Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


ஒரு மாயாவி புரட்சி

முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழில் எஸ்.வி.ராஜதுரை

இடைநிலைச் சாதிகளுக்கு எதிராய் தலித்- பார்ப்பனக் கூட்டு என்று குறுக்குசால் ஓட்டு கிறவர்கள் மாயாவதியின் வெற்றியை தலித்துகளின் வெற்றியாய்க் கொண்டாடும் அபத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தலித்தாகிய மாயாவதி சேர்த்துள்ள 52 கோடி ரூபாய் சொத்துக்களும் அவருக்கு மட்டுமே பயன்படும் என்பதைப் போலத் தான் அவரது கையிலிருக்கும் அதிகாரமும். அதனால் தலித்துகளது அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீரப் போவதில்லை. சாதிய ஒடுக்கு முறையையும் தீண்டாமையையும் பேச்சள வில்கூட கைவிடும் தேவையின்றியே தலித் மாயாவதியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்ற மேல்சாதியின் கபடமே வென்றிருப்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

- ஆசிரியர் குழு


அண்மையில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அடைந்துள்ள வெற்றிக்குப் பல்வேறு முகாம்களிலிருந்து மட்டற்ற மகிழ்ச்சிப் பாராட்டுக்குக் கிடைத்துள்ளது. பாமர மக்கள் ‘வெற்றியாளர்களை வணங்குவது போல” பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவது இயல்பே. ஆனால் மேற்தோற்றத்தில் தெரியும் யதார்த்தத்துக்கு அப்பால் சென்று நிகழ்வுகளின் அர்த்தத்தை கண்டு பிடித்துச் சொல்லக்கூடியவர்கள் எனக் கருதப்படும் அறிவாளி வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்வது? இவர்களது பேருவகை, பாமர மக்களுக்கு ஏற்பட்டுள்ள உற்சாகத்தையும்கூட விஞ்சிவிட்டதாகத் தோன்றுகிறது. நமது அரசியல் ஆய்வாளர்கள் பிஎஸ்பி.யின் வெற்றி யில் ஒரு ‘சமூகப் புரட்சியை’க் காண்கின்றனர்;

வேறு சில அறிவாளிகளோ, இந்திய அரசியலில் உள்ள சாதி மற்றும் வர்க்கத்தையும்கூட இந்த வெற்றி கடந்து வந்துவிட்டதாகக் கருதுகின்றனர். மாயாவதி மீது பொழியப்படும் இத்தகைய பாராட்டைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏப்ரல்10,2007 இதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் தீபங்கர் குப்தா, மூல உத்தி (strategy) வகுப்பதில் மாயாவதி மாசேதுங்கிற்கு இணையாணவர் எனக் கூறுமளவிற்குச் சென்றுள்ளார். மூல உத்தியில் பங்கேற்கிற நேசச் சக்தி களை இடைவிடாமல் தேடுவதில் மாவோவையும் மாயாவதியையும் ஒப்பிடுகிறார் அவர். பணக்கார விவசாயிகளையும் நிலப் பிரபுக்களில் ஒரு பகுதியினரையும் மாவோ நேசச் சக்திகளாகக் கொண்டிருந்தது போன்றதுதான் மாயாவதி பாரதிய ஜனதாக் கட்சி யுடன் கூட்டுச் சேர்ந்ததாகும் என்று கூறுகிறார். அதே சமயம், மாவோ தனது முதன்மையான அக்கறைக்குரிய ஏழை விவசாயிகளை மறந்து விடாமல் இருந்தது போன்றதே, மாயாவதி தலித்துகளை மறந்து விடாமல் இருந்ததாகும் என்றும் கூறுகிறார்.

மாவோவையும் மாயாவதியையும் ஒப்பிடுவதற்கு முன்பு, மூல உத்திகளுக்கு முன்னிபந்தனையாக உள்ள குறிக்கோள்களைப் பற்றி தீபங்கர் குப்தா சிந்திந்திருக்க வேண்டும். சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கு மாவோ தனது குறிக்கோள்களை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தனது குறிக்கோள்கள் யாவை என்பதை மாயாவதி ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை - எந்த வழியிலாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்னும் குறிக்கோளை மறைமுகமாக உணர்த்தியதைத் தவிர.

தேர்தல்கள் ஒரு விளையாட்டுப் போட்டி என்று எடுத்துக் கொள்வோமேயானால், நீண்டகால அனுபவமிக்க போட்டியாளர்கள் அனைவரையும் மாயாவதி மண்ணைக் கவ்வ வைத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. தனிப்பட்ட அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு சாதனமே தேர்தல்கள் என்று வைத்துக் கொண்டால், மற்றவர்கள் எல்லோரையும் இந்த ஒட்டத்தில் அவர் மிகவும் பிந்தி வரும்படி செய்துவிட்டார் என்பதிலும் சந்தேகமில்லை.ஆனால், தேர்தல்கள் என்பன ஒடுக்கப் பட்ட மற்றும் ஏழை மக்களின் நன்மைக்காக சாதி/வர்க்க உறவுகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் வாகன மாகும் என்று வைத்துக் கொண்டால், மாயாவதி எவ்வித மன உறுத்தலுமின்றி அவற்றைக் கையாண்ட முறை ஏராளமான சந்தேகங்களைக் கிளப்புகிறது.

தலித்துகள், முஸ்லிம்கள், பார்ப்பனர்கள் ஆகியோரைக் கொண்ட வாக்கு வங்கியை உருவாக்கும் மாயாவதியின் மூல உத்தி ஒரு சமூகப் புரட்சி என்று போற்றப்படுகிறது. இப்படிப் போற்றுபவர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு நாற்ப தாண்டுகள் இந்த நாட்டை ஆள்வதற்குக் காங்கிரஸை அனுமதித்த மூலஉத்தியும் இதுதான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதை சமூகப் புரட்சி என்றோ வேறு புரட்சி என்றோ கூற யாரும் துணியமாட்டார்கள். அப்படியானால், மாயாவதி செய்துள்ளது ஒரு சமூகப் புரட்சி என்று ஏன் கூறவேண்டும்? காங்கிரஸ் ஆட்சியில், அதிகா ரத்தின் சூத்திரக் கயிறுகள் மேல்சாதி, மேல் வர்க்கத்தின் கைகளில் இருந்தன; ஆனால், பிஎஸ்பி.ஆட்சியில் அவை தலித்துகளின் கையில் இருக்கும் என்ற பதில் தரப்படுகிறது.

கறாராகச் சொல்லப்போனால், தலித்துகளின் கையில் அதிகாரம் இருக்கும் என்பது உண்மையல்ல. ஒரு தலித் முதலமைச்சரிடம் அதிகாரத்தின் கடிவாளங்கள் இருக்கின்றன என்பதும் தலித்களின் கைகளில் அதிகாரம் இருக்கிறது என்பதும் ஒன்றுதான் என்றால் இது காங்கிர சுக்கும் பொருந்தும். ஏனெனில், காங்கிரசும்கூட இது போன்ற பதவிகளுக்கு தலித் அதிர்ஷ்டச் சின்னங்களைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக 1960களில் ஆந்திர முதலமைச்சராக இருந்த தாமோதர் சஞ்சீவய்யாவை நினைவூட்டலாம். அந்தநாள் தொடங்கி, மாயாவதி உட்பட பல தலித் முதல மைச்சர்கள் வந்துள்ளனர். ஆனால், இதன்பொருள் அதி காரத்தின் சூத்திரக் கயிறுகள், இறுதியில் தலித்துகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன என்பதல்ல.

ஒரு தனிநபரையும் அவரது சாதி அல்லது கட்சியையும் சமமாகக் கருதும் தவறு ஒருபுறமிருக்க, பிஎஸ்பி. ஒரு தலித் கட்சி என்று கருதுவதே ஒரு கருத்துப் பிழைதான். எந்த ஒரு காலத்திலும் பிஎஸ்பியோ அல்லது அதன் முன் னோடிகளான பாம்செ•ப் (Bahujan and Minorities Employees’ Federation-BAMCEF) டி.எஸ்.4 (Dalit Soshit Sangarsh Samity-DS4) ஆகியன தம்மை தலித் கட்சி என்று ஒருபோதும் உரிமை கொண்டாடியதில்லை. பிஎஸ்பி. யின் பெயரே தெளிவாக எடுத்துரைப்பது போல அது ஒரு ‘பகுஜன்’(வெகுமக்கள்) கட்சிதான். இப்போது பிஎஸ்பி. ‘சர்வஜன்’ (அனைத்து மக்கள்) கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால், இனியும் அது பகுஜன் கட்சியாகக்கூட இருப்பதில்லை. இதன் காரணமாக, அதிகாரத்தின் கடி வாளங்கள் நிச்சயமாக வெகுமக்களிடம் இல்லை. கன்ஷி ராமும் மாயாவதியும் தலித்துகள் என்பதாலேயே, பிஎஸ்பியிடம் கிடைத்துள்ள அதிகாரம் தலித்துகளின் அதிகாரமாக ஆவதில்லை. கறாராகச் சொல்வதென்றால் அது மேல்சாதியினர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் உரியதாகவே இருக்கிறது.

ஒரு தொகுதியில் போட்டியிடுபவர்களில், மற்ற ஒவ் வொருவரைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெற்றவராகக் கரு தும் முறையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த முறையின் மூலமாக அடிப்படையான சாதி/வர்க்க உறவு களை மாற்றியமைக்கும் சமூகப் புரட்சியைக் கொண்டு வர முடியாது. இந்தியாவில் தேர்தல் வெற்றிகளுக்குப் பெரும்பான்மையினரின் செயலுக்கமற்ற சம்மதமே போதும். ஆனால் ஒரு சமூகப் புரட்சிக்கோ அவர்களது செயலூக்கமுள்ள பங்கேற்பு தேவை. இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற வளர்ச்சி, அதன் காரணமாகத் தனிப்பட்ட நலன்களைக் காக்கும் குழுக்கள் உருவாகும் வகையில் இந்திய அரசியல் சிதறுண்டு போகும் போக்கில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆகியன சாதி அரசியல் போன்ற பலகீனமான அம்சங்களில் வெளிப்படுகின்றன.

இந்தச் சூழலில், ஆட்சி புரிவதற்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை நகைப்புக்கிடமான வகையில் குறைந்துவிட்டது. தற்போது உத்திரப் பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பிஎஸ்பி. பெற்ற வாக்குகள் அந்த மாநிலத்திலுள்ள மொத்த வாக்குகளில் 13.8 % மட்டுமே. இதன் பொருள் 86.2 % வாக்காளர்கள் ஒன்று பிஎஸ்பியின் மீது உற்சாகம் காட்டாதவர்களாகவோ அல்லது அதற்கு எதிரானவர்களாகவோ இருந்தார்கள் என்பதுதான். தேர்தல் வெற்றி என்பது மக்களை அணிதிரட்டுவதைச் சாத்தி யமாக்கும் ஒரு விஷயமாக இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதுவேதான் மக்களின் அணி திரட்டு என்பதல்ல இதன் பொருள். மாயாவதியின் வானவில் அரசியல் (கூட்டணி), மதியூகமிக்க தேர்தல் கணக்கீடு என்பது மட்டுமே; அதை சமூகப் புரட்சியுடன் சேர்த்துக் குழப்பக்கூடாது.

தலித்துகளும் பிஎஸ்பியும்:

பிஎஸ்பி, பகுஜன் அடையாளத்தைத் தரித்துக்கொள்ள விரும்பினாலும், யதார்த்தத்தில் அதனுடைய சமூக அடித்தளமாக இருந்து வருகிறவர்கள் தலித்துகள் தாம். அந்தக் கட்சியின் வெற்றிகளுக்கு அஸ்திவாரம் அமைத்த வர்கள் அவர்கள்தாம். பாம்செ•ப், டிஎஸ்4 ஆகியன தோன்றிய நாட்களிலிருந்து பல ஆண்டுகள் மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கப்பட்ட அஸ்திவாரமே அது. உ.பி மக்கள்தொகையில் தலித்துகள் 21% ஆவர். இது தேசிய சராசரியான 16%க் காட்டிலும் மிகவும் அதி கம். இரு பிறப்பாளர்கள்(துவிஜா) எனப்படும் மேல் சாதி யினரை இகழ்வதற்காக உருவாக்கப்பட்ட ‘மனுவாதம்’ என்ற சொல்லாடலைக் கொண்டதும், தலித்துகளைத் தவிர பிற அனைவரையும் விலக்கி வைப்பதுமான ஒரு மூலஉத்தியை வகுத்த இந்த அமைப்புகளும் பிஎஸ்பி யும்., பின்னர் இந்த மூல உத்தியையும் வழிபாட்டுக்குரிய தலித் தலைவர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தலித் அடையாளத்தை உறுதிப்படுத்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதையும் ஒன்றிணைத்துத் திட்டமிட்டுச் செயல்பட்டன.

பிஎஸ்பி தொடக்கத்தில் பங்கேற்ற தேர்தல்களின்போது, கன்ஷிராம் தான் பேசிய கூட்டங்களுக்கு வருகை தந்தவர்களில் மேல்சாதியினர் இருந்தால், அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுவது வழக்கம். அந்த நாட்களில் மேல்சாதிக்காரர்களை (துவிஜாக்கள்) இழித்துக் கூறும் ஏராளமான முழக்கங்களை பிஎஸ்பி., பயன்படுத்தியது. இப்படி மேல்சாதிக்காரர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த மூலஉத்தி தலித்துகளுக்கு ஒரு அடையாளத்தையும் சுயநம்பிக்கையையும் உருவாக்கியது. இந்த மைய வாக்கு வங்கியைக் கொண்டு பிஎஸ்பியால் சில முஸ்லிம்களை யும் கீழ் சாதிகள் சிலவற்றையும் தன் பக்கம் ஈர்க்கவும் தேர்தல்களில் தனது முத்திரையைப் பதிக்கவும் முடிந்தது.

உத்திரப் பிரதேசத்தில் ஒரு தலித் ‘மகளை’ முதலமைச்சர் பதவியில் அமர்த்துவதற்காக பிஎஸ்பி., சமயோசிதத் தந்திரங்களை மேற்கொண்டபோது, அது தலித்துகளின் நீண்ட காலக் கனவு நனவாக்கப்படுவதாகப் பொருள்பட்டது. தலித்துகள், தாங்கள் ஏதோ அந்த மாநிலத்தின் ஆட்சியாளர்களாக ஆகிவிட்டதாகக் கருதுகிறார்கள். இந்த அசைக்க முடியாத தலித் அடித்தளத்தை பிஎஸ்பி தனது ஆதார அடித்தளமாகக் கொண்டிருந்ததால் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் தண்டனைக்கும் ஆளாகாமல், மூல உத்தி சார்ந்த எவ்விதக் குட்டிக்கரணங்களையும் அக் கட்சியால் மேற்கொள்ள முடிந்தது. தனது வாக்கு வங்கியின் எல்லைகளைத் தொட்டுவிட்டதையும் அந்த வங்கி கொஞ்சம் விரிவடைந்தால் தன்னால் மேலும் சில இடங் களில் வெற்றிபெற முடியும் என்பதையும் அக்கட்சி உணர்ந்ததும், அது ஒரு முழுமையான குட்டிக்கரணம் அடித்து, மேல்சாதிகளுடன் நட்புப் பூண முடிவு செய்தது.

அக்கட்சி பாஜக.வுடன் கூட்டுச் சேர்ந்தபோதும், 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடூரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரேந்திர மோடியை உலகமே கண்டனம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு ஆதரவாக மாயாவதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோதும், பிஎஸ்பியின் தேர்தல் சின்னமான நீல நிற யானை, அம்பேத்கரின் போராட்டச் சின்னமாக அல்லது எழுச்சி பெற்று வரும் தலித்துகளின் வலிமை யின் சின்னமாக இருந்த தன்மை முற்றுப் பெற்று, கணேஷாவின்(விநாயகன்) உருத்தோற்றமாகவும் பின்னர் மும்மூர்த்திகளின் (சிவன்,பிரம்ம,விஷ்ணு) உருத் தோற்றமாகவும் ஆக்கப்பட்ட போதும், மாயாவதி பகு ஜன் ஆடையைத் தூக்கியெறிந்துவிட்டு, ஒருகாலத்தில் அவரால் ‘மனுவாதிகள்’ எனத் தூற்றப்பட்டவர்களோடு கைகோர்த்துக் கொண்டபோதும் தலித்துகள் அக்கட்சி யுடனேயே உறுதியாக நின்றார்கள்.

‘சர்வஜன்’கட்சி என்பதற்கு என்ன பொருள்? எந்தவொரு அரசியல் ஆய்வாளரும் இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. சாதிகளிடையேயான ஒத்துழைப்பு, வர்க்கங்க ளுக்கிடையிலான ஒத்துழைப்பு என்பதைக் குறிக்கும் இந்தச்சொல்(சர்வஜன்), ஒடுக்கப்படும் மற்றும் சுரண்டப்படும் மக்களின் சாதி அல்லது வர்க்கப் போராட்டத்திற்கு அடிப்படையிலேயே பகையானதாகும். ‘சர்வஜன்’ என் பது சமுதாயத்திலுள்ள முரண்பாடுகளை மறைக்கப் பார்க்கிறது.அப்படியானால், பிஎஸ்பி.இருந்து வருவதற் கான முகாந்திரம்தான் என்ன என்று சிலர் கேட்கலாம். தலித்துகளின் நண்பர்கள் யார், எதிர்கள் யார் என்பதை வரையறுக்காமல், தலித்துகளின் போராட்டம் என்பது எப்படி இருக்க முடியும்? இந்தப் பிரச்சனைகளையெல் லாம் மூடி மறைக்கும் ‘சர்வஜன்’என்பது உண்மையில் தலித்துகளின் போராட்டத்தையே மறுக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க நலன்களைக் காக்க, சமுதாயத் திலுள்ள முரண்பாடுகளை மூடி மறைத்துவிட்டு, நழுவிச் சென்றுவிடுவதற்குத் தோதுவாக உள்ள இத்தகைய சொற் களிலும் பெயர்களிலும் தஞ்சம் புகுவதற்கு பிஎஸ்பியின் இந்த அணுகுமுறை உகந்ததாக இருக்கிறது.

இந்த முரண்பாடுகளைத் தங்களது போராட்டங்களின் குறியிலக்குகளாகக் கொண்டுள்ள கீழ் வர்க்கங்களுக்கு இத்தகைய சொற்கள் பயனற்றவை. ‘சர்வஜன்’என்னும் சொல்லில் சங் பரிவாரம் பயன்படுத்தும் ‘சமரசத்தா’ என்னும் சொல்லின் வாடை அடிக்கிறது. ஆக, தான் ஒரு சர்வஜன் கட்சியாக மாறிவிட்டதாக பிஎஸ்பி கூறிக் கொள்கையில், அது ஒரு ஆளும் வர்க்கக் கட்சியாக மட்டுமின்றி, ஆளும் சாதிக் கட்சியாகவும் மாறி விட்டதை ஒப்புக் கொள்கிறது.

சமரசத்தாவுக்கும் சர்வஜன்னுக்குமுள்ள ஒத்த தன்மைகள்:

பிஎஸ்பியின் வெற்றிக்குத் தலித்துகளின் ஆதரவு மட்டு மின்றி, உத்திரப் பிரதேசத்துக்கே உரிய தனிச்சிறப்பான காரணிகளும் துணை புரிந்திருக்கின்றன. முலாயம் சிங் கின் கேடுகெட்ட ஆட்சி, உ.பி. மக்களில் பெரும்பகுதியினரை சமாஜ்வாதிக் கட்சிக்கு விசுவாசமாக உள்ள சமூக அடித்தளத்திலிருந்து வெகுதூரம் அந்நியப்படுத்தி இருக் கிறது. போட்டியில் வெற்றிபெறக்கூடிய ஒரு குதிரை அவர்களுக்குத் தேவைப்பட்டது. பிஎஸ்பிதான் அந்தக் குதிரை என்பதை அவர்கள் கண்டனர். மற்ற இரண்டு முதன்மையான கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் சமாஜ்வாதிக் கட்சிக்கு மாற்றாக அமையமுடியாத அளவுக்கு வலுக்குன்றியவையாக இருந்தன.

முலாயம் சிங்கின் ‘ஜென்ம எதிரி’ என மாயாவதி பெற்றிருந்த அடையாளம், யாதவ குண்டர்களின் ரௌடித்தனத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மாயாவதி முரட்டுத் துணிச்ச லுடன் நடந்துகொண்டிருந்த விதம், தலித்துகளிடையே அவருக்குள்ள உறுதியான ஆதரவு அடித்தளம் ஆகியவற்றின் காரணமாக, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சி களையும் அவரால் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய ஒரே மாற்றாக அமைவது அவருக்கு எளிதாயிற்று. தேர்தல் அரசியலில் இருந்த இந்த சாதகமான சூழலில், மாயாவதிக்கு மிகவும் தேவைப்பட்டிருந்த கூடுதலான வாக்குகளைப் பெறுவ தற்கு சாதி அமைப்பில் உருவாக்கிய சாதிக் கூட்டணி திறம்படச் செயல்பட்டது. மேல்சாதிகளுடனான சமூகக் கூட்டணியும், அவர்களது எண்ணிக்கைக்குக் அதிகமாக விகிதப் பொருத்தமற்ற வகையில் அதிக இடங்களை வழங்கியதும், கூடுதல் வாக்குகளைப் பெறுதல் என்ற பிஎஸ்பியின் நோக்கத்தை நிறைவேற்றி அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தின.

மாயாவதியின் அரசியல் மதியூமம்தான் இந்த மூல உத்திக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது பார்ப்பனர்களின் மதியூகமாகவும் இருக்க முடியும் என்பது மறக்கப்பட்டு விடுகிறது. உத்திரப் பிரதேசத்திலுள்ள பார்ப்பனர்கள், ஆளும் சாதி என்ற நிலையிலிருந்து அரசியல் அனாமதேயமாக மாறுமளவிற்கு அவர்களது அந்தஸ்து சரிந்திருந்தது என்பதைக் கருத்தில் கொள்கையில், அந்த மாநிலத்தில் ஆளும் சாதி என்ற நிலையை மீட்டெடுப்பதில் அவர்களுக்கு இருந்த ஆர்வமும் அக்கறையும் மாயாவதியின் ஆசைகளையும்விட முனைப்பாக இருந்திருக்கக்கூடும் என்பது புரியும். மரபாக அவர்களது கட்சியாக இருந்த பாஜக., உடனடியான எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பே இல்லை.

உண்மையில், பிஎஸ்பியின் மூலஉத்தி, இந்துக்களிடையே பரந்த ஒற்றுமையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘சமர சத்தா’ என்னும் மூலஉத்தியை வெகுவாக ஒத்திருக்கிறது. பார்ப்பனர்களுக்கும் மேல்சாதியினருக்கும் கிடைத்த நடைமுறைச் சாத்தியமான ஒரே மாற்று மாயாவதியுடன் கைகோர்ப்பது மட்டுமே. மாயாவதியின் பிஎஸ்பியின் முதுகில் சவாரி செய்துகொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் உண்மையில் முடிவு செய்திருப்பார் களேயானால், அது வரலாற்றின் சக்கரத்தைப் பின் திசையில் தள்ளுவதாக அமைந்திருக்குமல்லவா? அது மாயாவதியின் ‘சமூகப் புரட்சிக்குப்’ பதிலாக பார்ப்பனர்களின் எதிர்ப்புரட்சியாக அமைந்திருக்குமல்லவா?

தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, தலித்துகளுக்கும் பார்ப்பனர்களுக்குமிடையிலான இந்த சந்தர்ப்பவாதக் கூட்டுக்குச் சிறிதளவுகூடத் தடைகள் இருக்கவில்லை. இந்த இரண்டு சாதிகளும் சாதித் தொடரமைப்பில் இரண்டு எதிரெதிர் முனைகளில் இருப்பதால், அவற்றுக்கிடையே சமூகரீதியான பரஸ்பரத் தொடர்புகள் அதிகம் இல்லை. எனவே அவற்றிடையே வெளிப்படையாகத் தெரியும் முரண்பாடுகளும் தென்படுவதில்லை.

எனவே பிற மாநிலங்களிலும் இதேபோன்ற கூட்டணியை ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். எதிர்வரும் தேர்தல்களில் தங்கள் மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டணிகளை ஏற்படுத் துவதைப் பற்றி அரசியல்வாதிகள் ஏற்கனவே கனவு காணத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்களின் அவப்பேறு என்னவென்றால், உத்திரப்பிரதேசத்தின் நடத்தப் பட்ட இந்தப் பரிசோதனையை வேறு எங்கும் திரும்பச் செய்ய முடியாது என்பதுதான். இதற்குக் காரணம் மிக எளிதானது. அதாவது, உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வியக்க வைக்கும் தேர்தல் முடிவுக்குக் காரணமான நிலைமைகள் ஒன்றுகூட பிற மாநிலங்களில் இல்லை. எனினும், இந்தத் தேர்தல் முடிவு எல்லாப் பகுதிகளிலும் பிஎஸ்பியின் செல்வாக்கை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மாயாவதி டெல்லியின் மீது கண் வைத்திருக்கிறார். டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான காலக்கெடு எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. எனினும், 2009 இல் அவர் பிரதமராகிவிடுவார் என தலித்துகள் ஏற்க னவே நினைக்கத் தொடங்கிவிட்டனர். நாட்டு நிலவரங்கள் காட்டுவதுபோல, அடுத்த பொதுத்தேர்தல்களில், இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான அலை இருக்கும். ஆனால், அந்த அலையால் எற்படும் பலன்கள் எந்தவொரு முதன்மையான கட்சிக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று தோன்றவில்லை. இந்தப் பலன்களில் பிற கட்சிகளைவிட அதிகமான பங்கைப் பெறப் போவது பிஎஸ்பிதான் என்பது நிச்சயம். இதைக் கருத்தில் கொள்கையில்,நம்மை நம்பும்படி செய்கிற தற்போதைய ஊகங்ளைவிட மேலும் விரைவாக இந்த தலித் கனவு நனவாகக் கூடும். ஆனால் இந்த நனவாகும் இந்தக் கனவு தலித் ஆட்சியைப் பார்க்குமா? அது ஒரு புரட்சியாக இருக்குமா? இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் சோகமான எதிர்மறையான பதில்கள் மட்டுமே இருக்கின்றன.

எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஜூன் 9-15 இதழில் வெளியானக் கட்டுரையின் தமிழாக்கம் இது. இருதய அறுவைச் சிகிச்சையினால் கடுமையாக தளர்வுற்றிருக்கும் நிலையிலும், புதுவிசை மீதுள்ள அக்கறையில் மொழிபெயர்த்து உதவிய தோழர். எஸ்.வி.ஆர் அவர்களுக்கு நன்றி.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com