Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
தல வரலாறு - பறையன் பள்ளம்

தஞ்சை சாம்பான்

எட்டி ஆத்தா, வாங்கடி சுருக்கன்னு போவோம். அம்புலாரு ஆளு வுடறதுக்குள்ள என்று கூறியவாறு முனியாத்தா கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தெருவில் நடந்து வந்தாள். மேலவூட்டு காளியாத்தா எக்கா என் கையெல்லாம் கொப்புளிச்சுப் போச்சு ஒலக்கைய புடிக்க முடியாது என்று இரு கைகளையும் ஒருசேர முனியாத்தாவிடம் காட்டினாள். முனியாத்தா நீ நெல்லு குத்தவேண்டாம். அங்கன இங்கன ஒக்காந்து குத்தி போட்ட அரிசிய பொடச்சிப்போடு. மத்த வேலைய நாங்க பாக்குறோம் என்றவாறு ‘இதுக்குத்தான் ஒலக்கய இறுக்கிப் பிடிச்சு நெல்லு குத்தக்கூடாது. இறுக்கிப் புடிச்சா கையி கொப்புளிச்சுத்தான் போகும்’ என்றவாறு மீண்டும் குரல் கொடுத்தாள். வாங்காத்தா, அம்பலாரு வீட்டு கல்யாணம் இன்னும் ஒரு மாசந்தான் கெடக்கு. பத்து பதினைஞ்சு மூட்டை நெல்லு குத்தியாகணும் என்றவாறே அனைவரையும் அழைத்துக்கொண்டு அம்பலத்தின் வீட்டின் வாசல்புறம் வந்து நின்றார்கள்.

வீட்டிலிருந்த அம்பலத்தின் மனைவி “ஏய் செங்காம் பொண்டாட்டி எத்தன பொண்டுவ வந்திரிக்கீங்க, மாட்டுக் கொட்டாயில சாக்க விரிச்சுப்போட்டு மழுக்கின அரிசியையும், தீட்டுன அரிசியையும் கலந்துடாம தனித்தனியே வையுங்க. ஏனம் கொண்டாந்துக்கீயளா? கால கஞ்சி கூழும், நாவல கடுகு தொவயலும் இருக்கு. வயிறாற குடிச்சிட்டு வேலைய பாருங்க என்றாள். நாவல கடுகு தொவயல் என்றதும் அதன் மணமும், ருசியும் இவர்களது நாவில் எச்சில் ஊறியது. அவரவர் கொண்டு வந்த பாத்திரத்தில் கூழும், பூவரச இலையில் நாவெல கடுகு துவயலும், சப்புக்கொட்டி சப்புக்கொட்டி காலை உணவை முடித்தார்கள். நெல்லு பதம் சரியா இருக்கா ஆயா? என்று செங்காம் பொண்டாட்டி கேட்டாள். ஆரம்பத்திலிருந்தே இவர்களின் குடி பறையன் செங்கானுக்கும், செங்கான் பொண்டாட்டிக்கும் ஒரே பெயர்தான்.

“அதென்ன பறச்சிய போயி ஆயான்னு சொல்றது” என்று தனது கணவன் கூறும்போதெல்லாம் மறுத்துக்கூறுவாள் அம்பலத்தின் மனைவி. நாலு நெல்லு அள்ளி தேச்சுப்பாரு பதமா இருக்கான்னு? இதக்கூடவா நான் சொல்லணும் என்று சொன்னவாறே அலுத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள். சற்றுநேரத்தில் செங்கானும் மற்றவர்களும் வேலை பார்த்த அரிவாள்களோடு வந்தார்கள். செங்கான் அம்பலத்தின் மனைவியை “ஏத்தோ ஏத்தோ” என்று வாசல் பக்கம் நின்று சத்தமாக அழைத்தார். “ஏலே, செங்கான் ஏண்டா சத்தம் போடுற” என்றவாறு உள்ளே சென்ற அம்பலத்தின் மனைவி வெளியே வந்தாள். கொல்லயில இருந்த மூனு செலா மரத்த வெட்டி சாய்ச்சிட்டோம், இத வகுந்து போட்டா போதும் பத்து வண்டிக்கு மேல செறா வரும், நம்ம சின்னய்யா கல்யாணத்துக்கு போதும் என்றார். ரெண்டு கஞ்சி வாருங்க, காலத்துல ஒடச்சிப்போட்டா காயும் என்றார். மட்டய புடிச்சுட்டு வாங்கடா என்றவாறு நெல் குத்திய பெண்களுக்கு ஊற்றிய மறுபகுதியை இவர்களுக்கு ஊற்றினார்.

தொவையல் மூடியைத் திறந்ததும் நாவெலை கடுகின் மணம் அனைவரின் நாசியில் சென்று வெளியே வந்தது. மூன்று மட்டை கூழ் குடிக்கும் இவர்கள் ஐந்தாறு மட்டைகள் அதிகமாகவே குடித்தார்கள். நாவெலை கடுகின் ருசி இவர்கள் அறியாத ருசியுமல்ல. அதை வறுத்து அம்மியில் வைத்து அரைக்கும்போது ஏற்படும் மணமே தனி. அந்தப் பகுதியையே கமகமவென்று மணக்கச்செய்யும். அதன் ருசியே ருசிதான். சூரியன் மறையும் நேரம் ஆத்தா நாளைக்கு நாங்க வெள்ளென வந்தரோம் என்றபோது, அம்பலத்தின் மனைவி வந்து (பெரும் அரிசி, அரிசி மூட்டைகளாகவும், குருணையெல்லாம் ஒரு முட்டாகவும் கிடந்தது.) குருணை கிடந்த முட்டிலிருந்து அனைவருக்கும் ஒருபடி குருணையை அளந்து கொடுத்தார். அவரவர் சேலை முந்தானையில் வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்றார்கள். இதுவே இவர்களுக்கு இன்றைய கூலி. விறகு உடைத்தவர்களுக்கு இரண்டு நேரம் கஞ்சியும், கூழும் மட்டுமே.

ஊரில் அம்பலத்தின் குடும்ப கல்யாணம், கல்யாண பந்தல் பெரிய அளவில் போடப்பட்டது. இந்தப் பந்தல் வேலையே இவர்களுக்கு ஒருவாரம் ஆகிப்போனது. “ஏலே பந்தல போட்டதும் வண்ணாவூட்டு பயக்கிட்ட சொல்லி துணிகட்ட சொல்லுடா என்று செங்கானிடம் அம்பலம் கூறினார். இப்படியாக நெல் குத்துதல், விறகு உடைத்தால், பந்தல் போடுதல் என்று ஒரு மாதம் கழிந்தது. கல்யாணத்தன்று பெரிய அளவில் கோட்டை அடுப்பு கட்டப்பட்டது. சமையல் செய்பவர்களிடம் செங்கான் கூறினான். “அய்யா தீய அடுப்புல போடுறதுக்கு முன்னாடி எங்களுக்கு கோட்டடுப்பு அரிசி கொடுக்கணும், இது எங்க உரிமை அளந்து போடுங்கய்யா” என்றார். இந்தப் பழக்கம், தீ போடுவதற்கு முந்தியா, பிந்தியா? என்று அறியாத சமையல்காரர் “ஏலே அதெல்லாம் ஒங்க அம்பலக்காரர்கிட்டே போய் கேளுங்க, நாங்களா கொடுக்கமுடியாது என்றவுடன், நாங்க அய்யாகிட்ட சொல்லிட்டு வர்றோம், அதுக்குள்ள தீய போட்றாதீங்க என்று சத்தமாக பேசினார்.

பக்கத்திலிருந்த அம்பலம், “என்ன சத்தம் என்றவாறே வந்தார், விசயம் அறிந்தவுடன் யார்ரா அவன் அவங்களுக்குண்டான உரிமயே கொடுத்துடணும், முதல்ல ஒரு மரக்கா அரிசிய அளந்துபோடு என்றார். அம்பலத்தின் வீட்டு கல்யாணம் ஏகபோகமாக நடந்தது. கடைசியாக ஒரு கூடை சோறு “கோட்டடுப்பு சோறு” என்ற பழக்கத்தில் வாங்கிக் கொண்டு அம்பலத்திடம் “அய்யா எங்களுக்கு கூடைசோறு சோறு போடுங்க” என்றார் செங்கான். அம்பலம் ஏலே ரெண்டு கூட வெள்ளசோறு அள்ளிப்போடுங்கடா என்றதும், பெரிய பெரிய கூடைகளில் சோற்றை வாங்கிக் கொண்டு இரண்டு பெரிய பானைகளில் மீதமுள்ள சாம்பாரை வாங்கி வந்தபோது தெற்குத் தெரு பறையர்கள் செங்காண்ணே எங்கே எங்க பங்காளி சோறு என்றதும், ஏலே, எப்படிடா நான் உடுவேன்? ஒங்களதான் காணோம், சரிசரி வா என்று கூறியபடி அடுப்படியில் உள்ளவர்களிடம் தெற்குத் தெரு பறையனுக்குள்ள ஒருகூடை சோறு வாங்கிக் கொடுத்தார்.

அம்பலத்தின் பங்காளியும் சொந்தக்காரருமான ஒருவர் “ஏலே செங்கா எங்கடா நம்ம ஆளுவ” என்றார். பக்கத்திலிருந்த அனைவரும் வரிசையாக வேட்டியின் தலைபாகத்தைப் பிடித்தவாறே சாரணியால் வெட்டிப்போட்ட சோற்றை வாங்கி மூட்டையாகக் கட்டியபோது, ஒருவர் இரண்டாவது தடவையாக துண்டை ஏந்தினார். ஏலே இப்பதானே சோறு போட்டேன் மறுபடியும் வர்றே என்று பக்கத்திலிருந்த செரா கட்டைய எடுத்து ஓங்கி ஓங்கி அடித்தார். அடி பொறுக்காத கட்டாரி மவன் கதறினான். அலறல் சத்தம் கேட்ட அம்பலம் ‘ஏலே என்னடா என்னடா’ என்று கேட்டுக் கொண்டே வேகமாக வந்தார். ஐயா ஒரு மாசமா, அடுகெட படுகெடயா கிடந்து கல்யாண வேல பாத்தோம், ரெண்டு சோறு கூட போடுங்கய்யான்னு கேட்டதுக்கு அடிக்கிறாருய்யா என்றார். ஏலே சோறுதானடா கேட்டான், அதுக்குப்போயி ஏண்டா அவன அடிக்கிற என்றதும், சித்தப்பா எல்லாத்தோட இவனுக்கும் சோறு போட்டேன், இவன் ரெண்டாவது தடவயும் வந்து வேட்டிய ஏந்துறான், அதுதான் கோவப்பட்டு அடிச்சேன் என்றான்.

நல்ல கோவம் வந்துச்சுடா ஒனக்கு என்றவாறே அம்பலம் “ஏய் காட்டாரி மவனே வேட்டிய புடிடா என்று இரண்டு மூன்று சாரணி சோற்றை வெட்டிப்போட்டு விட்டு ஏனம் வெச்சிருக்கியாடா என்றார். ஒரு சிறிய மண்பானை நிரம்ப சாம்பாரை ஊற்றி எடுத்துக்கிட்டுப் போடா என்றார். செரா அடிப்பட்ட இடம் எரிச்சலாக இருந்தாலும், அம்பலத்தின் அரவணைப்பில் எரிச்சலையே மறந்துபோனான். கூடை சோறு அனைவருக்கும் பங்கானது. செங்கான் கூறினான் “ஏலே கோட்டடுப்பு அரிசியிருக்கு ஆளுக்கு ஒரு செரங்கே அள்ளிப் போட்டுடுங்கய்யா” என்றார். அம்பலம், ஆளுக்கு ஒரு வேட்டியும் துண்டும் எடுத்துப்போட்டார். அம்பலத்தின் வீட்டு கல்யாணத்துக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆட்டுக்கடா பிடிச்சு கட்டியதுக்குத்தான் இந்த வெகுமதி. அம்பலத்தின் கல்யாண சோறு ஐந்தாறு நாட்களுக்கு சோற்றுக்கு கஷ்டப்படவேண்டியதில்லை. கல்யாண சோறும் சாம்பாரும் பெரியோர் முதற்கொண்டு சிறுபிள்ளைகள் வரை சிறிய உணவு உண்ணும் கட்டோரா சட்டிகளில் சாம்பார் இருந்த சுவடே தெரியாத வகையில் கையும் கட்டோராவும் நக்கி நக்கி ருசித்தார்கள்.

காலம் கடந்தது. வடக்குச் சேரித் தெருவிற்கு செல்லும் பாதையில் நின்று, ஏய் செங்கா, செங்கா என்று ஒரு மேல்சாதி நடுத்தர வயதுடையவர் கூப்பிட்டார். செங்கான் இதோ வந்துட்டேங்கய்யா என்று எதிர்குரல் கொடுத்தவாறே வந்தார். ஏலே இத்தன சத்தம் போடுறேன், ஒன் காதுல உழுவலயா? என்றார். சாமி, எனக்கென்ன வஞ்சனையா? காதுல உழுந்தவுடந்தான் ஓடியாறேன் என்றார். ஏலே நீங்க பழைய பறத்தெருவ வுட்டுட்டு இங்க வந்ததும்போதும் நாங்க படும் கஷ்டமும் போதுண்டா. ஏதாச்சும் சொல்லன்னுன்னா மூனு மைல் நடக்க வேண்டியிருக்கு. சரி நம்ம அய்யாவூட்டு கோவில் மாடு ஏதோ வெசம் தீண்டியிருக்கு, அய்யா வூட்டு கொள்ளயில செத்து கெடக்கு, வந்து தூக்கிட்டு வந்துடுங்கடா என்றார்.

வீட்டிற்கு ஒருவர் வீதம் சென்று மாட்டைத் தூக்கி வந்தார்கள். மாடு தோலுரிக்கப்பட்டு தோல் சாய்புவுக்குக் கொடுக்க உப்புக்காய்ச்சல் போடப்பட்டது. கறி அனைவருக்கும் பங்கானது. கோவில் மாடு ஏகமாக கறிக்கொழுப்பாகவே இருந்தது. செங்கான் கூறினார் ‘எப்பா வேக்காட்டு கறிய புள்ளக்குட்டிகளுக்கு கொடுத்துறாதீங்கடா, மாடு வெசந்தீண்டிருக்கு கொழம்பு நல்லா தளபுளன்னு கொதிச்சு வந்ததும் இரும்பு கொலுவ நல்லா பழுக்க வச்சு கொழம்பு சட்டியில போட்டு எடுங்க, விசம் இருந்தாலும் முறிஞ்சிப்போயிடும் என்றார். அன்றிரவு அவரவர் வீடுகளில் மாட்டுக்கறி கொழம்பு மணந்துகொண்டே இருந்தது. கையை இறுகப்பற்றியிருந்த கொழுப்பையகற்ற எரிதணலில் கையை காய்த்துக் கொண்டிருந்தனர்.

மணியாரின் தலையாரி வீரன் வந்தார். செங்கான்ன, செங்கான்ன, காடுகள்ள இருக்க மரத்த இனி யாரும் வெட்டக்கூடாதுன்னு மணியார் சொல்றார் என்றார். இந்த செய்தியை கேட்ட செங்கான் திடுக்கிட்டுப் போனார். அரணிக் கட்டைகளாகவும், சாசாமரக் காடுகளாகவும் இருந்த காட்டை அழிக்க நெத்தி வேர்வைய நிலத்தில சிந்தி பசியும் பட்டினியுமா கிடந்து மேட்டாங்காட கரம்பையா மாத்துனோமே, இப்ப அலுங்காம குலுங்காம அரசாங்கம் எடுத்துக்குதா என்று கலங்கிய செங்கான் ஆறு மா நிலம் ஆரு உதவியும் இல்லாமா வரகோ, தொவரையோ வெதச்சு புள்ளக்குட்டிகள காப்பாத்துனோம், இப்ப இதுலயும் இடி விழுந்துடுச்சா என்றார்.

இந்தப் புலம்பல் அனைவரையும் ஒன்றுகூட வைத்தது. அனைவரும் சேர்ந்து நாளைக்கு மணியார்கிட்டேயும், அம்பலார்கிட்டேயும் சொல்லி தேக்கிப்புடலாம் என்றார்கள். இல்லேன்ன நேத்து சத்தரத்துல (ஒரத்தநாடு) அதியாரியெல்லாம் ஈச்சங்கோட்டையில பால் பண்ணை வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம். இந்த மாசி கடைசியில ஓந்தியிம் ( ஜேசிபி) வருதாம். அது பச்ச மரத்த வேரோட புடுங்கிடுமா, நாம எதித்து கேட்க முடியாதுன்னு கணக்கப்புள்ள சொல்லிட்டாரு, அரசாங்க கோழிமுட்டை அம்மிக்கல்ல உடைச்சிப்புடுண்டா என்ன பேசுறாரு. என்ன பண்றது நமக்கு கொடுப்புன அவ்வளவுதான் என்றார் தலையாரி.

சிலநாட்கள் கழித்து இவர்களுக்கு உணவளித்த காட்டில் இவர்கள் இதுவரை அறியாத உறுமல் சத்தம் வரவே அனைவரும் சத்தம் வரும் திசையை நோக்கி வேகமாக ஓடினார்கள். அங்கே முழுக்கால் சட்டைகளோடு பத்து பனிரெண்டு பேர் நின்று ஏதோ சைகை மூலம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். முன்னால் ஓடிய செங்கான் போன்றவர்கள் திகைத்து நின்றார்கள். இடத்தின் அடையாளங்களை சொல்லிக் கொண்டிருந்த அதிகாரிகளை நோக்கி இந்த மக்கள் கூட்டம் ஆவேசமாக ஓடி வருவதைப் பார்த்த அதிகாரிகள் “இவர்கள் என்ன செய்வார்களோ?” என்ற அச்ச உணர்வோடு இவர்கள் ஓடிவரும் திசைநோக்கி நின்றார்கள். வந்தவர்களுக்கோ தலையாரி கூறிய “அரசாங்க கோழிமுட்டை அம்மிக்கல்ல ஒடைச்சிப்புடும்” என்ற உணர்வுடன் ஏதும் புரியாதவர்களாக நின்றார்கள்.

சில இளைஞர்கள், “யோவ் இது எங்க காடு” என்று சத்தம் போடவே, ஏலே நிறுத்துங்கடா, இவுகளெல்லாம் அரசாங்கமாம். நாம எதித்துப்பேசுனா எல்லாத்தையும் புடிச்சு செயிலுல போட்டுடுவாங்களாம் என்றார். ஒரு அதிகாரி இவர்களை நோக்கி வருவதைக் கண்ட இவர்கள் சற்றுப் பின்னோக்கி நகர்ந்தார்கள். வந்தவர் கேட்டார், “என்ன என்னமோ சத்தம் போட்டீங்களே” என்று. ஒன்னுமில்லேங்க சாமி, பச்ச மரத்த வேரோடு புடுங்குற ஓந்தியே பாக்க வந்தோம் என்றனர். தங்களுக்கு வாழ்வளித்த நிலம் தங்கள் கண்முன்னால் பறிபோனாலும், இது ஏன் என எதிர்த்துக் கேட்க திறனற்ற நிலையில் அனைவரும் திரும்பிச் சென்றனர்.

ஊரிலுள்ள பொதுக்கோயில் அருங்குல நாயகியம்மன். இந்த கோவில் திருவிழா சம்பந்தமாக ஊர் கூடியிருந்தது. ஊரிலுள்ள அனைத்து இடங்களும் ஏலம் விடுவதென்றும், இதன் வருமானம் கோவில் திருவிழாவுக்கு பயன்படுத்துவதென்றும் முடிவானது. இந்த ஊரில் மெஜாரிட்டியாக வாழும் முத்தரையர்கள்(வளையர்கள்) பக்கமுள்ள வளையன் குளம் வளையர்களுக்கே ஒதுக்கப்பட்டது. கோவில் வேலைகள் மேடு பள்ளம் சமப்படுத்த சுற்றியுள்ள காடுகளை அழிக்க சேரித்தெரு பறையர்கள் வேலைசெய்து விடுவதென்றும், இந்த வேலைகள் எப்படியும் ஒரு வாரமோ, பத்து நாளோ ஆகும் என்றும் இந்தக் காலங்களில் இவர்களுக்கு மதியத்தில் உரும கஞ்சி காய்ச்சி அம்பலார் வீட்டிலிருந்து கொடுப்பதென்றும் முடிவானது.

இந்த முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்த நடுத்தர வயதுடைய வடக்குத் தெருவைச் சேர்ந்த பறையன் கேட்டார், “யோவ் பெரியண்ணே, என்னய்யா பெரிய மனுசனுவ நீங்க, என்ன பேச்சு பேசி கூட்டத்துல முடிவு செஞ்சீங்க, ஏய்யா, நல்லது கெட்டதுன்னா நாம, அவுக வீட்டுல எலவு விழுந்தா எலவு சொல்லி மூல முடுக்கெல்லாம் போறது நாம, ஆடு மாடு செத்தா தூக்கறது நாம. எல்லாத்தையும் செஞ்சிப்புட்டு ஊரு கோவிலே குளத்துலே ஒன்னுமில்லன்னா என்னா அர்த்தம்? எந்த வேலையும் செய்யாத அம்பலக்காரன் (வளையர்கள்) ஆளுகளுக்கு மட்டும் கொளம் கொடுக்குறாங்க. ஏன் நீங்க ஏதாச்சும் ஒரு கொளம் குட்டையோ கேக்கறதுக்கு ஓசனை இல்லையா? என்றார். இவர் கேட்ட கேள்விகளின் நியாயத்தை உணர்ந்த செங்கானும் ஏனையோரும் தடுமாறிப் போனார்கள்.

ஏலே நாம கேட்டா கொடுப்பாங்களா? யப்பா எப்படிடா கேக்குறது? குளம் குட்டை நமக்கு எதுக்கு உபயோகப்படுது? அதுல கெடக்கிற மீன் குஞ்ச கூட நாம திங்கக்கூடாது. என் அப்புச்சி காலத்துல அப்பிய, கார்த்திய மாசம் கடும் மழை பேஞ்சிருக்கு, அப்போ அருங்குல நாயகியம்மன் கொளத்து தண்ணி நிரஞ்சி காட்டு வாரியோட கலந்திருக்கு, தண்ணி சேருர மொகப்புல ஏகமா மீங் குஞ்சி ஏறியிருக்கு. கரைமேல குடியிருந்த அப்புச்சி துண்ட ஏந்திருக்கு, அதுல நல்ல கெண்ட பொடியா கெடச்சிருக்கு, கொண்டாந்து ஆசையா கொளம்பு வச்சிருக்காக. கொளம்பு கொதி சத்தம் கேட்டு கொளம்பு சட்டிய தொறந்தா ஒரே நத்தை கவிச்சியா அடிச்சிருக்கு. சட்டிக்குள்ள நத்த சுண்டினா எப்படி கருப்பா கட்டி கட்டியா இருக்குமோ அதுபோல இருந்திருக்கு. இது பாத்த அப்புச்சி பயந்துபோயி, அய்யாவூட்ல ஓடிப்போயி வெவரத்த சொல்லியிருக்கு, சொன்னவுடனே அய்யாமேல மருளு வந்து அம்மா பேசிச்சா “ஏலே. மாட்டுக்கறி திங்கிற பறப்பயலுவ எங்குளத்த தீட்டாக்கிப்புட்டானுவ, தீட்டாக்குனதுமில்லாம எச்சி பண்ணிட்டானுவ, இத நெவத்தி செய்யலன்னா ஊரே அழிச்சிப்புடுவன்னு” ஆங்காரத்தோட ஆடி சொல்லியிருக்கு.

அம்மா மலையேறியதும் “அட அவுசாரி மவனுவளா, என்ன காரியண்டா செஞ்சீங்க, நீங்க எப்படிடா கொளத்து மீன பிடிக்கலாம்? ஆயி கோவந்தான் இந்த சோதனைய காட்டி அரட்டியிருக்கு, நீங்க அம்மனுக்கு நல்லா வேண்டிக்கங்கடா நம்ம சிவங்கோயிலு அய்யருட்ட சொல்லி அவிசேகஞ் செய்யச்சொல்லுறேன், இல்லன்னா இப்படி சோரவாரி பண்ணிக்கிட்டேதான் இருக்குமுன்னு சொல்லிட்டாங்க, அந்த நாள் மொதக்கொண்டு அந்த கொளத்துலயும் எறங்குறதுல்ல, மீன் கொளம்பு வைக்கிறதுமில்ல. நமக்கு செத்த மாட்டுக்கறியும், கொளங்குட்டையில கெடக்குற நண்டு நத்தையுந்தான் கறி என்று பெரியவர் கூறி னார்.

நம்ம மீனையும் சேர்த்து அவங்களே திங்கறதுக்கும், நாங்க திங்கற மீனை நீங்களும் எப்படிடா திங்கலாம்னும் றதான்னும் இப்படியொரு கதைய மேல்சாதி ஆளுக கிளப்பியுட்டது தெரியாம, நீயே நேர்ல பாத்தாப்ல கதை சொல்லாத செங்காண்ணே... என்றார் வடக்குத் தெருக்காரர்.

நாங்க மீன் குஞ்சி புடுச்சி திங்கிறோன்னு சொல்ல முடியாது, எனவே, நண்டு நத்த புடிச்சி திங்க ஒரு குளங் குட்டை வேண்டுமென கூறினார்கள். ஏன்யா செத்த சுடுகாட்டுக் குழியில நின்னு எங்களுக்கு சுவந்தரம் கொடுகன்னு கேக்குறோமே, கட்டு தலையல நின்னு கட்டுதலை காசு கொடுங்கண்ணு கேக்குறோமே, அதுபோல இதுவும் கேக்கணுமா? இல்லையா? கேட்டாதானே வழி பொறக்கும். சரிடா, நாளைக்கு காத்தால அம்பலத்துக்கிட்ட சொல்லி கேப்போம் என்று முடிவு செய்தார்கள்.

மறுநாள் இருசேரி மக்களும் அம்பலத்து வீட்டுமுன் நின்றார்கள். ஏலே என்னடா ரெண்டு தெரு ஆளுவளும் வந்திருக்கீங்க, என்ன தகராறா? என்றார். சாமி உங்களதான் பாக்க வந்தோம், நேத்து ஊரு கூட்டம், அதுல அய்யாகிட்ட ஒரு சேதி கேக்கலாமுன்னு இருந்தோம். எங்கள கூப்பிடாமா நாங்க பேசினா குத்தமுங்க. அதான் வூட்டுல வந்து பாத்துப்புடலாமுன்னு வந்தோமுங்க. என்ன சேதி சொல்லுங்கடா? என்றார். சாமி அருங்குல நாயகியம்மன் அவியேச திருநூரும், வடக்கிக் கரைப்பக்கம் வந்ததும், அய்யா வீட்டு அவிசேயமும் மத்தவங்க அவிசேயமும் முடிஞ்ச பிறகு கடைசியா அம்மாவுக்கு அவிசேயம் பண்ணிய திருநூற எங்க புள்ளகுட்டிக நெத்தியில தடவிக்கணும். காலம் பூரா அய்யா ஒங்களுக்குத்தான் சேவகம் செய்யுறோம். இப்ப நம்ம வயகாட்டுல நாங்க எறங்கி நண்டு, நத்த புடுச்சா பயிர துவக்கிறோம்னு சொல்றாக. அய்யா எங்க சுடுகாடு பக்கமுள்ள குட்டைய எங்களுக்குக் கொடுத்தீகன்னா நாங்க நண்டு நத்த புடிச்சு திம்போம் என்றார்கள். இதை ஊன்றி கவனித்த அம்பலம், அம்பலாரான்களுக்கு குளம் கொடுத்தோம், இவனுகளுக்கு ஒன்னுமில்ல என்பதை உணர்ந்தார். சரி சரி கோவில் வேலைக்கு நாளைக்கு வரும்போது பேசிக்குவோம் என்றார்.

மறுநாள் மண்வெட்டி, அரிவாள் ஆயுதங்களுடன் இருதெரு தாழ்த்தப்பட்ட மக்களும், ஊர் பெரியோர்கள் சிலரும் கூடியிருந்த கோவில் இடத்தில் கூடினார்கள். கட்டையில் அமர்ந்திருந்த அம்பலம் கூறினார், “நேத்து நம்ம கூட்டத்துல ஒரு விசயத்த பேசமறந்துட்டோம், நம்ம பறையவூட்டு பயலுவளுக்கு ஒன்னுமில்லாமப் போச்சு. அவன்கல அடிச்சாலும், ஒதச்சாலும் நாமதான் அவன்களுக்கு. அவன்க சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருக்கிற குட்டைய அவன்களே வச்சிக்கட்டும். சுடுகாட்டே தெற்குத் தெரு பறையனுக அனுபவிச்சிக்கட்டும். அதுல கெடக்குற நண்டு நத்தைகள ரெண்டுபேரும் சேர்ந்து புடிச்சுக்கட்டும். இதுலயிருந்து கீழண்ட உள்ள பள்ளம், பறையனுக்குண்டா பள்ளமா ஆகட்டும். வூட்டுக்கு ஒரு ஆளா நின்னு நம்ம ஊரு கோவில் வேலைய பாக்கறது, முக்கறையும் அம்மனுக்கு அவிசேயஞ் செஞ்சப்புறோம் இவன்ங்க அவிசேயஞ் செஞ்சி திருநூறு வாங்கிக்கிறதுன்னு முடிவு என்றார் அம்பலம். எல்லோரும் சம்மதிக்க உத்தரவு அமலானது. இப்படித்தான் இது பறையன் பள்ளம் ஆனது என்பதை இன்றளவும் இம்மக்கள் சொலவடையாகக் கூறுவார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com