Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


பின்நவீனத்துவ வாசிப்பில் இலக்கியம் வழியான சமூக ஓர்மைகளின் கட்டமைப்பு

தேவேந்திர பூபதி - யவனிகா ஸ்ரீராம்

பல நூற்றாண்டுகளாக தொடரும் மனிதவாழ்வின் பொதுவான அம்சங்கள் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் இவை யாவற்றையும் கட்டுப்படுத்தி பரவலான நலன்களை உறுதி செய்வதாகச் சொல்லும் அரசியல், வரலாறு, நிர்வாகம், நீதி, இராணுவம் போன்றவற்றை மறு பரிசீலனை செய்யவும், அதையே உரையாடலாக மாற்றுவதற்குமான காலகட்டத்தில் கடந்த பதினைந்தாண்டுகாலமாக நாம் நிற்கிறோம்.

விடுதலையடைந்த நாடுகளின் மறுமலர்ச்சி மற்றும் தேசிய கட்டுமானங்கள் சுதேசிய உற்பத்தி உறவுகள் யாவும் மூன்றாம் உலக நாடுகளில் இன்றளவும் அடைந்திருக்கும் வளர்ச்சி அதன் சுயாதீனத்தில்தான் இருக்கிறதா? இல்லை வளர்ந்தநாடுகளின் சந்தையாக மறுகாலனிமயமாக்கப்பட்டிருக்கிறதா? என்பதும்கூட உரையாட வேண்டிய ஒரு சமூக அவசியமாக இருப்பதை உணர்கிறோம். ஏழ்மை நாடு என வரையறுக்கப்பட்ட நமது தேசத்தில், பண் பாட்டுக் கலாச்சார, மத, சமய, சாதிய, பிறப்படையாளங்கள் நமது உற்பத்தி உறவுகளைக் கட்டுப்படுத்தியும், கருத்தியல்தளத்தில் முழுக்க அரசியல் தன்மைகளையும் அத்தோடு அதிகார மனநிலையையும் இழந்து வந்திருப்பதன் வழியாகத்தான் இன்று நாம் மறுகாலனிமயமாகி வருவதை அறிந்து கொள்கிறோம். இன்று சாதியக் கூர்மை அதிகரித்திருப்பதுகூட மறுகாலனியத்தின் நலன் களுக்காக அதன் ஏகோபித்த முகவர்களாக தங்களை மாற்றுவதற்குத்தானே யொழிய தேச முழுமைக்குமான மாற்றுகளையும், மனித அடிப்படை உத்திரவாதங்களை செப்பனிடுவதற்குமாக அல்ல என்பதை நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை.

இவ்வாறான ஒரு அமைப்பில் விடுபட்டுப் போகும் மற்றைய மனித இருப்புகள் பற்றி நம்முடைய உரையாடலில் பரிசீலிக்கப் புறப்பட்டோமெனில், பட்டினி, வறுமைச்சாவு, தற்கொலைகள், பைத்தியமாகுதல், மதக் கலவரங்கள், இயற்கைச் சீற்றத்தால் இறக்கிறவர்கள் என பலபேருக்கு நாம் மவுன அஞ்சலி செலுத்துவதே வருங்காலத்தில் ஒரு பெரும் தேசிய கடமையாகிவிடும் என்பதை சிந்திக்க வேண்டியும் இருக்கிறது.

மதம், அரசு, குடும்பம் போன்ற நிறுவனங்கள் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தின் பாதுகாவலர்களாக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அரசு அதிகாரம் மனிதர்கள் மீது எதேச்சையாகவும், வன்முறையாகவும் சுமத்தப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மையாக இருக்கும்பட்சத்தில் மேற்கண்டவற்றை பிரதிபலிக்க வாய்ப்பற்ற உதிரிகள் மற்றும் தண்டனைச் சட்டங்களுக்கு வெளியே பெருகும் குற்ற நடவடிக்கைகள், அதன் ஆபத்தான வாழ்வியல் பகுதிகள் பொதுவாழ்வை அச்சுறுத்தவும் பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்லவும் ஒரு சமூகச்சூழல் இருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது.

பயங்கரவாதம் என்று அரசு அமைப்பின் தரப்பிலிருந்து கூறுவதெல்லாம் மிகச் சாமானியர்களைத்தான் என்றாலும், உண்மையில் பயங் கரவாதம் என்பது அரசியல் அதிகாரத்தின் நிழல்களி லிருந்துதான் புறப்படுகிறது. அவ்வதிகாரமே அதற்கு தலைமையேற்கிறது எனவும் நாம் அறிந்துவருகிறோம்.

மூன்றாம் உலகின் மிகப்பெரிய பிரச்னையாய் பெருகும் மனிதக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தியாகும் சதிகள் படிப்பறிவற்ற ஒரு காலனியில் அதன் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட இயலாத ஒரு மந்தைக்குள் என்னன்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இன்றைய இந்திய நிலக் காட்சிகளே பெரிய உதாரணமாக இருக்கின்றன.

ஒருகாலத்தில் தேசியக் கட்டமைப்பில் பெரும்பங்காற்றி பெருமிதங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கத் துணையாகவிருந்த இந்திய மத்தியதர வர்க்கம் இன்று உலகமயமாக்கலுக்குப் பின்பு திறந்தவெளி பொருளாதாரத்தின் விளைவால் மதிப்பீடுகள் சரிந்து விழுமியங்களை காப்பாற்ற முடியாமல் தமது பல்வேறு குலப்பெருமை களையும் கைவிட முடியாமல் சீரழிந்து வருவதை நாம் சமகால காட்சிகளாக முன்வைக்க முடியும். மத்திய தர வர்க்கம் என்பதே உயர்சாதி அரசியல் வர்க்கம் என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியான சூழலில்தான் பின்நவீனத்துவவாதிகள் 'அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுதல்' என்ற இடத்தை உரையாடலுக்கு நகர்த்துகிறார்கள். இந்த கற்பிதமான சமூக அமைப்பு, அரசு நிறுவனங்கள் எந்த அளவு மெய்மையுடன் அதன் மக்களுடன் உறவு கொள்கிறது என்பதை விசாரிக்காமல் அதன் அதிகாரங்களுக்குக் கட்டுப்படுதல், கீழ்ப்படுதல், ஒடுங்குதல் போன்றவை வெறும் பொருண்மை கருத்தியலுக்கான ஒரு நாடக நடிப்பாக மட்டுமே மக்களுக்கும் அரசுக்குமிடையே நெடுங் காலமாக நடந்துவருகிறது என அவர்கள் தத்துவத்திற்கு அப்பால் பேசத் துவங்குகிறார்கள்.

வாழ்வதற்கான எந்த உத்திரவாதத்தையும் தராமலே தண்டனைகளை மட்டுமே நிர்பந்தமாக்குவது இன்றைய அதிகாரிகளின் அலட்சியப்போக்கு அல்லது அதன் சுய பாதுகாப்பு என்பதைத் தவிர முற்றிலுமாக உற்பத்தி உறவுகள் இயந்திரமாகிப்போன சூழலில் மனித உடலை அதன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசு வருமானத்திற்கு உதவாத உதிரிகளை சமூக மையத்தளத் தில் வைத்து கொன்றழிப்பதற்குமான ஒரு நிறுவனமாக மட்டுமே அவற்றை நாம் அடையாளப்படுத்த முடியும்.

இந்தக் கொலைகள் மருத்துவம், கல்வி, சட்டம், இராணுவம் முதலியவற்றாலும் சுற்றுச்சூழலில் கேடுகளை உருவாக்குதல் கிருமிகளை பரப்புதல் சித்ரவதை செய்தல் தனிமைப்படுத்துதல் இவ்வழியாக சமூக உளவியல் தளத்திலும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்குவது வரையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதே கண்கூடான உண்மை. இன்று ஒருவர் இறந்துபோகிறார் என்றால் வாழ்ந்து வயதாகி ஏற்பட்டமரணமல்ல அது, ஏதோ சமூகக் காரணியால் தன் வாழ்நாளை நீட்டிக்க முடியா மல் இழக்கிறார் என்றுதான் அர்த்தம். அதாவது, மறைமுகமாக கொலை செய்யப்படுகிறார் என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

ஆக, வர்க்கரீதியாக இக்கொலைகள் அரசு மற்றும் தனியார் அதிகார உறவில் பங்கெடுப்பவர்களைப் பாதுகாத்து அல்லது உள்ளூர் வெளியூர் உற்பத்தி உறவுகளில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை பாது காத்துக் கொண்டு மற்றவர்களை சோம்பேறிகள் எனவும், பலவீனமானவர்கள் எனவும், கணக்கில் எடுத்து உதிரி களாக்கப்பட்டு அவர்களை அரசியலிலிருந்து விலக்கி மரணத்தை மட்டுமே பரிசளிக்கிறது.

பெரும்பான்மை விவசாயத்தை தொழிலாகக் கொண்ட ஒருநாட்டில் அதன் உற்பத்திகளை உலகச் சந்தைக்கு ஏற்றுமதிக்கக்கூடிய நவீன வழிமுறைகளைப் பயன் படுத்த இயலாமல் அதன் நிலங்களை வெறுமையாக விடுவது அல்லது நஞ்சாக்குவது தொடங்கி, அதில் உழைத்துவந்த தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட நிலமற்ற விவசாயக் கூலிகளை நகரமயமாக்கி உழைப்பின் சாறை உறிஞ்சி வறுமைக்குத் தள்ளுவதன் மூலம் உடல் மனம் யாவற்றையும் கண்காணிப்பிற்குள்ளாக்கி தண்டனைகள் வழியே மற்றும் நோய்க்கூறுகள் வழியே சடலமாக்கி வருவதைத்தான் நாம் பேசத் துவங்கியிருக்கிறோம்.

இதிலிருந்து அதிகாரம் என்பது எல்லோருக்கும் எல்லா வற்றையும் வழங்கிவிடும் ஒரு அமைப்பு என்பது பொதுவில் சொன்ன பொய்யாகிறது. உள்ளூர் சாலை, நவீன ஆலைகள், முதலீடுகள், பொதுவிநியோகம்வரை விஸ்தரிக்கப்பட்டிருக்கும் ஐந்தாண்டுத் திட்டங்கள் யாவும் இன்றைய நவீனச்சூழலில் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வேட்டைக்குரிய சுற்றுலாக்காடுகளாக தன் சுய நிலத்தையே மாற்றித் தந்திருக்கிறது என்பதை உணர்ந்தால்தான் பின்நவீனத்துவச் சூழல் கீழ்த்திசை நாடுகளுக்குப் பொருந்தாது, அது வெறும் மேலைப் பண்பாட்டுப் பிரச்னை என்ற அறியாமையை நாம் நீக்கிக் கொள்ள முடியும். ஓரியண்டலிசம் பற்றி விரிவாகப் பேசும் எட்வர்டு சையத் போன்றோரை வாசிக்கும்போது மேற்கும் கிழக்கும் அடைந்துவரும் மாற்றங்களை நாம் உன்னிப்பாக உள்வாங்க முடியும்.

'எல்லாம் வார்த்தைகள்தான்' என்கிறார் •பூக்கொ. மதம், அரசு, சட்டம், கல்வி, இராணுவம், நீதி, தத்துவம் யாவும் வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டதுதான். இக் கட்டமைப்பை கைப்பற்றும் ஒரு வர்க்கமே அதிகாரத்திற்கு இடமாறி தங்கள் நலன்களைக் காப்பாற்றிக் கொள்ள மேற்சொன்னவற்றை மக்களின் மேல் பிரயோ கப்படுத்துகிறது. இவ்வகையான ஆளும் அமைப்பில் பல்வேறு ஆதிக்க மாற்றம் இருந்ததேயொழிய மேற்கண்ட வார்த்தை வழியான அதிகாரச் சட்டகம் மாற்றப்பட முடியாமல் நூற்றாண்டுகளாக இறுகி உறைந்து கிடக்கிறது. அதற்கான அதிகாரப் போட்டியை தற்கால பொருளாதாரக் குவிப்பு கைப்பற்றித் தருகிறது என்பதையே நாம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரையில் கொண்டு சென்று புரிந்துகொள்ள முடியும்.

மொழியின் மேலதிக தகவலறிவு உள்ளவன் அம்மொழி யறிவற்றவர்களை தன்கீழாக வசக்கி அடிமைப்படுத்திக் கொண்டு வருவதுதான் உயர்ந்தோருக்கான அரசநீதி என்கிறான். மொழியறிவற்றவன் பண்பற்றவன் என்றும், சமூக நன்னடத்தை அற்றவன் என வகைப்படுத்தி அவர் களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்கிறான். இப்படித்தான் மொழிக்குள் அதிகாரம் ஒளிந்திருக்கிறது என்பதை எளிமையாக சொல்லமுடியும்.

இதற்கு ஏற்றாற்போல், பன்மைப்பட்ட கலாச்சாரங்கள் தொன்மங்கள் வழிபாடுகளை ஒழித்து ஒரே கடவுள் நம்பிக்கையாக மாற்றுவது பல்வேறு விவசாய முறைகளை ஒழித்து பணப்பயிர் விருத்திக்காக நிலங்களை அபகரிப்பது உடலுக்குத் தேவையான பல்வேறு இயற்கைச் சாதனங்களை மறுத்து செயற்கைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது ஒரே உலகம் ஒரே சந்தை என விளம்பரம் மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் வழியே வற்புறுத்துவது வகையான அனைத்தும் மொழியின் துணைகொண்டே அதிகாரத்தால் மெருகேற்றப்படுகிறது. நாம் மெல்லமெல்ல அதன் வசத்தில் நினை விழந்துகொண்டே வருகிறோம் என்பதைத் தவிர இச் சூழலை என்னவென்று அடையாளப்படுத்துவது?

இவ்வாறாகப் பெருகும் ஏகாதிபத்திய நெருக்கடிகளுக்கும் அதன் அசுர வளர்ச்சிக்கும் எதிராக வறுமைப்பட்ட நாடுகள் அதன் மக்கள் யாவரும் என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்குத்தான் ழான்போத்ரியா (Jean Baudrillard)'கூட்டாக தற்கொலை செய்துகொள்வது தான் ஒரேவழி' என்கிறார். அதிர்ச்சிகரமானது என்றாலும் 'ஏகாதிபத்தியம் திடுக்கிட்டுப் போவது தனது பொருட்களை வாங்க ஆளில்லாமல் போகும் அச்சத்தினால் தானேயன்றி' தனது சந்தை செலாவணியாகும் நாடுகளில் கடன் சலுகை நிவாரணங்கள் மானியங்கள் என அளித்து, அதன் மக்களை தனது பொருட்களை வாங்கும் பொருட்டு உயிருடன் இருக்கவைக்கவே முயற்சிக்கும் என்பதை பட்டவர்த்தனமாகக் கூறுகிறார்.

தனது சந்தை செலாவணியாகாத சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளை அவைகள் பஞ்சத்தில் கைவிட்டுவிட் டதை நாம் இத்துடன் இணைத்துக் கொள்ளலாம். மேலும், 'பழைய வர்க்கபேதங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன. வெகுஜனம் என்பது ஒரு வெற்றிடம் போல் ஆகிவிட்டது. வெகுஜனம் தொடர்பான புள்ளி விவரங்கள், தேர்தல் கணிப்புகள், சந்தையாக்கல் போன்றவற்றால் சதா துளைக்கப்பட்டவாறே இருக்கி றது. அவர்கள் நடுநிலைப்படுத்தப்பட்ட கருத்தியல்களா லும், மதம், கடந்துசெல்லும் ஆசைகளாலும் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டமென்பதே குழப்பம் தரக்கூடிய வகைமைகளால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயமும் பாலுணர்வு சம்பந்தப்பட்டதாகவும், அரசியலாகவும், அழகியலாகவும் இருக்கிறது' என கருத்துரைக்கிறார்.

இப்படியாக வாழ்வதற்கான எந்த மாற்றும் விடுதலையும் கைவசமாக முடியாத நமது தேசத்தில் மீண்டும் கடவுள் நம்பிக்கையையும், மதப் பகைமைகளையும் வெறும் சோதிட நம்பிக்கைகளையும் விதியாகக் காட்டி உள்ளூர் மதவாத சக்திகள் அதை தங்கள் அரசியலுக்கு சூசகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. மாற்று மத நம்பிக்கையா ளர்களை பெருமதத்திற்கு எதிராக ஒடுக்கி சிறுபான்மை மதத்தவரை அரசியல்ரீதியாக அச்சுறுத்தி மீண்டும் 18ம் நூற்றாண்டின் பெருமிதங்களையே அதன் அழுகல்களையே தூக்கிப்பிடிக்கிறார்கள். மதங்களின் பாசிச உளவியல் அதனதன் மண்ணுக் கேற்றவாறு அதன் மக்கள் தொகைக்கேற்றவாறு தனது கொடூரங்களை நிகழ்த்து மென்பதை உலகமெங்கும் நிகழ்ந்து வந்திருக்கும் வரலாற்றிலிருந்து நாம் பாடம் பெற்றிருக்கிறோம்.

வரலாறு திரும்பமுடியாதுதான் என்றாலும் அதன் உத்திகள் தந்திரங்கள் மக்களின் மீது மறுபடியும் நிகழ்த்தி காட்டக்கூடிய வடிவத்தில்தான் அதிகாரத்திற்கு கையளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வகையில் இதுகாறும் நிலவிவந்த மக்களுக்கான கோட்பாடுகள் தத்துவங்கள் அரசியல் வடிவங்கள் யாவும் ஒற்றைத் தன்மையுள்ளதாகவும் அவை முழுமையானதோ இறுதியானதோ இல்லையென்பதையும் அவ்வாறான பூரணத்துவம் தனக்குள் தன்னை உடைத்துச் சிதைத்துக் கொள்ளும் ஒரு சிறிய தன்னிடமிருந்து விலகும் ஒருகூற்றினை தனக்குள்ளே கொண்டிருக்கும் என்பதையே நம்பிக்கையாக்கி எதிர்கொள்ள வேண்டியது இன்றைய அறிவுஜீவிகளின் நிகழ்கால பொறுப்பாகிறது.

மேற்கண்ட அச்சிறிய கூற்றினை நிறுவனங்களின் பிடியிலிருந்து விலகி ஓடும் உதிரிகளின் வாழ்வியல் போக்கிலிருந்துதான் மொத்தத்துவத்திற்கு எதிராக புதிய மாற்றுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஏனெனில், பழங்குடிகளுக்கும் பைத்தியமாக திரிபவர்களுக்கும் நாடோடிகளுக்கும் இந்த வளர்ந்துவரும் வர்த்தகமும் விஞ்ஞானமும் எந்தவித நுகர்பொருளையும் உருவாக்குவதில்லை. அவர்கள் தன்னளவில் இந்த வர்த்தக வலையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கணக்கிலெடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலைச் சமூகங்களில் பெருகிவரும் ஓரினப்புணர்ச்சி யாளர்கள் குடும்பங்களைக் கேள்விக்குள்ளாக்குவது போலவே, போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அரசு உற்பத்திக்கு உதவாதவர்களாகவும் அரசை அலட்சியப் படுத்துபவர்களாகவும் அரசின் சட்டங்களை எதிர்ப்பவர்களாகவும் எதிர் கலாச்சாரவாதிகளாகவும் அடையா ளப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள்மீது குற்ற நடவடிக்கை பிரயோகப்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் தான் 'குற்ற நடவடிக்கை சமூகத்தை மாற்றமுடியும்' என்று சொன்ன நீட்சே இன்று பின்நவீனத்துவவாதியாக அறியப்படுகிறார். ஜெனே போன்ற அறஉணர்வு கொண்ட கலகக்காரர்கள் தண்டனைகளுக்கு அப்பாற்பட்டுதான் எப்போதும் குற்றம் செய்யும் தாபத்தோடு இருப்பதாக' அறிவித்துக் கொள்கிறார்கள்.

பின்நவீனத்துவச் சூழல் அல்லது இருப்பு என்பது இந்திய நிலங்களுக்கு அந்நியமானது என்ற போக்கை வக்கரித்துப்போன ஒரு ஏழாம்தரமான தேசியவாதிதான் மறுத்துக் கொண்டிருக்க முடியுமேயொழிய பிழைப்பின் கண்ணிகளில் சிக்கித் துடிக்கும் உடல்களை பெருநகரங்களின் மூலைமுடுக்குகளில், சிறைச்சாலைகளில், மனநோய், முதியோர் விடுதிகளில், சிறுவர்களுக்கான சீர்திருத்த கொட்டடிகளில் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மத்தியதர வர்க்கத்தின் செத்துப்போன மூளையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பவர்களாகத்தான் நாம் அடையாளப்படுத்த முடியும்.

நினைவுமறதி என்பது எல்லோருக்கும் ஒரு நல்வாய்ப்பு என்பதோடு நிகழும் கொடூரங்களுக்கெதிராக கண்களை மூடிக்கொள்வதுகூட கருணை சம்பந்தப்பட்ட விஷயம் தான். இப்படியாகத்தான் நாம் மயக்கமூட்டப் பட்டிருக்கிறோம். இல்லையெனில் அச்சுறுத்தப் பட்டிருக்கிறோம். இதுபோக இந்திய ஊடகங்கள், வணிகத் திரைப்படங்கள்யாவும் ஒரு சிறு தவறு செய்யும் அப்பாவி யாரொருவரையும் சட்டத்திற்கு வெளியே கொன்றுவிடும் உரிமையை வளர்த்தெடுத்து மக்களுக்கிடையே அநேக கலாச்சாரக் காவலர்களை உருவாக்கி தனது அதிகாரத்தை மட்டும் காப்பாற்றிக் கொள்ள நீதியின் பெயரால் வழிவகை செய்துகொள்கிறது. இப்படித்தான் மக்களையே மக்களுக்கெதிராக திருப்புகிறது. இத்தகைய பின்னணியில் இந்திய இலக்கியம் எதைப் பேசுகிறது என்பதை விட இன்றைய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி நாம் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

படைப்புச் செயற்பாடு பற்றி மிக்கேல் •பூக்கோ 'படைப்பில் படைப்பாளி தன்னை மறைத்துக்கொண்டு இயங்குவதன் மூலமே தனது ஒளிவட்டத்தையும் படைப் புரிமையையும் கோருகிறார்' என்று சொல்லும்போது தனக்குப் பகையாக தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக மற்றமைகளின் இருப்பு இருப்பதையும், அதனூடான தனது உறவுகளையும் எதிர்மைகளையும் மறைத்துக் கொண்டு எழுத்தில் உன்னதத்தை வடித்துக் காட்டுவது படைப்பை சந்தேகத்திற்குள்ளாக்குவதாக நாம் விரிக்கலாம். (நமது சூழலில் தனது சாதிக்கு மற்ற சாதிகள் தொந்தரவாய் இருப்பதை மறைத்துக்கொண்டு என பொருள் கொள்ள வேண்டும்).

இவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட அனைத்து இலக் கிய வடிவங்களையும் நாம் பரிசீலனைக்குட்படுத்தி கட்டவிழ்க்கமுடியும். இறுதியில் இவைகள் பொதுவான ஒரு நியாயத்தையும், அதற்கான தர்க்கத்தையும் தீர்மானமான முன்மொழிவுகளையும் வைப்பதுதான் தனது இலக்கியப் பார்வை என பறைசாற்றிக் கொண்டு வந்திருக்கின்றன. இவர்களுக்கான நிறுவன அரசியல் அதிகார ஒத்துழைப்பு கிடைக்கும்போது கல்விக் கழக வளாகங்கள் தொடங்கி பொது நூலகங்கள் இலக்கிய அரசியல் சமூக ஆய்வுகள் எனத் திரிந்து அவை தண்டணைச் சட்டத்தின் மேலும் ஒரு புதிய விதியை சேர்த்துவிட்டே ஓய்கின்றன. இவ்வாறு மலிந்துவிட்ட தேசிய இராணுவ சாதி எழுத்தாளர்களே தமிழில் அதிகம்.

நாம் முன்னர் பரிசீலித்த போக்குகள் மற்றும் அதன் நெருக்கடியிலிருந்து எழுகின்ற எழுத்தென்பது வெகுஜன பத்திரிகைகள் முதற்கொண்டு தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் அனைத்து பொது வணிக ஊடகங்களிலும் இன்னும் எடுத்தாளப்படவில்லை என்பதும் அப்படியே தப்பித்தவறி வந்தாலும் கண்காணிப்பும் தணிக்கையும் அதன்மீது எல்லா மட்டத்திலும் நடந்து கொண்டே இருக்கிறது என்பதும் ஒருபுறமிருக்க குவிமைய எதார்த்தவியல் (Hyper Reality)அதிகம் தென்படும் படைப்புகள் தமிழில் மெல்ல உருவாகி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அது பன்மைத் துவத்தையும் பல்வேறு இருப்புகளையும் அடையாளப்படுத்துவதோடு பொதுப்புத்தியை தகர்க்கும் செயல் பாடாகவும் தொழிற்படுகிறது. மொழிமீது மிகுந்த கவனமும் அதிகாரத்தின் பிடிப்பில் தன்னை உட்படுத்தா வண்ணமும் தன் சுயத்தின் மீதான விசாரணையாகவும் விடுதலை மற்றும் மாற்றுக் கருத்தியல்கள் பற்றியதும், குடும்பம், அரசு, கோவில் போன்றவற்றின் பிடியி லிருந்து விலகிவரும் உதிரிகளை பிரதிநிதிப்படுத்து வதாகும். தனக்குள் ஒரு புதிய அறத்தினை கிளர்த்துகிறது.

நீண்டகாலமாக நிலவிவரும் சரி ஜ் தவறு, உண்மை ஜ் பொய், கறுப்பு ஜ் வெள்ளை என்கிற கருத்தியல் மீதும் தர்க்கத்தின் மீதும் ஒரு கட்டவிழ்ப்பு நிகழ்த்தி அதன் சம நிலையை குலைக்கும்போது உண்டாகும் இடைவெளி உரையாடல்கள் புதிய பார்வைகள் ஆகியவற்றை பின் நவீனத்துவம் அரசியல்படுத்துகிறது.

நவீனத்துவ இருப்பிற்கும் அதன் நெடிய விளைவுகளுக்கும் பொறுப்பேற்காத அதிகாரத்தின் சுயேட்சைப் போக்கை எதிர்த்து பின்நவீனத்துவம் தன் கலகக்குரலை முன்வைக்கிறது. குறிப்பாக பெண்ணியம், தலித்தியம், சூழலியம் போன்றவற்றின் மீதான கவனத்தையும், அவற்றிற்கான அரசியலையும் உடல்சார்ந்து எதிர்கலாச்சாரமாகவும், அத்துமீறலாகவும், விடுதலையாகவும் பேசும் படி வைத்தது. அதற்குப்பிறகு இங்குள்ள இடதுசாரி அறிவுஜீவிகள் அதைக் கவனத்தில் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இச்சூழலை 1984இல் ஆரம்பித்து தமிழில் அறிமுகப்படுத்தி உரையாடலாக மாற்றியவர்களில் அ.மார்க்ஸ், ரமேஷ்-பிரேம், நாகார்ஜூனன், ரவிக்குமார், ராஜன் குறை, சாருநிவேதிதா, எம்.டி.முத்துக்குமாரசாமி, சுந்தர் காளி போன்றோரையும் அதற்கான இலக்கிய மற்றும் கருத்தியல் இதழ்களாக 1987 மற்றும் 1990களில் வெளிப்பட்ட கிரணம், நிறப்பிரிகை, ஆய்வு போன்றவையும் விடியல், அடையாளம் பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள் பலவற்றையும் கோணங்கியின் கல்குதிரை இதழில் வந்த சில கட்டுரைகளையும் நாம் பட்டியலிட முடியும். வீ.அரசு, தொ.பரமசிவம், பேரா.கல்யாணி, க.பஞ்சாங்கம், ராஜ்கவுதமன், முருகேசபாண்டியன் போன்றோரும் சூழலில் இதுபற்றி பேசலானார்கள்.

அதற்குப் பிறகு, பின்நவீனத்துவத்தின் ஆதரவு மற்றும் எதிர்ப்புநிலைகளில் முத்துமோகன் உள்ளிட்ட மார்க்சிய நிலைப்பாடு கொண்டவர்களின் விமர்சனமும் தொடர்ந்தது. இதற்கு சற்று முன்பாகத்தான், அல்தூஸர் ஆரம்பித்து சாத்தர் போன்றோரின் அமைப்பியல் பின்னமைப்பியல் பற்றிப் பேசின தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, க.பூர்ண சந்திரன், பா.வெங்கடேசன் போன்றோரின் வழியாக நவீனத்துவம் தாண்டிய ஒரு கோட்பாடும் தமிழில் அறிமுகமானது. அதில் முக்கியமாகச் சொல்லப்பட்டது 'படைப்பாளி படைக்கும்போதே சமூகத்தை விமர்சிக்கிறான். வாசகன் வாசிக்கும்போதே படைப்பாளியை விமர்சிக்கிறான்.'

இலக்கியப் பிரதி தொட்டு எல்லாவகைப் பிரதிகளையும் ஆய்வுக்குட்படுத்தி படைப்பாளி இறந்துவிட்டான் என்று சொன்ன ரோலன் பார்த் போன்றோர் தமிழில் அறிமுகமாயினர். அனுபவிக்கவும் தீர்மானிக்கவும் சுதந்திரமுள்ள யாரொருவரின் வாழ்விலும் படைப்பாளி மொழி வழியே தலையிடுவது ஒரு மோசமான அதிகாரம் என்றும், படைப்பாளிக்குப் பிறகு வாசகன் வசம் பிரதி தொழிற்படுகிறது என்றும் ஒரு பிரதி இன்பத்தை ஒரு வாசகனுக்கு கொடுக்கமுடியாத ஒரு படைப்பு அனாவசியமானது என்றும் நாம் நீட்டித்துக் கொள்ளலாம்.

ஒற்றைக் கலாசாரத்தை மறுத்து பன்முகக் கலாச்சாரமாகவும், ஒற்றை வணிகத்தை எதிர்த்து பன்மைப்பட்ட வணிகமாகவும், ஒற்றை அடையாளத்தை மறுத்து, பன்முக அடையாளங்களாகவும், உடலை அதன் பழைய புறவய மான நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுப்பதன் வழி கலை இலக்கியம் ஒரு பின்நவீனத்துவ பிரதியற் செயற் பாடாய்(Text) மாறுவதை நாம் இனங்காட்டலாம்.

மேற்சொன்ன யாவற்றையுமே இந்திய சாதிய பின்புலங்களின் வழியாக ஆய்வு செய்யவும், அதேசமயம் அதை விட்டுவிட்டு முற்றிலுமாக வெளியேறியுள்ள பிரதி களாகவும் கட்டவிழ்ப்பு செய்யவேண்டியது அறிவுஜீவிகளின் பணியாக உள்ளது. 'ஒரு பிரதி தனக்கெதிரான வற்றை தன்னிலிருந்தே உருவாக்கிவிடுகிறது' என்று கட்டவிழ்ப்பு பற்றி ழாக் டெரிடா (Jacques Derrida) சொன்ன கருத்துக்கள் தமிழ்ச்சூழலை மிகவும் பாதித்திருப்பதாக நாம் முன்வைக்கலாம்.

இந்தப்படியில், இந்தியப் பிரதிகளில் முழுக்க பின்நவீனத்துவக் கூறுகளை மதங்களில் கண்டுபிடிப்பவர்களும், இடதுசாரித்தன்மைகளில் இனங்காண முயலுபவர் களும், தொன்மை இலக்கியங்களில் எடுத்துக்காட்டுப வர்களும், சமகால சமூக நிலைமைகளின் புரிதலற்றே கொள்கைரீதியாக அணுகுகிறார்கள். பின்நவீனத்துவம் ஒரு கருத்தியல் வகைமைதானேயொழிய, எந்த அமைப் பிற்குமான அடிப்படை சித்தாந்தம் அல்ல. மொத்தத்துவமல்ல பன்மைத்துவம்.

வாழும்போதே கற்றுக்கொள்வதுதான் சுதந்திரமே யொழிய எதிர்காலத்தில் கிடைக்குமென்று நிகழ்காலத் தில் செத்துமடிவதல்ல என்ற வகையில் இலக்கிய எழுத் துகள் விடுதலை குறித்து இயங்கும்போது பின்நவீனத்து வத்தின் வழியே பல புதிய பன்மைத்துவப்பட்ட கொண்டாட்டங்கள், புதிய தகவலமைப்புகள், மாற்று அறங்கள், மற்றமை மீதான கரிசனங்கள் யாவும் நடை முறைக்கு வரலாம் என்பது நம்பகத்தன்மையடைகிறது.

'மொழி என்பது உடல்சார்ந்த கூறு' என்று சொன்ன நோம்சாம்ஸ்கி (Noam Chomsky) இன்று உலகளவில் பேசப்படுகின்றார். 'மனித மூளையின் ஒரு பகுதிதான் மொழி' என அவர் வரையறுக்கும்போது அதன் இச்சை அனிச்சை செயல்பாடுகளில் மொழி எவ்வாறு இயங்குகிறது என்பது ஆய்விற்குரியதாகிறது. அவற்றின் இடைவெளிகளுக்குள்தான் புதிய மாற்றுகள் உருவாகும் பன்மைத்துவங்கள் உறங்கிக் கிடக்கின்றன. இவ்வாறு தொடரும் உரையாடல்களின் வழியில் மனித உடலை அதன் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து விடுதலை செய்வதே நிகழ்கால அரசியல் இலக்கியச் செயல் பாடாகும் என்ற அளவில் இந்தக் கட்டுரையை ஒழுங்கற்ற செப்பனிடப்படாத பிரதியாக வைத்து நாம் ஒன்றிணைப்புகளின் சாத்தியமற்ற நுண்ணரசியலின் வழி மையம் குலைக்கும் அடையாளங்களை எழுப்பி தாக்கு தலைத் தொடர்வது ஒரு பின்நவீனத்துவ செயல் பாடுதான் என்று தற்காலிகமாக முடித்து வைக்கலாம்.

(கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் நடைபெற்ற பின் நவீனத்துவக் கருத்தரங்கில் தேவேந்திரபூபதியால் வாசிக்கப்பட்ட கட்டுரை.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com