Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

அப்புச்சி: மொட்டைப் பழனி
சாம்பான்
.

தெருவின் முகப்பிலுள்ள அந்த மார்பளவு சிலையைக் காணாமல் யாரும் அந்த தெருவிற்குள் செல்ல முடியாது. அங்கிருந்த தலித்துகளின் அவலத்தை உணர்ந்து அவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவரின் சிலை அது. தலித் இளைஞர் பலரும் இவரின் ஏதோவொரு உதவியால் படிப் பறிவு பெற்றவர்கள்தான். எனவே தான் இம்மக்களின் நெஞ்சங்களில் நிறைந் துள்ள கலெக்டர் மலையப்பனுக்கு நன்றி சொல்லும் விதமாக தம் சொந்த செலவிலேயே அவருக்கு சிலை அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். இந்த சிலை பற்றி கேட்டதற்கு உப்பிட்டோரை உள்ளளவும் நெனைக் கனும் தம்பி என்றார்கள். உழைப்பாளி மக்கள் தம்மை நிராகரித்தவர்களையும் ஆதரித்தவர்களையும் அவ்வ ளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள் .

ஏ பழனி (மொட்டைப்பழனி) எங்கடப்பா இந்த பக்கம் போறே என்று மேல்சாதியார் ஒருவர் கேட்க, ஆமா போறப்பே சகுனத்தடே மாரி எங்கே போறேன்னு கேட்டுட்டியில்லே, போற காரியம் ஜெயம் ஆனாப்புலே தான். யப்பா யப்பா, கோச்சிக்கிடாதே, யாம் பொண்ணுக்கு உடம்பு சரியில்லே நீ மந்திரம் சொல்லி தின்னுறு (திரு நிறு) போட்டா எல்லாம் சரியாப் போயிடும்னுதான் கேட்டேன் என்றார் மேல்சாதியார். பழனி இந்த ஊரின் தலித் சமூகத்தை சார்ந்தவர். மலையாள மந்திரம் கற்றவர் என்றும் இவர் நினைத்தால் யாரையும் கைகால் வராமல் செய்துவிடுவார் என்றும் நிலவிய பயத்தால் அநேகமாக யாவரும் இவரிடம் பவ்வியமாகவே பேசுவார்கள். இதற்கான பலகாரணங்களில் ஒன்று இவர் நடந்துசென்ற படியே வானத்தில் பறந்து கொண்டி ருந்த குருவிகளிரண்டை கையால் எட்டி பிடித்துள்ளார்.

ஒன்றோடொன்று சண்டையிட்ட வேகத்தில் தாழப்பறந்த நிலையில்தான் குருவிகள் கைகளுக்கு சிக்கியுள்ளன என்றாலும் மலையாள மந்திரத்தால்தான் இவ்வாறானதாக வும், தனக்கு யாருக்குமில்லாத சக்தி யிருப்பதாகவும் கூறிக் கொண்டார். எனவே இவர் யார் வீட்டில் எது கேட் டாலும் இல்லை என்றே சொல்லமாட் டார்கள். இல்லை என்று சொன்னவர் வீட்டின் முன்பு சாபமிட்டு வந்து விடுவாராம். சிலநேரங்களில் ஏதோ ஒரு சூழலில் அவர் கேட்ட அந்தப் பொருள்) கெட்டுப்போனால் இவரின் சாபம்தான் காரணம் என்று பேசிக் கொள்வோர் இவரது கண்ணெதிரில் பேசுவதில்லை.

இதேபோல் சில வைத்தியமுறைகளை யும் தெரிந்துவைத்திருந்ததால் அதன் மூலமும் இவர் பெயர் அறிமுகம் ஆகியிருந்தது. மலையாள மந்திரம் கற்ற காலத்தில் போகரின் பாதரச முறைகளையும் தான் கற்றுள்ளதாகவும் சொல்லி கொள்வாராம் . இதை மெய்ப் பிக்க சில மூலிகைகளைக் கொண்டு, தன்னுடம்பில் ஏதாவதொரு பாகத்தில் வெட்டச் சொல்லி, அப்பாகம் அவ்வ ளவு சீக்கிரம் வெட்டுப்படாததை செய்து காட்டுவாராம். அந்த அசாத்திய சூழல்தான் இவர் ஒரு தலித்தாக இருந்தும் எங்களுக்கு ஏன் வெட்டிமை வேலை செய்யவில்லை என்று எந்த மேல் சாதியாரும் கேட்காதிருந்தனர். இவர் காலத்தில் இப்பகுதியில் தலித்து கள் மீது எந்த அடக்குமுறையும் எளிதில் யாரும் கட்டவிழ்த்துவிட முடியவில்லை.

மொட்டைப் பழனி மந்திர தந்திர வேலைப்பாடுகள் கற்றாரா இல்லையா என்ற சோதனையை செய்ய யாரும் தயாரில்லை. அப்படி சோதித்தால் தனக்கோ தன் குடும்பத்திற்கோ அவரால் ஆபத்து ஏற்படும் என்ற பயம் வெகுவாக இப்பகுதி மக்களிடம் இருந்துள்ளது. மேலும் இப்பகுதியில் சில யாரேனும் மனநோய் கண்டாலோ, சித்தபிரமை கண்டாலோ மொட்டைப் பழனிதான் காரணம் என்ற செய்தியும் பரவி இருந்துள்ளது. ஆகவே இவர்கள் மொட்டைப் பழனி என்ற பறையனை ஒழித்துக்கட்ட மந்திர தந்திரங்கள் கற்றதாக கூறிக்கொண்ட பலரையும் நாடியும் பயனில்லை. தானும் மந்திர தந்திரம் கற்றதாக கூறிக்கொண்டவர் கள் மேல்சாதியார் கூறிய அசாத்திய மான காரியங்களால் தனக்கோ தன் குடும்பத்துக்கோ பழனியால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் பின்வாங்கினர். இதை வெளிப்படுத்த முடியாத அவர்கள் இப்படிதான் கூறி கொண்டனர். மலையாள தேசத்து பெரிய மாந்திரீகனிடமிருந்து எல்லா தெய்வங்களையும் கட்டுப்படுத்தும் முறைகளையும் கற்றுள்ளார். எனவே நாங்கள் ஏதும் செய்து விடமுடியாது என்ற இந்த கூற்றும் மொட்டை பழனிக்கு வலு சேர்த்தது.

இந்த சூழலில் ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த சிறிய கிராமத்து ஆசாரி குடும்பத்தோடு பழனிக்கு சினேகிதம் ஏற்பட்டு, அந்த பழக்கம் ஆசாரியின் மனைவியோடும் ஏற்பட் டது. ஆசாரியின் மனைவி கணவனுக்கு பணிவிடை செய்தாளோ இல்லையோ பழனிக்கு செய்துள்ளாள். பழனி இவள் வீட்டில் தங்கினால் கோழிக்கறி, மீன்தான். நல்ல நல்ல பலகாரங்களும் செய்து கொடுப்பாளாம்.

இந்த சம்பவங்கள் ஆசாரிக்கு தெரிந்தே நடக்குமாம். ஆசாரிக்கு பழனியின் மேல் கடுங்கோபம் இருந்தாலும் இது பற்றி ஏதும் கேட்டு மந்திர வேலையால் தன்னை ஏதாகிலும் செய்துவிடுவான் என்று பயந்து அமைதி காத்தானாம். பழனியின் ஊரிலும் கடுமையான எதிர்ப்பு உண்டாயிற்று. தன்பால் ஊர் கொண்டுள்ள அச்சத்தால் தன்னை யாரும் எளிதில் நெருங்க இயலாது என்று பழனி தன்வழியிலே நடந்தார். ஆனால் இவரை நெருங்காமலே இவரைச் சுற்றி ஒரு சூழ்ச்சிவலையை மேல்சாதியார் பின்னிக்கொண்டே இருந்தார்கள். ஊரில் அநேகமாக மானங் கெட்ட காரியங்கள் நடப்பதற்கு இந்த பழனிப்பயதான் காரணம் என பேசிக்கொண்டனர்.

இதற்கு பழிதீர்த்து கொள்ள காலத்தை எதிர்நோக்கி இருந்தனர். இவரை நெருங்கும் வழிதெரியாமல் திணறி கொண்டிருந்த காலத்தில் பக்கத்து ஊரில் இருந்து வந்த சிலர் இந்த பறப் பய பழனி ஆசாரிப்பய குடும்பத் தோட ரொம்ப நெருக்கமா இருக்கான் அவென் வந்தா கொஞ்சம்கூட குலம் கோத்ரம் பாக்காமே அவென வூட்டுக் குள்ளே உக்கார வெச்சி பேசுறா.. அங்கேயே சோறு போடுறா ஆசாரி பொண்டாட்டி. அந்தளவுக்கு அவெளே வசியம் பண்ணிப்புட்டான் இந்த பறப்பயே. புருசன்காரேன் ஏன்னு கேக்கமாட்டேங்கிறான், சரி நாமளா வது கேட்கலாமுன்னா எப்போ வாரான் எப்போ போறான்னே தெரியலே. ஆசாரி வூடு தோப்புகுள்ளே தனியா இருக்கறது இந்த பறப்பயலுக்கு ரொம்ப தோதாப் போச்சு. நம்மோ சீரங்கன் வூட்டுல ஏதோ விசேசமா. அங்கே இந்த பழனிப் பய போயி செஞ்சி வெச்சிருக்குற பலவாரத்தே கேட்டானாம். ஏலேஇன்னும் சாமி கும்பிடலே அப்புறம் வாடா தாரேன் னாங்ளாம். இந்த பயலுக்கு கோவம் வந்து, நான் கேக்குறேன் சாமிக்குன்னு சொல்லுறீங்களா, சரி அப்போ நல்லா சாப்பிடுங்கோன்னு சொன்னானாம். கொஞ்சநேரம் போயி பாத்தா அந்த பல வாரமெல்லாம் சொருக்கட்டையா போச்சாம். (சொருக்கட்டை - தவளை) அதனாலே யாரும் இவன்கிட்டே ஏதும் பகெமே கொள்றது கிடையாது.

இதே இப்படியே வுட்டுட்டோமுன்னா இந்த ஆசாரிப்பயலே போலே நம்மோ வூடுகளேயும் பாஞ்சிடுவான். ஆசாரி பயலே விட்டு எப்படியாவது ஏரிக்கரே பக்கம் கூட்டியாடான்னு சொன்னா அங்கே வரும்போது ஆளும் பேருமா நின்னு ஒரே அமுக்கா அமுக்கி கதேயே முடிச்சிடலாம். அவெனே வாயே தொறந்து மந்தரம் சொல்ல வுடாமே பாத்துக்கிடனும். மந்தரம் சொன்னா அப்பறம் நாம்மோ கெதி அதோ கெதிதான். பாத்துகோங்கோ என்றார் ஒருவர். இந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றனர். ஆசாரி அழைக்கப்பட்டு இந்த கருத்து தெரி விக்கப்பட்டபோது ஆசாரி, நான் இருந்து இந்த காரியத்தை செய்தேன்னு அவன் மனசார நெனேச்சான்னா அடுத்த நொடியே என்னே மாறுகால் மாறுகை வாங்கி கைகால் விளங்காமே செஞ்சிடுவான்னு பயந்தான். அனைவரும் சேர்ந்து மிரட்டவே ஒப்புக் கொண்டான் ஆசாரி.

பழனியை சந்தித்த ஆசாரி, பழனி பழனி யாம் வூட்டுக்காரி அவ அப்பேன்வூட்டுக்கு போறாளாம். ஏதோ உன்னுகிட்டே சேதி சொல் லிட்டுப் போவனுமுன்னா. அதான் போறே வழியிலே பாத்து சொல்லிப் புடலாம்னு நா வந்தேன். அவெளே நம்மூர் ஏரிக்கரே பக்கம் நில்லு, நான் போயி கூட்டியாரேன்னுட்டு வந்தேன் வா போவலாம்னு அழைத்தார். இதை நம்பிய பழனியும் பின்னாலே சென் றார். ஏரிக்கரை பக்கமெல்லாம் பெருங் காடுதான். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருக்க, தயா ராக பதுங்கி இருந்தவர்கள் தங்களின் திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஏரிக் கரையை ஒட்டிய பகுதியில் ஒரு காட்டு வாரிக்கரையிலிருந்த எல்லைக்கல்லில் பழனியின் தலை வைக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது.

இதை கேள்விப்பட்ட தலித்துகள் ஆவேசம் கொண்டு திரண்டார்கள். யப்பா இவ்வளவு மாந்திரீகம் கத்தவ னுக்கே இந்த கதியின்னா நம்மோளே என்னா செய்வாங்க போங்கடா பேசமே போயி சவத்தே எடுத்து அடக் கம் பண்ணிட்டு நம்மோ பறையங் குளத்துலே தலேயே மூழ்கிடுங்க. இனி நம்மோ ஏதும் செஞ்சிட முடியாது என்றார் ஒரு பெரியவர். மொட்டைப்பழனியை வெட்டிய அந்த கல்லின் மேல்பகுதியில் படிந்துபோன ரத்தக்கறை பல வருடங்கள் அப்படியே இருந்தது என்றே கூறும் இவர்கள் அந்த இடத்தையே ஞாபகமாக போற்றி வருகின்றனர். அந்த நினைவிடத்தில் உள்ள இந்தக்கல் தற்போது காட்டுவாரி யின் கரை அரிப்பில் கீழே சாய்ந்து கிடக்கின்றது. கல்லை புரட்டவோ அல்லது தூக்கி நிறுத்தவோ எந்த முயற்சியும் ஏன் எடுக்க வில்லை என்று கேட்டபோது இந்த கல்லை புரட்டி னாலோ நிமிர்த்தினாலோ அதை தொட்டவர்களின் குடும்பம் விருத்தி யடையாது என்ற கதை பின்னப்பட் டுள்ளதே அந்த பயத்திற்கு காரணம் தான் எனப் புரிகிறது.

பழனியின் கொலைக்கு திட்டம் வகுத்து கொலையை முன்னெடுத்தவ ரின் குடும்பத்தில் மூன்று தலைமுறை யாக ஏதாவவொரு குழந்தை ஊமை யாகவோ, ஏதோவொரு வகையில் ஊனமாகவோதான் பிறக்கிறது எனக் கூறுகின்றனர். இதில் உளவியல்ரீதி யான பாதிப்பும் உள்ளது என்பதை மறுப்பது மட்டுமின்றி, மொட்டைப் பழனிக்கு அப்புச்சி என்றே மறுபெயர் சூட்டி அப்பெயராலே அவருக்குண் டான வழிபாடு செய்யும் இவர்கள் எங்கிருந்தாலும் சொந்த மண்ணில் இந்த விழாவை செய்ய வந்து விடுகி றார்கள். வரவியலாத காலங்களில் பழனி சம்பந்தப்பட்ட குடும்பத்தா ருக்கு சிறுதொகையை அனுப்பி வழி பாடு செய்து நேர்த்திக்கடனை நேர் செய்து கொள்வதாக கூறுகின்றனர்.
பழனி இருந்தவரையும் எங்க மேலுலே ஒரு சிறு தூளும்கூட போட முடியாது. யாருக்கும் அந்த துணிச்சல் இல்லே. அவென் போனப்புறவு எங்களே மத்த மத்த ஊரு கள்ளர் சமூகம் எந்த ஆதிக் கம் செய்யுதோ அந்த கதே இங்கயும் தொடருது எனக்கூறும் பழனி குடும்பத் தின் தலைவர், இந்த செய்தியே யாம் பாட்டேன் எங்கப்பன் மூலமும் எங்கப்பன் மூலமா நானும் சொல்லி கொண்டேதான் இருக்கோம் என்றார் எண்பது வயதை கடந்து நிற்கும் முதியவர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com