Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
தமிழகத்தில் அடையாள அரசியல் - நேற்று இன்று நாளை

விஜயன்

இருப்பே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்றார் காரல் மார்க்ஸ். இருப்பு என்பது புறச்சூழல். சிந்தனை என்பது அகச்சூழல். புறச்சூழல் அகத்தின் மீதும், அகம் புறச்சூழலின் மீதும் தாக்கமேற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அகத்தின் அச்சாணி ‘அடையாளம்’. புறமும் அகமும் மாறிக்கொண்டேயிருக்கும் மனித வாழ்க்கையில் அடையாளங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன-காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம். தென்கோடியிலிருந்து புறப்படும் ரயில் மதுரையில் நுழையும் போதே திருநெல்வேலிக்காரர் அவருக்கே உரிய தமிழால் தனித்து அடையாளம் காணப்படுகிறார். திருச்சியைக் கடக்கும்போது மதுரைத் தமிழுக்குப் பழகிவிடுகிறோம். தமிழகத்தின் தலைநகரை அடையும்போது முற்றிலும் மாறுபட்ட தமிழையும், தமிழரையும் எதிர்கொள்கிறோம். பயணம் தொடர்ந்து ஆந்திர எல்லைக்குள் செல்லும்போது விதவிதமான தமிழர்கள் ஒட்டுமொத்த தமிழர்களாகி விடுகிறோம்.

டெல்லியில் இறங்கும்போது தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் எல்லாம் மதராஸிகள். அப்படியே நல்லுறவு ரயிலில் பாகிஸ்தானுக்குள் நுழைந்தால் இந்தியர்களாகி விடுகிறோம். இவ்வாறு பிறர் நம்மைப் பார்க்கும் விதமும், நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் விதமும் சூழலுக்கு, காலத்துக்கு ஏற்ப மாறுகிறது. சுய அடையாளங்களும், சமூக அடையாளங்களும் மாறுவது மட்டுமல்ல, பல அடையாளங்களை ஒரேசமயத்தில் தன்னுள்ளே பொதித்து வைத்திருப்பதும், இந்த அடையாளங்கள் தமக்குள் பரஸ்பர தாக்கமேற்படுத்திக் கொள்வதும், சூழலுக்குத் தகுந்தாற்போல் குறிப்பிட்ட அடையாளங்கள் முன்னுக்கு வருவதும், சில தேய்ந்து போவதும் உண்மை. அனுபவங்கள் அடையாளங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அல்லது பல அடுக்குகளைக் கொண்டவை.

ஒருதமிழர் விவசாயியாகவும், தொழிலாளியாகவும், முதலாளியாகவும், மத்தியதர வர்க்கத்தவராகவும் இருக்கிறார்- இது வர்க்க அடையாளம். அவர் தலித்தாகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, பார்ப்பனராகவோ (பிரச்னைக்குரிய விஷயம்) இருக்கிறார்- இது சமூக அடையாளம். இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கிறார்- இது மத அடையாளம். மிக முக்கியமானது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கிறார்- இது பாலியல் அடையாளம். குடும்பத்திற்குள் கணவனாகவோ, மனைவியாகவோ, மாமாவாகவோ, அத்தையாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ - இவ்வாறு எத்தனையோ உறவு முறை அடையாளங்களும் கொண்டிருக்கிறார். இந்த அடையாளங்கள் எல்லாம் ஒரு மனிதன் என்ற அடையாளத்துக்குள் பல்வேறு அடுக்குகளாய் இருக்கின்றன.

இவற்றுள் பிறப்பால் வந்து இறப்பு வரை தொடரும் அடையாளங்களும், சமூக வாழ்க்கையின் போக்கில் வரித்துக்கொண்ட அடையாளங்களும், நிராகரிக்கப்பட்ட அடையாளங்களும் உள்ளன. பொருளாதாரச் சூழல், மற்றும் வாய்ப்புகளினால் வர்க்க அடையாளங்கள் மாறலாம். பொருளாதாரரீதியாக உயர்ந்த பின்னரும் சாதீய அடையாளத்தினால் தலித்களும், பிற்பட்ட வகுப்பினரும் ஒதுக்கி வைக்கப்படுவதும் நடக்கிறது. மதம் மாறினாலும் ஒரே மந்தையிலிருக்கும் ஆடுகளுக்கு வெவ்வேறு இடுகாடுகள் ஏன்? மொழிரீதியாக தமிழன் என்றாலும் ஒரே குளத்தில் குளிக்க முடியவில்லை. எதற்கு தனி டம்ளர்? ஏன் சன்னிதானங்களில் சாதி? தேர்வடத்தில் தீட்டு? தமிழன் என்ற போதிலும் கூலி கேட்டுப் போராடும்போது ஏன் தமிழ் அமைச்சர், தமிழ் போலிஸிடம் சொல்லி, தமிழ் தாசில்தாரின் ஒப்புதலுடன் தோட்டாவினால் துளைக்கப்பட்டு தமிழ் மண்ணில் தமிழ் ரத்தத்தை சிந்தவேண்டும்? வர்க்க, சாதிய அடையாளங்களை மீறிய தமிழ் அடையாளம் என்ற ஒன்று உண்டா? அடையாளங்களைப் பற்றிய விவாதத்தில் இந்தக் கேள்விகளை எந்தவொரு அரசியல், கலாச்சார சூழலிலும் எழுப்ப முடியும். இப்போது நம்கவனம் தமிழ்ச் சூழலில் இருப்பதால் இப்படி...

தமிழகத்தில் அடையாளங்களின் அரசியல் பற்றிய விவாதத்தில் அடையாளங்கள் பற்றி பொதுவாக நாம் கூறிய கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. தமிழன் என்ற அடையாளத்தைக் கட்டமைத்து உருவாக்கப்பட்ட அரசியல், அந்தக் கட்டமைப்புக்குள் பொதிந்திருந்த மற்ற அடையாளங்கள்- அவற்றிற்கிடையேயுள்ள உறவுகள்- முரண்கள்- ஓர் அடையாளத்தைப் பிரித்துக் காணத்தேவைப்படும் “மற்றது” (Others) - இவை வரலாற்றுப்போக்கில் எப்படி எழுந்தன, என்னவாயின, என்னவாகும் என்பது பற்றிய சில சிந்தனைகளின் விளைவே இக்கட்டுரை.

நிலவுடமைச் சமூகம் முதலாளித்துவ சமூகமாக உருமாறிச் செல்லும்போது தொழிலாளி வர்க்கம் உருவானது. இது புறச்சூழல் நிகழ்வு. இந்த வர்க்கம் தன் இருப்பை உணர்ந்து உணர்வுப்பூர்வமாக அதன் நலன்களுக்காகப் போராடுவது அகச்சூழல் நிகழ்வு. ‘வர்க்கம் வர்க்கமாக உருவானது ஒன்று (Class in itself). வர்க்கம் தனக்காகத் தன்னுணர்வுடன் செயல்படுவது மற்றொன்று’ (Class for itself). தன்னுணர்வு பெறச்செய்து தனக்காக தொழிலாளி வர்க்கத்தை எழச்செய்த அரசியலில் வர்க்க அடையாளம் பெரும்பங்காற்றியது. இதே கருத்தாக்கம் தமிழ் தேசியஇனம் என்று வரலாற்றுப்போக்கில் எவ்வாறு உருவானது? அது ஒருமொழிபேசும் இனம் என தன்னுணர்வு கொண்டு அரசியல்ரீதியான போராட்டங்களுக்கும், அதிகாரத்திற்கும் தயார்படுத்தப்பட்டது என்று ஆய்வில் பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு வர்க்கத்திற்கு பொதுவான அரசியல், பொருளாதார இலக்குகள் இருப்பதுபோல் ஒரு மொழிபேசும் தேசிய இனத்தவர்க்குப் பொதுவான இலக்குகள் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. தமிழன் என்ற அடையாளம் உருவானது நீண்டகால வரலாறு. இந்த உணர்வினை ஊட்ட திராவிட இயக்க அரசியல், அது உருவாக்கிய அடையாளங்கள், அவற்றின் முரண்பாடுகள் பற்றிய சமீப வரலாற்றில் இதுதான் நம் கவனம் இப்போது.

பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளம்: திராவிட இயக்கத்தின் துவக்கம் பார்ப்பனரல்லாதார் இயக்கம்... தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில் துவங்கப்பட்ட இவ்வியக்கம் அது நடத்திய பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் கட்சி என்றே அறியப்பட்டு வந்துள்ளது. 1916ல் சென்னை கோகலே ஹாலில், “சென்னையிலும் மொ•பஸில் பகுதிகளிலும் பதவியும் செல்வாக்கும் மிக்க பார்ப்பனரல்லாத ஜென்டில்மேன்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பார்ப்பனரல்லாதார் அறிக்கையுடன் பிறந்தது ஜஸ்டிஸ் கட்சி. அந்த அறிக்கை இரண்டு அடையாளங்களை முன்னிறுத்தியது.” இந்த “சென்னை ராஜதானியில் வாழும் 41.5 மில்லியன் மக்களில் 40 மில்லியனுக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையிலிருப்போர் பார்ப்பனரல்லாதார். மிகப் பெரும்பான்மையான ஜமீன்தார்கள், நிலவுடமையாளர்கள் விவசாயிகளை உள்ளடக்கிய வரி செலுத்துவோரில் பெரும்பகுதியினர் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்று சென்னையில் அரசியல் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகளில் அவர்களுக்கு உரிய பங்கினை அவர்கள் ஆற்றவில்லை.

நாட்டின் பொதுவான முன்னேற்றத்திற்காக வெகுஜனங்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கினை கொஞ்சங்கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. ஸ்தாபனரீதியாக முயற்சிகள் நடக்கும் இந்த நாளில், தங்களுடைய பொது நலன்களைக் காக்கவும் மேம்படுத்தவும், மக்களின் முன்னேற்றத்தில் எந்தவொரு பங்கும் இல்லாமலேயே- அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாக சில அரசியல்வாதிகள் செயல்படுவதைத் தடுக்கவும்வல்ல சரியான ஸ்தாபனங்கள் இல்லாமலும்- பார்ப்பனரல்லாதார் இருக்கின்றனர். அவர்களின் சார்பாக உண்மையைப் பேசுவதற்கு ஒரு பத்திரிகைகூட அவர்களுக்கு இல்லை. இதனால் அவர்களின் அரசியல் நலன் (மக்கள் தொகையில் ஒன்றரை மில்லியனே இருக்கும் பார்ப்பனர்களுடன் ஒப்பிடும்போது) ஸ்தூலமாக பாதிக்கப்பட்டுள்ளது.”

இப்படி கூறும் பார்ப்பனரல்லாதார் அறிக்கை அலெக்ஸாண்டர் கார்டியூ என்ற பிரிட்டீஷ் அதிகாரி கொடுக்கும் புள்ளிவிவரங்களின் துணையுடன் “பார்ப்பனரல்லாதோர் சமூகத்தின்” மனக்குறைகளை வெளிப்படுத்துகிறது. 1892 மற்றும் 1904 ஆம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற அரசுப்பணித் தேர்வுகளில் வெற்றிபெற்ற 16பேரில் 15பேர் பார்ப்பனர்கள். உதவிப்பொறியாளர், உதவி கலெக்டர்கள், நீதித்துறை அலுவலர்கள் பணித்தேர்வுகளிலும் இதே நிலைதான். சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சட்டமன்றத்திலும் பார்ப்பனர் ஆதிக்கமே என்று கார்டியூ கூறியதாக பார்ப்பனரல்லாதோர் அறிக்கை குறிப்பிடுகிறது. அரசியலில் என்ன நிலை? பார்ப்பனரல்லாதோர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு சென்னை ராஜதானியின் பிரதிநிதிகளில் ஒரே ஒரு பார்ப்பனரல்லாத இந்தியரைத் தவிர மற்ற அனைத்து ஜென்டில்மேன்களும் பார்ப்பனர்களே. ஆயினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், போர் போன்ற முக்கியமான விஷயங்களில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் செயல்படும் இக்கமிட்டியின் முடிவு இந்தப் பெரிய, முக்கியமான ராஜதானியில் வாழும் 40 மில்லியன் பார்ப்பனரல்லாத மக்களின் தெளிவான கருத்தாக உலகமே மெச்சி நோக்கும்படி எடுத்துரைக்கப்படும்”.

பொது நிறுவனங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை சரியாக எடுத்துரைத்து கேள்விக்குள்ளாக்கும் பணியை பார்ப்பனரல்லாதோர் அறிக்கை சரியாகச் செய்தபோதிலும் பார்ப்பனரல்லாதோர் என்று ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும்போதுதான் பிரச்னையே எழுகிறது. பொதுவான குறைகளையும், இலக்குகளையும் கொண்ட பார்ப்பனரல்லாதோர் சமூகம் என்ற ஒன்று 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்ததா? பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ள தகுதியைக் கேள்விக்குள்ளாக்கிய ஜஸ்டிஸ் கட்சி இதே பகுதி மக்கள் எல்லோரின் நலன்களையும், விழைவுகளையும் பிரதிபலித்ததா என்ற கேள்வியும் எழுகிறது.

முதலில் சமூக, அரசியல் கலாச்சாரத் தளங்களில் பார்ப்பனர்கள் ஓர் “உயர்ந்த” நிலையில் இருந்தனர் என்பது வரலாற்று உண்மை. பார்ப்பனர்களுக்கே தங்களைப் பற்றி இப்படி ஒரு சுய அடையாளம் இருந்ததையும் மறுக்கமுடியாது. வரலாற்றுரீதியாக கல்வியின் அனைத்துப் பலன்களையும் பெற்றதால் மிகப் பெரும்பாலான பார்ப்பனர்கள் கல்வி மற்றும் அதிகார வட்டங்களின் பிரதான இடத்தைப் பிடித்திருந்தனர். ஆனால் ராஜதானியில் வாழ்ந்த மக்கள் சமூகத்தை இரண்டே பிரிவாக அடையாளப்படுத்தியது- பார்ப்பனரல்லாதோர் என்ற அடையாளத்திற்குள் பொதிந்து கிடந்த சமூக, கலாச்சார, பொருளாதார முரண்பாடுகளை மூடி மறைக்கவே உதவியது.

யூஜின் இர்ஷ்சிக் என்ற வரலாற்றியலாளர் இந்தப் பாகுபாட்டை பிரிட்டிஷ் அரசின் தந்திரமாகவே பார்க்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை இரு தெளிவான வகைகளாகப் பிரித்து சமூகத்தை ஆள நினைத்தது என்று குறிப்பிடுகிறார். “ஆனால் உள்ளூர் சமுதாயம் இந்த வகைப்படுத்தலுக்கு உரிய விதத்தில் துல்லியமாகவும், தீர்க்கமாகவும் பிரிந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்தாண்ட பதங்கள் ஒரேவகைக்குள் பலதரப்பட்ட குழுக்கள் பலவற்றை அடக்கியது” என்கிறார். இப்படி வகைப்படுத்தும் பணியைச் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கல்வித்துறைதான் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். “1870-71ல் பள்ளி செல்லும் மாணவர்கள் பார்ப்பனர்கள், மற்ற இந்துக்கள், கிழக்கு இந்தியர்கள், ஐரோப்பியர்கள், முகமதியர்கள், உள்நாட்டு கிறிஸ்தவர்கள், பார்சிகள் என்று வகைப்படுத்தப்பட்டனர். 1880களில் இந்துக்கள் பார்ப்பனர், வைசியர், சூத்திரர், மற்ற இந்துக்கள் என வகைப்படுத்தப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் சுருக்கமாக பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்று வகைப்படுத்தப்பட்டனர்” என்று குறிப்பிடுகிறார் இர்ஷ்சிக்.

பார்ப்பனரல்லாதோர் சமூகம் - முரண்பாடுகள்: ஜஸ்டிஸ் கட்சி கட்டமைக்க முயற்சித்த பார்ப்பனரல்லாதோர் சமூகத்திற்குள் இருந்த முரண்பாடுகள் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னிருந்த பத்தாண்டுகளில் பலவகைகளில் வெளிப்பட்டன. தங்கள் பண்ணைகளில் அடிமை ஊழியம் புரிவதற்கு பள்ளர், பறையர், பள்ளி இன மக்களை அமர்த்தியதில் பார்ப்பன நிலப்பிரபுக்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களல்லர் பார்ப்பனரல்லாத நிலப்பிரபுக்கள்.

“தென்னிந்தியாவில் நிலமும் சாதியும்” என்ற தன் புத்தகத்தில் பொருளாதாரப் பேராசிரியர் தர்மாகுமார் இவ்வாறு குறிப்பிடுகிறார். “19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பார்ப்பனரல்லாத (வெள்ளாள) விவசாயிகள் “அடிமைகளை” வைத்திருந்தனர். முதலாளிகள் அவர்களை விற்கவும், அவர்களின் பணியை அடகு வைக்கவும் அல்லது வாடகைக்கு எடுக்கவும் (கூலி முதலாளிக்கே சேரும்) முடியும். பள்ளி என்ற சாதியினரை வகைப்படுத்துதல் தொடர்பான விவாதத்தின்போது மேலும் அவர் எழுதுகிறார்: “பள்ளி, பள்ளர், பறையர் ஆகிய மூன்று விவசாய ‘அடிமை’ சாதிகள் உண்டென்று எல்லிஸ் என்ற ஆய்வாளர் கூறியபோதிலும், தஞ்சாவூரில் பள்ளர் மற்றும் பறையர் மட்டுமே அடிமைசாதிகளாக இருந்ததாக 1819ல் அந்த மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். மேலும், பள்ளிசாதியினர் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும் மற்ற இருசாதியினரும் பார்ப்பனரல்லாதோருக்கு பணிபுரிந்தனர் என்றும், 1881ல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பள்ளிகளில் பலரும் ஒருகாலத்தில் வெள்ளாள நிலப்பிரபுக்களின் அடிமைகளாக இருந்திருக்கக்கூடும் என்றும், மொத்தமிருந்த ஒன்பது தமிழ் மாவட்டங்களிலும் பண்ணையாட்கள் வாங்கப்பட்டதற்கும், அடகு வைக்கப்பட்டதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன”

பார்ப்பனரல்லாதோரில் ஒருபிரிவினர் பார்ப்பனரல்லாத மற்ற சில பிரிவினரை அடிமைகளாக நடத்தினர் என்ற வரலாற்று உண்மைகளைக் கண்ட பின்னரும் பார்ப்பனரல்லாதோர் என்ற ஒரு பொதுஅடையாளம் எப்படி நியாயமானதாக இருக்கமுடியும்? அவர்களுக்கென்று பொதுவான நலன் எதுவாக இருக்கமுடியும்? அடுத்தடுத்து வந்து தாக்கிய பஞ்சங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க இலங்கை, மலேசியா, மேற்குத்தொடர்ச்சி மலைகள் என்று கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அல்லது அனைவரும் பார்ப்பனரல்லாதோர்தானே?

நிலவுடமையாளரின் சாதி எதுவாக இருந்தபோதிலும் விவசாயிகளின் கூலி, 19ஆம் நூற்றாண்டு முழுவதிலும் உயராமல் தேங்கி நின்றது. விலைவாசியுடன் ஒப்பிடும்போது கூலியின் சிறு உயர்வு விவசாயத் தொழிலாளி வாழ்க்கையில் எவ்வித நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறலாம். தஞ்சை மாவட்டத்தில் 1873ம் ஆண்டில் விவசாயத் தொழிலாளியின் மாதாந்திரக் கூலி ரூ.2.95. 1900ல் இது ரூ.5.06 ஆக உயர்ந்தது. தானியமாக (அரிசி) கொடுக்கப்பட்ட வருடாந்திரக் கூலி இந்தக் காலகட்டத்தில் சரிந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1873ல் வருடத்திற்கு 735 சீர் அரிசி கொடுக்கப்பட்டு வந்தது. 1900ல் இது 572 சீராகக் குறைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் அரிசியின் விலை 48 புள்ளிகளும், சோளத்தின் விலை 60 புள்ளிகளும், கம்பின் விலை 51 புள்ளிகளும், ராகியின் விலை 65 புள்ளிகளும் உயர்ந்திருந்தன.

பொருளியல் வரலாற்றாசிரியர்கள் பலரும் எழுதியது போல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை கச்சாப்பொருள் சுரங்கமாகவே கண்டனர். விவசாயத்திலிருந்து எவ்வளவு உபரி கிடைக்குமோ அது முழுமையும் உறிஞ்சி எடுப்பதுதான் அவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைவதற்கு அவர்களுக்குக் கிடைத்த கூட்டாளிகள்தாம் இந்தியாவின் பெரும்பாலான நிலப்பிரபுக்கள்-பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதோர்களும். இந்தக் கூட்டாளிகளின் விளைவாகத்தான் 19ஆம் நூற்றாண்டு முழுவதுமே இந்தியாவின் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும் துயரங்களின் தொடர்ச்சியாகவே இருந்தது. இந்தத் துயரத்தின் தாக்கம் விவசாயத் தொழிலாளரில் பெரும்பான்மையாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களையே அதிகம் பாதித்தது. சாதீயக் கொடுமைகளும் சேர்ந்து அவர்கள் இரட்டைத் தாக்குதலுக்குள்ளாயினர். பொருளாதார முரண்பாடுகளும், சமூக முரண்பாடுகளும் நிறைந்த சமூகத்தை இரண்டே அடையாளங்களுக்குள் அடக்கிவிட முடியுமா என்பதுதான் கேள்வி. முடியாது என்பதுதான் பதில்.

1916ல் வெளியிடப்பட்ட பார்ப்பனரல்லாதோரின் அறிக்கை அரசாங்கப் பதவிகளிலும், கல்வியிலும், நீதித்துறையிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைச் சரியாகவே சுட்டிக் காட்டியது. இந்த முரண்பாட்டைத் தீர்க்க பார்ப்பனரல்லாதோர் அதிகக் கல்வியறிவு பெற வேண்டும்- பத்திரிகை தொடங்க வேண்டும் என்றும் சரியாகவே கூறியது. அடுத்தடுத்து வந்த பஞ்சங்களின் தாக்குதலிலிருந்து தட்டுத் தடுமாறி தப்பித்து வந்த பொருளாதார, சாதீயக் கொடுமைகளைச் சந்தித்து வந்த கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களைப் பற்றி அது பேசவேயில்லை. மாறாக இந்த நாட்டின் பொருளாதார இழிநிலைக்கு முழுமுதற் காரணமாய் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கமே சமூகங்களுக்கிடையே நீதியை நிலைநாட்டிட முடியும் என்று கூறி அந்த அரசுக்கு தன் முழு ஆதரவைத் தெரிவித்தது. அடையாள அரசியலின் ஆரம்பத்தில் இருந்த இந்த முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன என்பதுதான் வரலாறு.

சுயமரியாதை அடையாளம் : முரண்பாடுகள் இருந்தபோதிலும் ஜஸ்டிஸ் கட்சி 1919ல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஒருவரின் சொத்து மதிப்பையும், கல்வித் தகுதியையுமே வைத்து வாக்குரிமை என்ற நிலையில் பார்ப்பனரல்லாதாரில் மேட்டுக்குடியினர் ஆதரவுடன் இது சாத்தியமானது. முரண்பாடுகளால் நீதிக்கட்சியின் சமூகத்தளமும் குறுகலாகவே இருந்தது. இதை உணர்ந்து முதன்முதலாகக் குரலெழுப்பியவர் ஈ.வெ.ரா. பெரியார். காங்கிரஸின் தீவிர உறுப்பினராகவும், சென்னை மாகாணத் தலைவராகவும் பணிபுரிந்த பெரியாருக்கு அவ்வியக்கம் கட்டமைத்த தேசிய அடையாளத்துடன் முரண்பாடு ஏற்பட்டது. வைக்கம் போராட்டம், காங்கிரஸ் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நேர்ந்த பாரபட்சம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துற்கு எதிராக காங்கிரஸிலுள்ள பெரும்பாலான பார்ப்பனத் தலைவர்கள் எடுத்த நிலைப்பாடு இவையெல்லாம் காங்கிரஸிலிருந்து பெரியாரை அந்நியப்படுத்தின. இவற்றுக்கெல்லாம் மேலாக “வருணாசிரம தர்மம்- சமூகத் தேவை” என்று மகாத்மா காந்தி எடுத்த நிலைப்பாடு பெரியார் காங்கிரஸை விட்டு முற்றிலும் விலக வைத்தது. பார்ப்பனீயம், இந்து மதம், காங்கிரஸ் மூன்றும் ஒழிந்தால்தான் உண்மையான விடுதலை என்று கூறி வெளியேறினார் பெரியார். சென்னை மாகாணத்தின் தலைவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாக இருந்ததாலும், அவர்கள் பிராமணீயத்தை இந்து மதமாகப் பாவித்ததும், வர்ணாசிரமத்தை நியாயப்படுத்தி ஆண்டாண்டு காலமாக தொடர்ந்த சாதீயப்பார்வை, பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களை வகுப்புவாதிகள் என்று முத்திரை குத்தியதும் அவர்கள் கட்டமைத்த தேசிய அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கியது.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார் நீதிக்கட்சியின்மீது நாட்டம் கொண்டிருந்தபோதிலும் அக்கட்சியினர் கட்டமைத்த பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்தின் முரண்பாடுகளை பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் இவ்வாறு சுட்டிக்காட்டினார்: “நம் இயக்கம் என்னவென்பதை சாதாரண மக்களுக்கு முதலில் புரிய செய்துவிட்டோமா? சாதாரண மனிதனின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா? அரசாங்கத்தில் பதவிகளை கவர்ந்துகொண்டோம். கௌரவப் பெயர்களை பெற்றுக்கொண்டோம் ஆனால் இவை மக்களுக்குப் பலனைத் தந்தனவா? நமது அதிகாரத்தையும் பதவியையும் பயன்படுத்தி பார்ப்பனர்களின் முன்னேற்றத்தை தடுத்துவிட்டோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மக்களை ஆட்டிப்படைத்து அவர்களைக் கூலிகளாகவும் ஏழைத்தொழிலாளர்களாகவும் வைத்திருக்கும் துயரங்களிலிருந்தும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுவிப்பதற்கு நாம் என்ன செய்துவிட்டோம்?

பதவிகளும் பட்டங்களும் தேவையில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அவை மட்டுமே நம் இலக்குகளாக இருக்க முடியாது. நாம் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொள்ளும்போது 90 சத ஏழைகளையும் வாழ்வு மறுக்கப்பட்டவர்களையும் குறிப்பிடுகிறோமே தவிர ராஜாக்களையும் ஜமீன்தார்களையும் அல்ல. இங்கு கூடியுள்ளோர் உண்மையிலேயே பார்ப்பனரல்லாதவரின் நலனைக்காக்க உறுதி கொண்டுள்ளவர்களா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் வளர்ச்சிக்காக நிற்பவர்களா என்று கேட்கிறேன். இங்குள்ள தலைவர்கள் எல்லோரும் இந்த விசயத்தில் புத்திசாலித்தனமாகவும் பொறுப்புணர்வுடனும் நடப்பதற்கு உறுதி கொடுப்பார்கள் என நம்புகிறேன். அப்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

நீதிக்கட்சியின் முரண்பாடுகளையும், குறைபாடுகளையும் துல்லியமாக உணர்ந்திருந்த பெரியார் அடுத்தகட்டமாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை விரிவாக்கி மேலும் ஜனநாயகப்படுத்த முற்பட்டார். பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்திற்கு புதிய பரிணாமங்களை அளித்தார். அவரைப் பொறுத்தவரையில் பார்ப்பனரல்லாதோர், கலாச்சாரரீதியாக பார்ப்பனர்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பொருள் மற்றும் அறிவாதாரங்களை இழந்தவர்கள். சாதீய அமைப்பு பார்ப்பனியயம் என்ற தத்துவத்தின் ஆதாரத்துடனும் புராணங்கள் வேதங்கள் உதவியுடனும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவே பார்ப்பனரல்லாதாரின் முன்னேற்றத்திற்குத் தடை. சாதீயத்தின் தத்துவார்த்த தூண்களை தாக்கிய பெரியார் அதன் பொருளாதார அடிப்படையான நிலப்பிரபுத்துவத்தை அடையாளப்படுத்தாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. ஆயினும் அவர் கண்ட சுயமரியாதை இயக்கம் பார்ப்பனரல்லாத மேட்டுக்குடியினர் வகுத்த எல்லைகளை மீறி தாழ்த்தப்பட்ட மக்களையும், நாடார், அகமுடையார், இசைவேளாளர், செங்குந்தர், வன்னியகுல சத்திரியர் போன்ற பிரிவினரையும் சென்றடைந்தது.

இச்சாதிகளில் பெரும்பாலோர் விவசாயத் தொழிலாளர்களாகவும், தொழில்முறை பயிற்சியில்லாத தொழிலாளர்களாகவும் இருந்தனர். தமிழ் பேசும் எல்லா மாவட்டங்களிலும் பரவியிருந்தனர். இதனால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் புதிய பரந்துபட்ட பிரிவினரை தன்பால் ஈர்க்கமுடிந்தது. சுயமரியாதை இயக்கம் அந்த அடையாளத்துக்கு வலுசேர்த்தது. சுயமரியாதை இயக்க வீரர்கள் சாதிப்பெயர்களை துறந்தனர். சாதீயக் குறியீடுகளைத் தவிர்த்தனர். கலப்புமணத்தை ஆதரித்தனர். மகளிர் உரிமைக்காக குரல் கொடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். விதவை மறுமணத்தை ஆதரித்தனர். பெண்களுக்கு குடும்ப சொத்தில் சமபங்கு கோரினர். பெண்களுக்கு விவாகரத்து உரிமை கோரினர். ஒரு ஆய்வின்படி 1932ம் ஆண்டில் மட்டும் 150000 பேர் சாதிப்பெயர்களைத் துறந்தனர்.

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.பார்ப்பனரல்லாதார் வழிபாட்டிற்காக ஒருபைசாக்கூட செலவு செய்யக்கூடாது. 2. வழிபடுபவர்களுக்கும், வழிபடப்படும் தெய்வங்களுக்கும் நடுவில் இடைத்தரகர் தேவையில்லை. 3. கோவில்கள் கட்டக்கூடாது. 4.இருக்கும் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருமாணம் தொழில்நுட்பக் கல்விக்கும், தொழிற்சார்ந்த கல்விக்கும், கல்வித்துறை ஆராய்ச்சிக்கும் செலவிடப்படவேண்டும். 5. கோயில்களில் விழாக்கள் நடத்தக்கூடாது. அதற்கு பதிலாக மருத்துவம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் கட்டமைத்த அடையாளம் பன்முகத்தன்மை கொண்டிருந்தது. மதச்சார்பற்ற, சாதீயத்திற்கு எதிரான, அறிவியல் மீது நம்பிக்கை கொண்ட, பாலியல் சமத்துவம் கோரும், பார்ப்பனரல்லாத மனிதன் என்ற அடையாளம், வீரியமும் வீச்சும் நிறைந்ததாய் இருந்தது. சென்னை மாகாணத்தில் கலாச்சாரத் தத்துவார்த்த தளங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதசக்தி அளவில்லாதது, பிறப்பினால் தடைபடாதது என்ற ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால நவீனயுகத்தின் சிந்தனை ஆதாரத்துடன் மக்களின் பொதுப்புத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுயமரியாதைக்காரர்கள், தமிழ்ப்பிரியர்கள், சுற்றித்திரியும் சாதுக்கள், பெண்கள், ஆதிதிராவிடர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி காங்கிரஸாரையும் உள்ளடக்கி பெரியார் கட்டமைத்த வரலாற்றுக் குழுமம், நீதிக்கட்சியை விட மிக அதிகத் திறன் வாய்ந்த அரசியல் சக்தியாக இருந்ததாக எஸ்.வி. ராஜதுரை - வ.கீதா தங்களுடைய புத்தகத்தில் குறிப்பிடுகின்றனர். சுயமரியாதை இயக்கமும் நடைமுறைகளும், திட்டங்களும், பார்ப்பனர்களை மட்டுமின்றி நீதிக்கட்சியினரையும் கொதிப்படையச் செய்தது. தீவிரமான மதச்சார்பற்ற புதியஅடையாளம் மேல்சாதியினர் எல்லோருக்குமே பயத்தைக் கொடுத்தது. பெரியார் தன் இயக்கத்தை அடுத்த தளத்துக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது இந்த பயம் மேல்சாதி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் மட்டுமின்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் தொற்றிக்கொண்டது. பெரியார் உருவாக்கிய சமூக அடையாளம் வர்க்கம் என்ற தளத்தை அடைந்தது. வரலாற்றில் ஒரு திருப்புமுனைக்கான அறிகுறிகள் தென்பட்டன.

தொடரும்.

சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் சென்ற ஆண்டு நடத்திய கருத்தரங்கம் மற்றும் டோன்போஸ்கோ விவாத அரங்கம் சென்ற மாதம் நடத்திய விவாதம் ஆகியவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாளின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com