Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் 2005
இலக்கம் 4, பிச்சிப்பிள்ளைத் தெருவிலிருந்து...

பிரளயனுடன் ஒரு நேர்காணல்


III

பார்த்திபராஜா: ஏதோவொரு வகையில் அறிவொளி இயக்கம் அரசாங்கத் திட்டம்தானே. நோக்கம் வேறாக இருந்தாலும் அரசாங்க திட்டமாக அது மாறியதால் வீதி நாடகம் நீர்த்துப் போவதற்கான தொடக்கம் அறிவொளி இயக்கத்தில் இருப்பதாக சொல்லமுடியுமா?

பிரளயன்: அறிவொளி இயக்கம் அரசாங்கத் திட்டமாக மாறல. அது அரசாங்கத் திட்டமாகவேதான் ஆரம்பித்தது.மக்களுக்கு கல்வி அறிவு தரணும்கிற உந்துதலில் வரலை. சர்வதேச அரங்கில் தன்னை வளர்ந்த நாடாக காட்டிக்கொள்ள நாட்டின் எழுத்தறிவுசதவீதம் இவ்வளவு, பிரசவகாலத்தில் தாய்மார்கள் இறப்புவிகிதம் இவ்வளவு, பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் எத்தனை உயிரோடு இருக்கிறது என்பது போன்ற சர்வதேச அளவீடுகள்படி இந்தியாவும் தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறது. இம்மாதிரியான சமூக அடிப்படை அறிகுறிகளை உயர்த்துவதற்கு உலகவங்கி நிதி இருக்கு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவில் வயதுவந்தோருக்கு எழுத்தறிவு தருவதற்கு அறிவொளி இயக்கம் வருகிறது. அரசு மட்டும் அதை தனியாக செய்யமுடியாது. மக்கள் அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள், அறிவியல் இயக்கம் எல்லாம் சேர்ந்து செய்தால்தான் இது சாத்தியம். இதற்காக அரசு தேசிய எழுத்தறிவு இயக்கம் (National Literacy Mission) என்ற அமைப்பை உருவாக்குது.

அறிவியல் இயக்கங்கள் இணைந்து பாரத் க்யான் விக்யான் சமிதி( ஙிநிக்ஷ¢ஷி) என்ற அமைப்பை உருவாக்குகின்றன. தேசிய எழுத்தறிவு இயக்கத்தில் BGVSம் ஒரு அங்கம். முறைசாரா கல்வி அல்லது வயதுவந்தோர் கல்வியை வருடம் முழுவதும் சில துறைகள் செய்துகொண்டிருப்பதை, குறிப்பிட்ட காலவரையறைக்குள் எப்படி செய்வதென்ற திட்ட வரைவோடு BGVS எர்ணாகுளம் மாவட்டத்தில் முதன்முதலாக ‘அட்சர கேரளம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி ஓராண்டுக்குள் இலக்கையும் எட்டியது. எர்ணாகுளம் மாடல் என்றழைக்கப்பட்ட இந்த முன்மாதிரியை நாட்டின் பலபகுதிகளிலும் செயல்படுத்த வந்ததுதான் எழுத்தறிவு இயக்கம். தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இதற்கு அறிவொளி இயக்கம் என்று பெயர்.

என்.ஜி.ஓக்கள் Conlflict Resolution என்பார்கள்-அதாவது முரண்பாட்டையே தீர்வாக சொல்வது. எழுத்தறிவின்மைக்கு வேராகவும் விழுதாகவும் நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்று சொல்லி மக்களிடம் பிரச்சனையை தள்ளி அவர்களையே தீர்வுகாண பொறுப்பாக்குவதுதான் இதன் நோக்கம். ஒரு மாவட்டத்தில் ஏழுலட்சம் பேருக்கு எழுத படிக்கத் தெரியாது என்று சொன்னால் பெரிதாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். அதையே தெருவாரியாக பிரித்து இந்தத்தெருவில் இருபதுபேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்- அவர்களுக்கு கற்றுத்தருவதை அதேதெருவின் படித்தவர்களின் பொறுப்பாக மாற்றிவிடுவது. இதைத்தான் எர்ணாகுளத்தில் செய்துபார்த்தார்கள். பிறகு தேசிய அளவில் BGVSசுடன் சேர்ந்து பல இடங்களில் செயல்படுத்தினார்கள். வங்காளத்தில் மிட்னாப்பூர் மாவட்டத்தில் வேறுவகையாக முயற்சித்தார்கள்.

திட்டம் அரசுடையது. ஆனால் அதனால் மக்களை திரட்டமுடியாது. அரசுசாரா அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் மக்களைத் திரட்டின. கேரளத்தில் கே.எஸ்.எஸ்.பி பொறுப்பேற்றது. ஏற்கனவே அவர்களிடமிருந்த வீதிநாடக வடிவத்தை இந்த திட்டத்திற்காக மக்களைத் திரட்டுவதற்கு பயன்படுத்தினாங்க. அதுவே எல்லா இடங்களுக்கும் போனது.

Scene from Pralayan's drama இங்கே பாண்டிச்சேரியில்தான் முதலில் அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்படுது. அந்த அனுபவங்கள் முக்கியமானவை. எழுத்தறிவு குறித்து ஏற்கனவே அரசாங்கம் வைத்திருக்கும் புள்ளிவிவரம் சரியா தப்பான்னு ஒரு கணக்கெடுப்பு நடக்குது (லிட்ரரி சென்சஸ்). பிறகு உங்க ஊர்ல எழுத்தறிவு இயக்கம் நடக்கப்போகுதுன்னு கலைப்பயணம் நடக்குது. கற்றுக்கொடுக்கும் தன்னார்வலர்கள் அடையாளம் காணப்படறாங்க. அப்படியொரு பத்துபேர் கொண்ட குழு அமைந்தால் ஒவ்வொருவரும் பத்துப்பேருக்கு கற்றுத் தருகிற ஏற்பாடு. இதுக்காக அவங்களுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பதுன்னு பயிற்சி. (இவங்களை லிட்ரசி அனிமேட்டர்ஸ்னு என்.ஜி.ஓக்களும், சோல்ஜர்ஸ்னு அறிவொளி இயக்கத்திலும் சொல்வார்கள்). இதுக்கான பாடத்திட்டம் அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டது. பெரிய நிபுணத்துவமுள்ள சமூக விஞ்ஞானிகள் பங்கேற்புடன் தயாரானது. Pre writing concept அடிப்படையில் கோடு,வட்டம், சதுரம் போடுவதில் ஆரம்பிச்சு ப, ட... எழுத கற்றுக்கொடுத்து, பிறகு பட்டா, படி, பசி என்ற சொற்களை கற்றுக் கொடுத்தார்கள்.

இந்த அனிமேட்டர்ஸ் தயாரான பிறகு வகுப்புகள் தொடங்குது. வகுப்புகள் தொடருதுதான்னு பார்க்கிறாங்க. முதல்வாரம் நாற்பதுபேர். ரெண்டுவாரம் கழிச்சி பாதியா குறையுது. பெண்கள் அவ்வளவுபேரும் ஆப்சண்ட். ஏன் இந்த நிலைமைன்னு மிகுந்த பொறுப்போடு விசாரிக்கிறாங்க. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெரும்பாலானவங்களுக்கு வெள்ளெழுத்து. ஆனா அதை சொல்ல கூச்சப்பட்டும் சொல்லத் தெரியாமலும் பல ஆண்கள் வருவதில்லை. அந்த பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏன் வரலேன்னு பெண்களிடம் கேட்டால் ‘அறிவிருக்காயா.... ஆறுமணிக்கு வச்சா வேலையெல்லாம் முடிச்சிட்டு நாங்க வீட்டு வேலை பார்க்க வேணாமா’ன்னு கேட்குறாங்க.இதுபற்றி திட்டமிடுதல் இல்லை. முறைசாரா கல்வித்திட்டத்திலேயோ, வயதுவந்தோர் கல்வித்திட்டத்திலோ இந்தப் பிரச்னையை நினைச்சே பார்க்காம சாயந்திரம் ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரைக்கும் நடத்திட்டு பெண்கள் வருவதில்லே, அவங்களை வீட்டார் அனுமதிக்கிறதில்ல, ரொம்ப பின்தங்கிய நிலைமையில பெண்கள் இருக்காங்கன்னு பத்து வருசமா ரிப்போர்ட் எழுதிக்கிட்டிருந்தான். வெள்ளெழுத்துக்காரர்களுக்கு கண்ணாடி வழங்குவது மூலமாகவும் பெண்களுக்கு உகந்த நேரத்தில் வகுப்புகளை நடத்தறது மூலமும் அறிவொளி இயக்கம் அவர்களது பங்கேற்பை அதிகரித்தது.

ஒரு ஆறுமாசத்துக்கப்புறம் Booster (எல்லாம் சும்மா வார்த்தை தானே..). உற்சாகம் போயிட்ட அனிமேட்டர்களை ஊக்கப்படுத்தறதுக்கு. மறுபடியும் ஒரு கலைப்பயணம் நடத்தி மக்கள் மத்தியில் திரும்பவும் பழைய ஈடுபாட்டை கொண்டு வருவது. இதெல்லாம் பாண்டிச்சேரியில் எல்லா மட்டத்திலும் நடந்தது.மற்ற இடங்களில் இப்படி நடந்ததான்னு சொல்லமுடியாது. அவங்கவங்களுக்கு இருந்த புரிதல்படி தான் யோசிச்சாங்க.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் வழிநடத்துகிறவர்களின் முன்முயற்சியில் அறிவொளியில் கூடுதலா சில விசயங்கள் நடந்தது. மத்த இடங்கள்ல வழக்கமான அரசுத்திட்டமா இருந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்ட அனுபவம் முக்கியமானது. அங்கே, எழுத்தறிவோடு பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுக் கொடுத்தாங்க.

அறிவொளிமாதிரி மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட அரசுத்திட்டம் வேறெதுவுமில்லை. முற்போக்காளர்கள், அறிவியல் இயக்கத்தினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் - இவர்கள் தான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களா வந்தாங்க. அவர்களுக்கெல்லாம் இது புது அனுபவம். மக்களைத் திரட்டுவதில் நமக்கு நீண்டகால அனுபவமிருக்கு. ஈராக் மீதான அமெரிக்க ஆக்ரமிப்புக்கு எதிரா கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள், கர்நாடக சங்கீத வித்வான்கள் எல்லோரும் பங்கேற்கிற ஒரு பேரணியை மெரினாவில் நடத்தினோம். அதுக்கு இவங்கள்லாம் கையெழுத்திட்ட அறிக்கையை வீடுவீடா கொடுத்து மக்களை அழைத்தோம்... என்னவெல்லாம் கேள்வி வருது பாருங்க... ‘அவன் பேரழிவு ஆயுதம் வச்சிருக்கலேன்னு நீங்க எப்படி சொல்றீங்க... இங்கிருக்கிற முஸ்லிம் தீவிரவாதிக்கு அதை கொடுத்துட்டான்னா?’. அமெரிக்காவுக்கு ஆதரவா அவ்வளவுபேர் பேசறாங்க. இஷ்டத்துக்கு கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் பொறுமையா பதில் சொல்லிட்டு வரவேண்டியிருந்தது. இப்படி ஒரு நோக்கத்துக்காக மக்களை திரட்டும்போது பல பிரந்னைகள் இருக்கு. ஆனா அறிவொளி இயக்கத்தில் மக்களைத் திரட்டும்போது எந்தக் கேள்வியும் வரலை.

‘இது நல்ல விசயம்தானுங்களே... படிக்கட்டும்ங்க... நம்ம ஊர் முன்னேறுமில்லிங்களா’என்கிறான். இரண்டுமே இயக்கம்தான்.ஆனா இந்த இயக்கத்தோட தன்மையை நாம் புரிஞ்சிக்கணும். அதுவும் அரசாங்க ஜீப்புல போறீங்க. அதுல போனா ஒரு பிரச்னையுமில்ல. ரொம்ப சுலபமாயிருக்கு. டகார்னு போறான். கூப்புட்டா பத்துபேர் வந்துடறாங்க. ஒரு பெரியவர் வீடு கொடுத்துடறார். எங்க திண்ணையில நடத்திக்கிங்க என்கிறார். இப்படி உருவான மக்கள் செல்வாக்கை பார்த்த அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய பலரும் தவறாக புரிந்துகொண்டார்கள். இதுவரை மக்களைத் திரட்ட முன்வைத்த முழக்கங்கள், வழிமுறைகள் எல்லாமே தப்போன்னு நினைச்சாங்க. சமூக மாற்றத்திற்கு மக்களைத் திரட்டுகிற இயக்கத்திற்கு மாற்றாக இதை நினைச்சாங்க. சுலபமா மக்கள் இந்த விசயத்துக்கு திரள்வதை ரொமாண்டிக்காக புரிஞ்சிக்கிட்டாங்க... ஆனா அரசு தன்னோட நிதியையும் பங்கேற்பையும் நிறுத்தினதும் அறிவொளி இயக்கம் நின்னு போச்சு.

மக்களிடம் ஏற்கனவே இருக்கிற சாதி,வர்க்க,பாலினப்பிளவுகளை-இடைவெளிகளை- ஒடுக்குமுறைகளை அப்படியே வச்சுக்கிட்டு அறிவொளியில் பொதுநோக்கத்துக்காக மக்களை திரட்டினோம். ‏இப்படி மக்களைத் திரட்டும்போது விரிசல்கள், கேள்விகள் மேலே வரும். பாப்பாப்பட்டியிலேயும் கீரிப்பட்டியிலேயும் அறிவொளி இயக்கம் நடத்தியிருக்கோம். மக்களை திரட்டியிருக்கோம். அப்ப, அங்கே இன்னிக்கிருக்கிற கேள்வியெல்லாம் வந்திருக்குமில்லையா? அந்த கேள்விகளுக்கு எப்படி முகம் கொடுத்தோம்... எதையெல்லாம் பதிவு செய்திருக்கோம்...? மக்களை திரட்டணும்கிறதுக்காக இதையெல்லாம் மூடிமறைச்சிட்டமா (camouflage பண்ணிட்டமா...?) இதையெல்லாம் பதிவு செய்வதுதான் ஒரு இயக்கமாக இருக்கமுடியும். ஆனால் அறிவொளியில் இப்படியான கேள்விகளே பல இடங்களில் கிடையாது. வந்த கேள்விகளையே நிராகரிச்சுட்டுப் போனதாகத்தான் அனுபவம். பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, மாடசாமி இயங்கின விருதுநகர் மாவட்ட அனுபவங்கள் முக்கியமானவை. வேறுபட்டவை. மற்ற இடங்களில் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியல.

மோகன்: கலைப்பயணங்கள் பங்கெடுத்தவர்களுக்குள் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?

பிரளயன்: அறிவொளி இயக்கம் கண்ட மிகப்பெரிய நிகழ்கலைஞர்களைப் பற்றி முறையாக மதிப்பிடப்படலை. ஆரம்பத்திலிருந்த வாலண்டரிசம் போயிடுச்சி. அதுக்கப்புறம் வந்தவங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பூதியமாவது கொடுக்க வேண்டியிருந்தது. அப்ப ஒவ்வொரு மாவட்டத்திலேயும் பத்துக் குழுங்கிறது சாத்தியமா...? சாத்தியமேயில்லாத போதும்,இதெல்லாம் நடந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடகக்கலையை மறந்திருந்த மக்களுக்கு நாடகக்கலையை நினைவூட்டியதன் மூலம் - பார்வையாளர் மத்தியில் மறந்துபோன சப்தங்கள், அடவுகளை நாடகங்கள் காட்சிரூபமா காட்டியதின் மூலம் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிற மாதிரியான தன்மை உருவானது. நிறையப் பெண்கள் நாடகத்தில் ஈடுபட்டாங்க. சரஸ்வதி, பூங்கோதை நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடிச்ச பெண்களெல்லாம் ஒரு வலுவான ஆளுமையுள்ளவர்களாக மாறி இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி பெரியராணி மாதிரி தமிழ்நாட்டில் ஒரு ஐம்பது அறுபது பேரை இப்படி பார்க்கிறேன் - அவங்க இப்ப நடிக்கல- வேற துறையில இருக்காங்க. நடிக்க கூப்பிட்டா வருவாங்க. சுதா, ஜாம்ஷெட்பூர்ல பிறந்து வளர்ந்தவங்க. மார்வாடிங்க பேசறமாதிரி - குழந்தைமாதிரி இழுத்து இழுத்து தமிழ் பேசுவாங்க. ஆனா சென்னை கலைக்குழுவோட ‘பெண்’ நாடகத்தில் நடித்தபிறகுதான் தமிழில் பேச முடியுங்கிற நம்பிக்கை அவங்களுக்கு வந்தது. இதெல்லாம் ஆளுமையில் நாடகம் ஏற்படுத்தும் மாற்றங்கள். அவங்ககிட்ட ஏற்பட்ட குணமாற்றங்கள்தான் ஒரு பண்பாட்டு இயக்கத்தோட முக்கியமான விளைவுகள்.

கலைப் பயணங்களில் பங்கெடுத்த பலரும் ஏற்கனவே இருந்த சமூகப்பின்னணியிலிருந்து நல்லநிலைக்கு மேல வந்திருக்காங்க. தன்னம்பிக்கை, தலைமைப்பண்பு உள்ளவங்களா மாறியிருக்காங்க. குறிப்பாக பெண்கள்... நாடகம்கிறது ஒரு செய்தியைச் சொல்றது மட்டுமில்ல. ஒரு ஆளுமையிடம் சில பண்புகளை வளர்த்துவிடுகிறது. இன்னொருவர் கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கிறது. இன்னொருவர் காலணிக்குள் காலை விடுவது- அதை நாடகம்தான் சொல்லிக் கொடுத்தது. குழுவா இயங்க கற்றுக்கொடுத்தது. கிராமத்தில் சாதிரீதியான சமூகமாக இருந்தவங்க இங்கே ஆணும் பெண்ணுமாக குழுவில் இயங்கியது, அதற்குள் எழுந்த பிரச்னைகளை தீர்த்தது- இதனால் நிறைய பேரிடம் தலைமைப்பண்புகள் வளர்ந்தது. நாடகத்தால் மக்களிடம் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுக்கு ஒரு தெம்பு வந்தது. இதெல்லாம் தெளிவாக ஒரு தளத்தில் மதிப்பிடப்படலை.

பார்த்திபராஜா: அறிவொளி இயக்கத்தை எப்படி மதிப்பிடறீங்க..?

பிரளயன்: அறிவொளி இயக்கம் ஒண்ணுமே பண்ணலன்னு நினைக்கிறதுதான் ஒரு டாமினன்ட் டிரென்ட். அரசாங்கம் முன்வைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மக்கள் அமைப்புகளோடு சேர்ந்து நடத்தப்பட்ட ஒரு முயற்சி. மக்கள் கல்வி பெறுவது தவறல்ல, அதுவொரு தேவை என்கிற ஒரு சமூக நியாயம் அதில் ஈடுபட்ட மக்கள் அமைப்புகளுக்கு இருந்தது. ஆனால் அது ஒரு இயக்கமாக மாறவேண்டுமென்றால்,மக்களை ஒரு நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டும்போது ஏற்கனவே மக்களிடமிருக்கும் இடைவெளிகளை,பிளவுகளை மூடி மறைக்கிறோமா-அவை வெளியே தெரியவந்ததா? இந்தக்கேள்விகளோடு நாம் பார்க்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகமாக எழுந்த கேள்விகளை-அனுபவங்களை மற்ற மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொள்ளுதலோ, கொண்டு செல்லுதலோ நிகழவில்லை.அதனால் அதை இயக்கமாக வரையறுப்பதில் கேள்விகள் இருக்கு. ஆனால் அறிவொளி மக்களுக்கு செய்தது- சாதித்தது நியாயம்தானே...?எனினும் நமது சமூகத்தின் ஜீவாதாரமான அடிப்படைக் கேள்விகளில் ஒன்றான ‘எல்லோருக்கும் கட்டாய ஆரம்பக்கல்வி’ என்பது குறித்து இத்தனை பெரிய மக்கள் இயக்கத்தில் அறிவொளி எழுப்பவேயில்லை.

பெரியசாமி: தமுஎச நாடகக்குழுக்கள் பற்றி...

பிரளயன்: அறிவொளி இயக்கம் வருவதற்கு முன்னாலயே தமுஎசவில் முப்பது நாற்பது நாடகக்குழுக்கள் இருந்தன. போப்பு,ஆதவன்,விநாயகம்,கீதா இவங்கள்லாம் சேர்ந்த ஒசூர் கலைக்குழு, திருவண்ணாமலையில் தீட்சண்யா கலைக்குழு, வேலூரில் புயல் கலைக்குழு... திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, பரமக்குடி, மதுரை, சேலம், நாகை, தஞ்சை, செங்கை, காஞ்சிபுரம்- இதுதவிர சென்னையில் 12 குழுக்கள். கோவில்பட்டியிலிருந்து தமிழ்ச்செல்வன், கோணங்கி, திடவை பொன்னுசாமி, உதயசங்கர், சாரதி, தாமிரன், ராமசுப்பு..., பரமக்குடியிலிருந்து கந்தர்வன், பறம்பைச் செல்வன், கே.ஏ.குணசேகரன், திருச்சியில் முகில். இவங்க எல்லாருமே கதை, கவிதை எழுதுகிறவர்கள். பெரிய அளவில் நாடகத்தில் பங்கெடுத்தாங்க. அவங்கவங்க புரிதல்ல ஆளுக்கொரு நாடகம் செய்தாங்க. இவங்களெல்லாரும் 86ல் மதுரையில் எஸ்.வி.சகஸ்கரநாமம், கோமல் சுவாமிநாதன், ராமானுஜம், எஸ்.பி.சீனிவாசன் நான்குபேரையும் கொண்டு நடத்தப்பட்ட நாடக முகாம்ல கலந்துக்கிட்டாங்க.

சிவகுமார்: வீதிநாடகத்துக்கான பட்டறையா அது?

பிரளயன்: இல்லை. வழக்கமான பாடத்திட்டம். சகஸ்கரநாமம்,சேவா ஸ்டேஜ்ல இருக்கிற சில திட்டங்களை முன்வைக்கிறார். நாடகம் பற்றி இவங்களுக்கு ஏற்கனவே இருந்த தெளிவை புரிதலை ராமானுஜமும் சீனிவாசனும் கலைத்து வேறுமாதிரி பார்க்க வைக்கிறாங்க. நாடகத்துக்கான ஒரு ஸ்கிரிப்டை இம்ப்ரவைஸ் செய்து உருவாக்குகிற இவங்ககிட்ட ஒரு பிரதியை கொடுத்து மனப்பாடம் பண்ணி அதை நடிக்கவைக்கணும்கிற நோக்கம் முகாமுக்கு இருந்தது. அதுக்காக பி.எஸ்.இராமையாவோட ‘தேரோட்டி மகன்’ல இருந்து சில காட்சிகளை கட்டாயமா மனப்பாடம் பண்ணி நடிக்க வச்சாங்க. அதாவது ஒரு wellmade theatreக்கான பயிற்சி அது.

ஆனா குழுக்களோட தேவைகள் வேறாகயிருந்தது. அதை உணர்வதில் பொறுப்பாளர்களுக்கு பெரிய இடைவெளியும் இருந்தது. பல குழுக்கள் குழம்பிட்டாங்க. ஏற்கனவே அவங்க செய்துக்கிட்டிருந்த நாடகத்தில் என்ன இருக்கு அல்லது என்னென்ன இல்லேன்னு சொல்றதுக்கு பதிலா, இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணல, இனிமேதான நாடகமே பண்ணனும்கிற பிரமையை அவங்களுக்குள்ள அந்த முகாம் உருவாக்கிடுச்சி. அதில் பங்கேற்ற பல நாடகக்குழுக்கள் முகாமுக்குப்பிறகு காணாமல் போயின.

பிறகு அறிவொளி இயக்கம் வருது.பாண்டிச்சேரியில் பத்து பன்னிரண்டு கலைக்குழுக்கள் தயாரானது. தமிழ்நாடு பூராவுமிருந்து ஏராளமான எழுத்தாளர்கள்-பெரும்பாலும் நிரந்தர வேலை- சம்பளம் என்று இருப்பவர்கள்- தன்னார்வத்தோடு ஒரு மாதம் ஒன்னரை மாதம்னு லீவ் போட்டுட்டு வந்து கலந்துக்கிட்டாங்க. அந்தளவுக்கு ஈடுபாடிருந்தது. தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டத்திலும் அறிவொளி ஆரம்பிச்சப்ப இவங்களெல்லாம் தலைவர்களா- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாயிட்டாங்க.ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பகுதிவாரியா பத்துப்பதினைந்து கலைக்குழு தேவைன்னு ஆகும்போது கிராமப்புறங்கள்ல படித்து வேலையில்லாமலிருக்கிற இளைஞர்கள் வர்றாங்க. அவங்க அநாயசமா ஒரு வாரத்துல தவில் கத்துக்கிறாங்க. அவங்களுக்கு தாளஞானம் இருக்கு. விரலை எப்படி பிடிக்கிறதுன்னு தெரிஞ்சாப் போதும். அப்ப பாண்டிச்சேரி வினாயகம் மாதிரியான தவில் கலைஞர்கள் உருவாகிறாங்க. (அரசு ஊழியர்களிலிருந்து வந்தவங்கள்ல தவில் வாசிக்கிறவங்க குறைவு) . தவில் வாசிக்க, பாட, நடிக்க கிராமங்கள்ல இருந்து புதியவர்கள் வந்த பிறகு ஏற்கனவே நாடகத்திலிருந்த எழுத்தாளர்களெல்லாம் வெளியேறிட்டாங்க. இதைத்தான் ‘தலித்கள் உள்ளே வந்துட்டாங்க, அக்ரஹாரத்து ஆளுங்க வெளியே போயிட்டாங்க’ன்னு நான் சொன்னேன். அதாவது Performing tradition - Oral tradition (நிகழ் கலைஞர்கள்) என்பது தலித்தாகவும் Textual tradition - எழுத்தாளர்களை அக்ரஹாரமாகவும் சொன்னேன். அப்படியொரு பார்வை தமுஎசவுக்குள் இல்லை. ஆனா என்னோட கருத்து அது. ஏன் எழுத்தாளர்கள் வெளியே போனாங்கன்னு யாரும் விவாதிக்கவேயில்ல. ஏன்னா வெளியே போன எழுத்தாளர்கள் எல்லாருமே தான் நாடகக்காரன் இல்லேன்னு நம்பறான்.

ஒரு நாடகப் பிரதிக்கு நாடகாசிரியன் தேவை. நாடகம்கிறது கூட்டுமுயற்சின்னா பத்துப்பேர் உட்கார்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கித் தின்கிற விசயமல்ல. பத்துப்பேருடைய கற்பனைக்கும் இடம் இருக்கணும். அவங்கள்ல நாலுபேர் யோசிக்காம சும்மாகூட இருக்கலாம். ஆனால் ஒரு பிரதி அங்கு உருவாகுது. நாடகாசிரியன் இருக்கிறான். இயக்குனன் இருக்கிறான். இந்த விசயம் புரியாம நாடகாசிரியனுக்கு மரியாதை இருக்காது- முகம் தெரியாது- கூட்டு உழைப்புன்னு சொல்லிடுவாங்கன்ற பயத்தில பல எழுத்தாளர்கள் நாடகத்தை விட்டுப் போயிட்டாங்க. எஞ்சி இருந்தவங்க எல்லாம் தலைவர்களாத்தான் இருந்தாங்க. வேல ராமமூர்த்தி, காளீஸ்வரன், முகில் இவர்கள் மட்டும் தான் நாடகத்தில நீடிச்சவங்க. பிறகு அவர்களும் நிறுத்திட்டாங்க.

முந்தைய பகுதிதொடர்ச்சி...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com