Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

புதிரின் விடை தெரியலாம் அல்லது தெரியாமலுமிருக்கலாம்
உதயசங்கர்
.

அவமானத்தினால் முகம் சிவந்தான் சின்னக்கருப்பன். திகைத்து நின்ற அவனுக்கு முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சின்னக்கருப்பனின் கண் அசைவிற்காக எவ்வளவோ பேர் காத்திருக் கிறார்கள். அவனுடைய தரிசனத்திற்காக ஏங்கியே மனநிலை பிறழ்ந்தவர்கள் எத்தனை பேர். சாதாரண மனிதர்களி லிருந்து பன்னாட்டு முதலாளிகள்வரை எவ்வளவு பேர் அவனுடைய ரசிகர்கள். கிரிக்கெட்டில் டான்பிராட்மேனைவிட சாதனைகள் படைத்த அபூர்வப் பிறவிமேதை என அவனைப் புகழாத ஊடகங்களே இல்லை.

முதன்முதலில் சர்வதேச அரங்கில் விளையாடத் துவங்கியது முதல் இன்றுவரை அவன்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவன் ஆட்டகளத்தில் பேட்டிங் செய்ய இறங்கினால் போதும் உலகம் முழுவதிலுமுள்ள அவனது கிரிக் கெட் ரசிகர்கள் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன் னால் ஆரவாரம் செய்வார்கள். குழந்தைகள் அவன் பெயரை மந்திரம்போல உச்சரிப்பார்கள். இளம் பெண்கள் தங்கள் ஆடவனாகக் கற்பனை செய்து வாய் குழறுவார்கள். அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி விடும். தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குண்டும் குழியுமான பஞ்சாயத்து சாலைவரை வாகனங்கள் தம்மீது ஊர்ந்து செல்ல ஏங்கும். அவன் விளையாடும் மைதானம் அமைந்திருக்கும் மாநிலம் அன்று அரசு விடுமுறை விடும். கவர்னர், முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்வரை எல்லோரும் நேரிலோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டி முன்போ உட்கார்ந்திருப்பார்கள்.

வேற்றுநாடுகள் எதுவும் இதுவரை படையெடுப்பு தினமாக அந்த நாளை அறிவித்தால் மிகச்சுலபமாக நாட்டை வெற்றி கொண்டுவிடலாம் என்ற சிறிய துப்பைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு அந்நாட்டு உளவு அமைப்புகள் பலவீனமாக இருப்பதால் இந்நாடு சுதந்திரமாக இருக்கிறது என்று ஆவேசமாய் ஒரு அறிவுஜீவி யாரும் படிக்காத ஒரு பத்திரிகைக்கு மையில்லாத பேனாவால் எழுதி அனுப்பினான். அதைப்பிரசுரிக்க அந்த பத்திரிகை ஆசிரியருக்கு தெம்புண்டா திராணியுண்டா என்று யாருமில்லாத தெருவில் ஒரு கட்டிங் போட்ட போதையில் புலம்பி கொண்டிருந்த கதை வேறு கதை.

சின்னக்கருப்பனுடைய நடையுடை, பாவனை, நகத்தைக் கடித்துக் கொண்டேயிருக்கும் அவனுடைய மேனரிசம், செஞ்சுரி போட்டவுடன், பகலானால் சூரியனையும், பகலிரவு ஆட்டமானால் சந்திர னையும் பார்த்து கும்பிட்டு முணுமுணுப்பது, அதே நேரம் அவுட்டாகிவிட்டால், பேட்டால் கால்பேடில் ஓங்கி அடித்து அதிருப்தியை வெளிப்படுத்துவது, இன்னமும் முதிராத குரலில் பெருமிதம் பொங்க நாட்டுக்காகத்தான் நாட்டுக்காக மட்டும்தான் விளை யாடுவதாகச் சொல்கிற வார்த்தைகளின் அடுக்கு என்று புகழின் வெளிச்சத்தில் சின்னக்கருப்பன் தனக் கென்று மறைத்துக்கொள்ள ஏதுமின்றி பளீரென்று அம்மணமாய் நின்றான். அதில் அவனுக்குப் பெருமையும் இருந்தது.

அவனைப்பற்றி இதுவரை பத்து வித மான சுயசரிதை நூல்கள் வெளிவந்து இருபது முப்பது பதிப்புகளைத் தாண்டி அவனது ரன்களைப்போல ஏறிக்கொண்டே போகிறது. அதிலும் தி சைல்டுஹூட் லைப் ஆப் சின்னக் கருப்பன்தான் ஹாட்சேல். அம்மா வின் பீ வாரும் தகரப்பட்டைக் கரண் டியைப் பேட்டாகவும் வாருகால் தள்ளும்போது அப்பா எடுத்துத் தரும் கிழிந்துபோன ரப்பர் பந்தையும் வைத்து பேட்டிங் பிராக்டிஸ் செய் ததைத் சின்னக்கருப்பன் சொல்லும் போது படிக்கிறவர்களுக்கு கண்ணீர் வராமலிருக்காது. ஆனாலும் பின் னால் வந்த சின்னக்கருப்பனின் சுய சரிதையில் வரலாற்றாசிரியர்கள் ஒரு இணைப்பைச் சேர்த்தனர். பின்னும் அந்தப் புத்தக விற்பனை பின்னி யெடுத்துக் கொண்டுபோனது.

இணைப்பில் சின்னக்கருப்பனின் அப்பாவும் அம்மாவும் நேர்காணல் அளித்திருந்தார்கள். அதில் சின்னக் கருப்பனின் அம்மா அக்ரஹாரத் தெரு முடியும் வடக்கு மூலையில் பட்டுத் துணி சுற்றிக் கிடந்த குழந்தைசின்னக் கருப்பனைக் கண்டெடுத்ததாகவும், அப்போது குழந்தை சுண்டப்பழம் மாதிரி சிவந்திருந்தாகவும், அவர் களோடு சேர்ந்து இருந்ததினால் இப்படிக் கருப்பாகிவிட்டதாகவும் சொல்லியிருந்தார்கள். இப்போது லேசுபாசான தயக்கங்களும், அசூயை யும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. எல்லோ ருக்கும் செல்லப்பிள்ளையாகிவிட் டான். பின்னிணைப்பு சேர்க்கப்பட்ட புத்தகம் மட்டும் கள்ளத்தனமான பதிப்புகள் நூற்றுக்கணக்கில் கண் டது. அதன்பின்னர் சின்னக் கருப்பன் தோன்றாத விளம்பரப் பொருட்களே இல்லையென்று சொல்லலாம்.

சோப்பு, சீப்பு, கண்ணாடி, சட்டை, பனியன், ஜட்டி, கிரடிட்கார்டு, கார், பைக், காண்டம் என்று எல்லாவற்றை யும் அவன்தான் ரெகமண்ட் செய்து கொண்டிருந்தான். அவன் தோன்றி விட்டால் போதும் அந்தப் பொருள் எப்படி இருந்தாலும் மக்கள் அலை மோதினார்கள். சிலநேரங்களில் என்ன பொருள் என்று கூடத் தெரியாமல், அது தனக்குத் தேவை தானா என்றுகூட யோசிக்காமல் சின்னக்கருப்பன் விளம் பரம் செய்த பொருளைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிப்போனார்கள். இதனால் பன்னாட்டுக்கம்பெனிகளி லிருந்து உள்ளூர் ஊதுபத்தி கம்பெனி வரை சின்னக்கருப்பனின் விளம்பரத் திற்காக அவன் வீட்டு வாசலில் தவமி ருந்தனர். விளையாடிக் கிடைக்கும் ஊதியத்தைவிட விளம்பரத்தினால் கிடைக்கும் வருமானம் உயர்ந்து கொண்டே போனது. சிலகாலம் விளையாடாமலும் விளம்பரம் செய் தான். ஆனால் விளம்பரங்களின் வரிசை ஓயவில்லை. மனைவி குழந்தைகளைப் பார்க்கக்கூட நேர மின்றி பிஸி செட்யூல்களில் மாட்டி விடுவது நேரும். சரிசரி கதையின் முதல்வரிக்கு அடுத்தவரியை எழுது என்கிற என் அருமை வாசகரே இதோ, அந்த வரி.

அந்த விளம்பரக் கம்பெனியின் வாட்ச் மேன் வாசலிலேயே அவன் காரை நிறுத்திவிட்டான். அதைவிட அதிர்ச்சி தரும் இன்னொன்றையும் சொன் னான். தான் யாரென்று சொன்னபோது ஏற்கனவே ஒரு சின்னக்கருப்பன் உள்ளே விளம்பரக் கம்பெனியின் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக வும் சொன்னான். இதைக்கேட்டதும் சர்வ அங்கமும் பற்றியெரிய உடனே அவனுடைய பெர்சனல் செக்ரட் டரிக்குப் போன் செய்தான் லைனில் வந்த செக்ரட்டரி. யாரு சார்?

நான்தான் சின்னக்கருப்பன், ரமேஷ் எதிர்முனையிலிருந்து ஒரு கேலியான சிரிப்புடன், இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க.. காலைல இருந்து இதே தொந்தரவாப் போச்சி. சின்னக் கருப்பன் சார் எனக்கு முன்னாடிதான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டுருக் காரு.. தயவு செய்து போனை வைக்கி றீங்களா? என்று சொன்னான். அந்தக் குரலின் நக்கல் அதிர்ச்சியாக இருந் தது. சின்னக்கருப்பனுக்கு. உடனே அவனுடைய லாயருக்குப் போன் போட்டான். போனை எடுத்த லாயர் மார்க்கண்டேயன், சின்னக்கருப்பன் சொன்னதையெல்லாம் பொறுமை யாகக் கேட்டுவிட்டு, ரைட் சார்.. ஓ.கே.சார்... பாக்கிறேன் சார்... பட் ஒரே ஒரு விஷயம்தான் உதைக்குது சார்... எங்கிட்ட பேசுற பனிரெண்டா வது சின்னக்கருப்பன் நீங்க சார்... நானே குழம்பிப்போயிருக்கேன்... சார்... என்று கட் பண்ணிவிட்டார். அவனுக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந் தது. புரியாதமாதிரியும் இருந்தது. அவனுக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்துகொண்டிருக்கிறது. அவன் காரை எடுத்துக் கொண்டு மத்தியா னம் அந்நகரின் மைதானத்தில் பாகிஸ் தானுடன் நடக்கவிருந்த மேட்சுக்கு முன்னால் நெட் பிராக்டிஸ் செய்யலாம் என்று அங்கே போனான்.

ஒரு புதிர்போல அங்கேயும் ஒரு சின்னக்கருப்பன் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான். சின்னக்கருப்ப னுக்கே குழப்பமாகிவிட்டது உண்மை யான சின்னக்கருப்பன் யார்? தான் யாரின் பிரதி? அல்லது நிழல்? குழப் பத்துடன் மத்தியானம் மேட்சுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தான் சின்னக்கருப் பன். மைதானம் முழுவதுமே பார்வை யாளர்கள் சின்னக்கருப்பனின் முகம் அச்சுப் பதித்த முகமூடி மாட்டியிருந் தார்கள். அவனும் அவர்களுடன் இன்னொரு முகமூடி மாட்டிய பார்வையாளனாக இருந்தான். மேட்ச் ஆரம்பித்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேனாக அங்கே ஒரு சின்னக் கருப்பன் கைகளைச் சுழற்றிக்கொண்டே மைதா னத்தில் இறங்கினான். விசிலும் கை தட்டலும் ஆரவாரமும் விண்ணைப் பிளந்தது.

சின்னக்கருப்பனின் ஆச்சரியம் எது வென்றால் மைதானத்தில் விளை யாடிக் கொண்டிருந்த சின்னக்கருப் பன் அவனைப்போலவே அத்தனை துல்லியமாக ஷாட்டுகள் அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். ஸ்கொயர் கட் சின்னக்கருப்பனின் ஸ்பெஷல் ஷாட். அதை சின்னக் கருப்பனைவிட பிரமாதமாக சின்னக் கருப்பன் விளையாடினான். சின்னக் கருப்பனுக்குச் சோர்வாக இருந்தது. ஒரே நாளிரவில் இத்தனை மாற்றம் ஏற்பட்டிருக்குமா?ஒருவேளை இதெல்லாம் கனவாகக்கூட இருக் குமா என்றுகூட யோசித்தான். வீட்டிற்குப் போனால் நிலைமை ஒரு வேளை தெளிவாகலாம் என்று நினைத்தான். சின்னக்கருப்பனை விட அவன் மனைவி ராக்காச்சி என்ற ராக்கி விவரமானவள். அவளிடம் அவளிடம் இந்த புதிருக்கான விடை இருக்கலாம் என்று நினைத்தான். உடனே அவளுக்குப் போனைப் போட்டாள். போன் ஸ்விட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது.

மைதானத்தை விட்டு வெளியேறிய சின்னக்கருப்பன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான். அப்படி வீட்டிற்கு வரும்போதுதான் கவனித்தான். அந்த நகரம் முழுவதும் அவனுடைய படம் போட்ட விளம் பர ஹோர்டிங்குகள், எல்லாக் கடை போர்டுகளிலும் அவன் படம், உற்றுப் பார்த்தால் எல்லோரிடமும் அவன் சாயல், அவனைப்போலவே தலை முடி ஸ்டைல், கைகளில் காசிக்கயிறு, கழுத்தில் வெள்ளிச் சங்கிலி என்று அவனை மாதிரியே எல்லோரும் மாறிக்கொண்டேயிருப்பதைப் பார்த்துக் கொண்டே போனான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தபோது ராக்கி அங்கு இல்லை. அவளும் மேட்ச் பார்ப்பதற்காக போயிருக்கி றாள். ஆயாசமாக இருந்தது அவ னுக்கு. அவனுடைய படுக்கையில் விழுந்து கண்களை மூடினான். ஒன்றும் புரியவில்லை. இந்தப் புதிர் விளையாட்டை யார் துவங்கினார்கள் என்று யோசித்தான். இப்போது இந்தப் புதிர் விளை யாட்டில் அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரிய வில்லை. இது ஆரம்பமா? முடிவா? எழுந்து அறைக்குள்ளேயே வேக வேகமாக நடந்து கொண்டிருந்த சின்னக்கருப்பன் குழப்பம் முற்றிய மனநிலையில் மேஜைடிராயரைத் திறந்தான். தன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com