேடிச்சென்று விடுவான்.

கட்சியின் முக்கியப் பிரமுகர்களும், கூட்டணிக் கட்சியின் வி.ஐ.பி.க்களும் கலந்துகொண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தின் வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான் பொன்னுச்சாமி. கூட்டம் நடைபெற்ற இடங்களில் மூங்கில் ஊன்றி டியூப் லைட் கட்டினான். பொதுக்கூட்டத்திற்கு போஸ்டர் ஒட்டும் வேலைகளையும் இரண்டு பேரோடு சேர்ந்துகொண்டு செய்தான்.

ஒருமுறை பஸ் ஸ்டாண்டில் இருந்த பொதுக் கழிப்பிடத்தில் நடிகை ஜிக்னா கலந்துகொண்ட கூட்டத்திற்கான போஸ்டரை ஒட்டிவிட்டுத் திரும்பியவன் ஏக டென்ஷன் ஆனான். அந்த போஸ்டரின் மேலேயே எதிர்க்கட்சி ஆள் ஒருவன் தங்கள் பொதுக்கூட்டத்திற்கான போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அவன் சட்டையைப் பிடித்தவன் சிறுநீர் கழித்திருந்த இடத்திலேயே கட்டிக்கொண்டு புரண்டான். ஒருவழியாகச் சண்டையைச் சிலர் விலக்கி வைக்க அவனை முறைத்துக்கொண்டே நகர்ந்து வந்து விட்டான்.

பொன்னுச்சாமியோடு வேறு சிலர் தேர்தல் வேலை செய்தாலும் இவன் அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை. அதற்குக் காரணம் கால்சட்டை அணிந்திருந்த வயதிலிருந்தே கட்சிமீது இவனுக்கு இருந்த ஈடுபாடு. தொகுதி வேட்பாளர் இந்தப் பகுதியின் டோர் கேன்வாசிங்கிற்கு வந்தபோது பொன்னுச்சாமியின் உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனார். அப்போதுதான் பகுதி செயலாளரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இளைஞரணி பொறுப்பு வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். இவனுக்குள் அடக்க முடியாத ஆனந்தம். தேர்தல் வேலைகளில் இருமடங்கு வேகம் காட்டியது அதன் பிறகுதான்.

தேர்தலுக்கு முதல் நாள் இரவு தூங்கவில்லை. கட்சிக்காரர்கள் சிலரோடு சேர்ந்துகொண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் யாரேனும் ஓட்டுக்காகப் பணம் கொடுக்கிறார்களா என்று நோட்டம் விட்டபடி தெருத்தெருவாகச் சுற்றிவந்தான். தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம், ‘‘கரெக்டா நம்ம பொத்தானைப் பார்த்து அழுத்தணும். மறந்துடாதீங்க’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். தேர்தல் தினத்தில் பூத்தையே சுற்றிச்சுற்றி வந்தான். எதிர்க்கட்சிக்காரர்களிடம் பூத் ஸ்லிப் வாங்கச் சென்றவர்களையும் தம் கட்சிக்காரர்கள் கொட்டகை போட்டு சீட் கொடுக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்.

ஆனால் இதே போன்று அதிக தடவை செய்ததில் எதிர்க்கட்சியின் சார்பாக பூத் ஸ்லிப் கொடுத்தவர்களுக்கு டென்ஷன் ஆனது. கொட்டகையில் இருந்து வேகமாக ஓடிவந்த ஒருவன் இவன் சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் மாறி மாறி அறைய ஏகக் களேபரமானது. இவன் பின்னால் பத்துப் பேரும், அவன் பின்னால் பத்துப் பேரும் சேர்ந்து கொள்ள கைகலப்பு ஏற்பட்டது. ஒரு வழியாகப் போலீஸ் தலையிட்டு விலக்கிவைக்க தன் கட்சிக்காரர்களின் வற்புறுத்தல்படி பூத் ஸ்லிப் கொடுக்கும் இடத்தை விட்டு பிரியாணி பொட்டலங்கள் கொடுக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆனால் போவதற்கு முன், “இருடா மவனே... ஜெயிச்சு கவனிச்சுக்கிறேன்...’’ என்று சவால்விட்டுச் சென்றான். ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்தபடி வெளியே தலைகாட்ட பயந்து உட்கார்ந்திருந்தவனை மகனின் குரல் கலைத்தது.

“அப்பா .... எனக்கு எப்ப கிரிக்கெட் பேட் வாங்கித் தரப்போற..? நாலாவது பாஸானா வாங்கித் தர்றேன்னு சொன்ன. நானும் பாஸாயிட்டேன். எப்ப வாங்கித் தரப்போற...?’’ என்றபடி மடியில் ஏறி தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன், “நாளைக்குச் சாயங்காலத்துக்குள்ள நிச்சயம் வாங்கித் தர்றேன்?’’ என்றான். இப்படிச் சொன்னானே தவிர அவன் மனசு முழுவதும் தேர்தல் முடிவிலேயே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக கிரிக்கெட் பேட் வேண்டுமென்று அவ்வப்போது அடம்பிடித்து வருகிறான். இவனுடன் விளையாடுபவர்கள் எல்லாம் சொந்தமாக வைத்திருக்கிறார்களாம். ஆனால் சித்தாள் வேலை பார்த்துப் பிழைக்கும் அப்பனுக்கு 200 ரூபாய் நோட்டைக் கொடுத்து கிரிக்கெட் பேட் வாங்குவது சிரமம்தான்.

அதோடு தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்து வேலைக்கும் சரியாகச் செல்லாததால் மாடி வீட்டிலிருந்து மகள் வாங்கிவரும் சம்பளத்தில்தான் வயிறு நனைகிறது. ஆனால் எப்படியும் ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தபடி மீண்டும் எழுந்து தொலைக்காட்சியை ஆன் செய்தவனுக்குக் கிட்டத்தட்ட தொண்ணூற்று ஐந்து சதவீதம் முடிவும் தெரிந்துவிட்டது. அழுகையும் ஆத்திரமும் வந்தது. எதிர்வரும் ஐந்து வருடங்கள் மிகப்பெரிய இடைவெளியாகத் தோன்றியது. மாநில அளவில் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது இன்னும் இம்சித்தது.

எதிர்க்கட்சிக்காரர்களின் பட்டாசுச் சத்தமும், கோஷமும் அதிரடியாய் ஒலித்தன. வீட்டிலிருந்து வெளியில் வந்தவன் தெருவெங்கும் பரவிக்கிடந்த புகை மண்டலத்தைப் பார்த்தான். தெருவின் ஒவ்வொரு இடங்களிலும் பட்டாசு வெடித்தவர்கள் இவன் வீட்டு வாசலில் இவனைக் கண்டதும் நீண்ட சரவெடியைப் பற்ற வைத்துவிட்டு நகர்ந்தனர். பொன்னுசாமிக்குக் கோபத்தில் கை, கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தன.

“டேய்.... உங்க மனசுல என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க...?’’ என்று அந்தக் கும்பலை நோக்கிச் சத்தம் போட்டான். “தோத்துட்டீங்கல்ல..... அடங்குடா......’’ என்று ஒருவன் பதிலுக்குக் குரல் கொடுக்க, ஒரு சிலர் அடிப்பது போல் பாய்ந்தனர். ஆத்திரம் தலைக்கேறினாலும், கட்டுப்படுத்திக் கொண்டவன் வீட்டிற்குள் நுழைந்தான். ராசாத்தி சாப்பிடச் சொல்ல அவளை எரிப்பதுபோல் பார்த்தான். வீட்டின் நடுவில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் மெல்ல சாய்ந்து கண்களை மூடினான்.

சில நிமிடங்களில் யாரோ வந்து உடலை அசைக்க கண்களைத் திறந்து பார்த்தான். இவனோடு தேர்தலில் வேலைசெய்த ராமநாதன் நின்றுகொண்டிருந்தான். ராசாத்தியோ மகளோடு அவள் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்றிருந்தாள். எப்போதாவது அங்கே சென்று மகளுக்கு ஒத்தாசையாக இருப்பாள். மகனையும் காணவில்லை. வழக்கம்போல் தெருக்கடைசியில் இருக்கும் பள்ளி மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றிருப்பான்.

“என்ன பொன்னுச்சாமி..... இப்படி ஆயிடுச்சு...’’ என்றபடி கட்டிலில் உட்கார்ந்தவனிடம், “எதிர் பார்க்கவே இல்லங்கண்ணே.... தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் நல்லாத்தானே இருந்துச்சு.... அப்புறம் ஏன் இப்படி ஆயிடுச்சு....’’ என்று வருத்தப்பட்டவன் கட்டிலில் இருந்து எழுந்து மீண்டும் தொலைக் காட்சியை ஆன் செய்தான். ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க்கட்சிக்காரர்களின் கொண்டாட்டத்தை டி.வி. ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. “நம்ம தொகுதிகூட இப்படி ஆயிடுச்சே.... பெருமாள் அண்ணன் வீட்டையெல்லாம் வித்துத் தேர்தல்ல நின்னாரு..... பாவம்.....’’ என்று ராமநாதனும் பரிதாபப்பட்டான்.

பிறகு வேட்டியில் சொருகி வைத்திருந்த மது பாட்டிலை வெளியே எடுத்தவன், “ வீட்டுல யாரும் இல்லையில’’ என்று கேட்டபடியே பக்கத்தில் இருந்த நாற்காலியில் வைத்தான். “ம்ஹூம்...

ஜெயிச்சா சந்தோஷமா குடிக்கலாம்னு நேத்தியே வாங்கி வச்சேன். என்ன செய்யுறது.....?’’ என்று உள்ளே சென்று ராசாத்தி கழுவி வைத்திருந்த இரண்டு சில்வர் டம்ளர்களை எடுத்து வந்தான். பாட்டிலின் மூடியை உடைத்து மதுவை இரண்டு டம்ளர்களிலும் ஊற்றி ஒன்றை பொன்னுச்சாமியிடம் கொடுத்தவன், இன்னொன்றை உறிஞ்ச ஆரம்பித்தான். ஃபார்ஸ்ட் ஃபுட் கடையில் வாங்கி வந்திருந்த பீஃபைத் தின்றபடி இருவரும் குடித்து முடித்தபோது தமிழ்நாடு முழுவதும் அறுதிப் பெரும்பான்மையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்ற செய்தியைத் தொலைக்காட்சி வெளியிட்டது.

“ஒண்ணும் கவலைப்படாதே.... எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு.... என்ன செய்யுறது....? தூங்கு..... சாயங்காலம் செயலாளர் வீட்டுக்கு வா..... நானும் வர்றேன்.....? என்றபடி ராமநாதன் புறப்பட போதையின் மயக்கத்தில் கட்டிலில் சாய்ந்தான் பொன்னுச்சாமி.

வெளியிலோ பட்டாசுகளின் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருந்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தான்பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றாய் வந்துபோனது. எதிர்க்கட்சிக்காரர்களிடம் எப்படி முகத்தைக் காட்டுவது என்ற எண்ணம் மனசைப் பிசைந்தது. நேரில் பார்த்து நாலு வார்த்தை பேசாவிட்டாலும் மனதளவில் தான் அன்பு செலுத்திய கட்சித் தலைவர் முதலமைச்சர் பதவியில் அமரும் வாய்ப்பை இழந்ததை நினைக்க நினைக்க பொன்னுச்சாமியின் கண்கள் கலங்கின. கோவென்று தலையணையில் முகம் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். மதுவின் போதையோடு கண்கள் சிவக்க அழுதபடி கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனுக்கு அடுப்புக்குப் பக்கத்திலிருந்த மண்ணெண்ணெய் கேன்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராசாத்தி கியூவில் நின்று நான்கு லிட்டர் வாங்கி வைத்திருந்தாள். ஏதோ ஒரு எண்ணம் தோன்ற கட்டிலிலிருந்து எழுந்து சென்று மண்ணெண்ணெய் கேனை எடுத்தவன் மூடியைத் திறந்தான். தண்ணீரில் குளிப்பதுபோல் சடசடவென மேலே ஊற்றினான். தடுமாறியபடி கட்டிலுக்கு வந்து அங்கே சிகரெட் பிடித்துவிட்டு வைத்திருந்த தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியைக் கொளுத்தி உடலில் பற்ற வைத்தவன், “அம்மா.... ஐயோ....’’ என்று வைக்கோல் போரைப் போல் திகதிகுவென எரிய ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் எரிச்சல் தாங்காமல் வீட்டை வீட்டு வெளியில் ஓடி வந்தவனுக்கு அப்போதுதான் குழந்தைகளின் ஞாபகமும், மனைவியின் ஞாபகமும் வந்தன. தன்னைச் சுற்றி யாரோ நின்று கொண்டு தன் மேல் ஏதோ ஊற்றித் தீயை அணைப்பது போல் தெரிந்தது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாகச் சுயநினைவை இழந்தவன் வெந்து கொழகொழத்துக் கீழே சாய்ந்தான்.

சில நாள்கள் கழித்துக் கட்சியில் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தில் வீட்டிற்குத் தேவையானதை வாங்கிய ராசாத்தி, மகனுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். வாசல் கதவருகே எதையோ வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த மகனிடம் நீட்டினாள். கிரிக்கெட் பேட்டை வாங்கியவன் வீட்டிற்குள்ளிருந்த சுவற்றில் மாலை அணிவித்து தொங்கிக் கொண்டிருந்த அப்பாவின் புகைப்படத்தையும், பேட்டையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு இருகைகளாலும் பேட்டைத் தூக்கி எறிந்தவன், “எனக்கு பேட்டு வேணாம். அப்பாதான் வேணும் ’’ என்றபடி வேகமாக அழ ஆரம்பித்தான். அவனைக் கட்டிப்பிடித்தபடி ராசாத்தியும் கதற ஆரம்பித்தாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com