Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

கோவணத்திலே காலணா இருந்தா கோழிக்கூவ பாட்டு வருமாம்
தஞ்சை சாம்பான்
.

எலே தம்பி இந்தவருசம் பனிப் பொழிவு அதிகமாயில்லே, கொல்லக்காடு பூராவும் பூவும்பிஞ்சுமா பூத்து குலுங்குது, நாமோ சரிவர கொல்லே காட்டுக்கு போவலேன்னா ஊரான் கொட்டேயெல்லாம் கொண்டுபோய்டுவானுவோ. சடுதியா பெரியகாட்டுலே பரணியே கட்டுங்கோய்யா என்று தன் மகன்களிடம் கூறினார் வடிவேலு.

மானாவாரி நிலமான இந்த கிராமத்தில் கடலை, துவரை, வரகு போன்ற தானியங்கள் விளைந்தாலும் முன்னுரிமை முந்திரிக்கே. அய்ந்து ஏக்கர் நிலத்தில் முந்திரி மட்டுமே உள்ள பெரிய கொல்லை. கொல்லையின் மையப் பகுதியில் பெரிய மூங்கில் மரத்தை நான்குபுறமும் நட்டு மூங்கில் முள்ளை ஒருஅடி விட்டு நறுக்கின பாகம் இவர்களுக்கு. ஏணிப்படி சுமார் அம்பதடி உயரத்தில் பரண் அமைத்து அதில் இருந்துதான் காவல் காப்பார்கள். காவலரின் கண்களுக்குத் தெரியாமல் யாரும் தப்பவே முடியாது. இவர்கள் பரணில் ஏறும்போது மதியத்திற்குண்டான சாப்பாட்டையும் கொண்டு சென்றுவிடுவார்கள். கொல்லைக்காடுகளை சுற்றி பார்த்துவிட்டுயப்பா மேலே போயி படு. தூங்கிடாதே. ஒரு நாழிக்கி ஒருதடவயாவுது கொரே கொடுத்துக்கிட்டு இருடா என்றார். (நாழி-மணி) (கொரே - குரல்) காவல் காப்போரும் ஆள் வந்தாலும் வராவிட்டாலும் யாராது குள்ளே குள்ளே என்று விட்டு விட்டு சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார்கள். வழிப்போக்கர்களும் பழத்தை எடுத்து ஒரு குச்சி யில் சரமாக கோர்த்து எடுத்து செல் வார்களே தவிர யாரும் கொட்டையை களவாட மாட்டார்கள்.

இந்தக் கொல்லையின் சொந்தக்காரர் கிராமத்தின் மிகப்பெரிய நிலவுடமையாளரான வடிவேலு. கொல்லையில் உள்ளூர்காரர்கள் அத்து மீறி நுழைந்து எது செய்தாலும் இவரால் மற்றவர்களைப்போல் அதட்டி ஏதும் கேட்க முடியாது. எனவேதான் மகன்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.

கிராமத்தில் பெரிய மிராசுதாரராக இருந்தாலும் இவர் சின்ன ஆள்தான். 10 ஏருக்குண்டான காளைகளும் பசுக்களும் வெள்ளாடு செம்மறியாடுகளுமாக- மாலை மங்கியதும் இந்த கால் நடைகள் எழுப்பும் சத்தமே இவரின் செல்வச்செழிப்பை உணர்த்தும். பருவ காலத்தில் இவரின் கொல்லைக்காடுகளில் பத்துபேருக்கு மேலாவது வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வெளியூரிலிருந்து வந்த நபர் தன் மாமாவிடம் யாம் மாமா இந்த கொல்லையிலே உழவு நடக்குதே, இவரு பெரிய மிராசுதாரரா? ஒரே நேரத்துல 10 ஏர் விலா போட்டு திரும் புற அளவுக்கு பெரியபெரிய கொல்லையா இருக்கே என்றார் (விலா-ஏர்மாடு சென்று திரும்புதல்). அடே நீ ஒன்னு மாப்புள்ளே, அவென் யாரு, நம்மோ ஊரு பரியாரிவூட்டு பயே. ஏதோ கொஞ்சம் வெச்சிருக்கான். எவ்வளவு இருந்தாலும் நம்மோ கிட்டே மட்டுமருவாதியாதான் இருப்பான். நம்மோ சொல்லுறே வேலேயே தட்டாமே கேட்பான். இல்லேண்ணா வுட்டுருவோமா என மாமா தன் சாதியாதிக்கத்தை கூறி சந்தோசம் கொண்டார். (பரியாரி-நாவிதர்)

வடிவேலுக்கு பலநாள் இருந்து வந்த ஒரு மனக்குறையை தன் மகன்களிடம் கூறினார்: இவ்வளவு இருந்தும் ஒங்க மூனுபேருக்கும் மூனு வாசப்படி வெச்சி பெரிய மச்சிவூடு கட்டிப்புட்டேன்னா யாங் கவலேயே வுட்டுச்சி. அதே யங்கண்ணாலே பாத்துட்டேனா போதும். அடே யய்யா இதுக்குப் போயி வெசனப்படுறீயே. நாளெக்கே மனே பாக்கிறவரே கூட்டியாந்து மனே போட்டா போவுது. இது என்ன பெரிய காரியமா? என்றனர் மகன்கள்.

வீட்டுவேலை மும்முரமாக நடந்தது. பல கிராமங்களில் இருந்து வேம்பூ பூவரசு மரங்கள் வந்தன. நாட்டுக் கோட்டை சென்று ஓடுகளை வாங்கி வந்தார். சிலமாதங்களில் வீட்டைக் கட்டி முடித்தார். தான் நினைத்தது முடிந்ததை எண்ணி பூரிப்படைந்தார். ஏலே நமக்கெல்லாம் செரேக்கிற பரியாரி பய மச்சீவூடு கட்டுறதா... இது நமக்கெல்லாம் மானேக்கேடு ஆச்சே என்ற ஆத்திரத்தில் மேல்சாதியார் அனைவரும் சேர்ந்து வீட்டைப் பிரித்து மரம் ஓடு அனைத்தையும் ஊரிலுள்ள நாட்டுக்கோயில் (சிவன் கோயில்) முன் அடுக்கினர். நாட்டுக்கூட்டத்தில் பரியாரி வூட்டு பய வடிவேல் பெரிய மிராசுதாராக இருந்தும் தனது இடத்தில் ஓர் வீடு கட்ட இயலவில்லையே என்ற வேதனையோடு குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவரின் மரம் ஓடு அனைத்தும் கோவில் சொத்தானது. தன் பிள்ளைகளுக்கு தன் கண்முன்னால் ஒரு வீடு கட்டியும் குடிபுக முடிய வில்லையே, இவ்வளவு சொத்து இருந்தும் இது எதுக்கு ஆவுது என நினைத்து நினைத்து கூனிக் குறுகிப் போனார். கூட்டத்தில் வீட்டிற்கு ஓடு மாட்டியது குற்றம்தான் என ஏற்றுக்கொண்ட வடிவேலு தன் வாழ்நாள் முழுமையும் வீடுகட்டும் எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஏக்கத்தோடு வாழ்ந்து மறைந்து போனார். இவரின் பிள்ளைகளின் காலத்திலும் வீடு கட்ட இயலவில்லையே என்ற எண்ணத்தோடு இவர்களும் வாழ்ந்து மறைந்து போனார்கள்.

2.
ஆத்தா கொஞ்சம் நீராகாரம் கொடுத்தா வெயிலுக்கு முன்னோடி போனாதான் நாலு ஊரு சுத்தி வரலாம் என்று துரிதப்படுத்தினார். பல்லே விளக்குப்பா ரெண்டு கஞ்சி வாக்கிறேன். காலே பசியோட போயி எங்க பசியாறப்போறே என்றாள். இல்லே ஆயா, ஊரு முன்னே மாரியில்லே. இப்பே வல்லத்துக்கு யாவாரிங்கே ரெண்டு மூனு பேரு வந்துடுறாங்க. நாமோ பொறவாலே போனா அவிங்கே வந்து கிடேக்கிறதே வாங்கிடுவானுவோ. சுத்துப்பட்டு நம்மோ சொந்தம் சோலியின்னாலும், காசே கூட கொடுத்து வாங்கிருவானுவோ. முன்னாலே போனமுன்னா நம்மளேவுட்டு ஆருகிட்டேயும் கொடுக்கமாட்டாக. தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு தன்னுடைய பழய சைக்கிளை தள்ளிக் கொண்டே சென்றார். யாரும் நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் சைக்கிளில் ஏறி ஓட்டிச் செல்வார். இப்படியாக பலவருடம் வியாபாரம் செய்து நல்ல அறிமுகம் பெற்றிருந்தார்.

சிறுக சிறுக சேர்த்தப் பணத்தை கொண்டு ஒரு மச்சி வீடு கட்டும் எண்ணம் இவரிடம் மேலோங்கியிருந்தது. (மச்சி வீடு-ஓட்டு வீடு) இவர் இந்த ஊரில் முந்திரி காடுகளும் கொஞ்சம் நிலபுலனும் கொண்டவர். வீடுகட்டும் எண்ணத்தை மேல்சாதியாரிடம் கூறி உத்தரவு பெற்றுக் கொள்ளும் நோக்கோடு யாரிடம் கூறவேண்டுமோ அவரைப் போய் பார்த்து தன் விருப்பத்தை தெரிவித்தார். வியாபாரிக்கு கொல்லைக் காடுகளும் நிலபுலன்களும் இருப்பது இந்த ஊர் மேல்சாதியாருக்கு எரிச்சலையே ஏற்படுத்தினாலும், இவர் மேல்சாதி யாருக்கு கொடுக்கும் மரியாதையை மேல்சாதியார் அனைவரும் இப்படி தான் பேசி கொள்வார்கள்: ஏலே நீட்ட, மடக்க, இருந்தாலும் யாவாரி எப்படி மட்டு மருவாதியோட நடந்துக்கிறான் பாருங்கடா என தலித்துகளிடம் உதாரணம் காட்டிப் பேசுவார்கள். வியாபாரியின் நோக்கம் அறிந்த மேல் சாதியாரின் முகம் இருண்டு போனது. எங்கடா கட்டப்போறே விவரமா சொல்லுடா. அதாங்க போனவருசம் ஒரு மனேக்கட்டு வாங்கினினே அங்குனேதாங்க என்றார். எலே நாளேக்கி நம்மோ அய்யங் கோயிலிலே ஊர்க் கூட்டம் நடக்குது அங்கே வாடா பேசிக்கலாம் என்றார். அதாங்க ஒங்ககிட்ட முன்னமே சொல்லிவைக்கிறேன் என்று வியாபாரி கூறியது ஏதாகிலும் எதிர்ப்பு வந்தாலும் இவர் சமாளித்துக் கொள்வார் என்ற நினைப்பில்தான். மறுநாள் ஊர்க்கூட்டம் அய்யங்கோவிலில் நடைப்பெற்றது. கூட்டத்தில் வியாபாரியின் செய்தியே பிரதானமாக பேசப்பட்டது. பறையன் மச்சி வீடு கட்டுவதா அனுமதிக்க முடியாது என்ற ஆத்திரம் பலமாக ஒலித்தது. வாழ்வில் எவ்வளவோ சோகமான சம்பவங்கள் நடந்த போதெல்லாம் கம்பீரமாக நடந்த வியாபாரியை இச்செய்தி கூனிக் குறுகவே செய்தது.

அட அய்யனாரப்பா, அவங்க செத்தா வாந்தா எல்லாத்துக்கும் போறோம் அவெங்க வூட்டுலே ஆடுமாடு செத்தா நாங்கதான் தூக்குறோம், நல்லநா பெரிய நாள்னா அவிங்கே வூட்டுக்குத் தேவையான எல்லாத்தையும் செய்யுறோம், அவிங்க புழங்குறே குளத்துலே நாங்க பொழங்கலே, வூட்டு வாசலே கூட தாண்டுறது இல்லே, மழ வெயிலு படாமே ஒரு வூடுகூட கட்டிக்கிற முடியலியே, திருநா காலத்துலே ஒங்காலெடியிலே வந்து எல்லாத்தையும் சுத்தம் செய்யுறோம். நாங்க பறையனாச்சேன்னு ஓம் காலடிக்கு வந்தே எங்களுக்கு எந்த சோராவாறியும் செய்யலே, (சோராவாறி- எந்த கெடுதலும்) எல்லாத்தையும் பாக்குறே நீ, என்னே வூடுகட்டவுடாமே செஞ்சவிங்களுக்கு நீதான் கூலி கொடுக்கணும் என்று புலம்பிக் கிடந்தார். மறுநாள் தன் ஆற்றாமையை வெளிப்படுத்த தனக்கு வேண்டிய மேல் சாதியாரைப் பார்க்கப் போனார்.

மேல்சாதியார், யாண்டா இப்போ வந்த நீ முன்னமே என்கிட்ட கலந்துக்கப்புடாதா என்றார். அய்யா அது சமாச்சரமாதான் யாம் மனசு ஆறும் போலே தோணிச்சு அதாங்க வந்தேன் என்றார் வியாபாரி. எலே எல்லாம் எனக்குத் தெரியும். நாங்கூட, எலே யாண்டா அவிங்கே தெருவிலே ஏதோ செஞ்சிட்டு போறாங்கே... நமக்கு என்னடா அவிங்கே புள்ளக்குட்டிக மழே தண்ணிலே கிடந்தா நம்ம போயி கொடே புடிக்கவா போறோம், இல்ல பசி பட்டினியாக் கெடந்தா நாமோ படி யளக்கப் போறோமான்னு கேட்டுப் புட்டேன். இந்த, வெட பயிலுவோலாம் தாண்டிக் குதிக்கிறான்னா பென்னம்பெரிய ஆளுவளும் அதுக்கு மேலே பாயிறானுவோ என்றார். இதைக் கேட்ட வியாபாரி புதிய தெம்போடு அய்யா நாங் அம்பலத்துக்கிட்டே சொன்னது ஏதோ அல்லாத்துயும் பாத்துக்குவாருன்னுதாங்க. இப்போ நீங்க ஒர வார்த்தே சொல்லுங்கோ நாளேக்கே மனே போட்டுர்றேன் என்றார். எலே இதே முன்னமே யாரையும் கேட்காமே செஞ்சிருக்கணும். நீ போயி கேட்டுப்புட்டே. அந்த ஆளுவோளும் கட்டப்புடாதுன்னுட்டாங்க. நான் கேட்டப்போ நம்மோ ஊரு பரியாரியவே கட்டவுடலே. அவெனவிட இவன் என்ன பெரிய மிராசான்னு கேக்குறானுவோ. இந்தக் கோடெயேவுடு, அடுத்த வருசம் கட்டிக்கிடலாம். இப்போ ஏதாவது செஞ்சின்னா ஊரு முடிவே மீறிப் புட்டான்னு ஏதாவு செய்வாங்க. கொஞ்சம் பொறுமைய இருடா என்றார். வியாபாரிக்கு இது நல்லதாய் தெரியவே சரிங்க ஒங்க சொல்படியே கேக்றேங்க என்றவாறு விடை பெற்றார்.

இவர்களின் குலதெய்வத்தின் சன்னதியில் ஒரேகூட்டமாக இருந்ததை பார்த்து என்னமோ ஏதோவென்று வேகமாக நடந்து கூட்டத்தைப் பார்த்து யப்பா, என்னாங்கடா ஆச்சி என்று பதைபதைக்க கேட்டார். யாவாரி பதறாதியே, எல்லா நம்மே நன்மைக் காவதான் என்று கூட்டத்தில் உள்ளவர்கள் கூறவே சற்று சமாதானம் அடைந்தவராய் என்ன யாம் இப்படி கூடி நிக்கிறீயோ என்றார். ஒண்ணும் இல்லேய்யா நாங்கோ எல்லோ சேந்து ஒரு முடிவு எடுத்து இருக்கோம் என்றார்கள்.

எதே பத்தி என்ன முடிவு செஞ்சீங்க என்று வியாபாரி கேட்டார். கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் கூறினார், யப்பா எல்லாம் ஒன்னே பத்தி தான் பேசினோம். நாமோ ஊருலே சரிபாதி இருக்கோம். நேத்து ஊருகூட்டத்திலே நீ மச்சி வூடு கட்டப் புடாதுன்னு ஊரு கள்ளனுவோ சொல்லிட்டாக. இதே சரின்னு ஒத்துக்கிட்டோம்னா நம்மோ தலைமுறே காலத் துக்கும் ஒரு நல்ல வூடு கட்டமுடியாது. இது ஏதோ யாவரி குடும்பத்துக் காரியம் மட்டுமில்லே. நம்மோ நானூத்தி அம்பது தலக்கட்டுக்கும் இதான் கெதி. நாமோ அல்லாரும் ஒத்துமையா இருந்து யாவாரிக்கு பக்க பலமா இருக்கணும், இப்போ இவரு வூட்ட கட்டிப்புட்டோம்னா பின்னாலே பொறவாலே நம்மோ புள்ளக் குட்டியோ தல எடுத்து காசு பணம் சேத்து வூடே கட்டிக்கிவானுவோ. இதுல நாமோ சோடே போனோம்னா மச்சி வூடுங்கிற யாவுவமே நமக்கு இல்லேன்னுப் போயிடும். நாமோ சாடாபேரும் (சாடா-எல்லோரும்) ஒத்துமையா இருந்து யாவரிய பலப் படுத்தணும். ஆளும் பேருமா நின்னு இந்த வூட்டேக் கட்டி முடிக்கணும்னு ஆணுபொண்ணு அத்துனே பேரும் கோயிலு வாசலிலே நின்னு சத்தியம் பண்ணிக்கிருவோம், யாவாரி வந்துரட்டுன்னு தான் பேசிக்கிட்டு இருந்தோம். நீயும் வந்துட்டே, நீ எதுக்கும் பயப்படாதே நாளேயிலேயிருந்து வூட்டு வேலேயப் பாரு, நாங்களும் சேந்து பாக்குறோம். யோவ் பூசாரி சூடேத்தே கொளுத்துய்யா என்றார்.

கோவில் சன்னதியில் சூடம் கொளுத்தப்பட்டது. அனைவரும் குலதெய்வத்தின் முன்னிலையில் சத்தியம் செய்து கொண்டார்கள். இது கனவா அல்லது நனவா என்று மெய்மறந்து நின்ற யாவாரியின் கையைப் பிடித்து சத்தியம் வாங்கி கொண்டார்கள்.

யாவாரி தன் மடமைத்தனத்தை எண்ணி நொந்து போனார். நான் முதலிலே நம்மோ பங்காளியலேயே பாக்காமே போயிட்டமே.. நீரே அடிச்சாலும் நீரு நீரோட தானே சேரும்கிறத நெனக்கலியே என வெக்கப்பட்டார். மறுநாள் வீட்டிற்குண்டான வேலைகளை செய்ய முற்பட்டார். மனைபோடும் போதே சில மேல்சாதியர் அச்சுறுத்தல் இருந்தாலும் கல்சுவர் வைத்து கூரைவீடு கட்டுவதாக கூறிக் கொண்டார். இருந்தாலும் இவரின் சிந்தனையோட்டத்தில் பல்வேறு எண்ணங்கள் உதயமாயின. முடிவில் நாட்டுத்தலைவரை (18 கிராமங்கள்- நாடு) அணுகினார். இவர் கூறியதை அலட்டிக் கொள்ளாமல் கேட்டுவிட்டு ஓம் இடம்தான், ஓம் காசு பணம்தான், நீதான் வூடு கட்டப்போறே. ஓம் கள்ளேனுவே எதுக்கும்போது நான் ஒனக்கு சாதகமா பேசக்கூடாது. அதுக்காவ பேசாமே இருக்கலே. யாண்டா பறப்பய காசு பணம் சேத்து ஏதோ வூட்டே கட்டுறான் நிலத்தே வாங்குறான் ஒங்களுக்கு என்னா வந்துச்சின்னும் சொல்லிப் புட்டேன். ஓம் கள்ளனுவோ கேட்கல. ஒன்னே அஸ்திவாரமே பறிக்கவுட்டுருக்கமாட்டாங்க. நான்தான், காலம் கெட்டு கிடக்கு பறப்பயிலுவோ கிட்டே அடிதடி வம்பு வெச்சிறாதீங்கோ, நாளேக்கி போலிசு கேசுன்னு போயிட்டா நம்மோ நாட்டுக்கே மானக்கேடுன்னு சொல்லி அனுப்பியிருக்கேன். நீ வூடு கட்டிக்கலாமுடா. அவிங்கே ஒல கொதிக்கிற மாதிரி கொதிக்கிறானுவோ கொஞ்சம் அடங்கட்டும், பொறுத்து இரு பாத்துக்கிலாம் என்றார். இவருடைய காலமா கட்டும் இவரின் தம்பியின் காலமா கட்டும் நாட்டுத்தலைவர் என்ற பொறுப்பில் அவ்வளவாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது எந்த ஆதிக்கமும் செலுத்திடவில்லை. என்றாலும் ஒரு காரியத்தை செய்யும்முன் பத்து தடவையாவுது யோசனை செய்யனு முண்டா என்பார் எதற்கெடுத்தாலும். அடிக்கிறவனைப் பாத்து இதைச் சொல்லாமே அடிபடுற நம்மேகிட்டே யாங் சொல்லணும் என்று தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்வார்கள்.

இவருக்கு நாட்டில் நல்ல பெயரும் மரியாதையும் இருந்தாலும் இவரின் பேச்சில் நம்பிக்கை இழந்த வியாபாரி, தாழ்த்தப்பட்டோர் லீகின் தலைவரோடு (காங்கிரஸ்) மேல்சாதியாரும் தஞ்சை மாவட்டத்தில் பெரும் நிலவுடமையாளருமான காங்கிரஸ் தலைவரை சென்று பார்த்தார்கள். வீட்டின் வேலைகள் பெரும் பகுதி முடிவடைந்த நிலையில் இருந்தது. அந்த காலத்தில் பல ஆயிரங்கள் செலவு செய்து மச்சி வீடு கட்டியதன் நோக்கமே தனக்கு இருக்கும் பெயர் மாட்டுத் தோல் வியாபாரி என்பது மாறி மச்சி வீட்டுகாரர் என்ற பெயர் கிடைக்கும் என்பதுதான். காங்கிரஸ் தலைவரின் பேச்சு இவரை திடுக்கிடச் செய்தது. ஊரையும் பெயரையும் கேட்டதும், ஆமாடா இவன் இன்னார் வூட்டு பறையன் தானே. பெரியவங்க சும்மாவா சொன்னாங்கோ கோமணத்துக்குள்ள காலணா இருந்தா கோழி கூப்பிட பாட்டுவரும்னு, யாண்டா ஒங்க நாட்டுலே எத்தன கிராமத்துலே எத்தன பறயனுவோ ஓட்டு வூடு கட்டியிருக்கானுவோ எனக் கேட்டார். தாழ்த்தப்பட்டோர் லீகின் தலைவரைப் பார்த்து ஏலே நீயாவுது எடுத்து சொல்லப்புடாதா? என்ற வாறே வியாபாரியைப் பார்த்து ஏலே ஊரே எதித்து நீங்க என்னடா செய்ய முடியும். பேசாமே போயி வேலேயே பாருங்கடா என்றார்.

சிலநாட்கள் கழித்து வீட்டிற்கு ஓட்டை மாட்டியதும், அனேகமாக இப்பகுதி முழுவதிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் கட்டிய முதல் ஓட்டுவீடு இதுயென்பதால் பலகிராமங்களில் இதுவே பெரும் பேச்சாகவே இருந்தது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. இந்த சந்தோசத்தின் மீது ஒரு பேரிடியாக வந்திறங்கியது கோர்ட் சம்மன் என்ற பெயரில் வக்கீல் நோட்டீஸ். அந்த நோட்டீஸ் இப்படித்தான் பேசியது:

இவர் யாரிடம் நிலம் கிரயம் சாசனம் பெற்றாரோ அவர் இந்த நிலம் விற்கப்படவில்லை என்றும் எனது நிலத்தில் அத்துமீறி வீடு கட்டியுள்ளார் என்றும் மேற்படி வியாபாரிக்கு சாசனமோ ஒத்திக்கோ கொடுக்கவில்லை என்றும் எனது கட்சிக்காரர் கூறியுள்ளார். எனவே வியாபாரி மீது சட்டப்படியான நடவடிக்கை கோரியுள்ளார். இது சம்பந்தமான முகாந்திரம் ஏதும் இருந்தால் அதோடு நீதிமன்றத்தில் இன்ன தேதியில் ஆஜராக வேண்டும் என்றிருந்ததைப் பார்த்து பதறிப் போனார் வியாபாரி. நிலம் சம்பந்தமாக எழுதி வாங்கிய பத்திரத்தை எடுத்து பார்த்தார். நிலம் விற்றவரது சாதியைச் சேர்ந்தவர்களும், வியாபாரியின் சாதியினரும் சாட்சி கையெழுத்திட்டிருந்தனர். இவர் ஒரு வழக்கறிஞரைப் பார்த்து எதிர்மனு தாக்கல் செய்தார். ஆதிக்கசாதியினரின் தூண்டுதலின் பேரில்தான் இப்படி ஒரு வழக்கு வந்துள்ளது என்பதையும் இதற்கு யார் சூத்திரதாரி என்பதையும் புரிந்து கொண்டே எதிர் வழக்காடுவதில் கவனமாக இருந்தார். விற்கப்படாத என் இடத்தில் அத்து மீறி வீடு கட்டியுள்ளதால் அதை இடித்தோம் எனக் கூறிவிடும் மேல் சாதியாரின் திட்டம் செயல்பட ஆரம்பித்தது. அவர்கள் ஒன்றுகூடி பயங்கர ஆயுதங்களோடு சேரியை நோக்கி வந்தார்கள்.

என்ன ஏது என்று கேட்ட வர்களுக்கெல்லாம் அடி. அடிபட்ட மக்கள் முந்திரிக்காடுகளுக்குள் ஓடினர். தெருவே அல்லோலகல்லோலப் பட்டது. குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் கதறல் ஒரு போர்க் களத்தை நினைவுபடுத்தியது. மேல் சாதியினர் வீட்டை நான்கு புறமும் சூழ்ந்து கொண்டார்கள். நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த வியாபாரியின் மனைவி சாமி ஒங்கள கையெடுத்து கும்பிடுறேனுங்கோ ஏதும் செஞ்சிப்புடாதீங்கோ என்று மறித்தார். வந்தவர்கள் ஏலே என்னடா தாட்சிணே பாக்குறே, அவளே அடிச்சித் தூக்கி எறிங்கடா என்றனர். அடிபட்ட பெண் மூர்ச்சையாகிப் போனார். அனைவரும் ஒரே பக்கமாக இருந்து வீட்டை கவிழ்த்தார்கள். குருவி கட்டியக் கூட்டை குரங்கு கலைத்த கதைபோல் ஆகிப்போனது. நீதிமன்றம் சென்றிருந்த வியாபாரிக்கு தகவல் தெரிந்து ஓடி வந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். ஒருவழியாக தலித் தலைவர்களிடம் சென்று முறையிட்டார். சட்ட மன்ற உறுப்பினர் சீர்காழி மணி, பட்டுக்கோட்டை வீரமுத்து ஆகியோர் உதவியோடு போலிஸ் நடவடிக்கையில் இறங்கியது. 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் போடப்பட்டது. மேல்சாதியார் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் தன் சொந்த நிலத்தில் அத்துமீறி வீடு கட்டியதாக இருந்தது. இவர் கிரய சாசன பத்திரத்தைக் காட்டி வழக்கு நடத்தினார். இதுவரை போலிஸ் லாக்கப்பை அறியாத மேல்சாதியார் பெரும் சோதனைக்குள்ளாயினர். பெரும் பகுதியினருக்கு பிணையில்லா வழக்கு.

மேல்சாதியார் வியாபாரியை தனிமைப்படுத்த ஓர் தந்திரத்தை கை யாண்டனர். அவரவர் தங்களின் குடிப் பறையர்களை மிரட்டிப் பணிய வைத்தார்கள். அவர்களின் மூலமாகவே சமாதானம் பேச முற்பட்டார்கள். இவர்களும் தங்களின் கொல்லை காடுகளுக்கு செல்ல வேண்டுமானால் மேல்சாதியாரின் கொல்லைகளை கடந்துதான் செல்லவேண்டும். எனவே மேல்சாதியாரின் தயவு இவர்களுக்குத் தேவைபட்டது. இவர்களே வியாபாரியிடம் சமாதானம் பேச முற்பட்டார்கள். எதற்கும் மசியாத வியாபாரி கூறினார் வூடு கட்ட என்ன தூண்டியது நீங்கதான். யாங் காசு பணத்தேப் போட்டு வூடு கட்டியதே தரை மட்டமா ஆக்கிட்டாங்க. இப்போ எந்த மொவத்தே வெச்சிக் கிட்டு கேசே வாபஸ் வாங்குன்னு சொல்லுறீங்கே. யாம் சொத்தே போனாலும் சரி கடேசிவரைக்கும் கேசே நடத்திப் பார்த்துபுடுறேன் என்றார். வழக்கு நடத்த ஒவ்வோர் நிலமாக விற்கவும் முற்பட்டார்.

மேல் சாதியார் வழக்கு நடத்த மிகவும் சிரமப்பட்டார்கள். சிவன் கோயில் வராந்தாவில் நாட்டுக்கூட்டம் நடை பெற்றபோது நாட்டுத்தலைவர் ஒரு விசயத்தை தெரியப்படுத்தினார்: நான் எவ்வளவோ சொல்லியும் நீங்க யாரும் கேக்கலே. அதாண்டா ஒரு காரியத்தே செய்யும் முன் பத்து தடவேயாவுது ஓசனே பண்ணனுமுன்னு சொல்றது. சரி போவுட்டும் இவங்கே வழக்கு நடத்த செரமப்படுறது நல்லா தெரியுது. இந்த சிவன் கோயில் தோப்பு தொரவு எல்லாம் இந்த வருசம் குத்தவே பணத்தே இவிங்கே வழக்கு செலவுக்கு கொடுத்துடலாம்னு நெனக்கிறேன் நீங்க என்ன சொல்லுறீங்க என்றார். அனைவரின் சம்மதத்தோடு குத்தகைப்பணம் வழக்கு நிதியாக வழங்கப்பட்டது.

வியாபாரிக்கு சொந்த பந்தமோ எதிரியாகிப் போனது. அவர் வாங்கியிருந்த நிலத்தின் பத்திரம் உண்மையென கோர்ட் அறிவித்தது. சாதி துவேசத் தால்தான் வீடு இடிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது. இவரின் சொந்த நிலத்தில் எப்படியேனும் வீடு கட்டிக்கொள்ளலாம், அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று தீர்ப்பானது. வியாபாரி தன் சொத்தை இழந்தாலும் இந்தத் தீர்ப்பை தன் இனத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதி சந்தோசம் கொண்டார். அதே வேகத்தில் ஓட்டுவீட்டிற்கு பதிலாக மாடி வீடு கட்டி குடி புகுந்தார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கூறும்போது நான் நாலு ஊரு சுத்தி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கிட்டேன். எங்க ஆளுவோ கிணத்துத் தவளேயாட்டம் இங்கினேயே சுத்தி செக்குமாடாட்டம் ஆயிட்டானுவோ. இப்போ நாங்கெல்லாம் ஒத்துமையாதான் இருக்கோம் என்றார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com