Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

தேவேந்திர பூபதி கவிதைகள்

.

அர்த்த ராத்திரிப் புலம்பல்கள்

தருணங்களை உனக்கும்
பரிசளிப்புகளை உன் அருகாமைக்கும்
தீர்மானித்து விட்டபின்பு
எனது காலை உணவை மனக்கிளி
கொத்திக் கொண்டு பறக்கிறது
வேடன் விரித்த வலையென நகரம்
பதுங்கிக்கிடக்க
நான் உனது முத்தத்தின் மீது
ஒரு பாடலை புனைந்து கொண்டிருக்கிறேன்
நீ ஒரு தற்செயலான ஆரம்பத்தின் முனையில்
நின்று என்பெயரை
அர்த்த ராத்திரிகளிலும் புலம்பித்திரிகிறாய்
நானோ உன் கண்ணீர் திவலை
ஒரு மாபெரும் உதை பந்தாய்மாறி
என் தலை மீது மோதுவதை கனவு காண்கிறேன்
மறுபடியும் புன்னகையின் கீழ்
நமது கூடல் ஒரு இரவைத் தாலாட்டும் போது
உன் கண்ணீரைப் பாடலாக்கி நான் தரும்
முத்தத்தின் அவஸ்தையை
இனிமேலாவது அர்த்த ராத்திரிகளில் புலம்பாமல்
இருப்பாயோ அன்பே
பரிசளிக்கும் தருணங்கள் கடந்து கொண்டிருக்கின்றன,


விட்டுப்போன தத்துவம்

கைகள் பிடித்து நடந்த நாள் முதலாய்
உன்னுடனான எனது பயணம் தொடர்கிறது
அப்போது நீ காலங்களை அறிமுகப்படுத்தினாய்
நான் அதன் வேகத்தில் சாகஸம் செய்தேன்
நீ மனிதர்களின் வரலாற்றை கதையாகச் சொன்னாய்
நான் அதன் கதாநாயகன் என்றறிந்தேன்
ஆற்றின் போக்கைச் சொல்லும் முன்பே
நான் அக்கரையில் இருந்தேன்
நீ சொன்ன பலவற்றில் நான் முந்தியிருக்கலாம்
ஆயினும் நீ நட்ட கற்பக விருட்சத்தின்
அடி நிழலில் தான் என் எதிர்காலம் விரிந்தது
அது இன்னும் மனிதர்களை நேசிக்கச் சொல்கிறது
பிறருக்கென எதையும் இழக்கச் சொல்கிறது
உனது பிடிவாதமான மௌனத்தின் முன்பு
நான் மேதமையின் சம்பாக்ஷணையை கூர்ந்திருக்கிறேன்
உனது அலட்சியத்தில் எனது செல்வம் கரைந்திருக்கிறது
உனது சிரிப்பில் அபத்தத்தையும் கற்றுணர்ந்தேன்
போதும் உனது கைக்கருவியை நீ
மீதம் விட்டு சென்றுள்ளாய்
அது ஒரு மரத்தைப்போல நிழல்களைச் செப்பனிடும்
சிறிய ஓடையைப்போல பள்ளங்களில் பாயும்
பறவைகளைப் போல நம்பிக்கைகளை விதைக்கும்
என் கையுதறி நீ சென்று விட்ட யாத்திரையின்
புனித ரகசியத்தை நான் முன்னமே அறிந்தேனா
பிறகு எனக்கு சொல்லாமல் விட்டதும் அது என்று தான்
ஆயினும் அறிவேன் குருவே
ஞானிகள் கையுதறிச் செல்வார்கள்
குடும்பத்தை கைவிடுவார்கள்
ஒரு அநாதையைப்போல மரணமடைவார்கள்
விடுபட்டுப்போன எனது தத்துவமே
நீ உதறிவிட்டுப் போன இளம் விரல்களால்
உன் சிக்ஷயன் (மாணவன்) அல்லது தோழன்
உன்னை மீண்டும் மீண்டும் எழுதுவான்.


ஆகையால் கனவான் நீங்கள்


நீங்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடியவர்
என எளிதில் யாரும்
குற்றம் சொல்ல முடியாத படிக்கு நடத்தை யுள்ளவர்
மேலும்
தவறுகளின் பக்கம் உங்களை யாரும் கண்டதுமில்லை
உங்களின் பணித்திறன் மீதான
நம்பிக்கை அனைவருக் குமுண்டு
பெயர் சொல்லக்கூடிய சில வேலைகளை
செய்து முடித்தது பற்றி
இன்னும் சிலர் பெருமை பேசுகின்றார்கள்
வன்முறைக்கெதிராக எழும் உமது குரல்
ஊரெங்கும் பிரசித்தம்
குருதிக்கறைபடிந்து பிசுபிசுக்கும்
உங்கள் கைகளை யாரும் பார்க்கவில்லை
மலர்களின் நறுமணத்தில் சாறு எடுப்பதாக
வனத்தை அழித்தது பற்றி
ஏனிப்போது அக்கறை
நடந்து முடிந்துவிட்டது அனைத்தும்
இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது
ஒரு ரோஜா மலரை சட்டையில்
பொருத்திக் கொண்டு
ஒரு சிறுமியோடு புகைப்படம்
எடுத்துக் கொள்வது மட்டும் தான்




நகமற்ற விரல்கள்


பசியாறட்டும் என
விரல்களை நீரில் ஆழ்த்தினேன்
நேரம் தாழ்ந்த என் விரல்களில்
நட்சத்திரங்களை தீட்டியிருந்தன வண்ண மீன்கள்
பிரபஞ்சத்தின் அல்லது பால் வெளிகளில்
ஒரு நாவற்பழத்தின் நிறத்தை மறைப்பது யார்
மேலும் பழத் துண்டுகளை பாலில்
ஊற வைத்த ஈச்சம் பழங்களை
காலம் என் கைகளில் வழங்கும்போது
யாவும் நிறமற்றுப்போன
பசியின் பாதை மறந்து விட்ட
நான் அல்லது மீன்
நகமற்ற எனது விரல்கள்
மேலும் கடலின் ஒரு சிறிய சம்பவம்.

விடுபடும் சம்பவம்

வெகு தொலைவில் அல்ல
மிக அண்மையில் கேட்கிறது
நீ செய்து முடித்தவற்றின் குரல்
என்னால் காத்திருக்க முடியாது
என் யாசிப்பின் கடைசி நொடியில்
மகிழம் பூக்களின் வெப்ப வாசனை
மற்றுமொரு குளிரு்ட்டம் பெற்ற அறை
வலியற்றுப் போய்விட்டன யாவும்
வாத்சல்யமற்ற உன் குரலின் தொலைவு
நான் தொடும் கணம்
அல்லது ஒரு விடுபடும் சம்பவம்
மிக அண்மையில் இதோ நெருங்கிவிட்டது
உனக்கு கேட்கிறதா

சமைத்த உணவின் முன்

உன் வருகை நிகழும் நாட்களை
அல்லது என் இரவை நீ விசாரிக்கும்
சம்பவம் இவையன்றி
தவிக்குமென் சுவாசம்
நேற்றின் நகரில்
பெருங்காற்றாய் விசிறியடித்தது
சமைத்த உணவின் முன் நெடு நினைவாய்
வெறித்திருந்தேன்
ஏதும் சொல்லியனுப்பினாயா
அல்லது வந்தடையாத செய்திகளை
விபரிதமாய் பெருக்கும்
நம் முன்னாட்களின் இதயம்
போதும் போதுமென்றிருக்கிறது
ஒரு நகரத்தின் பரபரப்பும்
அதன் மாலைச் செய்திகளும்
ஒரு போதும் பூத்துக் காணாத
வாசல் தொட்டியில்
குறுமலர்கள் அடர் மஞ்சளில்
தலையாட்டிப் புன்னகைக்கின்றன




அனுதினமும் சிதறும் முத்தங்களை
கவனிக்க மறந்த ஒருவனை
கண்காணிக்கும் இரவு
தொலைபேசி வாயிலாக அலறுகிறது,
அடுத்த நாள் முத்தங்கள் நிகழும் முன்னர்
சிதறியவற்றை இழுத்துப் போகும் எறும்புகளை
முனுமுனுப்பாக்கி அது தன்னை
அம்பலப் படுத்திக் கொள்கிறது
மேலும் பதற்றத்தில் தன் காதலிகளை கண்ணியமாக
சேகரிக்க முடியாத அதன் அவலம்
கைதவறி காலணிகளை எடுத்து
அணைத்துக் கொள்கிறது
அடையாளமற்ற காலணிக்குள்
பெண்கள் அடைந்து கிடப்பதாகவும்
அதன் வழியே தேவதைகள் தொலைந்து
கொண்டிருப்பதாகவும் அவ்விரவு பீதியடைகிறது
பகலில் காலணிகளை யாரும் தொடக்கூடாது
எனக் கட்டளையிடும் அது சுவர் கோழிகளின்
சப்தங்களுக்கு இன்னும் மிரள்கிறது
காலணிகளைவிட முக்கியமானது கால்கள்
என்றவன் தனது முத்தங்களை
இன்னும் தவற விட்டுக் கொண்டே இருக்கிறான்,

பேசுவதற்கேது மற்ற நடுநிசி இரவில்
தொலைபேசியில் அலறினான்
இரவின் வெப்பமும் பகலின் குளுமையும்
கவிதையில் உறைந்து விட்டதாய் கூறி
தனக் கேனும் பருக
மீதமிருக்கிறதா என வினவுகையில்
அருகிருந்த காதலியின் கைகள் என் மேல்
தவறி விழுந்தன
சிதறிய முத்தங்களை மிதிபடாமல்
அள்ளிச் சேர்க்க வேண்டும் அடுத்த நாளைக்கு
முத்தங்களை இழுத்துக் கொண்டு செல்லும்
எறும்புக்கு தெரியாது
காமத்தை நெடுநாளைக்கு எப்படிச் சேமிப்பதென
கால்கள் இடறி விழுமுன்னே
அடையாள மறைத்த காலணிகளுக்குள்
பெண்கள் அடைந்து கிடப்பது பற்றியும்
தொலைந்து போன சின்ரெல்லாக்களை
அவன் மீண்டும் தவறவிட்ட
காலணி கொண்டு எப்படி
அழைப்பது என்பது பற்றியும்
அவனுக்குச் சொன்னேன்
சுவர் கோழியின் சப்தத்தில் முறிந்து
போன கிழையை சரிப் படுத்தியபடியே
விடிவதற்குள் உரையாடலை
முடிக்கச் சொன்னேன்
காலணிகளைவிட கால்கள் மிக முக்கியமானவை,


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com