Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


விடியல்

தஞ்சை சாம்பான்

“இந்த வருசம் எப்படியும் ஆத்தா சன்னதியில ஆயிக்கு மொட்டப் போட்டு முடி எடுத்துடனும், கோழி அறுத்து படையல் போட்டு நாலு பானி பரதேசிக்கு சோறு போடனுமுய்யா” என்று இரவில் புருஷனும் பொஞ்சாதியும் பேசிக் கொண்டது ஞாபகம் வரவே சட்டென்று மாரி கண்விழித்தார். “யாத்தா யாத்தா” என்று மகள் கண்ணுமதியை எழுப்பினார். ஆயா, நான் புதுக்குளத்துக்கு கீழண்ட இருக்குற மேல வீட்டார் நாத்தாங்காலுல நாத்துப் பறிக்கப் போறேன். கோயாவ வெள்ளன ரெண்டு கஞ்சிக் கொண்டாற சொல்லு என்றார். ஏப்பா, வாய கொப்புளிப்பா, நீராரங் கொண்டாறேன் குடிச்சுப் புட்டுப் போப்பா என்றாள் கண்ணுமதி. இல்லாத்தா நான் பாலத்துலப் போயி சுடு தண்ணிக் குடிச்சிப்புட்டு, வெத்தல, செருவு வாங்கிட்டுப் போறேன். நான் போயி பச்சத் தண்ணியிலதான் உக்காரனும், காலநேரம் நீராகாரம் குடிச்சா குளிரா இருக்கும் என்று சொல்லி புறப்பட்டார்.

மலையாள பகவதி அம்மன் பிராமிணாள் காபி கிளப் மட்டும் தயார் நிலையில் இருந்தது. மலையாளத்தார் கடையும், வீடும் ஒண்ணேதான். சாமி சுடு தண்ணி இருக்கா போடுங்க என்றார் மாரி. ஏ மாரி கிளாச எடுத்தாடா, தண்ணி ஊத்துறேன் கழுவிப்புடு என்றார். டீயை குடித்து விட்டு நாற்றாங்கால் நோக்கி நடந்தார் மாரி. மனைவி சோறுகொண்டு வருவதற்குள் நாற்று இருக்கும் தட்டோடியை பெரும்பகுதி முடித்திருந்தார். ஏ கண்ணாத்தா, வந்து காலப் பசியாறுய்யா என்று மாரிமனைவி அழைத்தார். தமது முதல் குழந்தையின் பெயரை வைத்து கணவனை அழைக்கும் பழக்கம் இவர்களிடம் உள்ளது. யோவ், உப்பு பத்தலன்னா வேடு கட்டுன துணிமுனையில முடிஞ்சி வச்சிருக்கேன், போட்டுக்கய்யா என்றாள்.

மாரி சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஏம்புள்ள வெத்தல செருவு வாங்கியாந்தியா என்றார். யாய்யா நான் வெத்தலப் பாக்கு கொடுய்யான்னு எத்தன தடவக் கேட்டும் அந்த கடக்காரரு பதிலுகூட சொல்லாம அங்கிட்டு இங்கிட்டுமா போறாரு. அது கெடக்கு நாட்டரக் கோட்டையிலயாவது போய் வாங்கிக்கலாமுன்னு வந்துட்டேன்யா என்றாள். ஒரு பறப்பெண்ணிடம் காலை வியாபாரம் செய்வதா என்று இவள் பேசியதை காதில் வாங்காததுபோல கடைக்காரர் போக்குக் காட்டியது இவளுக்குத் தெரியாது. ஏ புள்ள காலையிலிருந்து மண்டிப்போட்டு நாத்துப் பறிச்சது காலெல்லாம் கொரக்குழி இழுக்குது. செத்த காலாறப் போயி வெத்தல செருவு வாங்கியாறேன் என்றவாறு கடைப்பக்கம் போனார்.

உச்சி வெயில் நாற்றாங்கால் நீரை சூடாக்கி இருந்தது. இங்கரு புள்ள, தண்ணி சூடாயிடுச்சி, இதுக்கு மேல நாத்தாங்காலுல உட்கார முடியாது. தொடயெல்லாம் கொப்புளிச்சிடும். நீ நாத்துக்கட்ட தனித்தனியா எண்ணிப்போடு என்றவாறு வேலையில் மும்முரமா இருந்தார். இங்க பாரு இருவது கட்டும், அஞ்சுப் பொனயலும் (ஐந்து முடிச்சு ஒரு பொனையல், நூறுமுடிச்சு ஒருகட்டு) இருக்கு. அஞ்சுப் பொனயலுக்கும் காசா கொடுக்கப் போறாக போதும் வாய்யா என்றாள்.

இவள் அழைக்கவும், மேலவூட்டார் வரவும் சரியாக இருந்தது. என்ன புள்ளகர ஏறிட்டியளா என்றவாறு நாற்றாங்காலில் இறங்கி ஒவ்வொரு கட்டிலும் உள்ள நாற்று முடிச்சுகளை தூக்கிப் பார்த்தார். நாத்து முடி சுத்தமாக இருந்தது. இருந்தாலும் ஏதாயினும் சொல்லவேண்டும் என்பதற்காகவே, எல மாரி கொஞ்சம் நல்லா அலசி போட்டா என்னடா என்றார். மாரி ஒரு முடிச்சை எடுத்து இங்கப் பாத்தியளா, வேரு பூப்போல இருக்கு, இதுக்கு மேல அலசினா நாத்து இடுப்பு ஒடிஞ்சிப் போயிடும் என்றவாறு நாற்றங்காலை விட்டு ஒட்டிய வயிற்றோடும், தொங்கிய கோவணத்தோடும் சேற்றுநீர் சொட்டச்சொட்ட புதுக் குளத்தில் இறங்கினார்.

புதுக்குளம் வயக்காடுகளில் வேலை பார்த்த யாவரும் இறங்கிக் குளிக்கக்கூடியதாக இருந்தாலும் குளத்திலுள்ள சொரியாங்கல்லில் இவர்கள் துணி துவைக்கவோ, கசக்கவோ முடியாது. எனவே மாரி தண்ணீரில் அமர்ந்து கட்டியிருந்த துணியை உருவி முழங்கால் முட்டியில் வைத்து கும்மி கசக்கினார். இவர் குளித்து கரையேறவும் அவள் கணக்குப் பார்த்து காசு வாங்கி வரவும் சரியாக இருந்தது. ஆளுக்கொரு சுடு தண்ணி குடுச்சிட்டுப் போவம் வாயா என்றாள்.

ஏ சித்தப்பு பசி அகோரமாயிருக்கு, சீக்கிரம் வண்டிய பூட்டுய்யா போவோம் என்று செங்கான் மகனைத் துரிதப்படுத்தினான் மெலட்ரான் மவன். நா வூட்டுக்கிட்ட வந்ததும் எறங்கிடறேன் நீ போயி வண்டிய அவுத்துவுட்டுட்டு வந்துடுயா என்றான் மெலட்ரான் மவன். வண்டி ஆற்றுப்பாலம் கடந்து ஐய்யரு கடைப்பக்கம் சென்றபோது ஆஜானுபாகுவான, முழுக்கால் சட்டை அணிந்த இருவர் வண்டியை மறித்தனர். ஏய் நீங்க எந்த ஊரு என்றார்கள். இடந்தெரியாமல் ஏதோ கேட்பார்கள் போலிருக்கு என்ற யூகத்தில் ஏன் இந்த ஊருதான் என்றான். ஏய் வண்டியை ஓரமா நிறுத்துடா வண்டியவுட்டு கீழிறங்கி பதில் சொல்லமாட்டியா என்றதும் செங்கான்மவன் பதற்றத்தோடு கீழிறங்கி, அய்யா அவன் சின்னப்புள்ள ஏதோ தெரிஞ்சு தெரியாம பதிலு சொல்லிப்புட்டான், யாரு வூட்டுக்குப் போவனும் சொல்லுங்க சாமி என்றார்.

யாரு வூட்டுக்கும் போவ வரல. நாங்க தீண்டாமை ஒழிப்பு போலிஸ். கேக்கறதுக்கு பொய்யில்லாம பதில் சொல்லணும், இல்ல ஒடம்புத்தோல உறிசிப்புடுவம் என்றார் ஒருத்தர். போலிஸ் என்றதும் செங்கான்மவன் ஒடம்பெல்லாம் ஆட்டம் கண்டது. அய்யா சாமி இவன் யங்கண்ண மவந்தான். படிச்ச பய. அவன கேளுங்க சாமி, என்ன உட்டுடுங்க என்றார். அதட்டிக் கேட்டால் காரியம் கெட்டுவிடும் என்று நைச்சியமாக, தம்பி எங்க படிக்கிறே என்றார். இந்த ஊருலதாங்க என்றான். எத்தனாவது படிக்கிற?. பத்தாவது. சரி கேக்கிறதுக்கு பொய்யில்லாம பதில் சொல்லு. சரிங்க சார் என்றான்.

நீங்க இங்க டீக்கடையில எங்கயிருந்து டீ குடிப்பீங்க?. அந்த சுவத்து ஓரமா சாப்புக் கொட்டாயி மாதிரி இருக்கே அங்கன தான் என்றான். சரி, போய் நீங்க ரெண்டுபேரும் டீ கேக்கணும். நாங்க காசு தர்றோம் என்று புது ஒரு ரூபாய் நோட்டை நீட்டினார் அதிகாரி. தயக்கத்தோடு பெற்றுக் கொண்ட மெலட்ரான்மவன் அய்யரூட்டம்மா ரெண்டு டீ போடுங்க என்றான். ஏல அந்த கிளாச எடுத்தாடா தண்ணி ஊத்துறேன் கழுவு என்றாள். டீயை வாங்கி கிளாசில் வைத்திருந்தபோது போலிஸ் இருவரும் கடைக்குள் நுழைந்து ரெண்டு டீ குடுங்கம்மா என்றனர்.

ஏம்மா இந்தாளுங்க யார் என்று கேட்டார் ஒருத்தர். இவனுவளா, பறையவூட்டுப் பயலுவ என்றாள். இந்த ஆள்களுக்கு இப்படித்தான் டீ கொடுப்பியளா? ஆமா, அந்த மாடத்து வழியா கொடுப்போம் எடுத்துக்குவானுவ என்றதும், அப்படியா எங்க ஒங்க கடை லைசென்ச எடுங்க என்றார் ஒருத்தர். இவர்களை யாரென்று அறியாததால் லைசென்செல்லாம் எங்காத்துகாரருகிட்டதான் கேக்கணும் என்றாள். தாங்கள் யார் என்று போலிசார் தெரிவித்ததும் அவள் திகைத்து நின்றாள். என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதேதோ உளறினாள். அம்மா ஒங்க கடையில ரெட்டை கிளாசு இருப்பது ருசுவாயிடுச்சு. உங்க மேலயும், இந்த கடைமேலயும் கேஸ் போட்டுருக்கோம், வழக்கு முடியுமட்டும் கடைய திறக்கக்கூடாது. நாளைகாலை 10 மணிக்கெல்லாம் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு வந்துடனும் என்று கூறிவிட்டு அடுத்திருந்த வீரமுண்டார் கடையை நோக்கிச் சென்றார்கள்.

அங்கேயும் அவர்கள் மீதும் வழக்கு. நாளை காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு வந்துடனும் என்று கூறினர். மேல்சாதிக்காரரான இக்கடைக்காரர் சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றார். வந்தவர்கள் எதற்கும் மசியவில்லை. நாளை காலை கோர்ட்டுக்கு வந்துவிடுவதாகவும் இன்று போட்ட பலகாரங்களை விற்றுவிடுவதாகவும் கூறவே வழக்கு முடிந்த பின்தான் கடை திறக்க வேண்டுமென்று கண்டிப்பாகக் கூறியதை ஏற்றுக்கொண்டார் கடைக்காரர்.

பாலத்திலுள்ள தன்கடையை நோக்கி போலிஸ் வருவதைக் கண்ட கோனார் வேகமாக ஓடிவந்து தனித்தனியாக இருந்த கிளாஸ்களையும் டபரா செட்டுகளையும் ஒன்று சேர்த்தார். இதை கவனித்துக்கொண்டே வந்த போலிசார் அவரை அருகில் அழைத்து, எதற்கு டவரா செட், டீ கிளாசையெல்லாம் ஒன்னா சேத்தீங்க என்று கேட்டனர்.

நான் சேக்கலையே என்றதும் ஒரு போலிஸ்காரர் ஓங்கி அவரது வலது கன்னத்தில் பளாரென அறைந்தார். அய்யோ தெரியாமே செஞ்சுட்டேன் என்னை உட்டுடுங்கோ என்றார் கோனார். எதுக்குய்யா இப்படி செஞ்சே என்றதும் எல்லாம் ஒன்னா இருக்கட்டுமேன்னுதான்... என்றவுடன் இத்தனைநாள் என்னய்யா செஞ்சே? என்றனர். அடிபட்ட பயத்தில் ஏதும் பேசாமல் மௌனமாய் நின்றார். ஆனால் இதோ இந்த கடை வைத்திருப்பவர் முத்தரையர் (அம்பலக்காரர்). இங்கு ஏற்கனவே கண்ணாடி கிளாஸ் அகற்றப்பட்டு தலித்களுக்கு டபரா செட்களில் கொடுத்தாலும் அவர்களுக்கானது தனியே தான் இருக்கும். இதில் எந்த ரூசுவும் கிடைக்காததால் கடைக்காரரிடம் தனித்தனியா வச்சிருந்தா உங்க மேலயும் வழக்கு வரும்னு எச்சரித்துச் சென்றனர்.

***

இது எதுவுமறியாத மாரியும் மனைவியும் டீக்கடை வாயில் பக்கம் வந்து நின்று, ரெண்டு காராச்சேவு பொட்டலம் கொடுங்கோ என்றனர். கடைக்காரர், வாங்க வாங்க சம்பந்தி என்ன வாசலிலே நின்னுகிட்டு கேக்கிறீய, உள்ளே வாங்கோ. வந்து பெஞ்சில உக்காருங்கோ என்றார். ஏங்க ஒங்களுக்கு கிண்டல் பண்ண நாங்கதான் கெடச்சமாக்கும், பொட்டலம் டீ கொடுங்கோ என்றாள் மாரி மனைவி. ஏய் நிறுத்துடி எத்தனை நாளா இப்படி செய்யறதா முடிவு செஞ்சிங்கோ என்றார்.

காலையில் நடந்த சம்பவத்தைத்தான் இப்படி கூறுகிறார் எனக் கருதி, இல்லங்க ரெண்டு மூனுதடவ கேட்டேன் நீங்க பேசாம அங்கிட்டும் இங்கிட்டும் போனதப் பாத்துப்புட்டு கை வேலையா இருப்பிய போலிருக்குன்னு போயிட்டேன், வேற ஒன்னுமில்லேங்க என்றாள். ஏய் மாரி பேசாம போவியளா? இல்ல முதுகு தோலு பரபரங்குதா? என்றார். என்னமோ வேத்தாளுகிட்ட மாதிரி பேசுறாரு, பசி கெரக்கந்தட்டுதேனு கேட்டாக்கா பெரிசா பேசுறாக. இது கெடக்கு வாயா போவோம் என்று மாரியோடு வீடு திரும்பினாள்.

அன்று மதியம் வேலை முடித்த மற்றவர்கள் எப்போதும் போல் வீரமுண்டார் கடைக்குச் சென்று ஐயா நாலு காராச்சேவு பொட்டலம் கொடுங்க என்று கேட்டார்கள். வீரமுண்டார் வாங்க வாங்க என்ன வாசலிலே நிக்கிறீங்க, உள்ளே வந்து உட்காருங்க, யோவ் பெஞ்சவுட்டு எந்திரிங்க.. ஒறமொற வந்துருக்கு மரியாதை இல்லாம உட்காந்திருக்கீங்க என்றார். பொட்டலம் கேட்ட பூசாரி, என்ன இம்புட்டு மரியாதி. போதும்போதும் லேவுடி பண்ணுனது, பொட்டலம் கொடுங்க என்றார்.

ஏலே பொக்கட்டி உள்ளே வாடா, வந்து உட்காருடா என்றார். எங்களுக்கு அவ்வளவு பெரிய பொல்லாப்பு வேண்டாமுங்க, எப்பவும் போல குடுங்க என்றார் பூசாரி. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது வாங்க என்றார் கடைக்காரர். உச்சிவேளை பசி உக்கிரமா இருக்கு லேவுடி பண்ணாதீய குடுங்க என்றார் பூசாரி. ஆமாடா, நீ ஏ மாமன் மச்சான் ஒன்ன லேவுடி பண்ண என்றவுடன், பொறுமையிழந்த பூசாரி நேரே கடைக்குள் நுழைந்தார். இதைச் சற்றும் எதிர்பாராத கடைக்காரர் செய்வதறியாது நின்றார். பூசாரி, ஓய் வாங்கய்யா இப்படி ஓரமா நின்னு குடிச்சிட்டு போவோம் என்று தன்னோடு வந்தவர்களை அழைத்தார். கடைக்காரர், இல்ல சம்பந்திபுரம் இந்த பெஞ்சில உட்காருங்க கீழ குந்தப்புடாது என்றதும் சுதாரித்து வெளியே வந்தார் பூசாரி.

வீரமுண்டார் வம்பிழுத்து ஏதோ செய்யப்போவது மட்டும் பூசாரியோடு வந்த அனைவருக்கும் தெரிந்தது. அய்யரு கடைக்கா போறீங்க போங்கடா, உங்களுக்கு டீ, பலகாரம் கொடுத்துட்டு, அய்யரு இந்த ஊருல இருக்குறத நான் பாக்குறேன் என்றார் கடைக்காரர். நேராக அய்யரு கடைக்குச் சென்றார்கள். ஏ பொக்கட்டி உங்களுக்கு யாருக்கும் எந்த சாமானும் கொடுக்கக்கூடாதுன்னு ஊருல ஆளு உட்டாக, எங்கடையில ரெட்ட கிளாசு இருக்குன்னு மெலட்ரான் மவன் தீண்டாமை ஒழிப்பு போலிசைக் கொண்டாந்து காட்டிவுட்டுட்டான். வீரமுண்டார் கடையும்தான். நாளைக்கு பட்டுக் கோட்டை கோர்ட்டுக்குப் போவனும். என்ன பாவம் உங்களுக்குச் செஞ்சேன்? இப்படி பண்ணிட்டீங்களே? என்றார் அய்யர்.

இவர்களுக்கு விஷயம் புரிந்தது. அய்யா நாங்க அப்படியெல்லாம் எந்த துரோவமும் செய்யமாட்டோம். ஏதோ படிச்சப்பய சின்னப்புள்ளத்தனமா செஞ்சிருப்பான். கோவிச்சிக்காதீங்க சாமி, நாங்க கண்டிக்குறோம் என்றார்கள். இதன்பிறகு டீ குடிக்கும் எண்ணமின்றி வீடு திரும்பினர்.

அன்றிரவு தெருக்கூட்டம் நடந்தது. மெலட்ரான் மவனை அனைவரும் ஆத்திரத்தோடு ஏசினர். பெரியவர் “ஏல என்னடா ஊரு பொல்லாப்ப இழுத்து வச்சிட்ட, காலங்காலமா நாம அவகள அண்டிதானே வாழுறோம், நாளைக்கு ஊரு கேட்டா நாம என்னடா பதிலு சொல்லுறது? நீ ஒரு ஆளு செஞ்சது எல்லாருக்கும் பொல்லாப்பா போச்சு. எங்கக்கிட்ட ஒரு வார்த்த சொன்னா என்னடா? இதுக்குத்தாண்டா “சின்ன மனுஷன் சிநேகிதத்துக்கு பெரிய மனுஷன் செருப்படி தேவலாம்''னு சொல்லுவாக.

செங்கான்மவன் எழுந்து, யோவ் பெரியாளு யான்யா ஒருபாவமும் அறியாதவனைப் போட்டு இந்தப் பேச்சு பேசுறீய, நானும் அவனுந்தான் தெற்கி தெராருக்கு ஏரு உழுதுட்டு வண்டி ஓட்டியாந்தோம். அய்யரு கடைக்கு மேலண்ட பக்கமா ரெண்டு போலிசுக்காரன் மறிச்சு வண்டிய நிறுத்தச் சொன்னான் என்பதில் ஆரம்பித்து நடந்ததையெல்லாம் விலாவாரியா சொல்லி முடித்தான்.

கள்ள வூட்டார்க அடிச்சாலும் அடிய வாங்கிக்கிட்டு ஒதியம் பட்டையும் மஞ்சத்தூளும்தான் நமக்குத் தெரிஞ்ச வைத்தியம். நாம எப்ப போலிசு, கேசுன்னு போனோம்? என்னமோ சருக்காரான் கேட்டதற்கு பதிலு சொன்னோம். சொல்ல லேன்னா எங்கள புடிச்சு செயிலுல அடச்சிப்புட்டா என்ன பண்றதுன்னு தான் அவக கொடுத்த காச வாங்கி டீ குடிக்கப் போனோம். இதுல யாரு மேல பெசகு இருக்கு சொல்லுங் கய்யா என்றான் செங்கான் மவன். தலித்துகளுக்கு எல்லா விபரங்களும் இப்போதுதான் தெரிய வந்தது. இளைஞர்கள் கொதிப்படைந்து போயினர். ஏலே உங்க சோலிய பாருங்கடா, எது வந்தாலும் நாங்க காலு கையில உழுந்து கேட்டுக்குறோம் என்று இளைஞர்களை ஆசுவாசப்படுத்தினர்.

மறுநாள் காலை வழக்கம்போல் டீ கேட்க, டீ கொடுக்க மறுத்துவிட்டார்கள். எந்தக்கடையிலும் எந்தச் சாமானும் தர மறுத்தார்கள். அவரவர் முதல்நாள் செய்திருந்த வேலைகளை மறுநாள் பார்க்கவிடவில்லை. அவரவர் வேலை பார்த்த நாட்களுக்கு அக்கம்பக்கம் என்ன கூலியோ அதைக் கொடுத்து கணக்கு முடித்தார்கள். அன்றிரவு கூட்டத்து முடிவுப்படி மறுநாள் மணியாரிடம் முறையிட்டனர். “ஏலே நாங்க என்னடா செய்யறது? ஒங்களுக்கு எந்த வெட்டிம வேலயோ, காட்டுவேலயோ தரக்கூடாதுன்னு ஊரெல்லாம் சேர்ந்து எடுத்த முடிவு. இதுல நான் ஒன்னும் செய்ய முடியாது'' என்று தான் சம்பந்தப்படாததைப் போல் பேசினார்.

தலித் பெரியவர்கள் “சாமி நாங்க எந்த குத்தமும் செய்யலியே, சர்க்கார் கேட்டதுக்குப் பயந்து போயிதான்யா சொல்லிருக்கானுவ, நாங்களா ஏதும் செய்யல சாமி” என்றனர். மணியார், “ஏலே நீங்க எந்த குத்தமும் செய்யல, சர்க்கார் கேட்டதுக்கு பதிலு தான் சொன்னீங்க, அப்போ வேல மட்டும் ஏண்டா இங்க வந்து கேக்குறீங்க? போயி சர்க்காருக்கிட்ட கேளுங்க, சர்க்காரு வேல கொடுக்கும்” என்றார்.

சாமி, ஏதோ தெரிஞ்சும் தெரியாம சின்னப்பய தப்பு பண்ணிப்புட்டான், ஊர நம்பித்தான் நாங்க பொழைக்கிறோம், குத்தங்கொறை ஏதும் மனசுல வச்சுக்கா தீங்க சாமி என்று காலில் விழுந்தனர். ஏலே, எங்காலிலே விழுந்து என்னடா ஆவப்போவுது? ஊரு முடிவ நான் மீற முடியாது, கோர்ட்டு கேசு எல்லாம் முடியட்டும், பின்னால பெறவாலே பாப்போம் என்றார். அப்போது பூசாரி கேட்டார்:

“ஏன் சாமி ஆடு மாடு செத்தா அதை எடுக்குறது யாருங்க?''

“அது சாவட்டும் அப்ப பாத்துக்கலாம் அதுக்கு இப்ப என்னடா“ என்றார் மணியார்.

இனி பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவர்கள் “சரி வாங்கய்யா போவலாம்“ என்றனர். பெரியவர் “ஏலே செத்த சும்மா இருங் கடா, இதான் கொளத்த கொழப்பி பிராந்துக்கு விட்டுட்டி யளே, பத்தலேன்னு இன்னமுமா பேசுறீய? அவுகதான் கோவமா சொல்றாகன்னா, நீங்க அதுக்கு மேல இருப்பிய போலிருக்கு''என்றார். மணியார் விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றுவிட்டார். இனி எப்படிப் பிழைப்பதென்று கேள்வியோடு வீடு திரும்பினர்.

மறுநாள் காலை முத்தன் பேரனும் படிக்கிற பையன்களும் ஆற்றுக்குச் சென்றனர். குளித்துத் திரும்பும்போது, பாலத்திலுள்ள நாடார் கடைக்குப் போய் “நாடாரே போண்டா கொடுயா'' என்றனர். நாடார், போண்டா இருக்கு ஆனா ஒங்களுக்கு இல்ல என்றார். முத்தன் பேரன், நாங்க காசுதான கொடுக்கிறோம், கொடுங்க என்றான். இந்த யாவாரம் ஒங்களுக்கு இல்ல என்றார். அதான் ஏன் இல்ல?. அதப்போயி ஊருல கேளுங்கடா என்றார். நாங்க போயி கேட்டுக்கிட்டு வர்றவரைக்கும் கடைய இழுத்து மூடுயா என்றனர்.

நாடார் பிழைப்புத்தேடி வந்தவர். நிதானமாகவே பேசினார். ஏலே பறையவூட்டு ஆளுவளுக்கு எந்தச் சாமானும் கொடுக்கக் கூடாதுன்னு ஊரு சொல்லியிருக்கு, ஏன்டா காலைநேரத்துல எங்கிட்ட வம்பு வளக்குறீய, பக்கத்துல வீர முண்டார் கடை இருக்குல்ல, அங்க போயி ஓன் வீராப்ப காட்டேன் என்றார். இப்படி வம்பு வளக்க வீரமுண்டார் ஒத்துக்கொள்ளமாட்டார். ஆனாலும், பலபேர் பார்க்க துணிச்சலாக இதைச் செய்ய விரும்பினான் முத்தன் பேரன். நாங்க அங்கப் போயி கேட்டா சிரச்சேதமா பண்ணிப்புடுவாங்க என்றவாறு, வீர முண்டார் கடைக்குச் சென்று மூனு டீ போடுங்க என்றான்.

வழக்கு முடியுமட்டும் எஸ்.சி.தெரு ஆளுககிட்ட எந்தத் தகராறும் வெச்சுக்காதீங்க, ஏதாவது ஆகிப்போனா மேலும் சிக்கலாகி விடும் என்று வழக்குரைஞர் எச்சரித்துள்ளதை மனதிற் கொண்ட கடைக்காரரோ “பால் இல்ல போங்கடா“ என்று கூறி டீ பட்டறையை விட்டு வெளியேறினார். நாடார் கடையில் உள்ளவர்கள் இவர்களை வேடிக்கைப் பார்ப்பதை உணர்ந்த முத்தன் பேரனும் அவனோடு வந்தவர்களும் கம்பீரமாக வீட்டிற்குச் சென்றனர்.

ஊரில் வயற்காடுகளில் அநேகமாக பக்கத்து கிராமங்களி லுள்ள விவசாயத் தொழிலாளிகளே வேலை செய்தார்கள். இவர்கள் எல்லோரும் வேலையின்றி வீடு திரும்பினர். இப்படியாக ஒருவாரம் கடந்தது. எந்தப் பொருளும் வாங்க முடியாத நிலை. இனி இவர்களை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்த வாலிபர் களும் நடுத்தரவயதினரும் இந்த நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட கிராமங்களில் போய் வேலைக்கு ஆள் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன்பிறகு, இந்த மேல்சாதியினரை ஒரு பொருட்டாகவே இவர்கள் கருதவில்லை.

கிட்டத்தட்ட 10 மைல் தூரத்திலுள்ள ஒரத்தநாடு பகுதிக்கு வேலை தேடி அதிகாலை 3 மணியளவில் புறப்படுவார்கள். ஒரத்தநாட்டைக் கடக்கும்போது மாதா கோயிலில் பூசை நடக்கும். வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அவை அறுவடை செய்வதுமில்லை என்ற பாதிரியாரின் பிரசங்கம் இவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ மனிதப் பறவை களாக விதைக்காமல் அறுவடை செய்யப் புறப்பட்டார்கள்.

வேலைக்கு செல்லும் பாதையில் இருந்த ஒரு கடையில் அனைவரும் பழக்கம் வைத்துக்கொண்டார்கள். இவர்களின் நிலையை விசாரித்து அறிந்துகொண்ட கடைக்காரர் சற்று நேயத்தோடு நடந்துகொண்டார். தினமும் ஒரு 20 பேராவது கடைக்கு வந்து வேலைக்குத் திரும்பிச் செல்வார்கள். உள்ளூர் வாசிகள் கடைக்காரரிடம் இத்தனை ஆள் வேண்டுமென்று கூறிவிடுவார்கள். இவர் இந்த ஆட்களிடம் கூறி வேலைக்கு அமர்த்திவிடுவார்.

மாலையில் அவரவருக்குத் தேவையான அரிசி காய்கறி ஏனைய பொருட்களை வாங்கி துண்டில் முடிந்து தோளில் போட்டுக்கொண்டு நடந்தே சென்றுவிடு வார்கள். மறுநாள் விடியற்காலை மீண்டும் வேலை தேடிப் புறப்பட்டு வருவார்கள். இப்படியாக பல மாதங்கள் ஓடின. இந்த காலங்களில் பல சம்பவங்கள் ஊரில் நடந்தன. ஆடு மாடுகள் இறந்தன. மனிதர் பலர் மாண்டனர். இவைகளை அப்புறப்படுத்தவும் மரணச் செய்தி சொல்லவும் அடுத்த ஊர் பறையர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். விவசாய வேலைகளுக்கும் வெளியூர் ஆட்களைப் பயன்படுத்தினர்.

***

அன்று தெருக்கூட்டம். வயதானவர்கள் அனைவரும் ஒன்று போல் “எப்பா இப்படியே போனா ஊரும் மண்ணும் நமக்கு இல்லாமலேயே போயிடுண்டா, எப்பவும்போல அய்யா மாருவ காலுல விழுந்து, நாங்க குத்தத்த ஒத்துக்குறோம், செஞ்ச குத்தத்துக்கு அவதாரம் கட்டுறம்னு சொல்லி காலுல விழுந்துடுவோம் என்றனர். மாணவர்களும் வாலிபர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

“ ஏன்யா அவுக வூட்டுல உழுவுற எழவயும், ஆட்டுமாட்டு சாவயும் யாரு எடுக்குறாங்கன்னு பாத்தியளா? பக்கத்து ஊரு ஆளுகளும் நமது ஆளுகதான். நம்ம கொள்வன கொடுப்பன, ஒறவுகாரகதானே, இந்த 18 கிராமத்த தாண்டியா அடுத்த நாட்டுக்காரன் (நாடு-18 கிராமம் கொண்டது ஒருநாடு) வாறான்? அவுகளுகிட்ட போயி இந்த ஊரு கள்ளர்வோ எங்கள ஊரவுட்டு ஒதுக்கி வச்சுருக்காக, எந்த நாயமும் பேசல, இதுபோல ஒங்களுக்கு ஒங்க ஊரு கள்ளவூட்டு ஆளுவ செய்யறதுக்கு எம்புட்டு நேரமாகும்னு கேட்டு இனிமே எங்க ஊரு நாயந் தீராம, நீங்க எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு சொல்லுவோம். அவுக வரலன்னா அடுத்த நாட்டுக்காரன் யாரும் வரமாட்டாக, நாடுவுட்டு நாடு போயி வெட்டிம வேல பாக்குறத ஏழிசமா நெனக்கிறோமோ அது போலத்தானே அவுகளும் நெனப்பாக, மொதல்ல நம்ம பந்து களுக்கிட்டப் போயி சொல்லுவோம் என்றான் முத்தன்பேரன்.

இந்த விசயம் அனைவருக்கும் ஏற்புடையதாய் இருக்கவே ஒவ்வொரு கிராமமாக இளைஞர்கள் சென்று பேசியதில் நல்ல பலன் கிட்டியது. வேற்றூர்க்காரர் யாரும் வேலைக்கு வர வில்லை. மாடு ஒன்று இறந்துபோய் எடுக்க ஆளின்றி இரண்டுநாட்களைக் கடந்துவிட்டது. ஊரே நாறியபோது மேல்சாதியார் சிலர் “நிழலோட அருமை வெயில்லதான் தெரியுங்குறது சரியாதான் இருக்கு”. இப்போ பறைய வீட்டுப் பயலுவள கூப்புடவும் முடியாது, இதப் போட்டு வைக்கவும் முடியாது, எப்படியாவது மூக்கப் புடிச்சிக்கிட்டு கொல்லப் பக்கம் குழிவெட்டி, ஆளும் பேருமா சேர்ந்து தள்ளிட வேண்டியதுதான்” என்றார்கள்.

தலித்துகள் எதை நிர்ப்பந்தம் என்று நினைத்தார்களோ, அதை மேல்சாதியினரே செய்தவுடன் திகைத்து நின்றனர். முன்னணியில் நின்ற இளைஞர்கள் இதற்குமேல் என்ன செய்வதென்று தெரியாது தடுமாறினர்.

தொண்டு பத்திரிகை இக்கிராமத்தின் அவலங்களை விரிவாக வெளியிட்டது. ஆனாலும், சீண்டிப் பார்ப்பார் யாருமற்ற நிலை. தாசில்தார், பி.டி.ஓ. போன்ற அதிகாரிகளை பார்ப்போம் என்று இளைஞர்கள் கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை.

“ஒவ்வொரு நாளும் பறந்து பறந்து எரை தேடி வாழுறோம், ஒருநாளு போறதே ஒருயுகம் போறாப்ல இருக்கு. இதுல தாசில்தார பாக்கப் போவணுமா? மனு கொடுக்க எழுத்துக்கூலி கொடுத்து கொடுத்து அலுத்துப் போனோம், மனுவையெல்லாம் வாங்கி சூத்துல போட்டு உட்காந்துட்டாங்க. மனு கொடுக்க ஒருநா பொழுதே ஓடிரும். அன்னாட வேலைக்கு ஓடுனாதான் நம்ம புள்ளக்குட்டியள பசியாத்தலாம். வேலைக்குப் போறதயும் விட்டு மனு எழுத காசுங் கொடுத்து கைச்செலவுக்கு வேற காசும் வேணும், இதுக் கெல்லாம் எங்க போறது? அது கெடக்கு உட்டுத் தள்ளுங் கய்யா, மரம் வெச்சவன் தண்ணியா ஊத்தமாட்டான், மேயப் போற மாடு கொம்புல புல்லைக் கட்டிக்கிட்டாப் போவுது? ஏதோ வெந்தத தின்னுப்புட்டு விதி வந்தா சாவோம், போயி வேலைய பாருங்கடாப்பு’’ என்றார் ஒருவர் விரக்தியாக.

இத்தனைக்கிடையிலும் இந்த மக்களை சிந்தாமல், சிதறாமல் கட்டிக்காத்த இளைஞர்கள் முயற்சியால் அனைவரும் தனித்தனி மனுவாக தங்களின் குறைகளை தாசில்தாரிடம் தெரிவித்தனர். தாசில்தார் இந்த வாரம் உங்கள் ஊரில் அமைதிக்கூட்டம் போட்டுருக்கோம், அதுவும் ஒங்கப் பிரச்னைக்காக வேண்டிதான், எல்லாரும் வந்துடணும், எல்லா விசயத்தையும் பேசி முடிச்சிடுவோம் என்றார்.

குறிப்பிட்டதைப்போல் அமைதிக்கூட்டம் அரசுப்பள்ளியில் கூடியது. சேரித்தெரு பெண்களைத் தவிர சிறியோர் முதற் கொண்டு பெரியோர்வரை பெருங்கூட்டமாக இருந்தது. மேல்சாதியார் சொற்பமானவர்களே கலந்துகொண்டனர். பெரும் அரசியல் செல்வாக்குப் பெற்ற பக்கத்து நாட்டுக் காரரும் கலந்துகொண்டார். தலித்துகள் இவர் வருகையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர் வந்து அமர்ந்தவுடன் தலித் பெரியவர் ஒருவர் கூறினார்:

“ ஏலே என்னங்கடா பெரிய அதிசயமாயிருக்கு, எனக்கு நெகா தெரிஞ்ச நா முதலா இவுக நாட்டுல கொள்வினையுமில்ல கொடுப்பனையுமில்ல, அந்த நாட்டுக்காரங்க அறுத்துக் கட்டுற சாதிக்காரங்க, அதால எந்த வழக்கும் பொழப்பும் வச்சிக்கமாட்டோம்னு நம்ம கள்ளவூட்டு ஆளுக சொல்லுவாக. அவுக இவுகளப் பார்த்து தாலியறுத்த இளம் பொண்டுகள மங்க வச்சு வேடிக்கப் பாக்குற ஆளுக இவுக, அதால இவுககிட்ட ஒறவு கெடையாது என்பாங்க. இப்ப என்னடான்னா, ஒறவுமொற சொல்லில்ல கூப்புடுறாக, காலங்கெட்டுப் போச்சுடாப்பா.

கூட்டம் ஆரம்பமானது. தாசில்தார் முன்னிலையில் அடுத்த ஊர் பெரியமனிதரே பேசினார்: “ஏலே ஒங்க பாட்டன் பூட்டன் காலத்திலே இருந்து வந்த வளமைய மாத்துனது நீங்கதானே, இப்ப எதுக்குடா தாசில்தார் ஆபிசு, கலெக்டர் ஆபிசுன்னு கெடந்து அலையணும்?.” இந்தப் பேச்சை இளைஞர்கள் கடுமையாகவே எதிர்கொண்டனர். ஏதோ தெரிஞ்சும் தெரியாம இந்த ஊருல பல சம்பவங்கள் நடந்துபோச்சு. இதுல யாருமேலயும் தப்பு சொல்ல முடியல. அதனாலதான், எங்களவிட ஒங்க பக்கத்து ஊரு தலைவரு சொன்னா நீங்க ஏத்துக்கீவிங்கன்னு அவுங்களும் வேலைய விட்டுட்டு ஒங்களுக்காக பேச வந்திருக்காரு கொஞ்சம் அமைதியா இருங்க என்றார் தாசில்தார்.

ஆவேசங் கொண்ட முத்தன் பேரன்,“ யாரு மேலயும் தப்பு இல்லன்னு சொல்றீங்க, அப்படீன்னா இந்த விசயங்கள வேடிக்கைப் பாக்குறவுங்க மேலதான் தப்புங்கிறீங்களா?” என்று கேட்கவே, தாசில்தார் “ஏய் இந்த ஊர கெடுக்குறவனே இந்த பயதான், ஒங்களுக் குள்ள பெரிய மனுஷர பேசச் சொல்லுங்க” என்றார். மேல் சாதியினர், ஏலே இவன புடுச்சி கட்டுங்கடா, என்ன திமிரா பேசுறான் இவன் என்று முத்தன் பேரனையும், மாட்டாண்டிப் பேரனையும் நெருங்கியவுடன் தலித்கள் ஒருசேர எழுந்து இவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

எங்களுக்கு இந்த ஊருல எந்த நாயமும் கெடைக்காது, நாங்க எப்பவும் போல ஊரு, தேசமுன்னு ஓடிப்போயி பொழைச்சுக்குறோம், ஒங்க ஒங்க வேலைய பாருங்க என்று கூறிவிட கூட்டம் கலைந்து போனது. அதிகாரிகள் தவித்து நின்றனர்.

ஒரு வாரங்கழித்து போலிஸ் ஜீப் சேரிக்குள் வந்து நின்றது. ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஓடி மறைந்து தலையை நீட்டி என்ன நடக்கிறதென்று நோட்டமிட்டனர். அதிகாரி ஒரு வயதான பெண்ணிடம் “இந்தாம்மா ஆம்பளங் கெல்லாம் எங்க போயிருக்காங்க” என்று கேட்டார். பெரியம்மா, அவுனவெல்லாம் வேலகாட்டுக்குப் போயிருக் காங்க. ரவைக்குதான் வருவா னுங்க... என்றாள்.

நாளைக்கு ஒங்க ஊரு சம்பந்தமா பேச்சுவார்த்த நடத்த கலெக்டர் வர்றாரு, எல்லா ஆளுகளும் வந்துடனும்னு ஒரத்தநாட்டுல இருந்து வந்த போலிஸ் அதிகாரி சொன்னாருன்னு சொல்லு... என்று சொல்லி புறப்பட்டார்.

ஏழரை மணியளவில் வல்லம் ஒரத்தநாடு சாலையில் ஜீப் சென்று கொண்டிருந்தபோது சுமார் 30 பேர் கொண்ட ஒரு கூட்டம் தலையில் சிறுசிறு மூட்டைகளை சுமந்தபடி வந்து கொண்டிருந்தது. போலிஸ் அதிகாரி ஜீப்பை நிறுத்திவிட்டு, வந்தவர்களைப் பார்த்து “யோவ், நீங்க எந்த ஊரு என்று கேட்டார். இந்த அதிகாரியை இவர்கள் அடையாளம் கண்டு கொண்டதால் என்னமோ ஏதோ என்று பதைத்தனர்.

அய்யா சாமி நாங்க கிராமத்தச் சேந்தவங்க. பக்கத்து கிராமத்துல வேல பாத்துட்டு, சத்தரத்துல வந்து (ஒரத்தநாடு) சோத்துக்கு அரிசி தவசி வாங்கிட்டு வர்றோமய்யா என்றனர். நாளைக்கு ஒங்க ஊரு சம்பந்தமா பேச்சுவார்த்த நடத்த கலெக்டர் வர்றதா சொல்லிருக்காங்க, எல்லாரும் கலெக்டருக்கிட்ட வந்து மனு கொடுங்க என்று கூறிச் சென்றார்.

மறுநாள் காலை. தண்ணீர்ப்பந்தலில் போலிஸ் அதிகாரி, தாசில்தார், ஊர் மேல்சாதியாரும் அமர்ந்திருந்தனர். தாசில்தார் பேச்சு ஒருதலைப்பட்சமாகவே இன்றும் இருந்தது. இதை ஏற்றுக்கொள்ளாத தலித்கள் கூட்டத்தைவிட்டு கலையும் நிலைக்கு சென்றனர். போலிஸ் அதிகாரி எவ்வளவு முயன்றும் கூட்டத்தை நிறுத்த முடியவில்லை. நிலையை உதவி ஆட்சியருக்குத் தெரிவிக்க, அவர் தான் வந்து கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார். மாலை 3மணிக்கு உதவி ஆட்சியர் வந்துவிடவே அவருக்கு ஏகப்பட்ட மரியாதை களோடு இளநீர் பரிமாறப்பட்டது. இந்த கூட்டம் அமைதியா நடந்து முடிந்த பின்னே இளநீரை ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டார்.

இது ஊர் நியாயம் பேசுற இடம் கெடையாது, நடந்து கொண்டிருப்பது கோர்ட்டு. இதுல இருதரப்பாரும் நாங்க சொல்வதக் கேட்டு அமைதியா நடந்து கொள்ள வேண்டும் என்றார் உதவி ஆட்சியர். அமைதியை குலைக்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.

இந்தக் கூட்டத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்த ஏழுபேர் கொண்ட (தலித்கள், மேல்சாதியினர்) இருகுழுக்கள் பிரிக்கப்பட்டன. மேல்சாதியினர் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். தலித்துகள் அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தரையிலேதான் அமர்ந்தனர்.

மணியார் ஏதோ பேச முயன்றபோது, அதிகாரி பேச விடாமல் தடுத்தார். இங்க வர்றதுக்கு முன்னாடியே அனைத்து விசயங் களையும் விசாரித்து ஒரு முடிவோடுதான் கூட்டத்தை கூட்டி யிருக்கோம். அதன்படி ஒரு பத்திரம் தயார் செய்து கொண்டு வந்திருக்கோம் என்று கூறிய அதிகாரி அதை மக்கள் முன் னிலையில் படித்தார். 1.உள்ளூர்ல இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளிக்கு உள்ளூர்லயே வேலை கொடுப்பது 2.வெட்டிமை வேலைகளுக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது 3.விரும்பி செய்தால் அதைத் தடுக்கக்கூடாது.

இம் முடிவுகளைக் கொண்ட பத்திரத்தின் நகல் மாவட்ட ஆட்சியரி டமும், மேல்சாதியார் வகையில் மணியக்காரரிட மும், தலித் தலைவர் மாட்டாண்டி பேரனிடமும் வழங்கப்பட்டது.

நூற்றாண்டுகளாய் நீடித்த அடக்குமுறையையும் ஒதுக்கி வைப்பையும் முடிவுக்குக் கொண்டுவர இரண்டு வருட காலமாக போராடிய வலி பெருமிதமாய் மாறிக் கொண்டிருந்தது தலித்துகளின் மனதில்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com