Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007


கருத்த லெப்பை
கீரனூர் ஜாகீர் ராஜா

கிச்சு கிச்சாண்டி
கீரத் தண்டான்டி
நட்டு வச்சாண்டி
பட்டு போச்சான்டி
கிச்சுக் கிச்சுக் கிச்சு
கிச்சுக் கிச்சு...
கருத்த லெவை அம்மணமாய் நின்று அழுதுகொண்டிருக்க கொடிக்கால் மாமு பாட்டுப்பாடி கிச்சுகிச்சு மூட்டி அவனுக்கு சிரிப்பு வரவழைத்தார். ருக்கியா கொப்பி தட்டி கொண்டாட்டமாய் குதித்தபடி சிரித்தாள். ஒரு வயதாகும் முன்னரே கருத்த லெவைக்கு வீம்பும் பிடிவாதமும். தொடர்ந்து அழுவானே ஒழிய சிரிப்பு வராது. அவனின் அழுகையை நிறுத்த வீடே கிடந்து கஷ்டப்படும்.

சோறு ஆக்கிக்கொண்டே அகப்பையை அண்டாவில் தட்டி ஓசை எழுப்புவாள் பாத்துமா. அம்பா வாயால் தூத்தி ஊதிதாளம் போடுவார். கொடிக்கால் மாமு பீடிப்புகையால் வளைய மிட்டு வேடிக்கை காட்டுவார். கருத்த லெவை கணநேரம் அந்தப்புகை வளையங்களை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு மீண்டும் அழுகைக்குப் போவான். நீண்ட அழுகையை நிறுத்தும் நோக்கத்துடன் மாமு அவன் குஞ்சாவைப் பிடித்தால் மூத்திரம் பீச்சுவான் முகத்தில். சேச்சே... என்று மாமு ஒதுங்கவும், கருத்தலெவை சிரிக்கத் தொடங்குவான்.

அழுத புள்ள சிரிச்சதாம்
கழுத பால குடிச்சதாம்
ருக்கியா பாட புரிந்துகொண்டதைப் போல கருத்தலெவை தவழ்ந்துவந்து அக்காவை விரட்டுவான். வீடே கலகலப்பாகிவிடும். மாமு கொண்டுவந்த அகத்திக்கீரையை உறுவி வேகவைத்து ரசம் எடுத்துக்கொடுப்பாள் பாத்துமா. வெற்றிலை கவுளிக் கணக்கில் வந்திருக்கும்.

ராதியம்மாவுக்கும் நண்ணியம்மாவுக்கும் தந்ததுபோக தெக்கம்பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து குடும்பமே மென்று கொண்டிருக்கும். வெற்றிலைச்சாறு ஒழுக கண்ணாடியில் வாய்ச்சிகப்பைக் கண்டு ரசிப்பாள் ருக்கையா. மாமுவை அவளை மடியில் கிடத்தி "கொமுரிப் புள்ளக்கி எப்புடிச் செவந்திருக்குது பாரு, செக்கச் வீர்னுதான்டி ஒனக்குப் புருஷன் வருவான்" என்பார். ருக்கியா அதைக்கேட்டு வெட்கப்படுவாள். கருத்த லெவையும் வெற்றிலை கேட்டு ஓரியாடுவான். ருக்கியா தான் மென்றதை எடுத்து தம்பிக்கு ஊட்டுவாள். எச்சிலோடு கலந்து வெற்றிலைச் சிகப்பொழுகும் அவன் வாய்க்கு முத்தம் தர ஆளாளுக்குப் போட்டி போடுவார்கள்.

கொடிக்கால் மாமு வீட்டுக்கு வந்தால் ருக்கியாவுக்குத் தீனிப் பஞ்சமிருக்காது. கம்மங்கதிரும் சோளம் ராகியும் தட்டைப்பயிர் நிலக்கடலையுடன் நுங்கும் கொடிக்காப் புளியும் இலந்தையும் கிடைக்கும்.

ஊரறியவே சின்னப்பேச்சியை வைத்திருந்தார் மாமு. சின்னப்பேச்சியின் கணவன் கலியன் ஆற்றோடு போன அடுத்தமாதமே மாந்தோப்பு தகராறில் பைசல் பண்ண ஆளில்லாமல் கொடிக்கால் மாமுவிடம் வந்து நின்றாள் சின்னபேச்சி. மாமு அரிவாளைத் தீட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்ததும் வம்புக்கு வந்த கல்துறைக் குறவர்கள் பேச்சியிடம் மாப்புக் கேட்டு ஆறுதாண்டி மேடேறித் தெறித்தனர். "தோப்பும் தொறவுமிருந்து என்ன பிரயோசனம். ஆம்பளைன்னு ஒருத்தனிருந்தா ஆயிசுக்கும் போதும்" என்று தேம்பித் தீர்த்தாள் சின்னப்பேச்சி. ஆற்றைச் சூழ்ந்திருக்கிற சோழியரோ சாணாரோ அவளுக்கு ஆதரவில்லை. மாமு மேற்கு தெருவில் மைமூன் பீவியுடன் குடித்தனம் செய்தாலும் அவர் சேவகம் செய்வது ஆற்றை ஒட்டிய வெற்றிலைக் கொடிக்காலில்தான்.

மாமுவுடன் கொடிக்கால் வேலைக்குப்போய் ஒத்தாசைக்கு நின்றாள் சின்னப்பேச்சி. எல்லோரும் ஆறேழு வருஷத்துக்கொரு தடவை அழித்துப் பயிர் செய்தார்களென்றால் மாமு மூன்று வருஷங்களிலேயே முழுக்குப் போட்டு விடுவார். வெற்றிலைக்கு நல்ல நிழல் வேண்டும். அகத்தியும் கல்யாண முருங்கையும் முதலில் பயிர் செய்து வளர்த்துக் கொள்வார் மாமு. அகத்தி நன்றாகத் தழைவிட்டு ஐந்தாறு அடிகள் வளர்ந்த தும்களிப்பசலை மண்பரப்பி நீண்ட சால் வெட்டி நீர் பாய வசதிசெய்து கொண்டு "பிஸ்மில்லா" என்று சொல்லி முதல்கொடி நடுவார் மாமு. இரண்டுநாட் களுக்கு ஒருமுறை தோப்பு வேலையை ஒத்திப்போட்டு கொடிக்காலுக்குத் தண்ணீர் விடுவாள் பேச்சி.

நான்கைந்துமுறை தழை உரம் போட்டு சாணம் வைத்தபின் ஆசுவாசமாக வரப்பு மேட்டிலமர்ந்து புகைப்பார் மாமு. நெற்றி வியர்வையை கையால் வழித்து அழுக்கு முந்தானையில் முடிந்துகொண்டு வந்த அணில் அடித்த கொய்யாப்பழத்தைத் தந்து மாமுவை வசியப்படுத்திய வள் சின்னப்பேச்சி. கடைக்கால் முடிய மூன்று மாதம். ஆறேமாதங்களில் இளங்கால். வருஷத்தில் பயிர்க்கால். முதல் கொழுந்து பறித்து சின்னப்பேச்சியிடம் கொடுக்க மெய் சிலிர்த்துப்போவாள். ஏங் ராசா... என்று புகையிலை ஒழுகும் வாயால் மாமுவின் கரத்துக்கு முத்தம் வைப்பாள். கருத்த லெவையையும் ருக்கியாவையும் இடுப்பில் சுமந்து தோப்பு முழுக்க வலம் வந்திருக்கிறாள் பேச்சி.

சின்னச் சின்ன வெத்திலையாம்
செட்டிக்கடை மிட்டாயாம்
மார்க்கெட்டு மரிக்கொழுந்தாம் - அதை
மறக்க மனம் கூடுதில்ல...
கரகரத்த தொண்டையில் மாமுவை எண்ணி இட்டுக் கட்டிப் பாடும் பேச்சியைப் பார்க்க சுகமாயிருக்கும் கருத்த லெவைக்கும் ருக்கியாவுக்கும்.

வெத்தல போட்ட புள்ள
விறு விறுன்னு போறபுள்ள
நாக்குச் செவந்த புள்ள
நாந்தாண்டி ஒம்புருஷன்
வாழையடி ஒன் கூந்தல்
வைரமடி பல்காவி
ஏழையடி நானுனக்கு
எறங்கலையோ ஒம் மனசு.
மாமுவும் எதிர்ப்பாட்டு பாடுவாராம். பேச்சி அதையும் தன் குரலில் பாடிக்காட்டுவாள். ருக்கியாவோ கருத்த லெவையோ பார்த்ததில்லை. குதூகலமான நேரம் என்றால் மாமு "வானில் முழுமதியைக் கண்டேன். வனத்திலொரு பெண்ணைக் கண்டேன் வான முழு மதியைப்போலே மங்கையிவள் வதனம் கண்டேன்..." என்று கவி கா.மு.ஷெரீப்பின் வரிகளைத்தான் பாடுவார்.

ருக்கியாவுக்கும் கறுத்த லெவைக்கும் சின்னப்பேச்சியும் கொடிக்கால் மாமுவும் காட்டிய உலகம் புதுசு. கருத்தலெவை இன்றளவும் சண்முகநதிக்குத் தோழனாயிருப்பது மாமுவின் கைங்கார்யம். பட்டப்பகலைப் போன்ற ஒரு பௌர்ணமி வெளிச்சத்தில் பாம்புகளின் இச்சா வெறியை ஒற்றைப்பனை முழுக்க விளக்குப் பூத்தது போல தூக்கணாங் குருவிக்கூடுகளை பொன்வண்டுகளை, எலி தன் வங்கிலே சேர்த்துவைத்த அரிசிமணிகளை, எல்லைச்சாமிகளை எல்லாம் காட்டியது அவர்கள் தான்.

"கருணாநீதி தொப்பம்பட்டிக்கி வர்றாரு யாரு பாக்க வாரது..." கொடிக்கால் மாமு கேட்டவுடன் கருத்த லெவை அவர் தோளில் தொற்றிக்கொண்டான். ருக்கியா கைப்பிடிக்க தொப்பம்பட்டிக்கு ஒரு சாயங்காலத்தில் நடந்துபோனதும், மாமு லைன்வீடுகளையும் சட்டப்பாறையையும் காட்டியதும் ஞாபகச் சித்திரங்கள். வழியெல்லாம் மாமு கரகரப்பான குரலெடுத்து பேசிக் கொண்டே வந்தார். கருணாநிதியின் அடுக்குமொழிப் பேச்சைக் கேட்டுவிட்டு நடுஇரவில் ஒரு பெருங் கூட்டமே ஊருக்கு நடந்து வந்தது. ஊளையிட்ட நரியையும், இரவு ராணிப்பூக்களையும் துர்தேவதையின் நடமாட்டத்தையும் காட்டிக்கொண்டே வந்தார் மாமு.

"கச்சி கச்சீண்டு இம்புட்டுப் பேரு இருக்கீங்களே... கருணாநீதிய ஒரு நாலு எட்டுத்தான நம்மூருக்கு கூட்டிக்கிட்டு வரப்புடாதா. மோட்டார்லதான வந்துருப்பாரு... நாங்களும் பாத்துருப்பம்ல... அவருக்குத்தேந்தெரியாதா. ஜுபிடர் சினிமா கம்பெனி கொடிகட்டிப் பறந்தப்ப நம்ம ஊரு எஸ்.கே. மைதீன் வீட்டுக்கு வந்து போனவரு தான கருணாநீதி, மறந்து போச்சா..." பாத்துமா வருத்தம் தொனிக்க கேட்டாள்.

லெவைகளுக்கு தி.மு.க மோகம் ரத்தத்தில் ஊறிய சங்கதி. ராவுத்தம்மாரும், நாயுடுமாரும், பிள்ளைமாரும் அதிகம்பேர் பழைய காங்கிரஸ்காரர்கள். கருணாநீதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும் ராசியாக இருந்தவரைக்கும் கொடிக்கால் மாமு தி.மு.க.வில் தான் கிடந்தார். பிறகு கட்சி பேசாமல் மௌனமாகிவிட்டார். உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகிவிட்டால் சேலை கட்டிக் கொள்கிறேன் என்று மதுரை முத்து சவால்விட்டார். பழநி ஓம் ஷண்முகாவில் படம் ரிலீஸ் அன்றைக்கு கூட்டம் ரயில்வே டிராக் வரை நின்றது. மதுரை முத்துக்கு ஊர் இளந்தாரிகள் சேர்ந்து ஒரு கோடம்பாக்கம் சேலையைப் பார்சல் அனுப்பினார்கள். சேலை வாங்க கொடிக்கால் மாமுவும் ஒரு ரூபாய் கொடுத்ததாக கடை வீதியில் பேச்சு இருந்தது.

கடைவீதியிலிருந்து ருக்கியாவை இழுத்து வந்த கருத்த லெவை கொடிக்கால் மாமுவின் மௌத் சேதியைக் கேட்டு நொறுங்கிப்போனான். ருக்கியாவும் பதுருதீனை மறந்துவிட்டு பதற்றமானாள். அவளை என்ன ஏது என்று விசாரிக்காமலேயே அப்பாவும் அம்மாவும் "மேற்க போகலாம். அப்புறமா பேசிக்குவோம்" என்று ஓட்டமும் நடையுமானார்கள்.

கணநேரத்தில் மேற்குதெரு களேபரமாகிவிட்டது "செத்தாலும் இந்தாளு மூஞ்சியில முழிக்கமாட்டேன் என்னக்கி கருகமணி கட்டுன குடும்ப ஸ்தீரிய விட்டு தோப்புக்காரி கூட சீவனம் பண்ணுனானோ இவன் தீதாரு கூட ஆகாது" என்றிருந்த மைமூன் மம்மானி நெஞ்சுவலி என்று கொடிக் காலிலிருந்து வந்து மாமு வீட்டில் சாய்ந்தவுடன் கொண்டையைப் போட்டுக் கொண்டு புறப்பட்டுவிட்டாள். பஸ் நிலையத்துக்கு பாதிதூரம் கூட போயிருக்கமாட்டாள். தெருவாசிகள் ஓட்டமாய் ஓடிவந்து சொன்னார்கள் மாமுவின் மரணச்சேதியை. கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பஸ் ஏறிப் போய்விட்டாள். எத்தனை நெஞ்சழுத்தம் என்று எல்லோரும் பேசிக் கொண்டாலும் அதில் ஏதோ நியாயமிருப்பதாகவும் ஒருசாரார் ஒப்புக்கொண்டனர்.

சலனமற்றுக் கிடந்தது மாமுவின் உடல். சமூகத்தில் இறந்த உடலுக்கு மாலை போடும் வழக்கமெல்லாம் இல்லை. மாமுவுக்கு வெற்றிலையால் ஒரு மாலை போட நினைத்த கருத்த லெவைக்கு அழுகை பீறிட்டு வந்தது. ருக்கியாவும் அம்மாவும் உறவுப் பெண்டுகளும் திரை மறைவில் தேம்பிக் கொண்டிருந்தனர். மாமுவுக்கு வாரிசு இல்லை. கருத்த லெவையும் ருக்கியாவும்தான் எல்லாமும்.

சின்னப்பேச்சி துக்கம் தாளாமல் மேடேறிச் சாணாரிடம் போய் புளித்த கள்ளைச் செம்புசெம்பாகக் கணக்கில்லாமல் குடித்து அதே வேகத்தில் ஆற்றிலிறங்கி நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டாள்.

காட்டுக்கு அந்தப்பக்கம் - கருங்
கடலுக்கு இந்தப்பக்கம்
காசி ராசா கட்டி வச்ச
காத்தாடி பங்களாவாம்
காசிராஜா மாண்ட உடனே
காகம் பறந்திடுமோ
கரிக்குருவிலாந்திருமோ

பாடி நிறுத்தியவள் ஒருமுறை தன் தோப்பைப் பார்த்தாள் இளநீர் வெட்டுகின்ற பதமான அரிவாள் எடுத்தவள் போதையின் உச்சத்தில் சேலை களைந்து தன் ஒரு மாரை அறுத்துக்கொண்டு கதறினாள். ஆறும் தோப்பும் அந்தப் பக்கம் கொடிக்காலும் ஒருநிமிடம் அதிர்ந்து அடங்கியது. கேசு கீசு ஆகிப்போகுமோ என்று பயந்த சாணார் நால்ரோட்டில் நின்று பிளஷர் பிடித்து பழநி பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனார்.

மாமுவை சந்தாக்கில் தூக்கி நடந்தபோது பின்னால் பெருங்கூட்டம் நடந்து வந்தது. கருத்த லெவைக்குப் பெருமிதமாக இருந்தது. இந்த ஜனாஸா தொழுகை வரிசையில் அஹமது கனி ராவுத்தரும் நின்றதை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பேசினார்கள்.

மழைநாளில்தான் இவனுக்கு சாம்பான் மடத்து ஞாபகம் வரும். அல்லது மடத்து ஞாபகம் வரும் போதெல்லாம் மழை பெய்யும். அன்றைக்கும் வானம் மப்புக் கட்டி நின்றது. விசும்பிய காற்றின் தழுவலில் தலைமுடி கலைந்ததைக் கோதியவாறு இட்டேரியில் நடந்து மதகு மேட்டிலமர்ந்து குளம் பார்த்தான். இரண்டு அல்லது மூன்று தடவை பாவாவைப் பார்த்து ஜோதியில் கலந்த அனுபவமிருந்தது. ஆனாலும் எஹஸா னுல்லா வந்தால் சங்கோஜ மிருக்காது. அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

பாவா முதன்முதலாக வந்து ஊருக்குள் டோராப் போட்டது பொதுச்சாவடியில்தான். வெளிச்சம் மிக்க பஜாராக இருந்தபடியால் ஒருபக்கம் ஜனநடமாட்டம். அதைவிடவும் ஊரில் அரசியல் காய்ச்சல் அமோகமாக அடித்துக் கொண்டிருந்த காலம். மைனர்களைப்போல வலம் வந்து கொண்டிருந்த வாலிபப் பட்டாளம் அரசியலுக்கு வந்து மேடைகளில் வாதம் புரியவும், பெரிய பேச்சாளர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்துவுமான சங்கதிகள் நடந்து கொண்டிருந்தது.

எல்லா கட்சிக்காரர்களுக்கும் பொதுச்சாவடிதான் திடல். அதன் வடிவமைப்பு வசதியாக இருந்தது. ஐந்தடி உயரத்தில் அகன்ற திண்ணையும் அதைத் தாங்கிய கல்தூண்களும் மேடை என்று பெரிதாக அலங்கரிக்கத் தேவையில்லாத படிக்கட்டுகளும் கட்சிக்காரர்கள் இரண்டு காய்ந்த தென்னங்கீற்றையும் கொண்டு வந்து கட்டி மைக்செட் போட்டு அதிகபட்சம் தோரணம் கட்டினார்களென்றாலே போதும் கூட்டம் ஜாம்ஜாம் என்று நடந்துவிடும்.

அகண்ட மைதானத்தில் சிறுவர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள். ஆடவும் ஓடவும் செய்வார்கள். கருத்த லெவைக்கு எந்த கட்சி கூட்டமென்றாலும் பாடல் கேட்கவேண்டும். பிறகு சிறப்புரைக்காரர்களின் உச்சரிப்பை பாவனைகளை எள்ளலை ஆவேசத்தை கண் கொட்டாமல் பார்க்கவேண்டும்.

இவ்வகையான களேபரங்கள் பாவாவுக்கு ஒத்து வரச்வில்லை. மேலும் இவர் சாவடியில் அமர்ந்து சிலும்பி அடித்தபோது குழுமியிருந்த ஊர்ப்பெரிசுகள் "எவனோ ஒரு பக்கிரிஷா சாவடியில அக்கிரமம் பண்றான் கேட்பாரில்லையா" என்று மணியகாரரிடம் புகார் செய்யவும், பாவாவுக்கு உஷ்ணம் தலைக்கேறிவிட்டது. தன்னை பக்கிரி என்றவரிடம் தர்க்கத்துக்குப் போய்விட்டார். "பார்வைக்கு பக்கிரியாத்திரியிற எங்க மூதாதைங்களெல்லாம் நாட்டோட சுதந்திரத்துக்கு உழைச்சவங்கன்னு சொன்னா புரியுமா ஒங்களுக்கு? ஹைதர்அலி திப்புசுல்தானுக்கெல்லாம் வெள்ளைக்காரனப் பத்தி துப்புச் சொன்ன பரம்பரையாக்கும். பிச்சை எடுக்கிற மாதிரி வீட்டுக்கு வீடு போயி டேப்புத் தட்டிப் பாடி தேச பக்தியத் தூண்டுன ஆளுங்கய்யா நாங்க. துச்சமா மதிக்காத போ.. போ.."என்று அவர் போட்டபோட்டில் பெரிசுகள் ஆடிப்போய்விட்டனர்.

அரசியல் புழுக்கம் தாங்க முடியாமலும் தன் ஜாகையை மாற்றி மறைவாகவும் வசதியாகவும் சாம்பான் மடம் வந்துவிட்டார் பாவா. நிறைய நிறைய ஓலைச்சுவடிகளை தோல்பைக்குள் பாதுகாத்தார். சாம்பான் மடம் வந்த பிறகு வேண்டுமென்றே ஒருதடவை சாவடி மைதானத்தில் வைத்து அவர் அஷ்டாவதானம் செய்து காட்டவும் மிரண்டு போய்விட்டார்கள். அன்று முதல் பாவாவை விமர்சிக்கும் வாய்கள் அடங்கிவிட்டன. எஹசானுல்லாவோ கருத்த லெவையோ வேறு எவருமோ அவரைத் தேடிப்போய் ஜோதியில் கலந்து வருவதொன்றும் குற்றமாகப்படவில்லை எவருக்கும்.

கருத்தலெவை இதையெல்லாம் அசைபோட்டு முடித்ததும் தூறல் தொடங்கியது. அதனூடாக எஹஸான் தொலைவில் இவனுக்கு கையைக்காட்டி சைகை செய்தான். சமீபமாக எஹசானால் நல்லவிதமாக பேச முடிவதில்லை. தானாகவே பேசும் திறன் குறைந்து போனது. சரளமாகப் பேசி வந்தவன் ஒரு வார்த்தையைப் பேசவும் நாக்குழறினான். நடவடிக்கைகளும் விசித்திரமாக இருந்தது. திடீரென சிரிப்பது எவரையேனும் அடித்துவிட்டு ஓடுவது மைளனமாவது.

ருக்கையாவின் கணவனிடம் தொடக்கத்தில் தென்பட்ட அதேவிதமான சாயைகள். கருத்த லெவைக்கு ஒருவிதமான பயம் மனதில் சுழன்றபடி இருக்கும். எப்போதாவது தானும் பிறழ்ந்துவிடக்கூடுமோ என்று. ஆனால் மனதுக்குள் எப்போதுமே அவன் உரையாடிக் கொள்வதுண்டு. நாம் பித்தப் பெருவெளியில்தானே உழல்கிறோம். பித்து தானே நம் எல்லை. நான் பித்தன் நான் பித்தன் என்று அவன் ஓலமிடுவான்.

எஹசானுடன் ஜாடையில் பேசிக்கொண்டு சாம்பான் மடம் போனதும் அவனுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு சூழல் மறந்தது. பாவா நிறைய பேசினார். எதையும் உள் வாங்கிக் கொள்ளமுடியவில்லை. அடிக்கடி சிலும்பி வழங்கப்பட்டது. உள்ளே புகை போன ஒவ்வொரு முறையும் இருண்ட நீள்குகைக்குள் பறந்து செல்லும் பட்சியாகினான்.

மழை சீராகப் பெய்துகொண்டிருந்தது. வீட்டுக்குப் போனால் விபரீதமாகிவிடுமெனத் தோன்றிற்று. மின் சாரம் தடைப்பட்டு விளக்குகளும் ஊமையாய் நின்றன. ஏழுமணிக்கே ஜன சந்தடி குறைந்து போனது. காற்றும் மழையுமாய் உடம்பில் நடுக்கமெடுத்தது. வடக்குத் தெருவில் இவன் நடந்தபோது கால்கள் தளர்ந்து தள்ளாடின. எஹசான் இவனைத் தபாலாபீஸ் திண்ணையில் கிடத்தி வேறு எவரிடமோ பொறுப்பை ஒப்படைத்தது மங்கலாகப் புரிந்தது.

நல்ல முரட்டுக் கரம். அது இவனின் இடுப்பிலிருந்து ஈரக்கைலியை உருவி எடுப்பதும் தன்னைப் புரட்டிப் போடுவதும் தெரிந்தது. ஆசனவாயில் பெரிய அழுத்தமும் அசைவுமிருந்தது. புரண்டு படுத்து சிரமத்தினூடாக அந்த உருவத்தின் நெஞ்சுக்கு கையைக் கொண்டு சென்றபோது பற்றிக் கொள்ள வாகாகக் கிடைத்தது நீளமான தாடி. தொழுகைக்கும் இபாதத்தான காரியங்களுக்கும் ஏற்ற சுன்னத்தான ரோமங்கள். வியர்வைத்தரம் முனங்கல் ஓசை காட்டிக் கொடுத்துவிட்டது அது போர்ட்டர் குதுபுதீன் என்று.

மீன்காரத் தெருவை அடுத்து கீரனூர் ஜாகீர்ராஜா எழுதிக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து .....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com