Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007


நமக்கான ஒரே பாதை
எஸ்.வி.ராஜதுரை

உதறியெறியப்பட்ட அடிமைச் சங்கிலிகள்
இனி ஒருபோதும் திரும்பி வாரா
உங்களுக்கான ஒரே பாதை
இதோ எதிரே உள்ள இந்தப் பாதைதான்

மாபெரும் நவம்பர் புரட்சி, ரஷியப் பாட்டாளி மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான விடுதலைப் பாதையைத் திறந்துவிட்டு விட்டதாகப் பாட்டாளி வர்க்கக் கவிஞர் டெமியோன் பெட்னி பாடினார். மிகப் பெரும் நில அதிர்வினைப்போல உலகைக் குலுக்கிய அந்தப் புரட்சியைப் பற்றி, முதலாளி வர்க்கத்தின் ஊடகங்களும் பிரச்சாரகர்களும் அன்று முதல் இன்றுவரை ஒரு பொய்யை இடைவிடாது கூறி வருகின்றனர்.

அதாவது, அன்றைய ஜார் ரஷியாவுடன் போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியின் முகவராகச் செயல்பட்ட லெனின், ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவாளியாகச் செயல்பட்ட த்ரோத்ஸ்கி போன்ற சில சதிகாரர்களின் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிவேலைதான் 1917 நவம்பரில் நடந்ததேயன்றி ஒரு புரட்சியல்ல, அன்றைய ரஷிய மக்கள் எப்படியோ இந்தச் சதிகாரர்களின் மோசடிக்குப் பலியாகிவிட்டனர் என்னும் பொய்தான் அது.

மிகப் பரந்துபட்ட ரஷியப் பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயி வர்க்கத்தினதும் பேராதரவுடன் நடைபெற்ற அந்தப் புரட்சியின் வெகுமக்கள் தன்மையை மறுதலிப்பதற்காகவே இந்தக் கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அந்தப் புரட்சி விரல்விட்டு எண்ணக்கூடிய சதிகாரர்களின் ஆட்சிக் கலைப்பு வேலை என்றால், ஜார் வீழ்ச்சியடைந்தவுடனேயே ஒரு புதிய புரட்சிகர அரசாங்கம் தோன்றியது எவ்வாறு?

புரட்சியை அடுத்து நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது அந்தப் புரட்சிகர அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடியது ஏன்? என்னும் கேள்விகளுக்கு ‘சதி வேலை’ என்னும் கோட்பாட்டால் பதில் சொல்ல முடியாது. ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ் பதவி துறந்தவுடன், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பூர்ஷ்வா அரசாங்கத்தால் ரஷிய மக்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளை (போர் நிறுத்தம், உணவு, நிலம்) நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்னும் கேள்விக்கும் இந்த பொய்யால் பதில் சொல்ல முடியாது.

20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் புரட்சியான நவம்பர் புரட்சி உண்மையில் இரத்தம் சிந்தாத புரட்சியாகவே தொடங்கியது. புரட்சியாளர்கள் வன்முறையை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கவில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அந்தப் புரட்சியை, அதன் தொட்டிலிலேயே கழுத்தை நெறித்துக் கொன்று விடுவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 16 ஏகாதிபத்திய, முதலாளிய நாடுகளின் பின்பலத்துடன் எதிர்ப் புரட்சி வெண்படையினர் நான்காண்டுகாலம் நடத்திய ஆக்கிரமிப்புப் போரை ரஷியச் செம்படை முறியடித்தது. உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து வந்த பஞ்சமும் பட்டினியும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்டன. உள்நாட்டுப் போரில், போல்ஷ்விக் புரட்சி மரபில் புடம்போட்டு எடுக்கப்பட்ட ரஷியப் பாட்டாளி வர்க்கம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்டது.

மார்க்ஸியவாதிகள் வன்முறையை வழிபடுகிறவர்களோ, புரட்சி என்பதை வன்முறைச் செயல்பாடுகளாகக் குறுக்குபவர்களோ அல்லர். அவர்கள், மற்ற எல்லா மனித நேயர்களைப் போலவே, மனித உயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமல், சமூக மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறவர்கள் தான். ஆயினும் வரலாற்று வளர்ச்சியின் சில குறிப்பிட்ட கட்டங்களில், சமூக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறை வழியைத் தவிர வேறில்லை என்னும் நிலை ஏற்படத்தான் செய்கின்றது.

ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிவதற்காக நடந்த பூர்ஷ்வா புரட்சிகளாகட்டும், பிரிட்டிஷ் காலனியாட்சியிலிருந்து விடுபடுவதற்கும் பின்னர் தென் மாகாணங்களிலிருந்த நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்கு எதிராகவும் அமெரிக்காவில் நடந்த உள் நாட்டுப் போராகாட்டும், அவை மிகுந்த வன்முறைத் தன்மை கொண்டனவாகவே இருந்தன. இந்தியாவிலும் கூட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெகு மக்கள் மேற்கொண்ட போர்க்குணமிக்க, வன்முறை சார்ந்த பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே ‘காந்திய அமைதி வழியிலான சுதந்திரம்’ சாத்தியமாயிற்று.

உலகின் முதல் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என மார்க்ஸ¤ம் ஏங்கெல்ஸ¤ம் கருதிய ‘பாரிஸ் கம்யூனில்’ (1871) நிகழ்ந்ததைப் போலவே ரஷியாவிலும் தொழிலாளிகளும் உழவர்களும் அவர்களது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்த புரட்சிகர அறிவுஜீவி வர்க்கத்தினரும் அதிகாரத்தைத் தமது கரங்களில் எடுத்துக்கொண்டனர். உழைக்கும் மக்கள் தாமாகவே முன்வந்து உருவாக்கியவைதான் ‘சோவியத்துகள்’ என்னும் அதிகார அமைப்புகளாகும். இவை எந்த அறிவாளியின் சிந்தனையிலிருந்தும் முளைத்தவையல்ல.

அவற்றுக்குத் தத்துவரீதியான, அரசியல்ரீதியான வழிகாட்டுதல்களை லெனினின் தலைமையிலிருந்த போல்ஷ்விக்குகள் வழங்கினர். ஜெர்மனியுடன் ஜார் நடத்திவந்த போர் நிறுத்தப்பட்டது;உழுபவருக்கு நிலம் சொந்தமாக்கப்பட்டது; இன்றியமையாப் பண்டங்கள் சமத்துவ அடிப்படையில் வழங்கப்பட்டன. ஆனால் தூக்கியெறியப்பட்ட உள்நாட்டுச் சுரண்டும் வர்க்கங்கள், ஏகாதிபத்திய, முதலாளிய நாடுகளின் துணையுடன் நடத்திய உள்நாட்டுப் போரில், போல்ஷ்விக் புரட்சி மரபில் புடம்போட்டு எடுக்கப்பட்ட, புதிய சோவியத் அமைப்புகளை நிர்வகிக்கும் திறன் பெற்றிருந்த பாட்டாளிவர்க்க உறுப்பினர்களில் இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர்.

உள்நாட்டுப் போர்க்காலத்தில், போர்வீரர்களுக்கும், அரசாங்க நிர்வாகத்திற்கும், சாதாரணப் பொது மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களையும் பிற நுகர்வுப் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்வோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்யும் ‘போர்க்கால கம்யூனிச முறை’ நடைமுறையில் இருந்தது. உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து வந்த பஞ்சமும் பட்டினியும் பல்லாயிரக்கணக்கான மக்களைத் துன்புறுத்தின. இந்த சூழலிருந்து விடுபடுவதற்காக லெனின் தலைமையிலிருந்த போல்ஷ்விக்குகள் நீண்ட, வேதனைமிக்க விவாதங்களுக்குப் பிறகு ‘புதிய பொருளாதாரக் கொள்கையை’ நடைமுறைப்படுத்தினர்.

முதலாளியத் தனியுடைமை முறையை ஓரளவிற்கு அனுமதித்த இந்தக் கொள்கை, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளிகளின் நலன்களைப் பாதிக்கவில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படை நோக்கம், நாட்டிற்கு இன்றியமையாத எரிசக்தி வளங்களை உருவாக்குதல், அனைவருக்கும் கல்வி வழங்குதல், மக்களின் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியனவாகும். இதன்பொருட்டு, கம்யூனிஸ்ட் கட்சியைச் சாராத, ஆனால் புரட்சி அரசாங்கத்திற்கு விரோதமாக இல்லாத அனைவரும் ‘சக பயணிகள்’ என அழைக்கப்பட்டனர். பல்வேறு வகையானதும் மிகப் புரட்சிகரமானவையுமான புரட்சிகர கலை, இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.

அன்றாட நிர்வாகத்தை நடத்திச் செல்லத்தக்க பயிற்சி பெற்ற பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினர் உள் நாட்டுப் போரில் அழிந்துவிட்ட சூழலில், தவிர்க்க இயலாத ஒரு தீமையாக, பழைய குட்டி பூர்ஷ்வா அதிகாரி வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார் லெனின் ‘அரசாங்க நிர்வாகத்தை மேற்கொள்ளுங்கள்’ என்று. இதிலுள்ள அபாயத்தை லெனின் அறியாமலில்லை. பழைய பாட்டாளிவர்க்கத்தில் எஞ்சியிருந்த பகுதி, புதிதாக உருவாக்கப்படப் போகின்ற பாட்டாளி வர்க்கம் ஆகியவற்றின் பண்பாட்டு மட்டத்தை உயர்த்தி அவர்களிடம் அரசாங்க நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பதற்குச் சிறிதுகாலம் பிடிக்கும் என்பதை உணர்ந்திருந்த லெனின் ‘புதிய பொருளாதாரக் கொள்கையை’ நாட்டின் உடனடிப் பிரச்னைகளைத் தீர்க்கும் தற்காலிகத் தீர்வாகவே கருதினார்.

லெனினும் பிற புரட்சிகர போல்ஷ்விக் தலைவர்களும் முதலில் ஐரோப்பிய நாடுகளில் புரட்சி வெடிக்கும் என்றும் புரட்சியில் வெற்றிபெறும் நாடுகள், சோவியத் ரஷியாவின் சோசலிச நிர்மாணத்திற்கு உறுதுணையாக விளங்கும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த புரட்சி வெற்றிபெறவில்லை அல்லது நடக்கவே இல்லை. தன்னந்தனியாக விடப்பட்டுள்ள சோவியத் ரஷியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நாட்களில் லெனின் அகால மரணமடைந்தார். லெனின், உயிரோடு இருக்கையிலேயே ரஷியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன; அந்தக் கட்சிக்குள் உறுப்பினர்களோ, தலைவர்களோ தனித்தனிக் குழுக்களாக (factions) செயல்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தது.

எனினும், கட்சிக்குள்ளேயே விவாதங்கள் நடத்துவதற்கும் கருத்து வேறுபாடுகளைத் தெரிவிப்பதற்கும் முழுமையான சுதந்திரம் தரப்பட்டிருந்தது. பழைய ஜார் ரஷியாவிலிருந்த தேசிய இனங்களின் தன்னுரிமைப் பிரச்னையை தீர்ப்பதில் லெனின் பெரும் வெற்றி கண்டிருந்தார். இதன் காரணமாகவே, பல்வேறு தேசிய இனங்களும் தேசங்களும் சேர்ந்து, சோவியத் யூனியன் உருவாவதற்கான, அதன் மூலம் சர்வதேச உணர்வை வளர்ப்பதற்கான நல்ல அடித்தளமும் உருவாகி இருந்தது. ஆனால், லெனினின் மறைவுக்குப் பிறகு தேசிய இனப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு லெனினிய முறைகளுக்குப் பதிலாக அதிகாரிவர்க்க, வன்முறை வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.

1917க்கு முன்பும் பின்பும், பல்வேறு காரணங்களால், நாட்டில் தொடர்ந்து நீடித்து வந்த வன்முறையின் காரணமாக சமாதானப்பூர்வமான வழியில் சோசலிசத்தைக் கட்டுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. கட்சித் தலைமைக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் லெனினிய வழியில் தீர்க்கப்படவில்லை. 1930களில் கட்சியில் நடந்த களையெடுப்புகளில் லெனின் தலைமையிலிருந்த போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழுவிலிருந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ஒழித்துக்கட்டப்பட்டிருந்தனர்.எல்லா முரண்பாடுகளையும் நிர்வாக, இராணுவ, போலிஸ் முறை கொண்டே தீர்ப்பது என்னும் முறை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கட்சிக்குள் நடக்கும் விவாதங்கள் பற்றிய விவரங்கள் ஒருதலைச் சார்பாகவே பொதுமக்களிடம் விளக்கப்பட்டன. உண்மையான எதிரிகள் யார், உண்மையான நண்பர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியாதபடி செய்யப்பட்டிருந்தது. 1928 தொடங்கி 1930 களின் நடுப்பகுதிவரை நாட்டிலுள்ள அனைத்து வேளாண் நிலங்களும் கூட்டுப்பண்ணைகளாக்கப்பட்டன. தொழிற்சாலைகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. கூட்டுப்பண்ணை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் கள் அனைவரும் ‘குலக்குகள்’ என முத்திரையிடப்பட்டு ஒழித்துக் கட்டப்பட்டனர்.

நாட்டை உடனடியாகத் தொழில் மயமாக்கவும் விவசாய நிலங்களைக் கூட்டுப் பண்ணைகளாக்கவும் இலட்சக்கணக்கான உயிர்ப்பலிகள் தரப்பட்டன. மக்களின் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்டன. தொழிற்கூடங்களும் விவசாயக் கூட்டுப் பண்ணைகளும் உழைக்கும் மக்களின் கட்டுபாட்டில் இருப்பதற்கும், அவர்களது பகிரங்கமான விவாதங்களுக்கும் கூட்டு முடிவுகளுக்கும் உட்படுத்தப்படுவதற்குப் பதிலாக, மேலாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

இந்த உண்மைதான் 1991இல் போரிஸ் யெல்ட்ஸின், சோவியத் யூனியனைத் தகர்த்து அதிலிருந்த உறுப்பு நாடுகள் தனித்தனியாகப் பிரிந்து செல்லவும் ரஷியாவை முதலாளித்துவ நாடாக ஆக்கவும் அனுமதித்தபோது, மிகக் கூர்மையாக வெளிப்பட்டது. சோசலிசத்தை உருவாக்க 1917க்கு முன்பும் பின்பும் நடந்த வன்முறைகளுடன் ஒப்பிடுகையில் சோவியத் யூனியனின் தகர்வும் முதலாளிய மீட்பும் மிக அமைதியாக நடந்ததற்குக் காரணங்கள் யாவை? லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்த 1929ம் ஆண்டிலிருந்து சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போரில் தள்ளப்பட்ட 1941 வரையிலான காலகட்டத்தின் அந்த நாட்டில் ஏற்பட்ட இரண்டு ஒன்றுக்கொன்று முரண்பட்ட வளர்ச்சிப் போக்குகள்தான் காரணங்கள்.

விளைநிலங்கள் அனைத்தும் கூட்டுப்பண்ணைகளாக்கப்பட்டு, தொழிலுற்பத்தி முழுவதும் அரசுக்கட்டுப்பாட்டில் வந்த பிறகு அந்த நாட்டில் சோசலிசம் நிர்மாணிக்கப்பட்டு விட்டதாகவும், வர்க்க வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துவிட்டதாகவும் ஸ்டாலின் அறிவித்தார். அதேசமயம் கட்சிக்குள்ளும் வெளியேயும் பல்லா யிரக்கணக்கானோர் ‘களையெடுப்பு’களுக்கு ஆளாகிய தன் காரணமாக, சோவியத் அதிகார உறுப்புகள் பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதற்குப் பதிலாக அதிகாரிவர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன- இந்த அதிகாரிவர்க்கமும்கூட அவ்வப்போதான களையெடுப்புகளிலிருந்து தப்பவில்லை என்னும் போதிலும்.

இந்த அதிகாரி வர்க்கம், நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதில் ஒருவகையான சேமநல அரசின் (welfare state) கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததாலும், மார்க்சியம்-லெனினியம் என்பதை அரசின் அதிகாரபூர்வமான கருத்துநிலை என அறிவித்து, மார்க்ஸிய மூலவர்களின் நூல்களை மட்டுமின்றி ‘மார்க்ஸியம்-லெனினியம்’ என தான் வரையறை செய்த ஒரு தத்துவத்தைப் பரப்பி வந்ததாலும், சோவியத் யூனியன் ‘சோசலிச நாடாகவே’ கருதப்பட்டு வந்தது. அது ஒரு ‘திருத்தல்வாத நாடு’, ‘சீரழிந்தவடிவிலான தொழிலாளர் ஆட்சி நடக்கும் நாடு’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வந்தபோதிலும், அது ஏதோ ஒருவகையில் சோசலிசத்தை நடைமுறைப்படுத்தும் நாடு என்பதே பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாக இருந்தது.

நாட்டின் உடைமைகள் ஏதும் அதிகாரிவர்க்கத்தின் தனி உடைமையில் இருக்கவில்லையாதலால், பெரும்பாலானோர் அதனை ஒரு ஆளும் வர்க்கமாகப் பார்க்கவில்லை. அதாவது, உற்பத்தி உறவுகளைப் பொருத்தவரை அது, எதிரெதிர் முனைகளிலுள்ள பாட்டாளி வர்க்கத்தையோ, பூர்ஷ்வா வர்க்கத்தையோ சார்ந்ததாக இருக்கவில்லை. அதனிடம் மூலதனம் இருக்கவில்லை; தான் மட்டுமே பலன் அனுபவிக்கும் முறையில் உபரி மதிப்பை அபகரிப்பதற்கான ஏற்பாடுகளும் அதனிடம் இருக்கவில்லை. எனினும், போதுமான உபரியைக் கைப்பற்றி அதனை அரசின் கட்டுப்பாட்டிலிருந்த தொழில் உற்பத்தியிலோ, நிர்வாக யந்திரத்திலோ, இராணுவப் பராமரிப்பிலோ முதலீடு செய்யக்கூடிய வகையிலும் இந்த உபரியின் ஒரு பகுதியைத் தனக்கான சிறப்புச் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றை வழங்கிக்கொள்ளும் வகையிலும் அரசுத் தொழில், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் இந்த அதிகாரி வர்க்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.

தொழில்,வர்த்தக நிறுவனங்கள்,கூட்டுப்பண்ணைகள் முதலியனவற்றின் மேலாளர்கள், அறிவுஜீவிகள், தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோர் மேல்-கீழ் படி வரிசையாக அமைந்த அமைப்பு அங்கு உருவாகியிருந்தது. அரசு நிர்ணயிக்கும் வகையில் அறிவுஜீவிகள் மூளை உழைப்பையும், தொழிலாளர்களும் உழவர்களும் உடல் உழைப்பையும் விற்பனை செய்துவந்தனர்.

தொழில்,வர்த்தக நிறுவனங்களிலும் கூட்டுப் பண்ணைகளிலும் இருந்த மேலாளர்கள், இவற்றின் சட்டரீதியான உடைமையாளர்களாக இருக்கவில்லை; உற்பத்தி உறவைப் பொருத்தவரை சட்டரீதியாக வரையறுக்கப்படும் அர்த்தத்தில் அவர்கள் வர்க்கமாக அமையவில்லை; அதேபோல அவர்கள் அனைவரையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த தொழில், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அரசு அதிகாரி வர்க்கம், தொழில், வர்த்தக, விவசாய நிறுவனங்களிலிருந்து பெறப்படும் உபரியை அரசு நிர்வாக யந்திரத்தைப் பேணிப்பாதுகாக்கப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அதேசமயம் ஒட்டுமொத்த அதிகாரி வர்க்கத்தின் சிறப்புச் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றின் பொருட்டு இந்த உபரியில் ஒரு பகுதியை ஒதுக்கவும் முடிந்தது.

அரசு நிறுவனங்களுக்கும் நிர்வாக அமைப்புகளுக்கும் தமது மூளை உழைப்பையும் உடல் உழைப்பையும் விற்பனை செய்து வந்த தொழிலாளிகளும் விவசாயிகளும், அறிவுஜீவிகளும் அந்நியமாக்கப்பட்டிருந்தனர். ‘அரசுக்குச் சேவை புரிக’ என்பதுதான் அன்றைய முழக்கமாக இருந்தது. உழைக்கும் மக்களின் சுதந்திரமான படைப்பாற்றலுக்கு இவ்வாறு தளையிடப்பட்டிருந்தது, அரசியல், பண்பாட்டு, பொருளாதாரத் துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்குத் தேவையான நுகர்பொருட்களின் உற்பத்தியும் விநியோகமும் வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவானதாகவே இருந்தன. உலகில் தகவல் தொடர்பு சாதனங்களில் மிகப் பெரும் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்க, மாற்றுக் கருத்துகளை அரசுத் தணிக்கை முறைகள் மூலம் பரவாமல் தடுக்க முடியும் என்னும் அபத்தமான சிந்தனை சோவியத் அதிகாரி வர்க்கத்திடம் இருந்தது.

இத்தகைய பாதகமான அம்சங்களினூடாகத்தான் உலக வரலாறு நடந்திருக்கிறது. ஐரோப்பியக் காலனியாதிக்க வாதிகள் காலனி நாடுகளில் இழைத்த குற்றங்கள், அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட அடிமை முறையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஆகியவற்றையும் நம்மால் மறக்க இயலாது. எனினும், இந்த நாடுகளில் ஏற்பட்ட அறிவியல், பண்பாட்டு, பொருளாதார வளர்ச்சிகளையும் எவ்வாறு மறுக்க முடியாதோ அவ்வாறே சோவியத் யூனியனில் ஏற்பட்ட ஆக்கபூர்வமான வளர்ச்சிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவு வழங்கப்பட்டது. இலட்சக்கணக்கான மருத்துவர்களும் பொறிஞர்களும் அறிவியலாளர்களும் உருவாக்கப்பட்டனர். முன் எப்போதும் இருந்திராத பண்பாட்டு வளர்ச்சியை அந்த நாட்டு மக்கள் பெற்றனர். வேலையின்மை, உணவின்மை என்னும் நிலை ஒழித்துக்கட்டப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, உலக நாடுகள் பாசிசத்திற்கு அடிமையாகமலிருப்பதற்கு மிகப் பெரும் தியாகத்தைச் அந்த நாட்டு மக்கள் செய்தனர். (எனினும் பாசிசத்திற்கு எதிரான அவர்களது போர் ‘ ‘தந்தையர் நாட்டைக் காப்பதற்காக’ என்னும் முழக்கத்தின் கீழ்தான் நடத்தப்பட்டதேயன்றி “சோசலிச நாட்டைக் காப்பதற்காக’ என்னும் முழக்கத்தின் கீழல்ல.) நவம்பர் புரட்சியின் தாக்கத்தின் கீழ் ஏராளமான காலனிநாடுகள் விடுதலையடைந்தன. ரஷியாவில் நடந்தது போன்ற புரட்சி தங்கள் நாடுகளிலும் வந்துவிடுமோ என அஞ்சிய முதலாளிய நாடுகள், தம் நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயின.

சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு, ரஷியாவின் முதல் அதிபராகப் பதவியேற்ற போரிஸ் யெல்ட்ஸினால் அந்த நாட்டின் தொழில் நிறுவனங்களையும் பிற செல்வங்களையும் மாஃபியா முதலாளிகளுக்கும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும் மலிவுவிலையில் விற்பனை செய்ய முடிந்தது எப்படி? பழைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசாங்கத்திலும் பெரும் பொறுப்புகளை வகித்து வந்த சிலரால் இந்த உடைமைகள் சிலவற்றை வாங்க முடிந்தது ஏன்? இதற்கு வெகுமக்கள் எதிர்ப்பு ஏதும் இல்லாதிருந்தது ஏன்? யெல்ட்ஸின், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோ உறுப்பினராக இருந்தவர். அதேபோல, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற ஜார்ஜியாவின் அதிபராயிருந்த எட்வர்ட் ஷெவெர்னாட்ஸெவும் கூட போலிட்பீரோ உறுப்பினராக இருந்தவர்தான்.

இவர்கள் சோவியத் அதிகாரிவர்க்கத்தின் தலைமைப் பீடங்களில் இருந்தவர்கள். இந்த அதிகாரிவர்க்கமோ, உற்பத்தி உறவுகளைப் பொருத்தவரை, பூர்ஷ்வா வர்க்கத் தையோ, பாட்டாளிவர்க்கத்தையோ சேர்ந்ததல்ல; எனவே மரபான முதலாளித்துவ நலன்கள், பாட்டாளி வர்க்க நலன்கள் ஆகிய எதனையும் பிரதிநிதித்துவம் செய்யாதவர்கள். யெல்ட்ஸினைப் பொருத்தவரை, அரசு உடைமையிலிருந்த சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்ததன் மூலம், அதிகாரிவர்க்கத்தில் தனக்கு எதிராக இருந்த குழுக்களின் செல்வாக்கையும் பிடியையும் அகற்றி, தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது.

யெல்ட்ஸினின் கீழ் முன்னாள் சோவியத் ரஷியா மூன்றாம் உலக ஏழை நாடுகளின் தரத்திற்குத் தாழ்ந்து மாஃபியாக் கும்பல்களின் அராஜக, வன்முறைகளுக்கு ஆட்பட்டிருந்தது. அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த விளாடிமிர் புட்டினும்கூட, முன்னாள் சோவியத் அதிகாரிவர்க்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் தான். அவரது ஆட்சியின்கீழ் ரஷியாவின் முக்கியத் தொழில்கள் பல, மீண்டும் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் ரஷிய அதிகாரி வர்க்கத்தினருக்குச் சவாலாக உருவான மா•பியா முதலாளிகளின் வலு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆக, சோவியத் யூனியனிலும் அதன் தகர்வுக்குப் பிறகு ரஷியாவிலும் இருந்த ‘சோசலிசம்’, ‘மா•பியா முதலாளியம்’, புட்டின் காலத்தில் முக்கியத் தொழில்களை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலாளியம் ஆகியன உற்பத்தி உறவுகளைப் பொருத்தவரை, பாட்டாளிவர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்துக்குமிடையே ஊசலாடிய, சட்டரீதியான வடிவத்தில் தனியுடைமையைப் பெற்றிராமல் இருந்த, மேற்சொன்ன இரண்டு வர்க்கங்களில் ஏதொன்றுக்கும் அடிப்படையான விசுவாசம் கொண்டிராமல் இருந்த அதிகாரி வர்க்கத்திலிருந்த வெவ்வேறு குழுக்கள், தமது அதிகாரத்தைத் திரட்சி செய்துகொள்வதற்காகவும் எதிர்க்குழுக்களைச் செயலிழக்க வைப்பதற்காகவும் மேற்கொண்ட வெவ்வேறு பொருளாதார நிர்மாண முறைகள் எனக் கருதலாம். இது குறித்த ஆழமான விவாதங்கள், சோசலிச இலட்சியத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குப் பயன்படும்.

எப்படியிருப்பினும், அன்றிருந்த சோவியத் யூனியன், அதன் சிதறல்களாய் வெவேறு நாடுகளில் வசிக்கும் மக்களைப் பொருத்தவரை, இன்றுள்ள அவர்களது நிலைமைகளை ஒப்பிடுகையில் ‘சொர்க்க பூமியாகவே’ இருந்தது எனக் கூறலாம். மேலும், 1991 வரை சோவியத் யூனியன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பெரும் சவாலாக இருந்தது இதன் காரணமாக, பலநாடுகள் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறவும், தேசியப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கவும் முடிந்தது. ஆ•ப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நடத்திய போரே அதனுடைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாயிற்று. ஆ•கானிஸ்தான் போரின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரும் இராணுவ, பொருளாதார இழப்புகளால் சோவியத் யூனியன் வலுக்குன்றி இருந்ததால், 1991இல் இராக்கின் மீது அமெரிக்கா நடத்திய முதல் ஆக்ரமிப்புப் போரை எதிர்த்து அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

யெல்ட்ஸின் ஆட்சியில் இருந்தவரை, சோவியத் தகர்வுக்குப் பிந்திய ரஷியா அமெரிக்காவிற்கு முழுமையாக அடங்கி நடந்து கொண்டது. புட்டின் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட, ரஷியாவால் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை முழுமையாக முறியடிக்க முடியவில்லை என்றாலும், அமெரிக்காவின் எதேச்சாதிகாரத்தை ஏற்க முடியாது எனச் சொல்லும் துணிவைப் பெற்றுள்ளது மட்டுமின்றி, புவிசார் அரசியலில் அமெரிக்காவின் கை தொடர்ந்து மேலோங்காமல் இருக்க முயற்சி செய்கிறது. அமெரிக்கா, தனியார் மூலதனத்தைக் காக்கும் முதலாளிய நாடு. ரஷியா, அதிகாரிவர்க்க முதலாளியம் நிலவும் நாடு. இரண்டின் நலன்களும் அடிப்படையில் வேறுபடுகின்றன. இந்த அளவில், அமெரிக்காவை எதிர்த்து நிற்பதற்கு மற்ற நாடுகளுக்கு இன்றைய ரஷியா ஒரு கூட்டாளியாக அமையும்.

உலகின் முதல் சோசலிசப் புரட்சி நடந்த நடந்த நாட்டில் ஏற்பட்ட இந்த வரலாற்று வளர்ச்சியும் சோசலிசத்தின் வரலாறும் ஒன்றுதான் என்பதல்ல நாம் மேலே கூறியனவற்றுக்குப் பொருள். சோவியத் யூனியனில் ஏற்பட்ட எதிர்மறை வளர்ச்சிகளைக் கருத்தில்கொண்டு, சோசலிச நிர்மாணத்திற்கான வேறு பாதைகளைக் கண்டறிய முனைந்தனர் மாவோவும் செகுவெராவும். இலத்தீன் அமெரிக்க நாடுகளில், சோசலிசத்திற்கான முற்றிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகமயமாக்கலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்கள் சோசலிசப் புரட்சிக்கான வடிவங்களாக உருத்திரட்சி பெறவில்லை என்றாலும், முதலாளியம்-அதிலும் குறிப்பாக இன்றைய நவதாராளவாத முதலாளியம் - எவ்வளவு கொடியது, அது மனித இருப்புக்கும் இந்தப் புவிக்கோளத்தின் இருப்புக்குமே பேரழிவை ஏற்படுத்திவருகிறது என்பதையும் மார்க்சியத்தின் இன்றைய பொருத்தப்பட்டையும் இந்தப் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்துக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. 21ம் நூற்றாண்டு சோசலிச இயக்கங்கள், முந்தைய சோசலிச முயற்சிகளின் பலகீனங்களையும் தோல்விகளையும் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இது. அதே சமயம், லெனினின் பாட்டாளிவர்க்க மார்க்கத்தையும் அவரது தலைமையின் கீழிருந்த சோவியத் அதிகார அமைப்புகளின் ஜனநாயகத்தன்மையையும் மறக்காமலிருப்பதும் அவசியம்.

இக்கட்டுரைக்கான தரவுகள்:

1. James Petras,Capitalism versus Socialism:The great debate revisited,petras.lahaine.org
2. G.M.Tamas, Counter-revolution against a counter-revolution, Eastern Europe Today,Eurozine Magazine,October 2007.
3. Sharat G.Lin, On the Ninetieth Anniversary of the Russian Revolution: Why Socialism Did Not Fail< MRZine Magazine,29.10.2007
4. An October for Us, for Russia, and for the Whole World Appeal of 17 Russian Intellectuals and Artists, MRZine Magazine,3.11.2007


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com