Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

சோம்பேறி புருஷன்

கம்பீரன்
.

ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க. பொண்டாட்டிக்காரி ரொம்ப கெட்டிக்காரி. ஓடிஓடி ஒழைப்பா. நல்லநாள் கெட்ட நாள் தவற ஒரு நாளும் ஓய்ஞ்சி ஒக்கார மாட்டா. ஊர்ல அவளுக்கு நல்ல வேலக்காரின்னு பேரு.

ஆனா, அவ புருஷன் அவளுக்கு நேர் மாறான ஆளு. அவனுக்கு ஒரு வேலையும் தெரியாது. ஒழைச்சி சம்பாதிச்சதே இல்ல. பொண்டாட்டி சம்பாதிச்சினு வந்து போட்டா. வேளாவேளைக்கு சாப்புட்டுனு அடுப்ப சுத்திவுட்ட கோழியாட்டம், வூட்ட சுத்தினிருப்பான். ஊர்ல அவனுக்கு சோம்பேறி புருஷன்னே பேராயிருச்சி. புருஷன் இப்படி இருக்கிறாரேன்னு பொண்டாட்டிக்காரிக்கு ரொம்ப கவல. ஏதோ நாம நல்லா இருக்கறதால சம்பாதிச்சினு வந்து போடறோம். இந்த மனுஷன் வூட்ல ஒக்காந்துனு சாப்புடறாரு. நமக்குயெதாவது ஒண்ணு ஆயிட்டா, இந்த மனுஷன் எங்க போய் நிப்பாரு. இவருக்கு கஞ்சி தண்ணி ஊத்த யார் இருக்கறாங்க. நாம நல்லா இருக்கறப்பவே ஒரு வேலைய கத்துக்கினா, நாம இல்லைன்னாலும், யார்கிட்டயும் போய் நிக்காம, சம்பாதிச்சி சாப்பிட்டுக்குவாரு. இந்த மனுசனுக்கு இது தெரியலையேன்னு வேதனைப்பட்டா.

வேலைக்கு போயா, சம்பாதிக்க கத்துக்குயான்னு அப்பப்ப சொல்லுவா. என்னதான் சொல்லி தலையில அடிச்சிக்கிட்டாலும் அவன் வேலைக்கு போகுனும்னு நெனச்சதில்ல. பொண்டாட்டி சம்பாதனையிலேயே காலம் தள்ளினு வந்தான்.


ஆனா பொண்டாட்டிக்காரிவிடறதா இல்ல. இன்னிக்கில்லனாலும் என்னிக்காவது புத்தி வரும்னு புருஷங்காரன ஒக்கார வச்சி கிளிப்புள்ளைக்கி சொல்ற மாதிரி அப்பப்ப புத்தி சொல்லினிருந்தா.

பொழப்பு இப்டியே போயினிருந்திச்சி.

ஒரு நா, பொண்டாட்டி சொல்றது சரி தான்னு ஒணந்தான். பொண்டாட்டிக்கிட்ட வந்து, நீ சொல்றது சரிதான். நான் இன்னக்கி வெளியில போயி யெதாவது வேலக் கத்துனு வரேன். எனக்கு சோத்து மூட்டக் கட்டிக் குடுன்னான்.
பொண்டாட்டிக்காரிக்கு சந்தோஷம் தாங்கமுடியல. நம்ம நெனச்சமாதிரி புருஷனுக்கு புத்தி வந்திருச்சின்னு மடமடன்னு அடுப்ப பத்தவச்சி சோறாக்கினா. கல்லக்கொட்ட சட்னி அரைச்சா. சோத்து மூட்ட கட்டிக் கொடுத்து நெழலும், தண்ணியும் இருக்கற எடமா பார்த்து சாப்புட்டு, ஏதாவது வேலக்கத்துனு வான்னு சொல்லிட்டு, அவ வேலைக்கு புறப்பட்டா.


பொண்டாட்டி போனப்புறம், வீட்டு வாசலப் பார்த்தான். வாசல்ல நல்லா அவரப் பந்தல் நெழலும் மூலையில் ஒருபானையில தண்ணியும் இருந்திச்சி. நெழலும் தண்ணியும் இருக்கற எடமா பார்த்து சாப்பிடச் சொன்னாயில்லன்னு பந்தல் நெழல்ல ஒக்காந்து சாப்பிட்டான். தண்ணி குடிச்சிட்டு அங்கேயே படுத்து நல்லா தூங்கிட்டான்.

சாயந்தரம், பொண்டாட்டிக்காரி வேல முடிஞ்சி வூட்டுக்கு வந்தா. பந்தல்ல படுத்திருந்த புருஷங்காரனப் பார்த்திட்டு, யெங்கயோ போய் வேல செஞ்சிட்டு வந்து களப்புல படுத்து தூங்கினிருக்கிறார்னு நெனச்சி எழுப்புனா. எங்கயா போன, என்னயா வேல கத்துனு வந்தன்னு கேட்டா. நீதானே நெழலும் தண்ணியும் இருக்கற எடமா பாத்து சாப்பிடச் சொன்ன, வாசல்லே நெழலும் தண்ணியும் இருந்திச்சி. இங்கயே ஒக்காந்து சாப்பிட்டேன். தூக்கம் வந்திச்சி, அப்படியே படுத்து தூங்கிட்டேன்னான்.

ஐயோ இந்த மனுஷன் இப்படி இருக்கிறாரேன்னு தலையில அடிச்சிகினா. சரி, ஆனது ஆகட்டும் போனது போகட்டும்னு மக்கியா நாளும் சோத்து மூட்ட கட்டிக்குடுத்து நெழலும் தண்ணியும் இருக்கற யெடமாப் பாத்து சாப்புட்டு, யெதாவது வேலய கத்துனு வான்னு அனுப்பி வச்சா.

அவனும் சோத்து மூட்டய எடுத்துனு கௌம்பினான். ஊரத்தாண்டி வெளியில போனான். ரொம்பதூரம் போனா ஒரு மலையடிவாரம் வந்திச்சி. அங்க ஒரு பெரிய ஆலமரம் இருந்திச்சி. மரத்தடியில குளுகுளுன்னு நல்ல நெழலும் பக்கத்தில ஓடையில தண்ணியும் இருந்திச்சி. சரி இங்கயே ஒக்காந்து சாப்புடலாம்னு ஒக்காந்து சாப்பிட்டான். நல்லா தண்ணி குடிச்சான். அங்கயே ஒரு சுமதாங்கி கல்லு இருந்திச்சி. அதுமேலே ஏறி கால நீட்டி மல்லாந்து படுத்தான். அப்படியே நல்லா தூங்கிட்டான்.

சாயங்காலம் சூரியன் மறையற நேரத்துக்கு எழுந்தான். ஐயோ சாயங்காலம் ஆயிருச்சே, பொழுது போறதுகூட தெரியாம தூங்கிட்டமே வூட்டுக்குப் போனா, பொண்டாட்டி என்ன வேல கத்துனு வந்தேனு கேப்பாளே அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு நெனச்சிக்கினே சுத்தும்முத்தும் பாத்தான். ஒரு ஓலச்சுவடி கண்ணுல பட்டுச்சி. குதிச்சி அந்த ஓலச்சுவடிய எடுத்தான். இதவச்சி இன்னக்கி சமாளிச் சிடலாம்னு வூட்டுக்கு புறப்பட்டான்.

பொண்டாட்டிக்காரி சாயங்காலம் வேல முடிஞ்சி வூட்டுக்கு வந்தா. வந்துப் பார்த்தா புருஷங்காரன் வூட்ல இல்ல. சரி வேல கத்துக்கப் போயிட்டாரு, வரும்போது ஏதாவது வேலக் கத்துக்குனு வருவாருன்னு வாசல வாசல பார்த்தினிருந்தா. புருசங்காரன் வாசல்ல காலடி வச்சதும் ஓடிப்போய் வாயா வாயான்னு கூப்பிட்டுனு வந்து எங்கயா போன, என்ன வேலையா கத்துனு வந்தே?ன்னு ஆசையா கேட்டா.

நான் ஜோசியம் கத்துனு வந்திருக்கேன்னு ஓலச்சுவடியக் காட்டினான்.

பொண்டாட்டிக்காரிக்கு ஒரே பூரிப்பு, நல்ல வேலையத்தான் கத்துனு வந்திருக்க. இப்பத்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிது. ஒக்காரு சூடா தோச சுட்டுப் போடறேன். சாப்பிட்டு அப்புறம் பேசலாம்னு ஒக்காறவச்சா. புருசன்கிட்டே பேசிக்கினே மடமடன்னு தோச சுட்டா. அம்மியில நாலு இலுப்பு இலுத்து சட்டினி அரைச்சா. இவ சுட்டது எண்ணி பத்து தோச. அதுல பாதிய புருஷங்காரனுக்கு போட்டு வச்சா. இவளுக்கு புருஷங்காரன் தெறமய சோதிச்சிப் பார்க்கனும்னு எண்ணம்.

அவன் சாப்பிட்டு முடிச்சதும், ஏயா, நீதாந் ஜோசியம் கத்துகுனு வந்திருக்கிறன்னு சொல்றயே இப்ப நா எத்தன தோச சுட்டேன் கொஞ்சம் பாத்து சொல்லுன்னு கேட்டா.

உடனே அவன் ஓலச்சுவடிய எடுத்து ரெண்டு கையிலும் மூடி வச்சிகினு, அண்ணாந்து கண்ண மூடி மந்தரம் சொல்ற மாதிரி முனுமுனுன்னு ஒதட்ட அசைச்சான். தோச சுடறப்ப சொய்ங்.... சொய்ங்ன்னு சத்தம் வரும். பொண்டாட்டி தோச சுடறப்ப அந்த சத்தத்த வச்சி, எத்தன தோச சுடறான்னு எண்ணிக்கிட்டிருந்தான். எப்ப எது செஞ்சாலும் சரிபாதி போடறது பொண்டாட்டி வழக்கம். இதையெல்லாம் வச்சி பொண்டாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிடலாம்னு நெனச்சான்.

கையில இருந்த ஓலச்சுவடியில ஒரு பக்கத்த விரிச்சிப் பார்த்தான். அப்புறம் பொண்டாட்டியப் பார்த்து, நீ இப்ப பத்து தோச சுட்ட, அதுல எனக்கு அஞ்சு தோச போட்ட, இன்னும் அஞ்சு தோச எடுத்து வச்சிருக்கிறன்னான். பொண்டாட்டிக்காரி ஓடிப்போய் எடுத்து வச்சிருக்கிற தோசய எண்ணிப் பார்த்தா அஞ்சு தோச இருந்திச்சி. மொத்தம் சுட்டத் தோசை எத்தனின்னு சொல்லிட்டாரு. சாப்பிட்டதயும் சொல்லிட்டாரு, மீதி எடுத்து வச்சிருக் கிறதயும் சொல்லிட்டாரு. நம்ம புருஷன் உண்மையாலுமே ஜோசியம் பாக்க கத்துகுனு வந்திருக்கறார்ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டா.

இந்த சுத்து வட்டாரத்தில ஜோசியம் பார்க்க ஒருத்தரும் இல்ல. இனிமே எல்லாம் நம்ம புருஷங்கிட்டத்தான் வரணும். நம்ம புருஷன் பெரிய ஜோசியக்காரனாயிருவாரு. நல்ல வருமுடியும் கெடைக்கும். பொழப்பும் நல்லாயிருக்கும்னு நிம்மதியா படுத்துத் தூங்கனா. மறுநா, எம் புருஷன் ஜோசியம் பார்க்க கத்துனு வந்திருக்கறாரு, எம் புருஷன் ஜோசி யம் பார்க்க கத்துனு வந்திருக்கறாரு ஊர்பூரா சொல்லிப்புட்டா. ரெண்டு நாளைக்கப்புறம், ஊர் வண்ணார் அழுக்குத் துணி எடுக்க ஊர்மேல வரல.ரெண்டு நாளாச்சி... மூனு நாளாச்சி... வரல. வூட்லயெல்லாம் அழுக்குத்துணி சேர்ந்துப் போச்சி. வண்ணாரோட கழுத காணாமப் போயிருச்சி. அதான் வண்ணார் வரலன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. வுடனே இவ வண்ணார் வூட்டுக்கு ஓடுனா. எம் புருஷன் ஜோசியம் பாக்கத் கத்துகுனு வந்திருக்கறாரு. நீ தட்டோட வந்து தட்சண வச்சிக் கேளு. அவரு ஓங் கழுதய கண்டுபுடிச்சிக் குடுத்துருவாருனு சொல்லிப்புட்டு வந்தா.

வண்ணாரும் அவ சொன்னபடி வந்தார். தட்டுல பூவு, பழம், வெத்தல பாக்கு, அதோட காலணா தட்சணையும் வச்சி, நீதான் சாமி யெங் கழுதய கண்டுபுடிச்சிக் குடுக்கனும்னு கேட்டார். இவனுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. பொண்டாட்டிய ஏமாத்தறதுக்காக பொய் சொன்னோம். இப்படி வம்புல மாட்டிக்கினமேன்னு முழிச்சான். சரி இவரையும் எப்படியாவது சமாளிச்சி அனுப்பிடலாம்னு ஜோசியம் பாக்க ஒக்காந்தான்.

ஓலச்சுவடிய எடுத்தான். அண்ணாந்து கண்ணமூடி, மந்தரம் சொல்றமாதிரி முனுமுனுன்னு செரேட்ட அசைச்சான். பொறகு ஓலச்சுவடிய விரிச்சி பார்த்து, இன்னயிலிருந்து மூனாவது நாள் காத்தால ஊருக்கு கெழக்கால இருக்கற குட்டி சொவத்தபோய் பாரு, அங்க ஓங் கழுத இருக்கும்னு சொல்லி அனுப்பிட்டான்.வண்ணார் கழுத கெடைச்சிடும்னு சந்தோஷமா போய்ட்டார்.

ராத்திரியாச்சி. புருஷம் பொண்டாட்டி ரெண்டுபேரும் பாய்போட்டு படுத்தாங்க.

பொண்டாட்டிக்காரி படுத்ததும் நல்லா தூங்கிட்டா. இவனுக்கு தூக்கம் வரல, மூனாவது நாள் கழுத கெடைச்சிடும்னு சொல்லிட்டமே, நம்ம சொன்னமாதிரி கழுத கெடைக்கலன்னா ஊர்ல மானங்கெட்டுப் போயிரும், பொண்டாட்டியும் மதிக்க மாட்டா. இப்ப என்ன பன்றதுன்னு யோசனைப் பண்ணான். பொண்டாட்டியப் பார்த்தான், அவ நல்லா தூங்கினிருந்தா.

சந்தடி இல்லாம எழுந்து ஒரு அரிக் கேன் வௌக்க எடுத்துனு வீட்ட விட்டு கௌம்புனான். ராத்திரி பூரா கழுதைய தேடி காடு கழனியெல்லாம் அலைஞ்சான். கழுத கெடைக்கல. சரி, நாளைக்கு பாத்துக்கலாம்னு பொண்டாட்டி எழறதுக்குள்ள வீட்டுக்கு வந்து பேசாமப் படுத்துட்டான். மக்கியா நாளும், இதேபோல தேடினான். கழுத கெடைக்கல. வந்து படுத்துட்டான்.

அடுத்து மூனாவதுநாள் இன்னைக்கு எப்படியாவது கழுதய கண்டுபுடிச்சாகனும். இல்லனா ஊர்ல தல காட்ட முடியாது. அலைஞ்சி திரிஞ்சி தேடுனான். கடைசியா மலையடிவாரத்துல கழுத கிடைச்சிச்சி. அத கயிறு போட்டு கட்டி இழுத்துனு வந்து ஊருக்கு கெழக்க இருக்கற குட்டிச்செவத்துல கொண்டு வந்து கட்டிப்போட்டான். அப்பாடா ஒருவழியா தொல்ல வுட்டுச்சின்னு வந்து நிம்மதியா படுத்துத் தூங்கினான்.
பொழுது வெடிஞ்சதும் வண்ணார் ஓடிப் போய் கிழக்க இருக்கற குட்டி செவத்தப் பார்த்தார். பார்த்தா அவர் கழுத படுத்துனிருக்குது. அவருக்கு ரொம்ப சந்தோஷம். கழுதய ஓட்டினு நேரா ஜோசியக்காரன் வூட்டுக்கு போனார். நீங்க சொன்ன மாதிரியே எங்கழுத கெடச்சிருச்சின்னு ஒரு கும்புடு போட்டுட்டு துணி எடுக்க கௌம்புனார்.

கழுத இல்லாம நாளஞ்சிநாளா அழுக்குத்துணி எடுக்க போகலியா, அதனால போற எடத்திலெல்லாம் ஏம்பா இத்தன நாளா வரல, எம்பா இத்தன நாளா வரலன்னு கேட் டாங்க. இவர், கேட்டவங்கக்கிட்ட யெல்லாம் கழுத காணாமப் போன தையும், ஜோசியக்காரன் சொன்னபடி கழுத கெடச்சிட்டதயும் கதையா சொன்னார்.

ராஜா வூட்டுக்கு துணி எடுக்கப் போனவர், அங்கயும் கழுத கதைய சொல்லிட்டு வந்தார். பொண்டாட்டிக்காரிக்கு நம்ப புருஷனப்பத்தி ஊரே பேசிக்குதேன்னு ஒரே பூரிப்பு.

ஒருநா, ராஜா வூட்ல ராணியோட முத்துமால காணாமப்போயிடுச்சி. வுடனே ராஜா, ஜோசியக்காரனுக்கு ஆள் அனுப்புனார். என்னாவோ ஏதோ தெரியலையேன்னு போய் ராஜா முன்ன நின்னான். ராணியோட முத்துமால காணப்போயிடுச்சி. அது கெடைக்குமா கெடைக்காதா பார்த்து சொல்ன்னார்.

இவனுக்கு நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. ஆனா வெளிய காட்டிக்கல பொண்டாட்டிய ஏமாத்தப்போய் இப்டி ஒண்ணு மேல ஒன்னு சோதனையா வருதேன்னு பொலம்புனான்.

வேற வழியில்லன்னு ராஜா முன்ன, சம்மணம் போட்டு ஒக்காந்தான். அண்ணாந்து கண்ணமூடி மந்தரம் சொல்ற மாதிரி முனுமுனுன்னு ஒதட்ட அசைச்சான். அப்புறம் ஓலச்சுவடிய விரிச்சி ஒரு பக்கத்த எடுத்து பாத்து, இன்னையிலிருந்து மூனாவது நாள் காலையில கெழக்க இருக்கற வௌக்கு மாடத்தில பாருங்க, முத்துமால இருக்கும்னான்.

அத கேட்ட ராஜா, சரி, கெடைச்சா சந்தோசம் உனக்கு சன்மானம் தருவேன், கெடைக்கலனா உன்ன சும்மா வுடமாட்டேன், மூக்கையும் நாக்கையும் அறுத்துப்புடுவேன். அதனால மூனுநாள் வரைக்கும் நீ எங்கயும் போகக்கூடாது. இங்கயே இருக்கனும். உனக்கு வேளாவேளைக்கு சாப்பாடும் படுத்துத் தூங்க பஞ்சு மெத்தையும் தரேன்னார். இவன் நெலகொலஞ்சி போயிட்டான்.

கழுதயாவது காட்டோரம் கெடந்திச்சி தேடி புடிச்சி கொண்டாந்து கட்டிபுட்டோம். இந்த முத்து மாலைய நான் எங்க போய் தேடுவேன். அவ்ளோ தான் நாக்கும் மூக்கும் போயிடும். நல்லாமாட்டிக்கினேன்னு வேதனைப்பட்டான்.

ராஜா சொன்னபடி இவனுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு வந்திச்சி, படுக்க பஞ்சுமெத்தையும் குடுத்தாங்க. ஆனா, பசியாற சாப்பிடவும் முடியல, நிம்மதியா தூங்கவும் முடியல. பயப் படறது வெளிய தெரிஞ்சிடக் கூடாதுன்னு சாப்பிடறதும், செத்த கண்ணசருதுமா இருந்தான். இப்படியே ரெண்டுநாள் போச்சி, ஒரு துப்பும் கெடைக்கல. மூனாம்நாள் ரொம்ப சோந்துப் போயிட்டான்.பொண்டாட்டிய ஏமாத்த ஒரு பொய்யச் சொல்லி, இப்ப இப்பிடி மாட்டிக்கினமேன்னு கவலப்பட்டான். அன்னக்கி ராத்திரி பூரா இவனுக்கு தூக்கமே இல்ல. பொழுது போகபோக நெஞ்சு பட படன்னு அடிக்கிது. ஒடம்பு குப் குப்னு வேக்குது. நாக்கு போயிடும்... மூக்கு போயிடும்... நாக்கு போயிடும் ... மூக்கு போயிடும்...னு ஔர ஆரம்பிச்சிட்டான்.

கோழி கூப்படற நேரம் எழுந்து வெளியே வந்தான். ஒரு வேப்பங் குச்சி ஒடச்சி கொளந்தங்கரையில ஒக்காந்து பல் தேய்ச்சான். கையெல்லாம் ஒதருது, குச்சியப்புடுச்சி ஒழுங்கா பல்லக்கூட தேய்க்க முடியல. நாக்கு போயிடும்... மூக்கு போயிடும்... நாக்கு போயிடும் ... மூக்கு போயிடும்...னு ஔரிக்கினே பல் தேய்ச்சினுருந்தான்.

அப்ப, ராஜா வூட்டு வேலக்காரப் பொண்ணுங்க ரெண்டு பேரு, கொடத்த எடுத்தினு கொளத்தில தண்ணி எடுக்க வந்தாங்க. இவன், நாக்கு போயிடும்... மூக்கு போயிடும், நாக்கு போயிடும் மூக்கு போயிடும்னு ஔரினு இருந்தான். அவங்க வர்றத பார்த்ததும் ஔர்ரத நிறுத்திட்டான். ஆனாலும், இவன் ஔர்றத அவங்க கேட்டுக்கினாங்க. ரெண்டுபேரும் கொளத்தில தண்ணி மொண்டுக்கினு பொறப்பட்டாங்க. இவன் மறுபடியும் நாக்கு போயிடும் மூக்கு போயிடும்னு ஔர்னான். இவன் ஔர்ரத அவங்க நின்னு கேட்டாங்க.

அந்த ராஜா அவர் ராஜ்ஜியத்தில எதாவது திருட்டு நடந்தா திருடனவங்க மூக்கையும் நாக்கையும் அறுத்திடச் சொல்வாரு. அதுதான் தண்டன இந்த பொண்ணுங்களுக்கு இவன் ஔர்ரத கேட்டு பயம் வந்திடுச்சி. நாம ராணி யோட முத்துமாலைய திருடனத இந்த ஜோசியக்காரன் கண்டுபுடுச்சிட்டானாட்டங்குது. அதான் மாட்டிக்கினா நாக்கு போயிடும்... மூக்கு போயி டும்னு நம்மள எச்சரிக்கிறான்னு நெனச்சி கொடத்த வச்சிட்டு ஓடிப் போய் அவங்கால்ல வுழுந்தாங்க, நாங்கதான் ராணியோட முத்து மாலைய திருடனோம். ராஜாவுக்கு தெரிஞ்சா நாக்கையும் மூக்கையும் அறுத்துடுவாரு. எங்க திருட்ட கண்டு புடிச்சி எங்கள எச்சரிக்க பண்ண மாதிரியே எங்கள காப்பாத்திவுடு, முத்துமாலைய கொண்டு வந்து குடுத்திடறம்னு கெஞ்சனாங்க. வுடனே இவனுக்கு வீராப்பு வந்துடிச்சி. பாத்திங்களா எந்தெறமைய, என்ன ஏமாத்த முடியாது. இந்த தடவ மன்னிச்சிவுடறேன். இன்னொரு தடவ இப்படி செய்யக்கூடாது. முத்து மாலைய எடுத்தினு வந்து கெழக்கு மாடத்தில வச்சிட்டு போங்கன்னான்.
அவன் சொன்னபடியே அந்த பொண்ணுங்க முத்துமாலைய எடுத்தினு வந்து கெழக்கு மாடத்தில வச்சிட் டாங்க. இவன் வாய் கொப்பளிச்சி, முகம் கழுவினுபோய் நல்லா படுத்துத் தூங்கிட்டான்.

பொழுது வெடிஞ்சதும், வேலக்காரங்க வந்து மாடத்தப் பார்த்தாங்க. ஜோசியக்காரன் சொன்னமாதிரியே முத்துமால இருந்திச்சி. அத எடுத்தினு போய் ராஜாகிட்ட குடுத்தாங்க. ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஜோசியக்காரனக் கூப்புட்டு, பாராட்டி கை நிறைய சன்மானம் குடுத்தனுப்புனார்.

நம்ம புருஷன் ராஜாவுட்டுக்கே போய் ஜோசியம் பாத்து சன்மானம் வாங்கிட்டு வந்துட்டார்னு பொண்டாட்டிக்காரிக்கி ரொம்ப சந்தோஷம். அன்னக் கெல்லாபம் அவளுக்கு அதே பேச்சாயிருச்சி.

ஒருநா, ராஜா நாட்ல விவசாயமெல்லாம் எப்பிடி இருக்கிறதுன்னு சுத்திப் பாக்கப் போனார். போகும் போது, ஜோசியக்காரனையும்கூட அழைச்சினு போனர். ரெண்டு பேரும் பேசினே போனாங்க. போகும் போது ராஜா, இவனுக்கு தெரியாம ஒரு துளசி எலய பறிச்சி கைக்குள்ள வச்சிக்கினார். இந்த ஜோசியக்காரனோட தெறமய இன்னொரு வாட்டி சோதிச்சிப் பாக்கனும்னு நெனச்சி இப்ப எங்கைக்குள்ள என்னாயிருக்குது சொல்லுப் பாக்கலாம்னார்.

அந்நேரம் பாத்து இவனுக்கு தும்மல் வர்ரமாதிரி இருந்திச்சி. தும்மல் போடறதுக்காக தலைய தூக்கனவன், ராஜாவுக்கு பதில் சொல்லிட்டு தும்மலாம்னு நெனச்சி தும்மல் வரதுன்னு சொல்றதுக்காக வாயெடுத்தான். தும்மல் மூக்குக்கு ஏறிடவே தும்மல்னு சொல்ல முடியாம து...து... து...ன்னு தடுமாறுனான்.

ராஜா என்ன பண்ணாரு, துளசின்னு சொல்லத்தான் வாய்தொறந்தான், அதுக்குள்ள தும்மல் வரவே முழுசா சொல்ல முடியாம து.. து.. து..ன்னு தடுமாறரான்னு நெனச்சி, சரியா சொன்ன துளசிதான்னு சொன்னார்.

ஜோசியக்காரன் ஐயோ தப்பிச்சண்டாயப்பான்னு நெஞ்சு மேல கைய வச்சான்.

ராஜா ஜோசியக்காரன் தெறமய பாராட்டினார். உனக்கு நல்ல பதவி தரேன்னு அவரோட மந்திரிகள்ல ஒருத்தரா இவன சேர்த்திகிட்டாரு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com