Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

முள்

முத்துமீனாள்
.

ஒருநாள் மலைப்பக்கம் அண்ணனோடு மாடு மேய்க்க நானும் சென்றபோது காலில் கருவமுள் குத்தியது. அண்ணன் சத்தம் போட்டுவிட்டு முள்ளை பிடுங்கியெடுத்தது. ஆனால் வலி அதிகமாயிருந்தது. அம்மா கருவ கொழுந்தை வேப்ப எண்ணையில் வதக்கி காலில் வைத்துக் கட்டினார். முள் குத்திய இடத்தில் சீழ் வைத்து குழிப்புண்ணாகிவிட்டது. ஆறவேயில்லை. இரவெல்லாம் விண்விண்னென்று வலிக்கும். சரியாக நடக்க முடியாமல் காலை கெத்தி கெத்தி நடந்தேன். டாக்டரிடம் காட்டியும் மருந்து வைத்துக் கட்டியும் புண் ஆறவேயில்லை.

தனுஷ்கோடி தாத்தா பார்த்தார். தூங்குமூஞ்சி மரத்தோட பட்டையை கொண்டுவந்து நல்லா பொடிபோல நுணுக்கி அதை அந்த புண்ணில் வைத்துக் கட்டுனா ஆறிப் போயிடும் என்றார். அதுமாதிரி கட்டியதில் தொந்தரவு அதிகமாகி சலம் வடிந்தது. துர்நாற்றம் வீசியது.

தனுஷ்கோடி தாத்தாகிட்ட கேட்டப்ப, அரும்பனூர் பக்கத்தில் புதுப்பட்டின்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே தொழுநோய் அரசு மருத்துவ மறுவாழ்வு இல்லம் இருக்கு. உடனடியா அங்க போய்க் காட்டனும். இல்லன்னா கால எடுக்குறமாதிரி ஆயிடும் என்றார். அப்பா அங்க எனக்கு யாரைத் தெரியும்? என்ன செய்யறது? யாரை சிவாரிசு புடிக்கிறது. ஒண்ணுந் தெரியலையே என்று புலம்பினார். தாத்தா, அங்க எனக்கு ஒரு பங்காளி வீடு இருக்கு. அந்த வூட்டுத்தம்பி காசிலிங்கம் தான் ஊராட்சி மன்றத் தலைவரா இருக்காரு. அந்தத் தம்பியைப் பார்ப்போம். அப்புறமா மத்ததைப் பேசிக்கலாம். என்றார்.

அந்த இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவேயில்லை. அம்மாவும் தூங்கவேயில்லை. கனவுகளாய் வந்தது. ரொம்பவும் பயந்தேன். காலை வெட்டி எடுத்துவிட்டார்கள். நான் கத்தினேன். காலில் ரத்தம் வடிந்தது. யாருமே இல்லை. நான் மட்டும் தனியாக தவிக்கிறேன். அப்படியே பொழுது விடிந்துவிட்டது.

காலை ஏழுமணிக்குக் கிளம்பினோம். எனக்கு அழுகையாய் வந்தது. அம்மாதான் ஆறுதல் சொன்னாள். சாப்பாடு வைத்தாள். தலைசீவி இரட்டைச்சடை போட்டுவிட்டாள். போவதற்குமுன் எனக்கு தோழிகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொருத்தர் வீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தேன். கடைசியாக வளர்மதி வீட்டுக்கு வந்தேன். மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி அழுதாள் அவள். எனக்கும் அழுகை வந்து விட்டது. பிறகு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுத் திண்ணையில் தனுஷ்கோடி தாத்தா, அப்பா, அம்மா, சித்தி, மாமா, அத்தை எல்லோரையும் பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது. எங்கோ அனாதையாகப் போகப்போகிறோம் என்று நினைத்து தேம்பித் தேம்பி அழுதேன். என்னைப் பார்த்து அம்மாவும் சித்தியும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்கள்.
ஊரிலிருந்து ரெண்டு கி.மீ. நடந்துபோய் அழகர் கோவிலில் இறங்கி அங்கிருந்து 44ம் நம்பர் பஸ் பிடித்து அரும்பனூர் விலக்கு ஊரில் இறங்கி புதுப்பட்டிக்கு நடந்து போனோம்.

காசிலிங்கம் வீட்டுக்குப் போகும்போது பதினோரு மணியாகி விட்டது. காசி அய்யாவின் மனைவி லெட்சுமியம்மாள் எங்களை வரவேற்றார்கள். அப்போது அய்யா வீட்டிலில்லை. அவர் பக்கத்து ஊரில் ஒரு பஞ்சாயத்திற்கு போயிருக்கார். இப்ப வந்திடுவார் என்றார். சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.

பெரிய வீடு. பெரிய தூண்கள். ஒரு வரிசைக்கு மூன்று அறைகள். மொத்தம் ஆறு அறைகள் கொண்ட வீடு. சமையல் அறை தனியாக இருந்தது. தன் மகள் கல்யாணியைக் கூப்பிட்டு காப்பி போட்டுக் கொடுக்கச் சொன்னார். பையன்கள் அவங்க தாத்தா வீட்டில் தங்கிப் படிப்பதாகவும் ரெண்டு பெண்கள் மட்டும் தங்களுடன் இருப்பதாகவும் பெண்கள் படித்தது போதும் என்று படிப்பை நிறுத்திவிட்ட தாகவும் சொன்னார். பெரிய பொண்ணு பெருசாகி மூனுவருசம் ஆகுது. சின்னவ இப்பதான் ஒரு வருசம் ஆச்சு. பெரிய பையன் முருகன் அமெரிக்கன் காலேஜில் படிக்கிறான். நடுப்பையன் குமார் 12வது படிக்கிறான். கடைசிப் பையன் எட்டாவது படிக்கிறான் என்று தாத்தாவிடம் அந்த வீட்டம்மாள் பேசிக் கொண்டிருந்தார்.

கொஞ்சநேரத்தில் காசி அய்யா வந்துவிட்டார். கம்பீரமான தோற்றம். நல்ல பருமனாயிருந்தார். தாத்தாவையும் அப்பாவையும் விசாரித்து விட்டு வந்த விஷயம் பற்றிக் கேட்டார். அவருடன் சேர்ந்து எல்லோரும் சாப்பிட்டோம். சாம்பார் ரசம் கூட்டு. நல்ல சாப்பாடு. என்னால் சாப்பிட முடியவில்லை. பயமாக இருந்தது. எந்த இடத்திற்குக் கூட்டிப் போகிறார்களோ என்று கவலைப் பட்டேன். எல்லோரும் வெத்தலை பாக்கு போட்டார்கள். அப்பா போட்டுக் கொள்ளவில்லை. அவருக்கும் கவலையாக இருந்தது. தாத்தா காசி அய்யாவிடம் சொன்னார். இவரு பேரு சின்னையா. நம்ம சொந்தக்காரர். இவுரோட பொண்ணு இந்தப் புள்ளைக்கு கால்ல ஒரு புண்ணு ஆறாம இருக்கு. அதோட தொழுநோய் மாதிரி கன்னத்தில் சின்னதா ஒரு படையும் இருக்கு. அதான் தொழுநோய் இல்லத்தில் இந்தக் குழந்தையை சேக்கணும். அதுக்காகத்தான் உன்னைப் பாக்க வந்தது. அப்படியா, அந்த இடமே எங்களுதுதான். அரசாங்கத்துக்கு குறைஞ்ச விலைக்கு கொடுத்தாச்சு. அங்க நமக்கு ஒரு மரியாதை உண்டு. அதைச் சுத்திலும் நம்ம வயலுங்கதான் என்று சொல்லிக் கொண்டே எங்களுடன் கிளம்பினார்.

ஆஸ்பத்திரி கேட்டில் வாட்ச்மேன் காசி அய்யாவுக்கு வணக்கம் வைத்தார். ஆஸ்பத்திரி மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்தது. இரண்டாவது மாடியில் நிர்வாக அதிகாரி இருந்தார். அய்யா முதலில் உள்ளே சென்று விவரத்தைக் கேட்டறிந்துவிட்டு பிறகு எங்களை அழைத்தார். நிர்வாகியிடம் காசி அய்யா சொன்னார். இது நம்ம சொந்தக் காரப் பொண்ணு. முகத்தில படைமாதிரி இருக்கு. காலுல புண்ணும் இருக்கு. இதை ஆஸ்பத்திரியில சேர்த்துக் கவனிக்கனும். அவரும் தொழுநோய்தான்னு உறுதியாயிட்டா சேத்துக்கறேன் என்றார்.

மாலையில் டாக்டர் வந்தார். என் முகத்தைப் பிடித்துத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். வேற எங்கயாவது இது மாதிரி படை இருக்கா என்று கேட்டார். இல்லை என்றேன். சிறுநீர் மலம் பரிசோதனை செய்யச் சொன்னார். குண்டூசியை வைத்து கன்னத்தில் குத்தி வலிக்குதா என்றார். இல்லை. மறு கன்னத்தில் குத்தியபோது வலிக்குது என்றேன். காலில் புண் வந்தது பற்றிக் கேட்டார். விபரங்களைச் சொன்னேன். உடனே அப்பா விபரந் தெரியாம இருந்துட்டோம். நீங்கதான் எப்படியாவது குணப்படுத்தனும் என்றார். இது ஆரம்பம்தான். சரியாயிரும். தொடர்ந்து அஞ்சி வருசம் மருந்து மாத்திரைகள் சாப்பிடனும். சுத்தமாக் குணமாகிட்டா அப்புறம் வராது என்றார்.
காலை சுத்தம் செய்து காரைத்துணியால் கட்டுப் போட்டார்கள். ரத்தப்பரிசோதனை ரிசல்ட் வந்தது. டாக்டர் பார்த்து தொழுநோய் என்று உறுதி செய்தார்.

காசி அய்யாவிடம் நிர்வாக அதிகாரி சொன்னார், இந்தப் பெண்ணை விட்டுட்டுப் போங்க. பெண்களுக்கு தனிப் பிரிவு இருக்கு. அங்கே தங்க வச்சுக்குவோம். நீங்க துணி மணி மத்த சாமானெல்லாம் கொண்டு வந்து கொடுத்துருங்க. இங்க சோப்பு எண்ணையெல்லாம் நாங்களே இலவசமாகத் தருவோம். வேற ஒண்ணும் பயப் படாம தைரியமா போங்க என்றார்.

பெயர், முகவரி, வயது விவரங்கள் எல்லாம் எழுதிக் கொண்டு கண்ணையா என்பவரை அழைத்து பெண்கள் பகுதியில் விட்டுவிட்டு விவரம் சொல்லி விட்டு வா என்று கட்டளையிட்டார்.
நான் கிளம்பும்போது அப்பா அழுதுவிட்டார். ஆனால் நான் தைரியமாக இருந்தேன். எனக்கு அழுகை வர வில்லை. காசி அய்யா தைரியம் சொல்லி அப்பாவை அழைத்துச் சென்றார்.
பெண்கள் பகுதிக்கு போனேன். அங்கு ஒரு ஆயா இருந்தார். இங்க உன்னை மாதிரி நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அதனால பயப்பட வேண்டிய தில்லை. தைரியமா குடுக்கிற மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா குணமாயிடும் என்றார்.

வள்ளி என்ற பெண்ணைக் கூப்பிட்டு இந்தப் பாப்பாவை பக்கத்துல இருக்க வச்சிக்க என்று கூறினார். வள்ளியக்கா சன்னலோரம் இருந்த இடத்தில் ஒரு இரும்புப் பெட்டியை வைத்திருந்தார். எல்லோரும் தனித்தனியாக ஒரு பாய் தலையணை, போர்வை, கொஞ்சம் பாத்திரங்கள் வைத்திருந்தார்கள். கட்டில் கிடையாது. கீழே தரையில்தான் துணி விரித்து படுத்துக் கொள்ளவேண்டும்.

மாலை ஆறுமணிக்கே இரவுச் சாப்பாடு கொடுத்து விடுவார்கள். ஆண்களும் பெண்களும் தனித்தனி வரிசையாக சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். அன்று இரவு வள்ளியக்கா சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.
இரவு உறங்கிவிட்டு காலையில் ஆறுமணிக்கு எழுந்து குளித்து விட்டு வந்தேன். தலை பின்னிக் கொண்டிருந்த வள்ளியக்காவிடம் நானும் பின்னிக்கொண்டேன். ஏழு மணிக்கு மணியடித்தது. பழையபடி வரிசையில் நின்று பொங்கல் வாங்கி வந்து சாப்பிட்டோம். பிறகு மருத்துவமனை அலுவலகம் முன்பு உட்காரச் சொன்னார்கள். ரெண்டு பேர் பெரிய நோட்டுகளை எடுத்து வந்தனர். வருகைப் பதிவேடுபோல பெயர்களை வாசித்தபோது ஒவ்வொருவரும் எழுந்து பதில் கொடுத்தார்கள். என் பெயரை வாசித்த போது வணக்கம் சொன்னேன்.

டாக்டர் வந்ததும் சிலருக்கு மாத்திரை கொடுத்தார்கள். சிலருக்கு ஊசி போட்டார்கள். எனக்கு மாத்திரை கொடுத்து ஊசியும் போட்ட பின் கால் புண்ணுக்குக் கட்டுப் போட்டார்கள்.

வார்டில் அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மா என் தலைவிதியைச் சொல்லி அழுதுகொண்டேயிருந்தது. வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வந்திருந்ததை சாப்பிட்டேன். அப்பா ஒரு இரும்புப் பெட்டியில் துணிமணிகள் , சாப்பாட்டு தட்டு, ஒரு டம்ளர், சின்ன தூக்கு, சின்ன கிண்ணம், போர்வை, சோப்பு, எல்லாம் வாங்கி வந்திருந்தார். பெட்டியை வள்ளியக்காவின் பெட்டி பக்கத்தில் வைத்துக் கொண்டேன். ஆயாவிடம் அம்மா உங்களை நம்பித்தான் விட்டுட்டுப் போறோம். பத்திரமா பாத்துக்குங்க என்றாள். டாக்டரிடம் பேசிவிட்டு அம்மாவும் அப்பாவும் கிளம்பினார்கள்.

மறுநாள் காலையில் புண்ணைச் சுற்றிய தோல்பகுதியை வெட்டி விட்டு புண்ணை நன்றாக சுத்தம் செய்து மருந்து வைத்துப் பின்னர் மாவுகட்டுப் போட்டார்கள். ஒரு மாதம்வரை கட்டு பிரிக்க முடியாது என்றும் மாவுக்கட்டுக்குள் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சொன்னார். மாவுக்கட்டோடு சேர்த்து கட்டைபோல் வைத்து அதில் இரண்டு தடித்த ரப்பரை வைத்திருந்தார்கள். அன்று மாலைவரை நடக்க முடியாமல் காலை நீட்டியபடியே வைத்திருந்தேன்.

அன்று முதல் ஒரு மாதத்திற்கு கீழ் அறையில் தங்கியிருக்கச் சொன்னார்கள். கழிப்பறைக்கு செல்வதற்கு மட்டுமே நடந்தேன். ஒருமாதம் கழித்து கட்டு பிரித்ததில் புண் ஆறிவிட்டிருந்தது. ஆனால் கால் சிறுத்துப் போன மாதிரி இருந்தது. காலை தரையில் வைத்தால் கூசியது. கால்பகுதி எடையில்லாமல் லேசாக இருந்தது. மெதுவாக காலை ஊன்றி ஊன்றி நடந்தேன். கொஞ்சதூரம் நடக்கச் சொல்லிப் பார்த்துவிட்டு, நரம்பில் ஏதோ பிரச்னை இருப்பதால், ஒரு வருடங்கழித்து சின்ன ஆபரேஷன் செய்தால் இடதுகால் போல சரியாகி விடும் என்று டாக்டர் சொன்னார்.

ஒருமுறை அப்பா என்னைப் பார்க்க வரும்போது அவருடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருத்தரும் வந்தார். அப்பா அவரை எனக்கு புளியம்மா அத்தை வீட்டு சொந்தம் என்று அறிமுகப்படுத்தி, அவருக்கு ஊரு மணப்பட்டி இங்க தான் அஞ்சி வருசமா தங்கியிருக்கிறார் என்றார். அவரிடம் உங்க மக மாதிரி பாத்துக்கணும் என்றார் அப்பா. அவரும், ஆத்தா, உனக்கு நான் பெரியப்பா முறை என்று சொல்லி விட்டு அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அன்று முதல் ஒருவருடம் பெரியப்பாவுடன்தான் இருந்தேன். அவரும் தன் மகள்போல கவனித்துக் கொண்டார்.

மருத்துவமனை 15 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. சுற்றிலும் முள்வேலி. மேற்குப்பக்கம் பெரிய நுழைவுவாயில். இரண்டு காவலர்கள் உள்ள காவலர் அறை கேட்டை ஒட்டியிருக்கும். அங்கிருந்து மருத்துவ அலுவலகக் கட்டிடம் வரை தார் ரோடு போட்டிருக்கும். கொஞ்ச தூரத்தில் வலது பக்கத்தில் பணியாளர் குடியிருப்புகள் வரிசையாக இருக்கும். வீடுகளுக்கு முன்பாக வேப்பமரம் கொய்யா மரம் முருங்கை மரங்கள் இருக்கும். முதலில் உள்ள இரண்டு வீடுகள் பங்களா மாதிரி காட்சியளிக்கும். அதில் டாக்டர் மற்றும் துணை மருத்துவர் குடும்பங்கள் குடியிருந்தன. அதற்கடுத்து சிஸ்டர்கள் குடியிருப்பும் இடதுபுறம் காவலர்கள், வார்டன்கள், கம்பௌண்டர்கள், சமையல்காரர்கள், குடியிருப்பும் இருந்தன.

சாலை முடிவில் ஒரு கொடிமரம் இருக்கும். அதைச் சுற்றிலும் சிமெண்ட் திண்டு இருக்கும். அதில் அழகிய வண்ண வண்ணப் பூச்செடிகள் வளர்த்திருப்பார்கள். அங்கேதான் மருத்துவமனைக் கட்டிடம்.

மருத்துவமனையில் உள்ளே நுழையும்போது இடது புறத்தில் பெரிய சர்ச் ஒன்று இருக்கும். அங்கேயே ஆரோக்கிய மாதா பீடம், புனித அந்தோணியர் பீடம், லூர்து மாதா பீடம், புனித ஜோசப் பீடம் போன்றவை சிறுசிறு ஆலயங்கள் போல தனித்தனியாக இருக்கும். ஒவ்வொரு நாள் மாலையிலும் ஒவ்வொரு பீடத்தின் முன்னமர்ந்து ஜெபமாலை சொல்வோம். அந்தந்த பெயருடைய திருநாளில் விசேச பூசைகளும் நடக்கும்.

வரிசையாக நான்கு கட்டிடங்கள். கீழே இரண்டுபுறமும் வரிசையாக அறைகள். அடுத்த மாடி ஹால். மேலே மொட்டைமாடி. கீழிருந்து மேலே போவதற்குள் படிகள் உண்டு. ஒவ்வொரு கட்டிடத்துக்கு இடைவெளியும் வீதி மாதிரி இருக்கும். ஒவ்வொரு அறைக்கு முன்பாக பூச்செடிகள் வளர்ந்திருக்கும்.

முதல் மாடியில் பெண்களுக்கானது. கீழ் அறையில் குடும்பங்கள் இருக்கும். அதாவது அங்கு உள்ள நோயாளிகள் ஆண்களும் பெண்களும் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் திருமணம் செய்துகொண்டு வாழலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. இரண்டு கட்டிடங்களின் இரு புறமும் குடும்பங்கள்தான். ஒரு வரிசைக்கு பத்து அறைகள். மொத்தம் நாற்பது அறைகளில் குடும்பங்கள் இருந்தன. பெற்றோர்கள் கைவிரல் கால்விரல் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் அழகாக இருக்கும். தொழுநோயில் இரண்டு மூன்று வகை இருக்கிறது. சிலருக்கு உடம்பு முகம் எல்லாம் கொப்புளம் கொப்புளமாக பார்க்க விகாரமாக இருக்கும். சிலருக்கு வெண் குஷ்டம். சிலருக்கு தடித்த படைகள் அங்கங்கு சிவந்திருக்கும். சிலருக்கு கால் கைகள் வளைந்துபோகும். சிலருக்கு புண் வந்து சரியாகக் கவனிக்கவில்லை என்றால் அழுகிவிடும். பிறகு கை கால்கள் மொட்டையாக ஆகிவிடும். ஆனால் அவர்களின் குழந்தைகளை பெரும்பாலும் இந்நோய் பாதிப்பதில்லை. குழந்தை பிறந்தவுடன் உடனடியாக தனியாக பரிசோதனை செய்வார்கள். எண்பது சதவீதம் குழந்தைகளுக்கு தொழுநோய் வருவதில்லை.

தினமும் காலையிலும் மாலையிலும் மணியடித்து உணவு வழங்கப்பட்ட பிறகு மாத்திரைகள் விநியோகிக்கப்படும். பிறகு அவரவரும் ஏதாவது வேலை செய்வார்கள். கூட்டிப் பெருக்குவது, சமையலுக்கு உதவுவது, பாய் பின்னுதல், தறிபோடுதல், நூல்ராட்டை சுற்றுதல், தோட்ட வேலை, ஆயா வேலை என்று ஆளாளுக்கு ஒவ்வொரு வேலை செய்வார்கள். அதற்குத் தனியாக சம்பளமும் உண்டு.

வருடத்துக்கு ஒருமுறை வேட்டி சேலை, பிள்ளைகளுக்கு பாவாடை சட்டை, பையன்களுக்கு சட்டை துணிமணிகள் இலவசமாக கொடுப்பார்கள். மாதம் இரண்டுமுறை முட்டையும் கறியும் உணவோடு சேர்த்துக் கொடுப்பார்கள்.

மருத்துவமனைக்கு ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ என இரண்டு பிரிவைச் சேர்ந்த கிறித்தவர்களும் வருவார்கள். மருத்துவமனையில் மதம் மாறியவர்கள் அதிகமாக தங்கியிருந்தார்கள். குழந்தைகளின் நலனுக்காகவும் தங்களின் தேவைகளுக்காகவும் மதம் மாறினார்கள். சி.எஸ்.ஐ பிரிவினர் தங்களிடம் மதம் மாறியவர்களை சேர்த்துக் கொண்டு உரக்க ஜெபம் செய்வார்கள். ஞானஸ்தானம் செய்துவைப்பார்கள்.

ஆனால் ஆர்.சி.பிரிவினர் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தமாட்டார்கள். விருப்பமுள்ளவர்கள் மதம் மாறலாம் என்று சொல்லிவிடுவார்கள். இந்தப் பிரிவில்தான் தினமும் காலை பத்து மணிக்கு ஜெபம் நடக்கும் இடத்திற்கு நான் போவேன். பூசை முடிந்தபிறகு குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் பால்பவுடர் டப்பா போன்றவை கொடுப்பார்கள்.
ஆஸ்பத்திரிக்கு வரும் மதர் மதுரையிலிருந்து வருவார்கள். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு தமிழ் தெரியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை எண்ணத்தோடு நடந்துகொள்வார். மதரை நான் அம்மா என்று அழைப்பேன். அப்படி அழைப்பது அவர்களுக்குப் பிடிக்கும். மதர் தனிப்பட்ட முறையில் தன் செலவில் நிறைய பிள்ளைகளைப் படிக்க வைத்தார். நான் படிப்பதற்கும் செலவு செய்தார்.

ஒருவருடத்தில் என் முகத்தில் இருந்த படை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்தது. பெரியப்பா என்னை மருத்துவமனை நிர்வாகியிடம் அழைத்துச் சென்றார். நான் தொடர்ந்து படிக்க விரும்புவதை பெரியப்பா நிர்வாகியிடம் சொன்னார். அப்போது நான் அவர் காலில் விழுந்தேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறினார். பின்னர் டாக்டரும் நான் படிப்பதற்கு ஒப்புக்கொண்டு அனுமதியளித்தார்.

வலதுகாலில் ஆபரேசன் செய்யவேண்டும், இன்னும் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடவேண்டும். அதற்கு கும்ப கோணத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் மருத்துவமனைதான் சரியான இடம். அந்த மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி கேட்போம். பிறகு முடிவு செய்யலாம் என்றார் டாக்டர். ஒரு வாரம் கழித்து தகவல் சொல்வதாகக் கூறி அனுப்பிவிட்டார்.

பத்து நாட்கள் கழித்து நிர்வாகி கூப்பிட்டனுப்பி விபரங்கள் சொன்னார். ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து சான்றிதழ்கள் வாங்கி வரணும். இன்னும் ஒரு வாரத்திற்குள் கும்பகோணம் போவதற்கான ஏற்பாடுகளை செஞ்சிக்கணும் என்றார்.

உடனே பெரியப்பாவுடன் ஊருக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விவரங்கள் சொல்லி சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டோம். வீட்டிலிருந்து தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டேன். மறுநாள் காலையில் ரயிலில் செல்வதற்கான ஏற்பாடுகளை நிர்வாகியே செய்துதந்தார். உறையிட்ட கடிதத்தில் விவரங்கள் எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அப்பாவும் நானும் கையில் ஒரு பெட்டியுடன், மூன்று வேளைக்கான உணவுப் பொட்டலங்களும் செலவுக்குப் பணமும் எடுத்துக்கொண்டு ரயிலில் புறப்பட்டோம். காலையில் எழு மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு ஏழு மணிக்கு கும்பகோணத்தை அடைந்தது. அங்கு எங்களுக்கு ஒரு விபரமும் தெரியவில்லை. ஒருவரிடம் முகவரியை விசாரித்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்றோம். அங்கிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் திரு இருதய ஆண்டவர் மருத்துவமனை என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த நிறுத்தத்தில் இறங்கியவுடன் கவனித்தேன். தூய இருதய ஆண்டவர் மருத்துவமனை என்று பெயர்ப்பலகை இருந்தது. நிம்மதியாயிருந்தது. உள்ளே போய் வாயிற் காவலரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் அழைத்துச் சென்றார். எங்களை ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினார். அப்போது ஒரு சிஸ்டர் வந்தார். அவரிடம் மதுரையிலிருந்து நிர்வாகி அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற விபரத்தை சொன்னார். ஏதாவது கடிதம் வைத்திருக்கிறீர்களா என்று சிஸ்டர் கேட்டார். அப்பா கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

உள்ளே சென்று சிறிதுநேரத்தில் திரும்பி வந்து இவர்களை சர்ச் பக்கத்தில் உள்ள அறையில் தங்கவை. காலையில் அம்மாவைப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து சாப்பிட்டீர்களா? என்று கேட்டார். இல்லை என்று சொன்னதும் வாட்ச்மேனிடம் சாப்பாடு வாங்கிக்கொடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சாப்பிட்ட பின்பு எங்களை ஒரு அறைக்கு அழைத்துப்போய் தங்கவைத்தார்.

காலையில் முன்னேரம் எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு வாட்ச்மேனிடம் போனோம். அவர், அம்மா எட்டு மணிக்கு மேல்தான் வருவார்கள். நீங்கள் எதிரில் உள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள் என்று சொன்னார். நாங்களும் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம். பின்னர் அம்மா வந்தார்கள். எங்களை விசாரித்துவிட்டு பிறகு கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார்கள். பத்துமணியளவில் உள்ளே அழைத்து அப்பாவிடம் விபரம் சொன்னார்கள். உங்க மகளை இங்கே சேர்த்துக்கொண்டோம். இங்கேயே படிக்கட்டும். மாத்திரை மருந்துகள் துணி சாப்பாடு எல்லாம் இலவசமாகவே கொடுப்போம். நீங்கள் கவலைப்படாமல் ஊருக்குச் செல்லலாம்.

ஒரு உதவியாளரை அழைத்து என்னை பெண்கள் பகுதியில் உள்ள மாணவிகள் காப்பகத்தில் விட்டுவரச் சொன்னார். போனில் சிஸ்டரிடம் விவரங்கள் சொல்லி விடுவதாகச் சொன்னார். அங்கே போனதும் சிஸ்டர் ஒருவர் எங்களை உட்காரச் சொன்னார். அங்கே ஆயாவாக இருப்பவரை அழைத்து இந்தப் பெண் புதிதாக சேர்ந்திருக்கிறது. பாய் தலையணை பெட்டி வைக்கும் ஸ்டேண்டு எல்லாம் ஏற்பாடு செய் என்றார். பிறகு என்னிடம் நாளையிலிருந்து நீ பள்ளிக்குப் போய் படிக்கலாம் என்றார்.

ஏற்கனவே அங்கே தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் நானும் சேர்ந்துகொண்டேன். இத்தனை தூரம் கடந்து மகளை விட்டுவிட்டுப் போகிறோமே என்ற கவலையில் அப்பாவின் முகம் வாட்டமாய் இருந்தது. நான் தைரியம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பி வைத்தேன். அப்பா கவலையோடு ஆயாம்மாவிடம் புள்ள மாதிரி கவனிச்சுக்குங்கம்மா என்று சொல்லி சென்றார்.

மறுநாள் காலையில் குளித்துவிட்டு ஆறுமணிக்கு சர்ச்சுக்கு பூசைக்கு செல்லவேண்டும். எல்லோரும் காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்தார்கள். மற்ற பெண்பிள்ளைகள் செய்வதைப் பார்த்து அதைபோலவே நானும் செய்தேன். அப்போது நிர்மலா என்ற பெண் எனக்கு சில உதவிகளைச் செய்தார்.

சர்ச்சுக்கு ஏழு நாளும் ஏழு விதமான சீருடைகள் அணிந்த செல்லவேண்டும் என்பது விதிமுறை. ஒரு மணி நேரம் பூசை நடக்கும். பூசை முடிந்த பிறகு பள்ளிக்குச் செல்லும் சீருடை அணியவேண்டும். பின்னர் விடுதிக்கு வந்து நாங்கள் தங்கியிருக்கும் இடம் முன்புறத்தோட்டம் எல்லா இடங்களையும் பெருக்கி சுத்தம் செய்யவேண்டும்.

எட்டு மணிக்கு காலைச்சாப்பாடு கொடுப்பார்கள். கேப்பை, கம்பு, கோதுமை எல்லாம் சேர்த்து அரைத்த மாவில் சுடச்சுட கூழ் தருவார்கள். இரண்டு பேர் ஒரு பெரிய அண்டாவில் இருபுறமுமிருக்கும் வளையத்தில் ஒரு பெரிய கம்பை நுழைத்து தோளில் வைத்துத் தூக்கி வருவார்கள். அப்போது ஆயா விசில் ஊதியதும். நாங்கள் எல்லோரும் வரிசையாக தட்டை எடுத்துக்கொண்டுபோய் நிற்போம். ஆயாதான் கூழை ஒவ்வொருவருக்கும் ஊற்றுவார். எங்களில் மூத்தவராக இருக்கும் யாராவது ஊறுகாய் கொடுப்பார்கள். சிலநேரம் கூழில் சின்னச்சின்ன புழுக்கள் நெளியும். சின்னச்சின்ன வண்டுகளும் கிடக்கும். அதைப் பார்க்கும்போதே வாந்தி வருகிற மாதிரி தோன்றும். ஆனால் வேறுவழியே கிடையாது. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். கீழே கொட்டிவிட்டால் ஆயா திட்டுவார். முழங்காலை மடித்து மண்டிபோட்டு உட்கார்ந்திருக்க வேண்டும். தண்டனை கொடுப்பார்கள். அதனால் சாப்பிட்டுதான் ஆகவேண்டும். சாப்பிட்டு முடித்துவிட்டு இரண்டு இரண்டு பேராக வரிசையாகச் செல்லவேண்டும்.

மருத்துவமனை நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. பதினைந்து ஏக்கரில் விவசாயம் செய்துவந்தார்கள். பருத்தி, நெல், கரும்பு, சிலபகுதிகளில் காய்கறிகள் பயிர் செய்தார்கள். வயல்களில் மோட்டார் பம்ப் செட் இருப்பதால் தண்ணீர் பஞ்சம் கிடையாது. இருபதுக்கும் மேலே ஜெர்சி பசுக்கள் இருந்தன.

பள்ளிக்கூடத்துக்கு புனித ஸ்தனிஸ்லாஸ் நடுநிலைப்பள்ளி என்று பெயர். உள்ளே பெரிய விளையாட்டு மைதானம். அதன் நடுவில் கொடிக்கம்பம். மைதானத்தைச் சுற்றிலும் பூந்தோட்டம். செம்பருத்தி, மல்லிகை, ரோஜா, கனகாம்பரச் செடிகளுடன் பெயர் தெரியாத பல பூச்செடிகளும் இருந்தன. அதன் நடுவில் தண்ணீர் வசதிக்காக கைப்பம்பு ஒன்றும் திருகு குழாய் உள்ள ஒரு பம்பும் இருக்கும்.

பள்ளிக்கூடத்தில் முதலில் பெரிய ஹால் இருக்கும். வகுப்பறைகளுக்குச் செல்ல மூன்று வாசல்படிகள் உண்டு. ஒரு ஆபிஸ் ரூம். மீதி எல்லாம் வகுப்பறைகள். மர ஸ்கீரின் வைத்து ஒவ்வொரு வகுப்பாகத் தடுத்திருப்பார்கள். அங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் வகுப்புகள் இருந்தன. பள்ளியில் ஏழு ஆசிரியைகள், ஒரு தலைமை ஆசிரியை இருந்தனர். ஆண்கள் பெண்கள் இருபாலரும் படித்தனர். பெண்கள் விடுதிபோல தனியாக ஆண்கள் விடுதியும் இருந்தது.

காலை ஒன்பதரை மணிக்கு பள்ளி மணியடித்தவுடன் அசம்பிளி நடக்கும். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து. பின்னர் திருக்குறள் வாசிப்பு. அடுத்ததாக அன்றைய செய்தித்தாளில் வந்த முக்கியச் செய்திகள் வாசித்த பிறகு இறுதியாக உறுதிமொழி கூறுதல் நடைபெறும்.

அசம்பிளி முடிந்ததும் தலைமை ஆசிரியை அழைத்து விவரங்களை சொல்லிவிட்டு என்னிடம் நோட்டு புத்தகம் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு நான்றாக படிக்க வேண்டும் என்று சொன்னார். ஆசிரியையுடன் வகுப்புக்கு சென்றேன். அவர் இரண்டாவது பெஞ்சில் அமரச் சொன்னார். வருகைப் பதிவேட்டில் என் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆசிரியை எனக்கு புத்தகம் நோட்டு பை பென்சில் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார். பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தேன். நன்றி என்ற வார்த்தையை அன்றுதான் நான் முதன்முறையாக உணர்ந்தேன். மனதில் ஆழத்திலிருந்து அந்த வார்த்தை வெளிவந்தது.

அந்தப் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களும் தொழு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தொழுநோய் உள்ளவர்களின் குழந்தைகளும் இருப்பார்கள். சில அனாதைக் குழந்தைகளும் படித்தார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில்கொண்டு நோய் குணமாகி வெளியே செல்லும்போது படிப்பறிவோடு அவர்கள் செல்லவேண்டும் என்பதால் இந்தப் பள்ளியை அவர்களே நடத்தினர்.

பள்ளியில் நடத்திய பாடங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை. முதலில் நடந்த மாதத் தேர்வில் சரியாக மதிப்பெண்கள் வாங்கவில்லை. அதற்காக ஆசிரியை அடித்தார். என்ன இப்படி மக்கா இருக்குறியே என்று திட்டிவிட்டு இனிமேல் ஒழுங்கா கவனமா படிச்சி நல்ல மார்க் வாங்கணும் என்று ஆசிரியை அறிவுறுத்தினார்.நான் தலையாட்டினேன். மாடு மாதிரி தலையாட்டினா போதாது, நல்லா படிக்கணும் என்றார்.

நான் இயேசுவிடம் வேண்டிக்கொண்டேன். நல்ல படிப்பு வேண்டும். நிறைய மதிப்பெண்கள் பெறவேண்டும். ஞாபகசக்தி வேண்டும் என்று சர்ச்சில் மண்டியிட்டு தினமும் பிரார்த்தனை செய்தேன். (விரைவில் வெளிவர இருக்கும் முத்து மீனாள் எழுதிய முள் சுயசரிதை நாவலின் ஒரு பகுதி)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com