Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
அடர் கருப்பு: அடையாளம், ஒற்றுமை, விடுதலைக்கான இந்தியத் தலித்துகளின் போராட்டம்

எஸ்.காமராஜ்

ஜேம்ஸ் மெஸ்ஸேயின் "தெ டவ்ன் ற்றோடன்"ஐத் தழுவிய தமிழாக்கம். தெ டவுன் ற்றோடன், தலித்துகளின் வரலாறு குறித்த இந்தியர், அதுவும் தலித் எழுதிய முதல் வரலாறு. வட இந்திய தலித் கல்வியாளரான ஜேம்ஸ் மெஸ்ஸே இந்திய அரசின் தேசிய சிறுபான்மையினருக்கான கமிசனின் ஊறுப்பினர், உலகக் கிறிஸ்துவ கவுன்சிலின் உறுப்பினர், கிறிஸ்தவ சமூக தொண்டு நிறுவனங்களின் கருத்து மேம்பாட்டு கவுன்சிலின் உறுப்பினர்.

அந்தச்சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்றும் அதன் மூலச்சொல் தல் என்றும் அறியப்படுகிறது. தல் என்றால் உடைந்தவை, பிரிக்கப்பட்டவை, நொறுங்கியவை, கிழிந்தவை, மிதிபட்டவை, சிதறடிக்கட்டவை, அமிழ்த்தப்பட்டவை, அழிக்கப்பட்டவை என்று பல அர்த்தங்களில் புரியப்படும்.

"வரலாறு நெடுகிலும் மதத்தாலும் சமூகக் கட்டுமானங்களினாலும் கொடுமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கென அடையாளமில்லாது காலம் வெறும் வெற்றுத்தாளாய் கழிந்து போயிருந்தது. என்னைக் கருவுற்றிருக்கும்போது என்தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர எனது மண் எது எனும் யுகக்கேள்வியோடு புதைந்து கிடந்தார்கள். சென்ற முப்பது நாற்பது வருடங்களில்தான் பெயரே இல்லாமல் இருந்த அவர்களுக்கு, ஒரு புதிய பெயர் மேலெழுந்து வந்ததிருக்கிறது. வடமாநிலங்களில் மட்டுமே புழக்கத்திலிருந்த இந்தச்சொல் "பாசா சபத் கோஸ்" என்கிற வடமொழி அகராதியில், முன்னேற்றமில்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதி என்று பொருள்படுத்தப்பட்டிருக்கிறது. தீண்டப்படாத இந்துக்களாகிய 'அச்சுத்', தொண்ட்டூழியம் செய்கிற 'சூத்ரா' ஆகியோரை உள்ளடக்கிய சொல் இது. உச்சி ஜதான் எனும் உயர் ஜாதியினரால் மிதித்து நசுக்கப்பட்ட (ஹினி ஜாதி) கீழ்மக்கள் எனப் பஞ்சாபி மொழிபெயர்ப்பாளர் பாய் ஜஹான் சிங் கூறுகிறார்.

அந்தப் புதிய புரிதலுக்கான விதையை விதைத்ததவர்கள், புதிய பெயரை அவர்களுக்குச் சூட்டியவர்கள் இரண்டு பேர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலகக்காரர் மஹாத்மா ஜோதிபாய் பூலேவும், இருபதாம் நூற்றாண்டின் கலகக்காரர் அம்பேத்கரும் தான். அச்சுத் எனும் வடமொழி வார்த்தைக்கு தலித் எனும் நாமகரணம் சூட்டுகிறார்கள் அவர்கள் இருவரும்.

பெண்கள்,வீடற்ற நிலமற்ற விவசாயிகள்,தொழிலாளர்கள், புத்த மதத்துக்கு மாறியவர்கள் புத்திஸ்ட்,மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள். அரசியல்,மத மேலாதிக்கத்தால் சுரண்டப்பட்டவர்கள் எல்லோருமே தலித் எனும் பட்டியலுக்குள் இடம் பெறுவதாக 1973 ல் மராட்டிய மாநிலத்திலிருந்து வெளியான தலித் பேந்தர் ஆப் இந்தியா இயக்கத்தின் அறிக்கை பிரகடனப் படுத்துகிறது.

நால்வகை அடுக்குகளாக இந்திய மனிதர்கள் பிரிக்கப்பட்டார்கள். அவர்களின் மேல் நான்குவகையான மாய நிறம் பூசப்பட்டது. அதுவே நிஜமென்று கருதி ஒருவருக்கொருவர் விலகி நின்றார்கள். சூழ்சியின் பலனை அதை உருவாக்கியவர்களே அனுபவித்தார்கள். அந்த சூழ்சியாளர்கள் மனிதர்களுக்கிடையிலான இடைவெளியில் புகுந்து விளையாண்டனர். அந்த விளையாட்டில் எப்போதும் அவர்கள் மட்டுமே ஜெயித்தார்கள். அல்லது அவர்கள் ஜெயிக்கிற மாதிரியே எல்லாவற்றையும் வடிவமைத்துக் கொண்டார்கள்.

ஆனால் இந்த ஆடுகளத்திற்குள்ளே நுழைய விடாமல் ஒரு பகுதியினரை வெகுதூரத்துக்கு விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டப்பட்டவர்களுக்கான அடையாளமும் சரித்திரமும் காலம் முழுவதும் கண்ணீராகவே கழிந்துபோயிருக்கிறது. வெற்றியை மட்டுமே பதிவு செய்யும் சரித்திரச் சூத்திரமும் கூட ஆதிக்க சூழ்ச்சிதவிர வேறில்லை. எனவே இரண்டாயிர ஆண்டு கால வரலாற்றில் அவர்கள் பற்றிய குறிப்பேதும் கானப்படவில்லை. அவர்கள் தான் வகைப்படுத்தப்படாதவர்கள் என்றும் புற ஜாதியினர் என்றும் பஞ்சமர்கள் என்றும் அறியப்பட்ட இந்திய தேசத்து உதிரிகள். அவர்கள் தலித்துகள்.

பலதரப்பட்ட இந்திய மொழிகளின் அடியில் கிடந்த இந்த சொல்லை ஆங்கில மூலமாக மொழிபெயர்க்கிறபோது தழ்த்தப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள், ஹரிஜன்கள் என்கிற பொருள்படும் பெயர்கள் உருவான போதும் கூட தலித் எனும் சொல்லை ஏன் தேர்ந்தெடுத்தார்கள். அலங்காரத்துக்ககவோ, அப்பன் பாட்டன் பேர்சொல்லவோ, வீர வரலற்றைக் குறிக்கவோ வேறுபல பெறுமைகளுக்காகவோ சூட்டப்பட்டதல்ல. இந்தப் பெயர் கண்ணீரால் தொலைந்த வரலாற்றைலிருந்து தேடி எடுத்த பெயர். அந்த வரலாற்றை அவர்களுக்கே அறிமுகம் செய்கிற விலாசம். பழய ரணமும் புதிய சந்தோசத்துக்கான ஒளியும் கலந்த எதிர்காலமும் அதில் ஒளிந்திருக்கிறது. எனவே பல்வேறு குழு பல்வேறு இயக்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த வார்த்தை அவர்களால் வடித்துக் கொள்ளப்பட்ட, ஒரு சுய சிற்பம், ஒரு தன்னோவியம்.

1960 -ல் யேசு தாஸ் திவாரி எனும் போதகர் ஆங்கிலம் வழியாக ஹிந்தியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். ஆனால் பைபிளின் மூல மொழி ஹீப்ரூ. லூக்கா எழுதின சுவிஷேசம் 4 வது அதிகாரம் 18 19 வசனங்களில் " ஏழைகளுக்கு நற்செய்தியாகவும், அடிமைகளுக்கு விடுதலையாகவும், பார்வையற்றவரகளுக்கு ஒளியாகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலையாகவும் யேசுநாதரின் அரசாட்சி உருவானது" என்று குறிப்பிடுகிறார். அதில் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிற ஹீப்ரூ வார்த்தை "தலித்தோ" என்பதாகும். அவரைத் தொடர்ந்து புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்த எல்லா ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களும் அந்தச்சொல்லையே பயன்படுத்த ஆரம்பித்தனர்.

ஹீப்ரு மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் சில சொல்லாடகளில் சம்பந்தம் இருப்பதாகவும்,அவை தொண்ம நாகரீகங்களின் ஆணிவேர்கள், அவை இரண்டும் இரண்டு பெரிய ஆதிமொழிக்குடும்பம், என்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆரிய ஆக்ரமிப்பு
--------------
வெறும் ஆயுதங்களோடும், வெறிகொண்ட சேனையோடும் மாத்திரம் அவர்கள் வரவில்லை. இந்திய வம்சாவழியினரை ஆட்டிப்படைக்க மத, மற்றும் மனோவசியக்கருத்துக்களோடும் வந்தார்கள். அவற்றிலிருந்து பிறந்த பிரித்தாலும் சூழ்ச்சி, தத்துவம், ஆகியவற்றைக்கொண்டு வந்து இந்திய மூளைகளில் முறைப்படி திணித்ததாலுமே அவர்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது.

குயுக்தியில்லாத ஆதி பொதுவுடமைச் சமூகத்தில் கூட்டம் கூட்டமாய் பழைய இந்தியர்கள் இருந்தார்கள். அவர்களுக்கான எல்லாமே பொதுவில் இருந்தது. அவர்கள் அதுவரை கண்டிராத ஆயுதங்களைக் கொண்டு ஆரியர்கள் அவர்களை அடிமைப்படுத்தினார்கள். அடிபட்ட அவர்களிடம் மிக எளிதில் இந்த வேதக்கருத்துக்களை விற்பனை செய்தார்கள். ரிக்வேதத்திலுள்ள புருசசுக்தம் தான் முதல் பிரிவினையை பதிவு செய்து வைத்திருக்கிறது. மனிதர்கள் எல்லோரும் கடவுளின் புனித உடலில் உள்ள நான்கு உறுப்புக்களிலிருந்து தனித்தனியாகப் பிறந்தவர்களென்று கதை சொல்லுகிறது.

பார்ப்பனன் வாயிலிருந்தும், சத்திரியன் புஜங்களிலிருந்தும், வைசியன் தொடைகளிலிருந்தும், சூத்திரன் பாதத்திலிருந்தும் பிறந்தான் என்று இயற்கையை மறுதலித்த முதல் கருத்தை மிக லாவகமாகப் பரப்பினார்கள். அப்போது கூட தலித்துகளைப்பற்றிய குறிப்பேதும் அங்கு இல்லை. எனவே இந்த நால்வகை மடிப்புக்குள் அடங்காத ஜனங்களை, மனிதரல்லாதோர் அல்லது புற ஜாதியினர் என்று குறிப்பிட்டனர்.

"துரம் அபசர ரே சண்டாள" ரிக்வேதம் கி.மு 1000 ஐ ஒட்டிய காலங்களில் தோன்றியதாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டாலும், அதன் பிறகு கிமு 800 களில் தொடங்கி கிமு 600 வரை எழுதப்பட்டதாகக் கூறப்படும் உபநிஷத்துக்கள் சுய விலாசமில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் தலித்துக்களின் தலையில், முறைப்படி பாறாங்கல்லைப் போடுகிறது. சந்தோக்கியா எனும் உபநிஷத்தில் உயர் பிறப்புக்களின் பெருமையைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் புற ஜாதியினரை நாய்களோடும், வாத்துக்களோடும் ஒப்பிடுகிறது. பிராம்ணர்களோடும், சத்திரியரோடும், வைசியரோடும் உறவுகொள்பவர்கள் உன்னதமான உறவில் திளைப்பதாகவும், புறஜாதியினரோடு உறவு கொள்பவர்கள் நாய்களோடும், வாத்துக்களோடும் உறவு கொள்பவர்களாகவும் சபிக்கப்படுகிறார்கள்.

பின்னர் தோன்றிய இரண்டு பெரும் இதிகாசங்களான (கிமு 600 லிருந்து கிமு 500 வரை) ராமாயணமும் மஹாபாரதமும் ஜாதிய அடுக்குகளை இன்னும் கூர்மையாக்குகிறது.

அதில் நால்வகை ஜாதிகளில் கடைசியான சூத்திர இனத்தை வெளியில் விரட்டிவிட்டு வெறும் மூன்றுக்குள்ளேயே தங்களின் ஆதிக்கத்தை வரையறுக்கிறது. அதன் படி, தவம் பண்ணுவதற்கான உரிமையை மூன்று வர்ணங்களுக்கு மட்டும் வழங்குகிறது. காருண்ய மூர்த்தி இறக்க சீலன் எனும் ராமனின் கதையில் சம்யூகனின் வரலாறு ஒன்றிருக்கிறது. ராமன் என்பவன் சாட்சாத் பிராம்ண, சத்திரிய, வைசிய குலங்களுக்கு மட்டுமே காருண்யன் என்பதை நிலை நிறுத்துகிற உப கதை அது.

மணலுக்குள்ளிருந்து கத்திய தேரையைக்கொன்றதும், தவம் செய்து முக்தியடைய இருந்த சம்யூகனை அவனைச்சூத்திரன் என்பதனால் கொன்றதும், ஒரே தராசில் வைக்கப்பட்டது. அந்தத் தராசு சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் ஓரவஞ்சனை செய்த தராசு. வன்கொடுமையை நீதியாக்கிய முதல் தராசு.

சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சுயமாக வில்லும் வாளும் கற்றுக்கொண்ட ஏகலைவனின் பெருவிரலறுத்த மஹாபாரதம். ஒரு வன்முறைக் கோடுபோட்டு, அதைத்தாண்டி சூத்திரர்கள் வரத்தடை செய்யும் அடக்குமுறைச் சட்டமாக உருவானது. அதுதான் "யதா தத்யதோ அர்த்தாந்த் வ்யத தாத்" என்று அவரவர் கடமைகளை வகுத்த கீதாச்சாரம். இந்த இரண்டும் ஜாதீய அடுக்குகளின் சுவற்றை இன்னமும் உறுதியானதாகவும், ஒடுக்கப்பட்டோரின் காற்றுக் கூடத்தீண்டாத அளவுக்கு கெட்டியான வேலியாகவும் மாற்றுகிறது.

அதன் பின்னர் எழுதப்பட்ட ஆரிய சாஸ்திரமான மனுஸ்மிருதி சூத்திரர்களையும், தலித்துகளையும் மனிதக் கணக்குகளிலிருந்தே மொத்தமாகத்தூக்கி எறிகிறது. மறு பிறவி என்பது பிரம்ண சத்திரிய வைசிய குலத்தாருக்கு மட்டுமே உண்டு என்று கறார்ப்படுத்துகிறது.

அப்போது ஒரு சின்னக்கேள்வி எழுகிறது. எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டிருந்த போதும் அதோ தூரப்படுத்தப்பட்ட அந்தச்சனங்கள் எங்கிருந்து வந்தார்கள்?.

அதற்கு பதில்சொல்லத்தான் மனுஸ்மிருதி சூத்திரர்களுக்கு ஒரே ஒரு பிறவி மீதமுள்ள எங்களுக்கெல்லாம் ஏழுபிறவி என்று பிறப்பைப் பகிர்ந்தளிக்கிறது. சூத்திரர்கள் வேதம் கற்றுக்கொண்டால் அவர்களின் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச்சொல்லுகிறது. அப்படியான சூத்திரர்களுக்கும் மேல்ஜாதியினருக்கும் கலப்பு இருக்கக்கூடாது எனத் திட்டவட்டமாகச் சொல்கிறது. அதிலிருந்து தவறிக் கலந்து பிறந்த குழந்தைகலில் இருந்து தான் புற ஜாதியினர் எனும் ஐந்தாவது வகை உருவானதாக மனுஸ்மிருதி கூறுகிறது. உயர் ஜாதி ஆணுக்கும் கீழ்ஜாதிப் பெண்ணுக்கும் பிறக்கிற ஒருவன் அனுலோமா, என்றும் கீழ்ஜாதி ஆணுக்கும் மேல் ஜாதிப்பெண்ணுக்கும் பிறக்கிறவனை பிரதிலோமா என்றும் பிரிக்கிறது மனுஷ்மிருதி.

ஒரு சூத்திரனுக்கும் பார்ப்பனத்திக்கும் பிறக்கிற குழந்தை சந்த்தலா (worst in the earth) என்று அழைக்கப்படுகிறது. அப்படிப் பிறந்ததற்கான தண்டனையை மனுஷ்மிருதி கொடுமையினும் கொடிய சட்டமாக்குகிறது. அதன்படி, "அவர்கள் ஊரின் ஒதுக்குப்புறம் மட்டுமே வாழவேண்டும். கழுதையும், நாயும் மட்டுமே அவர்களது உடமைகளாக இருக்கவேண்டும். இறந்தவர்களின் ஆடைகளை மட்டுமே அவர்கள் அணியவேண்டும். உடைந்த எழும்புகளால் ஆன அணிகலன்களை மட்டுமே அவர்கள் அணிய வேண்டும்".

இந்தச் சின்ன சின்ன உதாரணங்களே ஆரியக் காலணியாதிக்கத்தில் தலித்துகளின் நிலைமைகளை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

பௌத்தம்
-------------

கேள்விகளின் மீதேறி இந்தியப் பெருவெளியில் பயணித்தவர் புத்தர். சமன் செய்யமுடியாத அளவுக்கான ஏற்றத்தாழ்வு முறைக்கான காரணம் தேடிக்கண்டடைந்த ஞானம் என்பது போதி மரத்துக்குப் பெருமையாகிப் போனது. அரசன் ஒருவன் தனித்துவம் எல்லாவற்றையும் உதறிவிட்டு ஜனங்களின் கூட்டத்துக்குள் கரைந்து போனான். ஒதுக்குப்புறமாகவுள்ள குடிசைகளையும், உழைக்கிற சனங்களின் வீடுகளையும் தேடி அவரது வெறுங்கால்கள் பயணமானது. அந்தத் தேடல் தான் ஆரியர்களின் போலிக் கற்பிதங்களை கிடு கிடுக்கச்செய்தது.

முகமதியக் காலணியாதிக்கம்.
---------------------------------------
பரிணாமக் கூறுகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஆரியப் படையெடுப்புக்கு பின் வந்த முகமதியர்களாலும் கிறித்துவர்களாலும் ஆரியச்சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு எல்லோரும் சரி நிகர் சமானமாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர்நிறை என்கிற கனவு நனவாகியிருக்க வேண்டும். ஆனால் நடத்ததுவேறு.

இஸ்லாமும், கிறித்தவமும் இந்தியாவில் நுழைந்த போது கூடவே யூதாயிஸம், ஜோரோஸ்த்ரைனிசம் மற்றும் பஹாய் தத்துவமும் இந்தியா வந்தது. அதோடல்லாமல் லிங்காயிசம்,சீக்கியம் போன்ற இன்னும் பல இந்தியத் தத்துவங்களும் தோன்றின

மேற்சொன்ன எல்லாத் தத்துவங்களும் மனிதர்களுக்குள் பிரிவினையை எதிர்த்தன. ஆனாலும் அவர்கள் இந்து வர்ணாசிரம படிமங்களுக்குள் இருந்துகொண்டே எதிர்வினை ஆற்றப்புறப்பட்டதால், மீண்டும் அந்தப் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டு காணாமல் போனார்கள்.

கிபி 700 முதல் கிபி 1700 வரை இந்தத் தேசத்தை முஸ்லிம்கள் ஆண்டனர். அந்த ஓராயிரம் ஆண்டுகளில் தலித்துகள் தாங்கள் இருந்த நிலையிலிருந்து ஒரு அடிகூட மேல் வரமுடியாமல் போனது பெரிய வேதனை. கிபி 1030 களில் இந்தியா வந்த யாத்திரிகர் 'அல் பெரூனி' ஹாதி, தோமா, சந்த்தலா, பதாட்டூ ஆகிய ஜாதியினர் பிற இனத்தவர் யாரோடும் ஒட்டு உறவில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஊரை, ஊர்க்கழிவுகளை, சுத்தம் செய்கிற அல்லது அதனோடு ஒட்டிய சுகாதரமற்ற தொழில்கள் மட்டுமே செய்கிறார்கள். என்று "அல்பெரூனியின் இந்தியா" என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியா வந்த முஸ்லீம்களில் கூட இந்துக்களுக்கு இணையான தரமும், வகுப்புகளும் இருப்பதாக நாம் அறியமுடிகிறது.

அஸ்ரப்புகள் = வேதியர்
ஷேக்குகள், பதான், முகல் = சத்திரியர்

எனும் சமன்பாடு முகம்மதியர்களுக்குள்ளும் இருக்கிறது. இதில் மத்திய வகுப்பினருக்கு மேன்மையான தொழில்களும், மதம் மாற்றப்பட்ட கீழ்ஜாதியினருக்கு சுத்தம் செய்யும் தொழிலும், கொடுக்கப்பட்டதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னும் கூட ஏன் சூழ்ச்சி தொடர்ந்தது என்ற கேள்விக்கு விடை தெரியும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் பகுதியிலுள்ள இந்துக்கள் இந்தியாவுக்கும், இந்தியாவிலுள்ள முகம்மதியர்கள் பாகிஸ்தானுக்கும் புலம் பெயர்ந்து கொண்டார்கள்.

அதற்கென ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. ஆனால் இரண்டு தரப்பிலுமுள்ள தோட்டிகள் அதாவது அருந்ததியர்கள் யாரும் புலம் பெயர அனுமதிக்கப்படவில்லை. பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்த, கணக்கிலடங்காத தாய்மார்களைக் கற்பழித்த உலகபெரும் பிரிவினையில் அந்த தலித்துகள் விட்டுவைக்கப்பட்டார்கள். சண்டையெல்லாம் ஓய்ந்த பின் சகஜ வாழ்க்கை வரும் அப்போது அடிமைகள் தேவைப்படுமில்லையா? அதற்காகத்தான் அவர்கள் விட்டு வைக்கப்பட்டார்கள்.

யூதாயிசம்
--------
யூத தேசத்திலிருந்து வந்த யூதர்கள் கேரளாவில் கொச்சின் பகுதியிலும், மராட்டியத்தில் மும்பையைச் சுற்றிய பகுதிகளிலும் பெருகியிருந்தார்கள்.1020 களில் ஜோசப் ராப்டன் எனும் யூதத்தலைவனுக்கு எழுதிக்கொடுத்த தாமிரப்பட்டயம்; யானைச்சவாரி, தீவட்டி, மேலதாளம், வாங்கா மற்றும் பராக், பராக் எனக்குரல் எழுப்பும் வீரர்கள் ஆகியவற்றைக் கொடையாக வழங்குகிறது. அதன் மூலம் ஜோசப் ராப்டன் அரசனுக்கு இனையான அதிகாரம் கிடைக்கப்பெறுகிறான்.அரசர்கள் வீதி உலா வரும்போது பராக் சொல்லுவது அரசனின் பெருமிதம் சொல்லுவதற்காக மட்டும் என்று நினைத்தால் அது தவறு. பராக் சொல்லும் போது கீழ் ஜாதிக்காரர்கள் அவர்களாகவே வீதிகளை விட்டுக் காணாமல் போக வேண்டும் என்பது சூட்சுமச்செய்தி. ஆக ஆரிய ஆகம விதிகளை உலகவிதிகளாக்க ஒரு முயற்சிகூட இதில் அடங்கியிருக்கிறது.

இந்தியா வந்த யூதர்களில் கறுப்பு யூதர்கள், வெள்ளை யூதர்கள் என இரண்டு வகைகள் உருவானது. வழிபாடு மற்றும் சின்னச்சின்ன சடங்குகளில் மட்டும் அவர்களூக்குள் பேதமில்லை.

ஆனால் அவர்களுக்குள் திருமணக்கலப்பும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதுவும் முற்றிலும் தடை செய்யப்படிருந்தது.


பார்சி
-------

பெர்சியாவிலிருந்து வந்த பார்சிக்களின் மதம் ஜோரோஸ்த்ரைனிசம். கிபி 700 களில் இந்தியா வந்த அவர்களுக்குள்ளும் நான்கு வகையான பிரிவுகள் இருக்கிறது. சஞ்சன் ஜதி ரானா எனும் அரசனின் அனுமதியின் பேரில் அவர்கள் குஜராத்தில் சஞ்சன் எனும் இடத்தில் குடியேறினார்கள். அவர்கள் மத மாற்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்ததால், அந்த இனமும் மதமும் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராமல் போனது. தலித்துக்கள் பற்றி அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லாமல் போனது.

லிங்காயிசம் அல்லது வீரசைவம்
----------------
மைசூரின் வடக்குப்பகுதியை மையமாகக் கொண்ட லிங்காயிசம் பென்களுக்குச் சம உரிமை வழங்குகிற ஒரு வித்தியாசமான இந்திய மதமாகும். சிவனை வழிபடுகிற அவர்கள் சிவக்குறியீடான லிங்கத்தைத் தங்கள் சின்னமாக வரித்துக்கொடனர். கொஞ்சம் முற்போக்கு எண்ணங்கொண்டதாயிருந்த போதும் வீர சைவத்துக்குள்ளும் ஆரியர்களின் வர்ணாசிரமக் கொள்கை ஊடுருவிக்கிடந்தது. ஆகவே அவர்களில் ஜங்கமர்கள் வேதியர்களாகவும் உயர் பிறப்பினர்களாகவும் கருதப்பட்டனர்.

சீக்கியர்கள்
---------------
முஸ்லீம்களீன் ஆட்சிக்காலத்தில் தோன்றிய மதங்களில் முக்கியமானது குருநானக்கினால் தோற்றுவிக்கப்பட்ட சீக்கிய மதம். அதிலும் மஜபாய் எனும் பிரிவினர் தலித்துகளாகப் பாவிக்கப்பட்டனர். ஆதி சீக்கியர்களுக்கும் சீக்கியமதத்தை தழுவியவர்களுக்கும் திருமணக்கலப்பு மற்றும் சடங்கு வகைககள் மறுக்கப்பட்டிருக்கிறது.

பாஹாய் மதமும் இந்திய சூழலுக்கேற்ப தன்னை சிருஸ்டித்துக் கொண்டதால் அதனால் மதத்தில் பெரிதாக ஏதும் சாதிக்க இயலாமல் போனது. மத்திய இந்தியாவின் சில இடங்களில் குறுகிய வட்டத்துக்குள்ளே அடங்கிப்போனது.

ஆங்கிலக்காலணி மற்றும் கிறிஸ்தவம்
-------------------------------------------------
மிகச்சரியாகச் சொல்வதானால் 1599 ஆண்டு லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனி துவக்கப்பட்டபோதே இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. முதல் நூற்றைம்பது வருடங்கள் அவர்கள் வியாபாரத்தை மட்டுமே கவனித்துக் கொன்டிருந்தார்கள். அந்த வியாபாரத்தின் மூலம் அவர்கள் ஒரு பாடம் படித்தார்கள். இந்தியாவை மிகச்சுலபமாகக் கைப்பற்றமுடியும் என்கிற பாடம் தான் அது. ஆம் 1744 மேல் ராபர்ட் க்ளைவ் ரானுவத்தின் மூலம் அதை நிஜமாக்கிக் காட்டினான்.

1857 ல் நடந்த ரானுவக்கலகம் பெரும்பாலும் மேல்ஜாதிக்காரர்களாலே நடத்தப்பட்டது. ஜாதிய கட்டுமானங்கள் உடைந்து போகுமோ எனும் அச்சத்தால் எழுந்த கலகம் ஆகும். இந்தக் கலகத்தால் இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டன. ஒன்று ரானுவ ஆட்சி அகற்றப்பட்டு ஆட்சி அதிகாரம் முழுக்க விக்டோரியா மஹாரானியின் கைக்கு மாறியது. இரண்டு ஜாதி மதக் கட்டுமானங்களுக்குள் ஆங்கில அரசு தலையிடுவதில்லை என்கிற தலையிடாக் கொளகையும் கையெழுத்தானது.

1928 ஆம் வருசம் மராட்டியத்தில் சௌதாக்குளத்தில் அத்து மீறி நீர் எடுக்கச்சென்ற அம்பேத்கரை பிரிட்டிஷ் அரசாங்கம் தடைசெய்தது. அரசும் அதன் நேரடி ஆட்சியாளர்களான உயர் ஜாதியினரும் கைகோர்த்து இருந்ததால் தலித்துகள் இம்மி இம்மியாய் மட்டுமே முன்னேற முடிந்தது. என்றாலும் கிறிஸ்தவம் மத ரீதியாக ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

இந்தியாவில் நுழைந்த கிறிஸ்தவ அமைப்புக்களால் மிகச்சுலபமாக ஒடுக்கப்பட்ட மக்களை சுவீகரித்துக் கொள்ளமுடிந்தது. வெறும் நடுகல்லும், பனைமரங்களும், கையகல இடமும் அவர்களுக்கு கடவுளாக இருந்த போது, கனத்த பைபிளும், அதைப்படிக்க கல்வியும், வானுயர்ந்த கோபுரங்களும் அவர்களிடம் அதிக நம்பிக்கையை உண்டுபண்ணியது. அந்தத் தாக்கத்தால் பல மாற்றங்கள் உருவானது. ஏற்கனவே இருந்த இந்திய மதங்கள், ஏழைகள் தலித்துக்கள் மீது வைத்திருந்த பார்வையையும் நிலைபாட்டையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டயத்துக்கு ஆளானது.

ஆனால் இந்திய கிறிஸ்தவ ஜனத்தொகையில் எழுபது சதவீதம் பேர் இருக்கும் கத்தோலிக்க சபையில் பாதிரிகளாக வெறும் நாலே நாலு சதவீதம் பேர்தான் இருப்பதாகவும், அவர்களும் கூட முக்கிய முடிவுகள் எடுக்கிற பதவிகளில் இல்லை என்பதும் அவர்களே ஒப்புக்கொண்ட ஒன்றாகும். தமிழகத்தில் உள்ள பதின்மூன்று ஆர்ச் பிஷப்களில் ஒருவர் கூட தலித் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய கணக்கு. என்று 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டில் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் சூர் கூறியிருக்கிறார்.

பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள்போன்ற ஆரியரல்லாதவர்களால் பக்தி மார்க்கங்கள் தோன்றியதும் ஆங்கில ஆதிக்கத்தின் போதுதான். அப்படியான பக்தி மார்க்கங்களில் புராதன இந்து கொடுங்கோண்மையை எதிர்க்கிற கலகக் குரல்கள் எழுந்தன. அதன் வளர்ச்சியிலும் பரிணாமப் பரிமாணங்களிலும் பல கலகக்காரர்கள் தோன்றினார்கள். ஜோதிபா பூலே, அம்பேத்கர், காந்தியடிகள் ஆகியோர் இந்த வரிசையில் மிக முக்கியமானவர்கள்.

கிறிஸ்தவ அமைப்புகளோடு புதிய பக்திக்கொள்கைகளும் களத்தில் இறங்கி இந்தியக் கட்டுமானங்களை எதிர்த்த மறுமலர்ச்சிக் கோசங்கள் வெளியாகின. அதன் நெருக்குதல், ஆங்கில அரசை சில சட்டங்கள் கொண்டு வரத்தூண்டியது. 1919 ல் ஒடுக்கப்பட்டோர்களுக்கான தனிச்சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் 1931 ல் அஸ்ஸாம் மாநில மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது அதன் மேலதிகாரி தலித்துக்களை புற ஜாதியினர் என்று வகைப்படுத்தினார்.

அதுவரை தாழ்த்தப்பட்டவர்கள் என்கிறசொல் கிட்டத்தட்ட எல்லா சமூகத்திலுள்ள நலிந்தவர்களையும் குறிப்பதாக இருந்தது. அதே ஆண்டு ஒரு சிறப்புக் குழுவை அமைத்து நலிவடைந்த புறஜாதியினரின் பட்டியல் (shedule) ஒன்றை தயாரிக்கச்சொன்னது பிரிட்டிஷ் அரசாங்கம். அதற்கென ஒரு வட்ட மேஜை மாநாடும் லண்டனில் கூட்டப்பட்டது.

அதில் இந்தியத்தரப்பிலிருந்து கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர்கள் இரண்டு பேர் ஒருவர் மஹாத்மா காந்தி, இன்னொருவர் அம்பேத்கர். அந்த மாநாட்டில் தீண்டத்தகாத புரஜாதியினருக்கு சிறப்பு வாக்குரிமை வழங்கவேண்டுமெனவும், அவர்களை புரொட்டஸ்டண்டுகள், அல்லது non-conformist என்றழக்கவேண்டும் எனவும் அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். காந்தி அதை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல அவர் தன்னிச்சையாக கடவுளின் குழந்தைகள் என்ற பொருள் தரும் "ஹரிஜன்ஸ்" என்ற பெயர் சூட்டினார்.

அப்போதிருந்த தாழ்த்தப்பட்ட மக்களும் அதன் தலைவர்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவு வராத குழப்ப நிலையும் இழுபறியும் நீடித்தது. எனவே வட்டமேஜை மாநட்டின் அப்போதைய தலைவர், பிரிட்டிஷ் பிரதமர் ரம்சே மெக்டொனால்டு வின் இறுதி முடிவுக்கு விடப்பட்டது. அவர் 1932 ல் வெளியிட்ட அரசானையினால் தலித்துகளுக்கு பாதுகாப்புத் தரும் சட்டம் (communal award) கொண்டு வந்தார்.அந்தச்சட்டத்தால் இந்திய ஜனத்தொகையில் 20 சதவீதம் இருக்கும் தலித்துகள், மொத்தமாக இந்து சமூகத்தை விட்டு விலகிப்போகும் அபாயம் இருப்பதை உணர்ந்த காந்தியடிகள் அந்தச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்தார்.1936 ல் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்து இந்தியமக்களின் கவணம் முழுவதையும் தன் பக்கம் இழுத்தார்.

அம்பேத்கர் போன்ற தலித்தலைவர்கள் உட்பட இந்திய தேசத்தின் குடிமக்களில் ஒருவர் கூட காந்தியடிகள் இறப்பதை, ஒரு மஹானின் இழப்பை விரும்பவில்லை. எனவே காந்தியடிகள் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிற ஒரு ஒப்பந்தத்துக்கு அம்பேத்கர் ஒத்துக்கொண்டார். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அம்பேத்காருக்கு இருந்ததில் வியப்பேதுமில்லை. அதேபோல் காந்தியடிகளுக்கு பிடிவாதகுனம் தளராமல் இருந்ததும் வியப்பில்லாத விசயம்தான். காலங்காலமாக விளிம்பு நிலையில் வாடிய மக்களுக்கான விடுதலை ஒரு சட்டமாகத்தோன்றி கையெழுத்தாக இருந்த வாய்ப்பு விளிம்பு வரை வந்து நழுவிப்போனது. தலித்துகளைப் பொறுத்தவரை அது ஒரு ஈடுகட்டமுடியாத பேரிழப்பாகும். அந்த இழப்புக்கு ஈடாக அதிக எண்ணிகையில் தேர்தலில் போடியிட இடங்கள் ஒதுக்கித்தரப்பட்டது.

இன்று SC எனச்சுருக்கி அழைக்கப்படுகிற (scheduled cast) பட்டியல் இனத்தவர் என்கிற பெயர் தான் தலித் விடுதலைக் கோசத்திற்கான ஆதர்சமான வார்த்தையாக இருந்திருக்கிறது. அந்தப்பெயர், 1931ல் சைமன் கமிசனால் சிபாரிசு செய்யப்பட்டு, பின்னர் 1935ல் உருவான இந்திய அரசியல் சாசனத்தின் 305 வது பிரிவின் பிரகாரம் சட்டபூர்வமாகியது.


இந்திய விடுதலையும் தலித் விடுதலையும்
---------------------------------

பறையரோடு இங்கு தீய புலையருக்கும் விடுதலை

பாரதியின் கனவோடு காத்துக்கிடந்தது காலம். அது கனிந்தது. அந்த ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் நாள் நள்ளிரவு பணிரண்டு மணிக்கு. ஏன் இரவு பணிரண்டு மணி எனக் கேட்டால் அர்த்தமுள்ள இந்து தத்துவத்திலிருந்து பக்கம் பக்கமாக மிட்டாய்க்கதைகள் வரலாம். எந்த வேதம் இந்திய மனிதர்களைப் பிரித்ததோ, எந்த வேதம் ஒரு பெருவாரியான ஜனங்களை ஊரை விட்டு விரட்டி புற ஜாதியினராக்கியதோ, எந்த வேதம் அதைக்கேட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் தலித்துக்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னதோ அதே வேதத்திலுள்ள ஆகம விதிப்படி தான் இந்த இந்தியாவுக்கு நள்ளிரவில் விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டது.

விடுதலைக்கப்புறம் நேரு தலைமையில் உருவான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாதுகாப்புக் குறித்து பல அடிப்படைச் சரத்துக்கள் இயற்றப்பட்டன.

15 வது ஷரத்து.
------------
மத இன ஜாதி மற்றும் பால் பாகுபாடுகளிலிருந்து விடுதலை அடைவதற்கான உரிமையை வழங்குகிறது

16 வது ஷரத்து.
------------
தலித்துகளுக்கு சமுதாய மற்றும் கல்வியின் மூலம் கட்டாய வளர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறது. அது மட்டுமில்லாமல் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. தீண்டாமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்று வறையறுக்கிறது.

23 வது ஷரத்து
------------
வேலைபார்க்கிற இடங்களில், பொருளாதரா ரீதியாக மட்டுமல்லமால், சமூக மேலான்மையால் நிர்ப்பந்தப்படுத்தப்படும் தலித்துகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. அதோடு மட்டுமில்லாது மத்திய மாநில அரசுகளில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது இடஒதுக்கீடு அளிக்கிறது.

25 வது ஷரத்து
------------
இந்தியர் யாவரும் தங்களிஷ்டப்படி எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதில் இணைந்து கொள்ளும் அடிப்படை உரிமை.

34 வது ஷரத்து
------------
பாராளூமன்ற, சட்டசபை , பஞ்சாயத்து தேர்தல்களில் அதிகாரப்பரவலுக்காக தலித்துக்கள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்குகிறது.

46 வது ஷரத்து
------------
கல்வி மற்றும் பொருதார நிலைமகளில் தலித்துகளின் நிலைமயக் கவனித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ சிறப்புக் கண்கானிப்பு வேண்டுமென உறுதி செய்திருக்கிரது.

இது தவிர மிகப்பிரபலமான பிசிஆர் (ப்ரொடெக்சன் ஆப் சிவில் ரைட்ஸ் ஆக்ட்- 1955) பிசிஆர்ஆர் சட்டம் (1977), வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் (1989) ஆகியவையும் இன்னும் இருக்கின்றன.

................... இந்த சட்டங்கள் பூராவும் அமலாகிப் பூர்த்தியடைந்திருந்தால் எப்போதோ கீழ் மேலென்ற நிலை மாறியிருக்கும். இந்தியா எந்தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன்பிரந்தோரென்று சொல்லியபடி தெருக்களில் ஜாதி மத பேதம் மறந்து குழந்தைகள் ஓடித்திரிந்திருக்கும். ஆனால் இங்கே இன்னும் வாச்சாத்தி, மாஞ்சோலை, வீதிகளில் மிதிபட்டுக் கிடக்கிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலிகளில் இன்னும் இரண்டாயிர வருட முடைநாற்றம் உட்கார்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கிராமக்குடிநீர் ஆதாரங்களிலும் கண்ணுக்குத்தெரிகிற கிருமிகளாக தடைச்சட்டம் இருக்கிறது. பெருநகரங்கள் நகரங்கள் நகரத்தை நோக்கி நகருகிற ஊர்கள் தவிர்த்த எல்லாகிராம டீக்கடைகளிலும் ஒரு ஓரத்தில் நின்று டீக்குடிப்பதை பார்த்தபடியே காலம் நகர்கிறது. நகராட்சி ஊழியத்துக்கு அருந்ததியர்தான் என்பதை மாற்றமுடியாது.

மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று கண்கானிக்ககூட இந்தியாவின் மூத்த குடிமகன் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துக் கண்காணிக்கலாம் என்றும் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ரஜேந்திர பிரசாத் அவர்கள் 1936 ஆம் ஆண்டு காந்தியால் முன்மொழியப்பட்டு அம்பேத்கர் ஆதரவோடு கொண்டுவந்த பட்டியல் இனத்தவர்களின் பட்டியலுக்கு ஒரு புது வியாக்கியானத்தைக் கொண்டுவந்தார் அதுதான் அரசியலில் மதத்தைக்கலக்குகிற முயற்சி. யார் யாரெல்லாம் பட்டியல் இனத்தவர் என்று சொல்லிவிட்டு அவர்களில் எவெரேனும் இந்து அல்லாத பிற மதத்தைத் தழுவினால் அவர்கள் ஷெடூல்டு இனத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் எனும் ஒரு சூழ்ச்சியை இடைச்செறுகலாக, பிற்சேர்க்கையாக சேர்க்கிறார் இந்தியாவின் முதல் மூத்தகுடிமகன்.

இந்தச்சூழ்சியானது இந்திய அடைப்படை உரிமைச்சட்டத்தின் 25 வது ஷரத்துக்கு நேர் எதிரானது எனப்பெரும் கலகக்குரல்கள் கேட்டபின்னர் மிகத் தாமதமாக இரண்டுமுறை சீர்திருத்தப்பட்டது 1956ல் சீக்கியர்களையும், 1990ல் புத்த மதத்தையும் இந்த சட்டத்துக்குள் கொண்டுவந்தனர். எப்படியிருந்த போதிலும் நசுக்கப்பட்டவர்களை அடையாளப் படுத்தும்போது கூட மத அளவுகோல் கொண்டு அளப்பது நவ நாகரீகக் கொடுமை. அதுவும் எந்த சனாதனத்தின் காலில் மிதிபட்டு நசுங்கினார்களோ அதே சனாதனத்தின் காலுக்கடியிலேயே விமோசனம் கிடைக்கும் எனும் குருட்டுத் கதையானது தலித்துக்களின் நிலைமை. எல்லா மதத்திலும் இருக்கிற தலித்துகளுக்கு ஒரே அடையாளம் கிடைக்க இருந்ததையும், அவர்களை ஒன்று சேர விடாமலும் பிரித்தாளும் சூழ்சியை அதிகாரத்தின் துணையோடு அரங்கேற்றினார் ஹிந்து மஹாசபையின் தீவிர உறுப்பினர் ராஜேந்திர பிரசாத். அந்த அரங்கேற்றத்தின் எதிரொலியாக முஸ்லீம் தலித்துகளும் கிறிஸ்தவத் தலித்துகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் கிடைக்கிற அடிப்படை உரிமைகளை அனுபவிக்க இயலாத பிரிவினராயினர்.

நிலைமைகள் இப்படியிருந்த போதிலும் ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளும் அரிதாகவேனும் அவ்வப்போது குரிஞ்சியாய் பூத்தார்கள். ஜனாதிபதியின் நேரடி நியமனத்தால் வந்த ஆனையாளர் LM ஸ்ரீகாந்த் அப்படிப்பட்ட ஒரு உயர் அதிகாரி. அவர் நியமிக்கப்பட்ட ஓராண்டுகாலத்தில் நடக்கிற ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும் தலித்துகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கிற சட்டங்கள் ஒழுங்காக நிறைவேறுகிறதா என்று சோதனை செய்ய, நடவடிக்கை எடுக்க, அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அவர் சமர்ப்பித்த அறிக்கை பரபரப்பானதும் மிகுந்த ஈர்ப்புத் தன்மை கொண்டதுமாகும். அது 1951 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதுவே தலித்துக்கள் குறித்த முதல் அறிக்கை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இந்து சமூக ஏற்பாட்டில் ஜாதி என்பது ஒரு மனிதனின் அடையாளமாகவும், செய்யும் தொழிலுக்கான தகுதியாகவும், கௌரவமாகவும் வலிந்து திணிக்கப்பட்டு பின் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போலொரு வறட்டு நடைமுறை இந்தியாவைத்தவிர உலகின் வேறெந்த மூலையிலும் கிடையாது. தெருக்கூட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தோல் பதனிடுவது, செருப்புத்தைப்பது, மலம் அள்ளுவது, பிற மனிதனின் அழுக்குத்துணிகள் வெளுப்பது போன்ற தொழில்கள் எல்லாம் மனிதனால் அவனது கைகளால் செய்யப்படுகிறது. இந்தத் தொழில்கள் யாவும் ஒரு சில ஜாதிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனத்தொகையில் ஐந்து கோடிக்கு மேலிருக்கும் அவர்கள் ஹரிஜனங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்." அடக்குமுறையால் திணிக்கப்பட்ட இந்த பழக்கங்களால் அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்திருக்கிறார்கள்.

அவர்கள் அதற்குள்ளே நூற்றாண்டு காலங்களாக உழன்றுகிடப்பதால், அது சாபமில்லை, அதை உடைத்துக்கொண்டு அவர்களால் வெளி வரமுடியும் என்பதை உணராதபடிக்கு அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். எனவே அவர்கள் பிற மனிதர்களோடு போட்டி போட்டு தொழில்களிலோ ஆலைகளிலோ உழைக்க முடியாத சோம்பேறிகளாக மாறீப்போகிறார்கள், அவர்கள் மூலையும் உடலும் சோர்ந்து போயிருக்கிறது. அதை விடக்கொடூரம் தங்கள் குழந்தைகளைக்கூட பள்ளிக்கூடம் அனுப்ப முடியாத ஊற்றுக்கண் அடக்கிறவர்களாக மாறுகிறார்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அறிக்கையின் இந்த வார்த்தைகள் இருண்டு கிடக்கும் தலித்துகளின் உள்ளார்ந்த இயல்புகளின் மேல் வெளிச்சம்
பாய்ச்சுகிறது. அது ஜாதீய மேலாதிக்கத்தால் நசுங்கிக்கிடக்கும் மனித விழிப்புணர்வைப் பற்றிப்பேசுகிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூனிக்கிடக்கிற சமுகத்தின் முதுகெழும்புகளை நிமிர வைக்கும் மருத்துவம் குறித்து யோசிக்க வேண்டிய நிர்ப்பந்ததில் இந்தியா இருப்பதைச்சுட்டிக்காடுகிறது. அது வெறும் காகிதச்சட்டங்களாலும், ஆணைகளாலும் தீர்மாணங்களாலும் பணமுடிப்புகளாலும் நிவர்த்தி செய்யமுடியாத பீடை எனத்திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.

ஒரே ஒரு மாற்று தானிருக்கிறது அது கல்வி. அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தர யோசிக்கிற போதே அவர்களின் உள்ளார்ந்த இயல்புகளை அலசி ஆராய்ந்து கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். எனவும் தெளிவாக ஆரம்பிக்கிறார் LM ஸ்ரீகாந்த்.

இதற்கெனப் பிரத்யேகமாக அவர் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார்.

28 வது அறிக்கை (1987)
-------------------------------------
கிட்டத்தட்ட முப்பத்தாறு வருடங்கள் அந்த நாற்காலி ஒரு அருங்காட்சிப் பொருளாகவும், மாதம் பிறக்கிற போது பணம் பட்டுவாடாப் பண்ணுகிற கல்லாப்பெட்டியாகவும் இருந்ததே தவிர குறிப்பிட்டுச் சொல்லுகிற மாதிரி ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப்போடத் தயாராயில்லை. எனவே 1987 ல் வெளியான 28 வது அறிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது. அதாவது இந்த அறிக்கை தயாரான 1980 வது ஆண்டு கணக்கெடுப்புப்படி சுதந்திரமும் கடுமையான சட்டங்களும் நடைமுறைக்கு வந்து நாற்பதாண்டுகள் கடந்த பின்னரும் நிலைமைகள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

பொதுக்கிணற்றில் தண்ணீரெடுக்க முடியாத கொடும் நடைமுறைகள் கிராமங்களில் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. அது போலவே நகரங்களின் சேரிப்பகுதியில் குடியிருப்பவர்களின் நிலைமைகளும் நீடித்தது. அதுபோன்ற தீராக்கொடுமைகளின் பட்டியல் பற்றிப்பேசுகிறதுறது, அந்த 28 வது அறிக்கை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலித்துகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு சின்னசின்னக் கீற்றாக ஒளிர ஆரம்பிக்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் அடுத்தவர்களின் ஆறாத கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது. அந்தக்கோபத்துக்கு விலையாக மொத்தம் மொத்தமாக உயிரும் உடமைகளும் தலித்துகளிடமிருந்து பறிபோயின. அவர்களின் பாதம் பதிந்து நிற்கிற ஒரு தப்படி இடம்கூட அவர்களுக்கெனச் சொந்தமாக இல்லாத ஜீவராசிகளாக இருந்ததனால், உயிர் வாழ்தலின் நிர்ப்பந்தத்தால் அறிதலுக்கான முயற்சியையும் கைவிட நேர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்கொடுமைகளுக்கெதிரான இயலாமை, அவமானங்கள், இதர கொடுமைகள் என நீளும் பாடியல்கள், தங்கள் மிச்ச நாட்களுக்காக வாய்மூடிப் பொறுத்துக் கொண்டது போக, பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தினசரி நாளிதழ்களில் இடம்பெறாத நாளேகிடையாது என்று சத்தியம் செய்து சொல்லலாம். அப்படி பதிவு செய்யப்பட்ட மிகக்கடுமையான குற்றங்கள் சராசரியாக வருடத்திற்கு 15000 என்று கணக்கிடப்படுகிறது.

1) தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்த தெளிவற்ற ஆவணங்களால் தீர்க்கப்படாத தாவாக்கள்.

2) வயிற்றுப்பாட்டுக்கு எட்டாத குறைந்த கூலி, அல்லது கூலியில்லாத உழைப்பினால் உருவாகும் மனக்கசப்பும் பதற்றமும்.

3) தன்னெழுச்சியாக கிழம்பும் விழிப்புணர்வு ஆகியவைகளே அதற்கான காரணங்களாகச் சொல்லுகிறது.

சுதந்திரத்துக்குப்பிறகான மொத்த கல்வி வளர்ச்சி 1961ல் 24 சதவீதமாகவும், 1971ல் 29.4 சதவீதமாகவும், 1981ல் 36.2 ஆகவும் இருக்க தலித்துக்கள் 1981ல் 21.4 சதவீதம் மட்டுமே எட்ட முடிந்திருக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கும் குறைவாகவே தலித்துகள் இருக்க முடிந்தது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைகிடைக்கப் பெற்றோர் கணக்கில் 1983-85 ஆண்டில் வெறும் எட்டு சதமானவர்கள் தான் தலித்துகள். கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் காலியிடங்காளாகவே கிடந்தன.

இப்படி புள்ளி விவரங்களுக்குள் பயணமாகித்தான் தலித்துகளின் நிலைமையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அது கதவையும், கண்ணையும் திறந்துபார்த்தவுடன் தென்படுகிற அன்றாட அவலங்கள்.

ஆரியர்கள் ஆரம்பித்து வைத்த அடிமை என்கிற அடயாளம் சுதந்திரம் தாண்டியும் எந்த அளவிலும் குறையாது தொடர்கிற கதைகள் குறித்து விசனப்பட விரல் விட்டு எண்ணக்கூடிய அமைப்பினர் மட்டும் இருந்தனர்.

வண்கொடுமைகளுக்கெதிரான கலகம்.
--------------------------------------------------
ஆயிரமாயிரம் அண்டுகள் பழமையானதும், இன்னும் புதுக்கருக்கு மாறாமல், இளமையோடிருப்பதுமானது என்று கணக்கெடுத்தால் அது இந்திய தலித்துகளின் நிலைமை மட்டும்தான். ஆனால் அதற்கெதிரான காலகக்குரல்கள் எழுந்து தொடர்ந்து கொண்டிருக்கும் சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டுமுன் அவற்றை
மூன்றாகப் பிரிக்கலாம்.

1) வேதகாலம் - முகம்மதியர்காலம் (கிமு 600 முதல் கிபி 1700 வரை)

2) ஆங்கிலேய - மற்றும் கிறிஸ்துவ காலம் (கிபி 1700 முதல் 1947 வரை )

3) சுதந்திர காலம் (1947 முதல் இன்று வரை)

வேதங்களின் மேல் கேள்விகள் வைத்த முதல் புருஷர்கள்
---------------------------------------------------------------------------
பார்ப்பனிய மேலாதிக்கத்தின் ஆணிவேரான வேதங்களின் மேல் கேள்விகளை வைத்து ஆட்டத்தைத் துவக்கியவர்களில் முக்கியமானவர்கள் இரண்டுபேர். அந்த இருவரும் பார்ப்பனர் அல்லாத சத்திரிய குலத்து அரசர்கள். கிமு 540 முதல் 468 வரை ஆண்ட மஹாவீரர். அடைமொழி, பெயர், செயல் எல்லாவற்றுக்கும்மொரு பொருள் தந்த அந்த அரசன் தான் பிராம்ணர்களை எதிர்த்து ஜைன மதத்தை நிறுவிய முதல் அரசன்.

முதன்முதலாக எழுந்த கலகக்குரலாக இருந்ததனால் அது ஆயிரமாண்டு வேதக்கருத்துக்களை எதிர்க்க போதிய வலுவும் கருத்தும் இல்லாது இருந்தது. அது மட்டுமல்லாமல் வேத காலத்து ஜாதிய அடுக்குக்கு முறைக்கு மாற்றாக ஏதும் முன்வைக்க முடியாமல் போனதால், அதற்குள்ளேயே அமுங்கிப்போனது.

அடுத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட முதல் இந்திய மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர். (கிமு 563 முதல் 483 வரை)

புத்த மதம் பெருவாரியான ஜனங்களால் ஆகர்ஷிக்கப்பட்டதால் ஒரு பெரும் மாற்றம் வர இருந்தது. கிராமங்களுக்குள்ளும், தொழிலாளர்களிடையிலும், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடமும் தன் கருத்துக்களைச் சொல்ல நாடு முழுவதும் புத்தர் நடந்தார். அவர்போன இடமெல்லாம் பௌத்தம் பற்றிக்கொண்டது. ஆதலின் பல அரசர்களும் இதைப்பின்பற்ற நேர்ந்தது. ஆங்கிலப் பேரரசுக்கு முந்தைய பேரரசு ஒன்று உண்டு என்றால் அது அசோகப்பேரரசு மட்டுமே. மக்களை முதன்மைப்படுத்திய, சட்டங்களும், திட்டங்களும், ஆட்சி அமைப்பும் உறுவான அந்தக்காலத்தைத்தான் வரலாறு களப்பிரர் காலம் என்று பதிவு செய்கிறது. பௌத்தர்களாக சாமான்யர் பெருகியது கண்டு பொறுக்க முடியாத ஆரியர்கள் புத்த மதத்துக்குள் ஊடுறுவி கைப்பற்றி அதை மஹாயாணம், ஹீனயாணம் இரண்டாக்கினார்கள்.

வலுவிழந்த அதை சந்திரகுப்த மௌரியன் எனும் அரசன் சாணக்கியன் எனும் ராஜ தந்திரியின் யோசனைகள் அல்லது சூழ்ச்சியின் மூலம் அரசைக் கைப்பற்றி பௌத்த சகாபத்தத்தை மாற்றினார்கள். ஆட்சி அதிகாரம் கை மாறியதும் நாடு முழுவதிலுமுள்ள ஜைன, சமன புத்த துறவிகளை மொத்தம் மொத்தமாகக் கொன்றார்கள். கூட்டம் கூட்டமாக நாடு கடத்தப்பட்டார்கள். உயிர் பிழைக்கத் தப்பித்து நேபாளம் வழியே சீனாவுக்கும், தெற்கே கடல் வழியாக இலங்கைக்கும் போனவர்கள் அங்கே மதத்தை நிறுவினார்கள். மிச்சமூள்ள புத்த மதத்தவர்களை ஆரிய அரசர்கள் அடிமயாக்கினார்கள்.

அந்தப்படுகொலைகளின் அதிர்விலிருந்து இந்திய தலித்துகள் மீள ஓராயிரம் ஆண்டுகள் ஆனது. ஆம் அதன் பின்னர் வந்த முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் தான் முதன் முறையாக தலித்துக்கள் ராஜ சேவகம் பண்ணுகிற சில காரியங்களுக்கும், அவர்களில் வீரமானவர்களென்று கண்டெடுக்கப்பட்டவர்களை சிப்பாய்களாகவும் சேர்க்கப்பட்டார்கள்.

இந்தையாவின் முதல் தலித் தளபதி "அம்ரித்நாக் மஹர்". மராட்டிய மாநிலத்து முஸ்லீம் மன்னன் பேதரின் படையில் சிறந்த வீரனாக அறியப்பட்டான். அதன் பிறகுதான் 1129 ல் அங்குள்ள மஹர் இனத்தவர்களுக்கு 52 வகையான உரிமைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இதே முஸ்லீம் ஆட்சிக் காலத்தில் மிகக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு நிகழ்வு '' சூவ்பி '' தத்துவம்.

அது ஆண்டவன் படைப்பில் அணைவரும் சமம் எனும் கொள்கையைச் சொன்னது.

அதன் பின்னர் தோன்றிய "பக்தி மார்க்கம்" தவம், வேள்வி, சமஸ்கிருத சுலோகம் ஆகியவற்றை நிராகரித்து, பாடல், தியானம், சேவை ஆகியவற்றின் மூலம் கடவுளை அடையலாம் என்று ஒரு மாற்றுத் தத்துவத்தை முன்னிறுத்தியது. அதிருஸ்டவசமாக அதை முன் மொழிந்தவர்களில் முக்கியமானவர்களாக தலித்துகள் இருந்தார்கள். அவர்களில் தென்னிந்தியாவின் புனித சொக்கமேலரும், துறவி கனகரும் மிக முக்கியமான தலித் துறவிகளாவார்கள்.

தமிழகத்தில் நந்தனாருக்கு இணையான அடையாளங்களோடு ஒப்பிடும் அவர்களிருவரும் பந்தர்ப்பூர் ஆலயத்துக்குள்ளும், உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்துக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்கள். வட இந்தியாவில் துறவிகள் நம்தேவும், ரவிதாஸ¤ம், கபீர் தாஸரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடவுள் முதலில் ஒளியைப்படைத்தார்,
அந்த ஒளியிலிருந்து உலகம் பிறந்தது,
எல்லா மனிதர்களும் கடவுளுக்கே சொந்தம்,
இதில் யார் உயர்ந்தோர்? ஏன் தாழ்ந்தோர் ?

கபீர் தாஸரின் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து, சீக்கிய மத நிறுவனர் சுவாமி குருநானக் தலித்துகள் குறித்த முதல் கேள்வியை வைக்கிறார்.

கீழுக்கும் கீழான ஜாதி,
இன்னும் அது கீழேயே இருக்கிறது,
நானக் எப்போதும் அவர்களோடு இருப்பார்,
அவருக்கு மேலும் இல்லை கீழும் இல்லை,
உனது கருணை நிலத்தின் மீது விளைகிறது,
அந்த மக்களின் உழைப்பால் அது பயிராகிறது.

கபீர் தாசரும், குருநானக்கும் அவர்களுக்காகப் பரிந்து பேசினாலும்கூட. உண்மையான கலகக் குரல் ஒடுக்கப்பட்டவர்களின் சொந்த வார்த்தைகளிலிருந்துதான் உண்மையான வலியின் வேதனை வெளிவந்தது.

" உண்மையான வலியை அடிபட்டவனால் மட்டுமே உணரமுடியும் "

என்று பஞ்சாபியில் ஒரு பழமொழியிருக்கிறது. அந்த வலியோடு வந்த இரண்டு பேரின் வார்த்தைகள் பற்றிப்பேசலாம். நம்தேவ், ரவிதாசர். நம்தேவ், குருகிரந்த் சாஹிப் எனும் சீகிய பாடல்கள் எழுதியவர். ஒரு இந்துக்கோவிலில் அவர் நுழைந்தபோது ஏற்பட்ட அவமானத்தைப் பாடிப் பதிவு செய்கிறார்.

ஆனந்தமான மனநிலையில் ஆலயம் நுழைந்தேன்,
ஐயா உன்னைத்தொழுவதற்கு,
ஐயகோ ஆண்டவா என்னை எத்தித்தள்ளினார்கள்,
வெளியில் விழுந்தேன்.
நான் கீழானவனாம்.
என்னைப் படைப்பதற்கு
சலவைக்காரன் வீடுதானா கிடைத்தது உனக்கு ?

ரவிதாசரின் தர்க்கம் அலாதியானது எனவே தான் மத்திய காலத்தில் தலித் குழுக்களால் அவரது பாடல் தெருத்தெருவாகப் பாடப்பட்டது. சீக்கியப்பாடல்களுக்குள் தலித் விடுதலைக்கான விதைகளைப்போட்ட அவரது பாடல்கள். அந்த மக்களின் மனதில் தீ வளர்ந்தது. ஸ்ரீ குருகிரந்த் சாஹிப்பில் இடம் பெறும் இந்தப்பாடல் மிகப்பிரபலமானது.

மேல்குடியென்று கருதும் மக்களே கவனியுங்கள்,
நான் சக்கிலியன் என்பது நன்றாகத்தெரியும்.
என் மனதும் பாடலும் எப்போதும் இறைவனோடே இருக்கும்.
கங்கை நீரில் காய்ச்சினாலும்
சாராயம் ஒருபோதும் புனிதமாகாது.
பக்தன் எவனும் பருகவும் மாட்டான்.
அசுத்தமான தார் மரங்கள் ஆண்டவனுக்காகாது,
அதில் செதுக்கும் காகிதமும் அசுத்தமா?
காகித்தில் எழுதப்பட்ட சுலோகம் சொல்லும் போது மட்டும்
கைகூப்புகிறது தலை தாழ்கிறது.
எனவே கனவான்களே எனது சக்கிலிய மக்கள்
அடிபட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், கட்டுண்டவர்கள்
அவர்கள் இறந்த மிருகங்களின் உடலோடு
" பனாரசை" ச் சுற்றி அலைகிறார்கள்.
உனது சேவகன் ரவிதாஸ்
உனது பேரால் அவர்களிடம் சேருகிறான்.

காலங்காலமாக அடக்கப்பட்டவர்களின் குமுறல் பக்தியின் மூலம் வெடிக்கிற இந்த தருணத்துக்காகக் காத்துக்கிடந்ததுபோல மக்கள் அதன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே வேதகாலத்தில் தொடங்கிய இந்த குமுறல்கள் முஸ்லீம் காலத்தில், பக்திமார்க்கத்தாலும், சூவ்ப்பி தத்துவத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களிருக்கும் மூலை முடுக்கெல்லாம் வெளிச்சம் பாய்ச்சியது. இறைவன் முன்னால் எல்லோரும் சமம் என்கிற நிஜத்தை வெளிப்படையாக்கியது. ஒரு சின்ன தீக்கங்காக ஒரு அக்கினிக்குஞ்சாக விதைக்கப்பட்ட அது ஒரு பெரும் மாற்றத்துக்கான கேள்வியாகக் காத்துக்கிடக்கிறது. ஆரிய தத்துவங்களுக்கு எதிராக முளைத்தவர்களை அழிப்பது, அழிக்கமுடியாதவர்களை கேலிப்பொருளாக்குவது அவர்களின் நடைமுறைத் தந்திரமானது. எனவேதான் தங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பிய பஞ்சாப்பிகள் இப்போதும் மூளையில்லாதவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலேயர் காலம்
--------------------------
பிளாசிப்போரும், பக்சர் யுத்தமும் நடைபெற்று ராணுவ அதிகாரம் கையில் கிடைக்கும்வரை ஆங்கில அரசாங்கத்தால் தலித்துகளின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பின்னர் ஆங்கில ஆட்சிக்காலத்து ராணுவத்தில் தலித்துகளுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. அவர்களுக்கெனத் தனியே இரண்டு பிரிவு ராணுவம் ஒதுக்கப்பட்டது. ஒரு கடற்படைப்பிரிவும் வழங்கப்பட்டது. அதே போல பெங்கால் ரெஜிமெண்டிலும், பஞ்சாப் ரெஜிமெண்டிலும் தலித்துகளுக்கென தனிப்பிரிவுகள் வழங்கப்பட்டன. இதுவே பின்னாட்களில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோளாக இருந்தது. இந்தக்காலத்தில் தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் தலித் தலித்தல்லாத தலைவர்கள் ஜாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக வலுவான சொற்களோடு மக்களை எழுப்பி விட்டார்கள்.

ஆங்கில அரசாங்கம் இதே காலத்தில் மக்கள் தொடர்பு சாதனங்களான தபால் தந்தி, செய்தித்தாள், போக்குவரத்து புதிய நீதித்துறை, புதிய நிலச்சட்டம், புதிய கல்வித்திட்டம், மற்றும் தொழில் வளர்ச்சி ஆலைகள் நிறுவுதல் ஆகியவற்றை இந்தியப்பரப்பில் அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் கல்வியும் புதிய புதிய கடவுள்களும் அறிமுகமாயின, ஆச்சரியத்தோடு தலித்துகள் வெளி உலகில் பயணப்பட்டனர். அப்போது தவிர்க்க முடியாத கேள்விகளும் எழுந்தன அவற்றுக்கான ஓவ்வொரு பதிலிலும் இயக்கங்கள் தோன்றின. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அங்கங்கங்கே இயக்கங்கள் தோன்றின.

ராஜஸ்தானில், ராம்தாஸ் தோற்றுவித்த ராம்தேவ் பந்த் இயக்கம் 1726 - 1798
மத்திய இந்தியாவில், குரு காசிதாஸ் ஆரம்பித்த சத்நாமி இயக்கம் 1756 - 1850
ஆந்திரத்தில் நஸ்ரையா, தோற்றுவித்த நஸ்ரையா இயக்கம் ........ - 1825
வங்காளத்தில், நம்சூத்ர ஹரிச்சந்த் தோற்றுவித்த மத்னா இயக்கம் 1811 - 1879
ஆகியவற்றை குறிப்பிடலாம்.

ஆனால் இந்திய வரலாற்றைக் கடந்து செல்லுகிற வரலாற்றறிஞர்கள் எல்லோரும் அந்த 1857 ஆம் வருடத்தை நின்று நிதானித்துக் கடந்து செல்கிறார்கள். முதல் இந்திய சுதந்திரப்போர், கப்பற்படை எழுச்சி, சிப்பாய்கள் கலகம் இப்படியான பலபெயர்கள் கொண்டழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்த வருடம் அது. அடிமை இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிய நிகழ்ச்சி நடந்த ஆண்டு அது. இந்தியாவில் சுதந்திரக்கனல் தீயாகப்பற்ற ஆரம்பித்தது. அதோடு கூடவே தலித்துகளின் விழிப்புணர்வும் போரட்ட எழுச்சியும் ஆரம்பமானதும் இதே கால கட்டத்தில்தான்.

அது ஒரு சிரிய பொறியால் உருவான காட்டுத்தீ. ராணுவ சிப்பாய் ஒருவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்டுப்போனான் போன இடம் ராணுவ கேண்டீன். கேட்டது ஒரு சிப்பாயிடம். அந்த சிப்பாய் தண்ணீர் தர மறுத்தான். மறுத்ததற்கான காரணம் இந்தியாவில் பிரசித்தமான காரணம். அவன் தொட்டுக் குடிக்கும் டம்ளரில் தீட்டுப் பட்டுவிடும் என்பது தான் அந்தக் காரணம். வழக்கம் போல தண்ணீர் கேட்டவன் திரும்பிப்போயிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்காது. அவன் சொன்ன பதிலில் ஒரு கலகத்துக்கான ஆதி விதை இருந்தது. "உன் குலப்பெருமையை இன்னும் தக்கவைத்துக்கொள் கொஞ்ச நேரத்தில் ஆங்கிலப் பிரபு வருவான் வந்து துப்பாக்கியிலுள்ள பன்னிக் கொழுப்பைக்கடிக்கச் சொல்வான் அப்போது உன் குலப்பெருமை எங்கே போகிறது என்று பார்ப்போம்" என்று சொன்ன மறுகணம் அந்தச்செய்தி காட்டுத்தீபோல பரவிக் கலகம் வெடித்தது.

கலகம் ஓய்ந்த போது இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டது. ஒன்று உடனடியாக ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ் மஹராணிக்குப்போனது. இரண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு தலையீடாக் கொள்கையை உருவாக்கி அதை பாராளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டுவந்தது. அதன் படி "இந்தியாவின் மத ஜாதி விவகாரங்களுக்கு உரிய மரியாதை தருவது" என்று சொல்லுகிற அந்தச்சட்டம் ஜாதிய ஒடுக்குமுறைக்கு சாமரம் வீசுவதாக அமைந்தது. ஆங்கில அரசாங்காமும் கூட சம்பாதிக்க வந்த இடத்தில் நமக்கெதுக்கு வம்பு என்று ஒரு நிலை எடுத்தது.
ஆனாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் கேட்கப்படாமல் இருந்த கேள்வியை ஒரு சாமன்ய சிப்பாய் கேட்டான். கேட்கமுடியும் என்று கதவுகளைத் திறந்து வைத்தான். எனவே தான் சுதந்திர வரலாற்றில் ஒரு பெரும் சலனத்தை ஏற்படுத்திய அந்த சிப்பாய்க்கலகம் தலித் இயக்கங்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி அன்னியன் புகுதல் என்ன நீதி என்ற கேள்வியின் மேல் பரப்பில் சுதந்திரத்தீ பரவலாம். ஏற்கனவே அடிமைப்பட்டுக்கிடக்கும் அவர்கள் பதிலுக்கு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை எனப்பாடுவார்கள். அப்படியான தலித் குரல்கள் இந்தியாவின் எல்லாத் திசைகளிலிருந்தும் கிளம்பியது.

தமிழகத்தில் 1890 ஆம் ஆண்டு M.C.ராஜாவால் துவங்கப்பட்ட ஆதி திராவிட மஹாஜன சபை அரசாங்க வேலைகளுக்கான தகுதியில் தலித்துகளுக்கு சலுகை வழங்கவேண்டுமென்று கோரியது, அது 1894 ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பறையர் இனத்தை திராவிட நாட்டின் பூர்வகுடிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்ற பெயர் மாற்றம் வேண்டுமென்று கோரியது.

1917 ஆம் ஆண்டு குரு ராமச்சந்திர ராவால் தொடங்கப்பட்ட ஆதி ஆந்திர மஹாஜன சபையும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி போராடியது. ஆந்திர தலித்துகளுக்கு கல்வி கற்கும் உரிமையை ஜில்லாபோர்டு, பஞ்சாயத்து, உறுப்பினர் பதவி, பொதுக்குளங்களில் தண்ணீர் எடுக்கு உரிமை ஆகியனவற்றைச் சட்டமாக்க வேண்டும்மெனவும் கோரியது.

1912 ல் அனைத்து வங்க நம்சூத்ர சங்கம்
1927 ல் K.கேளப்பன்., கிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் கேரளத்திலும்
1930 ல் கர்நாடகத்திலும்
1926 ல் மங்கோ ராம் தலைமையில் பஞ்சாபில் ஆதி தரம் எனும் இயக்கமும்.

குரு ரவிதாஸின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. சாமர், சூரா, சன்சிஸ், பாங்க்ரர், மற்றும் பில்ஸ் இனத்தவர்கள் மட்டுமே பூர்வகுடிகள் அவர்களுக்குள் எந்தவிதமான பேதமும் இல்லாதிருந்தது என்று பிரகடனப்படுத்துகிறது.

1921 ல் உத்திரப்பிரதேசத்தில் சுவாமி அச்சுதானந்த்ஜி (ஹீராலால்) துவக்கிய ஆதி இந்து சபை அந்தக்காலத்தில் பிரபலமானது. அது பார்ப்பன போதனைகள் எல்லாவற்றையும் முற்றிலும் நிராகரித்து அந்தந்த பகுதியில் உள்ள குலதெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் பிரதானப்படுத்துகிறது.

சாமர் தைவ சபா கேரளத்தில் உள்ள கிறிஸ்தவ மதத்தில் உயர் ஜாதி சிரியன் கிறிஸ்தவர்களால் ஒடுக்கப்படுவதை எதிர்த்து ஒன்றாகத் திரட்டியது.

இந்தியப் பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.

1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லண்டன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர் முன்னிறுத்திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மகாத்மா காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுதந்திரத்தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் (All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக் கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமாக்க வேண்டும். இந்த மூன்று சம பங்கான தூண்களின் மேலே தான் எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு, ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள் நமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
SCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது. நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால் தொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப்போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.

SCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத் துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொன்னார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால் தன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக் கொண்டேயிருந்தார்.

ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படைவாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாழின் கடைசிக் கலகமாக ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத் தழுவினார்.

பின்னர் இந்தியத் தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ''மக்கள் ஜனநாயகக் கட்சி'' என்ற ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் அதன் பெயரை இந்தியக் குடியரசுக்கட்சி என்று மாற்றினார். கட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றறிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்கவில்லை. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் நிலைகுத்தி நின்றது. சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம் போனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச் சொன்னானாம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப் பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எனக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ஆதலால் நான் விழித்திருக்கிறேன். என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் னக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங்கும் சிலையாகியிருக்கிறார்.

அவரது மறைவிற்குப்பின்னர் 1957 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுக்கட்சி ஸ்தாபகமானது. அதில் பெரும்பாலான ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உபி, ம.பி, பஞ்சாப், மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வலுவாக வேரூன்றிக் கிளை பரப்பிய அதன் வளர்ச்சியால் ஆளும் காங்கிரசுக்கு உதறல் எடுத்தது.

காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான ஜனசங்கத்தோடு கூட்டு சேர்ந்து விடுமோ எனும் அச்சத்தால் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் Y.B. ஜவான் அவர்கள் RB கெய்க்வாட் என்கிற குடியரசுக்கட்சியின் தலைவரோடு நட்பு பாராட்டினார். அந்த நட்பினால் குடியரசுக் கட்சிக்கு இரண்டு அனுகூலங்கள் கிடைத்தது. இட ஒதுக்கீட்டில் புத்த மதத்தைத்தழுவிய தலித்துகளும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நாக்பூரிலுள்ள "தீக்ஷா பூமி" என்னும் இடத்தில் அம்பேத்கர் ஆயிரக்கணக்கானவர்களோடு புத்த மதத்தைத் தழுவினார் அங்கே ஒரு நினைவிடம் அரசின் செலவில் அமைக்கப்பட்டது. அதனாலேயே RPI யோடு கூட்டணி அமைக்கிற அனுகூலம் காங்கிரசுக்கு கிடைத்தது.

கூட்டணியால் கட்சிக்குள் சர்ச்சை அதைத் தொடர்ந்து பிளவு. கூடணியை ஆதரித்த தலைவர்கள் DT ரூப்வேத்தும் RD பந்தேரும் முறையே மந்திரியாகவும், பீகார் கவர்னாராகவும் ஆனார்கள்.

தேர்தல் ஜனநாயகக் கேலிக்கூத்துக்குள் கரைந்துபோன தலைவர்களின்மேல் மக்கள் வெறுப்புக் கொண்டார்கள். இதே காலத்தில் அமெரிக்க ஆப்பிரிக்க கருப்பின விடுதலை இலக்கியங்கள் இந்தியாவுக்குள் பரவலாக வாசிக்கப்பட்டது அதன் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட மராட்டிய மாணவர்கள். கருப்பின விடுதலைக்கு பெரும் பங்காற்றிய கருஞ்சிறுத்தை இயக்கத்தின் சாயலில் ஒரு புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்கள். அதற்கு இந்தியத் தலித் சிறுத்தைகள் எனப் யெரிட்டனர். அந்த இயக்கம் கிராமங்களினூடாகச் சென்று அங்கே புரையோடிக் கிடக்கிற வன்கொடுமைக் குற்றங்களை உலகறியச் செய்தது. தலித் இலக்கியங்கள் சிறுகதைகளாக, கவிதைகளாக, தன் வரலாறாக வெளியாகி புற உலகின் கவனத்தைத் திருப்பியது இந்தக் காலத்தில்தான். உச்சக்கட்டமாக தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய போது அரசியல் அரங்கில் அந்த இயக்கம் ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அவர்களின் அரசியல் சாசனப்பிரகடனம் கிட்டத்தட்ட மார்க்சீயச் சாயலில் இருந்ததால் அது கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியது. மெல்லத் தலைதூக்கிய கருத்து வேறுபாடுகளும் பதவி மோகமும் அந்த இயக்கத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப் போகச்செய்தது.

அதன் பின்னர் அம்பேத்கரால் துவக்கப்பட்ட அகில இந்திய சமதா சைனிக் தளம் என்கிற கட்சியை திரு பகவான்தாஸ் புனரமைத்தார். அவரே அம்பேத்கர் மிஷனரியையும் ஆரம்பித்தார். நாடெங்கிலும் உள்ள தலித்துகளை இனைக்க ஒருங்கினைந்த குடியரசுக்கட்சியை உருவாக்கினார்.

பிரகாஷ்ராவ் அம்பேத்கர் குடியரசுக்கட்சி (பிரகாஷ்) என்கிற கட்சியை ஆரம்பித்துப் பார்த்தார் அவர் பிற்படுத்தப்பட்டவர்களை அந்தக்கட்சியில் இணைக்கிற முயற்சியில் இறங்கினார்.

1980 ல் கன்ஷிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பகுஜன் சமாஜ்வாதிக்கட்சி 1990 தேர்தலில் இரண்டு பாராளுமன்ற இடங்களையும், 1993 ல் நடந்த உபி சட்டசபையில் முலாயம் சிங் யாதவுடன் சேர்ந்து 67 இடங்களைப்பிடித்தது. பின்னர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியமைத்து இந்தியாவின் முதல் தலித் முதல்வராக மாயவதி அமர்ந்ததும் அதன் பிறகான அரசியல் நாடகங்களும் நாடறிந்தவை.

கலக இயக்கங்களும், கலக இலக்கியங்களும்.
--------------------------------------------------------------

இந்தியாவில் தலித்துகளின் வரலாறு இரண்டு நிகழ்சிகளை சொல்லாமல் கடக்கமுடியாது. ஒன்று 1956 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான மதமாற்றம். மற்றொன்று 1981 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் மீனாட்சிபுரம் எனும் கிராமத்தில் 220 இந்து தலித்துகள் இஸ்லாத்தைத்தழுவிய நிகழ்வு. தலித்துகளுக்கெதிரான வன்முறைக்கலவரங்கள் எண்ணிக்கையில்லாத அளவு நிகழ்திருந்தபோதும் மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கார் பெயரிட மராட்டிய அரசு முடிவெடுத்த அந்த 1978 ஆம் ஆண்டு மஹர் இனத்தவர்கள் நூற்றுக்கணக்கான உயிர்களும், வீடுகளும் நாசமானது.

நூற்றாண்டின் கண்ணீர்த் தழும்புகளால் சூழப்பட்டிருக்கிறேன் அந்த ஆறாத் தழும்புகளிலிருந்து சீழ்வடிகிறது, அது மராத்வாடாவிலிருந்தே வடிகிறது, கொடுப்பதுவும், எடுப்பதுவுமான நமது பழமை கூட குற்றுயிராகக் கிடக்கிறது, இனி நான் வாழ்வதாற்காக ஈனக் குரலெழுப்பமாட்டேன் இப்பொழுது முதல் சாவதற்காக வாழப்போகிறேன். இந்தக் கிராமம் என்னை எறிக்கிற சுடுகாடாகட்டும், வேண்டாம் இந்த நாய்ப்பிழைப்பு. கோபமும் வெறுப்புமாக மராத்வாடா கலவரத்தைப் வெப்பத்தோடு பதிவு செய்கிறார் "மீனா காஜ்பியே " தலித் இலக்கியங்கள் கரடுமுரடான வேகத்தோடு பதிவு செய்யப்படுகிற சொந்த வரலாறு. அதில் அவர்களே பாடமாகிறார்கள். ஆனால் வேதிய இலக்கியங்களில் அவர்கள் வெறும்படங்களாக மட்டுமே வந்துப் போகிறார்கள்.

கலப்படமற்ற உண்மையும், அது கொண்டுவரும் பெருத்த சலசலப்பும் தலித் இலக்கியத்தின் மூலக்கூறுகள். அந்த தலித் இலக்கியங்களின் முன்னோடியாகவும், பிரதானமாகவும் மராத்திய தலித் இலக்கியம் பங்கு வகிக்கிறது.

1992 ல் ஆன்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட "விஷம் தடவிய ரொட்டி" என்கிற அர்ஜுன் தாங்லேயின் தன்வரலாறும். முல்க்ராஜ் ஆனந்தும், எலினார் ஜெலியட்டும் தொகுத்த தலித் இலக்கிய வரலாறு என்கிற நூலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிஜ வாழ்க்கையின் அவலங்களையும், அவர்களின் அகப்போராட்டங்களையும் இணைத்துப் பதிவு செய்கிறது.

அவர்கள் எங்களுக்கு நன்பர்களாயிருந்தபோது எங்கள் கழுத்தில் சாணிக்கலயம் தொங்கியது, எங்கள் பிருஷ்டத்தில் பெருக்குமார் தொங்கியது, அவர்களது தெருக்களைச்சுற்றியது எங்கள் குரல் அம்மா, தாயே பிச்சை, அம்மா தாயே பிச்சை எங்கள் குரலுக்கு திறந்தது அவர்களின் கதவு.

கிரீடங்களை மாற்றுகிற வேர்கள் தெரிகிறது,
காக்கையும், கழுகும், பருந்தும் நாயும் ஓநாயும்
இப்போதெங்கள் உற்ற நண்பர்கள் உயர் தெருக்கதவுகள்
இனித்திறக்காது உரக்கச் சொல்லுங்கள் புரட்சி வெல்லட்டும்
சொல்லுங்கள் வெற்றி நிச்சயம் கொளுத்து,
கொளுத்து பழமையை உடைக்கிறவர்களைக் கொளுத்து.

ஒடுக்கப்பட்டவர்களின் மீரல்கள் பெரும் சேதத்தோடு முன்னேறுகிறது எனும் ஆதங்கத்தோடு தீப்பற்றவைக்கிற அர்ஜுன் தாங்லேயின் கவிதை.

உயர்ந்த உங்களின் வீடுகள்,
உங்கள் சூரியன், வயல்கள், வசதி
எதையும் நான் யாசிக்கவில்லை
உங்களின் சொந்தம் சொத்து
மனைவி மக்கள் எதுவும் எனக்குவேண்டாம்
உங்களின் கடவுள், அவனது கருணை
ஜாதியச் செருக்கு, ஜபர்தஸ்து
எல்லாவற்றையும் நான் கேட்கவில்லை
எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு அடயாளம்
மனித அடயாளம்.

என்று கோஷம் எழுப்புகிறது ''ஷரன் குமார் லிம்லேயின் '' கவிதை.

எல்லாவற்றிலும் சாணிப்பாலின் நாற்றம் குடிகொண்டிருக்கிறது, வியர்வையும் ரத்தமும் தோய்த்து எழுதப்பட்ட சுய வரலாறுகளான தலித் இலக்கியங்களுக்கான. விதை 1948 ல் அம்பேத்கர் எழுதி வெளியிட்ட "தீண்டத்தகாதவர்கள்" எனும் நூலில் இருந்து முளைக்கிறது. அதில் இரண்டு கேள்விகளை முன்வைக்கிறார், தீண்டத்தகாதவர்கள் யார், ஏன் அப்படி ஆனார்கள் என்கிற ஆதிக்கேள்விக்கான பதிலாக இந்தியத் தொண்ம சமூகங்களின் மூன்று பிரிவுகள் குறித்து பேசுகிறார். குற்றப்பரம்பரை மலைஜாதியினர்.ஆதி மலைஜாதியினர், மற்றும் தீண்டத்தகாதவர்கள்.

உயிர்வாழ்தலுக்காக குற்றம் புரிவதை தொழிலாக ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டம். அதே உயிர்வாழ்தலுக்காக கற்கால மனிதர்களாக நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டிகளாக ஒருகூட்டம். ஜீவராசிகளின் உற்பத்திக் காரியமான உடலுறவு மறுக்கப்பட்டவர்களும், வெறும் தீண்டல் கூட பாவம் அசுத்தம் என ஒதுக்கப்பட்ட கடைசிக்கூட்டம். என்று ஒடுக்கப்பட்டவர்களைப் பட்டியலிடுகிறார் அம்பேத்கர்.

அதே போல 1985 ல் DP. தாஸ் எழுதி வெளியிட்ட தீண்டத்தகாதவர்களின் வரலாறு, முழுக்க ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரையும், வேதனையையும் பதிவு செய்திருக்கிறது. ஜேம்ஸ் மெஸ்ஸேயின் '' வேர்கள் '' கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களைப் பறிகொடுத்த வரலாற்றைப் பற்றிப் பேசுகிறது. இந்தச் சமூகக் கொடுமையும் பிரிவும் பாதியில் வந்தது என்பதை ''ரூட்ஸ்'' தெளிவாக்குகிறது. எனவே தொலைத்த இடத்தில் தேடுகிறபோதுதான் அடயாளம் மீட்டெடுக்கப்படும் என்கிற ஆழ்ந்த கருத்துக்கொண்டது மெஸ்ஸேயின் '' ரூட்ஸ் ''.

புனையப்பட்ட பொய்கள், மிகை வர்ணனனைகள், அழகாராதனைகள், மேலோட்டமான வாழ்க்கை, அரிதார முகங்கள் மட்டுமே இலக்கியங்கள் என ஒரு கூட்டம் எல்லாவற்றையும் போலவே இலக்கியத்தையும் மூக்கணாங்கயிற்றினால் கட்டுப்படுத்தியிருக்கிறது.

அவலமும் வேதனையும் நிறைந்த நிஜம் வரலாகிறபோதுதான் உண்மையான விடுதலை சாத்தியமாகும்.

வட மாநிலங்கள் முழுவதிலும் செழித்துக் கொழித்துக் கொண்டிருக்கிற தீண்டாமையெனும் விஷச்செடியின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் தென்னகத்தில் குறைச்சலாக இருப்பதன் காரணம் அதன் வறண்ட நிலப்பரப்பின் தன்மையிலிருந்து இருக்கலாம். காவிரிப் படுகை தவிர்த்த ஏனைய மானாவாரிப் பகுதிகளில் பஞ்சமர்களும், சூத்திரர்களுமே திரள்களாக வாழ்ந்து வளர்ந்ததும், ஆரிய, முகலாயப்பேரரசுகள் கோதாவரி கிருஷ்னா நதிக்கரையோடு அவர்களது ஆளுகையை நிறுத்திக் கொண்டதும் கூடக்காரணமாக இருக்கலாம்.

எனினும் ஜேம்ஸ் மெஸ்ஸே தென்னிந்திய தலித்துகள் குறித்து அதிகம் குறிப்பிடவில்லை. ஆனால் அயோத்திதாசர் தொடங்கி நாளை எழுதப்போகும் புதிய தலித் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கலகக்காரர்கள் என ஒரு பெரும் பட்டியல் கிடக்கிறது அதைத் தேடித் திரட்டினால் தமிழ் தலித்துகளின் வரலாறு உருவாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com