Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
ஆசிய பாணி உற்பத்தி முறை: மாற்றத்தை வேண்டிக் கிடக்கும் தேக்கநிலை சமுதாயம்

சு.ஜெகஜீவன்ராம்

நமது சமகால இந்திய சமுதாயம் பல்வேறு வகையில் குழப்பங்களும் பூசல்களும் நிறைந்ததாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சாதி, மதம் ஆகிய அடிப்படைகளிலேயே பெரும்பாலான குழப்பங்களும் சச்சரவுகளும் நிலவுகின்றன. தற்போதைய இந்திய அரசியல் அரங்கில், விஞ்ஞானவளர்ச்சி, உலகமயமாக்கல் என்ற அடிப்படைகளில் திட்டங்கள் முன்வைக்கப் பட்டாலும், இவற்றிற்கான அரசியல் அணிதிரட்டல்களுக்கு, பழைய மதசித்தாந்தங்களும் சாதிய பிரிவினைவாதங்களுமே பின்னணியாக இருந்து வருகின்றன.இவ்வாறு அணிதிரட்டப்படும் போக்கில்தான் தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகிக்கொண்டு வருகிறது. இந்திய சமுதாயத்தின் யதார்த்தநிலையை எடுத்துக் கொண்டால், பழைமைவாத அடிப்படைவாத கருத்துக்களுக்கும் அவற்றின் நிறுவனங்களுக்கும், பொருத்தமான, உறுதியான களமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரளினர் கிராமப்புறங்களிலேயே வசித்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். சாதிப்பாகுபாடுகளுக்குட்பட்ட சமூகப் பிரிவுகளாகவே நெடுங் காலமாய் இவர்கள் குறுகிக்கிடக்கின்றனர். இன்றளவும் ஊர் _ சேரி என்ற கிராமசமுதாய அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெருத்த மாறுதலின்றி நீடித்து நிலவி வருகிறது. பழங்குடித்தன்மையிலான மதநம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் யாவும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்றதொரு வாழ்நிலையில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் முடக்கிவைக்கப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்த நவீனயுகத்திலும் கூட விஞ்ஞான தத்துவங்களுக்குப் பதிலாக பழைய கருத்துமுதல்வாத தத்துவங்கள் பலத்துடன் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு மக்களை உண்மைக்கு எதிராக அணிதிரட்டுவதும் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஆசியக் கண்டத்தின் பலபகுதிகளில் ஏறக்குறைய இதே நிலையைத்தான் நீடிக்கிறது. மதஅடிப்படைவாதம் _ பழைமைவாதம் சுரண்டல் அதை மூடிமறைக்க பயன்படும் தீவிரவாதம் ஆகியவற்றின் களமாக ஆசிய நாடுகளே காட்சியளிக்கின்றன. ஐரோப்பிய அமெரிக்க மூலதன ஆதிக்கமே ஆசியாவில் ஏற்படும் பெரும்பாலான பதட்டநிலைமைகளுக்குச் சாசனமாக இருந்து வருகிறது.

மனித நாகரீகத்தின் தொட்டில்களாக விளங்கிய ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா காலப்போக்கில் ஐரோப்பிய நாகரீகத்தின் முன் அடிபணிந்து போனதும் அவற்றின் காலனியாதிக்கச் சுரண்டலுக்கு இரையாகிப் போனதும் எதனடிப்படையில் நிகழ்ந்தன என்பதே இங்கு மிகவும் முக்கியமானதாகும். உலக நாகரீகத்தின் வளர்ச்சி ஓட்டத்தில் ஆசிய சமுதாயம் ஒரு கட்டத்தில் பின்தங்கிப்போனது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

நம் நாட்டை எடுத்துக்கொண்டால் வளர்ந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடனும், புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட சோசலிச நாடுகளுடனும் ஒப்பிடுகையில் அவற்றிற்கும் இந்தியாவுக்குமிடையே பாரதூரமான ஏற்றத்தாழ்வு நிலவுவது எளிதில் ஒப்புக் கொள்கிற உண்மையாகவே இருக்கிறது. ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட அண்டை நாடாகிய சீனா சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் அடைந்த வேகமான வளர்ச்சியின் மூலம் ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்காவை விஞ்சும் நிலையில் இருந்து வருகிறது. சோசலிசப் புரட்சியினால் ஆசியப் பொதுத்தன்மை யாகிய தேக்கநிலையை உடைத்துக்கொண்டு வெளி யேறி எல்லா நிலைகளிலும் மக்கள் சீனம் முன்னேறி யுள்ள நிலையில், இந்தியாவும் புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை அடைவது குறித்துத் தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சி நீக்கப்பட்டதற்குப் பின்னரும் இந்தியாவின் சமூகப் பொருளாதாரம் தனது தேக்க நிலையை முற்றிலும் உடைத்தெறிவதற்கு மாறாக தேக்கத்தினூடாகவே சிறிது வளர்ச்சியைக் கண்டது. 1950லிருந்து தாராளமயமாக்கல் தொடங்கும் காலம் வரையிலான இந்திய முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியானது தேங்கித் தேங்கி மெதுவாகவே நடை பெற்று வந்துள்ளது. இத்தைகய மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சியானது ‘இந்து வளர்ச்சி விகிதம்’ Hindu Rate of Growth (3.5%) என்று குணங் குறிக்கப்பட்டது.

இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி புள்ளிவிகிதக் கணக்கில் அதிகரித்திருந்தாலும், நாட்டின் எல்லா மக்கள் திரளையும் இணைத்துக்கொண்டு செல்லும் வளர்ச்சியாக இது இருக்கவில்லை. சிலரின் கைகளில் செல்வத்தைக் குவிக்கும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் இந்தவளர்ச்சி ஏற்பட்ட விதமானது. ஐரோப்பிய முதலாளித்துவ வளர்ச்சித் தன்மையிலிருந்து மாறுபாட்டதாகும். நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை யும் அதனுடைய சமுதாய அமைப்பின் எல்லாவித பிற்போக்குத்தனங்களையும் அழித்து நிர்மூலமாக்கி அதன் சாம்பலின் மீதே ஐரோப்பிய முதலாளித்துவம் தன்னை நிறுவிக்கொண்டது. இந்திய (ஆசிய) முதலாளித்துவமோ, நிலப்பிரபுத்துவத்தின் பிற்போக்கு அம்சங்களை தன்னுடைய ஏவல் பிசாசுகளாக வைத்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. இதனால், அடிப்படையிலான மாறுதல் என்பதற்குப் பதிலாக மேல் நிலையிலான வளர்ச்சி மட்டும் ஈடேறியிருக்கிறது. உற்பத்தியமைப்பில் புரட்சிகரமான மாறுதல் ஏற்படும் போதே அடிப்படையான சமுதாய மாற்றம் சாத்தியப்படும்.

இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் பரவலும் உற்பத்தி மூலதன வளர்ச்சியினடிப்படை யிலின்றி அந்தரத்தில் நிர்மாணிக்கப்படும் ‘நிதி மூலதனத்தின்’ வளர்ச்சியை மையப்படுத்தியே சென்று கொண்டிருக்கிறது. இவ்விதமான பொருளாதார வளர்ச்சி நாட்டின் உழைப்பாளி மக்களை வாழ் நிலைமாற்றம் அடையச் செய்யும் திராணியற்றதாக இருக்கிறது. தொடர்ந்து அவர்களைப் பின்தங்கிய நிலையிலேயே முடக்கியும் வைத்திருக்கிறது. நமது நாட்டின் பெரும்பகுதி மக்கள் சமூகமாகிய உழைக்கும் வர்க்கத்தின் சார்பெடுத்துச் சிந்திக்கும்போதுதான் அவர்களுடைய பின்தங்கிய நிலைமை பற்றிய உண்மையை ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொள்ள முடியும். அவ்வாறு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்தான், இந்தப் பின்தங்கிய நிலையிலிருந்து உழைக்கும் ஏழை எளிய மக்களை மீட்டெடுத்து சமுதாய மாற்றம் காணச் செய்ய முடியும்.

சமுதாய மாற்றம் என்ற இந்த ஒரே நோக்கத்திற் காகத்தான் நமது நீண்டகாலத் தேக்க நிலையைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமான தெளிவு அவசியப்படுகிறது. இந்திய சமுதாயத்தை அக்கறையோடு கவனித்து வந்த சிந்தனையாளர்கள் அதன் நீண்டகால உறக்கநிலையைக் குறித்து தங்களின் கருத்துக்களில் நேர்மையோடு வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.

“ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?”

-என்ற மகாகவி பாரதியாரின் கவிதைவரிகள் சுதந்திரத் திற்கு முந்தைய இந்திய சமுதாயத்தின் நெடிய தேக்க நிலையை உணர்ந்து வெளிப்படுத்துவதாய் உள்ளன. இதே காலத்தில் நேரு போன்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

“இன்னும் காணப்படும் மூடநம்பிக்கைகளும் காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களும் வறுமையும் சேர்ந்து நம்மை வெட்கித் தலைகுனியச் செய்கின்றன. பாரம்பரியம் என்ற பெயரில் அதன்மீது படிந்துவிட்ட பலவற்றை சுரண்டி எறிய வேண்டியுள்ளது. பல்துறை களில் வளர்ச்சியைத்தந்த ஆராய்ச்சி மனப்பாங்கும் பகுத்தறிந்து உணர்ந்துகொள்ளும் தன்மையும் போய்க் கடந்தகால வழக்கங்களைக் கண்மூடித்தனமாகப் பின் பற்றும் மனப்பாங்கு உருவாயிற்று. கடந்தகால பிரமை களில் ஊர்ந்து நெளிகின்ற சோம்பேறித்தனம் தொற்றிக் கொண்டது. பழம்பெருமை எனும் மயக்கத்தில் ஆடத்தொடங்கிற்று. இப்படியொரு மனப்பான்மையில் இருக்கும் நாடு பின்தங்கிப் போவதில் வியப்பில்லை'' என்று இந்தியாவின் நீண்ட தேக்கநிலையையும் அதன் காரணங்களையும் தான் கண்டுணர்ந்த வகையில் நேரு விவரித்தார். இவ்வாறிருக்க இவர்களுக்கு முன்னரே, உலக நிலைமைகளைக் கண்டு விவரிப்பதோடு நில்லாமல் அந்நிலைமைகளை உழைக்கும் மக்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தைக் கொண்டிருந்த கார்ல் மார்க்சும் இந்தியாவின் தேக்கநிலைபற்றி தானறிந்த கருத்துக் களையும் தனது கண்ணோட்டத்தையும் வெளியிட்டார்.

ஆசிய பாணி உற்பத்திமுறை கண்ணோட்டம் அதாவது, வலியுறுத்த முனைவது யாதெனில், மார்க்ஸ் இந்திய வரலாற்றை அணுகியதும், மார்க்சிய அடிப்படையில் இந்திய வரலாற்றை நாம் அணுகுவதும், அதை விஞ்ஞானபூர்வமாக விவரிப்பதோடு மட்டுமின்றி புரட்சிகரமாக அதை மாற்றிக் காட்டுவதுமாகவும் இருக்க வேண்டும். இக்கருத்தை அளவுகோலாகக் கொண்டே மார்க்சின் இந்தியா குறித்த கண்ணோட்டம் மீதான விமர்சனங்களை எடை போட வேண்டியிருக்கிறது.

மார்க்ஸ் வெளியிட்ட ஆசியபாணி உற்பத்திமுறை (தேக்கநிலை சமுதாய அமைப்பு) கண்ணோட்டத்தின் பொருத்தப்பாடு குறித்து உலகளாவிய அளவில் பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளன. 1970கள் முதற் கொண்டு 1980 தொடக்கம்வரை இந்தியாவிலும் இவ்விவாதங்கள் பரவலாக நடைபெற்றன. தற்போது ஏதேனும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே இதுபற்றிப் பேசப்படுகிறது. இந்தியாவின் முன்னணி மார்க்சிய வாதியாக இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் இந்திய வரலாற்றில் மார்க்சின் தேக்கநிலை சமுதாயக் கண்ணோட்டத்தை உறுதியாகப் பின்பற்றி இந்திய சமுதாயப் போக்கை விளக்கியிருக்கிறார். இதர இந்திய மார்க்சிய வரலாற்றறிஞர்களைப் பொருத்தவரை, மார்க்ஸ் தெரிவித்த கருத்துக்களின் முழுமையையும் பொதுமையையும் முக்கியப்படுத்தாமல், அதில் ஏதாவ தொரு அம்சத்தை எடுத்துக்கொண்டு உடன்படுவதும் முரண்படுவதுமான போக்கில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்விவாதங்களைத் தொகுத்து மறுஆய்வுக்குட்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.

மார்க்சின் ஆசியபாணி உற்பத்திமுறை கோட்பாடு, பொதுவாக ஆசிய சமூக வளர்ச்சியின் தன்மை பற்றியதாகும். எனினும் இந்தியாவுடனேயே மார்க்ஸ் அதிக அளவில் தொடர்புபடுத்தனார். இந்தியா முழுவதுமான சமூக பொருளாதார வளர்ச்சியின் தன்மையை ஆய்ந்து வெளிப்படுத்த இக்கண்ணோட்டம் பயன்படுவதாகும்.

தமிழக வரலாற்றை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வரலாற்றை எழுதும்போதும் கூட சில கருத்துக்களைச் சொல்வதெனில், காலனியச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்திய ஒருசில மாற்றங்களையும், சுதந்திர இந்தியாவில் உண்டான மாற்றங்களையும் வைத்துக்கொண்டு பார்த்தாலும்கூட இன்றளவும், மேலைய நாடுகளுக்கும் கீழைநாடாகிய இந்தியாவுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு புதிய நிலைமைகளுக்கு ஏற்ப நீடிக்கத்தான் செய்கிறது. இந்நிலைமையை ஐயமின்றி உரிய முறையில் விளங்கிக் கொள்வதற்கு மேலதிகமான ஆய்வுகள் இன்று அவசியப்படுகின்றன.

சு.ஜெகஜீவன்ராம், விரிவுரையாளர், பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி - காஞ்சிபுரம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com