Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

பந்து

மலையாளச் சிறுகதை: கிரேஸி / தமிழில்: உதயசங்கர்
.

கர்த்தரே,

இனி அம்மாவிடம் என்ன சொல்லுவேன். இப்போது தோன்றுகிறது எதுவும் வேண்டாம் என்று. ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொன்று செய்யும் போதும் அது எப்படிப் போய்முடியும் என்று முன்னாலேயே கணிக்க முடியுமோ. என்னுடைய சுய விருப்பத்தினால்தான் செய்தேன் என்பது சத்தியம். ஆனால் அம்மாவுக்கு மனம் சமாதானம் ஆகாது.

பாவம் அம்மா. கடலலைகளில் அலைந்து மிதக்கிற கப்பல் வேகத்துடன் பாய்ந்து எங்கோ மறைந்தபோது அம்மா அநாதையாகிவிட்டாள். அவளுக்குத் துணை மூன்று வயதான ஒரேயொரு பெண் குழந்தை மட்டும்தான். அம்மா, கர்த்தர், மகள் இந்த முக்கோணத்துக்குள் தான் வாழ்க்கை. ப்ளாட்டில் தனியான வாழ்க்கையில் ஒரேயொரு கூட்டாளி குழந்தை யேசு மட்டுந்தான். போட்டோவில் கன்னிமேரியின் இடுப்பிலிருந்து குதித்திறங்கிய குழந்தை யேசுவுடன் விளையாடுவதற்கு சேர்ந்து கொள்வார்கள். கர்த்தருக்கு வயதானபோது அவர் சிலுவையில் ஏறிப் போய்விட்டார். உலகத்தாருடைய பாவங்களையெல்லாம் சுமந்து வலித்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தரால் பால்யகால ரகசியங்களுக்குள் பிரயாணிக்க முடியவில்லை. ஆனாலும் அவ்வப்போது கருணை நிறைந்த புன்சிரிப்போடு ஓர் ஒளி வந்து கையைப் பிடித்துக் கொண்டிருந்தது.

அம்மாவிடம் பகிர்ந்துகொள்ளாத ரகசியங்கள் என்றுஎதுவும் கிடையாது. ஜோயியை அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படியென்று விவரமாக அம்மாவிடம் சொல்லிவிட்டேன். ஒரு யுத்தக் குதிரையைப்போல ஜோயி கால்பந்தின் பின்னால் பாய்ந்தோடுகிற கோட்டுச் சித்திரத்தைப் பார்த்த அம்மா கண்களில் நீர் வரும்வரை சிரித்தாள். உண்மையில் என் கண்கள் ஜோயியின் தசைகள் துடிக்கும் தொடைகளில் நிலைத்தன. கண்கள் வலித்து திரும்பியபோது கேரியங் அறிமுகமானான். ஜோயியின் ஸ்மார்ட்னஸ் முழுவதும் தொடைகளில்தான் தெரியுமா என்று சொல்லியவன் யுத்தக் குதிரையை ஒரு சாதாரண முயல் குட்டியாக்கியதைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். சந்தோஷ் டிராபிக்காக விளையாடுகிற ஜோயியைப் பார்க்க அம்மாவும் வந்திருந் தாள். மைதானத்தில் பாய்ந்து குதித்தோடுகிற குதிரையை அம்மாவுக்கும் பிடித்துவிட்டது. அதன்பின்பு தாமதிக்கவில்லை.

ஜோயி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் திருமணத்தைக் குறித்துப் பேசினான். ஆனால் படுக்கையில் அதுவரை நான் பார்த்த ஜோயியாக அவனில்லை. பெண்ணிடம் உறவுகொள்ள புகழ்பெற்ற பதினெட்டு கலைகளை பிரயோகித்தும் கற்றுக்கொடுத்தும் எந்த பிரயோஜனமுமில்லை. ஜோயியின் ரத்தம் குளிர்ந்து போயிருந்தது. மூன்று நான்கு நாட்கள் கழிந்த பிறகு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அழகான இரவு உடைக்குள்ளே பொங்கியெழுகின்ற என் உணர்ச்சிகளைப் புறக்கணித்த ஜோயி உறக்கத்திற்குள் இறங்குகிற வழி எங்கேயென்று கண்டு பிடிப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது கீழ்ப்பாதியடைத் திருந்த ஜன்னலில் ஓசையில்லாமல் ஒரு மூக்கின் முனை பதிந்தது. அங்கேயே அப்படியே இருந்தது. பின்பு இரண்டு கண்களும், ஒருபந்தைப்போன்ற உருண்டையான முகமும் ஜன்னல் சட்டத்தின் மீது முழுவதும் தெளிவானபோது நான் கூப்பாடு போட்டேன். அய்யோ... ஜோயி... அங்கே பாத்தீங்களா, யாரோ எட்டிப் பார்க்கிறாங்க.

என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். துள்ளியெழுந்த ஜோயி ஒரு கெட்டவார்த்தையை முன்னால் அனுப்பிக்கொண்டே குதித்துப் பாய்ந்து அவனைப் பிடித்து இரண்டு அடி அடித்திருப்பான் என்றுதானே, ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. ஜோயி சுற்றித் திரும்பி இரவு உடையைக்களைந்தான். பின்பு விளையாட்டு மைதானத்தில் கால்விரல் முனையில் பந்து கிடைக்கும்போது புயல்போல சுழன்றாடுகிற ஜோயியாக மாறிவிட்டான். கர்த்தரே தவிடுபொடியாகிக் கிடக்கும்போது எனக்கு என்ன நடந்தது என்ற நினைவுகளும் மங்கிவிட்டன. உறக்கம் தண்ணீருக்குள் முங்குவதுபோல என்னை ஏதோ ஒரு கயிற்றில் கட்டி ஆழத்தில் இறக்கிவிட்டதும் கூடத் தெரியவில்லை. விடிந்து வெகுநேரம் ஆனபிறகே முழிப்பு வந்தது. முந்தினநாள் இரவில் நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக யோசிக்கும்போதுதான் எனக்குள் அந்தப் பேரிடி விழுந்தது. மைதானம் என்றாலும் சரி, படுக்கையில் கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி ஜோயிக்கு ரத்தம் சூடேற வேண்டுமானால் பார்வையாளர்கள் வேண்டும்.

கர்த்தரே, அதன் பிறகு கொஞ்சமும் தாமதிக்கவில்லை. ஓடிச் சென்று அம்மாவின் நெஞ்சில் விழுந்து இரைந்து பெய்கிற மழையைப் போல அழுதேன். இடையிடையில் இடியும் மின்னலும் தோன்றின. அம்மா ரொம்ப நேரத்திற்கு அமைதியாக இருந்தாள். கடைசியில் குளிர்ந்து விரைத்த உதடுகளை என் நெற்றியில் பதித்தாள். நீ போ மகளே, அம்மா ரெண்டு நாள் கழித்து அங்கு வர்றேன். அப்போது எல்லாவற்றையும் சரிபண்ணிரலாம்.

அம்மா வந்தபோது சில உபகரணங்களையும் கூடவே கொண்டு வந்தாள். பந்தோடு குதித்துப்பாய்கிற ஒரு கருத்த விளையாட்டு வீரனின் சிலை. பார்வையாளர்கள் கூட்டமாக இருக்கிற மாதிரியான நான்கு சித்திரங்கள். படுக்கையிலிருந்து நேரே பார்க்கும்போது தெரிகிறமாதிரி அந்த விளையாட்டு வீரனின் சிலையை பிரதிருஷ்டை செய்தாள். பார்வையாளர்கள் கூட்டத்தின் நான்கு படங்களை நான்கு சுவரிலும் ஒட்டி வைத்துவிட்டு பூரணமான திருப்தியோடு ஊருக்குத் திரும்பிப் போய்விட்டாள்.

ஜோயி வந்தான். பேண்டைக் கழற்றி எறிந்தான். லுங்கியை எடுக்கும்போது அம்மாவின் கைவண்ணம் அவன் கண்ணில்பட்டது. ஜோயி ஒரு நிமிடம் மூச்சடைத்து நின்றான். ஜோயியின் தொடைச் சதைகள் மடமடவென உணர்வு பெற்றதை ஆனந்தத்தோடு நான் பார்த்தேன். உணர்ச்சிகள் முட்டி மோதி கால்களில் விரைப்பு கூடியதும் என்னை அள்ளியெடுத்து கட்டிலில் ஒருபோடு. கர்த்தரே, ஆகாயத்தில் தெறித்துப் பறந்ததும் பூமியில் விழுந்தது மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. ஒருமாதம் கழிந்தபோது எனக்குள் புதியதொரு பிரபஞ்சமும் அதில் ஒரு சிறிய ஜீவனும் துடிப்பதை உணர்ந்தேன். ஆனால் குதிரைப்பாய்ச்சல் எல்லாவற்றையும் தட்டித் தகர்த்து விடுமோவென்று பயந்தேன். மறுபடியும் ஓடிச்சென்று அம்மாவின் நெஞ்சில் தலையைச் சாய்த்தேன். அம்மா நான் இனி போகமாட்டேன். இப்படியே தட்டி விளையாடிக் கொண்டிருக்க முடியாது.

அம்மா அவளை இறுக்கியணைத்து முதுகில் வருடினாள். அம்மாவின் கண்களில் மழையும் வெயிலும் மாறிமாறிப் பெய்தது. பந்து உருண்டையாக இருப்பது எதற்காக மகளே, இஷ்டம்போல உருட்டி விளையாடத்தானே. படுக்கையறையிலிருந்து பந்தை வெளியே உருட்டி விடு, பார்வையாளர்கள் கூட்டத்தைக் கலைத்து விடு.

திரும்பி வந்து சிலையை படுக்கையறையிலிருந்து மாற்றி வைத்தேன். பார்வையாளர்கள் சித்திரங்களை கிழித்தெறிந்தேன். இப்போது ஜோயி படுக்கையறைக்குள் வரும்போதே உறக்கம் இரண்டு கைகளையும் நீட்டி காத்துக் கொண்டிருக்கிறது.

கர்த்தரே இப்படியிருந்தால்
நான் என்ன செய்ய?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com